ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டபின் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டேன். பிரிட்டிஷ் தூதரத்தின் மிகச் சிறந்த சீன அறிஞர் திரு.ஜோன்ஸ் எனக்குத் துணையாக வந்தார். இம்பீரியல் நகரம் முழுவதையும் எனக்குச் சுற்றிக் காட்டினார். நகரத்துக்கு மிகக் கம்பீரமான பெயர் இருந்தாலும், முதல் நாள் காலையில் நாங்கள் பார்த்த நகரத்தைவிட ‘இம்பீரியல் சிட்டி’ எந்த வகையிலும் சிறந்ததாகத் தோன்றவில்லை.
மாபெரும் ‘ட்ரம்’ (Drum) கோபுரத்தில் ஏறினோம். பீகிங் மாநகரத்தின் அழகிய காட்சியை அங்கிருந்து காண முடிந்தது. அந்த நகரத்தின் அமைப்பு குறித்த ஒரு பொதுவான அபிப்பிராயம் கிடைத்தது. இது வேறு வழிமுறைகளில் சாத்தியமாயிருக்காது. ‘தடைசெய்யப்பட்ட நகர’த்தின் அல்லது அரண்மனை வளாகத்தின் இரண்டு வாயில்கள் அங்கிருந்து தெரிந்தன. இயற்கையான நிலப்பரப்பைப்போல் அமைந்திருந்த இம்பீரியல் சிட்டி பூங்காவின் ஒரு பகுதி தெரிந்தது; பெரிய விதானங்களுடன் சில மண்டபங்களும் தென்பட்டன.
கோபுரத்தை விட்டுக் கீழிறங்கி நடந்தோம். கடந்து செல்கையில் பேரரசின் அலுவலகங்கள் சிலவற்றின் முன்பகுதியைப் பார்க்க முடிந்தது. நான் கவனித்தவை நிதி வாரியம், உரிமைகள் வாரியம், நீதித்துறை அலுவலகம் ஆகியன. இந்த இடங்கள் அனைத்தும் உயிர்க் களை இழந்து, ஒழுங்கற்ற நிலையில் காணப்பட்டன. இலக்கற்றுத் திரியும் அழுக்கான நபர்களையும் தெரு நாய்களையும் மிகுதியாகக் கண்டேன். வெறுப்பூட்டும் காட்சியாக அது இருந்தது. பீகிங்கில் நாய்களுக்குப் பஞ்சமில்லை. போகுமிடமெல்லாம் அதிக எண்ணிக்கையில் அவற்றைப் பார்க்க முடிந்தது. அன்றிரவு எனக்குப் பிரிட்டிஷ் தூதரகத்தில் விருந்து. அங்கிருக்கையில் பேரரசின் அரசவை விஷயங்களையும், பொதுவாக சீனர்கள் பற்றியும் விவரங்களைக் கேட்க முடிந்தது. அவை பெருமளவுக்கு சுவாரஸ்யம் தந்தன. எனது நண்பர் கர்னல் போவர், பிரிட்டிஷ் தூதரகப் பாதுகாப்புப்படையின் கமாண்டராக இருந்தார். அவரைச் சந்திக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
சீனாவில் சரியான இடத்தில் சரியான பதவியில் நியமிக்கப்பட்டுள்ள மனிதர் சர் எர்னஸ்ட் சடோவ். முதல் நிலை அரசப் பிரதிநிதியான அவரது அதிகாரங்கள், அனைவரும் அறிந்தவை, அங்கீகரிக்கப்பட்டவை. சர்வதேச அளவிலான பகைமையை வளர்த்தெடுக்கும் நாற்றங்காலாக சீனாவின் அரசியல் சூழ்நிலை இருக்கிறது; அதைச் சமாளிக்கவும், சர்வதேச அளவில் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ‘சம்பவங்களை’ எதிர்கொள்ளவும் மிக உயர்ந்த திறமையும் சாதுரியமும் தேவை; இவை அனைத்தும் சர் எர்னஸ்டிடம் இணைந்திருப்பதாகத் தெரிகிறது. அவரைப் பார்க்கும் எவருக்கும் இவர் ‘ஆற்றல் மிக்கவர், உலக விவகாரங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருப்பவர்’ என்ற எண்ணம் உடனடியாகத் தோன்றும்.
