தப்பியோடும் அடிமைகளுக்குதவிய நிலத்தடி இருப்புப்பாதை என்ற பெயர் 1830களில் இருப்பூர்திகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு கொடுக்கப்பட்ட பெயராகும். அதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே விடுதலையை மீட்டுத் தரும் ரகசிய வலைப்பின்னல்கள் இயங்கித் தொடங்கியிருந்தன. ஆப்பிரிக்கர்களை வலுக்கட்டாயமாக ஐரோப்பியர்களின் காலனிகளுக்குக் கொண்டுவந்த காலத்திலிருந்தே அடிமைகள் தப்பியோடுவது வழக்கம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த வலைப்பின்னல் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது, அதன் செயல்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டது. விடுதலையைத் தேடும் அடிமைகளுக்கு ஆதரவளித்தும் வழிகாட்டியது. நிலத்தடி இருப்புப்பாதை குறித்த பல கட்டுக்கதைகளும் மர்மங்களும் மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் இவையெல்லாம் அது நிறுவப்பட்டு இயங்கத் தொடங்குவதற்கு முந்தைய காலத்தவை. குவேக்கர்கள் மட்டுமின்றி மரூன் ஆப்பிரிக்கர்களும் சிவப்பிந்தியர்களும்கூடத் தப்பியோடும் அடிமைகளுக்கு உதவிபுரிந்தனர்.
ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே பாதிக்கப்பட்ட மக்கள் தங்களால் இயன்ற வழிகளில் அதை எதிர்த்து வந்திருக்கிறார்கள். தங்களைச் சிறைப்பிடித்தவர்களிடமிருந்தும் விலைக்கு வாங்கியவர்களிடமிருந்தும் தப்பித்துத் தனிச் சமூகமாக வாழ்ந்தவர்களைத்தான் மரூன் ஆப்பிரிக்கர்கள் என அழைக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் தங்கள் நிலத்திலிருக்கும்போதே சிறைப்பிடித்தவர்களிடமிருந்து தப்பித்தவர்கள் ஆப்பிரிக்காவிலேயே தனிச் சமூகமாக வாழ்ந்தனர். அமெரிக்க நாடுகளுக்கு வந்துசேர்ந்தவர்கள் கட்டாயப் பணி, கடுமையான பணிச் சூழல், கொடுமை, ஏச்சு, குடும்பத்தைப் பிரிந்து வாழும் கட்டாயம் எனப் பல காரணங்களால் தப்பியோடி மலைப் பகுதிகளிலும் சதுப்புநிலங்களிலும் வசித்தனர். அமெரிக்காவில் வடக்கு கரோலினா, வர்ஜினியா மாகாணங்களின் எல்லையை ஒட்டி அமைந்திருந்த பெரிய சதுப்புநிலத்திலும் லூசியானாவிலும் மரூன்கள் வசித்தனர்.
ஜமைக்கா, சுரினாம், பிரேசில் போன்ற நாடுகளில் மரூன் ஆப்பிரிக்கச் சமூகத்தினர் தங்கள் நிலப்பகுதிக்குப் பாதுகாப்பு அரண்களையும் விரிவான தகவல் பரிமாற்ற அமைப்புகளையும் அரசாங்கத்தையும் அமைத்துக்கொண்டனர். தங்கள் சமூகத்துக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் திறனையும் பெற்றிருந்தனர். பண்ணைகளில் வேலை செய்த அடிமைகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தனர். அடிமை உரிமையாளர்களும் காலனிய அரசுகளும் அடிமைகளின் கலகங்களைச் சமாளிப்பதற்குச் சிரமப்பட்டார்கள். ஐரோப்பிய அரசுகள் இராணுவத்தின் உதவியோடு மரூன் சமூகங்களை அழிக்க முயன்றனர். ஆனால் மரூன்களை முறியடிப்பது எளிதான காரியமாக இல்லை. ஜமைக்காவில் ஆங்கிலேயர்கள் மரூன் சமூகத்தினருடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். செயிண்ட் வின்செண்டிலும் சுரினாமிலும் அதேதான் நடந்தது.
18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு வரையிலான காலத்தை புரட்சிகளின் காலம் என்கின்றனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல பகுதிகளில் புரட்சிகளும் விடுதலைப் போர்களும் நடைபெற்றன. ஹெய்டி, பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய் நாடுகள், ஸ்பானிய அமெரிக்காவில் புதிய குடியரசுகள் நிறுவப்பட்டன. பேரரசுகளின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த விடுதலைப் போர்கள் வெவ்வேறு போராட்ட முறைகளைப் பின்பற்றினாலும் தனி மனித உரிமையை வலியுறுத்தின. அதே சமயத்தில் இந்த நாடுகளில் நிலவிய அடிமைத்தளையை அங்கே வசித்த அடிமைக் குழுக்கள் வெவ்வேறு வழியில் கையாண்டன.
ஹெய்டியில் அடிமைகள் சுதந்திர ஆப்பிரிக்கர்களுடன் கைகோர்த்துப் போராடித் தங்கள் விடுதலையை நிலைநாட்டினார்கள். பிரான்ஸில் அடிமைத்தளை சிறிது காலத்துக்கு ஒழிக்கப்பட்டது, ஆனால் திரும்பவும் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவில் அடிமைத்தளை ஒழிய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனது. ஸ்பானிய அமெரிக்காவில் பெரும்பாலான அடிமைகள் விடுதலை பெற்றனர். மற்றவர்கள் சீக்கிரமே தாங்களும் விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயமேற்பட்டது.
அமெரிக்காவில் வசித்த அடிமைகளில் பெருவாரியானவர்கள் கலகத்தில் ஈடுபடவில்லை. கடும்பணிக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடிமைத்தளைக்கும் பழக்கப்படுத்திக்கொண்டனர். அடிமைத்தளையின் கோரிக்கைகளையும் ஆபத்துகளையும் தாங்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டனர். உரிமையாளர்களின் சொல்படி நடந்து கூடியவரை தாங்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் துன்பங்களையும் குறைக்கும் வழிகளைப் பின்பற்றினர். அடிமைத்தளையின் இடர்களையும் அவமானங்களையும் எதிர்கொள்ளும் வாழ்வியல் பாடத்தைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தனர்.
0
பென்சில்வேனியாவை அடைந்த ஹாரியட் அங்கிருந்து பிலடெல்ஃபியா மாகாணத்துக்குச் சென்றார். நீண்ட காலமாக பிலடெல்ஃபியா அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அங்கிருந்த ஆப்பிரிக்கர்களோடு ஹாரியட் சேர்ந்துகொண்டார். வடக்கு மாகாணத்தை அடைந்துவிட்டால் அடிமைகள் இனி நிம்மதியாக வாழலாமென்று நினைக்கமுடியாத நிலைமை. உரிமையாளர்கள் அவர்களைக் கண்டுபிடித்துக் கூட்டிவருவதற்கென அடியாட்களை நியமித்திருந்தனர். அடிமைகளைத் தேடிப்பிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்தால் பெரிய அளவில் சன்மானம் கிடைக்கும் என்பதால் அவர்கள் ஒவ்வொரு ஊராக அடிமைகளைத் தேடிச்சென்றார்கள். ஆனால் ஹாரியட்டை தேடி யாரும் வரவில்லை. ஒன்று, எலிசா அவர் தப்பிச்சென்றதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது, சென்ற முறை போலவே இந்த முறையும் தானே திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம்.
பிலடெல்ஃபியாவுக்கு வந்த ஹாரியட் மகிழ்ச்சியாக இருந்தாரா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அடிமைத்தளையிலிருந்து கிடைத்த விடுதலை நிம்மதியைத் தந்தாலும் தன்னை வரவேற்கவோ நட்புறவு பாராட்டவோ யாருமில்லை என்பது கவலையளித்தது. யாரையும் அறியாத ஊரில் அன்னியமாக உணர்ந்தார். தன்னுடைய அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள், நண்பர்கள் இருக்கும் மேரிலாண்ட்தான் தன்னுடைய வீடாக இருக்கமுடியுமென எண்ணினார். ‘நான் விடுதலை பெற்றதைப்போலவே அவர்களும் விடுதலை பெறவேண்டும்,’ என முடிவுசெய்தார்.
தப்பியோடிய மற்ற அடிமைகளிலிருந்து ஹாரியட்டை வேறுபடுத்தியது இந்த எண்ணம்தான். தன்னுடைய குடும்பம் முழுவதையும் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறச் செய்யவேண்டுமென உறுதிபூண்டார். பிலடெல்ஃபியாவிலும் அண்டை மாகாணமான நியூஜெர்சியிலும் வீட்டுவேலை, சமையல்வேலை என எந்த வேலைகிடைத்தாலும் செய்து பணமீட்டினார், சிக்கனமாகச் சேமித்தார். தன்னுடைய குடும்பம், ஊர் பற்றிய தகவல்களை வலைப்பின்னல் மூலமாக அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொண்டார்.
1850ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய சகோதரியின் மகள் கெசையாவை ஏலத்தில் விற்க முடிவுசெய்திருப்பதைக் கேள்விப்பட்டார். உடனடியாக மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகருக்குச் சென்றார். பால்டிமோர் ஒரு முக்கியத் துறைமுகம். அங்கே ஹாரியட்டின் உறவினர்களும் நண்பர்களும் வசித்தனர். அவருடைய கணவரின் சகோதரரான டாம் டப்மன் கப்பலில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலைசெய்தார். ஹாரியட் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்துகொள்ள அவர் உதவினார்.
கெசையாவுக்கு இரண்டு குழந்தைகள், அவள் கணவன் ஜான் பௌலி பால்டிமோரில் வசித்து வந்தான். ஹாரியட்டும் ஜானும் கெசையாவையும் குழந்தைகளையும் மீட்டுவருவதற்கான திட்டத்தைத் தீட்டினர். நிலத்தடி இருப்புப்பாதை தோழர்களின் உதவியோடு மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். ஏலம் நடக்கும் தினத்தில் நீதிமன்ற வாயிலில் சிறிய கூட்டமொன்று கூடியது. அதிக வயதாகாத கெசையாவும் குழந்தைகளும் வருவாய் ஈட்டித் தரும் மதிப்புமிக்க சொத்துகள் என்பதால் 500 முதல் 600 டாலர் வரையில் விலை கிடைக்கும் என எலிசா ப்ராடஸின் மகன் ஜான் எதிர்பார்த்தான்.
ஏலம் முடிந்து விலை படிந்ததும் ஜான் உணவருந்தப் போனான். திரும்பி வந்து பணத்தை வாங்கலாம் என்று பார்த்தால் ஏலத்தில் எடுத்தவரைக் காணவில்லை. அவர்களை ஏலத்தில் எடுத்தது அவளுடைய ஆப்பிரிக்கக் கணவன் என்பது தெரியவந்தது. ஆனால் அவனை இப்போது காணவில்லை. ஏதோ சூழ்ச்சி நடக்கிறது என்பது தெரிந்ததும் ஏலத்தை மீண்டும் தொடங்கினார்கள். இந்த முறை கெசையாவையும் அவள் குழந்தைகளையும் காணவில்லை. நீதிமன்றத்திலிருந்து ஐந்து நிமிடத் தொலைவிலிருந்த பெண்ணொருவரின் வீட்டில் அவர்களை ஒளித்துவைத்திருந்தார்கள் ஹாரியட்டின் தோழர்கள்.
நிலத்தின் வழியே தப்பிச்சென்றால் பிடித்துவிடுவார்கள் என்று தெரியும். ஜான் பௌலி திறமையான மாலுமி என்பதால் பொழுது சாய்ந்ததும் மனைவி, குழந்தைகளை சிறிய படகில் ஏற்றிக்கொண்டு கடல்வழியே பால்டிமோருக்குப் போனான். பொதுவாகவே ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யவேண்டும். அதுவும் பனிக்காலத்தில் கடல்வழிப் பயணம் சிரமமிக்கது, ஆபத்து அதிகம், பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும். அதனால் இன்னும் அதிக நேரமானது. இதற்கிடையே உரிமையாளரின் ஆட்கள் கெசையாவையும் குழந்தைகளையும் தேடிப்பிடித்துவிட்டாலோ ஜான் பௌலியும் அடிமையாக வேண்டியதுதான். ஒருவழியாக அந்தப் பகுதியில் வசித்த ஆப்பிரிக்க மக்களின் உதவியுடன் எல்லோரும் பத்திரமாக பால்டிமோர் சென்றுசேர்ந்தார்கள். ஹாரியட்டின் கணவரின் குடும்பத்தினரும் மற்றவர்களும் தப்பிவந்த குடும்பத்துக்கு அடைக்கலம் அளித்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு அவர்களை பிலடெல்ஃபியாவுக்குக் கூட்டிப்போனார் ஹாரியட்.
தன் நெருங்கிய உறவினர்களை அடிமைத்தளையிலிருந்து வெற்றிகரமாக மீட்டது ஹாரியட்டுக்கு நிறைவைத் தந்தது. அதைவிட, தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற தைரியம் வந்தது. அடுத்த சில மாதங்களில் தன்னுடைய சகோதரன் மோசஸும் இன்னும் இரண்டு ஆண்களும் தப்பிக்க உதவிசெய்தார். டார்செஸ்டர் கோட்டத்துக்குப் போகாமல் இருக்கும் இடத்திலிருந்தே அந்த இரண்டு மீட்பு நடவடிக்கைகளைச் செய்துமுடித்தார். இரண்டு வருடங்கள் கழிந்ததும் 1851இல் தானே நேரடியாக ஊருக்குப் போகத் தீர்மானித்தார். இந்த முறை தன்னுடைய கணவனை அழைத்து வரவேண்டுமென்பது திட்டம். அதற்காகவே சேர்த்து வைத்த பணத்திலிருந்து கணவனுக்குப் புதிய ஆடைகளை வாங்கினார். கடல்வழியே வந்தாரா, நடந்து வந்தாரா என்பது தெரியவில்லை.
ஊர் வந்துசேர்ந்ததும் தன்னுடைய கணவன் ஜான் டப்மன் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது தெரியவந்தது. தானே நேரே சென்று குழப்பம் ஏற்படுத்தவேண்டாமென முடிவுசெய்து தான் வந்திருக்கும் சேதியையும் தப்பிச் செல்லும் திட்டத்தையும் சொல்லியனுப்பினார். ஆனால் டார்செஸ்டரில் இருக்கவே விரும்புவதாகவும் ஹாரியட்டோடு வாழப் பிரியமில்லை என்றும் சொல்லிவிட்டார் ஜான். ஹாரியட் இடிந்துபோனார். நேரே போய் கணவனை கேள்விகேட்டு உலுக்கவேண்டும். உரிமையாளருக்குத் தெரியவந்து பிடிபட்டாலும் பரவாயில்லையென நினைத்தார். கணவனின் புறக்கணிப்பு காயப்படுத்தியதால் ஆத்திரம் பொங்கியது.
விடுதலை பெற்ற பிறகு கணவனோடு குடும்பம் நடத்துவது குறித்து கனவு கண்டவரால் அந்த இழப்பைத் தாங்கமுடியவில்லை. ஆனால் சுதாரித்துக்கொண்டார். உணர்ச்சிக்குப் பலியாகி வாழ்க்கையைத் தொலைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று புரிந்தது. கணவனால் தான் இல்லாமல் வாழமுடியுமென்றால் தானும் அவனில்லாமல் வாழமுடியுமென முடிவுசெய்து மனதிலிருந்து அவனைத் தூக்கி எறிந்தார். வந்தது வந்துவிட்டோம் இன்னும் சில அடிமைகளை இங்கிருந்து மீட்டுச் செல்லவேண்டுமென நினைத்தார். அடுத்த சில நாட்களில் செயலில் இறங்கி இன்னும் சில அடிமைகள் பிலடெல்ஃபியா வந்துசேர உதவினார்.
*
1850க்குப் பிறகு வடக்கு மாகாணங்களுக்குத் தப்பிச்செல்லும் அடிமைகளின் விடுதலையும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளானது. பேரவையில் தங்களுக்கான பிரதிநிதித்துவம் சரியாக இல்லையென தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமை உரிமையாளர்கள் எரிச்சலுற்றனர். 1849இல் புதிதாகப் பதவியேற்றிருந்த ஜனாதிபதி ஜக்கரி டெய்லர் அடிமைத்தளை தெற்கு மாகாணங்களைத் தாண்டி பரவாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.
அதே சமயத்தில் தெற்கு மாகாணங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தப்பியோடும் அடிமைச் சட்டத்தை 1850ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றினார். அதன்படி வடக்கு மாகாணங்களுக்குத் தப்பியோடும் அடிமைகளைத் தேடி வரும் அடிமை பிடிப்பவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் உதவவேண்டும், ஒத்துழைப்பை வழங்கவேண்டும். நீதிபதிகளும் ஆணையர்களும் தளபதிகளும் ஓடிப்போன அடிமையின் நிலையை உறுதிசெய்யவேண்டும். அதைத் தடுக்க முயல்வோருக்கு அபராதத்தோடு சிறைத்தண்டனையும் உண்டு. வடக்கு மாகாணங்களின் அரசுரிமையிலும் இறையாண்மையிலும் தலையிடும் செயல் என மக்கள் பரவலாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஹாரியட்டும் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் பென்சில்வேனியாவிலோ மற்ற வடக்கு மாகாணங்களிலோ தங்குவது பாதுகாப்பாக இருக்காது என்பதைப் புரிந்துகொண்டனர். அடிமைகளில் பலரும் கனடா நாட்டுக்குக் குடிபெயர்ந்தார்கள். கெசையாவும் அவருடைய கணவரும் குழந்தைகளும் 1851ஆம் ஆண்டின் பனிக்காலத்தில் பிலடெல்ஃபியாவிலிருந்து கனடாவுக்குச் சென்றார்கள். ஆனால் ஹாரியட் டார்செஸ்டர் கோட்டத்தில் அடிமைத்தளையில் சிக்கியிருக்கும் மற்ற உறவினர்களை விடுவிப்பது குறித்த திட்டங்களைத் தீட்டுவதில் முனைப்பாக இருந்தார். முடிந்தவரையில் எல்லோரையும் அங்கிருந்து வடக்குப் பகுதிக்குக் கூட்டிவரவேண்டும் என எண்ணினார். தன்னுடைய சகோதரனையும் அவனுடைய மனைவியையும் சேர்த்து மொத்தம் பதினோரு அடிமைகளை கனடா நாட்டுக்கு இட்டுச் சென்றார். போகும் வழியில் அவர்கள் பிரெடெரிக் டக்ளஸ் என்பவரின் வீட்டில் தங்கினார்கள்.
பிரெடெரிக் டக்ளஸ் ஆப்பிரிக்க அடிமையாகப் பிறந்தவர். பின்னாளில் விடுதலையடைந்து அடிமையொழிப்புக்காகப் போராடியவர், சமூக மாற்றத்துக்காக உழைத்தவர், சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், அரசியல் மேதகை. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குடிமுறை உரிமைகளுக்காகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவர்.
பிரெடெரிக் டக்ளஸ் ஒரு காலத்தில் மேரிலாண்ட் மாகாணத்தில் அடிமையாக இருந்தவர். 1838இல் அடிமைத்தளையிலிருந்து தப்பித்து மஸசூஸெட்ஸ், நியூயார்க் மாகாணங்களில் அடிமைத்தளை ஒழிப்பு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். இயக்கத்தின் முக்கியப் சொற்பொழிவாளர்களில் ஒருவராக விளங்கினார். அடிமைத்தளை ஒழிப்பு குறித்து ஆழமான கட்டுரைகளை எழுதினார். அடிமைகளுக்கு அமெரிக்கக் குடிமக்களாக வாழ்வதற்கான அறிவுத்திறன் கிடையாது என்ற அடிமை உரிமையாளர்களின் அடிப்படையற்ற விவாதத்தை முறியடிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். இத்தனைச் சிறப்பான சொற்பொழிவாளர் ஒரு காலத்தில் அடிமையாக வாழ்ந்தார் என்பதை எவராலும் நம்பமுடியவில்லை.
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் தான் எதிர்கொண்ட சவால்களையும் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்கத் தனக்குக் கிடைத்த ஆதரவையும் விரிவாக மூன்று நூல்களாக எழுதினார் பிரெடெரிக் டக்ளஸ். அடிமைத்தளை ஒழிப்பைப் போலவே பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் வாக்குரிமைக்காகவும் போராடினார். 1872ஆம் ஆண்டு அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் பிரெடெரிக்கிடம் சொல்லாமலேயே அவருடைய பெயரைப் பரிந்துரை செய்தது நேஷனல் ஈக்வல் ரைட்ஸ் பார்ட்டி.
பிரெடெரிக்கின் மனைவி அன்னா முர்ரே டக்லஸ் அடிமைத்தளை ஒழிப்புப் போராளி, நிலத்தடி இருப்புப்பாதையின் உறுப்பினர். அவர் பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன் பெற்றோர் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டதால் சுதந்திரமான ஆப்பிரிக்கராக வாழும் நல்வாய்ப்பைப் பெற்றவர். பிரெடெரிக் விடுதலை பெறுவதற்குப் பல வழிகளில் உதவிசெய்தவர்.
ஹாரியட் அழைத்து வந்த பதினோரு அடிமைகள் தன்னுடைய வீட்டில் தங்கியது குறித்து பிரெடெரிக் தன்னுடைய தன்வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். ‘ஒரு சமயம் பதினோரு பேர் என்னுடைய வீட்டில் இருந்தனர். அவர்களை கனடா அனுப்பிவைப்பதற்குத் தேவையான நிதி திரட்டும் வரையில் என்னுடன் தங்கியிருந்தனர். அத்தனை பேருக்கு தங்குமிடமும் உணவும் அளிப்பது சிரமமாக இருந்தது. ஆனால் அவர்கள் தாங்களாக எந்தக் கஷ்டத்தையும் தரவில்லை. எளிமையான உணவை நிறைவுடன் உண்டனர். தரைவிரிப்பிலோ வைக்கோற்பரணிலோ எந்தக் குறையும் சொல்லாமல் படுத்துக்கொண்டனர்.’
பிரெடெரிக் தப்பிக்க உதவிசெய்த அதே நிலத்தடி இருப்புப்பாதையின் உறுப்பினர்கள்தான் ஹாரியட்டும் அவர் உறவினர்களும் தப்பிக்க உதவிசெய்தனர். தொடக்க வருடங்களில் உறுப்பினர்களின் பெயரைச்சொல்லி அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்று கவனமாக இருந்தார் பிரடெரிக். ஆனால் 1880களில் இருப்புப்பாதையின் முக்கிய நிலையங்களையும் அங்கே வந்துசேரும் அடிமைப் பயணிகளைக் கவனித்துக்கொள்வோரின் பெயர்களையும் வெளிப்படுத்தினார்.
பிரெடெரிக், ஹாரியட் இருவரும் முன்பே அறிமுகமானவர்களாக இருந்திருக்கலாம் அல்லது இருவருக்கும் பொதுவான நண்பர்களோ உறவினர்களோ இருந்திருக்கலாம். இருவரும் மேரிலாண்டைச் சேர்ந்தவர்கள், இருவரின் பெற்றோர் வேலைசெய்த பண்ணைகளும் அருகருகே அமைந்திருந்தன, அதுமட்டுமின்றி இருவரின் உரிமையாளர்களும் நண்பர்கள்.
(தொடரும்)