Skip to content
Home » கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

”யார் கண்ணிலும் படாத களைச்செடியைப்போல வளர்ந்தேன். மகிழ்ச்சியோ மனநிறைவோ இல்லை. வெள்ளை ஆண்களைப் பார்த்தாலே என்னைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என அஞ்சி நடுங்குவேன், அடிமையாக இருப்பதும் நரகத்தில் இருப்பதும் ஒன்றுதான்,” என ஒரு பேட்டியில் சொன்னார் ஹாரியட்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயமும் ஒவ்வொரு உரிமையாளரும் கடுமையாக நடத்தியதால் உள்ளத்தில் உண்டான வலியும் அவரை நலிவடையச் செய்தன. தீவிரமான தலைவலியினாலும் வலிப்பு நோயினாலும் உரிமையாளர்களுக்கு லாபம் ஈட்டித் தருமளவுக்கு வேலைசெய்ய முடியவில்லை. ஹாரியட்டை விற்பதற்கு எட்வர்ட் ப்ராடஸ் எவ்வளவோ முயற்சிசெய்தான். ஆனால் நோயுற்ற அடிமையை வாங்க எவரும் முன்வரவில்லை.

1835ஆம் ஆண்டுவாக்கில் ஹாரியட்டின் உடல் சிறிது தேறியதும் அவரை ஜான் ஸ்டூவர்ட் என்பவரிடம் வேலைசெய்ய அனுப்பிவைத்தான் எட்வர்ட். ஜானின் சகோதரன் லெவின் தன்னிடமிருந்த அடிமைகளையெல்லாம் விடுவிப்பதற்கான சட்டபூர்வமான ஏற்பாடுகளை 1820களில் செய்தவர். லெவினின் மறைவுக்குப் பிறகு அவருடைய அடிமைகள் ஜானிடம் வந்துசேர்ந்தனர். சகோதரனின் ஆவணங்களின்படி அவர்களை குறிப்பிடப்பட்ட நேரத்தில் விடுவித்தார் ஜான்.

ஜான் ஸ்டூவர்டின் இருப்பிடத்தில் முதலில் வீட்டுவேலைகளைச் செய்தார் ஹாரியட். இறகடைத்த மெத்தைகளைத் தட்டி ஒழுங்குசெய்த பிறகு அவற்றின்மீது சிறிது நேரம் படுத்துக்கொள்வேன் என ஹாரியட் சொன்னதாக அவர் தோழியொருவர் பின்னாளில் கூறினார். ஹாரியட்டுக்கு வீட்டுவேலையை விடவும் பண்ணையிலும் காட்டிலும் பணி செய்யவே பிடிக்கும். சிறுமியாக இருந்தபோது வீட்டுவேலை செய்கையில் உரிமையாளர்கள் செய்த கொடுமைகள் நினைவுக்கு வந்து அச்சமூட்டியதே காரணம். வீட்டில் வேலை செய்கையில் உரிமையாளர்களின் நேரடிக் கண்காணிப்பும் அதிகமிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக உரிமையாள ஆண்களின் பாலியல் வல்லுறவையும் எதிர்கொள்ளவேண்டும். அதனால், ஹாரியட் மட்டுமல்ல, எல்லாப் பெண் அடிமைகளும் வீட்டுக்கு வெளியே செய்யும் பணிகளையே விரும்பினர்.

தனது உடல் வலிமை, செயல்திறனைக் குறித்துப் பெருமைகொண்டதோடு, அதனை வெளிக்காட்டவும் செய்தார் ஹாரியட். அந்தக் காலத்தில் ஆண்கள் மட்டுமே செய்யும் பணிகளாக வெள்ளையர்கள் கருதியவற்றைச் செய்வதில் விருப்பம்கொண்டார். படகுத் துறையிலிருந்து ஜானின் கடைக்குப் பாரமான சாமான்களைக் கொண்டுவரும் வேலையோடு காற்றாலையில் அரைத்த மாவுப் பொதிகளையும் பீப்பாய்களையும் மாடு போல இழுத்துச் சென்றார். வயலில் மாடுகளை ஏரில் பூட்டி உழுவது, வண்டி இழுப்பது, காட்டில் மரம் வெட்டுவது, வெட்டிய மரத்தின் பாகங்களை ஒற்றையாளாக இழுத்துச்செல்வது என ஆண்கள் செய்யும் வேலைகளைச் சுணக்கமின்றிச் செய்தார். ஆண்களின் கூலி 100 முதல் 120 டாலர் வரையில் என்றால் பெண்களின் கூலி அதில் சரிபாதிதான். ஹாரியட்டுக்கு ஆண்களுக்குச் சமமான கூலி வழங்கப்படவில்லை.

காடுகளில் வெட்டிச்சாய்த்த மரங்களை நிலத்தின் வழியே கொண்டுசெல்வதில் நிறைய இடர்களிருந்தன. அதனால் அவற்றை நீரில் மிதக்கவிட்டுக் கொண்டுசெல்லவேண்டும் என அந்தப் பகுதியின் உரிமையாளர்கள் முடிவுசெய்தனர். சிற்றாறுகளை ஒன்றிணைப்பதற்குக் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. வழக்கம்போல அடிமைகளைத்தான் இந்தக் கடுமையான பணியில் ஈடுபடுத்தினர். காட்டிலும் சதுப்பு நிலத்தின் சேற்றிலும் சகதியிலும் நின்று வேலைசெய்வது எளிதாக இருக்கவில்லை. பல நேரங்களில் பணியாளர்களுக்கு அடிபட்டது, உயிர்போகும் நிலைமையும் ஏற்பட்டது. இதனால் பல உரிமையாளர்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய அடிமைகளைக் கால்வாய் வெட்டும் வேலைக்கு அனுப்பிவைக்கச் சம்மதிக்கவில்லை.

அதனால் மீண்டும் ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை அடிமைப்படுத்திக் கப்பலில் கூட்டிவந்து வேலைசெய்ய வைத்தனர். அவர்களில் பலர் நோயினாலும் உரிமையாளரின் கொடுமையாலும் இறந்துபோயினர். இன்னும் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். வேறு பணிகள் ஏதும் கிடைக்காத சுதந்திரமான ஆப்பிரிக்கர்களும் பிழைப்புக்காகக் கால்வாய் வெட்டும் பணியைச் செய்ய முன்வந்தனர். சுமார் ஏழு மைல் நீளம்கொண்ட கால்வாயைக் கட்டிமுடிக்க இருபது ஆண்டுகளாயின. அதற்கு ஸ்டூவர்ட் கால்வாய் எனப் பெயரிட்டனர்.

சந்தை நிலவரத்துக்கும் பருவகாலத்துக்கும் ஏற்றபடி மரம் வெட்டுவது, விவசாயம், மீன்பிடித்தல் எனப் பல தொழில்களைச் செய்தனர் உரிமையாளர்கள். இந்தச் செல்வந்தர்களின் பண்ணைகளும் தொழில்தளங்களும் மாவட்டத்தின் வெவ்வேறு கோட்டங்களில் அமைந்திருந்தன. அதனால் அடிமைகள் அந்தந்தக் காலத்துக்கு ஏற்றபடி வெவ்வேறு இடங்களுக்குப் பயணம்செய்து அங்கெல்லாம் பணியாற்றவேண்டிய கட்டாயம். யார் எங்கே போனாலும் அடிமைகளிடையேயான உறவு நீடித்தது. இதுதவிர, ஒவ்வொரு வாரமும் கூடும் சந்தை, குதிரைப் பந்தயம், சமயக் கூட்டம் எனப் பல வழியிலும் அவர்கள் சந்தித்துக்கொள்ள முடிந்தது.

அந்தப் பகுதி முழுவதுமே சுதந்திரம் பெற்றவர்கள், அடிமைகள் என இரு வகை மக்களின் வசிப்பிடமாக இருந்தது. இவர்கள் அனைவரும் வெவ்வேறு உரிமையாளர்களிடம் மாறிமாறிப் பணிபுரிந்தனர். அடிமைகளும் சுதந்திரமானவர்களும் திருமணம் செய்துகொண்டனர். இப்படியாக அடிமைகளிடையே ஏற்பட்ட நெருக்கமான உறவும் நட்பும் ஹாரியட், அவருடைய குடும்பத்தினரின் சமூக உலகமாக மாறியது. பின்னாளில் அவர்களில் சிலர் அந்தப் பகுதியில் மலோனி தேவாலயத்தையும் ஆப்பிரிக்கர்களுக்கான பள்ளியையும் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர்.

ஜான் ஸ்டூவர்டின் பண்ணை ஹாரியட்டின் தந்தை பென் ராஸ்‌ வேலைசெய்த பண்ணைக்கு அருகிலிருந்தது. 1840ஆம் ஆண்டில் பென் ராஸ் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அது வரையில் ஆண்டனி தாம்சனின் சொத்தாக இருந்தவர் இனி யாருக்கு வேண்டுமானாலும் வேலைசெய்து கூலியைப் பெற்றுக்கொள்ளலாம். பென் மரம் வெட்டுவதிலும் மேற்பார்வை செய்வதிலும் திறமைமிக்கவர் என்பதால் ஜான் ஸ்டூவர்ட் அவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டார்.

அந்தப் பகுதியில் வசித்த ஜான் டப்மன் என்ற சுதந்திரமான ஆப்பிரிக்கர் மிண்டி ராஸுக்கு அறிமுகமானார். 1844இல் ஜானை மணம்செய்துகொண்டார் மிண்டி. அப்போது தன் பெயரை ஹாரியட் என மாற்றிக்கொண்டார். தன்னுடைய தாய்க்கு மரியாதை செலுத்துவதற்காக அப்படிச் செய்தாரா அல்லது ஆன்மீகக் காரணம் ஏதாவது இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் பின்னாளில் அடிமைகளை நிலத்தடி இருப்புப்பாதையின் வழியாக வடக்கு மாகாணங்களுக்கு கூட்டிச்செல்கையில் உதவியாக இருந்தது. மிண்டிதான் ஹாரியட் என்பது பலருக்கும் தெரியவில்லை என்பது சாதகமான விஷயமானது.

ஜான் டப்மன் சுதந்திரமானவர் என்பதால் டார்செஸ்டர் கோட்டத்தைச் சேர்ந்த பல உரிமையாளர்களின் பண்ணையில் வேலைசெய்தார். மேலும் வெள்ளையர் கலப்போடு பிறந்த முலாட்டோ ஆப்பிரிக்கர். ஹாரியட்டை மணமுடித்ததால் ஜான் பல உரிமைகளை இழக்கவேண்டியிருந்தது. உரிமையாளர் எட்வர்ட் ப்ராடஸின் அனுமதியின்றி ஹாரியட்டோடு வாழ்க்கை நடத்தமுடியாது. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகள்மீது ஜானுக்கு எந்த உரிமையும் கிடையாது. தாயைப்போல அடிமைகளாக இருப்பதோடு எட்வர்டின் சொத்துக்களாகிவிடுவர். இத்தனைத் தடைகளையும் ஹாரியட்டை மணந்துகொண்டார் என்றால் அவர்மீது எத்தனை காதல் இருந்திருக்கும். எல்லாவற்றையும் யோசித்துத்தான் அவர்களிருவரும் திருமணம்செய்துகொண்டிருப்பார்கள் அல்லது ஹாரியட்டுக்கான விலையைக்கொடுத்து விடுதலை பெற்றுவிடலாமென நினைத்திருப்பார்கள். மணமுடித்த பிறகு இருவரும் ஒன்றாக அல்லது அருகருகே இருந்த பண்ணையில் வசித்திருக்க வாய்ப்பு அதிகம்.

ஹாரியட் தலையில் ஏற்பட்ட காயத்தினால் அடிக்கடி மயக்கமுறுவார் என்றாலும் நல்ல உழைப்பாளி. ஆண்டனி தாம்சன் அவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டார். ப்ராடஸுக்கு ஒவ்வொரு வருடமும் ஹாரியட்டுக்காக 50 முதல் 60 டாலர் வரையிலும் தருவதாக ஒப்புக்கொண்டார். ஹாரியட் சுதந்திரமான ஆப்பிரிக்கர்களைப் போலவே எங்கெல்லாம் வேலை கிடைக்கிறதோ அதையல்லாம் சுணக்கமின்றியும் சுறுசுறுப்பாகவும் செய்தார். தனக்குக் கிடைத்த கூலியில் 60 டாலர் வரையிலும் ஆண்டனியிடம் கொடுத்துவிட்டு மிச்சத்தைத் தானே வைத்துக்கொண்டார். இப்படிச் சேர்த்த பணத்தில் இரண்டு எருதுகளை விலைக்கு வாங்கினார். பிறகு தான் வேலைக்குச் செல்லும் இடங்களில் எருதுகளையும் வாடகைக்கு விட்டார்.

விவசாய நிலத்தை உழுவது, மரத்தை வெட்டி எடுத்துச் செல்வது என வருடமுழுவதும் ஓய்வின்றி உழைத்தார். இதனால் ஹாரியட்டை அவரது மூன்று சகோதரிகளைப்போல வேறு உரிமையாளர்களுக்கு விற்க முனையவில்லை எட்வர்ட் ப்ராடஸ். லினா, மரியா ரிட்டி, சோஃப் ஆகிய மூவரையும் அவர்களின் குழந்தைகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்றான்.

காடுகளில் ஆண் தொழிலாளர்களோடு இணைந்து பணியாற்றிய மிகச் சில பெண்களில் ஒருவர் ஹாரியட். அந்தப் பகுதியில் ஓடும் ஆறுகளில் படகு செலுத்தும் படகோட்டிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் மூலம் பால்டிமோர் நகரிலுள்ள கப்பல் கட்டுந்துறையில் பணியாற்றிய கடலோடிகளின் அறிமுகம் கிட்டியது. உள்நாட்டுச் செய்திகளோடு கடல்கடந்த தூரதேசங்களின் அரசியல், சமூக நிகழ்வுகளைப் பற்றியும் அட்லாண்டிக் பெருங்கடலின் கரைகளிலும் தீவுகளிலும் வசித்த மக்களுடன் பகிர்ந்துகொண்டனர் இந்த ஆப்பிரிக்கக் கடலோடிகள். ஹெய்ட்டியில் நடந்த காலனியாதிக்கத்துக்கு எதிரான மக்கள் புரட்சியைப் பற்றியும் அடிமை ஒழிப்பு, காலனியாதிக்க எதிர்ப்பு, விடுதலை, தன்னாட்சி குறித்த சிந்தனைகளையும் ஆப்பிரிக்க அடிமைகளின் மனதில் விதைத்தனர். பிரிந்து வாழும் குடும்பத்தினர் தகவல் பரிமாறிக்கொள்ள உதவினர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் அடிமைத்தளை ஒழிப்புக்காகத் திரளும் ஆதரவைப் பற்றியும் அங்கே சென்றுசேர்வதற்கான வழித்தடங்களைப் பற்றியும் விளக்கிச் சொன்னார்கள்.

அத்தோடு தங்களுடன் பணியாற்றிய சுதந்திரமான ஆப்பிரிக்கர்களின் மூலம் ஆப்பிரிக்க அடிமைகளின்மீது அக்கறையும் பரிவும் கொண்ட வெள்ளையர்கள், ஆப்பிரிக்கர்களுக்குப் பாதுகாப்பான பகுதிகள், அடிமைகள் எதிர்கொள்ளவேண்டிய ஆபத்துகள் ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. வெள்ளை உரிமையாளர்களின் உலகையொத்த இன்னொரு உலகை, வெள்ளையர்களின் கண்ணுக்குப் புலப்படாத உலகை அடிமைகள் உருவாக்கிக்கொண்டார்கள். வெள்ளையர்களின் உலகில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவிய செய்தித்தாள், புத்தகம் ஆகியவற்றுக்கு மாற்றாக அடிமைகளின் உலகில் தகவல் பரிமாற்ற வலைப்பின்னலாக இயங்கினார்கள் இந்த மனிதர்கள். ஆப்பிரிக்க அடிமைகளின் குடும்ப, சமூக உறவுகளைப் பற்றி வெள்ளை உரிமையாளர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களின் தகவல் பரிமாற்ற வலைப்பின்னலைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *