கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அடிமை உரிமையாளர்கள், அடிமை பிடிப்பவர்கள் ஆகியோரின் கெடுபிடிகள் அதிகமானதால் ஹாரியட் எச்சரிக்கையாக இருந்தார். தங்குமிடத்தை அடிக்கடி மாற்றினார். வெவ்வேறு நண்பர்களுடன் வசித்தார். சில நேரம் சதுப்புநிலங்களிலும் அதுபோன்ற வேறு இடங்களிலும் தங்கினார். ஒரு முறை அவரது சகோதரி ரேச்சலையும் அவர் பிள்ளைகளையும் வேறு சில உறவினர்களையும் கனடா அழைத்து வருவதற்காக டார்செஸ்டர் கோட்டத்தில் 3 மாதங்கள் வரையில் யாருக்கும் தெரியாமல் தங்கியிருந்தார். இப்படிக் காத்திருப்பதில் பல இடர்ப்பாடுகள் உண்டு. உள்ளூர் மக்களில் யாராவது அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துவிடுவார்கள். ஆனால் பல வருடங்களாக அடிமைகளின் மீட்பராகச் செயல்பட்ட ஹாரியட்டை யாரும் காட்டிக்கொடுக்கவில்லை.
ஒரு முறை ஹாரியட் வயல்வெளியில் உலாத்திக்கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக அவருடைய உரிமையாளர் மருத்துவர் ஆண்டனி தாம்சனைச் சந்திக்கவேண்டியிருந்தது. ஆனால் பல வருடங்களாக வெயிலில் நின்று வேலை செய்யவில்லை என்பதால் ஹாரியட்டின் மேனியின் நிறம் மாறியிருந்த காரணத்தால் ஆண்டனி தாம்சனால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அடிமை வாழ்க்கையில் அணிந்த உடையில்லாமல் நல்ல துணியாலான நேர்த்தியான ஆடையை அணிந்திருந்ததால் சுதந்திர ஆப்பிரிக்கர்களைப்போலத் தோற்றமளித்தார். சொல்லப்போனால், ஹாரியட்டின் உடன்பிறந்தோருக்குக்கூட அவரை அடையாளம் தெரியவில்லை.
இன்னொரு சந்தர்ப்பத்தில் சில வருடங்களுக்கு முன்னால் தன்னை வாடகைக்கு வாங்கிய எஜமானர் வசிக்கும் கிராமத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. வயதான மூதாட்டியைப்போல முகத்தை மறைக்கும் பெரிய தொப்பியை அணிந்துகொண்டு கடைத்தெருவில் கோழி வாங்கியபடி நின்றார். திடீரென அவருடைய எஜமானர் வருவதைப் பார்த்ததும் அவர் பார்வையிலிருந்து எப்படித் தப்பிப்பது என யோசித்தார். கோழிகளின் காலில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தார். கோழிகள் பயத்தில் படபடவென்று இறக்கையை அடித்தபடி கொக்கரித்தன. தொப்பியைக் கண்களுக்கு மேலே இழுத்துவிட்டுக்கொண்டு கீழே குனிந்து கோழிகளைக் கவனிப்பதுபோல பாவனைசெய்தார். எஜமானருக்குத் தன்னிடமிருந்து தப்பித்துச்சென்ற ஹாரியட்தான் அந்தப் பெண்மணி என்று அடையாளம் தெரியவில்லை.
வேறொரு முறை இரயிலில் பயணம் செய்கையில் அவருடைய எஜமானர்களில் இன்னொருவர் அருகே அமர்ந்திருப்பதைக் கவனித்தார். ஹாரியட்டின் இருக்கையில் யாரோ விட்டுச்சென்ற நாளிதழ் கிடந்தது. அதைக் கையில் எடுத்துவைத்துக்கொண்டு படிப்பதுபோலப் பாவனை செய்தார். ஹாரியட்டுக்கு எழுதப்படிக்கத் தெரியாததால் நாளிதழை நேராகப் பிடித்திருக்கிறோமா என்பதுகூடத் தெரியவில்லை. ஆனால் எஜமானருக்கு ஹாரியட்டுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று தெரியும். அதனால் கையில் நாளிதழை வைத்திருந்த ஹாரியட்டின் பக்கம்கூடத் திரும்பவில்லை. ‘ஆண்டவர் என்னை அந்த முறையும் காப்பாற்றினார்,’ என்று பின்னொரு நாளில் அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறினார் ஹாரியட்.
0
1855 டிசம்பரில் வில்லியம் ஸ்டில்லின் அலுவலகத்துக்கு ஓர் இளைஞனை அழைத்துவந்தார் ஹாரியட். அடுத்தபடியாக, தன்னுடைய சகோதரி ரேச்சலையும் அவர் பிள்ளைகளையும் உறவினர் குடும்பத்தையும் அழைத்துவரும் முடிவோடு டார்செஸ்டர் திரும்பினார். ஆனால் ரேச்சல் பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறு பண்ணையில் வசித்தார். பிள்ளைகள் எலிசா ப்ராடஸின் பண்ணையில்தான் இருந்திருப்பார்கள். ஆனால் ஹாரியட்டினால் அவர்களை மீட்டுவர முடியவில்லை.
சகோதரியின் குடும்பத்துக்கு உதவமுடியாத சங்கடத்துடன் பிலடெல்ஃபியாவுக்குத் திரும்பினார் ஹாரியட். சில மாதங்கள் அங்கேயே இருந்து எல்லாவிதமான வேலைகளையும் செய்து பொருளீட்டினார். 1856ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹாரியட் நான்கு இளைஞர்களை அழைத்து வந்ததாக வில்லியம் ஸ்டில்லின் குறிப்பு தெரிவிக்கிறது. உண்மையாகவே, ஹாரியட் அதிர்ஷ்டம் செய்தவர்தான். ஏனெனில், சில நாட்கள் முன்னால்தான் அடிமைகள் தப்பிச்செல்ல உதவுகிறார்கள் என இரண்டு பேரைக் குற்றம் சாட்டி நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தார்கள்.
அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த நான்கு இளைஞர்களை அழைத்துக்கொண்டு கனடா வந்த ஹாரியட்டின் உடல்நிலை மோசமாகி பலவீனமாக இருந்தார்; தொண்டை கட்டிக்கொண்டு பேசமுடியவில்லை. இந்தப் பயணத்தில்தான் திடீரென ஆற்றுக்குள் இறங்கிக் கடந்தனர். குளிர்ந்த நீருக்குள் நீண்ட நேரம் இருந்த காரணத்தால் ஹாரியட் நோயுற்றிருக்கலாம். மூச்சுவிடச் சிரமப்பட்டதால் நிமோனியாவாக இருந்திருக்கலாம். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு செப்டம்பரில்தான் உடல்நிலை சரியானது. ஓயாத அலைச்சலால் உடல்நிலை நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டிருக்குமோ எனப் பயந்தனர் அவருடைய நண்பர்கள். ஆனால் ஹாரியட்டின் ஆன்ம பலத்தை எதுவும் குலைக்கமுடியவில்லை. தன் குடும்பம் முழுவதையும் விடுவித்து அழைத்துவரும் வரையில் ஓய்வதில்லை என்ற முடிவில் இருந்தார்.
1856ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிலடெல்ஃபியாவுக்கு வந்த ஹாரியட்டுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் இறந்துபோயிருந்தார். அவருடைய மனைவி வீட்டை விற்றுவிட்டு பென்னிசில்வேனியாவில் வேறு ஊருக்குக் குடிபோய்விட்டார். கூடவே ஹாரியட்டின் உடைகளையும் பணத்தையும் எடுத்துப்போய்விட்டார். உடனே தன்னுடைய நண்பரான தாமஸ் கேரட்டுக்குத் தகவல் அனுப்பினார்.
தாமஸ் கேரட் டெலவேர் மாகாண நிலத்தடி இருப்புப்பாதையின் முக்கிய உறுப்பினர், வில்மிங்க்டனில் வசித்தார். தொடர்ந்து ஹாரியட்டின் முயற்சிகளுக்கு ஊக்கமளித்ததோடு பொருளுதவியும் செய்தவர். தாமஸ் கேரட் தனக்குத் தெரிந்தவருக்குக் கடிதமெழுதி ஹாரியட்டின் செலவுக்குத் தேவையான பணத்தை வில்லியம் ஸ்டில்லிடம் கொடுக்கச் சொன்னார்.
அந்த மாதம் இன்னும் ஐந்து பேரை விடுவித்து வில்லியம் ஸ்டில்லின் அலுவலகத்துக்கு வழிசொல்லி அனுப்பிவைத்தார். அந்த முறை விடுவிக்கப்பட்டவர்களுடன் ஹாரியட் போகவில்லை. அடுத்த மாதமே டில்லி என்ற பெண்ணை கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து அழைத்துக்கொண்டு வில்மிங்க்டன் வந்தார். டில்லியை மணமுடிக்கப்போகும் இளைஞன் ஏழு ஆண்டுக்கு முன்னரே கனடா சென்றுவிட்டான். பால்டிமோரில் வசித்த டில்லியை விடுவித்து கனடா அழைத்துவருமாறு ஹாரியட்டிடம் கேட்டுக்கொண்டான். அதற்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தையும் அவரிடம் கொடுத்தான்.
பிலடெல்ஃபியாவிலிருந்து பால்டிமோருக்கு நீராவிப் படகில் பயணம்செய்தார் ஹாரியட். படகுத் தலைவன் ஹாரியட் கேட்டுக்கொண்டபடி அவர் பிலடெல்ஃபியாவைச் சேர்ந்தவர், சுதந்திரமானவர் என்ற ஆவணத்தைக் கொடுத்தான். பால்டிமோர் வந்த ஹாரியட் டில்லியைத் தேடிக் கண்டுபிடித்தார்.
பால்டிமோரிலிருந்து பிலடெல்ஃபியாவுக்கு ஆப்பிரிக்கப் பெண்ணொருத்தியை அழைத்துவருவது எளிதான காரியமல்ல. பிணையாக 500 டாலர் தரவேண்டும் அல்லது அவள் சுதந்திரமானவள் என்பதற்கான ஆவணத்தை வைத்திருக்கவேண்டும். இரண்டுமே ஹாரியட்டிடம் கிடையாது. இருந்தாலும் இருவருக்குமாக டார்செஸ்டர் கோட்டத்துக்குச் செல்லும் படகில் பயணச்சீட்டு வாங்கினார். படகுத் தலைவன் பிலடெல்ஃபியாவில் ஹாரியட் சந்தித்த படகுத் தலைவனின் நண்பன் என்பதால் அவனிடம் பேசி டில்லிக்கு பயணத்துக்கான அனுமதிச்சீட்டு அல்லது வேறு ஏதேனும் ஆவணத்தைத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
இரண்டு ஆப்பிரிக்கப் பெண்கள் தெற்கு மாகாணத்துக்குப் பயணித்தது யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் தோற்றுவிக்கவில்லை. படகுத் தலைவன் அடிமைத்தளை எதிர்ப்பாளராக இருந்திருக்கலாம் என்பதால் டில்லிக்கு அனுமதிச்சீட்டு வழங்க ஒப்புக்கொண்டான். இருவருமாக வடக்குத் திசை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக அதற்கு எதிர்ப்புறத்தில் தெற்கு நோக்கிச் சென்றனர்.
சீஃபோர்ட் நகரை வந்தடைந்ததும் அங்கிருக்கும் ஹோட்டலில் அறையொன்ற வாடகைக்கு எடுத்தார் ஹாரியட். இரவுணவை அங்கே சாப்பிட்டதும் இருவரும் உறங்கினார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் ஹாரியட் இரவுமுழுவதும் பிரார்த்தனை செய்திருக்கலாம்.
மறுநாள் காலை, அடிமைகளை விற்கும் முகவர்களில் ஒருவன் அவர்களை இடைமறித்துக் கைதுசெய்ய முனைந்தான். டில்லி பதற்றத்தின் உச்சத்தில் இருந்தாள். இனி தப்பிக்க முடியாது என்ற பயம் தொற்றியது. ஆனால் ஹாரியட் படகுத் தலைவன் கொடுத்த அனுமதிச்சீட்டைக் காண்பித்ததும் அவர்களைப் போகுமாறு சொல்லிவிட்டான் முகவர். ‘ஆண்டவரே, ஏற்கனவே ஆறு இக்கட்டான சூழலிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டீர். ஏழாவதில் என்னைக் கைவிட்டுவிடாதீர்,’ எனப் பிரார்த்தனை செய்ததாக டில்லியிடம் சொன்னார் ஹாரியட்.
இருவரும் அங்கிருந்து ரயிலில் ஏறி டெலவேரிலுள்ள கேம்டன் நகருக்குப் போனார்கள். அங்கே வில்லியம் ப்ரிங்க்லி என்ற சுதந்திர ஆப்பிரிக்கர் அவர்களைச் சந்தித்து நிலத்தடி இருப்புப்பாதை வலைப்பின்னலின் உதவியோடு வில்மிங்க்டன் சென்றுசேர உதவினார். அங்கே தாமஸ் கேரட் ஹாரியட்டிடம் 25 டாலரைக் கொடுத்தார். ஹாரியட், டில்லி இருவருக்கும் புதிய காலணிகள் தேவைப்பட்டன. அவற்றை வாங்கவும் ஹாரியட் மீண்டும் தன்னுடைய சகோதரி ரேச்சலைத் தேடிச்செல்லவும் அந்தப் பணம் பயன்பட்டது. அங்கிருந்து டில்லி கனடாவுக்குப் பயணம்செய்தார். ஹாரியட் தெற்கே டார்செஸ்டர் கோட்டத்துக்குச் சென்றார்.
தான் எத்தனைத் துணிச்சலான காரியத்தைச் செய்திருக்கிறோம் என்பதை ஹாரியட் உணரவில்லை என தாமஸ் கேரட் நண்பர்களிடம் கூறினார். உண்மைதான், ஹாரியட்டுக்குத் தன்னுடைய முயற்சிகள் வெற்றிபெறவேண்டும் என்ற சிந்தனையைத் தவிர வேறு எதுவுமில்லை. ‘ஆபத்து நிறைந்த பயணங்களில் ஆண்டவர் என்னைக் காப்பாற்றுவார் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது. அவருடைய அனுமதியின்றி எந்த மீட்புப் பயணத்தையும் நான் மேற்கொள்வதில்லை,’ என தாமஸ் கேரட்டிடம் கூறினார் ஹாரியட்.
1856ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில் டார்செஸ்டரில் மீண்டும் ரேச்சலைச் சந்தித்துப் பேசினார் ஹாரியட். பிள்ளைகள் இல்லாமல் தான் மட்டும் தப்பிக்க ரேச்சலுக்கு மனமில்லை. கிறிஸ்துமஸின்போது பிள்ளைகளைப் பார்க்கமுடியும். அப்போது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஹாரியட்டுடன் போகலாம் என முடிவுசெய்தனர். அதே சமயத்தில் வேறு சில அடிமைகளும் பென் ராஸுடன் தொடர்புகொண்டு அடுத்த முறை ஹாரியட் வருகையில் அவருடன் தப்பிச்செல்ல விரும்புவதாகக் கூறினர்.
சகோதரி ரேச்சலின் குடும்பத்தை மீட்க வழியில்லாத காரணத்தால் வேறொரு குழுவை வடக்குப் பகுதிக்கு அழைத்துச்செல்லத் தயாரானார் ஹாரியட். எல்லோரும் சொன்ன நேரத்துக்கு ஒன்றுகூடினாலும் அந்தக் குழு தப்பிச்செல்வது எளிதாக இல்லை. அவர்களைத் துரத்திக்கொண்டு இன்னொரு குழு வந்தது. எப்போதும் வில்மிங்க்டன் சென்றுசேர மூன்று, நான்கு நாட்களாகும்; இந்த முறை, இரண்டு வாரம் பிடித்தது. அடிமை பிடிப்பவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக ஆங்காங்கே பதுங்கவேண்டிய கட்டாயம்.
வயல்களில் உருளைக்கிழங்கைத் தோண்டியெடுத்த பெரிய குழிக்குள் ஒளிந்துகொள்வார்கள். பக்கத்திலிருக்கும் தடத்தின்வழியாக அவர்களைத் தேடிவந்தவர்கள் நடந்துபோவார்கள். அங்கிருந்து தப்பித்து அடுத்த நண்பரின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு தனித்தனியே பிரித்துக் கூட்டிச்செல்லப்பட்டார்கள். மாறுவேடத்தில் சுற்றுவழியில் அழைத்துப்போய் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள்.
குழுவிலிருந்த ஜோ பெய்லி என்ற அடிமைக்கு 28 வயது. ஜோ மரம் வெட்டுவதில் திறமைமிக்கவன் என்பதாலும் அவனை 2000 டாலர் விலைகொடுத்து வாங்கிய சிறிது காலத்திலேயே தப்பியோடிவிட்டான் என்பதாலும் உரிமையாளர் எரிச்சலுற்றான். அவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு 1500 டாலர் சன்மானம் அளிப்பதாக உரிமையாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தான். ஜோவின் சகோதரன் பில் பெய்லியைப் பிடித்துக்கொடுத்தால் 300 டாலர் வெகுமதி தருவதாக அவனுடைய உரிமையாளர் சொன்னான். குழுவின் இன்னொரு அடிமை பீட்டர் பென்னிங்க்டனின் விலை 800 டாலர்.
தப்பிச்செல்லும் பாதையிலிருந்த வெள்ளை, ஆப்பிரிக்கக் குடும்பங்களின் ஆதரவோடும் நிலத்தடி இருப்புப்பாதையின் உதவியோடும் குழுவினர் வடகிழக்குத் திசையில் பயணம்செய்தனர். ஒரு வழியாக வில்மிங்க்டன் வந்துசேர்ந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னரே அவர்களின் உரிமையாளர்கள் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அதுமட்டுமின்றி, நகரமுழுவதும் அறிவிப்புகளை ஒட்டியிருந்தனர். ஹாரியட்டின் நண்பர்கள் அறிவிப்புகளைக் கிழித்துப்போட்டார்கள். ஆனால் அடிமைகளைப் பிடித்துக்கொடுத்தால் சன்மானம் கிடைக்கும் என்பது அறிவிப்புகளைப் பார்க்காமலே மக்களுக்குத் தெரிந்திருந்தது.
காவல்துறையினர் ரோந்துப் பணியில் இருந்ததால் குழுவினரால் தாமஸ் கேரட்டின் வீட்டுக்கோ கடைக்கோ போகமுடியவில்லை. குழுவினர் மீண்டும் தனித்தனியே பிரிந்து வெவ்வேறு நண்பர்களின் வீட்டில் ஒளிந்துகொண்டார்கள். பிறகு, அவர்கள் கிறிஸ்டியானா ஆற்றைக் கடக்க உதவி தேவை என்ற தகவல் தாமஸ் கேரட்டிடம் தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் காலை, செங்கல் வண்டியொன்று பாலத்தைக் கடந்தது. வண்டியை ஓட்டிவந்த ஆப்பிரிக்கக் கட்டட வேலையாட்கள் இருவரும் உரத்த குரலில் பாடினர், கூச்சலிட்டனர். பாலத்தின் அருகே நின்ற காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் வணக்கம் கூறினர். பிறகு ஹாரியட், ஜோ, பில், பீட்டர், எலிசா என ஒவ்வொருவரும் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர். அவர்களை வண்டியின் அடிப்பகுதியில் ஒளிந்துகொள்ளச் செய்தனர். மாலையில் மீண்டும் பாலத்தைக் கடந்து மறுபுறம் சென்றது செங்கல் வண்டி. காவலர்களுக்கும் அடிமைகளைப் பிடிக்கவந்தவர்களுக்கும் அவர்கள் தேடுபவர்கள் செங்கல் வண்டியில் கடத்திச் செல்லப்படுவது தெரியவில்லை.
மறுநாள் ஹாரியட்டும் மற்றவர்களும் பிலடெல்ஃபியாவில் வில்லியம் ஸ்டில்லின் அலுவலகத்துக்கு வந்துசேர்ந்தனர். அவர்கள் இன்னும் ஆபத்தைக் கடக்கவில்லை. சீக்கிரம் கனடா சென்று சேர்ந்தால்தான் அச்சமின்றி இருக்கமுடியும். அடுத்த கட்டமாக நியூயார்க் நகரிலுள்ள அடிமைத்தளை எதிர்ப்புச் சங்க அலுவலகத்தை அடைந்தனர். நியூயார்க்கிலும் தப்பிச்செல்லும் அடிமைகளைப் பிடித்துத் தருமாறு அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன என்பதைக் கேள்விப்பட்ட ஜோவின் மனம் சோர்வுற்றது.
நியூயார்க் அடிமை எதிர்ப்பாளர் சங்கத்தில் ஆலிவர் ஜான்சன் என்பவர் ஜோவைப் பார்த்ததும், ‘அடடே, 2000 டாலர் விலைமதிப்புமிக்க அடிமை நீ தானா?’ என்றார். ‘என்னை எப்படி அடையாளம் கண்டுபிடித்தீர்கள்?’ என ஜோ கேட்டான். ‘உன்னைப் பற்றிய விளம்பரம் எங்கள் அலுவலகத்துக்கு வந்துள்ளது. உன் உடல் அடையாளத்தைத் துல்லியமாக விவரித்திருக்கிறார்கள்,’ என்றார். இத்தனை நாட்கள் மழை, வெயில், இரவு, பகல் என்று பாராமல் பசி, அயர்ச்சி, அச்சம் எல்லாவற்றோடும் போராடிப் பயணம்செய்தது நியூயார்க்கில் அடையாளம் காணப்படத்தானா என்று மனம் துவண்டான் ஜோ. இனி எப்படி கனடா சென்று சேர்வது என்று கவலையோடு யோசித்தான்.
‘இங்கிருந்து கனடா எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?’ என்று கேட்டான். நியூயார்க்கின் வரைபடத்தைக் காட்டி அங்கிருந்து நயகரா செல்ல 300 மைலுக்கு மேல் போகவேண்டும் என்றார்கள். நயகராவைக் கடந்தால்தான் விடுதலை பெற்றவர்கள் ஆவார்கள் என்பது புரிந்ததும் ஜோ மனமுடைந்து போனான். பெரிய குழுவாகப் பயணம் செய்கையில் யாராவது கண்டுபிடித்துவிட்டால் மீண்டும் அடிமைவாழ்க்கைக்குப் போகவேண்டுமே என்று கவலைகொண்டான்.
நியூயார்க் வரும் வரையில் குழுவினர் துதிப் பாடல்களைப் பாடிக்கொண்டு வந்தனர். ஜோ மற்றவர்களைக் காட்டிலும் உரத்த குரலில் இனிமையாகப் பாடுவான். இப்போது பாடுவதை நிறுத்தி அமைதியாகிவிட்டான், எதிலும் உற்சாகமில்லாமல் காணப்பட்டான். ஹாரியட் அவனுக்கு உற்சாகமூட்ட முயற்சிசெய்தார், ஆனால் அதற்குப் பலனில்லை.
நியூயார்க்கிலிருந்து அடுத்து அல்பனி, சைரக்யூஸ் என்று பயணம்செய்தனர். சைரக்யூஸில் தப்பியோடும் ஆதரவு சங்கத்தின் அவர்களை நயகரா வரையில் அனுப்பிவைக்க நிதியில்லை. அதனால் குழு ராசெஸ்டர் வரையில்தான் பயணிக்கமுடிந்தது. எப்போதும் நயகரா நீர்வீழ்ச்சியின்மீது அமைந்துள்ள தொங்குபாலம் வரையில் அடிமைகளைக் கொண்டுசேர்ப்பது வழக்கம். சைரக்யூஸ் சங்கத்தின் தலைவர் அப்பாட் ராசெஸ்டர் பெண்கள் அடிமைத்தளை எதிர்ப்புச் சங்கத்தின் பொருளாளரான மரியா போர்ட்டருக்கு ஹாரியட்டின் பணி குறித்து விரிவாகக் கடிதமெழுதி பொருளுதவி கோரினார்.
ஒரு வழியாக ராசெஸ்டருக்குப் போய் அங்கிருந்து நயகரா சென்று சேர்ந்தார்கள். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே அமைந்த தொங்குபாலத்தை நோக்கி நகர்ந்தார்கள். பாலத்தின் மையப் பகுதியைக் கடந்தால்தான் கனடிய எல்லைக்குள் நுழையமுடியும். ஹாரியட் எல்லோரையும் நயகரா நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும் அழகையும் பார்க்கச் சொன்னார். எதிலும் ஈடுபாடின்றி மவுனமாக இருந்தான் ஜோ. கனடிய எல்லையைத் தாண்டியதும் ‘ஜோ, நீ விடுதலை அடைந்துவிட்டாய்,’ எனக் கூறினார் ஹாரியட். உடனே உற்சாகம் மேலிட ஆண்டவரைத் துதித்தபடி கண்ணீர் சிந்தினான் ஜோ.
கனடாவை அடைந்த ஜோவும் மற்றவர்களும் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். ஜோவின் திறமையினால் அவருக்கு விதித்திருந்த விலை அதிகமென்பதால் அமெரிக்கா, கனடா இரு நாடுகளின் அடிமைத்தளை எதிர்ப்புக் கூட்டங்களில் சொற்பொழிவாளர்களும் ஊடகங்களிலும் அவரின் கதையைச் சுவைபடக் கூறினர்.
செயிண்ட் காதரீனில் தப்பிவந்த அடிமைகளுக்கு உதவிபுரியும் நிறுவனத்தை நடத்தி வந்த பாதிரியார் அரையாண்டு அறிக்கையில் ஹாரியட்டின் பணி குறித்தும் இந்தக் குழுவினர் குறித்தும் எழுதினார். ‘இந்தக் கறுப்பினப் பெண்மணி செய்யும் தைரியமான செயல்களைச் செய்கிறார். அவர் விடுவித்து அழைத்து வரும் இளைஞர்கள் திறமையும் அறிவும் கொண்டவர்களாகவும் மேன்மைபொருந்திய தோற்றத்துடனும் இருக்கிறார்கள்.’
(தொடரும்)

