Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

அறிவுத் துறை முயற்சி

ஜப்பானியப் படை வீரர்களுக்கான உணவு மிகச் சிறந்த முறையில், மிக எளிய முறையில் வழங்கப்படுகிறது. வீரர்கள் தமது முதுகுப் பையில் அதை வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு கச்சிதமான பெட்டி. ஒரு நாளுக்கான உணவை அதில் வைக்கமுடியும். அந்தப் பெட்டி இரண்டு மூன்று பகுதிகளாக உள்ளுக்குள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒன்றில் பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி. மற்றொன்றில் அரிசிச் சோறு. கெட்டியாக ஒரு ’புட்டிங்’ போலப் பெட்டிக்குள் வைப்பதற்குத் தோதாக, ஒரு திடமான நிலைக்கு அது வேக வைக்கப்படுகிறது. மூன்றாவது சிறிய பகுதி, தவிர்க்கவே முடியாத ’சாப் ஸ்டிக்ஸ்’ வைத்துக் கொள்வதற்கு.

இந்த ஏற்பாட்டின் பெரும் சிறப்பு, அந்த உணவு, அழகான கச்சிதமான முறையில் எடுத்துச் செல்ல முடியும்; அதேபோல் உணவு திட வடிவத்திலும் இருக்கும். அத்துடன், ஒவ்வொரு வீரனும், உணவுக்காக அதை விநியோகிக்கும் துறையைச் சார்ந்திருக்கவேண்டியதில்லை.

வீரர்கள் மத்தியில் நான் கொஞ்ச நேரம் இருந்தேன். என் மனத்திற்குள் அனைத்தையும் குறித்துக்கொண்டேன். அவர்கள் அணிந்திருக்கும் சீருடையை உன்னிப்பாகக் கவனித்தேன். அவர்கள் உணவு உண்ணும் முறையைப் பார்த்தேன். தவிர்த்து மேலும் பல தனிப்பட்ட விவரங்களையும் குறித்துக் கொண்டேன். அனைத்தும் எனக்குப் பெரும் ஆர்வம் ஊட்டின.

வீரர்களின் அணிவகுப்பு, சற்றுத் தொலைவில் நடப்பதாக இருந்தது. இறுதி ’பயிற்சி-சண்டை’ நடைபெற்ற இடத்திலிருந்து அந்த இடம் ஐந்து மைல் தூரமிருக்கும். ஹோட்டலுக்குச் சென்று, மதிய உணவை முடித்துவிட்டு, அந்த மாபெரும் இறுதி நிகழ்விற்கு திரும்பிவர போதுமான நேரம் இருக்கிறது.

’பரேடு’ நடக்கும் அந்த இடத்திற்குச் சென்றபோது, அந்தச் சதுரமான இடத்தின் மூன்று புறத்திலும் துருப்புகள் ஒழுங்காக அணிவகுத்து நின்றிருந்தனர். ஒருபுறம் குதிரைப் படையினர், ஒருபுறம் பீரங்கிப்படை, மற்றொரு புறத்தில் காலாட்படையினர் மிக நெருக்கமான அணிவகுப்பில் நின்றிருந்தனர். மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மேடையில் பேரரசின் பாதுகாப்புப் படையின் கமாண்டர் நின்றிருந்தார். அவர் அருகில் படையின் சில அதிகாரிகள். அதில் ஒருவர் பேரரசரின் உறவினர். குள்ளமான, உறுதியான மனிதர், ஐந்தடி உயரம்தான் இருப்பார்.

அந்த நேரத்தில், ராணுவம் சாராத மந்திரி ஒருவர் காட்சிக்குள் நுழைந்தார். தலையில் தொப்பியும் கோட்டும் அணிந்திருந்தார். பயிற்சிகள் அனைத்தும் மிகச் சிறந்த முறையில் நடந்து முடிந்ததை ஒட்டி, பேரரசர் தனது திருப்தியையும் வாழ்த்துகளையும் தெரிவித்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

குதிரைகளிலிருந்து இறங்கி நின்று, தலையிலிருந்து தொப்பிகளை அகற்றிவிட்டு பேரரசரின் செய்தியை அவர்கள் கேட்டனர். அதைத் தொடர்ந்து பேரரசரின் செய்தித் துருப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் குதிரைகளில் மீண்டும் அமர்ந்ததும் அணிவகுப்பு தொடங்கியது; குதிரைப்படையினர் வேக நடையில் சென்றனர்; தொடர்ந்து, பீரங்கிப்படை அதைத் தொடர்ந்து காலாட்படை சென்றது.

குதிரைப்படை வீரர்கள் தோற்றத்தில் நன்றாகத்தான் இருந்தனர்; ஆனால், உயரம் குறைவான மட்டக் குதிரைகளில் அவர்கள் அமர்ந்திருந்த முறை அவ்வளவு நன்றாக இல்லை. ஐரோப்பாவிலோ இந்தியாவிலோ பார்க்க முடிகிற குதிரையேற்றங்களை இவற்றுடன் ஒப்பிடவே முடியாது. இதைப் போன்ற ஒரு குதிரைப்படை, மிக உறுதியான, உயரமான குதிரைகளில் ஏறி வரும் கொஸாக் வீரர்களை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று நினைத்துப் பார்ப்பது கடினமாக இருந்தது. எனினும், இப்போதைய மோதலில் அவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். யுத்தம் ஆச்சர்யங்கள் நிறைந்தது.

பீரங்கிப்படை பார்ப்பதற்கு நன்றாகவும், திறமையான ’யூனிட்’ போலவும் தோன்றியது. குதிரைகள் பீரங்கி வண்டிகளை இழுத்து வந்தது நன்றாக இருந்தது. பீரங்கிகள் நவீனகாலத்தவை. காலாட்படையினர் எதுவும் செய்யவில்லை என்றாலும், எனது வியப்பை அதிகரிக்கச் செய்தனர். அற்புதமான அணிவகுப்பில், மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாய் நடை போட்டனர். ஜெர்மானியர்களின் ‘கூஸ் ஸ்டெப்’ பாணியை ஜப்பானிய வீரர்கள் பின்பற்றினர். யுத்தத்தில் இது பயன்படாதுதான். எனினும், அணிவகுப்பு நன்றாகத் தோன்றுவதற்கும், ’ஃபார்மேஷன்’ கச்சிதமாக அமையவும் பெரிதும் உதவியது.

அணிகள் ஒவ்வொன்றும் மேடையைக் கடந்து சென்றபோது, அதன் தலைமைப் பொறுப்பிலிருந்த அதிகாரி, தனது வாளைத் தாழ்த்தி கமாண்டருக்கு வணக்கம் செய்தார். அத்துடன் மிக நேர்த்தியான, ஒரு கட்டளை முழக்கம் – ’வலது பக்கம் கண்கள்.’ அவரது அணியிலிருந்த ஜப்பானியர்கள் உடனே திரும்பி வணக்கம் செய்தனர், ‘பரேடில்’ கலந்துகொண்ட துருப்புகள் அனைவரும் பேரரசின் பாதுகாப்புப் படையைச் சேர்தவர்கள். அப்படையில் இருபதினாயிரம் பேர் இருக்கிறார்கள். அதில் பாதி வீரர்கள், இந்தப் பயிற்சிகளிலும் அணிவகுப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்று அவர்கள் யுத்தக் களத்தில் பயன்படுத்தும் கருவிகளுடன், சுமைகளுடன் இருந்தனர். காலையிலிருந்து அவர்கள் ஈடுபட்டிருந்த கடினமான பயிற்சிகளால் அழுக்காகவும் சோர்ந்தது போலும் தோன்றினாலும், அசாதாரணத் தகுதியுடன், எந்தப் பணி அளித்தாலும் உடனே செய்வதற்குத் தயாராக இருப்பதுபோல் தோன்றினார்கள். ’பரேடு’ முடிந்ததும், கமாண்டரிடமும் அங்கு இருந்த சில அதிகாரிகளிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். டோக்கியோவுக்குச் செல்லும் ரயிலைப் பிடிக்க, உரிய நேரத்தில் நிலையத்தில் இருக்க வேண்டும். ஆனால், அன்று டோக்கியோவில் டின்னருக்கு தாமதமாகத்தான் போய்ச் சேர்ந்தோம்.

0

இருபதாம் தேதி காலை நேரத்தை மாபெரும் இம்பீரியல் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ய ஒதுக்கினேன். இம்பீரியல் ஹோட்டலில் இருந்து பல மைல்கள் தூரம் தள்ளி அமைந்திருந்தது. பிரிட்டிஷ் தூதரகத்தின் செயலர்களில் ஒருவர் என்னுடன் வந்தார். பல்கலைக்கழகத்தில் அதன் இயக்குநரும் அதிகாரிகள் பலரும் எங்களை வரவேற்றனர்.

அவர்களின் உதவியுடன், வழிகாட்டுதலுடன் அந்த வளாகத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினோம். பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொழிகளுக்கான துறைக்குச் சென்றேன். அங்கு பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு தனித்தனி பகுதிகள் இருந்தன. அம்மொழிகளைக் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கு தனித்தனி அறைகள்.

பேராசிரியர்கள், அவர்கள் எந்த மொழியைக் கற்பிக்கிறார்களோ அந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். எனினும், ஆங்கில மொழியைக் கற்றுத் தருபவர் ஓர் அமெரிக்கர். பிரெஞ்சுப் பேராசிரியர் பாடம் நடத்தியதை மாணவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் கவனித்தேன். அம்மொழிச் சொற்களைச் சரியாக உச்சரிக்க அந்த மாணவர்களின் செய்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தன. எனினும், அவர்களது மொழி குறித்த புரிதல் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்; மொழிகளைக் கற்றுத் தருபவர்கள் மட்டுமே வெளிநாட்டவர்கள்; மற்றவர் ஜப்பானியர்கள்.

இவர்களில் பெரும்பாலோர் தம் மேல்படிப்பை ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ பெற்றவர்கள். பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் அங்கு விரிவாகக் கற்றுத் தரப்படுவது எனக்குப் பெரும் வியப்பைத் தந்தது எனக் கூறலாம். இதை எனது நாட்டின் நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் இந்தக் கல்லூரியில் கற்றுத் தரும் பாடங்களை, ஐரோப்பாவிற்கு வெளியில் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும் என்ற எண்ணமே இதற்குமுன் எப்போதும் எனக்கு ஏற்பட்டதில்லை.

கடந்த முப்பது ஆண்டுகளில் ஜப்பானியர்கள் கலை மற்றும் அறிவியல் துறைகளில் அடைந்திருக்கும் முன்னேற்றம் மிகவும் ஆச்சரியமானது. வகுப்பறைகள் ஆர்வம் மிகுந்த மாணவர்களால் நிரம்பியிருந்தன. நவீனக் கட்டடக் கலை, கட்டடப் பொறியியல், ஆயுதம் மற்றும் வெடிமருந்து தயாரிப்பு, தந்தித் தொழில்நுட்பம், மின்சாரப் பொறியியலின் அனைத்துப் பிரிவுகளும், கப்பல் கட்டுமானம் மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் தேசத்திற்கு வளஞ்சேர்க்க வழிவகுக்கும் மிக முக்கியமான பல துறைகளிலும் மாணவர்கள் மிக்க ஆர்வத்துடன் கடினமாக உழைத்துக் கற்கின்றனர். அவர்களில் நேபாளி மாணவர்கள் இருவரைப் பார்த்ததும் எனக்கு வியப்பு. நேபாள அரசு அவர்களை அனுப்பியிருக்கிறது.

இம்பீரியல் கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் அத்துறை பயிற்றுவிக்கும் பாடம் சார்ந்த வடிவங்களும் மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கடல்சார் கட்டுமானத் துறையைக் குறிப்பிடவேண்டும். தற்காலத்து நவீனப் போர்க்கப்பல்கள், க்ரூய்ஸர்கள், தாக்கி அழிக்கும் கலங்கள், டார்பீடோ படகுகள் போன்ற இன்னும் சிலவற்றின்  ‘அளவு- மாதிரி’ வடிவங்களால் அது நிரம்பி வழிந்தது.

உலக நாடுகளின் மத்தியில் ஜப்பானுக்கு இருக்கும் தற்போதைய முக்கியத்துவத்திற்கான காரணத்தை நாம் தொலைவில் தேட வேண்டிய தேவையில்லை. ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருப்பதுபோல் கலை மற்றும் அறிவியல் துறைகளில் அவர்களிடம் இல்லாத அறிவைப் பெறுவதற்காக, ஜப்பானிய அரசாங்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் கற்பதில் சிறந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் பல நூறு மாணவர்களை அனுப்புகிறது. அங்கு அவர்கள் தேவையான அறிவைப் பெற்று, சொந்த நிலத்திற்குத் திரும்பியதும் பெற்ற அறிவை ஜப்பானில் பரப்புவதற்குக் கல்லூரிகளில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இந்த நடைமுறையில் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பும் மாணவர்களின் சதவீதம் குறையுமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது, தற்போது ஐரோப்பாவிற்கு மாணவர்களை அனுப்பும் தேவை மிகவும் குறைந்திருக்கிறது. விலக்காக, அசல் ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அனுப்புவது இருக்கிறது. அத்துடன் புதிய கண்டுபிடிப்புகளையும் நவீன விஷயங்களையும் சொல்லித்தர அவற்றில் திறன் பெற்றவர்களை ஜப்பானில் உள்ள கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் நியமிப்பதற்காக அனுப்பும் நோக்கம் தொடர்கிறது.

ஜப்பானியர்கள் அனைத்து மேற்கத்திய கலைகளையும் அறிவியலையும் ஆய்வுக்கும் பரிசீலனைக்கும் உட்படுத்தியதாகத் தெரிகிறது. அவற்றிலிருந்து நல்லதனைத்தையும் ஏற்றுக்கொண்டனர். அதே நேரத்தில் மோசமானதை அல்லது சாதாரணமானதை வேறுபடுத்திப் பார்த்து நிராகரிக்கவும் செய்துள்ளனர். மருத்துவம் மற்றும் வேறு சில அறிவியல் துறைகளில் ஜெர்மனியின் முன்னேற்றைத்தைப் பின் பற்றுகின்றனர்.

அதுபோல் கப்பற்படையில் அதன் கட்டுமானத்தில் ஆங்கிலேயர் வழிமுறைகளை மாதிரியாகக் கொள்கின்றனர். ராணுவத்திற்கு ஜெர்மனியையும், சட்டம் சார்ந்த விஷயங்களில் பிரெஞ்சு முறைகளையும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில் ஜப்பானிய இயந்திரவியல் துறையின் வளர்ச்சி பெருமளவிற்கு அமெரிக்க முன்முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பு நிலையை எட்டியிருக்கும் பல்வேறு நாடுகளின் வழிமுறைகளைக் கவனித்து, அவர்களது பாரபட்சமற்ற அபிப்பிராயத்தில் எது நல்லதாகத் தோன்றுகிறதோ அதையே ஏற்று, பின்பற்றினர். தற்போது அவர்கள் ஒரு துறையின் பல்வேறு சிறந்த பகுதிகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். முழுதாக, ஒவ்வொரு தொழிற்துறையிலும் தங்களுக்கான ஓர் அமைப்பை உருவாக்கிக் கொள்வது. அவர்களது இந்த முடிவு எவ்வளவு தூரம் நம்பகமானது என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று. ஆனால் ஏற்கனவே அவர்கள் அடைந்திருக்கும் வெற்றிகளைப் பார்க்கையில் மிகத் துல்லியமாகப் பாகுபடுத்திப் பார்க்கும் சக்தி ஜப்பானியர்களுக்குக் குறைவாக இல்லை என்றுதான் தோன்றுகிறது.

மிகவும் சுவாரஸ்யமான, மிக முக்கியமான இந்த நிறுவனத்திற்கு நான் மேற்கொண்ட விஜயம், பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கும் நூலகத்தைக் குறுகிய நேரம் சுற்றிப்பார்த்ததுடன் முடிவுக்கு வந்தது. பல்வேறு அறிவியல் பாடங்கள் தொடர்பாக பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அங்கு இருந்தன. அறிவைத் தேடும் மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற உதவியாக அவை இருக்கும். நூலகத்தில் மறைந்த பேராசிரியர் மாக்ஸ் முல்லரின் மொழிபெயர்ப்பில் மாபெரும் சம்ஸ்கிருதத் தொகுப்பு ஒன்றைப் பார்த்தேன். அற சிந்தனையுள்ள ஒரு பணக்கார ஜப்பானியர் கல்லூரிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

கற்றுக்கொள்வதற்கு ஆகச் சிறந்த, இந்த வியத்தகு கல்லூரியில் என்னால் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்க முடிந்தது. அந்த நேரத்தில் நான் செலுத்திய கடின உழைப்பின் மூலம், அங்கிருந்த அனைத்து அற்புதங்களையும் குறித்த பொதுவான மற்றும் மேலோட்டமான ஒரு புரிதலை மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

நான் செல்ல வேண்டிய இடங்களும் சந்திக்க வேண்டியவர்களும் இருந்தனர். அதனால் ஜப்பானின் எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கக் கூடியவற்றால் நிறைந்திருந்த அந்த இடத்தில் எனக்குக் கிடைக்கவிருந்த மகிழ்வையும் ஆர்வத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்த இடத்தை முழுமையாக சுற்றிப் பார்ப்பதற்கு எனக்கு நிச்சயம் அந்த நாள் முழுவதும் தேவையாக இருந்திருக்கும்.

நான் அடுத்து செல்லவிருந்த இடம், உயர்நீதிமன்றம்.

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *