திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை அருகேயுள்ள ஊர் மலையடிக்குறிச்சி. இங்கு இயற்கையாய் அமைந்த மலைக்குன்று ஒன்றில் ஈசனுக்காகக் குடையப்பெற்ற குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் வடபுறமுள்ள முகப்பில் உள்ள போதிகையில் வெட்டப்பட்டுள்ள கோமாறன் சேந்தனின் 17ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு அதாவது கி.பி.637, இக்கோவிலின் தொன்மையை பறைசாற்றும். இப்பாண்டியனின் ஆணைக்கிணங்க பாண்டி மங்கலவதி அரசர் சேவூர்க்கிழார் சாத்தன் ஏறன், இக்குடைவரையை எழுப்பித்ததாய் கல்வெட்டு கூறுகிறது.
கல்வெட்டு
‘ஶ்ரீ கோ (மாறஞ்) சேந்தன் கொற்றமுற்றித் திருவிராச்சியஞ் செல்லா நின்றது பதினேழாக
அவன் பணியால் பாண்டி மங்கலவதி அரச சேவூர்
கிழான் சாத்தனேறன் செய்வித்த கற்றிருக் கோயில்’
வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர் சிறிய செப்பேடு, இளையான் புத்தூர் செப்பேட்டிலும் இம்மன்னன் குறிப்பிடப்படுகிறார்.
‘சிலைத் தடக்கை கொலைக் களிற்றுச் செழியன் வானவன் செங்கோற் சேந்தன்’ என்று செப்பேடுகளில் புகழப்படும் சேந்தனின் காலத்தில் எழுப்பப்பட்டதே இக்குடைவரைக் கோவில், ஏறக்குறைய பல்லவ மன்னன் மகேந்திர வர்மர் காலத்தில் எழுப்பப்பட்ட குடைவரைக் கோவிலாகும். கல்வெட்டுக் காலத்தின்படி காலத்தால் முந்தைய பாண்டியரின் குடைவரைக் கோவில் இதுவே ஆகும். அதன்படி இக்குடைவரைக்கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குடைவரையை எழுப்பியது பாண்டிய மன்னனின் ஆணையாக இருந்தாலும், அதனை எழுப்பியது சேவூர் கிழான் சாத்தன் ஏறன் என்றால் அது மிகையல்ல. இவர் தன்னை பாண்டிய மங்கலவதி அரசன் எனக் கூறிக்கொள்கிறார். இந்த சேவூர் இன்றைய பொன்னமராவதி அருகேயுள்ளது. அன்று புறமலைநாடு என்ற நாட்டின் கீழ் இருந்தது.
இச்சேவூர் 10ஆம் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற ஊராகும். 960-962 காலகட்டத்தில் நடந்த போர் ஒன்றில் பாண்டிய வேந்தன் ’சோழன் தலை கொண்ட’ வீரபாண்டியனும்’ சுந்தரசோழனும் மோதிக்கொண்டனர், இதனால் ‘பாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமாள்’ என்ற பட்டமெய்தினார். அதன்பின் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வெற்றிகொண்டார். அவ்வகையில் இச்சேவூர், சோழர்-பாண்டியர் வரலாற்றில் முக்கியமானதொரு ஊராகும். இவ்வூரின் அரசனாக 7ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தவர் இந்த சாத்தன் ஏறன் ஆவார். இவர் குறித்து வேறு தகவல்கள் கிடைக்காவிடினும் அவர் எழுப்பிய இக்குடைவரை அவரது அறஞ்செயலைப் பறைசாற்றி நிற்கிறது.

மலையடிக்குறிச்சி குடைவரை சிறப்புகள்
இக்குடைவரையின் காலமான 637ஆல் தமிழத்தில் வெகுசில குடைவரைக்கோவில்கள் இருந்தன. இக்கோவில்கள் எளிய அமைப்பில் இருந்தன. ஆனால் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பினும் முன்மண்டபத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் வழிகள் காணப்படுகின்றன. இரு தூண்களுடன் கூடிய, குடைவரையின் முகப்புத்தரை முன்மண்டபத்தின் தரையைவிட சிறிது உயரமாக உள்ளது. முகப்புத் தூண்கள் இரண்டும், அவற்றிற்கு நேராகச் சுவரை ஒட்டிய அரைத்தூண்களும் இங்கு காணப்படுகின்றன. இவை சதுரம், கட்டு, சதுரம் என அமைந்துள்ளன. தூண் கட்டுகளில் தாமரை இதழ்கள் அழகுடன் வெட்டப்பட்டுள்ளன. பாண்டியரின் மற்ற குடைவரைகளில் இவற்றைப் பொதுவாகக் காணமுடியாது. தூண்களின் மேற்சதுரங்கள் சிலவற்றில் மலர்ந்த தாமரை, வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. பறவை உருவங்களும் மலரும் இணைந்து இத்தூண்களை அழகு செய்கின்றன. தெற்குத் தூணில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ள தாமரை வட்டத்தில் இரு கைகளுடன் கூடிய உருவம் ஒன்று காணப்படுகிறது. வடக்குத் தூணின் போதிகையின் கிழக்குப் பகுதியில் குடைவரையைத் தோற்றுவித்ததைப் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது.

குடைவரையின் முகப்பை அடுத்து செவ்வக அளவிலான முன்மண்டபம் காணப்படுகிறது. கருவறையின் வாயிலை ஒட்டி உள்ள சுவர்ப்பகுதிகளில் பக்கத்திற்கு ஒன்றாக அரைத்தூண்களுக்கு இடையில் இரண்டு கோட்டங்கள் குடையப்பட்டுள்ளன. இவற்றுள் இருந்த சிற்பங்களைச் சிதைத்து அழித்துள்ளனர். கருவறையின் நிலைக்கால்கள் சற்று உள்ளடங்கி காணப்படுகிறது. கருவறை வாயிலின் மேலே அழகுடன் கூடிய மகரதோரணம் ஒன்று காணப்படுகிறது. மூலவரின் அபிஷேக நீர் வெளியேற கருவறையின் முன்சுவரில் துளை ஒன்று குடையப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் மற்ற பாண்டியர் குடைவரைகளில் பின்னோட்டாக இடம்பெற்றிருப்பினும், பிற்கால பாண்டியர் குடைவரைகளுக்கு முன்மாதிரியாய் இக்குடைவரையை சாத்தன் ஏறன் அமைத்துள்ளார்.
(நன்றி: தென்மாவட்டக் குடைவரைகள். மு.நளினி, இரா.கலைக்கோவன்)
கல்வெட்டில் புதுமை
இக்குடைவரை காலமான 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகமெங்கிலும் கல்லெழுத்துக்கள் வட்டெழுத்துக்கள் மற்றும் க்ரந்த எழுத்துகளாகவே கிடைக்கின்றன. வெகு சில குடைவரை மற்றும் நடுகற்களில் மட்டுமே இன்றைய தமிழ் எழுத்தின் வரிவடிவம் கிடைக்கிறது. உதாரணமாய் வல்லம் குடைவரையைக் குறிப்பிடலாம். பாண்டிய நாட்டுப் பகுதியில் குடையப்பட்ட மலையக்கோவில், திருமயம், குடுமியான்மலை போன்ற இசைக்கல்வெட்டு உள்ள குடைவரைகளில் இறுதிப்பகுதியில் மட்டும் தமிழ் பயின்று வருகிறது. அதிலும் இக்குடைவரைகள் மலையடிக்குறிச்சி குடைவரைக்குச் சற்று பிற்காலமாய் 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுப்பப்பட்டவை. அவ்வகையில் பாண்டிய நாட்டுப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ் எழுத்துக்ளை அறிமுகப் படுத்தியவறாக சாத்தன் ஏறன் திகழ்கிறார்.
பொன்னமராவதி பகுதியில் சேவூர் எனப்படும் குறுநிலப்பகுதிக்கு அரசனாய் திகழ்ந்தாலும், பாண்டியர்களின் முதல் குடைவரையை எழுப்பிய வகையிலும், குடைவரையில் பல கட்டடக்கலை மரபினைப் புகுத்தியும், எழுத்துக்களின் வரிவடிவத்தினை மாற்றியும் எனத் தனித்து தெரிகிறார் இந்த பாண்டிய மங்கலவதி அரசனான சேவூர் கிழான் சாத்தன் ஏறன்.
(தொடரும்)

