எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் வைப்பாற்றின் இருகரைப் பகுதியிலும் விளங்கிய இருஞ்சோணாடு என்ற நாட்டின் சீறூர்த் தலைவனாக விளங்கியவர். இப்பகுதி இன்று இருக்கண்குடி என அழைக்கப்படுகிறது. இருப்பைக்குடிக்கிழவன் என்று பெயர் பெற்ற இவர், பாண்டிய அரசர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனால் பலசிறப்புகளைப் பெற்று விளங்கியிருக்கின்றார். இந்தப் புகழ்பெற்ற இருப்பைக்குடி கிழானிற்கு அடுத்ததாக இரு எட்டி மன்னர்கள் அறியப்படுகின்றனர். ஒருவர் எட்டி மன்னன் என்றும், மற்றொருவர் எட்டி மாறன் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். முதலாவதாய் எட்டிச் சாத்தன் எனும் இருப்பைக்குடிக் கிழான் குறித்து தெரிந்துகொள்வோம்.

எட்டிச் சாத்தன்
சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கண்மாயில் உள்ள ஒரு பலகைக்கல்வெட்டு இவரது புகழைக் கூறுகிறது. அவர் செய்த ஒட்டுமொத்த நற்பணிகள் மற்றும் அவரது சிறப்புப்பெயர்கள் போன்றவற்றினை இக்கல்வெட்டு சிறப்பாகவும் முழுமையாகவும் கூறுகின்றது. எட்டிசாத்தனாயின இருப்பைக்குடிக் கிழவன் என்ற நாட்டுத்தலைவனின் புகழைக் கூறும் பாடல் கல்வெட்டு இதுவாகும்.
இக்கல்வெட்டின் வாயிலாக இவர், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் என்று பெயர்பெற்ற பாண்டியனின் அதிகாரியாகவும். இருஞ்சோணாட்டவர் தலைவனாகவும். பெருஞ்சாந்திக்குலத்தின் மன்னராகவும் விங்கியுள்ளார். கூடற்குடி, குளத்தூர், துழாயூர், இருப்பைக்குடி, வெளியன்குடி, ஆலங்குடி, முதலிய ஊர்கள் பலவற்றைத் தன்னகத்து கொண்ட இருஞ்சோணாட்டின் அதிபதியாவார். இவர் முதலூரில் சிவபெருமானுக்கென்று கோயில் எடுப்பாத்தும், தென்வெளியன் குடியில் கற்தூண் நட்டு, அம்பலமும், கறைகண்டனான சிவபெருமான் கோயிலும் கிழவனேரியும் எடுத்தவராவார். மாறனூர் பெருங்குளத்தைப் புதுப்பித்துக் கிழவனேரி என்று அதனைப் பேரேரியாக உருவாக்கியுள்ளார். இருப்பைக் குடியில் பெரும்பள்ளியும் (சமணர்கோயில்) மண்டபம், அம்பலம் எடுப்பித்து மேலும் இப்பகுதியில் கிழவனேரி, திருமால் ஏரி, புகழ்நேரி, நடைஏரி, முதலிய ஏரிகளை உருவாக்கியுள்ளார். அரசகுளத்தைக் கிழவனேரி என்ற பெயரில் கொழுவூரில் ஏற்படுத்திய இவர், புகழ்மலி ஏரி, செங்குளம், மாறனேரி முதலிய ஏரிகளையும் தோற்றுவித்தவர். நென்மலி ஊரில் அம்பலமும் கிழவனேரியும் உருவாக்கியவர். கிழவனேரி என்று தனது பெயரில் மாறனூர், குளத்தைத் திருத்தியுள்ளார். சாத்தனூரிலும் மாலங்குடியிலும் உள்ள குளங்களில் பலமடைகள் அமைத்துள்ளார். கும்மணமங்கலம் அமைத்து தென்னவர்கோன் பாண்டியன் ஏற்படுத்திய ஸ்ரீவல்லப மங்கலம் என்ற பிரமதேயத்தின் ஆணையை நிறைவேற்றிய ஆணத்தியாகவும் இவர் இருந்துள்ளார். அப்பிரமதேயத்தில் திருநாராயண ஏரி என்றொரு ஏரியும் அமைத்துள்ளார். இவ்வாறு தன் அதிகாரத்தில் இருந்த இருஞ்சோணாட்டுப் பகுதியில் (சாத்தூர்வட்டம்) பல பாசனப் பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் செய்தவன் இருப்பைக்குடிக் கிழவன் என்று இக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டு கூறும் தகவல்களை மெய்ப்பிக்கும் வண்ணம் சாத்தூர் மாவட்ட இருக்கண்குடி கண்மாயில் உள்ள பாறைக் கல்வெட்டொன்று, இக்கண்மாயின் பழங்கரைகளை அழித்து, அதனைக் கற்களைக் கொண்டு பரப்பி, அதற்கு கிழவனேரி எனத் தன் பெயரை வைத்துள்ளார் எனக் கூறுகிறது.
சாத்தூர் வட்டத்திலுள்ள நென்மேனி எனும் கிராமத்தில், கண்மாயில் உள்ள கற்பலகையொன்று, இங்குள்ள கண்மாயின் கரைகளை வலுப்படுத்த பழமையான கரைகளை அழித்து, கற்களைப் பரப்பி, அதனைச் சீர் செய்து, அதற்கு கிழவனேரி எனத் தன் பெயரையும் வைத்து, அங்கு ஓர் அம்பலத்தினையும் ஏற்ப்படுத்தியுள்ளார் எனக் கூறுகிறது.
மேலும், இவ்வட்டத்திலுள்ள சின்னக்கொல்லப்பட்டி எனும் ஊரிலுள்ள ஓர் கண்மாயின் அருகேயுள்ள பலகைக்கல்லில் இவரது கல்வெட்டொன்று இருந்தது, இக்கல்வெட்டின் முக்கியத்துவம் கருதி, தற்பொழுது இக்கல்வெட்டு மதுரை திருமலை நாயக்கர் மகால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் பேரேரியில் நெடுமாறன் அமைத்த மடைகள் பழுதுபட்டுப் போக, அதனை எட்டிச் சாத்தன் சீரமைத்து, அங்குள்ள வேப்பமடையை கருங்கல்லாலும், பொன்னான்மடை, பூங்குறிமடைகளைச் செங்கலாலும் சீரமைத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இன்று இம்மடைகள் உபயோகப்படுத்தவும் சீரமைக்கவும் ஆட்கள் இன்றி, எட்டிச்சாத்தனின் புகழைக்கூறும் மௌனசாட்சியாகத் தோற்றமளிக்கின்றன. இக்கல்வெட்டில் இடம்பெற்ற நெடுமாறன் என்பவர் அரிகேசரி என அழைக்கப்படும் நின்றசீர் நெடுமாறனாக இருக்ககூடும். இம்மன்னர் ஏரிப்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தமை குறித்த அவரது மடைத்தூண் ஒன்று கண்டறியப்பட்டு மதுரையில் உள்ளது நோக்கத்தக்கது.
எட்டி மன்னன் ஏனாதி சாத்தன்
கோவில்பட்டி வட்டத்திலுள்ள கழுகுமலையைச் சூழ்ந்த நெற்சுரநாட்டின் தலைவனாக அந்நாட்டு நெற்சுரத்தில் அரண்மனை கட்டிக் கொண்டு வாழ்ந்தவன் எட்டி மன்னனாகிய ஏனாதி சாத்தன். இவன் பாண்டியன் மலைநாட்டின்மீது படையெடுத்துச் சென்றபோது அப்போரில் பாண்டியனுக்கு வெற்றியைத்தரத் துணைபுரிந்தவன் ஆவான்.
கழுகுமலையில் இடம்பெற்றுள்ள, மாறஞ்சடையன் என்ற பெயரில் ஆட்சியாண்டுடன் கூடிய, நான்கு முற்கால பாண்டியப் பேரரசுக் காலத்தியக் கல்வெட்டுகளும், பாண்டியன் பாராந்தக வீரநாராயணன் காலத்தைச் சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவ்வாறெனில் அவற்றுள் இருகல்வெட்டுகள் கி.பி.889ஆம் ஆண்டிலும், ஒரு கல்வெட்டு கி.பி.899ஆம் ஆண்டிலும், பிறிதொன்று கி.பி.908ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்டவைகளாகும். மேலே கண்ட சாசனங்கள், கழுகுமலைப் பேருரை, நெற்சுரம் என்றும், கழுகுமலையைத் தலைமையிடமாகக் கொண்ட பண்டைய நிர்வாகப் பகுதியை ‘நெற்சுர நாடு’ என்றும் அழைக்கின்றன.
பாண்டிய நாடு, முதல் பாண்டியப் பேரரசு ஆட்சியில் (கி.பி.550-990) பாண்டிநாடு, பாண்டிமண்டலம் எனவும், சோழபாண்டியராட்சியில் (கி.பி.991-1218) இராஜராஜப் பாண்டிநாடு எனவும் அழைக்கப்பட்டது. பாண்டிநாட்டைச் சேர்ந்த கழுகுமலை, முதல்பாண்டியப் பேரரசு காலத்தில் ‘நெற்சுரநாட்டு நெற்சுரம்’ எனவும், சோழபாண்டியராட்சியில், ‘இராஜராஜப் பாண்டிநாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு நெற்சுரநாட்டு நெற்சுரம்’ எனவும் அழைக்கப்பட்டது. பண்டைய நெற்சுரத்தில் திருவநற்சுரம், பெருவநற்சுரம், இளநெற்சுரம், குழுவாணை நல்லூர், திருவிருப்பூர், பவித்திர மாணிக்கபுரம், கீழுர் போன்ற உட்பிரிவு ஊர்களும் இருந்துள்ளன.
எட்டி மன்னன் நடுகல்:
கழுகுமலையிலுள்ள ஒரு நடுகல் கல்வெட்டில், எட்டி என்ற இக்குறுநிலமன்னனைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. இந்நடுகல் கல்வெட்டு, இப்போது மதுரை திருமலைநாயக்கர் மகாலில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் கல்வெட்டில் இடம்பற்றுள்ள கழுகுமலை பற்றிய வரலாற்றுச் செய்திகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். பண்டையக் கழுகுமலையில், எட்டிக்குச் சொந்தமான அரண்மனையொன்று இருந்தது. அரண்மனையில் படைவீரர்கள், பணியாளர்களாகப் பணிபுரிந்தனர். கி.பி.889ஆம் ஆண்டில் பாண்டியர் படைக்கும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சங்ககால வேளிர் குல தோன்றலான மலைநாட்டு ஆய்மன்னன் கருநந்தடக்கன் படைக்கும் இடையே, குமரி மாவட்டத்திலுள்ள, இரணியலுக்கு அருகிலுள்ள அருவியூரில் போர் நடந்தது. இப்போரில் பாண்டியர் படைக்கு ஆதரவாக, எட்டியின் படையும் கலந்துகொண்டு போர் செய்தது. போரின் இறுதியில், பாண்டியர் படை அருவியூர்க் கோட்டையை அழித்து வெற்றிபெற்றது. எனவே, இப்போரினை ‘அருவியூர்க்கோட்டைப்போர்’ என்றே அழைப்பர். போரில் கலந்து கொண்ட எட்டியின் படைவீரர்களில் இருவர் விழுப்புண்பட்டு வீரமரணம் எய்தினர். இறந்துபட்ட இருவரும் எட்டியின் அரண்மனைப் பணியாளர்களாவர். இருவரில் ஒருவன், சென்னைக்கு அருகேயுள்ள பூவிருந்தவல்லியை பூர்வீகமாகக் கொண்டவன். இவனது பெயர் வினயன் தொழுசுரன், கல்வெட்டு இவனை ‘தொண்டை நாட்டுப் பூந்தண்மலி வினயன் தொழுசூரன்’ என்று குறிப்பிடுகிறது.

இன்னொருவன், அருப்புக்கோட்டைக்கு அருகேயிருந்த பேரெயிற்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவன். இவனது பெயர் சாத்தன்நக்கன் என்பதாகும். கல்வெட்டு இவனை, ‘பேரெயிற்குடிச் சாத்தன்நக்கன்’ என்று குறிப்பிடுகிறது. இவ்விரு வீரர்களின் வீரமரணத்திற்கு ஈடாக, எட்டிமன்னன் இருபதுகழஞ்சு பொன்விலை பெறும் பூமியை இரத்தமானியமாக வழங்கினான். எட்டிமன்னன் இத்தானத்தை, கும்மணமங்கலத்து சபையாரிடம் ஒப்படைத்தான். குறுநிலமன்னனான எட்டி, ‘கும்மணமங்கலத்துச்சபையார்’ என்ற மகாசபையின் கீழ் ஆளுகை புரிந்து வந்துள்ளது தெரிய வருகிறது. கும்மணமங்கலம், இருப்பைக்குடி நாடு என்ற பண்டைய நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தின் ஒருபகுதியே, பண்டைய இருப்பைக்குடி நாடாகும். நாம் முன்னர் கண்ட எட்டிச்சாத்தனும், கழுகுமலைப்பகுதியின் குறுநிலமன்னன் எட்டியும், ஒருவொருக்கொருவர் உறவினர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இருவரது பெயர்களிலும் எட்டி என்ற பட்டப்பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எட்டி மாறன்
தென்காசியிலிருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையிலிருக்கும் கண்மாய் ஒன்றில் முற்காலப் பாண்டியர் காலத்தினைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டொன்று காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு எழுத்தமைவில் காணப்படும் இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் கோச்சடைய மாறனது 14ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு புலியூர் குளத்தில் தென்வார நாட்டுக் கிழவனான எட்டி மாறன் என்பான் தூம்பு செய்தளித்த தகவலைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு குறிப்பிடும் சடைய மாறன் வீரபாண்டியனுக்கு முன் ஆண்ட இரண்டாம் இராஜசிம்ம பாண்டியன் அல்லது வீரபாண்டியனுக்குப் பின் ஆண்ட ஒரு அரசனாயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முற்கால பாண்டியர் காலத்தில் பெருஞ்சாந்திக் எனும் குலத்தில் தோன்றிய இம்மூன்று சீரூர் தலைவர்கள் எட்டி எனும் பெயரை அடையாளப்படுத்தி ஆண்டுள்ளனர். இவர் வழித்தோன்றல்கள் வேறு எவர் குறித்தும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இம்மன்னர்கள் நீர்நிலைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வாயிலாக இவர்கள் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு அவர்கள் ஏற்ப்படுத்திய நீர்நிலைகள் இன்றும் மக்கள் பயன்பாட்டில் இருப்பதே சான்று.
(தொடரும்)