அங்கு சில நாட்கள் மட்டுமே தங்கினேன். அந்தக் குறுகிய காலத்தில் பெற முடிந்த சிறிய அளவிலான புரிதலை வைத்துப் பார்க்கும்போது, அந்தச் சூழலில் ருஷ்யர்கள் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. இருப்பினும், பிரிட்டிஷாரும் ஜப்பானியரும் வலிமையான கூட்டணியாக இருக்கிறார்கள்; ‘வடதிசைப் பெரும் கரடியை’ கட்டுக்குள் வைக்கும் செயலைத் திறனுடன் செய்கிறார்கள். அத்துடன், ருஷ்யர்கள், சீனர்களுக்கு மிக அருகிலிருக்கும் அண்டை நாட்டவர்; அதனால், ஏனைய ஐரோப்பியர்களைக் காட்டிலும் இவர்களைப் பார்த்து சீனர்கள் மிகவும் அஞ்சுகிறார்கள் என்பதும் மிகத் தெளிவாகப் புரிந்தது. என் மனத்தில் மற்றொரு விசித்திரமான எண்ணமும் தோன்றியது. பல்வேறு அந்நிய தேசத்து வீரர்களின் இருப்பை எந்நேரமும் பார்க்க முடிகிறது; ஆனால், சீன தேசத்து வீரர்களை எங்கும் பார்க்கமுடியவில்லை; அந்தத் தேசம் ஏற்கெனவே ஏறத்தாழ அந்நியர்கள் கையில் என்பதுபோல் தோன்றியது. ஆங்கங்கே தென்பட்ட மிகச் சில சீன வீரர்கள் என்னை ஈர்க்கவில்லை; வீரர்கள் என்ற அளவில் அவர்களது திறமை மீது எனக்கு உயர்ந்த அபிப்பிராயம் எதுவுமில்லை.
வெளிப்படையாக இப்படிப்பட்ட குறைகள் கண்ணுக்குத் தெரிந்தாலும், அந்த சீனத்தலைநகர் நம்மை ஈர்க்கக்கூடிய ஏதோ ஒன்றை பெற்றிருக்கிறது. எங்கு நோக்கினும் பழமையின் கம்பீரம் வெளிப்படையாய் தெரிந்தது. தொன்மையான பழக்கவழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் சாட்சியமாகப் பார்க்க முடிந்தவை ஒருபுறம்; மறுபுறம் வலிமை மிக்க வெவ்வேறு நாடுகளின் வீரர்கள் தினசரிப் பயிற்சியில் ஈடுபடும் காட்சி. நினைத்து, அசைபோடுவதற்கு ஏராளமான விஷயங்கள் இவை. இந்த விஷயம் அவ்வளவு தீவிரமானது இல்லை எனும்போது, பார்த்த காட்சிகளில் தென்பட்ட பொருத்தமின்மை சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால், தவிர்க்கமுடியாமல் போர் என்ற ஒன்று வந்துவிட்டால், சீனர்களுக்கோ சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கோ அது விளையாட்டாக இருக்காது என்பதை என்னால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் அந்த இடத்துக்குச் சென்ற நேரத்தில் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் விஷயங்கள் பெருமளவுக்கு மோசமாக இருந்தன; ஒரு நகைச்சுவை ஆபராவின் காட்சிகளாய்த் தோன்றின. பல்வேறு அந்நிய தேசத்து வீரர்கள் அவர்களது ராணுவ உடைகளில் ஆயுதமேந்தி, ஏதோ எதிரில் யுத்தம் என்பதுபோல் தீவிரமாகப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். முகத்தில் முட்டாள்தனமும் அசட்டுச் சிரிப்புமாக சீனர்கள் கூட்டமாக நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்தனர். இயலாமையும் அக்கறையின்மையும் அவர்களைச் சூழ்ந்திருந்தது. வெளிநாட்டவர் கடும் உழைப்பைச் செலுத்தி பயிற்சிகள் மேற்கொண்டனர். அவர்களது அந்த முயற்சிகள், மிகக் கடுமையான நேரத்தை வீணடிக்கும் செயலென சீனர்கள் கருதினர்!
சீனாவில் என் கடைசி நாள். அன்று காலையில் பல்வேறு தூதரக மைதானங்களில் சுற்றித் திரிந்தேன். பார்த்தவை அனைத்தையும் கவனமாகக் குறித்துக் கொண்டேன். முதலில் சென்றது, இத்தாலியக் கடற்படையின் படைமுகாம். வயர்லஸ் டெலிகிராப் தொலைத்தொடர்பை அவர்கள் நிர்மாணம் செய்திருந்தனர். டோங்கு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது போர்க்கப்பல்களுடன் தொடர்புகொள்வதற்கு இந்த வசதியைப் பயன்படுத்தினர். பெருமளவுக்கு எனக்கு ஆர்வமூட்டிய சாதனம்.
முதல் வயர்லஸ் கருவியை நிறுவியது இத்தாலியர்கள் என்பது மிகச் சரியான ஒரு செயல். ஏனெனில், இப்போது மிகவும் பிரபலமாகியிருக்கும் இத்தாலியர் மார்கோனிதான் இந்தச் சாதனம் தற்போது பெற்றிருக்கும் முழுநிறைவான நிலைக்கு அதை வடிவமைத்தவர்.
அடுத்ததாக, அமெரிக்க வீரர்களின் முகாமை எட்டிப்பார்த்தேன். அங்கு சந்தித்த அனைவரும் மிகவும் நட்புடன் என்னை நடத்தினர். நான் அங்கு அனுமதிக்கப்படுவதற்கு முகாம் கமாண்டிங் ஆபிஸருடைய அனுமதியின் தேவை இருக்கவில்லை. மாறாக, அந்த இடத்தைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்தவுடன் வாயிலில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி, ‘உள்ளே செல்லுங்கள். விரும்பிய இடத்தைச் சுற்றிப்பாருங்கள்’ என்றார். இந்த அன்பான அழைப்பை மிகச் சரியாக நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்.
காவல் மாற்றம் நடைபெறும் சரியான நேரத்தில் தற்செயலாக அங்கு சென்றோம் என்பது ஒரு நல்வாய்ப்பு. வழக்கமாக உரத்து எழுப்பப்படும் வாய்வழி ‘ஆணைகளுக்குப்’ பதிலாக, பியூகிள் ஒலி கொண்டு அந்த நிகழ்ச்சி நடந்தது வித்தியாசமாக இருந்தது. நேர்த்தியான தோற்றத்தில் இருந்த வீரர்களின் அசைவுகள் கச்சிதமாக இருந்தன. அவர்களது திறன் அதில் வெளிப்பட்டது. களிப்புடன் காணப்பட்ட அந்த வீரர்கள், பணி முடிந்த நேரங்களில் தொடர்ந்து நகைச்சுவையாக பேசிக்கொண்டும் பரஸ்பரம் குறும்புத்தனமாக விளையாடியபடியும் இருந்தனர். கட்டுப்பாடு குறித்த அமெரிக்கச் சிந்தனை மற்றவரிடமிருந்து வேறுபட்டது என்று நினைக்கிறேன். அந்த அமெரிக்கர்களைப் பார்க்கையில், இந்த வீரர்கள் சீருடை அணிந்த பொதுமக்களோ என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது.
காலை உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டோம். பீக்கிங்கிலிருந்து இரண்டு மணி ரயிலில் மீண்டும் டீன் –ட்ஸின் நோக்கிப் புறப்பட்டோம். எனக்குப் பெருமளவு ஆர்வத்தைத் தந்த நகரமாக பீகிங் இருந்தது. எனினும் அங்கிருந்து புறப்படுவதில் எனக்கு வருத்தமில்லை. பேரரசரையும் டோவேஜர் பேரரசியையும் என்னால் சந்திக்க முடியவில்லை என்பது ஏமாற்றமே. பேரரசரது திறமையின் மீது எனக்கிருந்த தவறான எண்ணம் ஒரு பொருட்டல்ல. ஐரோப்பாவுக்குச் சென்றபோதெல்லாம் பல நாடுகளும் என்னை நல்ல முறையில் வரவேற்றன; கௌரவம் செய்திருக்கின்றன. ஆனால், இங்கு பார்த்த இந்த ஆட்சியாளரின் அரசவையும் சுற்றுப்புறங்களும் அந்த நாடுகளைக்காட்டிலும் எல்லாவிதத்திலும் வித்தியாசமாக இருந்ததால் அந்தச் சந்திப்பை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்தேன்.
பேரரசரைச் சந்திப்பதற்கு நேரம் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று சர் எர்னஸ்ட் சடோவ் என்னிடம் கூறினார். சற்று தூரத்திலிருந்த கோடைக்கால அரண்மனையில் அரசவையினர் அப்போது வசித்துக் கொண்டிருந்தனர். எனினும், இந்தக் கீழ்த்திசைப் பேரரசின் அரசவை நடைமுறைகள் மிகவும் விசித்திரமானவை. அத்துடன், தானோ தனது அரசாங்கமோ சீன அரசாங்கத்திடம் ஏதோ ஒரு சலுகைக்காக பணிந்துபோகும் நிலையை ஏற்படுத்த பிரிட்டிஷ் தூதர் விரும்பவில்லை என்ற நிலையும் சாத்தியமானதே. ஒருவேளை பேரரசர் என்னை வரவேற்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; பெரும் மதிப்பை அளிப்பதாக நினைத்துக் கொள்ளலாம்; அந்தச் செயலுக்குப் மாற்றாக, கணிசமான அரசியல் சலுகை ஒன்றை பிரிட்டானியர்களிடம் அவர்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும்.
பார்வைக்கு, ஆட்சி செய்பவர் பேரரசர்தான். பெயரில் மட்டும்தான் அவர் பேரரசர். ஆனால், உண்மையில் அந்தத் தேசத்தில் சீனப் பேரரசிக்குத்தான் உச்ச அதிகாரம். சில ஆண்டுகளுக்குமுன், முற்போக்கான ஆலோசகர்கள் சிலரின் உதவியுடன் பேரரசின் நிர்வாகத்தில் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செய்ய அவர் விரும்பினார், முயன்றார். ஆனால், டோவேஜர் பேரரசியின் ஆதரவு பெற்ற பழமைவாதக் கட்சியினர் அதை விரும்பவில்லை. அதனால், பலவீனமான, முடிவெடுக்கத் தடுமாறிய பேரரசர், பேரரசிக்கு அடிபணிந்து, அவளது ஆதரவை நம்பியிருக்க வேண்டியதாயிற்று. அன்றிலிருந்து டோவேஜர் பேரரசி கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் பெற்றவரானார். அந்நிய நாட்டவர்க்கு எதிராக 1900இல் எழுந்த கிளர்ச்சியும் பேரரசியின் தூண்டுதலால் ஏற்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
டீன்-ட்ஸின் நகரில் ஓர் இரவைக் கழித்தோம், மறுநாள், சி லி மாகாணத்தினுடைய வைஸ்ராய் இல்லத்தைப் பார்ப்பதற்குச் சென்றேன். அவரது பெயர், யுவான் ஷிகாய். எனக்குத் தெரிந்தவரையில் அந்தத் தேசத்தின் மிக மோசமான நிலையை உணர்ந்த ஒரே ராஜ தந்திரி அவர் மட்டுமே. பொருளாதார, அரசியல் அம்சங்களில், விவகாரங்களில் முன்னேற்றம் தேவை என்ற உண்மையான விருப்பம் அவருக்கு இருக்கிறது. அதேநேரத்தில், டோவேஜர் பேரரசிக்கு ஆதரவான பழமைவாத சந்தேகப் பிராணிகளிடம் மோதாமல் தனது நிலையை பத்திரப்படுத்திக் கொண்டுள்ளார். அதிக அதிகாரம் பெற்றவராக இருக்கிறார், இந்த வைஸ்ராய். அவர் வகிக்கும் பதவியும் அந்தஸ்தும் அவரது ராஜவிசுவாசத்துடன் நெருக்கமானவை.
சீனாவில் பதினெட்டு மாகாணங்களுக்குக் குறைவில்லாமல் இருக்கின்றன; ஒவ்வொன்றுக்கும் ஒரு வைஸ்ராய் நியமிக்கப்படுகிறார். அவர் ஊதியம் பெறும் அதிகாரியல்ல. வருவாயின் ஒரு பகுதியைத் தனக்கான ஊதியமாக வைத்துக் கொள்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் படையொன்றைப் பராமரிக்க வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது. தேவைப்படும் நேரங்களில் பேரரசியின் சேவைக்கு அவர்களை அனுப்பவேண்டும். பராமரிக்கும் ஆட்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து, அந்த வைஸ்ராயின் வருமானத்தை மிகக் கச்சிதமாகக் கணித்துவிடலாம். எடுத்துக்காட்டாக வைஸ்ராய் யுவான் ஷிகாய், 50,000 வீரர்கள் கொண்ட படையை நிர்வகிக்கிறார். இவர்கள், சீனப் பேரரசின் மிகச் சிறந்த வீரர்கள் என்று சொல்லப்படுகிறது. ஜெர்மானிய அதிகாரிகள் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். தற்போது கேப்டன் மென்ஸீஸ் எனப்படும் ஆங்கிலேயர்தான் வைஸ்ராயின் ராணுவ ஆலோசகர்.
இந்த அதிகாரிதான் ‘யாமென்’ எனப்படும் வைஸ்ராயின் அதிகாரப்பூர்வ வசிப்பிடத்தை/அலுவலகத்தை எனக்குச் சுற்றிக்காட்டினார். பெரிய அளவிலான நாற்கர முற்றம் போன்ற இரண்டு பகுதிகளைக் கடந்துசென்றோம். முதல் முற்றத்தின் வாயிலுக்கு வெளியில் அதிக எண்ணிக்கையில் ‘செடன்’ நாற்காலிகள், ‘மாண்டரின்களின்’1 பயணம் செய்வதற்காகக் காத்திருந்தன. மட்டக்குதிரைகள் பல, அவற்றின் சொந்தக்காரர்கள் உடனடியாக ஏறிச்செல்ல ஏதுவாக சேணத்துடன் காத்திருந்தன. அனைத்து வாயில்களிலும் வீரர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். உயர் அதிகாரிகள் உள்ளே வருவதும் போவதுமாக அந்த இடம் பரபரப்பாக இருந்தது. அவர்கள் அணிந்திருந்த பட்டாடைகள், அந்த மனிதர்களை மிகவும் பகட்டாகக் காட்டின. தலைத் தொப்பிகளை அலங்கரித்த மயிற்பீலிகளும் அதற்கு மேலும் அழகு சேர்த்தன.
அந்தக் காட்சி, தனித்த, கீழ்த்திசை பண்பாட்டை வெளிப்படுத்தியது. இந்தியாவின் சில பழமையான அரண்மனைகளில் பார்ப்பதுபோல் இருந்தது. எனினும், குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளுடன் இருந்தன. வேறு எங்கும் வழக்கத்தில் இருக்க வாய்ப்புள்ள இதைப்போன்ற ஒன்றுடன் நிச்சயம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
சாண்ட்லியர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரிய, உயரமான வரவேற்பறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு பல உயர் அதிகாரிகள் காத்திருந்தனர்; ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்ட அந்தக் கணத்தில் சீன பாணியில் நன்கு குணிந்து வணங்கி கைகளை குலுக்கிக்கொள்கிறார்கள்; நடைபெற இருந்த பெரும் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர்கள் வந்திருந்தனர்; அந்தக் கவுன்சிலுக்கு வைஸ்ராய் தலைமை ஏற்கவிருந்தார். இதைப்போன்ற நிகழ்ச்சிகளில் அந்நியர்கள் வரவேற்கப்படுவதில்லை என்று என்னுடன் வந்த ஆங்கில அதிகாரி குறிப்பால் உணர்த்தினார். சுவாராஸ்யம் நிறைந்த அந்த வரவேற்பறையில் தொடர்ந்து இருக்கமுடியாமல் அந்தக் குறிப்பு என்னைத் தடுத்தது.
அடுத்து வைஸ்ராயின் மகனைப் பார்த்தேன்; பதினெட்டு வயதுள்ள இளைஞர். ஆங்கில மொழியை நன்றாகப் பேசினார். ஐரோப்பிய பாணியில் அமைந்திருந்த சிறிய வரவேற்பறையில் என்னை வரவேற்றார். அங்கே சென்றதில் மகிழ்ச்சியடைந்தேன்.
ரயில் நிலையம் வந்தபோது, சீக்கியர்களின் குழு ஒன்று என்னைச் சந்தித்தது. உரை நிகழ்த்துவதுபோல் அவர்கள் சில விஷயங்களைக் கூறினர். இந்தியக் காவற்படை ஒன்று அங்கிருக்கிறதாம்; அது தொடர்பான பணிகளுக்காக, ஏதோ ஓர் அந்தஸ்தில், சீனாவுக்கு வந்தவர்கள் அவர்கள். வழிபட இடம் இல்லையாம். அதனால் சீக்கிய கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஆர்வத்துடன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். அதற்கு நன்கொடை அளிக்குமாறு என்னிடமும் கேட்டனர். அந்த வேண்டுகோளுக்கு நானும் இசைந்தேன்.
எங்களது அடுத்த நிறுத்தம் ஷான்ஹாய்க்வான் (இன்று ஷான்ஹாய்குவான்). காலை பத்து மணிக்கு டீன் – ட்ஸின் நகரை விட்டுப் புறப்பட்டோம்.
___________
1.மாண்டரின்கள்- சீனப் பேரரசில் உயர் பொறுப்புகளை வகிப்பவர்கள்.↩
(தொடரும்)
___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின் தமிழாக்கம்