Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

பதினேழாம் தேதி. தலைநகரத்தின் மிகச் சிறந்த உருவாக்கங்களான புகழ்பெற்ற ஷிபா கோவில்களுக்குச் சென்றேன்.

ஒரு செவ்வகமான இடத்தில் பல கோவில்கள். அவற்றின் உட்புறம் மிக விரிவாகவும் நுட்பமாகவும் வண்ணம் தீட்டப்பட்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பொன்னிறப் பூச்சுகளுடன் மர வேலைப்பாடுகளும் காணப்பட்டன. பிரதான கோவிலுக்குள் சென்ற அந்த நேரத்தில் மதியப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. பிக்குகளும் வழிபாடு செய்ய வந்தவர்களும் அவ்வப்போது எழுந்தனர், முழந்தாளிட்டு வணங்கினர்; ரீங்காரமிடுவது போன்று ஒரே குரலில் ‘ஓம் நமோ அமி தாய்புட்ஸு (புத்தருக்கு வணக்கம்) என்று தொடர்ச்சியாக உச்சாடனம் செய்தனர். இந்தக் கோவில்களுக்கு ஆண்டுக்கொருமுறை பேரரசர் வருகை தருவார் என்று கூறினார்கள்.

ஜப்பானில் இரண்டு சமயங்கள் பின்பற்றப்படுவது பொதுவாக வெளியில் தெரியாத ஒன்று. பௌத்தத்தின் இரண்டு அல்லது மூன்று வகைப் பிரிவுகளைப் பின்பற்றும் ஒருவகையினர். மற்றொன்று ஷிண்டோயிஸம். இது தேசத்தின் மதம். பேரரசர் பின்பற்றுவதும் இதுதான். அந்த மதத்தின் பெயரை வைத்து ஷிண்டோயிஸம் அரிதாகவே மதிக்கப்படுகிறது.

ஏனெனில், இது முதன்மையாக மூதாதையர் வழிபாட்டைக் கொண்டது. மிக எளிமையான அறம்சார்ந்த விதியைப் பின்பற்றச் சொல்கிறது. அதனுடைய பிரதான கொள்கை, மிகாடோவிற்குத் தெய்வீகத்தன்மை அளித்தல். (மிகாடோ, ஜப்பான் பேரரசருக்கு முந்தைய காலத்தில் அளிக்கப்பட்டிருந்த கௌரவ பட்டம்.) ஆனால், இவற்றிற்கு அப்பால், உண்மையில், சாதாரண ஜப்பானியர்கள் எந்த ஒரு மதத்தைப் பற்றியும் தீவிரமாகச் சிந்தித்து தம் தலையை உடைத்துக் கொள்வதில்லை.

ஷிபா கோவில்
ஷிபா கோவில்

கோவில்களைச் சுற்றிப் பார்த்தபின், தலைமைப் பிக்குவைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். மடாலயத்திற்குள் என்னை அழைத்துச் சென்றனர். அன்புடனும், மரியாதையுடனும் என்னை வரவேற்ற அவர், வழக்கமாக ஜப்பானியர் வழங்கும் தேநீர் (ஜப்பான் மொழியில், ஓ’ச்சா) கொடுத்து என்னை உபசரித்தார்.

தேநீர் மஞ்சள் நிறத்தில், பாலும் சர்க்கரையும் இல்லாமலும்தான் பரிமாறப்படுகிறது. ஜப்பானில் ஒருவர் எங்கு சென்றாலும், இப்படித் தேநீர் அளிப்பது வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. அது ஒரு சாதாரண கடையாக இருக்கலாம், அல்லது கோவிலாக இருக்கலாம். அந்த முதன்மைத் துறவி, மஞ்சள் வண்ணத்தில் மேலங்கி அணிந்திருந்தார். நன்கு கற்றறிந்த, ரிஷிபோல் தோன்றினார். துதிகளை உச்சாடனம் செய்துகொண்டிருந்த மற்றப் பிக்குகளைப் பார்க்கலாம் என்று என்னை அழைத்து சென்றார்.

ரீங்காரத்திலும் மந்திர உச்சாடனம் போன்ற தொனியிலும் எனக்கு வேதங்களின் பாராயணம் நினைவுக்கு வந்தது. அவர்களது பாடல் சமர்ப்பணம் முடிந்ததும், நெற்றி தரையில்படக் குனிந்தும், இந்துக்களைப் போல் கைகளைக் குவித்தும் வணங்கினர். அந்த இடத்தைவிட்டுப் புறப்படுகையில், தலைமை பிக்கு, ஜப்பானிய மொழியில் அச்சிடப்பட்ட பௌத்தச் சடங்குகள் குறித்த புத்தகங்களின் இரண்டு பிரதிகளை எனக்கு வழங்கினார்.

மடாலயத்தின் அந்தப் புனிதச் சூழலைவிட்டு வெளியில் வந்தவுடன், இம்பீரியல் ஹோட்டலில் நடந்த நவீனத் திருமண வரவேற்பு ஒன்றில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்விற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். முக மலர்ச்சியுடன் நின்றிருந்த அந்த ஜோடி, டோக்கியோவின் பிரபுக்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணச் சடங்கு முடிந்தவுடன், கூடியிருந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அருகில் சென்று அவர்களது நல்வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர். நூற்றுக்கணக்கில் வந்திருந்த விருந்தினர்கள், ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய மேற்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மணமகள், அங்கு வசித்த சில கிறித்துவ குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவள்.

மணமக்கள் வாயிலின் அருகில் நின்று, நிகழ்விற்கு வந்துகொண்டிருந்த விருந்தினர்களை வரவேற்றனர். பாராட்டும் வாழ்த்தும் முடிந்தவுடன், வந்திருந்த அனைவரும், அடுத்தாற்போலிருந்த கூடத்திற்குள் சென்றோம். பெரும் விருந்திற்கு அமர்ந்தோம். விருந்து முடிந்ததும், ஒருவருக்கொருவர் நலம் பாராட்டி, மது அருந்தினர். அதன்பின் விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்றனர். நான் மணமகளின் தாயைச் சந்தித்துப் பேசினேன்.

ஜப்பானில் திருமணங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையில் பழக்கமான ஒருவரால் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று சொல்லலாம். இந்தியாவில் இவர் அதே இனத்தை சேர்ந்தவராக பெரும்பாலும் இருப்பார்; இங்கு அப்படி இல்லை. அவர்களது அந்தக் குறிப்பிட்ட வட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதராக அவர் இருக்கிறார்.

திருமண ‘முடிச்சு’ மிகவும் இறுக்கமற்றதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சமூகத்தின் கீழடுக்கில் இருப்பவர்கள் மத்தியில். நவீனக் கால சட்டத்தின்படி, ஒரு ஆணுக்குச் சட்டப்படியாக ஒரு மனைவிதான். ஆனால், சட்டம் மிகவும் தளர்வாக இருக்கிறது.

ஒரு ஆண், திருமணப்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று ஏதாவது ஓர் அற்பமான, போலியான காரணத்தைச் சொல்லி, தன் குடும்பத்திலிருந்து மனைவியின் பெயரை நீக்கச் சொல்லிக் கேட்கலாம். மிகச் சாதாரண நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. அதன் பின் தனக்குப் பிடித்தமான, மற்றொரு மனைவியை அவன் தேடிக் கொள்ளலாம்.

கணவனுக்கு, மனைவி முழுமையாகப் பணிந்து நடக்க வேண்டும். அவளதுமுதல் கடமை கணவனுக்குக் கீழ்ப்படிதல்; இரண்டாவது, மாமியாருக்கு, மூன்றாவது, அவள் தன் கணவனை இழந்துவிட்டால், மகனுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல்.

திருமணத்தில் மணமகளும், மணமகனும் ஐரோப்பியப் பாணி ஆடைகளைத்தான் அணிந்திருந்தனர் என்று நான் விவரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் பார்த்தவரையிலும், ஜப்பானிய மகளிர், அந்தத் தேசத்தின் உடைகளை அணிவதையே விரும்புகிறார்கள். ஜப்பானிய அரசவை நிகழ்வுகளுக்கு ஐரோப்பிய உடைகளை ஜப்பானியர் அணிவது மரபை மீறுவது அல்ல என்று கருதப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது; அதன்படி, சடங்கார்ந்த அரசு நிகழ்வுகளுக்கு ஜப்பானிய உடைகள் அணிய வேண்டிய வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆண், பெண் இருபாலருக்கும் இது பொருந்தும்.

ஐரோப்பியர்கள் பெரும்பாலானோரும், ஜப்பானியர்கள் பலரும் (இவர்கள் சிக்கனம் காரணமாக) தேசிய உடையிலிருந்து ஐரோப்பிய உடைக்கு மாறுவதை விரும்பவில்லை; கண்டித்தனர். ஆனால், அனைவரிடமிருந்தும் சேகரித்த தகவல்களிலிருந்து ஒரு முடிவுக்கு வரமுடிகிறது; (ஜப்பானில் நிகழும், மேற்கத்தியச் சிந்தனைகளுக்கும் தோற்றங்களுக்கும் மாறுகிற பொதுவான போக்கிற்கு இணையாக இது நடைபெறுகிறது).

வெளித்தோற்றத்தில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது என்ற எண்ணம், மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சமத்துவ நிலையை மனத்தளவில்ஏற்படுத்துகிறதாம். இந்த உணர்வு வெளிப்பாடுதான் இந்த மாற்றத்திற்கான நிஜமான காரணம்.

0

மாலையில் நகரத்தின் ஒரு பகுதியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். அகலமான, விளக்குகளின் வெளிச்சத்தால் ஒளிர்ந்த சாலை ஒன்றில் நுழைந்தோம். இருபக்கங்களும் இரண்டு மற்றும் மூன்று மாடிக் கட்டடங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும்/கட்டடத்திற்கும் முன்புறம் விசாலமான நடைமேடை போன்ற இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றித் தங்க முலாம் பூசப்பட்ட இரும்புக் கம்பிளால் ஆன வேலி போன்ற அமைப்பு. அந்த நடைமேடையின் பின்பகுதியும் நன்கு அலங்கரிக்கப்பட்டு, பொன்னிற முலாம் பூசப்பட்டிருந்தது.

ஒரு விலங்கியல் பூங்காவில் காட்டு விலங்குகள் பாதுகாக்கப்படுவதுபோல், இந்தக் கம்பி அடைப்புகளுக்குள் பெண்கள் அமர்ந்திருந்தனர். அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர். மிகை அலங்காரமும் ஆர்வமற்ற தன்மையும் அவர்கள் உடைகளில் தெரிந்தது. ஆண்களும் பெண்களும் அந்தச் சாலையில் திரளாக முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தனர். அன்று ஏதோ ஒரு வருடாந்திர விழா போல் தெரிந்தது. அவர்களில் பெரும்பாலோர், அந்த இரும்புச் சட்டகங்களுக்குள் இருந்த அழகிய உயிரினங்களை வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர். கம்பிகளுக்குள் அந்தப் பெண்கள் ஏதும் பேசாமல் மௌனமாக, அசையாமல் இருந்தனர். வழிப்போக்கர்களின் கூரிய பார்வையைப் பொருட்படுத்தவில்லை; அலட்சியமாக அமர்ந்திருந்தனர்.

‘யோஷிவாரா’ பகுதி
‘யோஷிவாரா’ பகுதி

இந்த அசாதாரண காட்சிக்கு அர்த்தம் என்ன என்று அறிந்து கொண்டதும் என்னையே நான் இழந்துவிட்டேன். இந்தப் பெண்கள் யார், ஏன் அப்படி அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை என் வழிகாட்டியிடம் கேட்டேன். இந்தத் தெருவிலும், வேறு சில தெருக்களிலும் இப்படி இந்தத் துரதிருஷ்டம் பிடித்த வர்க்கத்தினர் அடைக்கப்பட்டிருப்பார்கள் என்றார் அவர். அவர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு சட்டத்தின் அனுமதியில்லையாம்; வேறு வழியில்லை என்றால், உரிய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும். நான் குறிப்பிடும் அந்தப் பகுதி ‘யோஷிவாரா’ என்றழைக்கப்படுகிறது.

மதிக்கப்படும் ஜப்பானிய நடுத்தர வர்க்கத்தின் பெண்களும் சிறுவயது பெண்களும் சாதாரண கண்காட்சியை அல்லது ‘தமாஷா’வைப் பார்க்கச் செல்வதுபோல் அந்த இடத்திற்குப் போவதும், அங்கு நடப்பது என்ன என்பதைப்பற்றி எதுவும் சிந்திக்காமல் இருப்பதும், உலகின் பல்வேறு பகுதிகளில் மென்மை உணர்வுகள் மற்றும் ஒழுக்கச் சிந்தனைகள் குறித்தும் நிலவும் உணர்வுகளுடன் எவ்வாறு வேறுபடுகிறது என்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது.

நான் குறிப்பிடும், தரம் தாழ்ந்தவர்களாக நடத்தப்படும் இந்தப் பெண்கள் போன்றவர்களை எப்படி நடத்துவது என்பது அனைத்துச் சமூகங்களிலும் சிரமமான ஒரு காரியம். நமது இயல்பான நல்லுணர்வுகளை பெருமளவில் வெளிப்படுத்துவதும், நடைமுறையில் அவற்றைப் பின்பற்றுவதும், இதுபோல் பொதுவெளியில் கண்ணியத்தையும் அறநெறியையும் பாதிக்கும் ஒரு முக்கியமான செயலை எப்போதும் நாம் எதிர்த்துப் போராட உதவும். ஒருவேளை வேறு சில சமூகங்கள்ஜப்பானியர்களின் பழக்கமெனும் புத்தகத்திலிருந்து தங்களுக்குச் சாதகமான இதைப்போன்ற ஒன்றை உருவிக் கொள்ளவும் கூடும்.

0

நவம்பர் 18. அன்று காலை, பேரரசின் குடும்பத்தினர் மேற்கொள்ளவிருந்த ‘வாத்து வேட்டை’யில் கலந்துகொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது. பேரரசின் பாரம்பரியங்களை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சில ராஜ்ஜியங்களில் இதைப்போன்ற வருடாந்தர நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்கு மதிப்பிற்குரிய விருந்தினர்களும் தூதரகங்களின் அதிகாரிகளும் பொதுவாக அழைக்கப்படுவார்கள்.

கெடுவாய்ப்பாக அந்த நாளில் வானத்தில் மேகக்கூட்டம், மழை, பெய்வேன் என்று அச்சுறுத்தியது. அனைத்து விருந்தினர்களும், அந்த இடத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்குள் கூடியிருந்தனர். வேட்டைக்கு வெளியில் புறப்பட இருக்கையில் மழை தொடங்கியது. ஆனால், விளையாட்டை அனுபவிக்க வந்திருந்த அந்த மனிதர்களின் ஆர்வத்தை அது நனைத்துவிடவில்லை. மனைவியுடன் வந்திருந்த இளவரசர் ஹிகாஷி ஃபூஷிமி, பேரரசரின் சார்பில் விருந்தினர்களை வரவேற்றார். கடற்படை சீருடையிலிருந்த இளவரசர், தன் மனைவியுடன் அந்த கூடாரங்களில் ஒன்றிலிருந்தார். மற்ற விருந்தினர்கள், மழையைப் பொருட்படுத்தவில்லை.

அந்த வேட்டையின் முக்கியப் பொறுப்பாளியான டோடா கோமகன் அவர்களை வழிநடத்தினார். வந்திருந்தவர்கள், சிறு குழுக்களாக தம்மைப் பிரித்துக் கொண்டனர்; ஒவ்வொரு குழுவிற்கும் வேட்டை வெளியின் வெவ்வேறு பகுதிகள் ஒதுக்கப்பட்டன. வாத்துகளை பிடிப்பதற்குப் பின்பற்றப்பட்ட வழிமுறை தனித்த ஒன்று. பெரிய நீர்ப்பரப்பில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்தக் காட்டு வாத்துகள் ஒன்று திரட்டப்பட்டு, சிறு சிறு ஏரிகள் போன்ற நீர்நிலைக்குள் பிரித்து விரட்டப்படுகின்றன.

அங்கு அந்தப் பரப்பின் ஒரு முனையில் சுவர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. தெரியாமல் இருக்க இலை தழைகளால் மூடப்பட்டிருந்தது. இந்தச் சுவருக்குப் பின்னால், வேட்டையாட வந்தவர்கள் தங்கள் நிலைகளில் இருப்பார்கள். ஒவ்வொருவர் கைகளிலும் வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் வலையைக் காட்டிலும் சற்றே பெரிதான வலையொன்று இருக்கும். சமிக்ஞை கிடைத்தவுடன் அனைவரும் எழுந்திருப்பார்கள்; அவர்களது திடீர் பிரசன்னத்தால் மிரண்டு போகும் வாத்துகள் சிதறத் தொடங்கும்; அந்தப் பரபரப்பான, வசதியான தருணத்தில், அவற்றின் மீது வலையைப் போட்டுப் பிடித்துவிடுவார்கள்.

அந்த நடைமுறை சிரமமானதாக இல்லை; எனினும் என்னால் ஒரு வாத்தையும் பிடிக்க முடியவில்லை. எளிதாகப் பிடித்துவிடலாம் என்பது போல் தோன்றினாலும், அதில் வெற்றி பெறுவதற்கு மனிதத்திறமை ஓரளவுக்குத் தேவை என்பதை என்னால் எளிதில் கற்பனை செய்ய முடிந்தது. வேட்டையாடப்பட்டவை, உடனடியாக ‘ஷிகாரி’களால் சேகரிக்கப்பட்டன; விரைந்து சமைக்கப்பட்டு மதிய உணவில் பரிமாறப்பட்டன. உல்லாசமான ஒரு விளையாட்டின் இறுதிக்காட்சியாக அந்த விருந்து அமைந்தது.

அன்று மொத்தம் ஐம்பது வாத்துகள் பிடிபட்டன. வேட்டைக்கு இடையில், இடைவேளைகளில், குளிருக்கு இதமான வெப்பத்தைத் தந்த கூடாரத்தின் வசதியான சூழலில் ஷாம்பெய்ன், தேநீர், காபி, சாக்கலேட் போன்றவை வழங்கப்பட்டன. நேரத்தை மகிழ்ச்சியுடன் போக்குவதற்கு இவை உதவின.

மதிய உணவு நேரத்தில் ஆண் விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொள்ளப் பெண் ஒருத்தி வந்தாள். ஏரியின் நடுவில் அமைந்திருந்த கூடாரம் போன்ற ‘கியாஸ்க்’கில் உணவு பரிமாறப்பட்டது. அந்த இடத்திற்குச் செல்ல சிறிய பாலம் ஒன்று. அழகிய கலைநயத்துடன் பாலம் உருவாக்கப்பட்டிருந்தது. கூடாரத்தை அடைந்த எங்களை அரிதான, சூடான உணவு வரவேற்றது.

ஆங்காங்கே மேஜைகள் போடப்பட்டிருந்தன; ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நாங்கள் அமர்ந்தோம். மிகச் சிறந்த ஏற்பாடுகள், குறையேதுமில்லை. எங்களது கோட்டுகளும் சால்வைகளும்கூடகவனமாகப் பாதுகாக்கப்பட்டன. அனைத்தும் எண்ணும் பெயரும் குறிக்கப்பட்ட சீட்டுகளுடன், குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தன.

அனைத்துத் திசைகளையும் நன்கு பார்க்கும் வசதியுடன் அந்தக்கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் தெள்ளிய, படிகம் போன்ற நீர்ப்பரப்பு. பல வண்ணத்தில் இலைகளுடன் நின்றிருந்த மரங்கள் அற்புதக் காட்சியைத் தந்தன. அங்கு நான் தங்கும் நேரத்தைச் சுருக்கிக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கு நிகழ்ந்தது.

0

உட்சுனோமியா செல்லும் ரயிலை நான் பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு மணி நேரம் பயணத்தில் யுனோ ரயில் நிலையத்தை அடைந்தோம். ஜப்பானின் ராணுவ மேற்பார்வை அமைப்பின் கேப்டன் இமோரி துணைவர அங்கிருந்து 03.20க்குப் புறப்பட்டோம். எனக்கு உதவியாக இருப்பதற்கும் அடுத்த நாள் நாங்கள் பார்க்கப் போகிற விஷயங்கள், மற்றும் பயிற்சிகளை விளக்குவதற்கும் வழிகாட்டியாகவும் இமோரி பணிக்கப்பட்டிருந்தார்.

ஜப்பானில் அவர் போதுமான அளவுக்கு பிரெஞ்சு மொழி கற்றிருந்தார். அன்று மாலையே நாங்கள் உட்சுனோமியாவை அடைந்துவிட்டோம். நான் அங்கு சென்று சேர்ந்ததுமே இரண்டு ராணுவ அதிகாரிகள் என்னை வந்து சந்தித்தனர். பேரரசின் பாதுகாப்புப் படையின் கமாண்டரும், போலிஸ் இன்ஸ்பெக்டரும் அவர்களை அனுப்பியிருந்தனர். அருகிலிருந்த ஜப்பானிய ஹோட்டல் ஒன்றிற்கு என்னைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். ஐரோப்பியப் பாணியில் அமைக்கப்பட்டிருந்த சில அறைகள் நான் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தன. போதுமான சௌகரியத்துடன் அன்று இரவுசென்றது.

