பண்டைய கானா நாட்டின் கடலோரப்பகுதியில் இருக்கும் அனோமன்ஸா என்ற நகருக்கு அருகே தங்கச் சுரங்கம் இருந்தது. ஐரோப்பியர்கள் முதலில் இங்கேதான் குடியேறினார்கள். நகரை எல்மினா என்று அழைத்தனர். எல்மினா என்றால் போர்த்துகீசிய மொழியில் சுரங்கம் என்று பொருள். இன்று வரையிலும் அந்தப் பெயர்தான் புழக்கத்திலுள்ளது. பின்னர் அந்தப் பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது கோல்ட் கோஸ்ட், தங்கக் கடற்கரை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் தங்கத்தை வாங்குவதற்குத் தானே நேரடியாக எல்மினா நகரத்துக்குச் சென்றார். ஐரோப்பியர்கள் வாங்கிய தங்கத்துக்கு அமெசிக் (பெர்பெர்) இனத் தரகர்கள் அதிக வரி விதித்ததுதான் காரணம்.
15ஆம் நூற்றாண்டில் கடற்கரையைப் பார்த்தபடி அமைக்கப்பட்ட பீரங்கிகளைக்கொண்ட கோட்டையொன்றை எல்மினாவில் அமைத்தனர் போர்த்துகீசியர்கள். மற்ற ஐரோப்பியர்கள் எவரும் எந்த நேரம் வேண்டுமானாலும் கடல்வழியே தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் அதை எதிர்கொள்வதற்காக அந்த ஏற்பாடு. உள்நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்கர்கள் பெரிய தாக்குதல்களை நடத்தும் சாத்தியமில்லை என்பதும் காரணம்.
தொடக்கத்தில் கோட்டையின் நிலவறை தங்க வர்த்தகத்துக்காகக் கட்டப்பட்டிருந்தாலும் 16ஆம் நூற்றாண்டுவாக்கில் அதன் பயன்பாடு மாறியது. மேல்தளத்தை உண்ணவும் உறங்கவும் வழிபாடு செய்யவும் பயன்படுத்தினர் போர்த்துகீசிய வணிகர்கள். நிலவறையில் ஆப்பிரிக்காவின் உட்பகுதியிலிருந்து பிடித்துவந்த மக்களை அடைத்து வைத்தனர். அடிமை வாணிகக் கப்பல்கள் ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ அவர்களை ஏற்றிச்செல்லும் வரையில் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும்கூட அடைப்பட்டுக்கிடந்தனர் ஆப்பிரிக்கர்கள். தாய்நாட்டில் அவர்கள் கடைசியாகப் பார்த்தது எல்மினாவின் இருண்ட நிலவறையைத்தான். அவர்களில் உயிர்பிழைத்தவர்களுக்கு அங்கே கட்டுண்டு கைதிகளாகக் கிடந்ததுதான் தங்கள் ஊரைப்பற்றிய கடைசி நினைவாகிப்போனது.
0
ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்தி வேறு கண்டங்களுக்கு இட்டுச்சென்றதுதான் உலகின் மிகப் பெரிய வலுக்கட்டாயமான குடிபெயர்தல் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். அந்தக் குடிபெயர்தல் ஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்க நிலப்பகுதியில் வசித்துவந்த தொல்குடி இனங்களான அமெரிக்க இந்தியர்களின் அழிவை ஈடுகட்டுவதற்காக நடந்தது என்பது கூடுதல் துயரம்.
1492இல் ஹிஸ்பானியோலா தீவுக்கு கொலம்பஸ் வந்தபோது அந்த நிலத்தின் தொல்குடிகளான டைனோ இன மக்களின் தொகை பல லட்சமாக இருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் 32,000 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இதனால் வயல்களில் பணிசெய்யப் போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு அடிமைகளைக் கொண்டுசென்ற போர்த்துகீசியர்களும் ஸ்பானியர்களும் இப்போது கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்தப் பக்கம் இருந்த நிலப்பகுதிக்குச் செலுத்தினார்கள். 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக இட்டுச்செல்லப்பட்டார்கள், அவர்களில் சுமார் இருபது லட்சம் பேர் வழியிலேயே இறந்துபோனார்கள்.
1518இல் ஸ்பெயினை ஆண்ட முதலாம் சார்லஸ் மன்னன் ஸ்பெயின் நாட்டுக் கப்பல்கள் ஆப்பிரிக்க அடிமைகளை ஐரோப்பாவுக்குக் கொண்டுவராமல் நேராக அமெரிக்க நாடுகளுக்கும் தீவுகளுக்கும் ஏற்றிச் செல்லலாம் என அனுமதி வழங்கினான். அந்தச் சமயத்தில் அட்லாண்டிக் அடிமை வாணிகம் தொடங்கவில்லை என்றாலும் ஸ்பெயினிலிருந்து ப்யூர்டோ ரிகோவுக்கும் ஹிஸ்பானியோலியாவுக்கும் சென்ற கப்பல்களில் சில சமயம் ஓரிரு அடிமைகளும் மற்ற நேரங்களில் 30 முதல் 40 பேர் வரையிலும்கூடப் பயணப்பட்டனர். 1520களில் ஆப்பிரிக்காவின் சாவோ தோம் தீவிலிருந்து ஸ்பெயின் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த புதிய ஸ்பெயினுக்குப் பயணமான கப்பலில் சில நூறு அடிமைகள் இருந்தனர். 1540களில் ஸ்பெயின் குடியேற்ற நிலங்களுக்கும் தற்போதைய அமெரிக்காவின் மாகாணங்களான ஃப்ளாரிடா, நியூ மெக்சிகோ, சௌத் கரோலினா பகுதிகளுக்கும் ஆப்பிரிக்கர்கள் கொண்டுவரப்பட்டனர் என்று நம்பப்படுகிறது. இவர்களில் சிலர் ஒப்பந்தக் கூலிகள். அடிமைப்பட்டவர்களும்கூடத் தங்களுக்கான விலையைக் கொடுத்து விடுதலையைப் பெறும் வாய்ப்பு இருந்தது.
0
முக்கோண அடிமை வாணிகம் என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மூன்று கண்டங்களுக்கிடையே மூன்று கட்டங்களில் நடைபெற்ற வாணிகம் என்பதால் அந்தப் பெயர். முதல் கட்டமாக, வர்த்தகத்துக்கான துணிவகைகள், ரம் போன்ற மதுவகைகள் எனச் சரக்குகளை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் கப்பல்கள் ஏற்றிச் செல்லும். இரண்டாம் கட்டத்தில், ஆப்பிரிக்க நாடுகளின் அரசர்கள் அந்தப் பொருட்களுக்கு விலையாக அண்டைநாட்டு மக்களைக் கைப்பற்றி அடிமைகளாக விற்றனர். கடைசி கட்டமாக அடிமைகளைக் கப்பலில் ஏற்றி அமெரிக்காவுக்கு இட்டுச் சென்றனர் ஐரோப்பியர்கள். அங்கே அவர்களை விற்றுப் பண்டமாற்றாக சர்க்கரை, புகையிலை, பருத்தி, நெல், விலங்கு ரோமம், தோல் போன்ற பொருட்களைக் கொள்முதல்செய்து ஐரோப்பாவுக்குக் கொண்டுபோயினர். இந்த வர்த்தகப் பயணத்தின் பாதைகள் முக்கோண வடிவில் அமைந்ததால் முக்கோண அடிமை வாணிகம் எனப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடலின் வழியே அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்கர்கள் கூட்டிச் செல்லப்பட்டதால் அந்தக் கட்டத்தை மத்திய பாதை என்றும் அந்த வாணிகத்தை அட்லாண்டிக் அடிமை வாணிகம் என்றும் குறிப்பிட்டனர்.
0
ஆப்பிரிக்காவில் அடிமைப்படுத்தல் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வழக்கம். உள்நாடுகளில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் சஹாரா பாலைவனத்தின் வழியாக வட ஆப்பிரிக்காவுக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாஹிலி கடற்கரைக்கும் கொண்டுசெல்லப்பட்டு மத்தியதரைக்கடல் பகுதிகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அட்லாண்டிக் அடிமை வாணிகம் தொடங்கிய பிறகு மக்களைச் சிறைப்பிடிப்பதற்கென்றே போர்கள் நடந்தன.
பெற்றோர் வேலைக்குச் செல்கையில் வீட்டில் தனியே இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டனர். இதனால் வீடுகளில் தனியே இருக்கும் குழந்தைகளில் வயதில் பெரியவர்கள் மரத்தின்மீது ஏறி யாராவது வந்தால் மற்ற குழந்தைகளை எச்சரிக்கை செய்வார்கள். அதையும் மீறி எத்தனையோ இளவயதினர் பிடிபட்டனர். உட்புறப் பகுதிகளில் வசித்தவர்கள் மற்ற இனத்தவர்களாலோ தங்களது இனத்தைச் சேர்ந்தவர்களாலோ சிறைப்பிடிக்கப்பட்டனர். இன்னும் சிலர் உறவினர்களால் நயவஞ்சகமாக விற்கப்பட்டனர். இதனால் மக்கள் எப்போதும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டனர்.
பெரும்பாலும் இளவயதினரே சிறைப்பட்டதால் வயதானவர்களையும் குழந்தைகளையும் கவனிப்பதற்கு யாருமற்ற நிலை ஏற்பட்டது. வயல்களில் பணிசெய்ய ஆளில்லை. சில பகுதிகளில் சுமார் நூறு ஆண்டுக்குக் குழந்தைகளே அதிகம் பிறக்கவில்லை. ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த பகுதிகளில் பலதார மணம் நடைமுறைக்கு வந்தது. வழக்கமாக ஆண்கள் செய்யும் பணிகளைப் பெண்கள் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐரோப்பியப் பொருட்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆப்பிரிக்கத் தொழில்கள் நலிவுற்றன. இளவயதினர் அதிகம் சிறைப்பிடிக்கப்பட்ட பகுதிகள் ஒரு காலத்தில் வளம்கொழிக்கும் பேரரசுகளாக இருந்தாலும் நாளடைவில் வளர்ச்சியின்றி மோசமான நிலையை அடைந்தன.
சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் தப்பியோடாமலிருக்க அவர்களின் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டன. சில நேரம் அவர்களின் கழுத்தில் மரக்கட்டைகளைக் கட்டிவைத்தனர். தப்பியோடினாலும் குனிந்து ஓடையில் நீரருந்த முடியாமல் தாகத்தில் தவித்து இறக்கத்தான் வேண்டும். சிக்கியவர்கள் அவரவர் பகுதியிலிருந்து மேற்குக் கரையிலிருந்த துறைமுகங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர். வரும் வழியிலேயே பயணத்தின் கடுமை தாங்காமல் பல பேர் இறந்து போயினர்.
நாட்கணக்கில் பல மைல்கள் நடந்து மேற்குக் கடற்கரையில் இருக்கும் துறைமுகங்களுக்குச் சென்றுசேர்ந்ததும் பேன் பிடிக்காமல் இருக்கத் தலையை மொட்டையடிப்பார்கள். ஆடைகளை நீக்கி உடம்பு முழுவதும் எண்ணெய் பூசுவார்கள். அப்போதுதான் உடம்பு பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் தெரியும், அடிமை வாணிகர்கள் நல்ல விலைக்கு வாங்குவார்கள்.
ஐரோப்பிய வாணிகர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் எந்த அடிப்படை வசதியுமற்ற கப்பல்களில் கால்நடைகளைப்போல அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 500 முதல் 600 பேர் வரையில் சென்றுசேரும் இடத்துக்கேற்ப ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் பயணம் செய்யவேண்டிய கொடுமை. ஆண்களையும் பெண்களையும் தனித்தனிப் பகுதிகளில் அடைத்தனர். இரண்டிரண்டு பேராகச் சங்கிலியில் கட்டிவைத்தனர். ஒருவரின் வலது காலை அடுத்தவரின் இடது காலோடு பிணைப்பார்கள். கப்பலின் பணியாளர்கள் பெண்களை வன்புணர்வு செய்தனர்; இதனால் பெண்களில் சிலர் கருவுற்றனர். அடிமைகளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவும் நீரும் வழங்கப்பட்டது; பீன்ஸ், சோளம், கிழங்கு, அரிசி ஆகியவை உணவாக அளிக்கப்பட்டது. நீண்ட காலப் பயணத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் அடிமைகளுக்கு உணவு தரமாட்டார்கள். குடிநீர் இல்லாமல் தாகத்தால் தவித்து வயதானவர்கள் இறந்துபோவார்கள்.
சில நேரங்களில் விலங்கை விடுவித்து அடிமைகளை நடமாடவிடுவதும் கப்பலின் மேல்தளத்துக்கு அழைத்துவருவதும் உண்டு. அடிமைகளில் சிலர் உயிர்வாழப் பிடிக்காமல் கடலுக்குள் குதித்துவிடுவார்கள். சிலர் தப்பிச்செல்வதற்காகக் கலகம் செய்வார்கள். பெரும்பாலும் ஆண்களே கலகத்தில் ஈடுபட்டதால் பெண்களைவிடவும் அதிகம் கண்காணிக்கப்பட்டனர். கீழ்த்தளத்தில் சுகாதாரமற்ற சூழலில் பல மாதங்களுக்கு அடைத்துவைக்கப்பட்டதாலும் குளியலறை, கழிவறை வசதியில்லாததாலும் அடிமைகள் நோயால் பீடிக்கப்பட்டு அதிகளவில் இறந்துபோயினர். எந்தச் சடங்கும் சம்பிரதாயமுமின்றிச் சடலங்களைக் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள். கப்பல் பணியாளர்கள் கீழ்த்தளத்துக்குப் போகவே அஞ்சியதால் யாராவது இறந்தால்கூடத் தெரியாது. உயிரோடு இருப்பவர்கள் உயிரற்ற உடலோடு பல நாட்கள், ஏன் பல வாரங்கள்கூடப் பிணைக்கப்பட்டிருக்கும் அவலநிலையும் ஏற்பட்டதுண்டு. இந்தக் கொடுமைகளைத் தாங்கமுடியாதவர்கள் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதும் வாடிக்கை. அப்படி அவர்கள் கடலுக்குள் குதிப்பதைத் தடுக்கச் சுற்றிலும் வலைகட்டியிருப்பார்கள்.
அடிமைப்பட்ட துயரம், எதிர்த்துத் தற்காத்துக்கொள்ளமுடியாத கையறு நிலை, மனவழுத்தம், உளச்சோர்வு, உணவு, நீர், கழிப்பறை வசதியற்ற சூழல், கடல்பயண ஒவ்வாமை, நோய்த்தொற்று, எதிர்காலம் குறித்த விடைதெரியா கேள்விகள், சொந்த நிலத்தையும் மக்களையும் பிரிந்த சோகம் என எண்ணற்ற காரணங்களால் 15 முதல் 20 சதவீத மக்கள் பயணத்திலேயே இறந்துபோயினர். அடிமைக் கப்பல்களை மிதக்கும் கல்லறைகள் என அழைத்தனர். சுமார் 20 லட்சம் மக்கள் இப்படி இறந்துப்போனதாகக் கூறப்படுகிறது. இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் என்கிறது மற்றுமொரு கணிப்பு.
0
அலெக்சாண்டர் ஃபால்கன்ப்ரிட்ஜ் என்ற மருத்துவர் 18ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் தீவுகளுக்குச் செல்லும் அடிமைக் கப்பலில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பணிக்காலத்தில் பார்த்தவற்றையும் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவங்களையும் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். எப்படியெல்லாம் பிடிபட்டனர் என்பதை அடிமைகளிடம் கேட்டுப் பதிவுசெய்தார். கர்ப்பிணியாக இருந்த பெண்ணை அண்டை வீட்டுக்காரர்கள் மாலை விருந்துக்கு அழைத்துப் பின் அடிமை வாணிகர்களிடம் விற்றுவிட்டனர். அதேபோல வேறொரு இளைஞன் தன்னைச் சிறைப்பிடிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு தப்பிக்க முயற்சி செய்கையில் பெரிய நாயை ஏவிப் பிடித்தனர். இவற்றையெல்லாம் கேட்ட அலெக்சாண்டர் தன்னுடைய வாழ்வின் கடைசிக்கட்டத்தில் அடிமை வாணிகத்துக்கு எதிராகச் செயலாற்றினார்.
டேவிட் லிவிங்க்ஸ்டன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர், கிறிஸ்தவச் சமயப்பரப்பாளர். 19ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் பயணம்செய்தபோது அங்கு கண்ட காட்சிகளைத் தன்னுடைய நாட்குறிப்பில் விவரிக்கிறார்.
’19 ஜூன் 1866 – மரத்திலிருந்து தொங்கிய பெண்ணொருத்தியின் உடலைக் கண்டோம். அவளால் கூட்டத்தில் இருந்த மற்றவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்கமுடியவில்லை. அதனால் வேறு யாரும் அவளைச் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக உரிமையாளர் அவளைக் கொன்றுவிட்டார் என்று அங்கிருந்த மக்கள் விளக்கினார்கள்.
26 ஜூன் 1866 – கத்தியில் குத்தப்பட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டோ இறந்த பெண்ணின் உடலைக் கண்டோம். அவளால் வேகமாக நடக்கமுடியவில்லை என்பதால் கோபமடைந்த அரேபிய உரிமையாளர் தனக்கு ஏற்பட்ட இழப்பினால் ஆத்திரமடைந்து அவளைக் கொன்றுவிட்டார் என்று சொன்னார்கள்.
27 ஜூன் 1866 – பசியினால் உயிரிழந்த மெலிந்த உடல்கொண்ட மனிதனை இன்று கண்டோம். அருகில் அதேபோன்ற நிலைமையில் இருந்த இன்னும் பல அடிமைகள் இருந்தனர். போதுமான உணவில்லை என்பதால் உரிமையாளர்கள் அவர்களை அங்கேயே விட்டுவிட்டுப் போனது தெரியவந்தது. அவர்களில் பலர் சிறுவர்கள். எங்கிருந்து வந்தார்கள் என்பதைச் சொல்லக்கூடத் தெம்பில்லை.
இந்த நாட்டில் விந்தையான நோயினைக் கண்டேன். சுதந்திர மனிதர்களாக இருந்தவர்கள் அடிமைப்பட்டதால் மனமுடைந்துபோவதுதான் அந்த நோய்.’
0
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளை விலைகொடுத்து ஏற்றிச் செல்லும் ஐரோப்பியக் கப்பல்களுக்குக் காப்பீடு செய்வது வழக்கம். 1781இல் ஜோங் என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக அட்லாண்டிக்கைக் கடக்கத் தாமதமானது. கப்பல் பணியாளர்களும் அடிமைகளும் நோய்வாய்ப்பட்டுத் தினம்தினம் செத்துக்கொண்டிருந்தார்கள். காப்பீட்டு ஒப்பந்தப்படி கடலில் தொலைந்துபோனவர்களுக்குத்தான் இழப்புத்தொகை கிடைக்கும், நோயினால் இறப்பவர்களுக்கு அல்ல. இதனால் கப்பல் தலைவன் 100க்கும் மேற்பட்ட அடிமைகளைக் கடலுக்குள் தள்ளிக் கொன்றான்.
0
அடிமை வாணிகம் சூடுபிடிக்க ஆரம்பித்ததும் அதில் பெரும்லாபம் ஈட்டவேண்டுமென்றால் அடிமைகள் ஆரோக்கியமாகப் பயணம் செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டனர் வாணிகர்கள். ஒவ்வொரு அடிமையும் 800 முதல் 1200 அமெரிக்க டாலர்கள் வரை விலைபோனார்கள். இதனால் 18ஆம் நூற்றாண்டுவாக்கில் கப்பல்களின் வடிவமைப்பு சீரமைக்கப்பட்டது. அடிமைகளின் இறப்பு விகிதம் குறையவேண்டுமென்பதற்காகக் கீழ்த்தளங்களைக் காற்றோட்டமாக அமைத்தனர். கப்பலைச் செலுத்துவதற்குப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் பயணக்காலம் குறைந்தது. கடல் பயணத்தில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளையும் கப்பலில் வைத்திருந்தனர். சில கப்பல்களில் மருத்துவர்களும் அறுவைசிகிச்சை வல்லுநர்களும் அடிமைகளுடன் பயணம்செய்தனர். இந்த மாற்றங்களால் போட்ட முதலீட்டுக்கு நட்டமின்றி அடிமை வாணிகம் சிறப்பாக நடந்தது.
ஹாரியட் டப்மனின் மூதாதையர்களும் இன்னும் பல லட்சம் ஆப்பிரிக்கர்களும் இதேபோலத்தான் சொந்த மண்ணையும் இனத்தையும் சேர்ந்த மக்களால் வஞ்சிக்கப்பட்டு ஐரோப்பிய வாணிகர்களுக்கு விற்கப்பட்டு அடிமைக் கப்பலில் வட அமெரிக்கா வந்தடைந்தனர்.
எல்லாம் சரி, வட அமெரிக்க நிலத்தில் ஆப்பிரிக்க இன மக்களைக் காலங்காலமாக அடிமைப்படுத்திக் கீழ்நிலையிலேயே வைத்திருக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? எதிர்பாராமல் நடந்த நிகழ்வொன்றுதான் அதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்கிறது வரலாறு.
(தொடரும்)