கனடாவிலிருந்து பிலடெல்ஃபியாவுக்குத் திரும்பிய ஹாரியட் 1853, 1854ஆம் ஆண்டுகளில் பணமீட்டுவதிலும் வலைப்பின்னலை விரிவுபடுத்துவதிலும் கவனம்செலுத்தினார். வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைத்தளை எதிர்ப்பாளர்களின் அறிமுகமும் ஏற்பட்டது. தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் விடுவிப்பதில் ஹாரியட்டுக்கு இருந்த முனைப்பும் அவருடையை ஆளுமையும் அவர்களுக்கு வியப்பூட்டியது.
லுக்ரீஷியா காஃபின் மாட் என்ற குவேக்கர் குழுவைச் சேர்ந்த பெண்மணி ஹாரியட்டுக்கு பொருளுதவியோடு வேறு பல உதவிகளையும் செய்தார். லுக்ரீஷியாவின் மூலம் ஹாரியட்டுக்கு பிலடெல்ஃபியா நிலத்தடி இருப்புப்பாதையின் முக்கிய உறுப்பினர்களின் தொடர்பு கிடைத்தது. லுக்ரீஷியா, அவருடைய சகோதரி மார்த்தா காஃபின் ரைட், எலிசபெத் கேடி ஸ்டாண்டன், பிரடெரிக் டக்ளஸ் ஆகியோர் அடங்கிய சிறிய குழு அடிமைகளின் விடுதலையோடு அவர்களின் சமஉரிமைக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடியது.
லுக்ரீஷியாவின் நண்பர் பாஸ்டனைச் சேர்ந்த வில்லியம் லாயிட் காரிஸன் அடிமை விடுதலையும் பெண்ணுரிமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் பேச்சுரிமையின் ஆன்மாவை நசுக்கினால் அடிமைத்தளையின் ஆன்மா வலுப்பெறும் என்றும் வலியுறுத்தினார். அமைதியான வழிகளில் போராடினாலும் அவர்களை எதிர்ப்பவர்கள் வன்முறையும் கலகமும் செய்து கூட்டங்களை நிறுத்தினர்.
லுக்ரீஷியாவும் எலிசபெத் ஸ்டாண்டனும் 1848இல் நியூயார்க்கின் செனக்கா ஃபால்ஸில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பெண்ணுரிமை மாநாட்டை நடத்தினர். பெண்களின் உரிமையோடு அவர்களின் சமூக, குடிமுறை, சமய நிலைமை குறித்தும் கலந்தாலோசிக்கும் கூட்டம் என்று விளம்பரம் செய்தனர். மாநாட்டின் தீர்மானங்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அமெரிக்காவின் வெவ்வேறு இடங்களில் பெண்ணுரிமை மாநாடுகள் நடத்தப்பட்டன.
மாநாட்டின் ஆறு அமர்வுகளில் சட்டம் பற்றிய சொற்பொழிவு, சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்த கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றோடு நகைச்சுவை நிகழ்வொன்றும் நடந்தது. எலிசபெத் ஸ்டாண்டனும் மற்ற குவேக்கர் பெண்களும் இணைந்து உணர்ச்சிவயக் கருத்துப் பிரகடனம், மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் ஆகிய இரண்டு ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். பங்கேற்பாளர்களின் கருத்தைக் கேட்டறிந்து அவற்றில் மாற்றங்களைச் செய்து கையெழுத்துக்களைப் பதிவுசெய்தனர். பெண்களின் வாக்குரிமை பற்றிய காரசாரமான விவாதமும் நடைபெற்றது. லுக்ரீஷியா உட்படப் பலரும் அந்தக் குறிப்புகளை நீக்குமாறு அறிவுறுத்தினர். மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே ஆப்பிரிக்க அமெரிக்கரான பிரடெரிக் டக்ளஸ் பெண்களின் வாக்குரிமை பற்றிய குறிப்புகளை நீக்கக்கூடாது என வலியுறுத்தினார். இந்த இரண்டு ஆவணங்களிலும் சுமார் 100 பங்கேற்பாளர்கள் கையெழுத்திட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது.
பெண்களின் சமூக, குடிமுறை, சமய உரிமைகளைப் பெறுவதற்கான முயற்சியில் இந்த மாநாடு மைல்கல்லாக அமைந்தது. ஆண்களுக்கு இணையான விடுதலையைப் பெறுவதற்கான போராட்டத்தின் தொடக்கமாகக் கருதப்பட்டது. நாடு முழுவதும் பெண்ணுரிமை இயக்கம் பற்றிய செய்திகள் பரவ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட உணர்ச்சிவயக் கருத்துப் பிரகடனம் உதவியது. 1851இல் நடைபெற்ற தேசியப் பெண்ணுரிமை மாநாட்டில் பெண்களின் வாக்குரிமை முக்கியமான கொள்கையானது.
அடிமைத்தளை அவசியம் என்று பெரும்பாலானோர் எண்ணிய காலகட்டத்தில் அரசியல் உரையாடலில் பெண்களும் பங்குபெற்றது 19ஆம் நூற்றாண்டில் நிலவிய பாலியல் மரபொழுங்குகள் குறித்து பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வழிவகுத்தது. பொதுவெளியில் நடந்த அரசியல் உரையாடலில் பெண்கள் இணைந்த காரணத்தால் அடிமைத்தளை ஒழிப்பில் திருப்பம் ஏற்பட்டது. பாலின நடத்தை குறித்த சமூகத்தின் எழுதப்படாத விதிகளைக் கேள்விகேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டித் தோன்றிய புதிய உத்திகள் காலப்போக்கில் நாட்டின் அரசியல் செயல்முறையையே மாற்றியமைத்தன.
இயக்கத்தின் கவனம் அடிமைப்பட்ட ஆப்பிரிக்கப் பெண்களின் பக்கம் திரும்பியது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைப் பெண்ணின் சித்திரம் அமெரிக்கப் பெண்களின் நிலையைச் சுட்டும் உருவகமானது. வெள்ளை ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற கருத்தே இன, பாலின வேற்றுமைகளுக்குக் காரணமென வெள்ளையர்களும் ஆப்பிரிக்கர்களும் நம்பினார்கள். ஆனால், பெண்கள் சமஉரிமை பெறவேண்டுமென ஒப்புக்கொண்டாலும் அடிமைத்தளை எதிர்ப்பாளர்களில் சிலர் அடிமைத்தளை எதிர்ப்பு மேடையில் பெண்ணுரிமை பற்றிப் பேசுவதற்குத் தயங்கினார்கள்.
ஹாரியட் தொடக்கமுதலே அடிமைத்தளை எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து பெண்ணுரிமைக் கூட்டங்களிலும் ஆப்பிரிக்கர்களின் உரிமைக் கூட்டங்களிலும் பங்குகொண்டார். அதுவே அவரின் வாழ்நாளின் இலட்சியமானது. அமெரிக்காவின் அரசியல், சமூக, பொருளாதாரத்தில் ஆப்பிரிக்கர்களின் பங்கு குறித்து கேள்வி எழுப்பினார். அவரைப் போன்ற பல ஆப்பிரிக்கப் பெண்கள், சுதந்திரமானவர்கள் உட்பட, அடிமைகளை விடுவித்து இன முன்னேற்றத்தோடு அடிமைத்தளை ஒழிப்புக்கும் பாடுபட்டனர். ஆப்பிரிக்கர்களின் பொருளாதார, கல்வி நிலைமையை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். நிதி வசூல் செய்வது, பரப்புரையில் ஈடுபடுவது, எதிர்ப்பைத் தெரிவிப்பது எனச் சமூக, தேவாலயக் குழுக்களுடன் இணைந்து பல வழிகளில் செயலாற்றினர்.
லுக்ரீஷியா மாட் போன்ற ஒரு சிலர் அடிமைகள் தப்பிச்செல்லவும் அவர்கள் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பொருளுதவி செய்வதையும் அடிமைத்தளை எதிர்ப்போடு தொடர்புடைய செயல்பாடாகக் கருத முடியாது என வலியுறுத்தினர். அடிமைத்தளையை அடியோடு ஒழித்துவிட்டால் தப்பிச்செல்வதற்கான தேவையே இருக்காதல்லவா?
இப்படிப்பட்ட இரு வேறு கருத்து கொண்டவர்களுக்கு மத்தியில் பணியாற்றினார் ஹாரியட். நிலத்தடி இருப்புப்பாதை வலைப்பின்னல் உறுப்பினர்கள் ஹாரியட்டின்மீது பெருமதிப்பு கொண்டிருந்தனர். அடிமைகளை விடுவிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பொருளுதவி செய்தனர். டார்செஸ்டர் கோட்டத்துக்குப் போகவும் அங்கிருந்து விடுவித்து அழைத்து வந்த அடிமைகள் புதிய வாழ்வைத் தொடங்கவும் வெள்ளையர்கள் உதவினர். அதே நேரம் வெள்ளையர்கள் கண்டுகொள்ளாத ஆப்பிரிக்க மக்களின் தேவாலயங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தன்னாலான தொண்டுகளைத் தொடர்ந்து செய்துவந்தார் ஹாரியட்.
*
1854இல் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தன்னுடைய சகோதரர்கள் பென், ஹென்றி, ராபர்ட் மூவரையும் விற்றுவிட எலிசபெத் ப்ராடஸ் முடிவுசெய்திருப்பதைத் தெரிந்துகொண்டார் ஹாரியட். இந்த முறை எப்படியும் அவர்களை விடுவித்துக் கூட்டிவரவேண்டும் என்று முடிவுசெய்தார். பிலடெல்ஃபியாவில் வசிக்கும் நண்பர் ஒருவரின் உதவியோடு டார்செஸ்டரில் வசிக்கும் சுதந்திர ஆப்பிரிக்கரான ஜேகப் ஜாக்சனுக்கு கடிதம் எழுதினார். அந்தப் பகுதியில் வசித்த ஆப்பிரிக்கர்களுக்குத் தகவல் பரிமாற்றத்தில் பெருமளவில் உதவியவர் ஜேகப். எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்குக் கடிதம் எழுதவும் படித்துக்காட்டவும் செய்வார். டார்செஸ்டரைச் சேர்ந்த அடிமைகள் தப்பிச்செல்ல ஜேகப் உதவுகிறார் என்று தபால் நிலைய அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர். அதனால் அவருக்கு வரும் கடிதங்களைத் துருவித்துருவி ஆராய்ச்சி செய்த பிறகே அவரிடம் தருவார்கள். இந்த விஷயம் ஹாரியட்டுக்கும் தெரியும் என்பதால் புதிரான மொழியில் கடிதம் எழுதினார்.
முதலில் ஏதேதோ உப்புச்சப்பற்ற விஷயங்களைப் பற்றி எழுதினார். பிறகு இப்படி எழுதினார்: ‘என்னுடைய குடும்பத்தினருக்கு இந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டுங்கள். என்னுடைய அன்பைத் தெரிவியுங்கள். எப்போதும் வழிபாட்டின்மீது கவனம் வைக்கச் சொல்லுங்கள். ஜயானின் கப்பல் வரும்போது அதில் ஏறுவதற்குத் தயாராக இருக்கும்படி கூறுங்கள்.’ கடிதத்தின் இறுதியில் வில்லியம் ஹென்றி ஜாக்சன் என்று கையொப்பமிட்டார். சில வருடங்களுக்கு முன்னால் வடக்கு மாகாணத்துக்குச் சென்றுவிட்ட ஜேகபின் தத்துப்பிள்ளையின் பெயர் அது.
கடிதத்தைப் படித்த தபால் நிலைய அதிகாரிகளுக்கு எதுவும் புரியவில்லை. அதில் சொல்லப்பட்டிருக்கும் ரகசியத் தகவல் என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் மண்டை குழம்பியது. வில்லியம் ஹென்றி ஜாக்சனுக்குப் பெற்றோரோ சகோதரர்களோ கிடையாது என்பதால் குழப்பம் அதிகமானது. ஜேகப்பை அழைத்து அவரிடம் கடிதத்தைக் கொடுத்தார்கள். படித்தவுடன் விஷயம் என்னவென்று புரிந்துவிட்டது என்றாலும் அதைக் கீழே போட்டார் ஜேகப். அது எனக்கு வந்த கடிதம் இல்லை, அதில் எழுதியிருப்பது என்னவென்றே புரியவில்லை என்று சொன்னார். ஆனால் அங்கிருந்து வெளியே வந்த உடனே நேரே சென்று ஹாரியட்டின் சகோதரர்களைச் சந்தித்து தகவலைத் தெரிவித்தார்.
ஊருக்கு வந்து சேர்ந்ததும் திங்கட்கிழமையன்று தன்னுடைய சகோதரர்களை ஏலத்தில் விடப்போகும் அறிவிப்புகள் ஊர்முழுவதும் ஒட்டியிருப்பதைக் கண்டார் ஹாரியட். உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். தப்பிச்செல்வதற்கு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாளைத் தேர்ந்தெடுத்தார். விடுமுறை காலமென்பதால் வயலில் வேலைசெய்யும் அடிமைகள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்கப்போவது வழக்கம். அதனால் அவர்களை ஓரிரு நாட்கள் காணவில்லையென்றால் உரிமையாளர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். சகோதரர்கள் மூவரையும் பாப்லர் நெக் என்ற பகுதியில் வசிக்கும் தங்கள் பெற்றோரின் வீட்டுக்கு வரச் சொன்னார்.
ராபர்டின் மனைவிக்குப் பேறுகாலம் என்பது ஹாரியட்டுக்குத் தெரியாது. ராபர்டுக்கு மனைவியைத் தனியே விட்டுவர மனமில்லை. ஊரிலிருந்தால் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விற்கப்படுவார். ராபர்டின் மனைவி மேரிக்குத் தன் கணவன் தப்பிக்கத் திட்டமிடுகிறான் என்பது தெரிந்துவிட்டது. இந்தக் குழப்பம் தீர்வதற்குள்ளாக ஹாரியட் தன்னுடைய குழுவினரோடு அங்கிருந்து கிளம்பிவிட்டார். குறித்த இடத்தில் சொன்ன நேரத்துக்கு வரவில்லையென்றால் யாருக்காகவும் காத்திருக்கமாட்டேன் என்பது அவர் வகுத்துக்கொண்ட விதிமுறை.
இன்னொரு சகோதரர் பென்னுக்கு நிச்சயிக்கப்பட்ட ஜேன் கேன் தன்னுடைய உரிமையாளருக்குத் தெரியாமல் வெளியேறியது தனிக்கதை. ஜேனின் உரிமையாளர் கொடூரமானவன். பட்டினி போடுவதோடு சாட்டையால் அடித்துத் துன்புறுத்துவான். தப்பியோடிவிடக்கூடாது என்பதற்காக ஆடையின்றி வைத்திருப்பான். ஜேன் பென்னை மணந்துகொள்வதைத் தடுத்தான். பென் தனக்காக முன்னரே வாங்கித் தந்த ஆண்களின் உடையை அணிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினாள் ஜேன். யாருக்கும் அவளை அடையாளம் தெரியவில்லை.
கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் ஹாரியட்டின் பெற்றோர் வசித்த இடத்துக்கு அருகேயுள்ள சோளக் கிடங்கில் எல்லோரும் ஒன்றுகூடினர். ஹாரியட், பென், ஜேன், ஹென்றி, ராபர்ட் இவர்களோடு வேறு இன்னும் இரண்டு இளைஞர்களும் அங்கே இருந்தனர். அன்றைய தினம் மழை கொட்டித் தீர்த்தது. இருட்டு விழும் வரையில் எல்லோரும் சோளக் கிடங்கில் பதுங்கியிருந்தனர்.
ஹாரியட்டின் தாய் ரிட் தன்னுடைய மகன்கள் வருவதற்காகக் காத்திருப்பதைக் கிடங்கின் உள்ளே இருப்பவர்களால் காணமுடிந்தது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்திலும் தாயைச் சந்திப்பது வாடிக்கை. அவர்களுக்காக விதவிதமான உணவுகளைச் சமைத்து வைத்திருந்தார். அவர்கள் வரவில்லை என்பதால் கவலையோடு சாலையை எட்டிப் பார்த்தபடி இருந்தார் ரிட். ஹாரியட் தன்னுடைய தாயைச் சந்தித்து ஐந்து வருடங்களாகிவிட்டன. என்றாலும் அவரை நேரில் சந்தித்தால் தப்பிச்செல்லும் திட்டம் அம்பலமாகிவிடும் என்பதால் அமைதியாக இருந்தார். பிள்ளைகள் தன்னைவிட்டுப் போகக்கூடாது என்று ஓலமிட்டு ஊரையே கூட்டிவிடுவார் ரிட்.
முந்தைய நாள் இரவு, உடனிருந்த இரண்டு இளைஞர்களை வெளியே சென்று தன் தந்தையிடம் மட்டும் ரகசியமாக விஷயத்தைச் சொல்லுமாறு அனுப்பிவைத்தார். தந்தை பென் ராஸ் அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுத்து வந்தார். ஆனால் பிள்ளைகளை ஏறெடுத்து நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. தப்பிய விவரம் தெரிந்ததும் அடிமைகளைப் பிடிப்பவர்கள் நிச்சயம் அவரை விசாரிப்பார்கள். அப்போது உண்மையாகவே தான் பிள்ளைகளைப் பார்க்கவில்லை என்று சொல்லிவிடலாமல்லவா. ஹாரியட்டைச் சந்தித்து ஐந்து வருடமாயிற்று. வடக்குப் பகுதிக்குப் போய்விட்டால் மகன்களை இனிப் பார்ப்பது கடினம். அப்படிப்பட்ட நிலைமையிலும் பாசத்தை அடக்கிக் கொண்டார்.
மறுநாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று உணவுப்பொருட்கள், குடிநீர் எனத் தேவையானவற்றை எடுத்து வந்தார். குழு இரவு நேரத்தில் பயணத்தைத் தொடங்கவிருந்தது. அதற்கு முன்னால் பெற்றோரின் வீட்டுக்குச் சென்று ஜன்னல் வழியே தாயைப் பார்த்தார்கள். கணப்பு அடுப்பின் முன்னே ரிட் கவலையோடு உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். பிள்ளைகளைக் காணவில்லையே, என்னவானதோ என்று யோசித்துக்கொண்டிருப்பார் என்பதும் புரிந்தது. பிள்ளைகளும் அழுதார்கள். ஆனாலும் உள்ளே போய் அவருக்கு ஆறுதல் சொல்லமுடியாது.
விடிவதற்குள் நிலத்தடி இருப்புப்பாதையின் அடுத்த நிலையத்துக்குச் சென்றுசேரவேண்டும் என்பதால் குழுவினர் வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். தந்தை பென்னும் கண்ணைக் கட்டிக்கொண்டு மகன்கள் இரு தோள்களையும் தாங்கிப் பிடிக்க அவர்களுடன் சிறிது தூரத்துக்கு நடந்து போனார். பிறகு அவரிடம் விடைபெற்று அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களின் காலடியோசை அடங்கும் வரை அங்கேயே நின்றார் பென். பிறகு கண்கட்டை அவிழ்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
(தொடரும்)