Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்

கி.பி.6ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சிக் காலத்தில் நீலகண்டரைசர் எனும் சீறூர் தலைவன் ஒருவர் முதன் முதலில் வரலாற்று உலகுக்கு வெளிப்படுகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம், மேல்சிறுவலூர் பகுதி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூர் பகுதியில் நீலகண்டரைசர் பற்றிய நடுகற்கள் கிடைக்கின்றன. இதுதவிர சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் நீலகண்டரைசரின் படை நடுநாட்டிலிருந்து வந்து ஊரை அழிக்க, இதனால் இவ்வூரில் இறந்த ஆறு வீரர்களுக்கு நடுகற்கள் எழுப்பப்படுகின்றன. மொத்தம் 9 நடுகற்கள் இந்நீலகண்டரைசரைப் பற்றிப் பேசுகிறது.

கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டியிருக்கும் மேய்ச்சல் நிலப்பகுதியான பாக்கம்,மேல்சிறுவலூர், தொண்டமானூர் பகுதிக்குட்பட்ட சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பகுதிக்கு இந்த நீலகண்டரைசர் சீறூர்த் தலைவனாய் இருந்திருக்கும். இம்மூன்று பகுதியில் கிடைத்த நடுகற்கள் பல்லவர்கால கல்தச்சர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நீலகண்டரைசர் சாம்மவிஷ்ணுவின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டதனால், இறந்துட்ட வீரர்களுக்குரிய நடுகல்லை எழுப்புவது அன்று அரசர்களின் கடமையாய் இருந்திருக்கும். எனவே நடுகற்கள் நன்முறையில் வடிக்கப்பட்டுள்ளது. ஆனால் செந்தாரப்பட்டி நடுகற்கள் அங்குள்ள பாமர மக்களால் எழுப்பப்பட்டவை, எனவே சிற்பங்களில் ஒருவித முதிர்ச்சி தென்டவில்லை. எனினும் அம்மக்கள் கல்வி அறிவைப் பெற்றிருந்ததை, அந்நடுகற்களில் உள்ள தொல்காப்பிய இலக்கண மரபைப் பின்பற்றிய எழுத்துப் பொறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்நீலகண்டரைசர் சுமார் 12 ஆண்டுகள் வரையிலும் அந்நிலத்திற்கு சீறூர் தலைவனாய் இருந்தது தெரியவருகிறது. அதாவது சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சியாண்டிலிருந்து 36ஆம் ஆட்சியாண்டு வரையிலும் இவரின் இருப்பு குறித்து இந்நடுகற்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற வட்டாரத்தலைவர்களை அறிவதற்கு இதுபோன்ற நடுகற்களே துணை நிற்கின்றன. இவரின் காலமான 6ஆம் நூற்றாண்டில் தமிழக அளவில் பெருங்கோவில்கள், கற்றளிகள் எழுப்புவது பரவலாக்கப்படவில்லை, எனவே இவர் குறித்து அறிந்து கொள்ள கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ இல்லை, அதிலும் இத்தலைவன் ஆண்ட நிலம் கல்வராயன்மலையை ஒட்டிய மேய்ச்சல் நிலப்பகுதி. இயல்பாகவே கரந்தை, வெட்சிப்போர் எனப்படும் தொறுபூசல் நிகழ்ந்த பகுதி. இப்போரில் இறந்த முன்னோர் மரபான நடுகல் மரபின் வாயிலாகவே இவரைக் குறித்து கொஞ்சமேனும் அறிய முடிகிறது. இவரது அனைத்து நடுகற்களிலும் நீலகண்டரைசரின் மருமக்கள் பொய்த்தலையார் என்பவர் வருகிறார். இப்பகுதியில் கிடைக்கும் நடுகற்களில் எழுத்துப் பொறிப்புகளில் ஒரு படிநிலை வரிசை தொடர்ச்சியாய் கடைபிடிக்கப்படிக்கிறது. முதலில் வேந்தர்(சிம்மவிஷ்ணு), அடுத்து தலைவர்(நீலகண்டரைசர்), மக்கள் (பொய்த்தலையார்), சேவகர் (ஆனை தோட்டி) இந்த வரிசை கொண்டே பழமையான 6-8ஆம் நூற்றாண்டு நடுகற்கள் தொண்டை மண்டலப் பகுதியில் அமைத்திருப்பதைக் காண முடிகிறது.

 

பாக்கம் நடுகல்

ஓர் அகலமான பலகைக்கல்லில் வலதுகையில் வாள், இடதுகையில் கேடயம் ஏந்தி, இடையில் குறுவாள் கொண்டு, முன்னோக்கிச் செல்வதுபோல் இந்நடுகல் உள்ளது.

கீழ்க்கோவலூரைச் சேர்ந்த கன்தினதரைசரு (கங்கதிரையரசர்?) மக்கள் கோதுகள் மாச்சியனூரை எறிந்தபோது, நீலகண்டரைசர் மக்கள் பொன்னுழதனார் (பொய்த்தலையார்?) சேவகன் நக்கனாருடைய மக்கள் நீலகண்டர் ஆகியோர் இறந்ததை இந்நடுகல் கூறுகிறது.

பாக்கம் நடுகல்

கல்வெட்டு

  1. கோவிசைய பருமற்கு இருபத்து நான்கவது
  2. கீழ்க் கோவலூரு கன்தி
  3. றதரைசரு மக்கள் ளு (கோ)துகள்
  4. மாச்சியனூரை எறிந்த ஞான்று
  5. நீலகண்ட
  6. ரை சரு மக்க
  7. ள் பொன்னு
  8. ழதன்னார் சேவகரு
  9. நக்க னாரு மக்கள்
  10. நீலண்கட
  11. ரு பட்ட கல்

மேல்சிறுவலூர் நடுகல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்சிறுவலூரில் உள்ள ஒரு வயலில் இந்நடுகல் உள்ளது. பாக்கம் நடுகல்லினை ஒத்தே இந்நடுகல்லும் உள்ளது. பாக்கம் கல்வெட்டின் தகவல்கள் அப்படியே இதிலும் உள்ளது.

மேல்சிறுவலூர் நடுகல்

கல்வெட்டு

  1. கோவிசைய பருமற்கு இருபத்திநான்காவது
  2. கீழ்கோவலூரு கந்திரதரைசரு மக்கள் சிங்க
  3. மணிக்கிரோடு
  4. றிந்த ஞான்று நீலகண்ட
  5. ரைசரு மக்கள் பொன்னுழத்தனாருசேவகரு
  6. நக் கையாரு மக்கள்
  7. நீலகண்டரு பட்டகல்

தொண்டமானூர் நடுகல்

சிம்மவிஷ்ணுவின் 36ஆம் ஆட்சியாண்டில் எழுப்பப்பட்ட இந்நடுகல், நீலகண்டரைசரின் ஆட்சியில் கொடியனூர் எனும் ஊரினைக் கைப்பற்றும் போரில், கங்கரு மக்கள் பொன்னக்கனாரு சேவகன், வானகோ அதியரைசர் பொன்னிருவரை எறிந்து படுகிறார்.

அவரது நடுகல்லே இது. இந்நடுகல் வாயிலாக நீலகண்டரைசருக்கும், வானகோ அதியரைசருக்கும் பகைமை இருந்தது தெரியவருகிறது.

தொண்டமானூர் நடுகல்

கல்வெட்டு

  1. கோவிசைய சிங்க
  2. விண்ண பருமற்கி முப்பத்தாறாவது
  3. நீல கண்டவரை ..மக்கள் பொன்னுமு
  4. தன்னா கொடியன்
  5. னூரு எறிந்த ஞான்று.
  6. கங்கரு மக்கள்
  7. பொன்னக்கனாரு சேவகன்
  8. வாணகோ அதியரைசரு
  9. மக்கள் பொன்னிரெவரு
  10. எறிந்து பட்டான்
  11. இறப் பெரும்மறைய. .மக
  12. ந் பூதன்கல்

செந்தாரப்பட்டி நடுகற்கள்

இன்றைய சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் 6 நடுகற்கள் கிடைத்தன. அதில் ஐந்து அதே இடத்திலும் ஏனைய ஒரு நடுகல், ஈரோடு மாவட்டம் கலைமகள் சபா பள்ளியிலும் உள்ளது.

தனது பகுதியான கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஊரினைக் கைப்பற்றி அவ்வூரை அழித்துச் சென்றுள்ளது நீலகண்டரைசரின் படை. இப்படையை நீலகண்டரைசரின் மருமக்கள் பொய்த்தலையாரின் சேவகன் ஆனைதொட்டி தலைமேயேற்றுச் சென்றுள்ளார். கல்வராயன் மலையை ஒட்டி இவர்கள் படை சென்றுள்ளது. இம்மலையின் முடிவான கணவாயாக செந்தாரப்பட்டி உள்ளது. செந்தாரப்பட்டியில் அன்று இருந்த மக்களும், தலைவனும் பிறர் மேலாண்மையை ஏற்காததால், நேரடியாகவே, நீலகண்டரைசரின் படையால் தாம் இறந்ததைக் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்ளின் உறவினர்கள் இந்நடுகல்லினை எழுப்பியிருக்கின்றனர்.

செந்தாரப்பட்டி-நடுகல்
செந்தாரப்பட்டி நடுகல்

 

செந்தாரப்பட்டி-நடுகல்

முதல் நடுகல்:

  1. நீலக(ண்)டரைசர் மருமக்கள் பொய்த்தலை ஆர் சேவகன் ஆனை தோட்டி மேல்
  2. படை வந்த ஞான்று எறிந்
  3. து பட்டான் பொ
  4. ங்கில்வி
  5. ண்ணன்

வீரன் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் கொண்டுள்ளான். நடுகல்லின் மேற்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதியில் எழுத்துகள் காணப்படுகின்றன. நீலகண்டரைசரின் மருமக்கள் பொய்த்தலையார் என்பவரின் சேவகன் பொங்கில்விண்ணன் இங்கு நடந்த பூசலில் இறந்ததை இந்நடுகல் கூறுகிறது.

இரண்டாம் நடுகல்:

  1. நீலகண்டரை
  2. சர் மருமக்கள்
  3. பொய்த்தலை ஆர்
  4. சேவகன் ஆனை
  5. தோட்டி மேற் படை வந்த ஞான்று
  6. எறிந்து பட்டான் முண்ண நக்கன்

வீரனின் வலது கையில் வாளும் இடது கையில் கேடயமும் உள்ளது. மேலிருந்து கீழாகப் பக்கவாட்டினை ஒட்டி இருபுறமும் கல்வெட்டு எழுத்துகள் காணப்படுகின்றன.

முண்ணநக்கன் போரில் இறந்ததை கல்வெட்டு கூறுகிறது.

மூன்றாம் நடுகல்:

  1. நீலகண்டரைசர் மருமக்கள் பொய்த்தலைஆ
  2. ர் சேவகன் ஆனைதோட்டி மேற் படை வந்த ஞான்
  3. று எறிந்து பட்டான் கோ
  4. ழி வடுகன்

வீரனின் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் உள்ளது. மேலிருந்து கீழாக வலதுபுறp பக்கவாட்டில் கல்வெட்டு உள்ளது. முன்னர் சொல்லிய போர் நிகழ்வில் கோழிவடுகன் எனும் இவ்வீரன் இறந்துபடுகிறான்.

நான்காம் கல்வெட்டு:

  1. நீலகண்டரைசர் [மருமக்கள்] பொய்த்தலை ஆர் சே
  2. வகனானைதோட்டி [படை] வந்த ஞான்று
  3. எறிந்து
  4. பட்டா னெரு
  5. மைகொள்
  6. ளி செல்லன்

வீரன் வலது கையில் வாளும் இடது கையில் கேடயமும் கொண்டுள்ளான். கேடயப்பகுதியில் கல் சற்றுச் சிதைந்துள்ளது. கல்வெட்டு வலது கைப்பகுதியில் தொடங்கி இடது கீழ்ப்பகுதி வரை இரண்டு வரிகள் வளைந்து செல்கின்றன. பிறகு நான்கு வரிகள் வலதுபுறம் நேராகவெட்டப்பட்டுள்ளன. முன் நடுகற்களில் சொன்ன போர் நிகழ்வில் எருமை கொள்ளி செல்லன் எனும் இவ்வீரன் இறந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.

ஐந்தாம் நடுகல்:

இந்நடுகற்கள் தொகுதியில் மற்றுமொரு நடுகல் சிதைவுற்று உள்ளது. அதில் உள்ள எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை.

ஆறாம் நடுகல்:

‘நீல கண்டரைசர் மருமக்கள் பொய்த்தலை (நீ) ஆர் சேவகன் கஞ்ச

சை புழை உட் படை ஞான்றெறிந்து பட்டான்

சாகாட நக்கன்’

நடுகல் அமைப்பு:

வலது கையில் வாளும், இடது கையில் வில்லும் ஏந்தியுள்ளார். இடையில் அரைக்கச்சம் அணிந்து, காது வளர்த்து குண்டலம் அணிந்துள்ளார். மேலிருந்து கீழாக பக்கவாட்டின் இருபுறமும் எழுத்துக்கள் உள்ளன. (இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள நடுகல் தற்போது ஈரோடு கலைமகள் சபா பள்ளியில் உள்ளது).

சிம்மவிஷ்ணுவின் காலத்தில் அறிமுகமாகும் நீலகண்டரைசர், அதன்பின் 12 ஆண்டுகள் ஒரு சீறூர் தலைவனாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார். அதன்பின் 12 அதன்பின் அவர் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *