எட்டாம் தேதி மதியம் இரண்டு மணியளவில் வூசங் என்ற இடத்தை அடைந்தோம்; விரைவில் அனைத்துப் பயணிகளும் நீராவிப் படகு ஒன்றுக்கு மாறினோம். அந்த நதியின் கரையில்தான் ஷாங்காய் நகர் அமைந்துள்ளது. அந்நகரம் நோக்கிப் புறப்பட்டோம். அந்த நதியில் பல தேசங்களின் கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. அங்கு நின்றிருந்த சில அமெரிக்கப் போர்க்கப்பல்கள் கவனத்தை ஈர்த்தன.
மாலை ஆறு மணிக்கு ஷாங்காய் நகரை அடைந்தோம். நேராக அஸ்டோர் ஹவுஸ் ஹோட்டலுக்குச் சென்றோம். அந்த இடத்தில் மிகப் பெரிய ஹோட்டல் அதுதான். ஆனால், கெடுவாய்ப்பாக எங்களுக்கு அங்கு அறைகள் கிடைக்கவில்லை. அதனால், நகரின் உள்பகுதிக்குச் சென்றோம்; இறுதியில், ‘பிரெஞ்சு கன்செஷன்’ என்று சொல்லப்படும் நகரின் பிரெஞ்சுக் குடியிருப்புப் பகுதியில் ‘ஹோட்டல் டெஸ் காலனி’யில் ஓரளவு நல்ல அறைகள் கிடைத்தன. அடுத்த நாள், அந்த இடத்தை பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சுற்றிப் பார்க்கச் சென்றேன்.
ஷாங்காய் பெரிய வணிக மாநகரம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் மக்கள் தொகை 700,000 (1900களில்). அதில் பெரும்பாலோர் சீனர்கள். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் சேர்ந்து சுமார் 8000 பேர் இருப்பார்கள். கிட்டத்தட்ட ஐரோப்பாவின் அனைத்துத் தேசத்தினரும் அங்கு வசித்தனர்; ஆனால், ஆதிக்கம் செலுத்துபவர்கள் ஆங்கிலோ-சாக்ஸன் இனத்தவர் என்பது கவனிக்கத்தக்கது. அதன் அரசாங்கம் அநேகமாக உலகிலேயே மிகவும் ஆர்வமூட்டுவது. அந்த இடத்துக்கு வரும் அந்நியர் எவரும் முதலில் யாருடைய நாட்டில், எந்த நாட்டின் சட்டத்தின் கீழ் வாழ்கிறோம் என்பது தெரியாமல் திகைத்து நிற்பார்கள். உண்மையில், ஷாங்காய் சீன மண்ணில்தான் இருக்கிறது. அதேநேரத்தில், அதன் நகராட்சி சர்வதேசத் தன்மையுடன் இருக்கிறது.
அங்கு வசிக்கும் பல்வேறு தேசத்தவரையும் அவர்கள் நாட்டின் நீதிமன்றங்களே விசாரிக்கின்றன; நீதி வழங்குகிறன. இத்தகைய கலவையான ஆங்கிலேய நீதிமன்றம் (ட்ரிப்யூனல்) ஒன்றின் நடவடிக்கைகளைப் பார்க்கச் சென்றிருந்தேன். இருக்கையில் ஆங்கிலேய மாஜிஸ்ட்ரேட் ஒருவரும் சீன மாஜிஸ்ட்ரேட் ஒருவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்; இருவரும் சேர்ந்தே அவர்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த குற்றவாளிகளை விசாரித்தனர். நடவடிக்கைகள் சுழற்சி முறையில் நடைபெற்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு சந்தர்ப்பத்தில் சீன மாஜிஸ்ட்ரேட் ஜெர்மானியருடன் அமர்ந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் அவரது சக நீதிபதியாகப் பிரெஞ்சுக்காரர் ஒருவர் இருப்பார்; இப்படி அது போகும். இருப்பினும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆங்கிலேய இனத்தின் மீதிருக்கும் பிரதான அக்கறை காரணமாக அவர் ஆங்கிலேய நீதிபதியுடன் அடிக்கடி அமர்கிறார்.
ஷாங்காய் மாநகரத்தின் அயல்நாட்டவர் குடியிருப்பு என்று சொல்லப்படும் பகுதியில் மட்டுமே இந்தக் கலவையான நீதிமன்ற நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளன; கட்டுப்படுத்தவும் செய்கின்றன. ஷாங்காய் மாநகரத்தின் பிரதான பகுதி சீன அதிகாரிகளின் அதிகார வரம்பில்தான் இருக்கிறது.
நான் அங்கு சென்றிருந்தபோது ஆங்கிலேய மாஜிஸ்ட்ரேட், அவரது சகாவான சீன நீதிபதிக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். மயிற்பீலியும் பெரிய மணிகளால் கோக்கப்பட்ட கழுத்தணியும் அவர் அணிந்திருந்தார். மாண்டரின் மொழி பேசும் மேற்குடி மனிதராக இருக்கலாம். நீதிமன்றத்துக்குள் நான் மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டேன். நீதிபதியின் இருக்கையருகில் கௌரவமாக நானும் அமர வைக்கப்பட்டேன். நடந்தவை அனைத்தையும் எளிதாக என்னால் பார்க்க முடிந்த வசதியான இடம். உரையாடல்களையும் கேட்க முடிந்தது. விசாரணைக்கான ஏற்பாடுகளும், நடந்த விதமும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.
நீதிமன்றத்துக்குள் கொண்டுவரப்படும் குற்றவாளிகள் சீக்கிய போலிஸ்காரர் ஒருவரது பொறுப்பில் இருக்கின்றனர். வழக்கறிஞர்களும் வக்கீல்களும் ஆங்கிலேயராகவோ சீனராகவோ இருக்கின்றனர். அவர்களது தேசத்தின் மொழியிலேயே கட்சிக்காரர்களுக்கு அவர்கள் வாதிடுகின்றனர்; வழக்குகள் பற்றிய குறிப்புகளை மாஜிஸ்ட்ரேட்டுகள் அவரவர் மொழியிலேயே எழுதுகின்றனர்; இறுதியாக முடிவு எடுக்கின்றனர்; பரஸ்பரம் நீதிபதிகள் இருவரும் ஏற்றுக்கொண்ட பின்னரே முடிவு மன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. நான் அங்கிருந்தபோது விசாரிக்கப்பட்ட வழக்கு சற்று நீளமானது; ஆகவே அதன் முடிவு தெரியும்வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. சிறையையும் வேறு இடங்களையும் பார்க்க வேண்டியிருந்தது.
காவலர்கள் பெரும்பான்மையாக ஆங்கிலேயர்களாக, சீக்கியர்களாக, சீனர்களாக இருக்கின்றனர்.
பிரெஞ்சுக்காரர்களுக்கு நகராட்சியில் தனிப்பகுதி இருக்கிறது. அந்த நகரப் பகுதி, பிரெஞ்சு சட்டங்களால், அவர்களது கான்சல் ஜெனரலால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தப் பகுதி ‘பிரெஞ்சு கன்செஷன்’ என்று அழைக்கப்படுகிறது. உத்தேசமாக, அங்கு நானூறு பிரெஞ்சு மக்கள் வசிக்கிறார்கள்.
நதியை நோக்கிய சாலையொன்றில் சுமார் மூன்று மைல் தூரம் பயணித்தோம். செல்லும் வழியில் சில மிக அழகான அரசாங்கக் கட்டடங்களைப் பார்த்தோம். அதன்பின் நான்கின் சாலை; அந்த வீதியிலிருந்த ஐரோப்பியர்களின் கடைகள் எங்கள் கவனத்தை ஈர்த்தன. ஒருவர் விரும்பக்கூடிய அனைத்து வகையான பொருட்களையும் அங்கு பார்க்க முடிந்தது. அடுத்ததாக மேற்கொண்ட ஒரு நல்ல பயணத்துக்குப்பின், பபுள் வெல் சாலையை அடைந்தோம். ஐந்து மைல் நீளம் கொண்ட அந்தச் சாலை பெரிய குதிரைப்பந்தய மைதானம் ஒன்றையும் கேளிக்கை விடுதிகளையும் சுற்றியபடி சென்றது. செல்வம் மிகுந்த ஐரோப்பிய, சீன வியாபாரிகளுக்கு சொந்தமான அசாதாரண அழகுடன் விளங்கும் இரண்டு மாடி குடியிருப்புகள் இந்தச் சாலையின் ஓரம் அமைந்திருந்தன.
ஷாங்காயில் தங்கியிருந்தபோது, ஓர் இசை நிகழ்ச்சிக்கும் சென்றேன். பிரபலமான பிரெஞ்சு பாடகர். அவரது இசை நிகழ்வு சபையினரை மகிழ்வித்தது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் குத்துச் சண்டை ஒன்றையும் பார்த்தேன். துறைமுகத்தில் நின்றிருந்த ஆங்கிலேய மற்றும் அமெரிக்கப் போர்க் கப்பல்களின் மாலுமிகளுக்கு இடையில் நடந்தது. போட்டியிட்ட இருவரையும் மிகவும் உற்சாகத்துடன் அனைவரும் ஆதரித்தனர். ஆனால், கூட்டம் மிகவும் வெறித்தனத்துடன் நடந்துகொண்டது. என் ரசனைக்கு உகந்ததாக இல்லை.
ஷாங்காய் நகரத்தின் ‘ஃபாரின் கன்செஷன்’ பகுதியை ஒட்டியிருந்த சீன நகரப்பகுதிக்கு 16ஆம் தேதி சென்றேன். ஆர்வத்துடன் சென்று பார்க்கத் தகுதியான இடம்தான்; எனினும், இதுவரையில் எனது சுற்றுப் பயணத்தில் கிடைத்த மகிழ்ச்சி அனைத்தும் வடிந்துபோகும் அளவுக்கு மிகவும் அருவருப்பான இடமாகத் தோன்றியது. எதிர்கொண்ட பலவகை துர்நாற்றத்தையும் தீவிரமான வீச்சத்தையும் சொற்களால் விவரிக்கமுடியாது. வேறுவழியின்றி கைக்குட்டைகளால் மூக்கைத் தொடர்ச்சியாக மூடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். ஒரு ரிக்ஷாகூட செல்லமுடியாத அளவுக்கு மிகவும் குறுகலான தெருக்கள்; நாங்கள் நடந்தே சென்றோம்.
அங்கிருந்த கடைகளில் காணப்பட்ட அரிதான பொருட்கள், ஆர்வமூட்டின; கவனத்தை ஈர்த்தன. பெரும் எண்ணிக்கையிலும் எண்ணற்ற வகைகளிலும் அவை இருந்தன. அவற்றில் சிலவற்றை வாங்கினேன். ஒரே விலை என்ற சூழல் அங்கே நிலவவில்லை. அந்த வகையில் உலகெங்கும் இருக்கும் கீழ்த்திசை மனிதர்களைப் போலவே சீனர்களும் இருந்தனர். விற்பனை செய்ய ஆர்வம் இல்லாததுபோல் கடைக்காரர்கள் தோன்றினர். வாடிக்கையாளர்களை நடத்துவதில் ஒருவிதத்தில் சுதந்திரமான அணுகுமுறை அவர்களிடம் இருந்தது. நடந்து செல்லும் பாதையில் தேநீர்-இல்லங்கள் சிலவற்றைக் கவனித்தோம். மக்கள் சிறிய கோப்பைகளில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். நம்மிடம் காணப்படும் வழக்கம்போல் பாலும் சர்க்கரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அகலம் குறைவான பெஞ்சுகளில் அமர்ந்திருந்த அவர்களுக்கு முன்னால் இருந்த மேஜைகளில் தேநீர்க் கோப்பைகள் வைக்கப்பட்டிருந்தன.
நான் கேள்விப்பட்ட அளவில் சீன சமையற்கலையில் பரிந்துரைப்பதற்கு இங்கு ஏதுமில்லை. அவர்களது பதார்த்தங்கள் சில ரசனை மற்றும் வாசனை உணர்வுகளுக்கு எதிரானவை. எடுத்துக்காட்டாக, அவர்களது கோழிக்கறி தயாரிப்பு முறை; மிகவும் புகழப்படும் அந்த முறையைப்பற்றி என்னிடம் கூறினார்கள்; சமைக்கப்பட்டு உணவு மேஜைக்குக் கொண்டு வரப்படுவதற்குமுன் அந்தக் கோழி ஆறு மாதங்கள் புதைத்து வைக்கப்படுமாம்!
நாங்கள் பார்த்த மற்றொரு மிகவும் சுவாரஸ்யமான இடம் ஓபியம் சுவைக்கும் தனியிடம்; போதையின் பல்வேறு நிலைகளிலிருந்த மனிதர்களை அங்கு பார்க்க முடிந்தது. ஒருவகையான இன்ப நிலைக்காக சில நேரங்களில் சீனர்கள் தெரிந்தே கணிசமான அளவு ஓபியம் எடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு ஆழ்ந்த உறக்க நிலையில் தன்னிலை மறந்த மயக்க நிலையில் அவர்களை அது வைக்கிறது. இதைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டால் இழிநிலைக்கு ஆளாவோம் என்பதை நம்பாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஏற்க வைப்பதற்குப் போதை மருந்தின் தாக்கத்தில் இப்படி வீழ்ந்து கிடப்போரைக் காட்டலாம்.
மதியத்துக்கு மேல், பிரிட்டிஷ் கான்சல் ஜெனரல் திரு. மான்ஸ்ஃபீல்ட் என்னைச் சந்திக்க வந்தார். கண்ட்ரி க்ளப்புக்கு அழைத்துச் சென்றார். ஓர் அழகிய பூங்காவின் நடுவில் அந்த க்ளப் அமைந்திருக்கிறது. பரந்தும் விரிந்தும் காணப்பட்ட அந்த இடத்தில் விருந்தினர்கள் அமர்ந்து பேச வசதியான நேர்த்தியான அறைகள் இருக்கின்றன.
ஷாங்காய் நகரில் தினமும் பல செய்தித்தாள்கள் வெளியாகின்றன: சில ஆங்கிலேயர்கள் நடத்துபவை; ஒன்று அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது; ஒன்று பிரெஞ்சு மற்றொன்று ஜெர்மன். இந்தியாவில் காணப்படுவதைக் காட்டிலும் அமெரிக்காவில் இன்று நடைமுறையிலிருக்கும் இதழியல் பாணியைத்தான் அவை பின்பற்றுகின்றன. உலகத்தின் பல்வேறு பகுதிகளின், ஆர்வமூட்டும் அனைத்து வகைச் செய்திகளும் அந்த நாளேடுகளில் நிரம்பியுள்ளன. அவை பெயர் பெற்றிருக்கும் அனைத்துவித புது முயற்சிகளும் நிரம்பியவையாக அமெரிக்கச் செய்தித்தாள்கள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே செய்தித்தாள்கள் ஆர்வமூட்டும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள் என்ற வறட்சியான செய்திகளையும், இந்திய நகரங்கள் குறித்த ஆர்வமூட்டாச் செய்திகளையும் படித்தபின், இந்த நகரத்தில் நன்கு நடத்தப்படக்கூடியதும் உற்சாகம் தரக்கூடியதுமான அவ்வப்போதான புதிய செய்திகளுடன் வெளிவரும் நாளேடுகளைப் பார்க்கையில் மனத்துக்குப் புத்துணர்ச்சியாக இருந்தது.
சீன நாடக அரங்குக்கு ஓரிரவு சென்றேன். அது சுவாரஸ்யம் மிகுந்த இடம். நாடக அரங்குகளில் வழக்கமாகப் பார்க்கக்கூடிய ‘பாக்ஸ்’ மற்றும் ‘பிட்’ ஆகியன இங்கும் இருந்தன. நிகழ்ச்சியின் இடையில் பார்வையாளர்கள் தேநீர் அருந்தினர்; சிலர் திருப்தியாகப் புகைபிடித்தனர். ரசிகர்களுக்கு வசதி ஏற்படுத்தித் தருவதில் அவர்கள் பின்பற்றிய வழக்கம் ஒன்று ஆர்வம் ஏற்படுத்தியது. ‘வெயிட்டர்கள்’ ஈரமான துண்டுகளுடன் ஆங்காங்கே நகர்ந்து கொண்டிருந்தனர். பார்வையாளர்கள் தம் கைகளையும் முகத்தையும் துடைத்து கொள்வதற்கு அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
அன்று நான் பார்த்த நாடகம், சீன வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. சில நடிகர்களின் நடன அசைவுகளும் பாடிய முறையும் ஓரளவுக்கு இந்தியாவில் நமக்குப் பழக்கமான பாணியைப் போலவே இருந்தன. நடித்தவர்களின் தலையலங்காரங்கள் கோரமான வடிவத்திலிருந்தன; நகைச்சுவைக் காட்சிகள் வட இந்தியாவின் ‘ராம் லீலா’வை நினைவுபடுத்தின. பார்வையாளர்களில் சீனப் பெண்கள் அதிகம் இருந்தனர்; நேர்த்தியாக, பல வண்ணங்களில் உடையணிந்திருந்தனர். அழகிய நிறம் கொண்டவர்கள்; ஆனால், இயற்கையான அந்த அழகு போதாதென்று, முகத்தில் அடர்த்தியாகச் செஞ்சாயமும் பவுடரும் பூசியிருந்தனர்.
சிறுமிகளின் பாதத்தை இறுகக் கட்டி செயற்கையாக வளைத்து சிறியதாகவே வைக்க முயலும் வழக்கம் பெருமளவுக்கு இன்னமும் நிலவுகிறது. இதன் விளைவு, நன்கு வளர்ச்சியடைந்த பெண்ணின் பாதங்களும் ஐந்து அல்லது ஆறு வயதுக் குழந்தையின் அளவே இருக்கும். அவ்வாறு வளைக்கப்படும் பாதம் அழகாகத் தோன்றாது; அத்துடன் அவர்கள் மிகுந்த சிரமத்துடன் நடப்பதும் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும்.
தெருக்கள் இரவு நேரத்தில் மிகவும் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன; விளக்குகள் அவற்றைப் பிரகாசமாக அலங்கரிக்கின்றன. ஏறத்தாழ இரண்டு கட்டடங்களில் ஒன்று மேல் தளம் கொண்டதாக இருக்கிறது; தேநீர்- இல்லமாக அல்லது சிற்றுண்டி நிலையமாக அவை செயல்படுகின்றன. அங்கு இளம் பாடகிகள் பாடுகிறார்கள்; ஆடுகிறார்கள். பார்வையாளர்கள், ஹுக்கா புகைத்துக்கொண்டே தேநீர் அருந்துவார்கள். சீனாவின் தேநீர்-இல்லங்களின் பொதுப் பயன்பாடு ஐரோப்பியர்களிடம் காணப்படும் வழக்கமான கஃபேக்கள் அல்லது ரெஸ்டாரண்ட்களுக்கு அவர்கள் செல்வதைப் போலிருக்கிறது. இதைப்போன்ற மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சம் தோராயமாக என்று சொல்லும் அளவுக்குக்கூட நம்மிடம் வழக்கத்தில் இல்லை.
அநேகமாகச் சீனர்கள்தான் உலகிலேயே மிகவும் பழமைவாதிகளாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தொன்மையான வழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர்; பாரம்பரிய ஆடையணிகளை விரும்பி அணிகின்றனர். மக்கள் இங்கு ஐரோப்பியர்களின் பாதுகாப்பிலும் தாக்கத்திலும்தான் வாழ்கின்றனர். எனினும் இந்தப் பழமையான வழக்கங்களிலிருந்து அவர்கள் விடுபடும் அளவுக்கு அவை தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய ஆடையை முழுமையாகவோ பாதியளவோ அணிந்த ஒரு சீனனைக்கூட என்னால் பார்க்க இயலவில்லை; கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களும், தங்களுக்குப் பிரியமான பின்னல் போட்ட நீண்ட ஜடை வைத்திருக்கிறார்கள்; அவர்களது இனத்துக்குரிய ஆடையைத்தான் அணிகிறார்கள். சுற்றுப்புறங்களில் விரைந்து ஊடுருவிக் கொண்டிருக்கும் ஐரோப்பியர்களின் செல்வாக்கையும் தாக்கத்தையும் மீறி, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த மனிதர்கள் பழைய வழக்கங்களையும் முறைகளையும் கைவிடாமல் இருப்பார்கள் என்பதைக் காலம் மட்டுமே சொல்லமுடியும்.
சீன மொழி மாறுபட்ட பல வடிவங்களில் பேசப்படுகிறது; சீனாவின் ஒரு பகுதியில் இருப்பவர் பிறிதொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் பேசும் மொழியைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்கள்; அல்லது அவர்களால் முடியவில்லை என்ற அளவுக்கு பேச்சு மொழியில் வேறுபாடு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, காண்டன், ஷாங்காய், பீகிங்கில் பேசப்படும் வழக்குகளுக்கு இடையில் பெரும் வேறுபாட்டை உணர முடியும். சீனர்கள் சிலர் பேசும் ‘பிட்ஜின்’ ஓட்டை ஆங்கிலம் மிகவும் வேடிக்கையானது. சீனர்களுக்குப் புரியவைப்பதற்காக சில நேரங்களில் வேறுவழியின்றி ஐரோப்பியர்களும் அதைப் பின்பற்றுகின்றனர். பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் சொலவடை, ‘ஏய் புத்திசாலி’ என்பது. பொதுவாக சீக்கிய போலிஸ்காரர்களிடம் இப்படி அழைக்கும் வழக்கம் அதிகம். ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் ஐரோப்பியர்களின் வேலைக்காரர்கள், பரஸ்பரப் புரிதலுக்காக அவர்களுக்குள் பிட்ஜின் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். ஏனெனில் பேச்சு வழக்கில் அந்த அளவுக்குச் சிக்கல் இருக்கிறது.
ஆங்கிலம், ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், அமெரிக்கன், சீனம், ஜப்பான் என ஏழு வேறுபட்ட அஞ்சல் நிலையங்கள் ஷாங்காய் நகரில் பரபரப்புடன் செயல்படுகின்றன. குறிப்பிட்ட தேசத்தவர் அவர் நாட்டின் அஞ்சல் நிலையத்தின் வழியாகக் கடிதங்கள் போன்றவற்றை அனுப்புகிறார்கள், பெறுகிறார்கள். ஒவ்வொரு நிலையமும் அவரவர் தேசத்து ‘மெயில்’ விஷயங்களை மட்டுமே கையாளுகின்றன. இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம், இம்பீரியல் சீன அஞ்சல் துறையின் திறமை மீதான அவநம்பிக்கைதான். நாங்கள் இங்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் தங்குவதாக எண்ணம். அதன்பின் வடக்கு சீனாவுக்கும் பீகிங்குக்கும் செல்வதாகத் திட்டம். ஆனால் அப்போது சிறிய சரக்குப் படகுகள்தான் கிடைக்கும் போலிருந்தன. அதுவும் அவை புறப்படும் தேதிகளும் நிச்சயமற்ற நிலை; ஆகவே நாங்கள் ஆறு நாட்கள் தங்க வேண்டியதாயிற்று.
சீனர் பகுதியில் ஷாங்காயிலிருந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் ஸிக்காவேய் என்ற இடத்தில் அமைந்திருந்த இயேசு சபையின் அநாதை இல்லத்துக்கும் கான்வெண்டுக்கும் சென்றோம்.; மிகவும் சுவாரஸ்யமான நாள் அது. இருநூறு ஆண்டுகளுக்குமுன் ஏதோ மிஷனரிகளால் தொடங்கப்பட்டவை; இப்போது மிகவும் சிறப்பாக வளர்ந்துள்ள நிறுவனங்கள். சீன உடைகள் அணிந்திருந்த பாதிரியார்கள், அந்த இடத்தைச் சுற்றிக் காண்பித்தனர்; மாணவர்கள் அனைவரும் சீன கத்தோலிக்கர்கள். சீன மொழியுடன், மரத்தில் சிற்பங்கள் செதுக்குதல், வண்ணம் பூசுதல், சிற்பங்கள் வடித்தல் போன்றவை அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன.
சில மாணவர்கள் இரண்டு தளங்கள் கொண்ட வீடு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தனர். உள்ளும் புறமும் ஆடம்பரமான மரவேலைப்பாடுகளும் அலங்காரங்களும் நிறைந்ததாக அந்த வீடு அமையக்கூடும். பெல்ஜியம் அரசருக்காக அது உருவாகிறது. பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படும் இந்த வீடு பிரஸ்ஸல்ஸுக்கு அருகில் லேக்கென் என்ற இடத்திலிருக்கும் ராயல் பார்க்கில் நிர்மாணிக்கப்பட உள்ளது. மாணவிகளுக்கு லேஸ் தைத்தல், எம்ப்ராய்டரி வேலை ஆகியன சொல்லித் தரப்படுகின்றன. தெருக்களிலிருந்து மீட்கப்பட்ட பல பச்சிளம் குழந்தைகளை ஓர் அறையில் பார்த்தோம். குழந்தைகளைப் பேணி வளர்க்க முடியாத ஏழைச் சீனர்கள் இப்படி விட்டுவிட்டு சென்றுவிடுவார்களாம்.
அந்தக் கான்வெண்டில் பெரிய நூலகம் ஒன்று இருக்கிறது. ஐரோப்பிய, சீன மொழிகளில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அங்கு உள்ளன. கீழ்த்திசை நாடுகளின் சமயம் மற்றும் இலக்கியம் குறித்த புத்தகங்கள். அருகிலிருந்த புகழ்பெற்ற விண்வெளி ஆய்வுக்கூடம் ஒன்றையும் பார்த்தேன். ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் அதைப் பராமரித்து வருகிறார்கள். அறிவியல் சாதனங்களின் முழுமையான தொகுதி அங்கு இருக்கிறது. வசிப்பவர்களுக்கு உதவும் வகையில் வானிலை அவதானிக்கப்படுகிறது. சில மைல்களுக்கு அப்பால் மோசமான வானிலையால் அலைக்கழிக்கப்படும் கப்பல்களுக்குத் தேவையான சமிக்ஞைகள் அனுப்புகிறார்கள்.
திரும்பி வருகையில் இம்பீரியல் சீனக் கல்லூரியின் வெளிப்புறத்தைப் பார்க்க முடிந்தது. பொலிவு மிக்க கட்டடங்களின் தொகுப்பு. அந்தக் கல்லூரி சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் குழுவில் மூன்று ஐரோப்பியப் பேராசிரியர்களும் இருக்கிறார்கள். வழக்கமான கல்வியுடன் மாணவர்கள் ஆங்கிலமும் பிரெஞ்சும் கற்கிறார்கள். சீன மாணவர்கள் சிலரிடம் பேசினோம். எங்களுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை. அவர்களது அறிவுத்திறன் என்னை ஈர்க்கவில்லை. எங்களது கேள்விகள் அனைத்துக்கும் வெற்றுப்பார்வைதான் பதிலாகக் கிடைத்தது. ஆங்கிலேயரது விளையாட்டுகளை ஆடுவதற்கு ஏற்ற ஆடைகள் அணியாமல் அந்த மாணவர்கள் பாரம்பரியமான, நீண்ட ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் அந்த உடைகளுடன் விளையாடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
அங்கிருந்து புறப்படும் நாள் வந்தது. பெரிய கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்த்தோம். ஹாங்காங் அணிக்கும் உள்ளூர் அணிக்கும் இடையில் நடந்த அந்த மேட்ச் மூன்று நாட்கள் நீடித்தது என்று என்னிடம் சொன்னார்கள். மேட்சில் அதிக ஆர்வம் காட்டிய ஐரோப்பியர்களின் பெரும் கூட்டம் மைதானத்தில் குழுமியிருந்தது. டின்னருக்குப் பின் ஷாங்காய் நகரின் அமெச்சூர் குழு ஒன்று நடத்திய பல்வகை கேளிக்கை நிகழ்வு ஒன்றைப் பார்த்தோம். நிகழ்ச்சி நடந்த ‘லைசியம்’ ஓர் அழகான சிறிய அரங்கம். அதன்பின் ‘கிங்-சிங்’ என்ற சிறிய ஸ்டீமரில் டீன்–ட்ஸின் நோக்கிப் புறப்பட்டோம்.
அந்த ஸ்டீமர் சுமார் இரண்டாயிரம் டன் எடை கொண்டது. அடுத்த நாள் அதிகாலையில் பயணத்தைத் தொடங்கியது. எங்களைத் தவிர்த்து ஆறு பயணிகளுக்கு மேல் ஸ்டீமரில் இல்லை. அந்தப் படகு சிறியது என்பதால் அதிகமானவர்களுக்கு அதில் இடமில்லை. டைனிங் பகுதியில் பத்து அல்லது 12 பேர் மட்டுமே அமரமுடியும். ஓர் ஆங்கிலேயன், ஓர் அமெரிக்கன், ஒரு ரஷ்யன், ஒரு ஜப்பானியன் என சில நாடுகளின் பிரதிநிதிகள் அந்தக் கப்பலில் பயணித்தனர்.
முதல் இரண்டு நாட்கள் பயணம் அமைதியாக, இனிமையானதாக இருந்தது; ஆனால், சிஃபூவை (வடக்கு சீனாவில் இருக்கும் ஒப்பந்தத் துறைமுகங்களில்3 ஒன்று) நெருங்கும்போது கடலில் அலைகளின் வேகம் அதிகரித்துவிட்டது. வேகமாகக் காற்று வீசத் தொடங்கியது. எங்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகவும் அசௌகரியமாக இருந்தது. படகு ஆட்டம் போட்டது; அலைகளால் தூக்கி விசிறப்பட்டது. எங்களால் துளியும் தூங்க முடியாத நிலை. அடுத்த நாள் அதிகாலையில் சிஃபூ துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சினோம். தாங்க முடியாத குளிர். வேகமான காற்று இன்னமும் வீசிக்கொண்டுதான் இருந்தது. கடல் மிகவும் சீற்றத்துடன் இருந்ததால் வழக்கமான முறையில் பயணிகள் இறங்கமுடியவில்லை; இது சரக்கு மட்டுமே ஏற்றும் படகு என்பதால், பயணிகள் இறங்குவதற்கான சிறப்புச் சாதனங்கள் எதுவும் இதில் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் சிறிய படகுகளில் ஏறி கரையை நோக்கி நகர்ந்தோம்.
அன்றைய இரவை சமுத்திரத்தைப் பார்த்திருந்த, சுத்தமான மற்றும் வசதியற்றது என்று சொல்லமுடியாத ஹோட்டல் ஒன்றில் கழித்தோம். பார்க்க ஆர்வமூட்டும் எதுவும் சிஃபூவில் இல்லை. அந்த இடம், வடக்குச் சீனாவில் வசிக்கும் ஐரோப்பியர்களின் முதன்மையான கோடைவாசத்தலமாகப் பயன்படுகிறது.
அந்த நகரத்து ஐரோப்பியர்களின் மக்கட்தொகை சுமார் ஐநூறைத் தாண்டாது. அடுத்த நாள், மிகவும் அமைதியாக இருந்தது. காலை பத்து மணிக்கு நாங்கள் சிஃபூவை விட்டுப் புறப்பட்டோம். பல் கிடுகிடுக்கும் அளவுக்குக் குளிர்ச்சியான காற்று; மேல் தளத்துக்கே எங்களால் வர முடியவில்லை; காஃபின்களுக்கு உள்ளேயே அடைந்து குளிரிலிருந்து தப்பிக்க முயன்றோம். அடுத்த நாள் காலையில் டாங்கு பார் என்ற சிறிய துறைமுக நகரை அடைந்தோம். கரைக்குத் திரும்பும் வழி எதுவும் எங்கள் முன் தோன்றவில்லை. மதியத்தில் மருத்துவ சோதனை முடிந்தது; பெரும் சிரமத்துக்குப்பின் ஸ்டீம் படகு ஒன்று கிடைத்தது. அதில் கரைக்குச் சென்றுவிடலாம் என்று நம்பினோம்.
பயணிகள் படகில் ஏறியபின் படகு நடத்துவோர் மேலும் பயணிகளை ஏற்றிக் கொள்வதற்காக துறைமுகத்தைச் சுற்றிச்செல்வதை (பல மணி நேரம் அதற்கு ஆகிறது) வழக்கமாக்கிக் கொண்டுள்ளது எங்களுக்குத் தெரியவந்தது. அந்த அனுபவத்தைப் பெற எனக்கு ஆசையில்லை என்பதால், அந்தப் படகு முழுவதையும் நானே வாடகைக்கு எடுத்துவிட்டேன்; அதனால் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் கரையை அடைந்துவிட்டோம். இறங்கியவுடன் எங்களுக்குப் பெரும் ஏமாற்றம்; டீன்–ட்ஸின் செல்லும் கடைசி ரயில் புறப்பட்டுப் போய்விட்டது. ஹோட்டல் அறைகள் மிகச் சாதாரணமாக இருந்தன. அதனால், சிறப்பு ரயில் ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். அது ஒருமணி நேரத்தில் பயணத்தை முடித்தது. நாங்கள் ஆஸ்டார் ஹவுஸ் ஹோட்டலில் தங்கினோம். அந்த ஹோட்டல் பெருமளவுக்கு வசதியுடனும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டதாகவும் இருந்தது.
அடுத்த நாள் அந்த இடத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றேன். டீன் – ட்ஸீன் நகரில் சில நல்ல சாலைகள் இருந்தன. ஷாங்காயைத் தவிர்த்துப் பார்த்தால், வெளிநாட்டவர்களின் மிகப் பெரிய குடியிருப்புகள் இங்குதான் உள்ளன. எட்டு வெளிநாட்டவர் குடியிருப்புகள் இருக்கின்றன: ஆங்கிலேயர், ரஷ்யர், ஜெர்மானியர், பிரெஞ்சுக்காரர், ஆஸ்திரியர், இத்தாலியர், அமெரிக்கர் மற்றும் ஜப்பானியர்களின் குடியிருப்புகள். குறிப்பிடப்பட்ட இந்தத் தேசங்களில், ஆறு நாடுகளின் துருப்புகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன: எண்ணிக்கை ஐநூறிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் வரை இருக்கலாம். அநேகமாக ஜெர்மானியர்களின் படைப்பிரிவு பெரியது. மேலே குறிப்பிட்ட தேசங்களின் வீரர்கள் ஒன்றாக நடந்து செல்வதைப் பார்ப்பது ஆர்வமாகவும், தனித்துவமானதாகவும் இருந்தது; அவர்களுக்கிடையில் ஒப்பீட்டு அளவிலான வேறுபாடு குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியாக இல்லாத காக்கிச் சீருடையில் ஜெர்மானியர்களையும், அவர்களுக்குப் பக்கத்திலேயே நடந்துசெல்லும் நம் ஊர் கூர்க்காக்களை ஒத்திருக்கும் கட்டை, குட்டையான ஜப்பானியர்களையும் அங்கே நீங்கள் பார்க்கமுடியும்; ஏதோ அந்த இடம் அவர்களுக்குச் சொந்தம் என்பதுபோல் நடந்து செல்லும் சீக்கியர்களையும் பார்க்கலாம்.
எங்கள் பயணத்தின்போது ஜெர்மானிய படைமுகாம் ஒன்றின் முன் நின்றோம். ஜெர்மன் மொழி பேசும் எனது இந்திய மருத்துவரின் உதவியுடன் அங்கு சுற்றிப்பார்க்க அனுமதி பெற்றேன். சார்ஜெண்ட் ஒருவர் எங்களை அழைத்துச் சென்று, குதிரை லாயங்களையும் குதிரைப்படை வீரர்கள் தங்குமிடங்களையும் சுற்றிக் காட்டினார். அதன்பின் காலாட்படை முகாமையும் காட்டினார். இந்த இடம் முன்னர் இம்பீரியல் சீனக் கல்லூரியாக இருந்தது. ஆண்களின் ’டார்மிடரி’களும் உணவருந்தும் அறைகளும், படிக்கும் அறைகளும் நன்றாகப் பராமரிக்கப்பட்டும் சுத்தமாகவும் இருந்தன.
வீரர்கள் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று கேட்டோம். வெளிநாட்டுச் சேவையில் இருப்போருக்கு ஒரு மாதத்துக்கு அறுபது மார்க்குகள் ஊதியமாம். உலகின் அந்தப் பகுதியில் பணிபுரியும் ஜெர்மானியத் துருப்புகளின் சீருடை பசுமை கலந்த காக்கி நிறத்தில் இருக்கிறது. சுறுசுறுப்பான தோற்றத்தையும் திறமையையும் வெளிப்படுத்துவதாகத் தோன்றியது. டீன்–ட்ஸீன் நகரிலிருக்கும் ஜெர்மன் படைமுகாமில் ஒரு காலாட்படைப்பிரிவும் ஒரு குதிரைப்படைப்பிரிவும் பீரங்கிப் பிரிவும் இருக்கின்றன.
டீன்–ட்ஸீன் நகரை விட்டு இரண்டு மணி மெயிலில் புறப்பட்டோம். அந்த ரயில் பயணத்தின்போது நாங்கள் பார்த்த நிலப்பரப்பு வறட்சியாகவும் அழகற்றும் காணப்பட்டது; பெருமளவுக்கு வட இந்திய நிலப்பரப்பை ஒத்திருந்தது. அந்த ரயில் விரைவாகச் சென்றதுடன், வசதியாகவும் இருந்தது. பீக்கிங்கை 06:30 மணிக்கு அடைந்தது.
___________
1. சிஃபூ: கிழக்குச் சீனக் கடல் துறைமுகம், தற்போதைய யாண்டாய் (Yantai).↩
2. டீன்–ட்ஸின்: போஹாய் கடல் பகுதியில், யாண்டாய்க்கு வடபகுதியில் அமைந்திருக்கும் இன்றைய டியான்ஜின் துறைமுகம் (Tianjin)↩
3. ஒப்பந்தத் துறைமுகங்கள் (Treaty ports): வலிமைமிக்க மேற்கத்திய நாடுகளால், சமத்துவமற்ற ஒப்பந்தங்கள் அடிப்படையில் வெளிநாட்டு வணிகத்துக்குத் திறந்துவிடப்பட்டிருக்கும் சீன மற்றும் ஜப்பான் துறைமுகங்கள்.↩
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்