மறுநாள், ஒரு ரிக்‌ஷா எடுத்துக்கொண்டு, சுத்தமான அந்த உட்சுனோமியா நகரைச் சுற்றிப்பார்த்தேன். அதன்பின், போர்ப்பயிற்சிகள் நடைபெற இருக்கும் பயிற்சி மைதானத்திற்கும் சென்றேன். சுமார் மூன்று மைல் தொலைவிலிருந்தது. அந்த இடத்தை அடைந்ததும் துருப்புகள் எவரும் கண்ணில் படவில்லை. தூரத்தில் கேட்ட பீரங்கிகள் வெடிக்கும், மஸ்கட்களால் சுடும் சப்தங்கள் தான் அருகில் படைவீரர்கள் இருப்பதற்கான அறிகுறியாய் இருந்தன.

சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பின், குறிப்பிட்ட இடமொன்றுக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு பேரரசரது பாதுகாப்புப்படையின் கமாண்டர், ஜெனரல் ஹசேகவாவைச் சந்தித்தேன். அவரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டேன். அந்தத் தருணத்தில் அவர் அந்தப் போர்ப் பயிற்சியின் தலைமை அம்பயராக (Umpire-in-Chief) செயல்பட்டார்.

அப்போது எதிர்த்தரப்புப் படையினர் முன்னேறி வருவது கண்ணில் பட்டது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளப்போகிற அந்தக் காட்சியை நன்கு பார்க்கக்கூடிய ஒரு இடத்திற்கு விரைந்தேன். அந்த மோதல் நடைபெற வாய்ப்பிருக்கும் இடத்திற்கு அருகில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. சண்டையில் ஈடுபடப் போகிறவர்களுக்கு இடையில் ஐம்பது கெஜ தூரந்தான் இருக்கும். மோதல் வழக்கமான பாணியில்தான் தொடங்கியது; முதலில் பீரங்கிகளின் தாக்குதல். அதன் மூலம் ஒருவர் மற்றொருவரைத் தாக்கிப்பின்வாங்கச் செய்ய முயன்றனர்.

அதன்பின் காலாட்படை வீரர்கள் தாக்குதல் நடத்த முன்னேறி வந்தனர். ஒருவர் மற்றொருவரின் பக்கவாட்டில் சென்று தாக்குதல் நடத்தவும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதிரியின் தாக்குதலிலிருந்து புத்திசாலித்தனமாகப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்த முயற்சிகள் மிகவும் ஆர்வமூட்டின.

நான் அனைத்து ஐரோப்பியப் படைவீரர்களின் அணிவகுப்புகளையும் பயிற்சியையும் பார்த்திருக்கிறேன். இந்த ஜப்பானியர்களின் வெளித்தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, ஒரு கணம் நான் என்னை மறந்தேன். தூரக்கிழக்கில் தான் இருக்கிறேனா என்று எண்ணினேன். அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பிரெஞ்சு பாணியில் இருந்தன. ஆனால், வீரர்களின் நகர்வும் பயிற்சியும் ஜெர்மானியர்களிடம் இருந்து பெற்றவை. நெருக்கத்தில் சென்று ஆய்வு செய்தபோதுதான் ‘மாயத் தோற்றம்’ மறைந்தது. வேறுபட்டிருக்கும் அம்சங்கள் கண்களில் பட்டன. சற்று நேரத்தில் ‘போர்’ முடிவுக்கு வந்தது; எதிரிகளாய் இருந்த வீரர்கள், உடனடியாக நண்பர்கள் ஆகிவிட்டனர். உணவின் போதும் மதுவருந்தும் போதும் அவர்களிடையே சகோதரத்துவம் வெளிப்பட்டது.

ஜப்பானியர்களுக்கு உடல்ரீதியாக அசாதாரண தாக்குப்பிடிக்கும் சக்தி இருக்கிறது. இந்த வீரர்களைப் பற்றி நான் விவரிக்கும் அந்த நாளில் விடியல் காலை நான்கு மணியிலிருந்து அந்த மைதானத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆயுதங்களின் சுமையுடன், காலை பதினோரு மணி வரையிலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். சோர்வை அளிக்கும் இவ்வளவு நேரக் கடினமான பயிற்சிக்குப் பின்னும், அவர்களிடம் அசதியையோ, வேறு தாக்கத்தையோ பார்க்க முடியவில்லை.

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *