Skip to content
Home » கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

கறுப்பு மோசஸ் #17 – கனடாவுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள்

ஹாரியட்டும் அவருடைய சகோதரர்களும் மற்றவர்களோடு வில்மிங்டன் வந்துசேர்ந்தனர். அங்கே தாமஸ் கேரட் என்பவரின் வீட்டில் தங்கினார்கள். வரும் வழியில் ஹாரியட்டின் குழுவில் இன்னும் இரண்டு பேர் இணைந்துகொண்டதால் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருந்தது. தாமஸ் கேரட் வீட்டுக்குத் தேவையான உலோகப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி. சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலும் 2500க்கும் அதிகமான அடிமைகள் தப்பிச்செல்ல உதவியதோடு பொருளுதவியும் செய்தவர்.

ஹாரியட்டின் குழுவுக்குத் தேவையான உணவு, உடையை வழங்கினார். ஹாரியட்டுக்கும் குழுவிலிருந்த இன்னொருவருக்கும் புதிய காலணிகள் வாங்கப் பணம் கொடுத்தார். நிலத்தடி இருப்புப்பாதையின் அடுத்த நிலையத்துக்குச் செல்ல வண்டி ஏற்பாடு செய்தார். பென்னிசில்வேனியா வழியாக பிலடெல்ஃபியாவிலுள்ள அடிமைத்தளை எதிர்ப்பு அலுவலகத்துக்கு எல்லோரும் வந்துசேர்ந்தனர். அங்கே வில்லியம் ஸ்டில் என்பவரைச் சந்தித்தனர். நான்கு நாட்களில் நூறு மைலைக் கடந்திருந்தனர். ஒரு வழியாக தங்களைத் துரத்திப் பிடிப்பவர்களை எதிர்கொள்ளாமல் பாதுகாப்பான இடத்துக்கு வந்துசேர்ந்துவிட்டோமென்று நிம்மதி கொண்டனர்.

பாதுகாப்பை நாடி வரும் அடிமைகளின் பெயர், வயது, சொந்த ஊர், பெற்றோர், உடன்பிறந்தோர், இணையர், பிள்ளைகள், உரிமையாளரின் பெயர் என எல்லா விவரங்களையும் பதிவேட்டில் எழுதிவைப்பார் வில்லியம் ஸ்டில். தப்பித்து வந்தவர்கள் பெயர்மாற்றம் செய்துகொண்டால் அதையும் குறித்துக்கொள்வார். உறவினர்கள் தேடி வருகையில் பழைய, புதிய பெயர்களைக்கொண்டு அவர்களை அடையாளம் காண உதவுவார். சில நேரங்களில் அடிமை வாழ்க்கை, அனுபவங்களைப் பற்றியும் உரிமையாளர்கள் எப்படி நடத்தினார்கள், ஏன் தப்பிக்க நினைத்தார்கள் போன்ற தகவல்களையும் பதிவுசெய்வார். ஒவ்வொருவரும் தப்பிச்சென்று விடுதலை அடைய ஆன செலவையும் குறித்து வைப்பார். பிறகு தன்னுடைய வலைப்பின்னலின் உதவியோடு நியூயார்க், பாஸ்டன் போன்ற பகுதிகளுக்கு அனுப்பிவைப்பார். அங்கிருந்து பஃபலோ நகரைச் சுற்றியுள்ள பகுதிகளின் வழியாக ஈரி, ஒண்டாரியோ ஏரிகளின் வழியாகவோ நயகரா வீழ்ச்சியின் மீது கட்டப்பட்ட தொங்குபாலத்தைத் தாண்டியோ கனடாவுக்குள் நுழைவார்கள். இப்படிப் பல பாதைகள் இருந்தன. அந்தப் பாதைகளில் எல்லாம் வலைப்பின்னல் உறுப்பினர்கள் அடிமைகளுக்கு உதவி புரிந்தனர்.

ஹாரியட்டின் குழுவைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவல்களையும் கேட்டறிந்தார் வில்லியம் ஸ்டில். ஹாரியட்டின் சகோதரர்கள் தேர்ந்தெடுத்த புதிய பெயர்களையும் குறித்துவைத்தார். ராஸ் என்ற குடும்பப் பெயரை விடுத்து ஸ்டூவர்ட் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டனர். டார்செஸ்டர் கோட்டத்தில் வசிக்கும் முக்கியமான வெள்ளைக்காரக் குடும்பத்தின் பெயர் அது.

ஒரு சிலர் உரிமையாளர் தங்களுக்கு வைத்த பெயரை அறவே வெறுத்தார்கள். அடிமைத்தளையிலிருந்து தப்பியதும் தங்களுக்குப் பொருத்தமான பெயரைத் தாங்களே வைத்துக்கொண்டனர். பென் ராஸின் பெயர் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் ஆனது. ஜான் என்ற பெயரை வைத்துக்கொண்டார் ராபர்ட். ஹென்றி முதலில் லெவின் என்ற பெயரைத் தெரிவுசெய்தார் பிறகு அது வேண்டாமென்று வில்லியம் ஹென்றி ஸ்டூவர்ட் என்று மாற்றிக்கொண்டார். காதரீன் என்ற புதிய பெயரைப் பதிவுசெய்தார் ஜேன்.

குழுவிலிருந்த மற்ற இளைஞர்களும் அந்தச் சகோதரர்களைப்போலவே பெரும்பொருளும் அதிகாரமும் செல்வாக்குமிக்க வெள்ளைக் குடும்பப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அடிமைகளைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்த பிறகு அவர்கள் நியூயார்க் நகரத்துக்குப் போவதற்கு உதவினார். அங்கே இன்னொருவர் அல்பனி செல்ல ஏற்பாடு செய்தார். அங்கே சில நாட்கள் ஓய்வெடுத்த பிறகு செரக்யூஸ் அல்லது ராசெஸ்டர் நகரங்களின் வழியாக கனடாவுக்குச் சென்று சேர்ந்திருக்கவேண்டும்.

ஹாரியட்டின் சகோதரர்கள் செயிண்ட் காதரீனில் ஏற்கனவே வசித்துவந்த மற்ற உறவினர்களோடு தங்கினார்கள். ஹாரியட்டின் சகோதரியின் மகளான கெசையாவும் அவருடைய கணவர் ஜானும் சத்தாம் என்ற இடத்தில் வசித்து வந்தனர். பென்னும் ஜேனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். சத்தாமில் தப்பிவந்த அடிமைகள் பெருமளவில் வசித்தனர். வேலைவாய்ப்பு, கல்வி, வீட்டுவசதி எனப் பல விஷயங்களில் செயிண்ட் காதரீனைவிட சத்தாம் முன்னிலை வகித்தது.

ராபர்டும் ஹென்றியும் செயிண்ட் காதரீனில் வேலை தேடிக்கொண்டார்கள். ராபர்ட் வெள்ளைக்கார மருத்துவர்களுக்கு வண்டியோட்டியாகப் பணிசெய்தார். ஹென்றி விவசாய வேலைகளில் ஈடுபட்டார். ஹென்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது மனைவியும் மக்களும் கனடா வந்துசேர்ந்தனர்.

0

ஒரு முறை ஆண்கள் அதிகமிருந்த குழுவொன்றை வடக்குப் பகுதியை நோக்கிச் அழைத்துச் சென்றார் ஹாரியட். வழியில் ஆபத்து இருக்கின்றது என்ற குறியீட்டைக் கண்டார். உடனே அங்கிருந்த ஆற்றுக்குள் எல்லோரையும் இறங்கச் சொன்னார். ஆறு அகலமாக இருந்ததோடு ஆழமும் வேகமும் அதிகமாக இருப்பதுபோலத் தோன்றியது. ஆற்றைக் கடக்கப் பாலமோ படகோ இல்லை. குழுவினர் ஆற்றில் இறங்கத் தயங்கினர்.

