Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிராக நடந்த போரில் தளவாய் நரசப்பையாவின் உதவியால் வெற்றி பெற்ற மங்கம்மாள், தன்னுடைய படை பலத்தைப் பெருக்கத் தொடங்கினார். சுற்றிலும் எதிரிகள் இருக்கும் நிலையில் ஔரங்கசீப்பின் உதவியை மட்டும் நம்பியிருப்பது நீண்டகாலத்திற்கு உதவாது என்ற நிதர்சனத்திற்கு அவர் விரைவில் வந்துவிட்டதை இது காட்டியது எனலாம். அதற்கேற்றபடி, மீண்டும் தஞ்சை மராட்டியரின் படைகள் ஷாஜியின் தலைமையில் அவருக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தன. அதற்குக் கிழவன் சேதுபதியின் ராமநாதபுரம் படைகளும் உதவி செய்தன. மதுரை அரசின் எல்லைப்புற கிராமங்கள் பலவற்றை மராட்டியப் படை கைப்பற்றியது. இதனால் வெகுண்ட மங்கம்மாள், 1700ம் ஆண்டு தளவாய் நரசப்பையாவின் தலைமையில் ஒரு படையை மராட்டியருக்கு எதிராக அனுப்பினார். திருச்சியிலிருந்து படையுடன் கிளம்பிய நரசப்பையா, நேரடியாக தஞ்சைக்குச் செல்லாமல் கொள்ளிடத்தின் வடகரை வழியாக வீரர்களை நடத்திச் சென்றார். தஞ்சாவூருக்கு நேர் வடக்கில் கொள்ளிடத்தின் வடக்குப் புறமாக தண்டு இறங்கிய தளவாய், தஞ்சைப் படைகளின் வலிமையைக் கவனித்தார். ஆற்றைக் கடந்து தஞ்சைப் படையை நேரடியாக எதிர்கொள்வது தற்கொலைக்குச் சமானம் என்பதை உணர்ந்த அவர், இன்னும் சிறிது தூரம் கிழக்கே சென்று ஆற்றின் நீரோட்டம் குறைவாக இருந்த பகுதியில் கொள்ளிடத்தைக் கடந்து கிழக்கிலிருந்து தஞ்சைப் படைகளைத் தாக்கினார்.

இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பாராத தஞ்சைப் படைகள், தங்கள் அரண்களை விட்டு வந்து நரசப்பையாவின் படையோடு மோதின. அவர் செய்ததைப் போல, தாங்களும் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்த தஞ்சைப் படைகளின் தலைவன், ஆற்றைக் கடந்து சுற்றிவந்து மதுரைப் படைகளைப் பின்புறமிருந்து தாக்க முடிவுசெய்தான். ஆனால் இந்தப் பகுதிகளைப் பற்றி அதிகம் தெரியாத மராட்டிய வீரர்கள் ஆற்றைக் கடக்கத் தேர்ந்தெடுத்து வெள்ளம் அதிகமாகச் செல்லும் இடத்தை. அதன் காரணமாக குதிரைகளும் வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த தஞ்சைப் படைகள் சிதறி ஓடின. அதற்குள் அந்தப் படைக்குள் புகுந்த தளவாய் நரசப்பையாவின் மதுரைப் படைகள் அவர்களை நிலைகுலையச் செய்தன.

போரில் தோற்று தஞ்சை நோக்கி ஓடின மராட்டியப் படைகள். தனக்கு நேர்ந்த இந்தப் படுதோல்வியை ஷாஜியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இதற்குத் தனது தளபதியான வாகோஜி பண்டிதர்தான் காரணம் என்று நினைத்த ஷாஜி அவரைப் பலவாறு நிந்தித்தார். மக்களும் படைத்தளபதியைத் தூற்ற ஆரம்பித்தனர். அதனால் வருத்தமடைந்த வாகோஜி, தஞ்சை மன்னரான ஷாஜியைச் சந்தித்தார். மதுரையோடு சமாதானம் செய்ய தமக்கு ஒரு வாரம் தேவை என்று அவகாசம் கேட்ட அவர், அதற்குள் மதுரைப் படைகளோடு சமாதானம் செய்ய முடியாவிட்டால் தாம் தமது உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் சபதம் செய்தார். இதற்கு ஷாஜி ஒப்புக்கொள்ளவே, உடனடியாக பணம் திரட்ட ஆரம்பித்தார் வாகோஜி.  மக்களிடமிருந்தும் பெரு வணிகர்களிடமிருந்தும் பணம் வசூலிக்கப்பட்டது. அரண்மனைக் கஜானாவிலிருந்தும் பெரும் பணம் எடுக்கப்பட்டது.

