Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

பீகிங்கில் புத்தர்

சீன அரசாங்கம் வடக்கு சீனாவில் இப்போது ரயில் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால், சீன அரசுப் பணியிலிருக்கும் ஆங்கிலேயர்கள்தான் அதை நிர்வகிக்கிறார்கள். பீகிங்கிலிருந்து ஹாங்கோவ்1 வரை பிரெஞ்சுக்காரர்கள் ரயில் பாதை போட்டிருக்கிறார்கள்; அவர்களே நிர்வாகமும் செய்கிறார்கள். சீன மக்களின், அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராகத்தான் ரயில்பாதை போடப்பட்டுள்ளது. ரயில் துரதிருஷ்டத்தைக் கொண்டு வரக்கூடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். இருப்பினும், பழமைவாதியான டோவேஜர் பேரரசியும்2 அவரது அரசவை உறுப்பினர்களும் தேவையானபோது ரயில் சேவையை இப்போது பயன்படுத்துகிறார்கள். அந்த நேரங்களில் ரயில்பாதையும் நிலையங்களும் வேறு போக்குவரத்தோ அல்லது தனியாரின் பயன்பாடோ இல்லாமல் ‘கிளியர்’ செய்யப்படுகின்றன.

தலைநகரை அடைந்தபின், ரிக்‌ஷாக்களில் சுற்றிப்பார்க்கச் சென்றோம். கூச்சலிட்டு, தமக்குள் சண்டை போட்டுக்கொண்ட கூலிகளின் கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டது. தனது ரிக்‌ஷாவில் செல்லவேண்டும் என்று ஒவ்வொருவரும் வேகமான ஆர்வத்துடன் வேண்டினர். அவர்களிடமிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்-டு-நோர்டின் ஜெர்மானிய மேலாளர் எங்களைக் காப்பாற்றினார். நாங்கள் செல்லும் பாதையை ‘கிளியர்’ செய்து தர அவர் சாட்டையைச் சுதந்தரமாகப் பயன்படுத்தினார்.

அந்த ஹோட்டல் ஒரு சாதாரண சீன வீடு. அவ்வளவுதான். அந்த டார்ட்டர் மாநகரத்தின் மையப்பகுதியில் மோசமான இடமொன்றில் ஹோட்டல் அமைந்திருந்தது. அதைச் சுற்றியிருந்த சந்துகளிலிருந்து தீங்கு விளைவிக்கும் துர்நாற்றம் வீசியது. ஆனால், அறைகள் அவ்வளவு மோசமாக இல்லை.

பீகிங் வந்து சேர்ந்த மறுநாள் காலையில், மாநகரத்தில் ஒரு பகுதியைப் பார்க்கலாம் என்று ரிக்‌ஷாக்களில் புறப்பட்டோம். பீகிங்கை ‘அலங்கோலமான, கொடிய துர்நாற்றம் வீசும் நகரம்’ என்று கூறலாம். இந்த மாநகரத்துக்குள், வேறு நான்கு மாநகரங்களும் அடங்கியுள்ளன: சீன மாநகரம், டார்ட்டர் மாநகரம், இம்பீரியல் மாநகரம் மற்றும் தடைசெய்யப்பட்ட மாநகரம். இறுதியாகக் குறிப்பிடப்பட்ட நகரத்தில்தான் அரசவை இருக்கிறது.

சுவர்கள்
நான்கு நகரங்களையும் சுற்றி அமைக்கப்பட்ட உயரமான சுவர்

இந்த நகரங்களைச் சுற்றி தனித்தனியாக உயரமான சுவர்கள் இருக்கின்றன. இந்த நான்கு மாநகரங்களையும் சூழ்ந்ததுபோல், அதாவது அந்தச் சுவர்களுக்கும் வெளியில், மற்றொரு உயரமான சுவர், ஏறத்தாழ பதினைந்து மைல்கள் சுற்றளவுக்கு அமைந்திருக்கிறது. அந்தச் சுவரின் மேல் சுமார் அரை மைலுக்கு ஒரு கண்காணிப்புக் கோபுரம் அமைந்திருக்கிறது. பிரமாண்டமான சுவர்; சுவரின் மேல்பகுதி மிகவும் அகலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நன்கு பராமரிக்கப்படும் சாலையாக, லெகேஷன் வீதி3 இருக்கிறது. பல்வேறு நாட்டுத் தூதரகங்களும் இங்கு அமைந்துள்ளன. அனைத்துத் தூதரகங்களும் தமக்கென்று காவல் படை ஒன்றை வைத்துள்ளன. பொதுவாக, படையில் வீரர்களின் எண்ணிக்கை 200லிருந்து 300 வரை இருக்கிறது. சமீபத்தில் நடந்த பிரச்சனைக்குப்பின் சீனர்கள் அவர்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை தூதரகங்களுக்கு இல்லை.4 இதனால்தான் இந்தத் தனிக் காவல் படை ஏற்பாடு.

லெகேஷன் வீதி
லெகேஷன் வீதி

ஒவ்வொரு தூதரகத்தைச் சுற்றியும் பெரும் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. சிலவற்றில் சுவர்களின் மேல், சுடுவதற்குத் தயார் நிலையில் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் தூதரகம், சீன இளவரசர் ஒருவருக்குச் சொந்தமான இடமொன்றில் இருக்கிறது. அங்கு சர் ஏர்னஸ்ட் சடோவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அது மிக அழகிய வளாகம். சீன பாணியில் அமைந்த இரண்டு பொலிவான ஓய்வு இல்லங்கள் அங்கு இருக்கின்றன. தூதுவர் அவற்றில்தான் வசிக்கிறார். ரஷ்யா, ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் கருங்கற்கள் கொண்டு ஐரோப்பியப் பாணியில் தமக்குப் பெரிய கட்டடங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தாற்காலிகமாக அவர்களுக்கு சீனர்கள் இல்லங்களில் இடம் தரப்பட்டுள்ளது.

முதல் நாள் காலையில் டார்ட்டர் நகரத்தின் ஊடாகச் சுற்றிப் பார்த்தேன். தெருக்கள் அதிர்ச்சியூட்டும் நிலையில் இருந்தன. வாகன வசதிகளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வசதியானவர்கள், செடன் நாற்காலிகளில்5 பயணிக்கிறார்கள். நன்கு உடையணிந்த ஆறுபேர் அதைத் தூக்கிச் செல்கின்றனர். அருவருப்பூட்டிய துர்நாற்றம் வீசிய தெருக்கள் அழுக்கு நிரம்பி காணப்பட்டன. அங்கிருந்த நேரம் முழுவதும் நறுமணத் தைலம் தெளித்தக் கைக்குட்டையை மூக்கருகில் வைத்திருந்தேன்.

செடன் நாற்காலிகள்
செடன் நாற்காலிகள்

பிரிட்டிஷ் தூதர், அவர் பயன்பாட்டுக்கு வைத்திருந்த இரு செடன் நாற்காலிகளை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தார். தெருக் காட்சிகள் ஆர்வமூட்டின. ஆங்காங்கே, வரிசையாக கடைகளும் வீடுகளும் தென்பட்டன. கண்ணுக்கு இனிமை தந்தன. அவற்றின் முன்பக்கங்கள் பொன் வண்ணத்தில் முலாம் பூசியதுபோல் தோன்றின. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல கழுதைகளில் சவாரி செய்யலாம்; அல்லது வண்டிகளைப் பயன்படுத்தலாம். வண்டிப் பயணம் மிகவும் அசௌகரியமானது. சரியாகப் போடப்படாத அல்லது கல்பாவிய பாதைகளில் அவை செல்லும்போது, பயணிகளுக்கு நிச்சயம் சிரமமும் சோர்வும் உண்டாகும்.

திருமண ஊர்வலம் ஒன்றைத் தற்செயலாக எதிர்கொண்டோம். பட்டுத் துணிகள், ‘ஃபர்னிச்சர்கள்’, மலர்க்கொத்துக் குவளைகள், வீட்டு உபயோகத்துக்குத் தேவையானவை என்று அனைத்து அன்பளிப்புகளையும் மணமகளுக்கு முன்னால், பெரிய தாம்பாளங்களில் எடுத்துச் சென்றார்கள். வேறொரு நேரத்தில் இறுதி ஊர்வலம் ஒன்றையும் பார்க்கமுடிந்தது. மிக விரிவாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் இறந்தவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பல்லக்கைச் சுற்றியும், அதன் பின்னாலும் இறந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் அதிக எண்ணிக்கையில் சென்றனர். அந்தச் சடங்கின் புனிதத்தைப் பெருமளவுக்குக் கெடுக்கும் செயல் ஒன்றையும் பார்க்க நேர்ந்தது. உடலைச் சுமந்து சென்றவர்கள் ஆப்பிளைச் சாப்பிட்டப்படி நடந்தது வேடிக்கையாக இருந்தது. ஊர்வலத்தில் பெண்களும் கலந்துகொண்டிருந்தனர். விசித்திரமான குரலில் அவர்கள் கதறியதும் புலம்பியதும் மனத்துக்குத் துயரத்தை அளித்தன.

அன்று மதியம் மிகவும் பிரபலமான ‘சொர்க்கக் கோவிலுக்குச்’ சென்றேன். சீனாவின் முக்கியமான கட்டடங்கள் அனைத்தைச் சுற்றியும் காணப்படும் உயரமான சுவர், இந்தக் கோவிலைச் சுற்றியும் அமைந்திருந்தது. கோவிலின் உட்புறமும் வெளிப்புறமும் வண்ணமயமாக இழைக்கப்பட்ட மரங்களினால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சொர்க்கக் கோவில்
சொர்க்கக் கோவில்

பிரார்த்தனை செய்வதற்காக இந்தக் கோவிலுக்குக் குறிப்பிட்ட சில நாட்கள் பேரரசர் வருகை தருவார். பேராபத்துகள் ஏதும் நிகழாமல் காப்பாற்றும்படி சொர்க்கத்திடம் மன்றாடுவார். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் முதல்நாள் இரவு அவர் பட்டினி இருப்பாராம். காலையில் பிரார்த்தனையின் போது பலிபீடத்தில் ஆடு ஒன்றும் காளையொன்றும் பலிகொடுக்கப்படும். கோவில் பொறுப்பாளரைச் சந்தித்தேன்; 1900ல் ‘பிரச்சனை’ எழுந்தபோதும், கூட்டணிப் படைகளின் துருப்புகள்6 பீகிங்கைத் தாக்கியபோதும் பேரரசர் இங்கு வந்து பிரார்த்தனை செய்தாரா என்று கேட்டேன். எனக்கு அவர் சொன்ன பதில், ‘அருகில் கூட்டணிப் படையின் துருப்புகள் தென்படுகின்றனர் என்ற தகவல் வந்த உடனேயே, அவர் அடைக்கலம் தேடிக் கொண்டார்’ என்பதுதான்.

இந்தக் கோவிலைச் சுற்றி வேறு பல கோவில்களும் இருந்தன. பளிங்குக் கற்களால் அமைந்த பெரிய அரங்கம் ஒன்றையும் பார்த்தோம். அந்த இடம் பலியிடல்களுக்குப் பயன்படுகிறதாம். அந்த அரங்கத்துக்குக் கூரை கிடையாது. அந்தக் கோவில் புறக்கணிக்கப்படுவதை ஒவ்வொரு இடத்திலும் காணமுடிந்தது. படிக்கட்டுகளிலும் புற்கள் முளைத்திருந்தன. சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடந்தன.

ஆர்வமூட்டும் மற்றொரு விசித்திரமான விஷயம் எனக்குள் தோன்றியது. மக்கள் புத்தரை வழிபடுகிறார்கள். ஆனால், பேரரசரோ சொர்க்கத்தை மட்டும் வழிபடுகிறார்; எந்தக் குறிப்பிட்ட நம்பிக்கையையும் அவர் பின்பற்றுவதில்லை. சீனர்கள் புத்தரின்மீது நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்கள் பின்பற்றும் அறநெறிக் கோட்பாடு பெரும் சீர்திருத்தவாதியான கன்ஃபூஷியஸிடம் இருந்து பெற்றது. அவர்களது மதத்தின் ஒரு தீவிரமான சிந்தனையாக, முன்னோர்கள் வழிபாடு இருக்கிறது.

பீகிங் நகரில் ஒரு இடத்துக்கும் மற்றொரு இடத்துக்கும் இடையிலான தூரம் மிக அதிகம். மிகவும் மெதுவான பயண வசதிகள். நேரமில்லாத காரணத்தால் இந்தக் கோவில்களைப் பார்த்த பின், தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பிவிட்டோம்.

ஹோட்டல்-டு-நோர்டுவைச் சுற்றி எழுந்த துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே, இடத்தை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்தேன். கிராண்ட் ஹோட்டலுக்கு மாறினேன். அவ்வளவு வெறுக்கத்தக்க துர்நாற்றம் இங்கு இல்லை. அடுத்த நாள் காலையில் எனது விஜயம் லாமா கோவில். பீகிங்கில் பார்க்கவேண்டிய பயனுள்ள இடம். இந்தப் பெரும் மடாலயத்துடன் தொடர்புடைய வேறு பல ஆலயங்களும் இருந்தன. சில மடாலயங்களில் புத்தரின் பெரும் உருவங்கள் பல வடிவங்களில், பல அவதாரங்களில் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தன. சுவர்களும் உட்கூரைகளும் மிக விரிவாக, நுட்பமாக, அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன. அறுபது அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று இருந்தது. வியப்பூட்டும் இந்தச் சிலையை நன்கு பார்ப்பதற்காக மேடை ஒன்றும் அமைத்திருக்கிறார்கள். அதன் மேல் ஏறிப்பார்த்தோம்; புத்தரது தலையின் சிறந்த காட்சி கிடைத்தது. ஒற்றை மரத்தைப் பயன்படுத்தி இந்தப் பிரமாண்டமான சிலை செய்யப்பட்டது என்று ஒரு மரபு வழிக் கதை கூறுகிறது.

லாமா கோவில்
லாமா கோவில்

மடாலயத்தின் சுற்றுச் சுவர்களில் சம்ஸ்கிருதச் சொற்களும் புராண நிகழ்வுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் நான் பார்த்த வெண்கலத்தில் செய்யப்பட்ட பொருட்களும், பச்சைக் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களும் அற்புதமாக இருந்தன. பௌத்தத் துறவிகள், பேராசைப்பிடித்த கூட்டம் என்றுதான் சொல்லவேண்டும். சென்ற இடங்களில் எல்லாம் அன்பளிப்புக் கேட்டு என்னை மொய்த்துக் கொண்டனர்.

துறவிகள் மஞ்சள் நிற ஆடைகளை அணிகிறார்கள். காலை நேரப் பிரார்த்தனை நேரத்தில் அங்கிருக்க முடிந்தது நல்வாய்ப்பு என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனையின் குறிப்பிட்ட சில கட்டங்களில் துறவிகள் தம் கைகளைக் கோத்துக்கொள்கின்றனர். இறைவனை இரந்து வேண்டுவதுபோல் இருந்தது. இடையில் அவ்வப்போது கைகளால் தாளம் போடுவதுபோல் தட்டுகிறார்கள். தரையில் குழுவாக அமர்ந்துகொண்டு துதிப்பாடல்களை ஒருமித்தக் குரலில் உரக்கப் பாடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதகுருமார்கள் செய்யும் தோத்திரத் தொனியை இச்செயல் நினைவூட்டியது. நடந்த சம்பிரதாயச் செயல்முறை முழுவதும், நமது இந்து சமயச் சடங்குகளின் நிகழ்வுகளைப் போலிருந்தன.

அடுத்து எங்கள் கவனத்தை ஈர்த்தது கன்ஃபூசியஸ் ஆலயம். அசாதாரண ஆர்வத்தை ஊட்டும் அளவுக்கு கோவிலில் எதுவுமில்லை. உண்மையில் அந்தப் பெரும் துறவிக்கு, சீர்திருத்தவாதிக்கு, எழுப்பப்பட்ட நினைவகமே அது. வழிபாட்டிடம் அல்ல.

___________

1. இன்றைய வூஹான் மாநகரத்தின் ஒருபகுதி
2. பேரரசி டோவேஜர் சிக்சி, ஆசை நாயகியாக இருந்து அரசி ஆனவர். 1861 முதல் 1908இல் இறக்கும் வரை 47 ஆண்டுகள் பேரரசரும் பேரரசும் அவர் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
3. Legation Street-தூதரக வீதி
4. 1900இல் அந்நியர்களின் ஆதிக்கம்/ செல்வாக்குப் பெறுகிறது என்று சொல்லி ’பாக்ஸர்ஸ் கிளர்ச்சி’ நடைபெற்றது. தூதரகங்கள் தாக்கப்பட்டன. வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்டனர். ஒரு கட்டத்தில் தலைநகரைவிட்டு வேறொரு பாதுகாப்பான இடத்துக்கு அரசவையினர் சென்றுவிட்டனர்; ஒரு நிலையில் டோவேஜர் பேரரசி இந்தக் கிளர்ச்சியை ஆதரித்தார் என்று கூறப்படுகிறது. ஒன்பது நாடுகளின் கூட்டணிப்படை தலைநகருக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை ஒடுக்கியது (வட சீனாவைச் சேர்ந்த அந்தக் கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பான்மையோர் சீன பாரம்பரியப் போர்க் கலையில் பயிற்சி பெற்றவர்கள். இதனை சீன பாக்ஸிங் என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டனர். இதனால் இது பாக்ஸர்ஸ் கிளர்ச்சி என்று பெயர் பெற்றது).
5. sedan chair – ஒரு நபர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மூடப்பட்ட நாற்காலி. ஏறத்தாழ பல்லக்குப் போன்ற இதை உயர் குலத்தவர் பயன்படுத்துகிறார்கள்; நான்கு முதல் பல நபர்கள் தூக்கிச் செல்லும் அமைப்பைக் கொண்டது.
6. வெளிநாட்டு தூதரங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் 55 நாட்கள் முற்றுகையும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ருஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜப்பான் நாடுகளின் கூட்டணிப் படையால் முறியடிக்கப்பட்டது.

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *