ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார். பின்னாளில் தாயின் பெயரையே தனக்கும் சூட்டிக்கொண்டார். ஹாரியட்டின் பெற்றோர் இருவரும் அடிமைகள். மேரிலாண்ட் மாகாணத்தில் அமைந்த டார்செஸ்டர் மாவட்டத்தில் இருந்த பெரிய பண்ணையில் வேலைசெய்தனர். மாடிஸன் கோட்டத்தில் பிளாக்வாட்டர் என்ற சிற்றாற்றுக்கு அருகே அமைந்திருந்தது பண்ணை.
ஹாரியட் பிறந்த வருடம் 1815, 1820, 1825 என்று ஒவ்வொரு ஆவணத்திலும் பலவாறாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் பிறந்த இடம் எது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. படிப்பறிவில்லாத அடிமைகளின் குழந்தை, அதுவும் ஐந்தாவதாகப் பிறந்த மகள். பிறந்த தேதியைக் குறித்துவைப்பது பற்றியெல்லாம் யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். 2004இல் ஹாரியட் டப்மனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கேட் லார்ஸன் பற்பல ஆவணங்களைச் சரிபார்த்து 1822ஆம் ஆண்டில் ஹாரியட் பிறந்தார் என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து மற்ற எழுத்தாளர்களும் அதையே ஏற்றுக்கொண்டார்கள்.
ஹாரியட்டின் தாய் வழிப் பாட்டி ஆப்பிரிக்காவிலிருந்து மாடஸ்டி என்ற அடிமைக் கப்பலில் அமெரிக்கா வந்தார் என்பது மட்டுமே தெரியும். அவரது மூதாதையர்களைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஹாரியட்டின் பண்புகளையும் இயல்புகளையும் கொண்டு அவர் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் அஷாந்தி இனத்தவராக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை உறுதிப்படுத்தும் சான்றுகளோ தகவல்களோ கிடைக்கவில்லை. ஹாரியட்டின் தாய் வழித் தாத்தா வெள்ளைக்காரராக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. ஹாரியட்டின் பெற்றோர் 1808இல் திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்பதை நீதிமன்ற ஆவணங்களைக்கொண்டு அனுமானித்தனர்.
0
வட அமெரிக்காவின் கிழக்குக் கரையில் செஸபீக் விரிகுடாவை ஒட்டிய நிலப்பகுதி பல சிற்றாறுகள் ஓடும் இயற்கை வளமிக்கது. அங்கே கப்பல் கட்டும் தொழிலோடு வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்றது. வண்டல் மண்ணின் வளத்தில் புகையிலை, கோதுமை, சோளம், பழ மரங்கள் போன்ற பயிர்கள் நன்கு வளர்ந்தன. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் வெள்ளை முதலாளிகளின் பண்ணைகளிலும் நிலங்களிலும் பெருமளவில் வெள்ளை ஒப்பந்தக்கூலிகளே வேலைசெய்தனர், சில பண்ணைகளில் அடிமைகளும் இருந்தனர். வெள்ளைத் தொழிலாளர்கள் முதலாளிகளுடன் ஒத்துழைக்க மறுத்ததால் 1730 முதல் ஆப்பிரிக்காவிலிருந்து கூட்டங்கூட்டமாக அடிமைகள் அழைத்துவரப்பட்டனர். அப்படித்தான் ஹாரியட்டின் மூதாதையர்களும் மற்ற ஆப்பிரிக்கர்களும் வலுக்கட்டாயமாக அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்படி வட அமெரிக்க நிலத்துக்கு நேரடியாக அடிமைகளாக வந்துசேர்ந்த முதல் ஆப்பிரிக்கர்கள் யார்?
0
வருடம்: 1619. இடம்: மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் சாவ் பாலோ டி லுவாண்டா நகரம். போர்த்துகீசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம். அங்கிருந்து 350 ஆப்பிரிக்க அடிமைகளை ஏற்றிக்கொண்டு பண்டைய புதிய ஸ்பெயினின் (தற்போதைய மெக்சிகோ) வேரா க்ரூஸ் நகருக்குப் பயணமானது சாவ் ஜோவா பௌடிஸ்டா என்ற பெயர்கொண்ட அடிமைக்கப்பல்.
பல வாரக் கடற்பயணத்துக்குப் பிறகு அடிமைக் கப்பல் மெக்சிகோ வளைகுடாவை அடைந்ததும் வைட் லயன் என்ற டச்சுக் கப்பலும் டிரஷரர் என்ற ஆங்கிலேயத் தனியார் கடற்படைக் கப்பலும் அதன்மீது தாக்குதல் நடத்தின. கப்பலில் இருந்த அடிமைகளில் சிலரைச் சிறைப்பிடித்தன. அவர்களுள் சுமார் 30 பேரை ஓல்ட் பாய்ண்ட் கம்ஃபர்ட் என்ற வர்ஜினியா மாகாணத்திலிருந்த ஆங்கிலேயக் காலனியில் உணவுப்பொருட்களுக்காக விற்றனர் வைட் லயன் கப்பல் குழுவினர். இது நடந்தது 1619ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் நாள். இன்னும் சில நாட்கள் கழித்து மேலும் 2, 3 பேரை விற்றனர் டிரஷரர் கப்பலைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்வு வர்ஜினியா மாகாணத்தின் வரலாற்றை மட்டுமல்ல வட அமெரிக்காவின் எதிர்கால சமூக அமைப்பையும் அரசியலையும் ஒருசேரப் புரட்டிப்போட்டது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதிலும் அடக்குமுறை செய்வதிலும் புதிய கட்டம் ஒன்று உருவானது.
1619இல் வர்ஜினியா காலனிக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவின் பண்டைய டோங்கா (Ndongo) பேரரசைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. தற்போதைய அங்கோலா நாட்டின் ஒரு பகுதி. மக்கள் கிம்புண்டு என்ற மொழியைப் பேசினார்கள். விவசாயத்தோடு கைத்தொழில், நெசவு, இரும்புப் பொருட்களைச் செய்யும் திறனையும் பெற்றவர்கள். இந்தப் பகுதிக்கு 16ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவுக்கு வந்த போர்த்துகீசியர்கள் இந்தப் பகுதியிலிருந்த சாவ் பாலோ டி லுவாண்டா துறைமுகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிறகு அங்கிருக்கும் மக்களைப் பல வழிகளில் அடிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கும் தங்கள் குடியேற்ற நாடுகளுக்கும் கொண்டுசென்றனர். அட்லாண்டிக் அடிமை வாணிகத்தின் முதல் 150 ஆண்டுகளில் பத்தில் ஒன்பது ஆப்பிரிக்கர்கள் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டனர். 1750 வரையிலும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகளவில் அடிமைப்படுத்தப்பட்டனர். இந்தத் தகவல்கள் எல்லாம் வரலாற்று ஆய்வுகள்மூலம் தெரியவந்தவை.
வர்ஜினியாவுக்கு வந்த ஆப்பிரிக்கர்களின் சட்ட நிலைமையும் எதிர்காலமும் குழப்பமாக இருந்தது. வர்ஜினியாவின் சட்டம் அடிமைத்தளையை ஏற்கவில்லை என்றாலும் உணவுக்காகப் பண்டமாற்றாக விற்கப்பட்டவர்கள் காலமுழுதும் அடிமையாக வேலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடிமைத்தளை என்னும் நிறுவனத்தின் கருத்தாக்கம் 17ஆம் நூற்றாண்டில் முழுமைபெற்றது. வாழ்நாள் முழுவதையும் அடிமைகளாகவே கழிக்கும் நிலையில் பெரும்பாலானோர் சிக்கித் தவித்தனர்.
வர்ஜினியாவின் மக்கட்தொகைக் கணக்கெடுப்புப் பட்டியல் ஆண்டனி, இசபெல்லா என்ற ஆப்பிரிக்க இணையரின் பெயரைப் பதிவுசெய்துள்ளது. ஃபோர்ட் அல்ஜெர்னூன் என்ற பகுதியின் தளபதியான கேப்டன் வில்லியம் டக்கரின் இல்லத்தில் வசித்தனர். 1624இல் அவர்களின் மகன் வில்லியம் பிறந்தான். அமெரிக்க மண்ணில் பிறந்த முதல் ஆப்பிரிக்கக் குழந்தை என நம்பப்படுகிறது.
0
ஆப்பிரிக்கர்கள் அமெரிக்கா வந்துசேர்ந்து இன்றைக்கு 400 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் கடந்தகால வரலாற்றைப் பேசுகையில் ஆப்பிரிக்க அடிமைகள் என்றும் நிகழ்காலம் பற்றி உரையாடுகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றும் அவர்களைக் குறிக்க ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆப்பிரிக்கா பல்லாயிரக்கணக்கான இனங்களையும் கலாசாரங்களையும் மொழிகளையும் கொண்டது. இந்த உண்மையைப் புரிந்துகொண்ட காரணத்தால் அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்க மக்களின் மூதாதையர்கள், சொந்த ஊர், கலாசாரம், மொழி ஆகியவை பற்றி விரிவான இனவிளக்க ஆராய்ச்சிகள் கடந்த சில பத்தாண்டுகளாக அமெரிக்காவில் நடந்து வருகின்றன.
எந்தெந்த வருடங்களில் எந்தெந்த ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வந்துசேர்ந்தனர்? எந்த நாட்டினர் அவர்களை யாரிடமிருந்து விலைகொடுத்து வாங்கினார்கள்? யாருடைய கப்பலில் அவர்கள் அட்லாண்டிக்கைக் கடந்தார்கள்? அமெரிக்காவின் கிழக்குக் கரையில் எந்தத் துறைமுகத்தில் இறங்கி எந்தப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்? ஒவ்வொருவரின் பெயரும் வயதும் பாலினமும் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்காக வரலாற்றாசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இனவரைவியல் வல்லுநர்களும் பல தகவல்களைத் திரட்டி ஆய்வுக்குட்படுத்தி வெளியிட்டு வருகிறார்கள்.
0
புதிய உலகம் என்றழைக்கப்பட்ட அமெரிக்காவுக்கு வந்த ஆப்பிரிக்கர்கள் பற்பல திறன்களைக் கொண்டவர்கள். உள்நாட்டு, தூரதேச வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிரிக்க மொழிகளைத் தெரிந்து வைத்திருந்திருந்ததோடு ஐரோப்பிய மொழிகளையும் பேசினர். இதனால் சில நேரங்களில் மொழிபெயர்ப்பாளர்களாகவும் விளங்கினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, உலோகக் கொல்லியல், மண்பாண்டத் தொழில் எனப் பல தொழில்களைச் செய்பவர்களும் இவர்களிடையே இருந்தனர்.
தொடக்கத்தில் ஸ்பானிய, டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனிகளை அமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆப்பிரிக்கர்களின் குடியேற்றம் உதவியது. இவர்களுள் ஒப்பந்தக் கூலிகளும் அடிமைப்படாமல் சுதந்திரமாக வாழ்பவர்களும் இருந்தனர். நிலத்தைப் பண்படுத்தி, தங்களைப்போன்ற அடிமைகளுக்குத் தங்குமிடங்களையும் உரிமையாளர்களுக்குக் கோட்டைகளையும் கட்டினர். அன்றாட உணவுக்கான பயிர்களோடு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதிசெய்வதற்காக அரிசி, அவுரி நீலம் எனப்படும் இண்டிகோ போன்றவற்றையும் பயிரிட்டனர். கால்நடைகளையும் பன்றிகளையும் வளர்த்தனர். பைன் மரங்களை வெட்டி அவற்றிலிருந்து டர்பண்டைன், பிசின், தார் ஆகியவற்றைச் சேகரித்தனர். காலப்போக்கில் அமெரிக்காவின் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சியிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற நாட்டை நிறுவுவதிலும் ஆப்பிரிக்கர்கள் பெரும்பங்கு வகித்தனர்.
ஒரு நாட்டை நிறுவுவதற்கு அல்லும் பகலும் உடல் நோக உழைத்த ஆப்பிரிக்கர்களின் பங்களிப்பு எப்படி முழுவதுமாக மறைக்கப்பட்டது? எப்போதுமே அடிமையாக இருக்கும் துயரத்துக்கு எப்படி ஆளாகினர்? இத்தனைத் திறன்களையும் அனுபவங்களையும் பெற்றிருந்தவர்கள் எதனால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்? அவர்களின் சமூக, கலாசார வரலாறு ஏன் உலகின் கண்களுக்குத் தெரியாமல் போனது? இத்தனைக் கேள்விகளுக்கும் விடைதேட முற்பட்டனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலத்தின் சிந்தனையாளர்கள் மக்களை வகைப்படுத்துவதற்கு நிறத்தைப் பயன்படுத்தினர். ஐரோப்பாவுக்கு முதலில் வந்த ஆப்பிரிக்கர்களான சஹாரா நிலப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தங்களுக்கு நிகரானவர்களாக ஏற்றுக்கொள்வதில் ஐரோப்பியர்களுக்குப் பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் அமெரிக்க இந்தியர்களும் ஆப்பிரிக்கர்களும் வந்தபோது அந்தப் பார்வை மாறியது.
பண்டைய கிரேக்க எழுத்தாளர்கள் உருவாக்கிய மாபெரும் உயிர்ச் சங்கிலி (Great Chain of Being) என்ற படிமம் ஆப்பிரிக்கர்களை எல்லா இன மக்களுக்கும் கீழே வைத்தது. ஆப்பிரிக்கர்கள் மனிதர்களுக்குக் கீழ்நிலை, விலங்குகளுக்குச் சற்று மேலே என்ற கிரேக்கர்களின் கருத்து எல்லோரின் பார்வையையும் மாற்றியது. நிறம், உடலமைப்பு, மனப்பாங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை ஆறு முக்கியப் பிரிவுகளாக ஐரோப்பியர்கள் வகைப்படுத்தினார்கள். குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றுவதற்கு முந்தைய கட்டமே ஆப்பிரிக்கர்கள் என்ற இனவாதக் கருத்து வலுப்பெற்றது. அதையடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் உழைப்பாளர்களின் தேவை பல மடங்கு அதிகரித்தபோது ஒவ்வொரு மனித இனமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டவை என்ற எண்ணம் வேரூன்றியது. நாளடைவில் ஐரோப்பியர் அல்லாதவரைப் பற்றிய எதிர்மறை நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் கற்பிதங்களும் கெட்டிப்பட்டன. வெள்ளை நிறத்தவர்கள் மேன்மக்கள், கறுப்புத் தோலுடையவர்கள் இழிவான கீழ்மக்கள் என்ற எண்ணம் ஐரோப்பியர்களின் மனதில் வலுவாக விதைக்கப்பட்டது.
காரணமறிதல், பகுத்தறிதல் ஆகிய இரண்டின் வழியாக முன்னேற்றமடைய வேண்டும் என்ற கருதுகோளைக் கொண்ட விழிப்புணர்வு இயக்கம் மனிதர்களின் உரிமைகளை நிலைநாட்டும் புதிய நாடொன்று உருவாக வழிவகுத்தது. அதே நேரம் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதையும் அங்கீகரித்தது என்பது முரண்நகை. ஆப்பிரிக்கர்களின் இழிநிலையை நிறுவவும் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தவும் வரலாற்றில் பல தகவல்கள் தவிர்க்கப்பட்டன, மறைக்கப்பட்டன. ஆப்பிரிக்க சமூக வரலாறும் கலாசாரப் பாரம்பரியமும் திரிக்கப்பட்டன, தவறாகப் பொருள்கொள்ளப்பட்டன.
இன்னொரு புறம் ஆப்பிரிக்கர்களின் வரலாறும் கலாசாரமும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டவை, எழுத்தில் பதிவு செய்யப்படவில்லை. அட்லாண்டிக் அடிமை வாணிகத்துக்கு முந்தைய பதிவுகள் கிரேக்க, அரேபிய, போர்த்துகீசிய பயணிகள், வாணிகர்கள், துறவிகள் போன்றோரால் எழுதப்பட்டவை. அடிமை வாணிகத்தினால் வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு வந்தவர்களின் வாழ்வும் வரலாறும்கூட ஐரோப்பியர்களால் பதிவுசெய்யப்பட்டவை. வெள்ளையர்கள் உயர்வானவர்கள் என்ற கருத்து எவ்வளவு வேரூன்றியிருந்தது என்றால் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கறுப்பின சமூகவியலாளர்கள் சிலரும் அந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
0
17ஆம் நூற்றாண்டில் புகையிலைப் பயிர் வட அமெரிக்காவின் பசுந்தங்கமாக இருந்தது. தொடக்கத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய நில உரிமையாளர்களும் அவர்களின் வேலையாட்களும் நிலத்தில் இறங்கிப் பணிசெய்தனர். செலவைச் சமாளித்து லாபம் ஈட்டுவதற்கு விளைச்சல் அதிகமாக வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும். இன்னும் அதிகமான தொழிலாளர்கள் தேவை. இதற்குத் தீர்வாக 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய ஒப்பந்தக் கூலிகளையும் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளையும் கூட்டிவந்து இந்தப் பணியில் ஈடுபடுத்தினர்.
18ஆம் நூற்றாண்டில் வர்ஜினியா மாகாணத்தின் செஸபீக் விரிகுடா பகுதியில் புகையிலைப் பயிர் அபரிமிதமாக விளைந்தது. 1629இல் வர்ஜினியா 1.5 மில்லியன் பவுண்டுகள் புகையிலை உற்பத்தி செய்தது. 1775இல் அது 100 மில்லியன் பவுண்டாக உயர்ந்தது. அடிமை ஆப்பிரிக்கர்களும் அவர்களின் சந்ததியினரும் சிந்திய வியர்வைதான் அதற்குக் காரணம்.
வர்ஜினியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆப்பிரிக்கர்கள் பெரும்பங்கு வகித்தனர். அந்தப் பகுதியில் ஆப்பிரிக்கர்களைக் குடியேற்றுவது தொடர்ந்து நடைபெற்றது. காலனியின் பொருளாதார, அரசியல், சமூகத் தலைமையில் நில உரிமையாளர்கள் தனியாதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திய ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகவே வைத்திருந்தனர். வெள்ளை உழைப்பாளர்களின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தடைகளை அகற்றினர். அவர்களின் ஒப்பந்தம் முடிந்ததும் நிலம் வாங்கும் வாய்ப்பையும் உரிமையையும் வழங்கும் சட்டங்களை இயற்றினர். இதன் காரணமாகக் கூலிக்கு வேலைசெய்த வெள்ளைக்காரர்கள் ஒப்பந்தம் முடிந்ததும் உரிமையாளர்களாகினர். ஆனால் ஆப்பிரிக்கர்கள் நிரந்தரமாக அடிமைகளாகவே இருந்தனர். அடிமை ஆப்பிரிக்கர்களும் அவர்களின் சந்ததியினரும் காலங்காலமாகச் சுரண்டப்பட்டனர். வர்ஜினியாவுக்கு வந்துசேர்ந்த அடிமைகள் அங்கிருந்து அமெரிக்காவின் மற்ற மாகாணங்களுக்கு இட்டுச்செல்லப்பட்டனர்.
0
வட அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்துவதில் பல வகை இருந்தது. தொடக்கத்தில் எல்லா ஆப்பிரிக்கர்களும் அடிமைகளாகவே இருக்கவில்லை. விலைக்கு வாங்கும்போது குறிப்பிடப்பட்ட ஒப்பந்தக் காலம் முடிந்ததும் விடுதலை பெற்றனர் சிலர். இன்னும் சிலர் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுதந்திர மனிதர்களாகவே வந்துசேர்ந்தனர், அதற்கான சட்ட ஆவணங்களையும் வைத்திருந்தனர். தந்தை அடிமையில்லை அல்லது வெள்ளையர், ஆனால் தாய் அடிமை என்கையில் பிறக்கும் குழந்தையின் நிலை என்ன? குழந்தை தந்தையின் பெயரைப் பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும் ஆனால் தாயின் அடிமை நிலையைப் பெற்று உரிமையாளருக்குச் சொந்தமாக அவருக்குப் பணியாற்றவேண்டும்.
செஸபீக் விரிகுடாவில் கலக்கும் ஜேம்ஸ் ஆற்றின் கரையில் ஜேம்ஸ்டவுன் என்ற குடியிருப்பை ஆங்கிலேயக் குடியேறிகள் நிறுவினர். அவர்களுக்குத் தீவிரமான உழைப்பைக் கோரும் விவசாயமோ வேறு பணிகளோ செய்யத்தெரியாது. ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துவரப்பட்ட வெள்ளைக்காரத் தொழிலாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அடிமைகளாக வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் அந்தப் பகுதியைச் சீரமைத்து வாழ்விடத்தையும் விளைநிலத்தையும் நிறுவக் கடுமையாக உழைத்தனர். ஹாரியட்டின் முன்னோர்கள் மேரிலாண்ட் மாகாணத்துக்கு அப்படித்தான் வந்துசேர்ந்தனர். அந்தப் பகுதியில் குடியேறிய வெள்ளைக்காரர்களின் உடைமையாகினர்.
ஹாரியட்டின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அடிமைப்படுத்திய வெள்ளைக்காரர்களின் வாழ்க்கை குறித்து கிடைத்துள்ள ஆவணங்களை ஆய்வுசெய்கையில் அந்த இரு இனக் குழுக்களின் வாழ்க்கை எத்தனை வேறுபாடுகளைக் கொண்டிருந்தன என்பது தெரியவருகிறது. பாட்டிசன், தாம்சன், ஸ்டூவர்ட், ப்ராடஸ் போன்ற வெள்ளைக்காரர்களின் குடும்பங்கள் ஹாரியட் டப்மன் குடும்பத்தினரின் வாழ்வில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின.
(தொடரும்)