நான்கு நாட்களுக்குள் பெரும் தொகையைத் திரட்டிய வாகோஜி அதைக் கொண்டு மதுரையின் படைத்தலைவர்கள் பலருக்கு லஞ்சம் கொடுத்தார். தளவாய் நரசப்பையாவின் தந்தையைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை.  ஆனால் நரசப்பையாவிற்கு இது ஏதும் தெரியாத நிலையில் தஞ்சை மீதான தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், மதுரைப் படைத்தலைவர்களும் பிரமுகர்களும் தஞ்சையோடு சமாதானமாகப் போகுமாறு அவரை வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் சமாதானத்திற்கு இசைந்தார் நரசப்பையா. இதன்மூலம் தஞ்சைக்கு நேரவிருந்த பெரும் அவமானத்திலிருந்து அந்த அரசை வாகோஜி காப்பாற்றினார்.

தஞ்சையோடு மதுரை நாயக்க அரசு செய்துகொண்ட இந்தச் சமாதானம் இன்னொரு வகையில் மங்கம்மாளுக்கு உதவி செய்தது. காவிரி ஆற்றின் நீரைத் தானே பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்த மைசூர் அரசன் சிக்கதேவராயன் தமிழகத்திற்குக் காவிரி நீர் செல்வதைத் தடுப்பதற்காக ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையைக் கட்டினான். அதன் காரணமாக காவிரி ஆறு தமிழகத்திற்கு வருவது நின்றது. தமிழ்நாட்டின் பாசனப் பகுதிகள் இதனால் பெரும் அவதிக்குள்ளாயின காவிரி திடீரென்று வறண்டதற்கான காரணத்தை முதலில் அறியாத மங்கம்மாள், அதன்பின் தூதர்கள் உதவியுடன் அதன் காரணத்தை அறிந்துகொண்டார்.. மைசூர் அரசனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பிய மங்கம்மாள், தஞ்சை ஷாஜிக்கு தூது அனுப்பினார். இருவரும் இணைந்து மைசூரைத் தாக்கத் தீர்மானித்தனர். இருதரப்புப் படைகளும் கர்நாடகாவை நோக்கிப் பயணப்பட்டன. ஆனால் நல்வாய்ப்பாக பெருமழை பெய்து காவிரியில் வெள்ளம் வந்தது. அதனால் மைசூர் அரசன் கட்டிய அணை அடித்துச் செல்லப்பட்டு உடைந்தே போனது. இதனால் மைசூர் அரசன் நினைத்தது நடக்காமல் போனது ஒருபுறமிருக்க, மதுரைக்கும் தஞ்சைக்குமான உறவு பலப்பட்டது.

இப்படித் தொடர்ந்து கிடைத்த வெற்றிகளால் தூண்டப்பட்ட மங்கம்மாள் அகலக்கால் வைத்தார். தஞ்சைப் படையெடுப்பின் போது ஷாஜிக்கு உதவி செய்த கிழவன் சேதுபதியையும் வெற்றிகொள்ள நினைத்த அவர், தளவாய் நரசப்பையாவின் தலைமையில் மதுரைப் படையை ராமநாதபுரம் நோக்கி 1702ம் ஆண்டு அனுப்பிவைத்தார். சேதுபதிக்கு உதவியாக தஞ்சைப் படைகள் இந்த முறை வராது என்றும் அதனால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கணக்கிட்டார் மங்கம்மாள். ஆனால் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த கிழவன் சேதுபதிக்கு ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ போல மதுரைப் படைகளே தன்னை எதிர்த்து வருவது நல்வாய்ப்பாக அமைந்தது.

இருதரப்புப் படைகளுக்கும் இடையே ராமநாதபுரத்திற்கு அருகே நடந்த போரில் தளவாய் நரசப்பையா கொல்லப்பட்டார். கிழவன் சேதுபதி பெருவெற்றி பெற்று ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெற்றதாக அறிவித்து மதுரைக்குக் கப்பம் கட்டுவதை முழுமையாக நிறுத்திவிட்டார். இதன்மூலம் ராமநாதபுரம் பகுதி மதுரை நாயக்கர்களிடமிருந்து விடுபட்டது. தொடர்ந்து போர்களில் ஈடுபட்டிருந்ததால் களைப்படைந்ததே மதுரைப் படையில் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று சத்தியநாதய்யர் கருதுகிறார். ஆனால் சேதுபதி கிட்டத்தட்ட 50000 வலிமையான வீரர்களை ஒரே வாரத்தில் திரட்டி எண்ணிக்கையில் அதிகமான சேதுபதிகளின் படையை மதுரைச் சேனைகளோடு மோதவிட்டதே இந்த வெற்றிக்குக் காரணமென்று பலர் கூறுகின்றனர். மதுரையிலிருந்து விடுதலை அடைந்த கிழவன் சேதுபதி தன்னுடைய கோட்டைகளைப் பலப்படுத்தினார். 1709ம் ஆண்டு தஞ்சை மீது படையெடுத்து புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த பல ஊர்களை ராமநாதபுரத்தோடு இணைத்துக் கொண்டார் சேதுபதி. அவரை எதிர்க்க முடியாமல் மங்கம்மாள் சும்மா இருக்க வேண்டியதாயிற்று.

தன்னுடைய நாட்டில் முக்கியமான பகுதிகளை இழந்து பெரும் வீரரான நரசப்பையாவையும் போரில் இழந்த மங்கம்மாள், அதன்பின் அறப்பணிகளில் கவனம் செலுத்தினார். பல அறக்கட்டளைகளைத் தோற்றுவித்த மங்கம்மாள், நாடெங்கும் பல சத்திரங்களைக் கட்டினார். பல கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். சாலைகளைச் செப்பனிட்டு ஆங்காங்கே மக்கள் உண்பதற்கும் தங்குவதற்கும் அன்னசத்திரங்களும் அமைத்தார். திருச்சியில் உள்ள பல கட்டடங்கள் மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்டவைதான். மதுரையில் முன்பு இருந்த மத்திய சந்தைக் கட்டடம் அவரால் கட்டப்பட்டது ஆகும். பொயு 1700 வருடத்தைச் சேர்ந்த அவரது கல்வெட்டு ஒன்று பாலகிருஷ்ண மகாதனபுரத்தை அவர் அந்தணர்களுக்குத் தானம் செய்ததைப் பற்றிக் கூறுகிறது.  1701ம் வருடத்தைச் சேர்ந்த அவரது கல்வெட்டு ஒன்று சுப்பையா பாகவதருக்கு அவர் அன்னதானம் கட்டுவதற்கு அளித்த நிலக்கொடையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. நீர்ப்பாசன வசதிகளையும் சீர்படுத்திய மங்கம்மாள், உய்யக்கொண்டான் கால்வாயில் மதகு ஒன்றை அமைப்பதற்காகக் கொடுத்த நிவந்தத்தைப் பற்றிய விவரங்கள் 1704ம் ஆண்டுக் கல்வெட்டில் உள்ளது.

மற்ற சமயங்களையும் மங்கம்மாள் சமயப் பொறையுடன் நடத்தினார் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. சேதுபதி சீமையில் கிறித்துவ மதம் அச்சுறுத்தப்பட்ட போது மதுரை அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. மதுரை அரசின் கீழ் ராமநாதபுரம் இருந்தபோது அங்கே சிறையில் வாடிய மெல்லோ பாதிரியாரை விடுவிக்க மங்கம்மாள் உத்தரவிட்டு அவரைப் பாதுகாப்பாக மதுரைக்குக் கொண்டுவந்தார். போலவே தஞ்சை அரசர் அங்கிருந்த கிறித்துவர்களை வெளியேற்றியதுமில்லாமல், மதுரை அரசுக்கும் உடையார்பாளையம் அரசுக்கும் கிறித்துவர்களை வெளியேற்றுமாறு கடிதம் எழுதியிருந்தார். அப்படிச் செய்யாவிட்டால் ஹிந்துக் கோவில்களுக்கு அபாயம் ஏற்படும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை மங்கம்மாள் ஏற்றுக்கொள்ளவில்லை. “எப்படி அரிசிச்சொறு உண்பவர்களையும் இறைச்சி உண்பவர்களையும் நாம் சமமாக நடத்துகிறோமோ அப்படியே அனைவருக்கும் அவரவர் விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு” என்று கூறி அவர் பதில் கடிதம் எழுதியதாக ஏசு சபைக் கடிதம் ஒன்று கூறுகிறது.

மதுரையில் மதப்பிரச்சாரம் செய்துவந்த பூஷே என்ற பாதிரியாருக்குப் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. அவரை வெளிநாட்டவர் என்றும் பாதிரியார்கள் பெரும்பணம் சம்பாதித்தாலும் அரசுக்கு வரி ஏதும் செலுத்துவதில்லை என்றும் உள்ளூர்க்காரர் ஒருவரை பூஷே கொன்றுவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பயந்துபோன பூஷே தளவாய் நரசப்பையாவைச் சென்று பார்த்தார். தளவாயைப் பற்றி பலவிதமாகப் புகழ்ந்துபேசி அவரது மனதை வென்ற அவர் தமக்குப் பாதுகாப்பு வேண்டி மங்கம்மாளுக்குச் சொல்லும் படி நரசப்பையாவிடம் கோரிக்கை விடுத்தார். வெளிநாட்டவர்கள் என்றாலே வெறுக்கும் நரசப்பையா பூஷேவின் புகழுரைகளால் மயங்கி மங்கம்மாளிடம் இதைப் பற்றிச் சொல்லி பாதிரிக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி ஆவன செய்தார். அதுமட்டுமல்லாமல் பூஷே பாதிரியார் தளவாயின் ஆணைப்படி மதுரை நகரத் தெருக்களில் ஊர்வலமாகவும் கொண்டு செல்லப்பட்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடங்கியது. கிறித்துவர்களை மட்டுமல்லாமல் இஸ்லாம் மதத்தையும் ஆதரித்த மங்கம்மாள், தர்கா ஒன்றுக்கு நன்கொடை அளித்திருக்கிறார்.

இப்படிப் பல அறச்செயல்களைச் செய்து மதுரை அரசை முழுவதுமாக அழிந்துவிடாமல் கட்டிக்காத்த மங்கம்மாளின் கடைசிக்காலம் துன்பம் மிக்கதாக இருந்தது. கணவனையும் அதற்கு அடுத்ததாகக் குறுகிய காலத்தில் தன்னுடைய மகனையும் இழந்தாலும் மனம் தளராமல் தனி ஒரு ஆளாகப் பேரனை வளர்த்த மங்கம்மாள், பல வித அவதூறுகளுக்கு ஆட்பட்டார். அதை அவரது நாட்டு மக்களே செய்ததுதான் விந்தை. நரசப்பையாவின் மறைவிற்குப் பிறகு தளவாயாகப் பொறுப்பேற்ற அச்சையாவோடு அவர் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் மக்கள் அவரைத் தூற்றியதாகவும் நெல்சன் குறிப்பிடுகிறார். மங்கம்மாளோடு அச்சையா இருந்த உருவப்படம் ஒன்றைக் காட்டி அதில் அச்சையா பலவித ஆபரணங்களை அணிந்திருந்த காட்சியை அதற்கான சாட்சியாக அவர் கருதுகிறார். இந்த முறையற்ற உறவின் காரணமாக கடைசி இரண்டு ஆண்டுகளில் பல பிரச்சனைகளை மங்கம்மாள் சந்தித்தார் என்கிறார் அவர். தனது பேரன் உரிய வயதை அடைந்தவுடன் அரசை அவனிடம் ஒப்படைக்க மங்கம்மாள் மறுத்ததாகவும் அதனால் மக்கள் ஆத்திரம் அடைந்ததாகவும் இன்னொரு வதந்தி உலவியது. அதனால் மங்கம்மாள் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் தனது கடைசிக்காலத்தை அவர் சிறையில் கழித்து மாண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்குச் சாட்சி ஏதும் இல்லை என்கிறார் நெல்சன். இதைப் பற்றி ஏசு சபைக் கடிதங்களும் ஏதும் கூறவில்லை.

சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து பலவீனமடைந்து  மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கரின் குறுகிய கால ஆட்சியின் இறுதியில் கிட்டத்தட்ட நிலைகுலைந்து போன மதுரை நாயக்க அரசை ஓரளவு மீட்டெடுத்து சீரமைத்த பெருமை ராணி மங்கம்மாளைச் சேரும். அவரது போர்த்திறமையை விட அவர் செய்த அறச்செயல்கள் காலத்திற்கும் அவர் பெயரைக் கூறிக்கொண்டு நிலைத்திருக்கின்றன. சுமார் 19 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர் 1706ம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார். அதன்பின் அவரது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

1 thought on “மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்”

  1. மதுரையின் சரித்திரம்்மற்றும் ரானி மங்கம்மாவின் சரித்திரத்தை எழுதி பகிர்ந்ததுக்கு நன்றி. அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிரேன் 🙏

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *