சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. கருவூரும்-வஞ்சியும் ஒன்றே என்பதனை சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் வாயிவாய் அறியலாம்.
‘தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்..’
இன்று அமராவதி என அழைக்கப்படும் தண்பொருநை ஆற்றங்கரையிலுள்ள வஞ்சியைத் தலைநகராய் கொண்டு ‘பெருங்கடுங்கோ’ எனும் சேரன் ஆண்டதை புறநானூற்று பாடல் ஒன்று கூறுகிறது. கல்வெட்டுரீதியாய் கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள வேலாயுதம்பாளையம் ஆறுநாட்டார்மலையில் உள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டில் ‘கருஊர்’ எனப் பயின்று வருகிறது. இக்கருவூரின் மற்றுமொரு பெயரான சங்க இலக்கியங்கள் கூறும் ‘வஞ்சி’ எனும் பெயருக்குச் சான்றாய் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல்லில் வஞ்சி எனும் பெயர் பயின்று வருகிறது. இதில் வரலாற்றில் முதன்முதலாக ’வஞ்சிவேள்’ எனும் ஒரு சீறூர் தலைவன் இப்பகுதியை ஆண்டது தெரிய வருகிறது. இங்கு கிடைத்த இரு நடுகற்களும் ஒரே அமைப்பில் உள்ளன. ஒரு நடுகல் கல்வெட்டு ‘கருவூர்’ என்றும், மற்றொரு நடுகல் கரூரின் மற்றொருபெயராய் ‘வஞ்சி’ எனும் பெயர் கிடைத்துள்ளதால், ஒரே காலகட்டத்தில் அதாவது, 8ஆம் நூற்றாண்டு வரையிலும் இவ்விரு பெயர்களையும் அழைக்கும் மரபு இருந்ததற்குச் சான்றாய் அமைகின்றன.
சங்ககாலத்திற்குப் பின் வலுகுன்றிய மூவேந்தர்களில் இப்பகுதியை ஆண்ட சேரர்கள், குடிபெயர்ந்து மேற்குக் கடற்கரை பகுதியான கொடுங்களூர் பகுதியில் தம் ஆட்சியை அமைத்துக்கொண்டனர். அதன்பின்னர் புகழ்ச் சோழர் கருவூரை மையமாய் கொண்டு ஆண்டதை பெரியபுராணம் கூறுகிறது. அதன்பின் பாண்டியக்கோவை எனும் பழமையான நூல் வாயிலாய் அரிகேசி பாண்டியன் அதியமான் ஒருவனை புகழியூரில் வென்றதாய் அறிய முடிகிறது. இந்நிகழ்விற்குப் பின் இப்பகுதியில் வேளிர் ஒருவரின் ஆட்சி நடைபெற்றதும், அக்காலம் வரையிலும் ‘வஞ்சி’ எனும் தொன்மப்பெயர் வழங்கிவந்தமைக்கும் கரூரில் கிடைத்த இந்த நடுகற்கள் சான்றளிக்கின்றன.
மக்கள் இவ்விரு நடுகற்களையும் ‘கொங்கு வேட்டரயர்’ மற்றும் ‘மாவடியான்’ என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.
முதல் நடுகல்:
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தள்ளி ‘மாவடியான் ராமசாமி’ எனும் கோவிலின் வளாகத்தில் மேடையமைத்து வணங்கப்படும் நிலையில் உள்ளார். மக்கள் இவரை ‘கொங்கு வேட்டயர்’ என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.
கல்வெட்டு வாசகம்:
‘(ர)விகோ கலிய மகந் கருவூரிடை ஆதந்நிரை கொளவெறிந்து பட்டான்’
இக்கல்வெட்டு ஆநிரை கவரும் ‘வெட்சிப்போரில்’ இறந்த கோகலியன் என்பவரின் மகனுக்கு ஏற்படுத்தப்பட்ட நடுகல்லாகும். இப்போர் கருவூர்பகுதியில் நடந்ததாய் கல்வெட்டு கூறுகிறது. இந்நடுகல்லில் பெரிய உருவில் காட்டப்பட்டுள்ளவனே இந்நடுகல்லின் நாயகன். இவர் கீழே ஒருவனின் காலை வெட்டி அவனை மிதித்தவாறும், தலைமேல் வாளினை ஓங்கிபிடித்து வெட்டவரும் நிலையினில் காட்டப்பட்டுள்ளார். மற்றொரு வீரன் இவ்வீரனின் வயிற்றில் வாளை இறக்கியவாரு காட்டியுள்ளனர். கடுமையான பூசல் இங்கு நிகழ்ந்திருக்கக்கூடும்.
இரண்டாம் நடுகல்:
மேற்கண்ட முதல் கல்வெட்டின் அமைப்பிலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது. ஒரு சிறு மாற்றமாய் இரண்டு வீரர்கள், இந்நடுகல்லின் கதாநாயகனைக் கண்டு அபயமுறும் நிலையில் காட்டியுள்ளனர். இக்கல்வெட்டும் கரூர் பேருந்துநிலையம் அருகே வ.உ.சி நகர் அருகே அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
கல்வெட்டு வாசகம்:
‘ஸ்ரீ வஞ்சி வேளடியான் நாகன் மகன்’
என்றுள்ளது. இதற்கடுத்த வரிகள் மிகவும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு வாயிலாக கரூர் பகுதியில் வஞ்சிவேள் என்று ஒருவர் ஆண்டதையும், அவரின் அடியானின் மகன் நாகன் என்பவர் பூசலில் இறந்ததையும் அறிய முடிகிறது.
செங்காளிப்பாளையம் கல்வெட்டு
கரூர் மாவட்டம் செங்காளிப்பாளையம் ஊரிலுள்ள நத்தமேடு எனும் இடத்திலுள்ள சிவன்கோவிலிலுள்ள தனிக்கல் ஒன்றில் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வஞ்சிவேள் ஒருவரின் கல்வெட்டு கிடைத்தது. தமிழும் கிரந்தமும் கலந்த இக்கல்வெட்டில் தென்னவன் வஞ்சிவேள் இரவிகுவாவன் எனும் அரசரின் மனைவி நிறந்தேவி என்பவர், ஐம்பது பொன் கொடுத்து நிலம் வாங்கி குடையூர் மகாதேவர் எனும் சிவனுக்கு விளக்கெரிக்கவும், திருவமிர்து படைக்கவும் கொடையளித்த செய்தியை இக்கல்வெட்டு குறிக்கின்றது. இக்கல்வெட்டு வஞ்சிவேள் அரசரின் பெயரைக் குறிக்கின்றது. இதன்பின் வஞ்சிவேள் குறித்த செய்தி நேரடியாய் கிடைக்கவில்லை.
கல்வெட்டு செய்தி
1.ஸ்ரீதென்னவன் வஞ்சி வேளாஇன
- இரவி குவாவன் மணவாட்டி
- நிறந்தேவி வஞ்சி வேளார் கேய்
- ஐம்பது பொன் குடுத்துப் பு
- துப் பெருவாய்க் கீழ்க் குடையூர்மூ
- ருக்கத் தரைக் கடறு சாற்றிய காற் செய்யு
- ம் விலைக்குக் கொண்டிவ்வூர் திரு மூ
- லட்டானத்து மாதேவர்க்கு ஒரு நொந்தா வி
- ளக்கினுக்குந் திருவமிர்தினுக்குமாகக் கு
- டுத்தாள் நிறந்தேவி பந்மாஹஸ்வரர் காவல்
- வாஉ நிநவகக நஸஷா வீகு.. மரானெவி
- நாகிநெவணி வ,ஷெணமஹா…
- விஷெவிதி கீதிக தா ஹஸி
இதன்பின்னர் 12ஆம் நூற்றாண்டு நெடூர் பெருமாள் கோவிலில் ‘ஸ்ரீ வஞ்சி வைஷ்ணவரோம்’ என்ற கல்வெட்டு கிடைக்கிறது. இதன்பின்னர் வஞ்சி எனும் பெயர் வழக்கத்திலிருந்து அழிந்துள்ளது. மாறாக முடிவழங்குசோழபுரம் என அழைக்கப்பட்டு அதன் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து கருவூர் என்ற பெயரே நிலைத்துவிட்டது
வஞ்சிவேளின் முடிவு
8ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்றில் அறிமுகமாகிய வஞ்சிவேள் எனும் சீறூர் தலைவர். அதன்பின் இரு நூற்றாண்டுகள் அப்பகுதியில் நிலைக் கொண்டிருந்ததை அங்கு கிடைத்த கல்வெட்டுகள் வாயிலாகக் கண்டோம். அதன்பின் சோழர்கள் தமிழக அளவில் பேரெழுச்சி பெற்ற உடன் சோழர்களின் நேரடி உறவினரான கொடும்பாளூர் இருக்குவேள் குலத்தினைச் சேர்ந்த பூதி விக்ரமகேசரியால் வீழ்த்தப்பட்டதை, கொடும்பாளூர் மூவர் கோவிலில் உள்ள அவரது வடமொழி சாசனத்தில், 15வது வரியில் ‘வ்யஜயத ஸமரே வஞ்சிவேளந்த கோபூத்’ என்று கூறிக்கொள்கிறார். அதாவது அவன் போரில் வஞ்சிவேளிற்குக் காலனானான் என்று கூறிக்கொள்கிறார். இதன்பிறகு வஞ்சிவேள் குறித்த தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

(தொடரும்)