தான் காணும் குறியீடுகளை முழுமையாக நம்பும் ஹாரியட் எந்தப் பயமுமின்றி ஆற்றில் இறங்கினார். வேறு வழியின்றி பயந்து நடுங்கியபடியே மற்றவர்களும் ஹாரியட்டைப் பின்தொடர்ந்தனர். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடவில்லை ஆனால் அவர்கள் அச்சம்கொண்டதுபோலக் கடப்பது கடினமாக இருக்கவில்லை. அவர்கள் நடந்து வந்த பாதையில் சிறிது தூரத்தில் தப்பிச்செல்லும் குழுவினரைப் பற்றிய அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. அவர்களைப் பிடிப்பதற்காக அதிகாரிகள் காத்திருந்தனர் என்பதையும் பின்னர் தெரிந்துகொண்டனர்.

‘நீர் என்னுடைய முகவாய்க்கு மேலே ஏறவேயில்லை. முழுகிவிடுவோம் என்ற அச்சம் தோன்றிய வேளையில் ஆழம் குறைந்துபோனது. பத்திரமாக அடுத்த கரையை அடைந்துவிட்டோம். அடுத்து எதிர்ப்பட்ட சிற்றாறு ஒன்றையும் அதேபோலக் கடந்தோம்,’ என்று அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பின்னாளில் விவரித்தார் ஹாரியட்.

எல்லா நேரமும் ஹாரியட் எந்தப் பின்விளைவுமின்றிக் காப்பாற்றப்படவில்லை என்பதையும் சொல்லவேண்டும். வேறொரு முறை இதேபோல ஆற்றில் இறங்கிக் கடந்த பிறகு வெகுநேரம் ஈர ஆடையுடன் இருக்க நேரிட்டதால் அடுத்த சில மாதங்களுக்கு ஹாரியட்டின் உடல்நிலை மோசமானது. ஹாரியட்டின் கண்ணுக்குத் தெரியும் தெய்வீகக் காட்சிகளையும் குறியீடுகளையும் எல்லோரும் நம்புவதில்லை. அவர் இட்டுக்கட்டுகிறார் என்று கேலி செய்பவர்களும் இருந்தனர். ஆனால் அவரின் இறைப்பற்றையும் மனச்சான்றையும் அறிந்தவர்களுக்கு அவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பது புரியும். கல்வியிலும் பொருளிலும் சிறந்து விளங்கிய பல தலைவர்கள் ஹாரியட்டைப் பல வருடங்களாக நேரில் பார்த்துப் பழகியவர்கள். அவர்கள் அனைவரும் அவரை மனித உருவில் நடமாடும் மிகச் சிறந்த ஆன்மா என்றும் அருட்பண்புடையவர் என்றும் புகழ்ந்தனர்.

0

ஹாரியட்டின் மூன்று சகோதரர்களும் காணாமல் போனது தெரிந்ததும் அடிமைகளைப் பிடிப்பவர்கள் முதலில் மருத்துவர் தாம்சனின் பண்ணைக்கு வந்தனர். ஜேனுக்கும் மற்ற இளைஞர்களுக்கும் இதனோடு தொடர்பு இருக்குமென அந்தச் சமயத்தில் யாரும் நினைக்கவில்லை. மருத்துவர் தாம்சன் பெற்றோரைச் சந்திக்கப் போயிருப்பார்கள் என்றார். தான் அவர்களச் சந்திக்கவில்லை என்றும் சொன்னார். ரிட்டுக்கு நிஜமாகவே அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. பென் தான் அவர்களைப் பார்க்கவில்லை என வார்த்தைகளோடு விளையாடினார்.

அடிமைகள் அடுத்தடுத்து காணாமல் போனதால் உரிமையாளர்கள் அந்தப் பகுதியில் வசித்த சுதந்திர ஆப்பிரிக்கர்களின்மீது சந்தேகம் கொண்டனர். பென், ரிட் தம்பதியரின் பிள்ளைகளில் பெரும்பாலானோர் தப்பித்துப்போனதால் அவர்களுக்கு எப்போதும் பிரச்சனை ஏற்படலாம் என்ற நிலை உருவானது. திறமையான, நம்பிக்கைக்குரிய முன்னாள் அடிமை என்ற பேர் பென்னை எப்போதும் காப்பாற்றாது என்பதும் தெரியும். அவர் நிலத்தடி இருப்புப்பாதையின் உறுப்பினர்களில் ஒருவர் என்பது தெரியவந்தால் ஆபத்து.

பென்னுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய மனைவி ரிட்டை எலிசா ப்ராடஸிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். ரிட்டுக்கு 45 வயது முடிந்ததும் அவரை விடுவிப்பதற்குப் பதிலாக அவரைத் தந்திரமாக விற்றிருந்தார் எலிசா. மேலும் அந்த விற்பனையைப் பதிவுசெய்யவில்லை. தற்போது ரிட்டுக்கு 70 வயது என்பதால் சட்டப்படி பென்னும் அவரை விடுவிக்கமுடியாது. அவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வேறு மாகாணத்துக்குச் செல்லவேண்டுமென்றால் தற்போது ரிட்டின் உரிமையாளர் என்பதற்கான சான்றை வைத்திருக்கவேண்டும். முன்னெப்போதோ நடந்த விற்பனையை 1855ஆம் ஆண்டு பென்னின் வற்புறுத்தலால் பதிவுசெய்தார் எலிசா.

மூன்று சகோதரர்களுக்கும் என்ன ஆனது என்று தெரியாததால் எலிசாவுக்குத் தன்னிடம் பணிபுரிந்த மேலாளர் அடிமைகளைத் தனக்குத் தெரியாமல் சட்டத்துக்குப் புறம்பாக விற்றுவிட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலாளர் இதுவரை விற்ற அடிமைகளின் பட்டியலையும் யாருக்கு, என்ன விலைக்கு விற்றார் என்ற விவரங்களையும் தரச் சொல்லுமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ஹாரியட் உடனடியாகச் செயலில் இறங்கினார். எஞ்சியுள்ள குடும்ப உறுப்பினர்களையும் விடுவித்துக் கூட்டிவரவேண்டுமென முடிவுசெய்தார். அவரது சகோதரி ரேச்சல் எலிசா ப்ராடஸின் வீட்டில் இருந்தார். சகோதரர்கள் தப்பித்துவிட்ட கோபத்தில் எலிசா சகோதரியை விற்க முயற்சி செய்யலாம்.

புத்தாண்டு முதல் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. அடிமைத்தளை எதிர்ப்பாளர்கள், சுதந்திரமான ஆப்பிரிக்கர்கள் ஆகியோர் அடிமைகள் தப்பிக்க உதவுகிறார்கள் என உரிமையாளர்கள் கோபமும் எரிச்சலும் கொண்டனர். அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம் அதிகரித்தது. ஆப்பிரிக்கர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்த கூட்டங்கள் நடந்தன.

வெள்ளையர்களின் மேற்பார்வையின்றி ஆப்பிரிக்கர்களுக்கான அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் நடக்கக்கூடாது என்று கூறினர். ஆப்பிரிக்கர்களின் வீடுகளைச் சோதனையிட்டு அவர்கள் பதுக்கி வைத்திருந்ததாகச் சொல்லி துப்பாக்கி, ஆயுதங்கள் போன்றவற்றைக் கைப்பற்றினர். ஈஸ்டர் விழாவின்போது அடிமைகள் உரிமையாளர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டுமென நாளிதழ்களில் அறிவிப்பு வெளியானது. வெள்ளை அடிமைத்தளை எதிர்ப்பாளர்களும் ஆப்பிரிக்கர்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிவிடலாம் என்ற கருத்தைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரமான ஆப்பிரிக்கர்களை மேரிலாண்ட் மாகாணத்தைவிட்டு வெளியேற்ற வேண்டுமென்று ஓர் உரிமையாளர் சொன்னதும் பலரும் அந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

0

1855ஆம் ஆண்டு பனிக்காலத்தில் கனடா வந்துசேர்ந்த உறவினர்களுடன் தங்கியிருந்தார் ஹாரியட். அப்போது பாஸ்டனைச் சேர்ந்த பெஞ்சமின் ட்ரூ என்பவர் அவரையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்தார். பெஞ்சமின் அடிமைத்தளை எதிர்ப்பாளர், பள்ளி முதல்வர், பத்திரிகையாளர். தப்பியோடும் அடிமைகள் சட்டத்துக்குப் பயந்து வடக்குப் பகுதிக்குத் தப்பித்து வந்தவர்களைச் சந்தித்துப் பேசி அவர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்தார். சுதந்திர மனிதர்களாக கனடாவில் அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றியும் எழுதினார்.

ஹாரியட் டப்மனை முதலில் பேட்டி கண்டு எழுதியவர் பெஞ்சமின் ட்ரூ. சொல்லப்போனால் அது அடிமைப்பட்ட மக்களில் ஒருவரின் முதல் பேட்டியும்கூட. சிறிய பேட்டிதான் என்றாலும் அடிமை வாழ்க்கையின் கொடுமையை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள உதவியது.

மேரிலாண்டில் உற்றார் உறவினரோடு வாழத்தான் விருப்பம் என்றும் ஆனால் கனடாவில் இருப்பதுபோலச் சுதந்திரமாக இருக்க விரும்புவதாகவும் சொன்னார் ஹாரியட். ‘யாரும் கண்டுகொள்ளாத களைச்செடியைப்போல வளர்ந்தேன். விடுதலையைப் பற்றி எதுவும் தெரியாது. அடிமைத்தளை என்பது நரகவாழ்க்கைக்கு சமமானது. அடிமைத்தளையிலிருந்து தப்பித்த எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவர்கூட திரும்பிச்செல்ல விரும்புவதாகச் சொன்னதில்லை.’

ஹாரியட்டின் ஒரு சகோதரர் கொடூரமான உரிமையாளரிடமிருந்து விடுதலை பெறுவதற்காக இருபது வருடங்கள் காத்திருந்ததாகச் சொன்னார். முதலில் அடிமைத்தளை எதிர்ப்பாளர்கள் பற்றிக் கேள்விப்பட்டபோது அதை நம்பவில்லை என்றும் சூழ்ச்சியாக இருக்கலாமென எண்ணியதாகவும் சொன்னார். இன்னொரு சகோதரர் இன்னொரு உரிமையாளருக்கு விற்கப்பட்ட உறவுப்பெண்ணைப்பற்றிக் கூறினார். பச்சிளம் குழந்தைகளை அவளிடமிருந்து பிரித்து சிறையில் அடைத்தனர். அவள் அழுதழுது உயிரை மாய்த்துக்கொள்வார் என்று பயந்தோம் என்று நடந்த கொடுமையை விவரித்தார்.

அதே காலகட்டத்தில் அடிமைத்தளையை ஆதரித்து வேறு இரண்டு நூல்கள் வெளிவந்தன. அடிமைத்தளை பயனுள்ள அமைப்பு, கொடுமையானது அல்ல என்றும் வடக்கு மாகாணங்களில் நடைமுறையிலுள்ள கூலிக்காகப் பணிசெய்யும் முறைதான் அதைவிடவும் கொடூரமானது என்றும் வாதிட்டன. எழுத்தாளர் ஹாரியட் பீச்சர் ஸ்டவ்வின் அங்கிள் டாம்ஸ் கேபின் நாவலில் சித்தரிக்கப்பட்ட கொடுமைகள் கற்பனையானவை என்றன. இந்த முரண்பாடான கருத்துகள் மாறுவதற்கு இன்னும் பல வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

0

கனடா வந்துசேர்ந்த தன்னுடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு பிலடெல்ஃபியா திரும்பினார் ஹாரியட். 1855ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிலடெல்ஃபியாவில் நடைபெற்ற தேசிய கறுப்பர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். பிரடெரிக் டக்ளஸ், வில்லியம் ஸ்டில் ஆகியோருடன் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைத்தளை எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். பருத்தி மாகாணங்கள் என்று அழைக்கப்பட்ட தென்கிழக்கு, தெற்குப் பகுதியைச் சேர்ந்த 40 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பெருமளவில் ஆண்கள் மட்டுமே பிரதிநிதிகளாக வந்திருந்தனர். கனடாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கப் பத்திரிகையாளரான மேரி ஆன் ஷாட் மட்டுமே ஒரே பெண் பிரதிநிதி. டார்செஸ்டர் கோட்டத்தைச் சேர்ந்த சாமுவெல் க்ரீன் என்னும் பாதிரியாரும் அவருடைய மனைவியான காதரீன் க்ரீனும் கலந்துகொண்டனர். ஹாரியட்டும் அவரைப்போன்ற மற்ற பெண்களும் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

மாநாட்டில் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த அடிமைத்தளை எதிர்ப்பாளர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஹாரியட்டுக்குக் கிடைத்தது. நிலத்தடி இருப்புப்பாதையைத் தாண்டி விடுதலையையும் உரிமையையும் மீட்பது குறித்த சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பிலடெல்ஃபியாவின் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள், ஆப்பிரிக்கர்களுக்கு உதவும் சங்கங்கள், ஆப்பிரிக்கர்களின் வாக்குரிமை நிறுவனங்கள் எனப் பலருடன் அவருக்கிருந்த தொடர்பை விரிவுபடுத்தி ஆப்பிரிக்க உரிமைகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட இயக்கமொன்றில் இணைந்து செயலாற்ற விரும்பினார் ஹாரியட்.

மாநாடு முடிந்ததும் மற்ற பங்கேற்பாளர்களோடு பிலடெப்ஃபியா சிறையிலிருந்த பாஸ்மோர் வில்லியம்சனைச் சந்தித்தார். பாஸ்மோர் வில்லியம்சன் வெள்ளையர், பென்சில்வேனியா அடிமைத்தளை எதிர்ப்புச் சங்கத்தின் உறுப்பினர். பிலடெல்ஃபியா நிலத்தடி இருப்புப்பாதையின் வலைப்பின்னலோடும் வில்லியம் ஸ்டில்லுடனும் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். பிலடெல்ஃபியாவுக்கு வேறு வேலையாக வந்தபோது அடிமைப் பெண்ணொருத்தியும் அவளது இரண்டு மகன்களும் உரிமையாளரிடமிருந்து தப்பிக்க உதவிய காரணத்தால் சிறையிலடைக்கப்பட்டார்.

பாஸ்மோர் கொண்ட கொள்கையை நிலைநிறுத்துவதால் தனக்கு ஏற்படும் ஆபத்துகளைப் பொருட்படுத்தாதவர். ஹாரியட் வியந்து பார்க்கும் மனிதர்களில் ஒருவர். அவரும் அவரைப் போன்றோரும் ஹாரியட்டின் விடாமுயற்சியையும் கடமையுணர்வையும் ஈடுபாட்டையும் பாராட்டினர். அடிமைகளுக்காகத் தன்னலமின்றி அவர் ஆற்றும் பணி ஆபத்து நிறைந்தது, தாங்கள் செய்வதைவிடவும் மேலானது என்று கூறினர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *