எருக்காட்டூர்
தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே. இவர்கள் சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவன், படைத் தலைவனான பல்வேல் எழினி, தொண்டையர், வடுகர், பரதவர் குறித்து பாடல் இயற்றியுள்ளனர். எருக்காட்டூர் எனும் இந்த ஊர், சோழநாட்டு திருவாரூருக்கு அருகேயுள்ளது என உ.வே.சாமிநாத ஐயர் முன்பு கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் எருக்காட்டூர் என்ற ஊரினைக் குறிப்பிடும் காலத்தால் முந்தைய கி.மு. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட தமிழிக் கல்வெட்டும், கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார்ப்பட்டி குடைவரைக் கல்வெட்டிற்கும் இடையே 33 கிலோ மீட்டர் மட்டுமே இடைவெளி உள்ளது. மேலும் சோழநாட்டுப் பகுதிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் எழுதும் வழமை இல்லை. எனவே இக்கல்வெட்டுக்களின் எழுத்தமைதி கொண்டு இந்த எருக்காட்டூர் எனும் ஊர் சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளேயே இருந்திருக்கக் கூடும் எனக் கருத முடிகிறது.
எருக்காட்டூர்க் கோன்கள்
எருக்காட்டூர் எனும் ஊரினைக் குறித்து சங்ககால புலவர் தாயங்கண்ணர் தம்பதிகள் தம் பெயரை முன்னொட்டு அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன், ஓரோடோகத்து கந்தரத்தனார், கச்சிப்பேட்டு இளந்தச்சனார், கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார், கச்சிப்பேட்டு நன்னாகையார், கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், கடம்பனூர்ச் சாண்டிலியனார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், கருவூர் ஓதஞானியார் கருவூர்ச் சேரமான் சாத்தனார் என்று தமது ஊர்ப்பெயரினை அடையாளப்படுத்தும் புலவர்களினைப்போல எருக்காட்டூர் தம்பதியினரும் தமது ஊரினை அடையாளப்படுத்தியுள்ளனர். இத்தம்பதியினர் வாயிலாகவே இவ்வூர் குறித்து முதல் தகவல்கள் கிடைக்கிறது.
கல்வெட்டுகளில் எருக்காட்டூர்
திருமலைக் கல்வெட்டு
சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ளது இயற்கையான சிறிய மலைத் தொடர். இங்குள்ள குகைத்தளங்களில் புகழ்பெற்ற செஞ்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்குகைத்தளங்களில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுகளும் கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
மலையின் வடக்கு நோக்கிய பகுதியில் கீழ்ப்புறம் அமைந்துள்ள சிறு குகைத்தள நெற்றிப் பகுதியில் (மழைநீர் உட்புகா வண்ணம் வெட்டப்படும் நீர் வடி)இக்கல்வெட்டு மிக மெலிதாக வெட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு
எருக்காட்டு ஊரு காவிதி கோன் கொறிய் பளிய்
இதன் பொருள் எருகாடு ஊரைச் சேர்ந்த காவிதி கோன் என்பவரால் இக்குகைத்தளம் அமைக்கப்பட்டது என்பதே.
திருப்பரங்குன்றம் தமிழி கல்வெட்டில் எருகாடூர், பிள்ளையார்பட்டி கல்வெட்டில் எக்காட்டூர் என இதே ஊர்ப் பெயர்கள் வருகின்றன.
எரு – உரத்தைக் குறிக்கும். எருகட்டு ஊர் என்பது எருவிற்காக ‘கிடை’ வைத்த இடம் என்று பொருள்படும். எருக்கம் காடுகள்
நிறைந்த இடம் என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.
காவிதி என்னும் பட்டம் வேளாளர், வணிகர், அமைச்சர், கணக்கர், வரி தண்டும் அரசுத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தமிழ்ப்பேரகராதி குறிப்பிடுகிறது. ‘கோன்’ என்பது தலைவன், அரசன் எனப் பொருள்படும்.
இக்கல்வெட்டில், எருகாடு ஊரினைச் சேர்ந்த காவிதி பட்டம் பெற்ற தலைவன் பள்ளி அமைத்தான் என்று வருவதால் கொடையாளியின் இயற்பெயர் குறிக்கப்படவில்லை எனலாம்.

திருப்பரங்குன்றத்தில் எருக்காட்டூர்
மதுரை நகரின் தெற்கே உள்ளது திருப்பரங்குன்றம். இங்கு மேற்புரமுள்ள ஒரு குகைத்தளத்தில் சில தமிழிக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் காலம் கி.மு.முதல் நூற்றாண்டு. இக்கல்வெட்டுகளில் ஒன்றில் எருக்காட்டூர் குறித்த கல்வெட்டும் இடம்பெற்றுள்ளது.
கல்வெட்டு
எரு காடூர் இழ குடும்பிகன் போலாலயன் செய்த ஆய்சயன் நெடுசாதன்
எருகாட்டூரைச் சேர்ந்த இழ/ஈழ குடும்பிகன், அதாவது கள் இறக்கும் குடும்பத் தலைவரான போலாலயன் என்பவர், அளித்த கொடை எனும் பொருளில் இக்கல்வெட்டு உள்ளது. இதில் இடம்பெற்ற ஆய்செயன் நெடுசாதன் அவரது மற்றொரு பெயராகக் கருதப்படுகிறது.

பிள்ளையார்ப்பட்டி எருக்காட்டூர் கோன் பெருந்தசன்
உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்ப்பட்டி கற்பகவிநாயகர் கோயிலின் கருவறை உட்புறம் உள்ள அரைத்தூணில் இக்கல்வெட்டு உள்ளது. முன்னரே இக்கல்வெட்டு நடுவண் அரசால் பதிப்பிக்கப்பட்டிருந்தாலும், 1992ஆம் ஆண்டு திரு.சாந்தலிங்கம், திரு.வேதாச்சலம், திரு.ராஜகோபால், திரு.அளக்குடி சீதாராமன் ஆகியோர் கொண்ட தமிழக தொல்லியல் குழுவினரால் மீண்டும் படியெடுக்கப்பட்டு தெளிவாக வாசிக்கப்பட்டது.

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் எகர ஒகரத் தியற்கைமையுமற்றே
எனத் தொல்காப்பியர் கூறும் மெய்யெழுத்துகளில் புள்ளி வைத்து எழுதும் மரபைப் பின்பற்றி தமிழகத்தில் நெகனூர்ப்பட்டி, அம்மன் கோயில் பட்டி போன்ற வெகுசில இடங்களில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. பிள்ளையார்ப்பட்டியிலும் இம்மரபைப் பின்பற்றி இக்கல்வெட்டு வெட்டப்பட்டது சிறப்பானது.

பெருந்தசனின் சிறப்பு
ஆலமர் செல்வன், மழுவாள் நெடி யோன், முக்கட் செல்வன், கணிச்சியோன், நான் மறை முதல்வன், நீல மணிமிடற்றொருவன், அருந்தவ முதல்வன், தொன் முது கடவுள் முது முதல்வன், ஆதிரையான், சீர்கெழு சிறப்பினோன், நான்மறை முதுநூல் முக்கட் செல்வன், மணிமிடற்று அண்ணல், கறைமிடற்று அண்ணல், பிறைமுடிக் கண்ணிப் பெரியோன், கணிச்சியோன், உருவவேற்று ஊர்தியான், போன்ற பல பெயரால் சிவனை நம் சங்க இலக்கியம் அழைக்கிறது. சுமார் 2500 வருட பழைமை என்று சொல்லப்படும் சங்க காலத்திலேயே சிவவழிபாடு தமிழ்நாட்டில் இருந்துள்ளது.
திருமால் எனும் விஷ்ணுவை, மாயோன், நீனிற உருவின் நேமியோன், காரிருள் மயங்கு மணி மேனியன், திருமருமார்பினன், முந்நீர் வண்ணன், பூவைப்பூ வண்ணன், பொருகடல் வண்ணன், ஆழ்கடல் வண்ணன், பூவைப் புதுமலர் வண்ணன், கட வண்ணன், மயிலெருத்து உறழ்மேனி மாயவன், மாமணி வண்ணன், பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன், அணிகின அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் அழைக்கின்றன.
இதேபோன்று முருகன், பலராமர், கொற்றவை, இந்திரன், வருணன் ஆகியோறின் இறை உருவங்கள் பற்றி சங்கப்பாடல்களிலும், காப்பிய இலக்கியங்களிலும் உள்ளதால், இறை உருவங்கள் மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளதை உணரலாம். எனவே, இத்தெய்வங்களுக்குரிய ஆலயங்களும் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்க வேண்டும்.
இளங்கோவடிகள், சிவபெருமான், திருமால், பலதேவர், முருகன் ஆகியோருக்கு எடுக்கப்பட்டிருந்த கோயில்களைப் பற்றி கோயிலைக் குறிக்க நியமம், நகரம், கோட்டம், போன்ற பிற சொற்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் வீழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே
என திருவுநாக்கரசர் தேவாரத்தில் பாடும்போது பெருங்கோயில், அதாவது பிரம்மாண்டமான கோயில்கள் எழுபத்தெட்டு இருந்தது எனக் கூறுகிறார். இவருடைய காலம் கி.பி 7ஆம் நூற்றாண்டு. அப்போது 1300 வருஷம் முன்பு நம்மிடம் கோயில்கள் இருந்ததை அறியலாம்.
இப்பாடலில் தேவாரம் பாடல்பெற்ற காலத்திலேயே பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பல அமைப்புக்களில் கோயில்கள் பற்றிய குறிப்புகள் இருந்ததை நோக்கலாம்.
ஏதத் அனிஷ்டம் அத்ருமம் அலோகம் அசுதம்
விசித்ர சித்தேந நிர்மாபித ந்ருபேண
ப்ரம்மேஷ்வர விஷ்ணு லக்ஷிதாயதநம்
மரமில்லாத, சுதையில்லாத, உலோகமில்லாத கோயிலை விசித்திர சித்தனானவன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்காகப் படைக்கிறான் என்கிறது இக்கல்வெட்டு. இது வாயிலாக அக்காலத்தில் கோயில்கள் கற்களால் கட்டும் வழமை இல்லை என நாம் அறியலாம்.
மகேந்திர வர்மனுக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே எருக்காட்டூர் கோன் பெருந்தசன் மரம், செங்கல், உலோகத்தைப் பயன்படுத்தாது பாறைகளை வெட்டி, அதனுள் கோயிலை எழுப்பும் கலையைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என்றால் அது மிகையல்ல. இவரைப் பின்பற்றியே பாண்டியர்களும், பல்லவர்களும், அதியர்களும், முத்தரையர்களும் இக்கலையில் உச்சம் பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மல்லச்சந்திரத்தை கட்டடக்கலை ரீதியாக ஆராய்ந்தால், பின்னாளில் உருவாக்கப்பட்ட கட்டடக்கலை ஆகம நூல்களுக்கு முன்னோடியாய் இருந்ததை ஆய்ந்துணரலாம்.
இந்த ஈமச்சின்னம் கருவறை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் இறந்தோரின் நினைவாய் ஒரு சின்னம் அமைத்துள்ளனர். ஒவ்வொரு பலகைக்கல்லும் குறைந்தது 5 டன் எடை இருக்கின்றன. அதனை மலைகளிலிருந்து வெட்டியெடுத்து, செதுக்கி, வடிவப்படுத்தும் தொழில்நுட்பமும், ஆயுதங்களும் அறிந்துவைத்துள்ளனர். இறந்தவர் பூசலில் இறந்தவர் என்பதை அறிவிக்க அதனுள்ளே ஓவியமும் வரைந்துள்ளனர். இவ்வளவு செய்யத் தெரிந்தவர்களுக்கு, கோயில் கட்டிடக்கலை மரபும் நிச்சயமாக தெரிந்திருக்கும்.
கோயில் கருவறையின் உட்புறம் இறைவரை வணங்கி வலம் வரும் அமைப்பை சாந்தாரம்/அலிந்திரம் என்பர். இங்கேயும் அதைப்போலே இறந்தவர் நினைவாய் உள்ள சின்னத்தினை வணங்கி வலம் வரும் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த அமைப்பிற்கு காலத்தால் மூத்த சான்று (Reference) என்றால் இந்திய அளவிலேயே அது மல்லச்சந்திரம் மட்டும்தான். அதுபோல கஜபிருஷ்டம் எனப்படும், தூங்கானைமாட வடிவ கருவறை அமைப்பையும் இந்த நினைவுச்சின்னத்தில் புகுத்தியுள்ளனர்.
இறந்தவர்களுக்கு கற்களால் நினைவுச்சின்னம் எழுப்புவதாலேயே, பல்லவர் காலம் முன்பு வரையிலும் இறையுருவங்களுக்கு கற்களால் கோயில் கட்டும் மரபினை தமிழர்கள் தவிர்த்தனர் போலும். ஆகவே அன்று மரம், செங்கல், உலோகத்தால் இறையுருவினை வடித்துள்ளனர். பல்லவர் வருகைப்பின்னரே இந்த மனத்தடைகள் அகன்றிருக்கும்.
அவ்வகையில் எருக்காட்டூர் கோன் பெருந்தசன் அனைத்து மன்னர்களுக்கும் முன்னத்தி ஏராக நின்றுள்ளார்.
பாண்டிய நாட்டு எருக்காட்டூரின் வரலாற்றைக் கூறும் சங்ககாலப் புலவர் இருவர், மற்றும் கோன் இருவரைத் தவிர நமக்கு வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.
சான்றுகள்:
- தமிழ் பிராமி கல்வெட்டுகள் (தமிழக அரசு தொல்லியல்துறை வெளியீடு)
- புள்ளி தந்த பிள்ளையார், ஐராவதம் மகாதேவன், செப்டம்பர் 5, 1997 தினமணி கட்டுரை
- வரலாறு.காம்
- புகைப்படம் உதவி: 1. திரு.சரவண மணியன், 2. திரு.A.T.மோகன்

