1848-49 ஆண்டுகளில் மருத்துவர் ஆண்டனி தாம்சனிடம் வேலை செய்த காலத்தில் ஹாரியட்டின் உடல் நலிவுற்றது. தொடர்ச்சியாகப் பணிகளைச் செய்யமுடியவில்லை. தன்னுடைய அடிமைகளில் மிகவும் திறமைமிக்கவனான பென் ராஸின் மகள் என்பதால் கரிசனம் காட்டினாலும் எட்வர்ட் ப்ராடஸிடமிருந்து ஹாரியட்டை விலைக்கு வாங்கும் நிலைமையில் ஆண்டனி இல்லை.
‘கிறிஸ்துமஸ் தொடங்கி மார்ச் மாதம் வரை முடிந்த அளவுக்குக் கடுமையாக உழைத்தேன். ஒவ்வொரு இரவும் ஆண்டவரிடம் வேண்டினேன். ‘ஆண்டவரே, எஜமானரை மாற்று. கடவுளே, அந்த மனிதனின் மனதை மாற்று’.
1849ஆம் ஆண்டு பிறந்தது. வசந்தத்தின் வரவிற்கான அறிகுறியைக் கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதும் காணமுடிந்தது. மோசமான உடல்நிலையும் கடுமையான வேலைப்பளுவும் சேர்ந்து ஹாரியட்டின் வலிப்புநோயை மோசமாக்கின. கடவுளிடம் தன்னுடைய பாவங்களை மன்னித்து இதயத்தில் ஈரமற்ற உரிமையாளரிடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டியபடி இருந்தார் ஹாரியட். வேலைசெய்கையில், தண்ணீர்த் தொட்டியிலிருந்து நீரையள்ளி முகத்தைக் கழுவுகையில், முகத்தைத் துடைக்கையில், துடைப்பத்தை எடுத்துக் கூட்டும்போது என எந்த நேரத்திலும் பிரார்த்தனையை நிறுத்தவில்லை.
1849ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்ததும் உரிமையாளர் எட்வர்ட் ப்ராடஸ் தன்னை விற்கப்போகிறார் என்ற எண்ணம் ஹாரியட்டுக்குத் தோன்றியது. அதற்கேற்றாற்போல வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து தன்னுடைய அடிமைகளைப் பார்வையிடச் செய்தார் எட்வர்ட்.
‘எங்களில் சிலரை சங்கிலிக் கூட்டத்தோடு பருத்தி, நெல் வயல்களில் வேலைசெய்ய விற்கப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. நானும் என்னுடைய சகோதர சகோதரிகளும் விற்கப்படுவோம் என்றும் சொன்னார்கள். மார்ச் 1ஆம் தேதி முதல் என்னுடைய பிரார்த்தனையை மாற்றிக்கொண்டேன். ‘ஆண்டவரே, அந்த மனிதனின் மனதை மாற்றப்போவதில்லை என்றால் அவனைக் கொன்றுவிடு. அவனை என் பாதையிலிருந்து விலக்கிவிடு’ என்று இறைஞ்சினேன்.’
என்ன ஆச்சரியம்! யாருமே எதிர்பாராத வகையில் ஆண்டவர் அவரின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்தார். உண்மையாகவே எட்வர்ட் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தான். 1849ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி 47 வயதான எட்வர்ட் ப்ராடஸ் உயிர்நீத்தான். ஹாரியட் அதிர்ச்சியுற்றார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் தன்னுடைய வேண்டுதல்களுக்குப் பலனிருக்கிறது என்பது ஒருவிதத்தில் தனக்கிருந்த பொறுப்புணர்வை எண்ணிப் பார்க்கச் செய்தது.
‘எஜமானர் இறந்த செய்தியைக் கேட்டதும் இந்த உலகத்திலிருக்கும் தங்கம் முழுவதையும் கொடுத்தாவது அவரின் உயிரை மீட்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்காக அதற்குமேல் என்னால் பிரார்த்தனை செய்யமுடியவில்லை.’
எட்வர்டின் மறைவு அவனுடைய மனைவி மக்களின் வாழ்வைப் புரட்டிபோட்டது என்றாலும் அவனுடைய அடிமைகள்தான் அதிகத் துன்பத்துக்கு ஆளானார்கள். கடன் சுமையால் எட்வர்டின் மனைவி எலிசா அடிமைகளை விற்றுக் கடனை அடைக்க உதவுமாறு டார்சஸ்டர் கோட்ட அனாதைகள் நீதிமன்றத்தில் மனுகொடுத்தார்.
இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் எட்வர்ட் தன்னுடைய உயிலை எழுதியிருந்தான். அசையாச் சொத்துகள் முழுவதையும் மனைவி எலிசாவுக்குத் தரவேண்டுமென்று சொல்லியிருந்தான். ஆனால் அடிமைகளை வேலைவாங்கவும் வாடகைக்கு விடவும் மட்டுமே முடியுமென்று குறிப்பிட்டிருந்தான். அதன்மூலம் கிடைக்கும் தொகையைத் தன்னுடைய பிள்ளைகளை வளர்ப்பதற்காக எலிசா பயன்படுத்தவேண்டும் என்றும் எலிசாவின் மறைவுக்குப் பிறகு சொத்து முழுவதும் பிள்ளைகளைச் சேரும் எனவும் சொல்லியிருந்தான்.
ஹாரியட்டின் குடும்பத்தினர் தான் இறந்ததும் அடிமைகளை விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பான் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் அடிமையாகவே இருக்கும்படி செய்துவிட்டான் என்பதால் மிகுந்த வருத்தம் கொண்டார்கள். எட்வர்ட் நேர்மையற்றவன் என்பது ஹாரியட்டுக்குத் தெரிந்திருந்தது, அவனிடமிருந்து கருணையை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அடிமையாகவே இருக்கவேண்டிய கட்டாயம் துயரமூட்டியது.
1840களில் ஹாரியட் தனது தாய் ரிட்டின் முதல் உரிமையாளரான அட்ஹவ் பேட்டிசனின் உயிலைச் சரிபார்ப்பதற்காக வழக்குரைஞரின் உதவியை நாடினார். 1791இல் பேட்டிசன் எழுதிய உயிலின்படி ரிட்டுக்கு 45 வயதானதும் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதைத் தெரிந்துகொண்டார். அத்தோடு ரிட்டுக்குப் பிறந்த குழந்தைகளும் தாயுடன் சேர்ந்து விடுதலை பெற்றிருக்கவேண்டும். இது தெரிந்தாலும் தாத்தாவின் உயிலை மதிக்காமல் எட்வர்ட் ப்ராடஸ் சட்டத்துக்குப் புறம்பாகத் தன்னுடைய சகோதர சகோதரிகளை வெவ்வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு விற்றது ஹாரியட்டுக்குப் புரிந்தது. அப்படி விற்றதற்கான ஆதாரங்களையும் எட்வர்ட் வைத்துக்கொள்ளவில்லை.
இதற்கிடையே புதிய பிரச்சனையொன்று முளைத்தது. எட்வர்ட் இறந்துபோனதால் அவனுடைய தாய்மாமா கெர்னி பேட்டிசன் ரிட்டும் அவரின் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் பேட்டிசன் குடும்பத்துக்குச் சொந்தம் என்று வழக்குத் தொடுத்தார். எது எப்படியிருந்தாலும் எட்வர்டின் மனைவி எலிசா நீதிமன்றத்தின் உதவியுடன் ஹாரியட்டின் சகோதரியின் மகள்களையும் பேரக்குழந்தைகளையும் ஏலத்தின்மூலம் விற்றாள்.
தனது நெருங்கிய உறவுகள் சட்டத்துக்குப் புறம்பாக விற்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனையையும் துயரத்தையும் ஆற்றிக்கொள்வதற்குள் தானும் விற்கப்படலாம் என்ற செய்தியை ஹாரியட் கேட்க நேர்ந்தது. அடிமையாக வாழ்ந்தது போதும், இனி தன் விடுதலைக்குத் தானே பொறுப்பு என்ற முடிவுக்கு வந்தார். 1849ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் தேதி ஹாரியட், அவருடைய சகோதரர்கள் பென், ஹென்றி, அக்கா மகள் கெசையா ஆகியோரை விற்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் எலிசா ப்ராடஸ். அன்றைய தினமே ஹாரியட்டும் அவருடைய தம்பிகளும் தப்பித்து ஓடிப் போனார்கள்.
சுமார் இரண்டு வாரங்கள் கழித்தே அடிமைகள் ஓடிப்போன விஷயமே எலிசாவுக்குத் தெரியவந்தது. அந்தக் காலகட்டத்தில் ஹாரியட், பென், ஹென்றி ஆகியோர் தாம்சனின் பண்ணையில் வேலைசெய்யச் சென்றிருக்கலாம், அதனால் ஒன்றாகத் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். தப்பித்து ஓடிய அடிமைகளைப் பிடித்துத் தந்தால் சன்மானம் வழங்கப்படுமென்ற அறிவிப்பை நாளிதழ்களில் வெளியிட்டாள் எலிசா.
சகோதரர்கள் இருவரும் எந்தத் திசையில் போகவேண்டுமென்பது குறித்து ஹாரியட்டிடம் விவாதம் செய்தார்கள். பிடிபட்டுவிடுவோமோ என்ற அச்சம் ஒரு புறம். போகவேண்டிய இடம், துரத்தி வருபவர்கள் குறித்த பயம் இன்னொரு புறம் எனப் பலவாறு நடுங்கினார்கள். தப்பியோடும் அடிமைகளுக்குக் கசையடியோடு சொல்லொணாத கொடுமைகளும் நடக்கும். பென்னுக்குக் குழந்தை பிறந்து சில வாரங்களே ஆகியிருந்ததும் சகோதரர்களின் தயக்கத்துக்குக் காரணம். உள்ளூரிலேயே வேறு உரிமையாளருக்கு விற்கப்பட்டால் குடும்பத்தைப் பிரிய வேண்டிய அவசியமில்லையே என்றும் பென்னும் ஹென்றியும் யோசித்தார்கள். ஹாரியட்டின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி அவரை மீண்டும் ஊருக்கு அழைத்துப்போனார்கள். ஓடிப்போன மூன்றாவது வாரம் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்கள். ஆனால் ஹாரியட்டுக்குத் தப்பிச்சென்றால்தான் அடிமைத்தளையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வேரூன்றியது.
0
1849ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார் ஹாரியட். தன்னுடைய வலிமை, திறமை இரண்டையும் நம்பிப் பயணத்தை ஆரம்பித்தார். வடக்கு மாகாணங்களிலொன்றான ஃபிலடெல்பியாவை அடையவேண்டுமென்ற இலக்கைக் கொண்டிருந்தார். பெரும்பாலும் இரவு நேரங்களில் துருவ நட்சத்திரம் எனப்படும் வடமீனின் துணையோடு நடந்தார்.
ஹாரியட்டின் இந்த முதல் விடுதலைப் பயணத்தில் வெள்ளையர்களும் ஆப்பிரிக்கர்களும் உதவினார்கள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியிடம்தான் முதலில் தன்னுடைய திட்டத்தைப் பற்றிச் சொன்னார். இந்த வெள்ளைக்காரர் நிச்சயம் ஒரு குவேக்கராக இருந்திருக்கவேண்டும். தொடக்கமுதலே குவேக்கர்கள் பல வழிகளில் ஆப்பிரிக்கர்களின் விடுதலையை ஆதரித்தவர்கள். அந்த குவேக்கர் பெண்மணி அடுத்துத் தொடர்புகொள்ளவேண்டிய இருவரின் பெயரை ஹாரியட்டிடம் சொன்னார். ஹாரியட்டின் பயணப்பாதை, சந்தித்த நபர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. எல்லா குவேக்கர்களும் அடிமைகள் தப்பிச்செல்ல உதவும் வலைப்பின்னலின் உறுப்பினர்களுமல்ல, குவேக்கர்களல்லாதவர்களும் சுதந்திரமான ஆப்பிரிக்கர்களும் பல வழிகளில் ஆதரவு தந்தனர். ஹாரியட் தப்பிச் செல்ல உதவிய நிலத்தடி இருப்புப்பாதை கருணையும் மனிதநேயமும் உடைய எத்தனையோ மனிதர்களால் ஏற்கனவே பல வருடங்களாகச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
மருத்துவர் ஆண்டனி தாம்சனின் இல்லமிருந்த கேம்பிரிட்ஜிலிருந்து ஹாரியட் கிளம்பியிருக்கவேண்டும். பாப்லர் நெக் என்ற இடம் நிலத்தடி இருப்புப்பாதையின் முக்கியமான நிலையமாக இருந்தது. தன்னுடைய திட்டம் குறித்து யாரிடமும் குறிப்பாகத் தன்னுடைய தாயிடமும் தெரிவிக்கமுடியாத நிலைமை ஹாரியட்டுக்கு. ஏற்கெனவே மகள்களிடமிருந்து பிரிக்கப்பட்ட துயரத்திலிருந்த ரிட்டினால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியாது. ஆனாலும் தாயிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்ப மனம் வரவில்லை. தப்பித்துச்செல்லத் திட்டமிட்டிருந்த அந்த நாளின் மாலையில் அம்மாவை ஓய்வெடுக்குமாறு சொல்லிவிட்டு வேலைகளையெல்லாம் இழுத்துப்போட்டுச் செய்தாள்.
பெரிய வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் உறவினர்களைச் சந்தித்தாள். அவர்களுள் மேரி என்ற பெண்ணிடம் தான் தப்பிக்கப்போகும் தகவலைச் சொல்ல முயற்சிக்கையில் மருத்துவர் ஆண்டனி தாம்சன் வந்துவிட்டார். மேரியிடம் பேசமுடியவில்லை என்பதால் ஏதாவது குறிப்பின் வழியாகச் சொல்லிவிடவேண்டுமென நினைத்தாள் ஹாரியட். விடைபெறும் பாடலொன்றை இட்டுக்கட்டிப் பாட ஆரம்பித்தாள். ஜோர்டன் நதியைத் தாண்டி தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நிலத்துக்குச் செல்லும் யூத மக்கள் பாடுவதைப்போலப் பாடினாள். முன்பே ஒரு முறை சகோதரர்களுடன் ஓடிப்போக ஹாரியட் முயற்சிசெய்திருந்த காரணத்தால் மருத்துவர் ஆண்டனி தாம்சனுக்குச் சிறிய சந்தேகம் ஏற்பட்டது, ஆனாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
அங்கிருந்து கிளம்பிய ஹாரியட் அந்த இரவு முழுவதும் வடக்குத் திசையை நோக்கி நடந்தார். பயணத்தின் முதல் வீட்டை அடைந்ததும் அந்த வீட்டுப் பெண் முற்றத்தைக் கூட்டிச் சுத்தம் செய்யச் சொன்னாள். அவளது கணவன் வந்துசேரும் வரையில் ஹாரியட்டின் வருகை குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்கான உத்தி. இருட்டியதும் ஹாரியட் அந்தக் கணவனின் குதிரை வண்டியில் ஏறி வைக்கோல் போருக்குள் ஒளிந்துகொண்டாள். அடுத்த பாதுகாப்பான வீட்டுக்கு அவளை அழைத்துச்சென்றான் அந்தக் கணவன். அவர் எந்த இடத்தில் யாரைச் சந்தித்தார், உதவியவர்களின் பெயர் என்ன போன்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் நிலத்தடி இருப்புப்பாதை வலைப்பின்னலின் உதவியுடன் தப்பிச்சென்றார். மேரிலாண்ட் மாகாணத்தின் குவேக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வலைப்பின்னலின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.
மருத்துவர் ஆண்டனி தாம்சனின் மனைவி மேரி லீவர்டன் குவேக்கர் சமூகத்தின் முதன்மை குடிமக்களின் மகள். அவளது சகோதரன் ஆர்தர் அடிமைகள் தப்பிச்செல்ல உதவுகிறான் என்ற குற்றத்துக்காக அவர் வசித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். லீவர்டன் குடும்பத்தின் பண்ணை ஆண்டனி தாம்சன் பண்ணைக்கு அருகிலிருந்தது. ஹாரியட்டுக்கு இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உதவிசெய்திருக்கலாம்.
மேரிலாண்டிலிருந்து கிளம்பி சாப்டாங்க் ஆற்றின் கரை வழியே டெலாவேர் மாகாணத்தை அடைந்து அங்கிருந்து பென்சில்வேனியா மாகாணத்துக்குச் சென்றுசேரும் வழியை ஹாரியட் தேர்ந்தெடுத்திருக்கலாம். அடிமைகள் தப்பிச் செல்வதற்குப் பெரும்பாலும் அந்த வழித்தடத்தைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். சுமார் 145 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஐந்து முதல் இருபது நாட்கள் வரை ஆகலாம். 1850ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அந்த ஆண்டில் மட்டும் 259 அடிமைகள் தப்பிச்சென்றது பதிவுசெய்யப்பட்டது. அவர்களுள் பெரும்பாலானோர் மேரிலாண்டைச் சேர்ந்தவர்கள். உரிமையாளர்களில் பலபேர் தங்களின் அடிமைகள் ஓடிப்போனதைச் சொல்லவில்லை, எனவே உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். 1847 முதல் 1849 வரையில் கிழக்குக் கடற்கரைப் பகுதி நாளிதழ்களில் அடிமைகளைக் காணவில்லை என வெளியான விளம்பரங்களைப் பார்த்தால் இது புரியும்.
அடிமைகளைப் பிடித்துக் கொடுப்பதற்குச் சன்மானமும் தப்பிக்க உதவுபவர்களுக்குக் கடுமையான தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதனால் அடிமைகள் இரவு நேரத்தில் மட்டுமே பயணம் செய்வார்கள். விடிந்ததும் பாதுகாப்பான வீடுகளிலோ காட்டுப் பகுதியிலோ ஒளிந்துகொள்வார்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்துடனும் பதற்றத்துடனும் கழிப்பார்கள். இப்படி இரவிலும் பகலிலும் பயணம்செய்து பென்சில்வேனியாவை அடைந்தார் ஹாரியட்.
‘பென்சில்வேனியா மாகாண எல்லையைத் தாண்டியதும் அது நான்தானா என்று என்னுடைய கைகளை ஒரு முறை பார்த்துக்கொண்டேன். பார்க்கும் எல்லாப் பொருட்களும் மேன்மைமிக்கதாகத் தோன்றின. மரங்களின் வழியே, வயல்வெளிகளின் மேலே சூரியன் தங்கம்போல மின்னியது. சொர்க்கத்திலிருப்பதுபோல உணர்ந்தேன்.’
(தொடரும்)