ராமநாதபுரம் சமஸ்தானத்தில் வாரிசுரிமைப் பிரச்சனை எழுந்ததை அடுத்து அரசுக்குப் போட்டியிட்ட வாரிசுகளில் ஒருவரான தம்பி என்பவர் திருமலை நாயக்கரிடம் வந்து தாம்தான் கூத்தன் சேதுபதியின் மகன் என்றும் தமக்கு நேரடியாக வரவேண்டிய அரசை சடைக்கன் சேதுபதி அபகரித்துக்கொண்டுவிட்டார் என்றும் முறையிட்டார். அப்பகுதியின் சமூகப் பழக்க வழக்கங்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளாத திருமலை நாயக்கர், தம்பியிடம் அரசை ஒப்படைக்கச் சொல்லி இரண்டாம் சடைக்கன் சேதுபதியிடம் தூதனுப்பினார். ஆனால் அரசவைப் பிரமுகர்களும் மக்களும் தன் பக்கம் இருக்கும் தைரியத்தில் அந்தத் தூதை சடைக்கன் சேதுபதி நிராகரித்துவிட்டார். அரசு தமக்கே உரியது என்றும் தம்பியிடம் அதை ஒப்படைக்க முடியாது என்றும் திருமலையிடம் செய்தியும் அனுப்பிவிட்டார் சேதுபதி.

இதைக் கேட்டு வெகுண்ட திருமலை நாயக்கர், ராமநாதபுரம் அரசோடு போர் தொடுக்க முடிவு செய்தார். தன் தளவாயான ராமப்பையரை அழைத்து படையுடன் சென்று சேதுபதியை வென்று வருமாறும் அரசை உரிய வாரிசிடம் ஒப்படைக்குமாறும் ஆணையிட்டார். அவருக்குத் துணையாக கன்னிவாடிப் பாளையக்காரரும் மைசூர்ப் போரில் மதுரை அரசுக்கு உதவி செய்த ரங்கண்ண நாயக்கர் நியமிக்கப்பட்டார். இந்தப் போர் நடந்தது 1637ம் ஆண்டு. ஓலைச்சுவடிகளும் ஏசுசபைக் கடிதங்களும் இந்தப் போர் ராமநாதபுரம் அரசு நாயக்கருக்குக் கப்பம் செலுத்த மறுத்ததால் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால் போருக்குப் பிந்தைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது, வாரிசுரிமைச் சண்டையின் விளைவாகவே இந்தப் போர் நடந்தது என்று நாம் கருதவேண்டியிருக்கிறது.
ராமப்பையர் நாயக்கரின் படையோடு ராமநாதபுரம் சென்று போரிட்ட வரலாறு ராமப்பையன் அம்மானையில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே காண்போம்.
திருமலை நாயக்கரிடமிருந்து ஆணை வந்தவுடன் ராமப்பையர் அவரிடம் சென்று ராமநாதபுரம் அரசை ஒரு நொடியில் வீழ்த்திவிடுவேன் என்று சூளுரைத்தார். ஆனால் மதியூகியான திருமலை நாயக்கர் ராமப்பையருக்கு பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்.
வேண்டாமடா ராமா வீரியங்கள் பேசாதே
பண்டுமுன்னாள் நம்சேனை பாருலகு தானறிய
குழல்வாய்க் கிரையாக கொள்ளைக் கொடுத்தோமே
இன்று பகைத்தால் எதிர்த்தமன்னர் தான் நகைப்பார்
சேதுக்கரை தனிலே சென்றவர்கள் மீண்டதில்லை
வாளுக்கிரையிட மறவன் வலுக்காரன்
மதுரைப் படையென்றால் மதியான் மறவனும் தான்
….
உன்னுடைய வாள்திறத்தை ஒருக்காலும் எண்ணான் காண்
என்று மறவர் சீமையின் வீரத்தை எடுத்துரைத்து கவனத்தோடு ராமப்பையர் போரிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். ஆனாலும் ராமப்பையர் தன் வீரத்தைப் பற்றி விளக்கினார் திருமலை நாயக்கருக்கு
எந்தனிட வாள்திறத்தை இனிப்பாரும் மன்னவனே
திரியோதனனை சித்திர சேனன் முன்னாள்
பரிவாகத் தேர்க்காலில் பாசமுடன் கட்டுகைபோல்
அரக்கர் குலத்தை அனுமார் அறுத்தாப்போல்
நாடழித்துத் தீக்கொழுத்தி நன்னகரைப் பாழாக்கி
வெட்டிச் சிறைப்பிடித்து வேந்தன் சடைக்கனையும்
கட்டிக்கொண்டுவருவேன்
என்று சொல்லி படையுடன் புறப்பட்டார். படை மதுரையை விட்டுக் கிளம்புவதற்கு முன்னால் மன்னனும் ராமப்பையரும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்
மற்ற நாள் தானும் மன்னன் புலி ராமய்யனும்
செப்பமுடன் மீனாட்சி திருவாசல் தனில் நின்று
சிங்கார மண்டபமும் திருத்தேரு முந்தனக்கு
வங்கார மாக வயிரமுடி தங்கமுடி
மெய்யாகக் கட்டிவைப்பேன் மீனாட்சி உமையே
என்று பிரார்த்தித்துக்கொண்டனர். தன்னுடைய தமையனான வைத்தி அய்யரிடமும் ஆசி வாங்கிக் கொண்டு ராமப்பையர் ஆயிரக்கணக்கான வீரர்கள் அடங்கிய படையோடு புறப்பட்டார். வைகைக் கரையோரம் தன்னுடைய படையை நடத்தி சின்ன ராவுத்தர் பாளையம் என்ற இடத்தில் ராமப்பையர் முதலில் தங்கினார். அங்கிருந்து கிளம்பி வண்டியூர்க் கோட்டையை அடைந்து அங்கே மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டார் ராமப்பையர். அந்த இடத்தில் பாளையக்காரர் பலரும் தங்கள் படையோடு வந்து சேர்ந்தனர்.

அதை அடுத்து மதுரை நாயக்கரின் படை திருப்புவனம் என்ற இடத்தில் தண்டு இறங்கியது. அதன்பின்,
வானரவீரன் மதுரைதனில் வந்திறங்கி
ஆற்றங்கரையும் அடர்ந்த மரத்தடியும்
தோப்ப மரமும் சோலையிடம் கொள்ளாமல்
வானரவீரன் மதுரை என்ற மானாமதுரையில் வந்து இறங்கி அங்கே உள்ள தோப்புகளை அழிக்காமல் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த இடத்தில் கூடாரமடித்துத் தங்கியது ராமப்பையரின் படை. அது கிட்டத்தட்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தின் எல்லை என்பதால், அங்கிருந்து ராமநாதபுரம் அரசின் ஒற்றன் ஒருவன் அந்தப் படையின் நிலையைக் கண்டு சடைக்கன் சேதுபதியிடம் சென்று பின்வரும் தகவலைச் சொன்னான்.
கச்சித் திருமலேந்திரர்க்குக் கண்ணான ராமய்யனும்
காசனையில் வென்றதம்மை கம்பம்நட்டு செயித்தவராம்
வணங்காத பேரை வணங்கவைத்த ராமய்யனும்
மானா மதுரையிலே வளைந்தடித்தான் கூடாரம்
என்று பெரும் படையுடன் வந்திருக்கிறார் ராமப்பையர் என்ற தகவலைச் சொன்னான் ஒற்றன். இதைக் கேட்டு வெகுண்டெழுந்த சடைக்கன் சேதுபதி சொன்னது
பரம்பக் குடிக் கோட்டையிலே பட்டந்தரிப்பாரோ
துப்பாக்கி தன்னாலே சூறையிட்டேன் கண்டாயே
அறிந்திருந்தும் பார்ப்பான் அவன் படைதான் வந்ததென்றால்
இதற்குப் பயந்து வந்தாயே என்னடா தூதுவனே
பரமக்குடிக் கோட்டையைக் கூட மதுரைப் படையால் தாண்ட முடியாது என்று சொல்லி
பார்ப்பான் தனக்கு பயந்து மெள்ள நானும் இனி
கப்பமும் கட்டி கைகட்டி நிற்பேனா
என்று முழங்கினார். அதன்பின் தனக்கு அடங்கிய தலைவர்களையும் அவர்கள் படைகளையும் திரட்டிய சடைக்கன் சேதுபதி, அந்தப் படைக்கு தன்னுடைய மருமகனான வன்னித் தேவரைத் தலைவராக நியமித்தார். அந்தப் படையோடு ராமப்பையரின் சேனையை எதிர்நோக்கிச் சென்றார் வன்னித் தேவர். அரியாணிக் கோட்டையை அடைந்த சேதுபதிகளின் படை அங்கே கோட்டைக்குள் புகுந்தது. அதை அறிந்த ராமப்பையரின் படை கோட்டையை முற்றுகையிட்டது. அடுத்த நாள் இருதரப்புப் படைகளுக்கும் கடுமையான போர் மூண்டது. தமிழகத்தில் முதன் முறையாக வெடி மருந்துகளும் எரிவாணங்களும் பயன்படுத்தப் பட்டது இந்தப் போரில்தான். சேதுபதிகள்தான் அதை முதலில் பயன்படுத்தியது.
பார்ப்பான் படைமேலே பாருலகு தானறிய
எறிந்தார் எரிவாணம் எல்லையற்ற சேனையின் மேல்
போரில் வன்னித்தேவர் தன் வீரத்தைக் காட்டினார். நாயக்கர்கள் படையில் முன்னூறு பேர் இறந்தனர். சேதுபதி படையில் அறுபது பேர் உயிரிழந்தனர். அத்தோடு அன்றைய போர் முடிந்தது. முதல் நாள் போரில் பின்னடைவு அடைந்த ராமப்பையர், கோடப்பநாயக்கன், வீரமலை நாயக்கன், எட்டப்பநாயக்கன், பூச்சிநாயக்கன், சின்னணஞ்சாத் தேவன், கட்டப்பொம்மநாயக்கன், தும்பிச்சி நாயக்கன், அப்பாச்சிக் கவுண்டன், முத்தப்ப நாயக்கன், விருப்பாச்சிநாயக்கன் உள்ளிட்ட அனைத்து பாளையக்காரர்களையும் அழைத்தார். அத்தோடு தன் மாப்பிளையான திருமலை கொண்டய்யனையும் அழைத்து அடுத்த நாள் போரில் முன்னேறித் தாக்கி தங்கள் வீரத்தைக் காட்டுமாறு ஆணையிட்டார்.
ராமப்பையன் அம்மானை தரும் இந்தப் பாளையக்காரர்களின் பட்டியலைப் பார்க்கும்போது நாயக்கரின் அரசில் இருந்த அனைத்துப் பாளையக்காரர்களும் ராமநாதபுரத்திற்கு எதிரான இந்தப் போரில் கலந்து கொண்டதை அறிய முடிகிறது. அம்மானையில் சொல்லப்படுகின்ற சேதக் கணக்குகள் கொஞ்சம் அதிகம் என்றே வைத்துக்கொண்டாலும் ஒரு பெரும் படை திருமலை நாயக்கர்களின் சார்பில் போரிட்டது என்று தெரிகிறது.
மறுநாள் போரில் தன்னுடைய சேனையை பதினெட்டு வகையாக அணிவகுத்து எட்டப்பநாயக்கனையும் பூச்சி நாயக்கனையும் ராமநாதபுரம் படைக்கு நேரெதிராக நின்று தாக்குமாறு கட்டளையிட்டு மற்ற பிரிவுகளைப் பக்கவாட்டில் அணிவகுத்தான் ராமப்பையர். இதற்கு எதிராக வன்னியத்தேவர் தன் படைகளை ஐந்து வகையாகப் பிரித்து பாளையப்படைக்குள் ஊடுருவினார். அன்றைய கடுமையான போரின் இறுதியில் பாளையக்காரர்கள் படையில் மூவாயிரம் பேரும் சேதுபதிகள் படையில் முன்னூறு பேரும் மாண்டனர். மீண்டும் வெற்றியடைந்த வன்னித்தேவர், தன் படையோடு கோட்டையிலிருந்து வெளியேறி ராமநாதபுரம் சென்று சடைக்கன் சேதுபதியிடம் வெற்றிச் செய்தியைக் கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த சடைக்கன் சேதுபதி ராமப்பையருக்கு ஓலை எழுதினார். அதில் பிராமணன் என்பதால் ராமப்பையரைக் கொல்வதில்லை என்றும் அதற்குப் பதிலாக கண்ணைப் பிடுங்கிக் காட்டில் ஓட்டப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஓலையைப் படித்து ஆத்திரமடைந்த ராமப்பையர், தனது படையோடு முன்னேறி ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள போகலூர்க் கோட்டையை முற்றுகையிட்டார். போகலூரில் ஏற்பட்ட கடும்போருக்கு அடுத்து இருதரப்புப் படைகளும் அரியாசைபுரம் என்ற இடத்தில் மோதிக்கொண்டன. இங்கே சடைக்கன் சேதுபதியே நேரடியாகப் போருக்கு வந்தார். அந்தப் போரில் ராமப்பையரின் படைகள் சடைக்கனின் படைகளை வளைத்துக்கொண்டன. போரில் சடைக்கன் சேதுபதி படுகாயமுற்றார்.
காயமது பட்டுக் கலங்கியே சடைக்கனுந்தான்
என்மருகா வன்னி யினிவந்து கூடுமென்றான்
காயம் பட்ட சடைக்கன் சேதுபதி வன்னியை தனது உதவிக்கு அழைத்தார். மாமனைப் பார்த்துக் கலங்கிய வன்னித் தேவர், சேதுபதியையும் மீதியுள்ள படைகளையும் திரட்டிக் கொண்டு ராமேஸ்வரம் தீவுக்குச் சென்றார். இதுவரை நடந்தவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது முதலில் ராமநாதபுரம் படைகள் வெற்றியை அடைந்தாலும் அதன்பின் அவர்களுக்குச் சேதம் அதிகமாகவே இருந்தது என்பதைக் கணிக்க முடிகிறது. அதனாலேயே அவர்கள் பின்வாங்கி பாதுகாப்பான இடமான ராமேஸ்வரம் தீவுக்குச் செல்ல நேரிட்டது. பலத்த சேதம் அடைந்தாலும் படைபலம் அதிகம் என்பதால் ராமப்பையர் தன் படைகளைச் சோர்வடையாமல் நடத்தி போகலூரைத் தாண்டிக் கொண்டு சென்றார்.
இங்கு குறிப்பிட்டவை எல்லாம் ஏதோ கதைப்பாடல் என்றோ வரலாற்றில் நடந்த சம்பவங்கள் அல்ல என்றோ நினைத்துவிட வேண்டாம். கீழைநாட்டு ஓலைச்சுவடிகள், ஏசு சபைக் கடிதங்கள் ஆகியவற்றில் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் இவை. உதாரணமாக டெய்லர் தொகுத்த கீழை நாட்டு ஓலைச்சுவடிகளில் பின்வருமாறூ கண்டிருக்கிறது.
“அப்போது கூத்தன் சேதுபதி குமாரன் தளவாய் சேதுபதி, சடைக்கத் தேவனென்றும் அவருக்கு இரண்டு நாமகரணம். அஞ்தச் சடைக்கத் தேவனென்கிறவர் அரமனைக்குப் பணமும் குடாமல் நிகாரித்து ரெம்பத் துற்மாற்கங்களாய் நடப்பித்துக் கொண்டு வந்தார்கள். அது சமாசாரம் இராசா திருமலை நாயக்கர் கேட்டு அவருக்குத் தாகிதையாய் நிருபம் எளுதி அனுப்பிவிச்சார்கள். அந்த நிருபத்தையும் தள்ளிப்போன மனுசரையுமடித்துக் கோபம் வைத்துத் தளவாய் இராமப்பய்யரையும் சகல தளமும் யெளுபத்திரண்டு பாளைய காரரையும் அனுப்பி இராமனாதபுரத்து வரைக்குஞ் சண்டை பண்ணிக் கோட்டையை விட்டுப்போட்டு சடைக்கத் தேவர் ராமேசுபரத்தில்ப் போயிருந்தார்.” (Taylor’s Oriental Historical Manuscript Volume II, Page 24-26)
சேதுபதிகளின் படை அவர்களின் அரசனான சடைக்கத் தேவருடனும் படைத்தலைவனான வன்னித் தேவருடனும் வலுவான அரணான ராமேஸ்வரம் கோட்டைக்குள் சென்றதைக் கண்ட ராமப்பையர் அத்திபுத்திக் கோட்டையில் வந்து இறங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார். அப்போது திருமலை நாயக்கரிடமிருந்து அவருக்கு ஒரு ஓலை வந்தது. அதில் ராமநாதபுரத்தோடான போரை நிறுத்துமாறும் உடனே படைகளோடு தலைநகர் திரும்புமாறும் கண்டிருந்தது. திருமலை நாயக்கர் இப்படி ஒரு ஓலை அனுப்ப என்ன காரணம்?
(தொடரும்)
*இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள வரிகள், ‘ராமப்பையன் அம்மானை’, சென்னைப் பதிப்பைச் சேர்ந்தவை. From ‘Ramaiyan Ammanai’, Madras Government Oriental Series – No. XLV
Namaskaram Sir Each and every detail you present is awesome, informative, and mostly not taught in our curriculum.A big applause and hearty Dhanyawaada for your meticulous efforts.