Skip to content
Home » கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

கறுப்பு மோசஸ் #11 – ஆப்பிரிக்கர்களின் இறைப்பற்று

பண்டைய ஆப்பிரிக்காவில் இயற்கை சார்ந்த வழிபாடும் ஆன்மவாதமும் பரவலாகப் பின்பற்றப்பட்டன. ஒவ்வொரு இனமும் தனிப்பட்ட வழிபாட்டுமுறைகளையும் இம்மை மறுமைக்கான தத்துவங்களையும் கட்டமைத்துக்கொண்டன. காலப்போக்கில் கிறித்தவம், இஸ்லாம், யூத மதங்களும் வேரூன்றின. அடிமை வாணிகத்தினால் அமெரிக்காவை வந்தடைந்த ஆப்பிரிக்கர்கள் தங்கள் கலாசாரத்தை முற்றிலுமாகக் கைவிடவில்லை. அமெரிக்காவில் பிறந்த தங்கள் சந்ததியினரிடம் வாய்மொழியாகவும் அன்றாட பழக்கவழக்கங்களாகவும் பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்த ஆப்பிரிக்கர்கள் அனைவருமே, அடிமைகளாக இருந்தாலும் சரி, சுதந்திரமானவர்களாக இருந்தாலும் சரி; அளவுக்கதிகமான சமயப்பற்றுடையவர்களாக இருந்தனர். எந்த விதத்திலும் வாழ்க்கையின்மீது கட்டுப்பாட்டைச் செலுத்தமுடியாத நிலைமையிலிருந்தவர்கள், தினந்தோறும் சிக்கல்களையும் கொடுமைகளையும் எதிர்கொண்டவர்கள், இறைவனைத் தவிர வேறு யாரும் தங்களுக்கு மீட்சியை நல்கமுடியாது என நம்பினார்கள். வாழ்க்கையின் நிலையாமையும் நிம்மதியின்மையும் அவர்களின் இறைப்பற்றுக்குக் காரணம்.

ஹாரியட்டின் ஆன்ம வலிமையையும் நீடித்திருக்கும் திறனையும் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இந்தச் சமய, இறைப்பற்றுக்கான காரணத்தை அறிந்திருப்பது அவசியம். அமெரிக்காவின் 19ஆம் நூற்றாண்டு வரலாற்றில் எவேஞ்சலிக்கல் ப்ராடஸ்டண்ட் மெதாடிச சமயப் பிரிவின் செயல்பாடுகள் முக்கியப் பங்கு வகித்தன. விவிலியத்தின் நற்செய்தியைப் பரப்புவது, சமய மாற்றம், தூய்மையான வாழ்க்கையை வாழ்வது ஆகியவற்றை மெதாடிசம் வலியுறுத்தியது.

தொடக்கத்தில் வெள்ளையர்களில் சிலர் ஆங்க்லிகன் பிரிவையும் மற்றவர்கள் கத்தோலிக்கப் பிரிவையும் பின்பற்றினர். பின்னர் பெரும்பாலானோர் மெதாடிஸ்ட் பிரிவுக்கு மாறினர். ஆண்டனி தாம்சனின் மகன் மெதாடிஸ்ட் பிரிவின் பாதிரியாராக இருந்தார். இதனால் பென் ராஸும் ரிட் ராஸும் அவருடைய தேவாலயத்துக்குச் சென்றனர். ஆனால் எபிஸ்கோபல், பாப்டிஸ்ட், கத்தோலிக்கப் பிரிவுகளின் போதனைகளும் அவர்களின்மீது தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தப் பிரிவுகளின் வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றினர். ஹாரியட்டின் பெற்றோர் வெள்ளிக்கிழமைதோறும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பார்கள். ஹாரியட்டும் அந்த வழக்கத்தைத் தொடர்ந்தார்.

அடிமை உரிமையாளர்களில் சிலர் சமய அனுபவத்தை எல்லோரும் அடைவது அவசியம் எனவும் அதை மறுப்பது தவறு எனவும் நம்பினர். அதனால் அடிமைகளுக்கும் சமய போதனைகளைச் செய்தனர். ஆனால் வேறு சில உரிமையாளர்கள் அடிமைகளிடையே ஆன்ம விடுதலை குறித்த கருத்துகளைப் பரப்புவது தங்களுக்குச் சாதகமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கவலைகொண்டனர். சமூகத்தின் பொருளாதார, வர்த்தக, கலாசாரத்தைத் தாங்கிப்பிடிக்கும் அடித்தளம் அடிமைத்தளை என்று நம்பினர். அதனால் அது நிலைபெற்றிருக்கவேண்டும் என விரும்பினர்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திர ஆப்பிரிக்கர்கள் மெதாடிஸ்ட் பிரிவில் புதிய உட்பிரிவுகளைத் தோற்றுவித்தனர், அவர்களில் சிலர் சமயவாதிகளாகினர். அந்த ஆப்பிரிக்கச் சமயவாதிகள் விவிலியத்தின் போதனைகளுக்கு வெள்ளையர்கள் கூறும் பொருளை ஒதுக்கித் தள்ளினர், அதற்குப் பதிலாகப் புதிய பொழிப்புரையை மொழிந்தார்கள். இறைவன் இந்த உலகிலேயே தங்களுக்கு விடுதலையோடு மீட்சியையும் வழங்குவார் என நம்பினார்கள். பழைய ஏற்பாட்டில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்பங்களையும் அவர்களின் வாழ்நாளிலேயே அதிலிருந்து கிடைத்த மீட்சியையும் அடிக்கோடிட்டு விளக்கினார்கள்.

அந்தப் புதிய பிரிவுகளின் ஆப்பிரிக்கப் பாதிரியார்கள் தங்களுக்கு எதிரான கருத்துகளை அடிமைகளின் மனதில் விதைக்கக் கூடும் என்பதால் அந்தத் தேவாலயங்களுக்குப் போகக்கூடாது எனவும் தங்களின் தேவாலயங்களுக்கு மட்டுமே வரவேண்டும் எனவும் உரிமையாளர்கள் அடிமைகளுக்குக் கட்டளையிட்டனர். ப்ராடஸ்டண்ட் பிரிவின் விவிலியப் பரப்புரை அடிமைகளைக் காப்பாற்றவில்லை என்றாலும் அதன் ஆன்மீகச் செய்தி தோற்றுவிடவில்லை, சமயம் என்பது நிறுவனம் என்ற நிலையைக் கடந்தது என நம்பினார்கள் ஆப்பிரிக்கர்கள்.

1850ஆம் ஆண்டு தப்பியோடும் அடிமைகள் சட்டத்தை (Fugitive Slave Law) அமெரிக்க அரசாங்கம் இயற்றியது. ஹாரியட் பீச்சர் ஸ்டவ் என்ற வெள்ளைக்காரப் பெண்மணி அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்று போராடிய வடக்கு மாகாணங்களின் குழுவைச் சேர்ந்தவர். 1851இல் அவர் எழுதிய ’அங்கிள் டாம்ஸ் கேபின்’ என்ற செவ்வியல் நாவல் டாம் என்ற ஆப்பிரிக்க அடிமையின் வாழ்க்கைக் கதை. புனைவு என்றாலும் அன்றைய தேதியில் பல அடிமைகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது.

கொடூரமான உரிமையாளரிடம் சிக்கிப் பல கொடுமைகளை அனுபவிக்கிறார் டாம். கிறித்தவரான டாம் அன்புள்ளமும் இறைநம்பிக்கையும் கொண்ட எளிய மனிதர். டாமின் இறைப்பற்றே அவரின் மீட்டெழுச்சிக்கு அடித்தளம். தன்னுடைய உரிமையாளர்களில் ஒருவரின் மகளான சிறுமி ஈவாவுடனான நட்பு டாமின் இறைநம்பிக்கையின்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாவல் வெளியான காலகட்டத்தில் அடிமைத்தளைக்கு எதிராகப் பெரிய அலையை உருவாக்கியது. அதே நேரம் அடிமைகளின் இறைப்பற்றை இந்த நாவல் தெளிவாக எடுத்துக்காட்டியது.

0

1831இல் வர்ஜினியாவில் நாட் டர்னர் என்ற ஆப்பிரிக்க அடிமை, அடிமைகளையும் சுதந்திரமானவர்களையும் ஒருங்கிணைத்து வெள்ளை உரிமையாளர்களுக்கு எதிராக வழிநடத்திய கலகத்தில் சுமார் 200 ஆப்பிரிக்கர்களும் வெள்ளையர்களும் கொல்லப்பட்டனர். அந்தக் கலகத்தினால் வெள்ளை உரிமையாளர்களுக்கும் அடிமைகளுக்குமிடையே நிலவிய உறவில் பெரிய மாற்றமேற்பட்டது. அமெரிக்காவில் அடிமைகள் நடத்திய மிகக் கொடிய புரட்சி இதுதான் எனக் கருதப்படுகிறது.

வர்ஜினியா மாகாணத்தின் சௌதாம்ப்டன் கோட்டத்தில் வசித்த நாட் டர்னர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஆப்பிரிக்க அடிமை. நாட் ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அவன் தந்தை விடுதலையைத் தேடிக் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான் சிறுவன். இளவயதிலேயே எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையைப் பெற்றிருந்த நாட் எழுதவும் படிக்கவும் கற்றான். இறைப்பற்று மிக்கவனாகவும் இருந்ததால் உண்ணாநோன்பிருப்பான், இறைவனை வழிபடுவான், விவிலியத்தைப் படிப்பான்.

சாமுவெல் டர்னர் என்ற உரிமையாளரின் பண்ணையில் வளர்ந்தான் நாட். ஆனால் வாழ்நாள் முழுவதையும் அடிமையாகவே கழிக்க விருப்பமில்லை. 21 வயதானதும் அங்கிருந்து தப்பித்து ஓடிப்போனவன் சுமார் ஒரு மாதம் கழித்து மீண்டும் பண்ணைக்கே வந்துசேர்ந்தான். உணவு கிடைக்காமல் பசியில் சுற்றி நினைவிழந்தது ஒரு காரணம் என்றால் அவன் முன் இறைவன் தோன்றி ‘நிலவுலக எஜமானருக்கு ஊழியம் செய்யுமாறு’ பணித்தது இன்னொரு முக்கியக் காரணம்.

தன்னுடன் பணிசெய்த அடிமைகளுக்கு வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தி விவிலியப் போதனைகளைச் செய்வான் நாட். அவனை பேராசான், தீர்க்கதரிசி என்று பலவாறு அழைத்தார்கள் மற்ற அடிமைகள். ஆப்பிரிக்கர்கள் மட்டுமின்றி வெள்ளையர்களும் நாட்டின் வழிபாட்டுக் கூட்டங்களுக்கு வந்து போதனைகளைக் கேட்டனர். இறைவன் தன் முன் தோன்றுவதாகவும் குறியீடுகளையும் நிமித்தங்களையும் காணச் செய்வதாகவும் நம்பினான் நாட். இந்தத் தெய்வீக வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தீர்க்கதரிசனத்தையும் தான் பெற்றிருப்பதாகச் சொன்னான். சுற்றுவட்டாரத்திலிருந்த அடிமைகளின்மீது அந்த நிகழ்வுகள் தாக்கமேற்படுத்தின.

1822 முதல் 1828 வரையில் இப்படி 10 இறைத்தோற்றங்கள் வரையில் தான் கண்டதாகச் சொன்னான் நாட். இறைவனின் பேரரசுக்கும் அதற்கு எதிரான பேரரசுக்கும் இடையே நடந்துவரும் போரில் தான் பங்கேற்கவேண்டும் என்றும் நம்பினான். இறைவன் தன்னுடைய வாழ்க்கையின் காரணத்தை உணர்த்திவிட்டதாக எண்ணினான். கிறித்தவ இறையியல் குறிப்பிடும் உலகயிறுதியில் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் புரட்சியினால் ஏற்படும் சீர்திருத்தம், தெய்வீக நீதியை நிலைநாட்டுவது தன் கடமையெனக் கருதினான்.

1831இல் தோன்றிய சூரிய கிரகணத்தைப் பார்த்த நாட் புரட்சியைத் தொடங்கச் சொல்லி இறைவன் தனக்குக் கட்டளையிட்டுவிட்டதாகச் சொன்னான். உடன் பணியாற்றிய அடிமைகளைப் அடிமைத்தளைக்கு எதிராக ஒன்று திரட்டினான். ஆகஸ்ட் 21ஆம் தேதி புரட்சி வெடித்தது. ராணுவம் உடனடியாகக் களத்தில் இறங்கிப் புரட்சியாளர்களைக் கைதுசெய்தது. ஆனால் அதற்குள்ளாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 55 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்கர்களில் புரட்சியில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருமாகச் சேர்த்து சுமார் 100 பேர் இராணுவத்தாலும் எதிர்த்தாக்குதல் நடத்தியவர்களாலும் கொல்லப்பட்டனர்.

இரண்டு மாத காலம் வரையிலும் நாட் டர்னர் பிடிபடாமல் தலைமறைவாகச் சுற்றினான். அக்டோபர் 30ஆம் தேதி நிலத்தில் அமைந்த குழியொன்றில் ஒளிந்திருந்த நாட் பிடிபட்டான். கலகத்தைத் தூண்ட சதித்திட்டம் தீட்டியதாகவும் கிளர்ச்சியை வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டான். வர்ஜினியா மாகாணத்திலுள்ள ஜெருசலேம் நகரில் நவம்பர் 11ஆம் தேதி தூக்கிலிடப்பட்டான்.

இறப்பதற்கு முன் தன் கதையை வழக்குரைஞர் தாமஸ் கிரேயிடம் கூறினான் நாட். இந்தக் கதை 1831ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ’நாட் டர்னரின் வாக்குமூலம்’ என்ற நூலாக வெளியானது. ’உன்னுடைய செயலுக்கு வருத்தம் கொள்கிறாயா’ என நாட் டர்னரைக் கேட்டபோது ‘கிறித்துவை சிலுவையில் அறையவில்லையா?’ என்று பதிலளித்தான்.

மற்ற கலகக்காரர்களுக்கு அச்சமூட்டுவதற்காக நாட்டின் தலை கொய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அவனை ஊரூராகக் கட்டியிழுத்துப்போய் சவுக்கால் அடித்துக்கொன்றார்கள் எனவும் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் ஆப்பிரிக்கர்களுக்குப் பொதுவாக வழங்கப்பட்ட தண்டனை அது என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.

நாட்டின் தோலையுரித்து கைப்பை செய்து நினைவுப்பொருளாக விற்றார்கள். நாட் சிறையிலிருக்கையிலேயே அவனுடைய உடலுக்குப் 10 டாலர் விலையாகக் கொடுத்து வாங்கப்பட்டது. இறந்த பிறகு அவனுடைய எலும்புக்கூட்டை வர்ஜினியாவின் மருத்துவரொருவர் மாதிரியாகப் பயன்படுத்தினார்.

நாட்டுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருந்தார்கள். அவனைக் குடும்பத்திடமிருந்து பிரித்து வேறொரு உரிமையாளருக்கு விற்றார்கள். பின்னர் அவனுடைய மகன்களில் ஒருவன் உரிமையாளரின் கடனுக்குப் பிணையாக விற்கப்பட்ட காரணத்தால் கலகத்துக்கு நாட் திட்டமிட்டான் எனவும் கூறப்படுகிறது. நாட் தலைமறைவான பிறகு அவனுடைய மனைவியைச் சிறைப்படுத்திக் கொடுமைப்படுத்தினார்கள்.

0

நாட் டர்னரின் கலகம் வெடிப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், 1831ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹென்னி என்ற பெயர்கொண்ட இளவயது ஆப்பிரிக்க அடிமையொருத்தி தன்னுடைய உரிமையாளரின் மனைவியைக் கோடரியால் வெட்டிக்கொன்றாள்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த வெள்ளை உரிமையாளர்கள் அச்சத்துடன் வாழ்ந்தார்கள். உறங்குகையில் தங்களை அடிமைகள் கொன்றுவிடக்கூடுமென பயந்தனர். பெரும்பாலானோர் அடிமைகளை அவசர அவசரமாக விடுவித்தனர். டார்செஸ்டர் கோட்டத்தில் மிக அதிகளவில் அடிமைகள் விடுவிக்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரம்பெற்ற அடிமைகள் அதற்கான சான்றைப் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகமாகின. சில உரிமையாளர்கள் தங்கள் வசமிருந்த அடிமைகளை தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த பண்ணைகளுக்கு விற்றனர்.

ஆப்பிரிக்கர்கள் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டது. வெள்ளைப் பாதிரியார்களின் வழிபாட்டுக்கூட்டங்களுக்கோ அவர்களால் அங்கீகரிக்கப்பட்டவற்றுக்கோ மட்டுமே அடிமைகள் போகவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இவையெதுவும் ஆப்பிரிக்கர்களின் விடுதலை தாகத்தைக் கட்டுப்படுத்தவில்லை. வழிபாட்டுக் கூட்டங்களில் நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்தனர். முக்கியமான செய்திகளையும் தகவல்களையும் உரிமையாளர்கள் அறியாமல் ரகசியமாக ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அடிமைத்தளையிலிருந்து விடுதலைபெறுவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் கொஞ்சமும் இழக்கவில்லை.

1830களில் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அடிமைத்தளையை ஆதரிப்பது அறமுடைய செயலா என்ற விவாதம் ஆரம்பித்த அதே காலகட்டத்தில் கிறித்தவ சமயமும் புதிய பரிமாணம் பெற்று ஆன்மிக விடுதலையை வலியுறுத்தத் தொடங்கியது. சுதந்திரமான ஆப்பிரிக்கப் பெண்கள் அந்த நம்பிக்கையை வலுவாகப் பற்றிக்கொண்டு சமயவாதிகளாக மாறிப் போதனைக் கூட்டங்களை நடத்தினர். தாங்கள் இறைவனின் கருவி என்றும் தங்களின் மூலமாக அவனுடைய செயல்பாடுகளை நடத்திக்கொள்கிறான் என்றும் நம்பினார்கள்.

ஹாரியட் சமயப் பற்றும் இறைப்பற்றும் மிக்கவராக வளர்ந்தார். இறைவன் தன்னிடம் நேரடியாகப் பேசுவதாகவும் வழிகாட்டுவதாகவும் நம்பினார். வெள்ளை உரிமையாளர்களின் குடும்பப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளுமாறு சொன்னாலும் தனியே வழிபட்டார். அவர்மீது ஆப்பிரிக்கப் பெண் சமயவாதிகளின் தாக்கம் இருந்திருக்கலாம். அதுகுறித்து எவரும் இதுவரையில் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும்.

வழிவழியாக வந்த ஆப்பிரிக்க சமய, கலாசார வழக்கங்களின் கருத்தியலும் ப்ராடஸ்டண்ட் சமயக் கோட்பாடுகளும் இறைப்பற்றும் அவர் அறியாமலே அவரின் செயல்களுக்கு அடித்தளமாக அமைந்தன. அடிமைத்தளையை எதிர்க்கும் நீண்ட நெடிய போரில் முக்கியப் பங்கை வகித்தார் ஹாரியட். இவற்றையெல்லாம் தாண்டி அன்றாட வாழ்வின் கொடுமைகளையும் நோயின் தீவிரத்தையும் எதிர்கொள்ள நெருங்கிய உறவுகள், தோழர்களின் ஆதரவும் கவனிப்பும் உதவின.

தெற்கு மாகாணங்களில் வசித்த அடிமைகளை விடுதலை நோக்கி வழிநடத்துவது புனிதச் சிலுவைப் போரை ஒத்தது என நம்பினார் ஹாரியட். எந்தத் தடையையும் விளைவையும் கண்டு அஞ்சாமல் செயலாற்றினார் என்பதால் மக்கள் விவிலியத்தில் தோன்றும் மோசஸின் நிலையில் அவரை வைத்தனர், கறுப்பு மோசஸ் என அழைத்தனர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *