Skip to content
Home » கறுப்பு மோசஸ் #19 – ஹாரியட்டின் தப்பிச்செல்லும் உத்திகள்

கறுப்பு மோசஸ் #19 – ஹாரியட்டின் தப்பிச்செல்லும் உத்திகள்

கிழக்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள காடுகளில் ஸ்வீட் கம் மரங்கள் அதிகம். அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பினைந்த மரம். மரத்தின் நடுப்பகுதியைக் குடைந்து குழந்தைகளுக்கான தொட்டில்களைச் செய்வார்கள். இலை, பட்டை, பட்டையை உரித்தால் வடியும் இனிமையான மணம் வீசும் பிசின் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. நட்சத்திர வடிவில் இருக்கும் அதன் இலைகள் இலையுதிர்காலத்தில் செந்நிறமாக மாறும். சிறிய முட்களோடு காணப்படும் அதன் காய்கள் நிலத்தில் உதிரும்.

தப்பிச்செல்லும் அடிமைகள் காலணி அணியவில்லையென்றால் காயின் முட்கள் குத்துவதால் வலியில் துடிப்பார்கள். ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது, மீண்டும் வீட்டுக்கே போகிறேன் என்று அழுவார்கள். ஆனால் அப்படி யாரையும் திரும்பிச் செல்ல அனுமதிக்கமுடியாது. அவர்களால் மற்றவர்களும் பிடிபட்டுவிடுவார்கள் என்பதால் ஹாரியட் அவர்களைத் திட்டுவார். இடுப்பில் ஒளித்துவைத்திருக்கும் துப்பாக்கியைக் காட்டி, ‘பேசாமல் நட அல்லது செத்துப்போ,’ என மிரட்டுவார். இறந்துபோனால் காட்டிக்கொடுக்க முடியாதல்லவா.

அடிமைகள் வாழும் பகுதிக்கு அடுத்தடுத்துச் சென்று அவர்களைத் தைரியமாக மீட்டுவந்த காரணத்தால் மக்கள் ஹாரியட்டை மோசஸ் எனப் புகழத் தொடங்கினர். அவர்மீது மிகுந்த மரியாதையும் வியப்பும் கொண்டனர். இத்தனைத் துணிச்சலுடன் செயலாற்றுபவர் பெண் என்பதால் கூடுதல் சிறப்பு. சிறிய உருவம், சாதாரணமான உடை, தான் செய்தவற்றைப் பறைசாற்றிக்கொள்ளாத அடக்கமான பேச்சு என ஹாரியட்டைப் பார்த்தால் அவர் செய்யும் சாதனைகளுக்குச் சிறிதும் தொடர்பற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தார்.

சிறிய வயதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காலம் முழுவதும் அவரைச் சிரமத்துக்குள்ளாக்கியது. தலைவலியும் சோர்வும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். மீட்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார். அவரை நம்பி வந்தவர்களின் பாதுகாப்பை எப்போதும் உறுதிப்படுத்துவார் என்றாலும் இதுபோன்ற சமயங்களில் எதுவுமே செய்யமுடியாத நிலைமையில் இருப்பார். ஆனாலும் அவருடைய விடுதலைப் பயணங்கள் எல்லாமே வெற்றியில்தான் முடிந்தன.

ஹாரியட்டுடன் பயணம் செய்த அடிமைகள் எல்லோருமே அவரிடம் ஏதோ மந்திர ஆற்றல் இருந்ததாகச் சொன்னார்கள். மோசஸை வெள்ளையர்கள் பிடிக்கவே முடியாது. ஆண்டவர் மோசஸுக்கென தனித்த ஆற்றலொன்றை வழங்கியிருக்கிறார் என நம்பினார்கள். ஹாரியட்டும் அதை நம்பினார். ஆண்டவரின் திட்டத்திலும் ஆற்றலிலும் அவர் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை எந்த இக்கட்டிலும் தொடர்ந்து செயலாற்றும் வலிமையையும் தைரியத்தையும் அளித்தது.

ஜோ முதலான குழுவினரைக் கனடாவில் கொண்டுசேர்த்த பிறகு சில மாதங்களுக்கு ஹாரியட்டைக் காணவில்லை. 1857ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாமஸ் கேரட்டும் வில்லியம் ஸ்டில்லும் ஹாரியட்டுக்கு என்னவாயிற்று எனக் கவலைகொண்டனர். ஹாரியட்டுக்கு ஆபத்து ஏதுமில்லை. சைரக்யூஸ் நிலத்தடி இருப்புப்பாதை உறுப்பினர் தனக்குத் தேவையான பணத்தைக் கொடுக்கவில்லையெனக் கவலைகொண்டார். கிழக்குக் கடற்கரைக்குச் சென்று அடிமைகளை மீட்டு வருவதற்கான பொருளுதவி கிடைக்காததால் பல்வேறு வேலைகளைச் செய்து பணம் சம்பாதிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

இன்னொரு சமயம், நியூயார்க் அடிமைத்தளை எதிர்ப்புச் சங்கத்தினர் ஹாரியட்டின் பெற்றோரை மீட்டு வரும் செலவுக்கான பணத்தைத் தரவில்லை என்பதால் அலுவலகத்தைவிட்டு நகராமல் அங்கேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்து உறங்கியும் போனார். அலுவலகத்துக்கு வேறு வேலையாக வந்தவர்கள் அவரைப் பற்றி விசாரித்துவிட்டுத் தங்களாலான உதவியைச் செய்தனர். சங்கத்தைச் சேர்ந்த ஆலிவர் ஜான்சனிடம் அவர் கேட்டதென்னவோ 20 டாலர். அலுவலகத்துக்கு வந்தவர்கள் அவருக்காகக் கொடுத்த பணம் மொத்தம் 60 டாலர்; அவருக்குத் தேவையானதற்கும் அதிகமாகச் சேர்ந்துவிட்டது.

பணத்தை எடுத்துக்கொண்டு நேரே பிலடெல்ஃபியாவில் வில்லியம் ஸ்டில்லின் அலுவலகத்துக்குப் போனார் ஹாரியட். இந்தத் தகவலை உடனடியாக தாமஸ் கேரட்டிடம் தெரிவித்தார் வில்லியம். சில வாரங்களுக்கு முன்னர்தான் டார்செஸ்டரிலிருந்து தப்பிவந்த எட்டு அடிமைகளை டெலவேரில் டோவர் என்ற நகரத்தில் பிடித்துவிட்டார்கள். அதனால் ஹாரியட்டின் நிலைமை குறித்து கவலையில் ஆழ்ந்த வில்லியமும் தாமஸும் நிம்மதிகொண்டனர்.

டோவர் எண்மர் என்றழைக்கப்பட்ட அந்தக் குழுவினர் ஹாரியட்டுக்குத் தெரிந்தவர்கள். அவர் அவர்களுடன் பயணம் செய்யவில்லை. வழி சொல்லி அனுப்பினார். ஹாரியட் கூறிய பாதையில் எட்டுப் பேரும் பயணம்செய்தார்கள். டோவரில் இருக்கும் தாமஸ் ஆட்வெல் என்ற ஆப்பிரிக்க நிலத்தடி இருப்புப்பாதை உறுப்பினரைத் தொடர்புகொண்டால் வில்மிங்க்டன் செல்லும் வழியைக் காட்டுவார் என்று அவர்களிடம் சொல்லியிருந்தார் ஹாரியட். ஆனால் தாமஸ் ஆட்வெல் 3000 டாலர் வெகுமதிக்கு ஆசைப்பட்டு அவர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டான். பல சாகசங்களைச் செய்து எட்டுப் பேரும் சிறையிலிருந்து தப்பித்தனர். ஆனால் குழுவினர் தனித்தனியாகப் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணம்செய்து வெவ்வேறு சமயங்களில் கனடா சென்றுசேர்ந்தார்கள்.

1857ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இன்னொரு துயரமூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. டோவர் எண்மர் தப்பிக்க உதவினார் என்று ஹாரியட்டின் நண்பரான பாதிரியார் சாமுவெல் க்ரீன்மீது சந்தேகம்கொண்டனர் அதிகாரிகள். இதற்கு முன்னர் அவர்மீது ஏற்பட்ட சந்தேகங்களை ஆப்பிரிக்க, வெள்ளையின மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த காரணத்தால் எளிதாகக் களைந்திருந்தார். இந்த முறை வலுவான ஆதாரங்கள் கிடைத்ததால் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோல ஹாரியட்டின் தந்தை பென் ராஸ்மீதும் டோவர் எண்மர் தப்பிச்செல்ல உதவியதாகச் சந்தேகம் ஏற்பட்டது. அந்த எட்டுப் பேரும் பென்னின் குடிசையில்தான் தங்கியிருந்தனர். குழுவில் ஒன்பதுபேர் இருந்தனர் என்றும் அதில் ஒருவர் தப்பிக்க விரும்பாமல் மற்றவர்களையும் காட்டிக்கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

நிலைமை மோசமானதை பென் ராஸும் ரிட்டும் புரிந்துகொண்டனர். அதிகாரிகள் பென்னைக் கைதுசெய்யத் திட்டமிட்டிருந்தனர். எப்படியும் அவர்களைத் தன்னுடன் அழைத்துச்சென்றுவிட விரும்பினார் ஹாரியட். ஆனால் அந்த வருடம் பனியும் புயலும் அதிகம். காவல்படையின் கண்காணிப்பும் அதிகம். மே மாத இறுதியில் வானிலை சீரடைந்தது. பெற்றோரை அழைத்துப் போக இதுதான் நல்ல சமயமென முடிவுசெய்தார் ஹாரியட்.

பென்னுக்கும் ரிட்டுக்கும் எழுபது வயதிருக்கும். இந்த வயதில் கனடா வரையில் பயணம்செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. தன்னுடைய சொற்ப உடைமைகளையும், முக்கியமாக தினமும் படுக்கும் மெத்தையை, எடுத்துச்செல்லவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் ரிட். அதேபோல பென்னும் தன்னுடைய கோடரியைக் கூடவே கொண்டுபோகவேண்டும் என்றார். பெற்றோருக்காகக் குதிரைவண்டியொன்றை ஏற்பாடு செய்தார் ஹாரியட். அத்தனை ஆபத்தான சூழலிலும் தைரியமாகப் பயணம்செய்து வில்மிங்க்டன் வந்துசேர்ந்தார். அங்கே தாமஸ் கேரட் அடுத்த கட்டமாக பிலடெல்ஃபியா போவதற்கு உதவினார்.

பென்னும் ரிட்டும் ஏற்கனவே விடுதலைபெற்ற அடிமைகள் என்றாலும் புதிதாக விடுவிக்கப்பட்டவர்களைப்போல நடத்தினார் வில்லியம் ஸ்டில். மருத்துவர் தாம்சனிடம் அனுபவித்த கொடுமைகளை விவரித்தார் பென். இதுவரையில் ஒற்றை நாணயத்தைக்கூட கூலியாகக் கொடுத்ததில்லை என்றார். எல்லாத் தகவல்களையும் குறித்துக்கொண்ட வில்லியம், ஹாரியட்டின் பெற்றோர் என்பதை ஏனோ பதிவு செய்யவில்லை. பிறகு எல்லோருமாக அங்கிருந்து ராசெஸ்டருக்குச் சென்றனர். பெற்றோரை அடிமைத்தளை எதிர்ப்புச் சங்கத்தின் பொருளாளர் மரியா போர்ட்டரின் பாதுகாப்பில் இருக்கச்செய்தார். சில நாட்களில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் வந்து பெற்றோரை கனடாவுக்கு அழைத்துச்சென்றார்.

ஹாரியட் மீண்டும் கிழக்குக் கடற்கரைக்குக் கிளம்பினார். ஆனால் அந்த முறையும் அவருடைய சகோதரி ரேச்சலையும் அவருடைய பிள்ளைகளையும் மீட்க முடியவில்லை. 1857ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 39 பேர் கொண்ட அடிமைகள் குழுவொன்று தப்பிச்செல்வதற்கான வழியையும் உத்திகளையும் சொன்னார். செப்டெம்பர் முதலே டார்செஸ்டர் பகுதியிலிருந்து நிறைய பேர் தப்பியோடியிருந்தனர். சாம் க்ரீன், நிலத்தடி இருப்புப்பாதை உறுப்பினர்கள் என அடிமைகள் தப்பிக்க வழிகாட்டும் பலரையும் கைதுசெய்த பிறகும் இது எப்படி நடக்கிறது என்று குழம்பினர் உரிமையாளர்கள்.

இந்தக் குழுக்களில் ஆண்கள், பெண்களோடு சிறார்களும் பச்சைக் குழந்தைகளும் இருந்ததும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, கையில் துப்பாக்கி, கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை வைத்திருந்தனர். தங்களைப் பிடிக்க வருபவர்களோடு சண்டையிடுவதற்குத் தயாராக இருந்தனர் என்பது தெளிவானது. அடிமைகளைத் தூண்டிவிடுவதாகச் சுதந்திர ஆப்பிரிக்கர்களைக் குற்றம் சாட்டினர். வடக்கு மாகாணங்களின் சதியால் அடிமைத்தளை எதிர்ப்பாளர்கள் தங்களிடையே ஊடுருவியிருப்பதாகக் கவலைகொண்டார்கள். கிழக்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள அடிமைகள் மனிதத்தன்மையோடும் நல்லவிதமாகவும் நடத்தப்படுவதாகவும் உரிமையாளர்கள்மீது வீண்பழி போடப்படுவதாகவும் சொன்னார்கள்.

இந்தச் சம்பவங்களின் விளைவாக, எஞ்சியிருந்த அடிமைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர் உரிமையாளர்கள். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் காவலும் கண்காணிப்பும் அதிகமானது. தப்பிச்செல்ல முயன்ற சில அடிமைகள் பிடிப்பட்டனர். அவர்களுக்கு உதவிசெய்தவர்களுக்குச் சிறைத் தண்டனையும் கொலைத் தண்டனையும் கொடுக்கவேண்டும் என்று காவல் பணியில் ஈடுபடும் கூட்டம் முடிவுசெய்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹாரியட் அந்தப் பகுதியில் ஒளிந்திருப்பது ஆபத்தானது. அவர் மீண்டும் கனடாவுக்குச் சென்று அங்கு தப்பித்து வரும் அடிமைகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். புதிய வாழ்வை அமைத்துக்கொள்ளத் தேவையானவற்றைச் செய்தார். நியூயார்க்கிலும் நியூ இங்கிலாந்திலும் தன்னுடைய வலைப்பின்னலை விரிவுபடுத்துவதிலும் வலுவாக்குவதிலும் ஆற்றலைச் செலுத்தினார்.

கனடாவிலிருந்த அடிமைகளும் அவரை மோசஸ் என்று அழைக்கத் தொடங்கினர். செயிண்ட் காதரீனின் சமூக, ஆன்ம, மக்கள் நலப்பணிகளில் முனைப்புடன் செயல்பட்டார். புதிதாக வந்துசேர்ந்தவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடத்தோடு புதிய வேலையைத் தேடிக்கொள்ள உதவி புரிவது என ஒரு நாள்கூட ஓய்வின்றிப் பணியாற்றினார். வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைத்தளை எதிர்ப்பு வட்டத்தில் அவருடைய செயல்பாடுகள் வியப்புடன் பேசப்பட்டன. அவரை நேரில் சந்தித்தவர்களும் பார்க்காதவர்களும்கூட அவருடைய தைரியம் அசாதாரணமானது என்று பேசினர்.

தப்பிவந்த முன்னாள் அடிமைகளுக்கு உதவுவதற்கெனப் பல சமூக நலச் சங்கங்கள் இயங்கின. ஆனால் அவர்களுக்குப் பெருமளவில் நிதியுதவி தேவைப்பட்டது. ராசெஸ்டர் பெண்கள் அடிமைத்தளை எதிர்ப்புச் சங்கத்தின் உதவியை நாடினார் ஹாரியட். சங்கத்தின் ஆண்டறிக்கையில் ஹாரியட்டின் அடிமைகளை விடுவிக்கும் பணி குறித்து விரிவாக எழுதி புரவலர்களிடமிருந்தும் உறுப்பினர்களிடமிருந்தும் உணவு, குளிர்கால ஆடைகள் போன்றவற்றைச் சேகரித்தனர்.

*

டார்செஸ்டரிலிருந்து செயிண்ட் காதரீனுக்கு வந்த ஆப்பிரிக்கர்களில் பெரும்பாலானோர் கூடுமானவரையில் அருகருகே தங்கினர். தங்களுடைய பழைய குடும்ப, சமூக உறவுகளைப் புதிய இடத்தில் புதுப்பித்துக்கொண்டனர். பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் எனச் சுற்றத்துடன் வாழ்ந்தாலும் வடக்குத் திசை நோக்கி மேற்கொண்ட நீண்ட அயர்ச்சிமிக்க பயணம் ஹாரியட்டின் பெற்றோருடைய உடல்நிலையைப் பாதித்தது.

1857, 58ஆம் ஆண்டுகளின் பனிக்காலத்தில் தாய் ரிட்டின் நிலைமை மோசமானது. பழகிய நிலம், நண்பர்கள் ஆகியவற்றின் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. இந்தப் பனிபோர்த்த நிலத்தில் பசியில் துடித்து இறந்துபோக நேரிடுமோ என்ற பயத்தில் ஹாரியட்டைக் கடிந்துகொள்வார். உணவு, உடையைவிடவும் ரிட்டுக்குப் புகையிலையும் தேயிலையும் தேவை. அவையிரண்டும் கிடைக்காதபோது தவித்துப் போனார்.

ஒரு முறை வீட்டில் உணவெதுவும் இல்லாமல் எல்லோரும் பசியில் தவித்தனர். பக்கத்திலிருந்த அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டார் ஹாரியட். சிறிது நேரம் கழித்துக் கையில் கூடையுடன் வெளியே வந்தார். அடுப்பில் பெரிய பானையை ஏற்றிவைக்குமாரு காதரீனிடம் கூறினார். வீட்டில் சமையலுக்கான பொருட்கள் ஏதுமில்லையே என்றார் காதரீன். இன்று எல்லோரும் சூப் சாப்பிடப் போகிறோம் என்று சொல்லிவிட்டு கடைவீதிக்குப் போனார் ஹாரியட்.

இரவு கடைகளை மூடும் நேரம். கையிலிருந்த இறைச்சி, காய்கறி எல்லாவற்றையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு வீட்டுக்குப்போகும் எண்ணத்தில் இருந்தனர் கடைக்காரர்கள். அவர்கள் கேட்ட அரை விலைக்கான பணம்கூட ஹாரியட்டிடம் இல்லை. நிலைமையை புரிந்துகொண்ட கடைக்காரர் ஒருவர் பொருளை எடுத்துச்செல்லுமாறு கூறினார். எப்போது முடியுமோ அப்போது பணம் கொடுத்தால் போதுமென்று சொன்னார். கூடை நிறைய உணவுப்பொருட்களோடு வீடு திரும்பினார் ஹாரியட்.

தெற்கு மாகாணங்களிலிருந்து வந்த பலரும் ஹாரியட்டின் குடும்பத்தினரைப்போலவே சிரமப்பட்டனர். குளிர் தாங்காமல் நோய்வாய்ப்பட்டு சிலர் இறந்தும் போயினர். மேலும் இனவாதமற்ற முழுமையான விடுதலையைப் பெறும் கனவுடன் கனடாவுக்கு வந்த அடிமைகள் அங்கே பாகுபாட்டையும் காழ்ப்புணர்ச்சியையும் இனவாதத்தையும் எதிர்கொண்டனர். ஆப்பிரிக்கக் குழந்தைகளை வெள்ளையர்களின் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். அதனால் தங்களுக்கெனத் தனியே பள்ளிகளை நிறுவினர்.

வடக்கு மாகாணங்களிலிருந்து கனடா மாறுபட்டிருந்தது என்றாலும் அங்கே கிடைக்காத பல அரசியல் உரிமைகளை அனுபவித்தனர். வெள்ளையர்களுக்குச் சமமாகச் சொத்துரிமை, வாக்குரிமையோடு தேர்தலில் வேட்பாளராக நிற்கும் உரிமையையும் பெற்றிருந்தனர். நீதிமன்றத்தில் சாட்சியாகவும் நடுவர் குழு உறுப்பினராகவும் செயலாற்ற முடிந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *