Skip to content
Home » கறுப்பு மோசஸ் #20 – நியூயார்க்கில் ஹாரியட் வாங்கிய வீடு

கறுப்பு மோசஸ் #20 – நியூயார்க்கில் ஹாரியட் வாங்கிய வீடு

அடிமைத்தளை எதிர்ப்பாளர்களின் வலைப்பின்னலின்மூலம் ஹாரியட் சந்தித்தவர்களுள் முக்கியமானவர் வெள்ளையரான ஜான் ப்ரவுன்.  அடிமைத்தளைப் போராளி, விடுதலை வீரர், 1859இல் வர்ஜினியா மாகாணத்தில் ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி தாக்குதலை முன்னின்று நடத்தியவர். தெற்குப் பகுதியில் கிளர்ச்சிசெய்து அடிமைகளை விடுவித்து வர்ஜினியாவின் மலைப்பகுதியிலும் மேற்கு மேரிலாண்டிலும் புதிய சுதந்திர மாகாணமொன்றை அமைத்து அங்கே அவர்களைக் குடியேறச் செய்யவேண்டுமெனச் செயல்பட்டவர். விடுதலையடைந்த அடிமைகளுக்காக நிறுவப்படும் புதிய மாகாணத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவைத் தயாரித்து வைத்திருந்தார்.

ஜானின் திட்டத்தை நிறைவேற்ற அந்தப் பகுதியின் தகவல், பயண வலைப்பின்னல்கள் பற்றிய ஹாரியட்டின் அறிவு உதவியாக இருக்குமென நினைத்தார் ப்ரெடெரிக் டக்ளஸ். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பல அடிமைகளை வெற்றிகரமாக மீட்ட ஹாரியட் குறித்து ஜான் ப்ரவுன் நிறைய கேள்விப்பட்டிருந்தார். ஹார்பர்ஸ் ஃபெர்ரியில் தாக்குதல் நடத்தி அடிமைத்தளையைக் களைந்து அடிமைகளை விடுவிக்கும் முயற்சியில் ஹாரியட்டின் கள அறிவு நிச்சயம் பயன்படுமென எண்ணினார்.

1858 ஏப்ரல் மாதம் ஹாரியட்டை கனடாவில் செயிண்ட் காதரீனில் சந்தித்தார் ஜான் ப்ரவுன். பார்த்தவுடன் ஹாரியட் புத்திக்கூர்மையுடையவர் என்பதைப் புரிந்துகொண்டார். கனடாவில் வசிக்கும் முன்னாள் அடிமைகள் தன்னுடைய கிளர்ச்சிப் படையில் சேர்ந்து போர்புரிய வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஹாரியட்டை படைத் தளபதி என்று விளித்தார். எந்த ஆணைவிடவும் சிறப்பானவர், தலைமைப் பண்புமிக்கவர் என்று முழுமனதாகப் பாராட்டினார்.

ஹாரியட் செயல்வீரர், தான் நம்பும் விஷயத்துக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர். கனடா வாழ் ஆப்பிரிக்கர்களிடையே அவருக்கிருந்த நன்மதிப்பு, உற்றார் உறவினரை அடிமைத்தளையிலிருந்து மீட்கவேண்டுமென்ற விழைவு, ஆழ்ந்த இறை நம்பிக்கை, இவற்றோடு ஜான் ப்ரவுனின் திட்டத்தைக் கேட்டு உற்சாகம் கொண்டதால் தன் பக்கம் நின்று போர்புரிய அவரை விடவும் சிறப்பானவர் எவரும் இருக்கமுடியாது என்று முடிவுசெய்தார் ஜான் ப்ரவுன்.

ஹாரியட் வியந்து பார்த்த வெள்ளையர்களில் ஒருவர் ஜான் ப்ரவுன். தன்னைப்போலவே இறைநம்பிக்கை கொண்டவராக ஆண்டவரிடம் உரையாடுபவராக இருப்பதைப் பார்த்தார்.  அவரை நேரில் சந்திக்குமுன்பே தன்னுடைய கனவில் அவரைக் கண்டதாகப் பிற்பாடு சொன்னார் ஹாரியட். கனவில் புதர்களும் பாறைகளும் நிறைந்த பகுதியில் தலையை உயர்த்தியபடி கிடந்த பாம்பு ஒன்றைக் கடந்தார் ஹாரியட். சிறிது நேரத்தில் பாம்பின் தலைக்குப் பதிலாக நீண்ட வெந்நிறத் தாடியுடைய வெள்ளையரின் முகம் தோன்றியது. அவர் ஏனோ தன்னுடன் பேச எத்தனிக்கிறார் என்று யோசிக்கையில் அவரை விடவும் இளையவர்கள் இருவரின் தலைகள் தோன்றின. மூவரும் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று ஹாரியட் எண்ணும் பொழுதே எங்கிருந்தோ ஓடிவந்த மக்கள் கூட்டம் அவர்கள் மூவரையும் அடித்துக்கொன்றது. வயதானவரின் முகம் ஹாரியட்டை ஏக்கத்துடன் பார்த்தபடியே இருந்தது. அந்தக் கனவு மீண்டும் மீண்டும் தோன்றினாலும் அதன் பொருள் என்னவென்று ஹாரியட்டுக்குப் புலப்படவில்லை.

ஜான் ப்ரவுனை நேரில் பார்த்ததும் கனவில் தோன்றிய வயதானவரின் முகம் அவருடையதுதான் என்பது தெளிவானது. ஆனாலும் கனவு தனக்குச் சொல்லவந்த சேதி என்னவென்று புரியவில்லை. ஜான் ப்ரவுன் கேட்டுக்கொண்டபடி கனடாவுக்கு வந்துசேர்ந்த அடிமைகளைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் ஹாரியட். ஆனால் அதற்குப் பிறகு, ஹாரியட்டை செயிண்ட் காதரீனில் பார்க்கமுடியவில்லை என்பது ஜானுக்கு உறுத்தலாக இருந்தது. இருவரும் ரயில் நிலையத்தில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் சொன்னபடி ஹாரியட் வராததால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றெண்ணி அவருடைய நண்பருக்குக் கடிதம் எழுதினார் ஜான். தன்னுடைய திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹாரியட்டுக்கு என்னவானதோ எனப் பதற்றம் கொண்டார்.

அதன் பிறகு ஹாரியட்டும் ஜான் ப்ரவுனும் சந்திக்கமுடியவில்லை. இருவருக்குமிடையே தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஜானின் திட்ட த்துக்கு ஆதரவாளர்களைச் சேர்க்கும் பணியில் ஹாரியட் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே 1858ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் செயிண்ட் காதரீனில் வசிக்கும் முன்னாள் அடிமைகளுக்கு நிதி திரட்டும் பொருட்டு பாஸ்டனுக்கு வந்துசேர்ந்தார் ஹாரியட். ஜான் ப்ரவுனும் அமெரிக்காவுக்கு வந்தார். அதன் பிறகு இருவரும் பாஸ்டனில் பல முறை சந்தித்து கிளர்ச்சிக்குத் திட்டமிட்டனர்.

என்ன காரணத்தாலோ ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி கிளர்ச்சி நடந்த தினத்தில் ஹாரியட் நியூயார்க்கில் இருந்தார். வழக்கம்போல எச்சரிக்கை உணர்வொன்று மனதில் எழுந்தாலும் இன்னதென்று இனங்காண முடியவில்லை. ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது, ஜானும் அவரின் ஆதரவாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர் என்ற செய்தியை மறுநாள் நாளிதழில் படித்த பிறகுதான் எல்லாம் தெளிவானது. கனவில் தோன்றிய முதியவர் ஜான் ப்ரவுன், அந்த இளைஞர்கள் அவரின் இரண்டு மகன்கள் என்பது புரிந்தது. கனவில் தான் கண்டது அவர்களின் முடிவைத்தான் என்பது தெளிவானது. 1859இல் ஜான் ப்ரவுனுக்கு தேசத்துரோகம், கொலை, அடிமைகளைக் கிளர்ச்சி செய்யத் தூண்டினார் என்ற காரணங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது.

பாஸ்டனுக்குச் சென்றபோது அங்கே ஜான் ப்ரவுனின் நெருங்கிய நண்பரான ப்ராங்க்ளின் சான்பார்னைச் சந்தித்தார் ஹாரியட். பின்னாளில் ஹாரியட்டின் நம்பிக்கைக்குரியவராகவும் ஆதரவாளராகவும் விளங்கியதோடு அவரின் வாழ்க்கை வரலாறை நூலாகவும் எழுதினார் ப்ராங்க்ளின் சான்பார்ன்.

பொதுவாக, ஹாரியட் யாரையும் எளிதில் நம்பமாட்டார். அடிமைகளை விடுவிக்கும் பணி காரணமாகத் தன்னை அடிமை உரிமையாளர்களிடமோ அவர்களின் கூலிப்படையிடமோ காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சமே காரணம். தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் புகைப்படத்தை எப்போதும் கையில் வைத்திருப்பார். தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அதைக் காட்டுவார். அதிலுள்ள நபரைச் சரியாக அடையாளம் கண்டு சொன்னால் மட்டுமே நண்பருக்கு அறிமுகமானவர் என்ற நம்பிக்கை ஏற்படும், அவர்களிடம் உரையாடுவார்.

தன்னுடைய இனிமையான குணத்தினால் சந்திப்பவர்களை எல்லாம் எளிதில் வசப்படுத்தினார் ஹாரியட். பின்னர் அவர்களுடனான நட்பு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. எட்னா டௌவ் சேனி என்பவர் சீர்திருத்தவாதி, பெண் வாக்குரிமைப் போராளி, ஹாரியட்டின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்த எழுத்தாளர். ‘ஹாரியட் பாசமிக்கவர், எல்லோருடனும் திடமான நட்பை ஏற்படுத்திக்கொள்பவர்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாரியட்டின் பெற்றோரினால் கனடாவின் குளிரைத் தாங்கமுடியவில்லை. அவர்கள் அமெரிக்கா திரும்பி உறவுகளுடனும் நண்பர்களுடனும் வசித்தால்தான் நலம்பெறமுடியும் என்பதைப் புரிந்துகொண்டார் ஹாரியட். நியூயார்க்கிலோ பாஸ்டனிலோ அவர்கள் தங்குவதற்கான வீடொன்றை ஏற்பாடு செய்யும் முடிவுக்கு வந்தார்.

1859ஆம் ஆண்டின் இளவேனில் காலத்தில் வில்லியம் சூவர்ட் என்பவர் நியூயார்க்கின் ஆபர்னுக்கு அருகிலிருந்த தன்னுடைய வீட்டை ஹாரியட்டுக்கு விற்க முடிவுசெய்தார். வில்லியம் சூவர்ட் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர், அதிபர் பதவிக்குப் போட்டியிட முடிவுசெய்திருந்தார். புலம்பெயரும் குடும்பங்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் உதவிசெய்யும் மனப்பான்மை கொண்டவர். அடிமைத்தளை ஒழிப்பை ஆதரித்தவர். ஆப்பிரிக்கர்களுக்கு வெள்ளையர்களைப்போன்ற உரிமைகளைப் பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்பட்டவர்.

பாராளுமன்றத்தில் அடிமைத்தளை ஆதரவாளர்களின் செல்வாக்கு பெறுவதும் அவர்களுக்கு அதிபர் ஜேம்ஸ் ப்யூக்கனன் ஆதரவளிப்பதும் எரிச்சலூட்டியது. வில்லியம் சூவர்ட் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்திருந்தார். ரிபப்ளிகன், டெமாக்ரேட் கட்சிகளைச் சேர்ந்த அடிமைத்தளை எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டிப் பாராளுமன்றத்தை அடிமைத்தளை ஆதரவாளர்களின் பிடியிலிருந்து விடுவிக்கவேண்டுமெனத் திட்டமிட்டார்.

வில்லியம் சூவர்டின் மாமனார் அலைஜா மில்லர் அவருக்கு ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள பர்டன் ஃபார்ம் என்ற நிலத்தை அளித்திருந்தார். அந்தச் சொத்தை ஹாரியட்டுக்கு 1200 டாலருக்கு விற்றார். பர்டன் ஃபார்மில் சிறிய வீடு, தானியக்களஞ்சியம், தனிக்கட்டிடங்கள், விவசாய நிலம் எல்லாம் இருந்தன. ஹாரியட்டின் பெற்றோர் மட்டுமின்றி இருப்பிடம் தேவைப்படும் எவரும் அங்கே தங்குமளவுக்கு இடமிருந்தது.

சந்தை நிலவரத்தை விடவும் குறைந்த விலைக்கு விற்றதோடு பணத்தைத் தர நீண்ட அவகாசத்தைக் கொடுத்தார். முதல் தவணையாக 25 டாலரும் அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 10 டாலரும் ஹாரியட் தரவேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பெண்கள் சொத்து வாங்குவது நடைமுறையில் இல்லாத பழக்கம். தன்னுடைய சொத்தை ஒரு பெண்ணுக்கு, ஆப்பிரிக்கருக்கு, அதுவும் அடிமைக்கு, அதுவும் நிலையான வருமானமில்லாதவருக்கு விற்க முன்வந்தார் வில்லியம் சூவர்ட். ஆபர்னில் பல இடங்களில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிறிய, எளிமையான இருப்பிடங்களை அமைத்து புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் அடிமைத்தளையிலிருந்து தப்பித்தவர்களுக்கும் குறைந்த விலைக்குத் தரும் பணியைச் செய்தனர் வில்லியம் சூவர்டும் அவரது மகனும்.

ஹாரியட் நியூயார்க்கைச் சேர்ந்தவரல்ல அங்கு வசிப்பவர் மட்டுமே என்பதால் குடியுரிமைச் சிக்கல்கள் இருந்திருக்கும். அடிமை என்பதால் சுதந்திரமானவர்களுக்கான உரிமைகளும் கிடையாது. 1857இல் ட்ரெட் ஸ்காட் வழக்கில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவின் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள், வெள்ளையர்கள் அனுபவிக்கும் எந்த உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

0

ட்ரெட் ஸ்காட் யார்? அவருடைய வழக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ட்ரெட் ஸ்காட் 1799இல் வர்ஜினியாவில்  அடிமையாகப் பிறந்தவர். 1818இல் அவரது உரிமையாளர் பீட்டர் ப்ளோ அலபாமா மாகாணத்தில் ஹண்ட்ஸ்வில் என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தார். அங்கே தன்னுடைய நிலத்தில் பணிசெய்வதற்காக ஆறு ஆப்பிரிக்க அடிமைகளையும் கூட்டிச்சென்றார், அவர்களுள் ட்ரெட் ஸ்காட்டும் ஒருவர்.

1830இல் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு மிசூரி மாகாணத்தில் செயிண்ட் லூயிஸுக்கு இடமாறினார் பீட்டர் ப்ளோ. அந்தச் சமயத்தில் ஜான் எமர்சென் என்ற அமெரிக்க ராணுவ மருத்துவருக்கு ட்ரெட் ஸ்காட்டை விற்றார். ட்ரெட்டை இல்லினாய் மாகாணத்திலிருந்த ஃபோர்ட் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு அழைத்துப்போனார் ஜான் எமெர்சன். 1819இல் இல்லினாய் மாகாணத்தின் அரசியலமைப்புச் சட்டம் அதை அடிமைத்தளை எதிர்ப்பு மாகாணம் என்றும் அங்கே வசிக்கும் எல்லோரும் சுதந்திரமானவர்கள் என்றும் அறிவித்தது.

1836இல் ஜான் எமெர்சன் மின்னசோடா மாகாணத்தின் ஃபோர்ட் ஸ்னெல்லிங்குக்குச் சென்றார். முன்னாளில் அந்தப் பகுதி விஸ்கான்சின் மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது. மிசூரி உடன்பாட்டின் காரணமாக அந்தப் பகுதியில் அடிமைகளின் விற்பனை தடைசெய்யப்பட்டிருந்தது. அங்கே தங்கியிருந்த காலகட்டத்தில் ட்ரெட் ஸ்காட் ஹாரியட் ராபின்சன் என்ற ஆப்பிரிக்கப் பெண்ணை அவருடைய உரிமையாளர் மேஜர் லாரன்ஸ் டாலியஃபெரோவின் அனுமதியோடு திருமணம் செய்துகொண்டார். சட்டபூர்வ திருமணமாகப் பொதுவெளியில் விழா நடந்தது. அவர் அடிமையாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்காது. அடிமைகளின் திருமணங்கள் சட்டத்தினால் அங்கீகரிக்கப்படாத காலம் அது.

1837இல் ராணுவம் ஜான் எமெர்சனை செயிண்ட் லூயிஸுக்கு பணிமாற்றம் செய்தது. ட்ரெட் ஸ்காட்டையும் அவர் மனைவியையும் ஃபோர்ட் ஸ்னெல்லிங்கிலேயே நிலத்தைப் பார்த்துக்கொண்டு வரும் லாபத்தைத் தனக்கு அனுப்பிவைக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார். சுதந்திர மாகாணத்தில் ட்ரெட்டைத் தனக்கு அடிமையாக அழைத்துவந்ததின் மூலம் அங்கே அடிமைத்தளையைக் கொண்டுவந்தார் ஜான் எமெர்சன். அது சட்டத்துக்குப் புறம்பான செயல். அந்த வருடத்தில் மீண்டும் ஒரு பணிமாற்றம் வந்ததால் லூயிசியானாவுக்குச் சென்றார் ஜான் எமெர்சன். அங்கே எலைசா ஐரீன் சான்ஃபோர்டை மணமுடித்தார். ட்ரெட்டையும் அவர் மனைவியையும் லூயிசியானாவுக்கு வரவழைத்தார் ஜான் எமெர்சன்.

அடுத்த சில மாங்களில் ஜான் மீண்டும் ஃபோர்ட் ஸ்னெல்லிங்கில் பணிசெய்யவேண்டிய கட்டாயம். ட்ரெட்டும் அவர் மனைவியும் நீராவிக் கப்பலில் ஃபோர்ட் ஸ்னெல்லிங்குக்குப் பயணம்செய்தனர். போகும் வழியில் இல்லினாயைக் கடக்கும்போது ட்ரெட்டின் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. சுதந்திர மாகாணத்தில் பிறந்ததால் குழந்தையும் சுதந்திர குடிமகளாக வாழும் உரிமையைப் பெற்றது. அதுவரையில் லூயிசியானாவின் நீதிமன்ற வழக்குகளில் அடிமைகள் லூயிசியானாவுக்கு அழைத்துவரப்பட்டால் அவர்கள் சுதந்திரம் பெற்றவர்களாகிவிடுவார்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஒருவேளை ட்ரெட் வழக்கு தொடர்ந்திருந்தால் அவரும் அவருடைய மனைவியும் சுதந்திரம் பெற்றிருக்கலாம். ஏனோ அவர் அதைச் செய்யவில்லை.

ஜானுக்கு அடுத்தடுத்து வந்த பணிமாற்றங்களினால் அவர் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயம். இறுதியில் 1843இல் இறந்துபோனார். ட்ரெட்டும் அவர் மனைவியும் எலைசா ஐரீனின் உடைமைகளாயினர். 1846இல் ட்ரெட் தங்களின் விடுதலைக்கான விலையைக் கொடுக்கத் தயாரெனச் சொன்னபோது எலைசா ஐரீன் அதை ஏற்கவில்லை. அதனால் ட்ரெட் விடுதலை வேண்டி நீதிமன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரோஜர் டானி ஆப்பிரிக்கர்கள், அடிமைகளோ சுதந்திரமானவர்களோ அமெரிக்கக் குடிமக்களாக முடியாது என்றும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடமுடியாது என்றும் தீர்ப்பளித்தார். அத்துடன் மிசூரி உடன்பாடு அடிமை உரிமையாளர்களின் சொத்துரிமைக்கு எதிரானது என்பதால் செல்லுபடியாகாது என்றும் கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது அறத்துக்குப் புறம்பானது எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பல மாகாணங்களில் ஆப்பிரிக்க ஆண்கள் வாக்குரிமை பெற்றிருந்ததையும் வடக்கு மாகாணங்களில் அடிமைத்தளை தடைசெய்யப்பட்டிருந்ததையும் நீதிபதி பொருட்படுத்தாமல் தீர்ப்பு வழங்கியதால் நாட்டின் பல பகுதிகளில் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

ஆபிரகாம் லிங்கன் தீர்ப்பை எதிர்த்தார். நாட்டின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது என்றும் ‘அனைத்து மனிதர்களும் சமம்’ என்ற விடுதலைப் பிரகடனத்தின் உறுதிமொழியை மதிக்கவில்லை என்றும் பேசினார். வரலாற்று ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு அடிமைத்தளையை நீடிக்கச் செய்வதற்கான திட்டமிட்ட செயல் என்றும் கூறினார். அதைச் செயல்படுத்தும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது அவசியம் என்று அரசியல் பிரசாரம் செய்தார்.

1860இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தளையை ஒழித்து அனைத்து மாகாணங்களையும் ஒன்றுபடுத்தும் முயற்சியில் இறங்குவது அவசியம் என்றார். அமெரிக்க உள்நாட்டுப் போர் வெடித்தது. இறுதியில் அமெரிக்காவில் பிறந்த எல்லோருக்கும் குடியுரிமையுண்டு என்று 13, 14ஆம் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டன.

ட்ரெட் ஸ்காட்டின் வழக்கு வெற்றிபெறவில்லை என்றாலும் சிறிது காலத்தில் அவர் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஓராண்டிலேயே இறந்துபோனார். ஆனால் அவருடைய மனைவியும் மகள்களும் அவர் போராடிப் பெற்ற விடுதலையை அனுபவித்தனர். அதுமட்டுமின்றி, தங்கள் வாழ்நாளிலேயே அடிமைத்தளை முற்றிலும் ஒழிக்கப்படுவதைக் கண்டனர். ட்ரெட் ஸ்காட்டின் வழக்கு நீதிமன்றத்தின் நடுநிலையற்ற தன்மையினால் குடிமக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துக்காட்டும் வழக்காக அமைந்தது.

0

தப்பியோடும் அடிமைச் சட்டத்தின்படி தப்பிவந்த அடிமையான ஹாரியட்டுக்குச் சொத்தை விற்பது குற்றம் என்பதால் வில்லியம் சூவர்ட் கைதுசெய்யப்படலாம். ஆபர்னுக்குக் குடிபெயர்ந்தால் ஹாரியட்டும் அவர் குடும்பத்தினரும் பிடிபடலாம். இத்தனை சவால்களையும் எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இருவரும் இந்தச் சொத்தை விற்கும், வாங்கும் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

தன்னுடைய நண்பரான மார்த்தா காஃபின் ரைட்டும் அவருடைய சகாக்களும் தன்னுடைய குடும்பத்துக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்பினார் ஹாரியட். அத்துடன் நியூயார்க்கிலும் அல்பனியிலும் வசிக்கும் மற்ற அடிமைத்தளை ஒழிப்பாளர்களின் தொடர்பும் நட்பும் கிடைத்தது.

அடிமைத்தளை ஒழிப்பாளர்களின் கூட்டங்களில் ஹாரியட் தன்னுடைய வாழ்க்கைக் கதையையும் மீட்புப் பணிகளையும் பகிர்ந்துகொண்டார். இரவில் பயணம் செய்து பகலில் உறங்கி வடக்குப் பகுதிக்குப் பயணம்செய்தது பற்றியும் கூறினார். தன்னுடைய கணவரை மீட்பதற்குச் சென்றபோது தான் எதிர்கொண்ட ஏமாற்றத்தை நகைச்சுவை ததும்பச் சொன்னார். அதைக் கேட்ட பார்வையாளர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

ஹாரியட்டின் கணவன் இன்னொரு பெண்ணோடு வாழத் தொடங்கிய கதை வெள்ளைப் பெண்களுக்கு ஆண்களின் அதிகாரம் குறித்த புதிய திறப்பையும் அச்சத்தையும் தோற்றுவித்தது. ஆண்களுக்காகப் பெண்கள் செய்யவேண்டிய தியாகங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. அதுவரையில் ஆண்கள் நிகழ்த்திய உரைகளை மட்டுமே கேட்டவர்களுக்கு ஹாரியட்டின் சாகசங்கள் ஆச்சரியமூட்டின. நிலத்தடி இருப்புப்பாதையின் உறுப்பினர்களாக வெள்ளை ஆண்கள் மட்டுமே இருப்பதாக நினைத்தவர்களுக்கு அவருடைய சாகசக் கதைகள் புதிய பார்வையை வழங்கின.

நிலத்தடி இருப்புப்பாதை உறுப்பினர்களின் செயல்பாடுகள் வெள்ளை ஆண்களின் அதிகாரம் குறித்து கேள்விகளை எழுப்பியது. ஹாரியட்டின் செயல்பாடுகள் தனிமனிதனின் ஊக்கத்தால் நடந்ததென்றாலும் குழுவின் உறுப்பினர்களின் செயல்பாடும் இணைந்திருந்தது. ஹாரியட் கல்வி கற்கவில்லை, இந்தக் கோட்பாடுகள் குறித்து அவருக்கு எதுவும் தெரிந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நடந்தவற்றைக் கதைபோலச் சொல்லும் அவருடைய திறன் பார்வையாளர்களை நெகிழ்ச்சியுறச் செய்தது.

அடிமைத்தளையிலிருந்து தப்பிய மூன்றே ஆண்டுக்குள் மீண்டும் மீண்டும் டார்செஸ்டருக்குச் சென்று சுமார் 50 அடிமைகளை மீட்டு வந்தவரை மோசஸ் என்று அந்தப் பெண்கள் அழைத்தனர். உறவினர்கள், நண்பர்கள், பெற்றொர் என தனக்குச் சொந்தமானவர்களை எல்லாம் விடுவித்துக் கூட்டிவந்தார். தற்போது அவருடைய பெற்றோரும் மற்றவர்களும் வசிப்பதற்கான வீட்டை வாங்க நிதியுதவி வேண்டினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *