Skip to content
Home » மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

1934 முதல் காந்தியடிகள் இறக்கும்வரை (1948), அவருடன் தொடர்பில் இருந்தார் மசானி. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தபோதும் அவ்வப்போது காந்தியடிகளைச் சென்று சந்தித்த வண்ணமிருந்தார். ஒருமுறை ஜேபியும் (ஜெயபிரகாஷ் நாராயண்), மசானியும் காந்தியடிகளைச் சந்தித்தனர். அப்போது காந்தியுடன் மசானி கைகள் குலுக்க, ஜேபியோ காந்தியின் கால்களில் விழுந்து வணங்கினார். ‘ஒரு புரட்சியாளரால் எப்படி இவ்வாறு நடந்துகொள்ள முடியும்?’ என்று ஜேபியைப் பார்த்து மசானி கேட்டார். ‘பெரியோர்களை மதிக்க வேண்டும் என்ற பழக்கத்துடன் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். அவ்வாறே தொடர்ந்து செய்வதில் எந்தத் தவறும் இல்லை’ என்று ஜேபி பதில் கூறினார். இருந்தபோதும், காந்தியின் கொள்கைகளை விமர்சிக்கவும் ஜேபி தயங்கியதில்லை. காந்தியடிகளுக்கு சோஷலிசக் கொள்கைகளை எடுத்து விளக்கி, அவரையும் சோஷலிஸ்டாக மாற்றும் எண்ணத்துடன் காந்தியடிகளுடன் பழகிவந்தார் மசானி. அவ்வாறு காந்தியோடு நெருங்கிப் பழகும்போது காந்தியடிகளின் பழக்கவழக்கங்களால் மசானி ஈர்க்கப்பட்டார்.

ஒருமுறை, ஒரிசாவிற்கு வந்து தன்னுடன் 10 நாட்கள் தங்கி ஒரு பாதயாத்திரையில் பங்குபெறுமாறு மசானியைக் கோரினார் காந்தியடிகள். அழைப்பை ஏற்றுக்கொண்டு யாத்திரையில் கலந்துகொண்டார் மசானி (மே 1934). பாத யாத்திரை இவ்வாறு நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு எழுந்தவுடன், காந்தியின் தலைமையில் பிரார்த்தனைக் கூட்டம். பிறகு அதிகாலை 5 மணிக்குப் பாதயாத்திரை துவக்கம். 7-8 கிலோமீட்டர்கள் நடந்தவுடன் வருகின்ற கிராமத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் உரையாடல். தீண்டாமைக்கு எதிராக அந்தக் கிராமத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தொழிலாளர்களைப் பாதிக்கும் பிரச்னைகள் போன்றவை குறித்த விவாதங்கள். சூரியன் மறைவதற்குச் சற்றுமுன்பு பாதயாத்திரை தொடர்ச்சி. இரவு இன்னொரு கிராமத்தைச் சென்றடைதல். அங்கேயே இரவு தங்குதல். இதேமுறையில் 10 நாட்களுக்குத் தினமும் இரண்டிரண்டு கிராமங்களுக்குப் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பாதயாத்திரையின்போது, தினமும் காலை வேளையில் 1 மணி நேரம், மாலை வேளையில் 1 மணி நேரம் என மொத்தம் 20 மணிநேரங்கள் காந்தியுடன் உரையாடினார் மசானி. காந்தியின் கொள்கைகள் குறித்தும், சோஷலிசக் கொள்கைகள் குறித்தும் தன்னுடைய கேள்விகளைக் காந்தியடிகளிடம் எழுத்துப்பூர்வமாக மசானி அளித்தார். ஒவ்வொரு கேள்விக்குரிய விடைகளையும் தன்னுடைய பதில் கடிதத்தில் தந்திருந்தார் காந்தியடிகள். சோஷலிசம் குறித்த தன்னுடைய பார்வையை அக்கடிதத்தில் காந்தி விளக்கியிருந்தார். தனியார் சொத்துகளை ஒழித்து, அனைத்தையும் அரசுமயமாக்குவது என்ற சோஷலிசக் கொள்கையில் காந்தியடிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

தன் பார்வையில் ஒரு தொழிற்சாலை சமூகத்தின் நலன் கருதி, ‘அறங்காவலர்’ என்ற எண்ணத்தில் அதில் பணிபுரிபவர்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என்று கூறினார் காந்தியடிகள். இதையே அவர் ‘சோஷலிசம்’ என்று அழைத்தார். ‘சோஷலிசத்தின் அடிப்படைகூட காந்திக்குத் தெரியவில்லையே’ என்றுதான் மசானி அப்போது நினைத்தார். இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிச நாடான யுகோஸ்லாவியாவிற்கு மசானி செல்ல நேர்ந்தது. காந்தியடிகள் விளக்கிய பாணியில் அங்கு தொழிற்சாலைகள் நிர்வகிக்கப்படுவதை மசானி காண நேர்ந்தது. 1934இல் காந்தியடிகள் விளக்கிய இந்தச் சித்தாந்தம், பின்னாளில் யுகோஸ்லாவியாவில் நடைமுறையில் இருந்ததைப் பார்த்தபோதுதான், காந்தியடிகளின் தொலைநோக்குப் பார்வை மசானிக்குப் புரியவந்தது.

மசானியை ஈர்த்த காந்தியடிகளின் இன்னொரு கொள்கை, அவருடைய நேர மேலாண்மை. தன்னுடன் எப்போதும் ஒரு கடிகாரத்தை வைத்துக்கொண்டிருந்தார் காந்தி. ஒருவருடன் உரையாட அரைமணி நேரம் ஒதுக்கியிருந்தால், மிகச் சரியாக அரைமணி நேரத்தில் அந்த உரையாடலை நிறுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ‘உங்கள் நேரம் முடிந்துவிட்டது. என்னுடன் உரையாட வேறொருவர் வெளியே காத்திருக்கிறார். இனிவரும் நேரம் அவருக்குச் சொந்தமானது’ என்று கூறி அனுப்பிவைப்பார். ‘காந்தியுடன் முழுதாகப் பேசமுடியவில்லையே!’ என்று வந்தவர் ஏங்கினால், அவருடைய ஏக்கத்தையும் காந்தியடிகள் போக்கியிருக்கிறார். தன்னுடைய செயலாளர் மகாதேவ தேசாயைப் பார்த்து மேற்கொண்டு சந்திப்பிற்கான நேர ஒதுக்கீட்டைப் பெற்றுவருமாறு கூறியிருக்கிறார்.

காந்தியடிகளுடன் பழகி, அவரை சோஷலிஸ்டாக மாற்ற விரும்பிய மசானி, மெல்ல மெல்லக் காந்தியத்தால் ஈர்க்கப்படத் தொடங்கினார். பின்னாளில் காந்தியடிகளின் 75வது பிறந்தநாளை ஒட்டி ‘காந்தி ஒரு சோஷலிஸ்டா?’ என்ற கட்டுரையில் மினூ மசானி பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

‘சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இரக்கம் காட்டி அவர்களுடன் ஒற்றுமையாகப் பழகுவது சோஷலிசம் என்றால், நிச்சயமாக காந்தி ஒரு சோஷலிசவாதி. சமூகநீதி குறித்த ஆழமான பற்றுதல்தான் சோஷலிசம் என்றால், காந்தியடிகள் ஒரு சோஷலிசவாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனிதனின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான பொருளாதார வழிமுறைதான் சோஷலிசம் என்றால், அந்தப் போராட்டத்தில் காந்திக்கு உறுதியான இடமுண்டு. எந்த விதத்திலும் சுரண்டல் இல்லாத அமைதியான சர்வதேச சமுதாய முறைதான் சோஷலிசம் என்றால், காந்தியடிகளைப் போன்ற உறுதியான சோஷலிசவாதி வேறு யாருண்டு? தனியார் சொத்துரிமையை ஒழிப்பதே சோஷலிசத்தின் மையக்கருத்து என்றாலோ, அல்லது அனைத்தையும் தேசியமயமாக்குவதே அதன் சாரமென்றாலோ, காந்தியடிகள் ஒரு சோஷலிஸ்ட் அல்ல!’

காந்தியடிகளிடம் மசானி கற்றுக்கொண்டவை என்னென்ன? முதலாவது, ஓர் அமைப்புக்கும், அதனை இயக்கும் மனிதர்களுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு என்ற எண்ணம். அந்த அமைப்பு தீயதாக இருக்கலாம். அது அழிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால், அதில் ஈடுபட்டுள்ள மனிதர்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் ஆட்சி மோசமானதாக இருந்தபோதிலும், பிரிட்டிஷ்காரர்கள் பெரும்பாலும் நல்ல மனிதர்களாகவே இருந்தனர் என்று காந்தியடிகள் கற்றுக்கொடுத்திருந்தார். வன்முறை மற்றும் மோசடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பிலிருந்து நன்மை ஏதும் விளையாதென்பதால், கம்யூனிசம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று காந்தியடிகள் கருதினார். அதே வேளையில், கம்யூனிஸ்டுகளிடம் அவர் தனிப்பட்ட முறையில் கனிவுடன் நடந்துகொண்டார். இரண்டாவதாக, ‘இலக்குகளே அவற்றை அடையும் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன’ என்ற கருத்தாக்கத்தைக் காந்தியடிகள் ஆதரிக்கவில்லை. இலக்குகள் எந்த அளவிற்கு நியாயமாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு அந்த இலக்குகளை அடைய உதவும் வழிமுறைகளும் நியாயமாக இருக்க வேண்டுமென்று காந்தியடிகள் வலியுறுத்தினார். மூன்றாவதாக, அரசின் அதிகாரப் பெருக்கத்திற்கு எதிராக எச்சரித்த காந்தியடிகள், பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தினார். காந்தியடிகளை ‘ஒரு முழுமையான புரட்சியாளர்’ என்று தன்னுடைய சுயசரிதையில் விவரித்துள்ள மினூ மசானி, காந்தியடிகளின் மறைவிற்குப் பிறகு, அவர் வெறுத்த சிறுமைத்தனமான அரசியல் விளையாட்டுகளுக்கே நம் நாடு மீண்டும் திரும்பிவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சோஷலிச மறுபரிசீலனை

அன்றைய காலகட்டத்தில் சோஷலிசம் பேசிய பலருக்கு ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்தவர் ஜேபி. அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஜேபிக்குக் கம்யூனிசம் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருந்தபோதும், ஜேபி ஒரு தேசியவாதி. நாட்டுப்பற்று மிக்கவர். காந்தியின் மீது பெருமதிப்புக் கொண்டவர். எனவே, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து, காந்தியின் தலைமையை அவமதித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செய்கைகளைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஜேபியின் தேசியவாதம் கம்யூனிஸ்ட்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. தேசியவாதம் மற்றும் ஜனநாயக சோஷலிசம் பேசும் நபர்களை ‘சமூக ஃபாசிஸ்டுகள்’ என்று குறிப்பிடத் தொடங்கினர். ஜேபியும் சமூக ஃபாசிஸ்டாக அடையாளம் காணப்பட்டுக் கம்யூனிஸ்டுகளால் ஒதுக்கப்பட்டார். இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி உருவாக்கப்பட்டது (1934).

1927இல் முதல்முறையாக சோவியத் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட மசானி, 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருமுறை சோவியத் ரஷ்யா சென்றுவந்தார். மாஸ்கோ நகரில் செம்படையின் புகைப்படத் தொகுப்பைப் பார்வையிட்டார். ரஷ்யப் புரட்சி குறித்த காட்சிகளும், புரட்சியில் ஈடுபட்டிருந்த முக்கியமான நபர்களின் புகைப்படங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்துக்கொண்டு வந்த மசானிக்குச் சட்டென்று தோன்றியது, அந்தப் புகைப்படக் கண்காட்சியில் லியோன் ட்ராட்ஸ்கியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கவில்லை. சோஷலிசக் கொள்கைகளில் மையல் கொண்டிருந்த மசானிக்கு, ரஷ்யாவில் ஸ்டாலின் செய்துகொண்டிருந்த அட்டூழியங்கள் குறித்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவந்தன; தனக்கு வேண்டாத நபர்களை அவர் அழித்தொழிப்பதைக் கேள்விப்பட்ட மசானி, லேசாகச் சந்தேகப்படத் தொடங்கினார்.

இதற்கிடையில் COMINTERN (Communist International- உலகிலுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலைமை வகிக்கும் இயக்கம், ரஷ்யாவில் இருந்தது) ஓர் அறிவிப்பை விடுத்தது. ‘ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், தத்தம் நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளோடு கைகோர்த்து ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கும்’ என்பதே அந்த அறிவிப்பு. இதனைப் பின்பற்றி, இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியுடன் நட்பு பாராட்டத் தொடங்கின. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியும் கம்யூனிஸ்ட்களைத் தன் கட்சியில் சேர்த்து அவர்களுக்குக் கட்சிப்பதவிகளை அளித்தது. ஆனால் இவற்றையெல்லாம் பயன்படுத்தி காங்கிரஸ் சோஷலிசக் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள் காய் நகர்த்தினர். அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் தொழிற்சங்கங்கள் சென்றன. 2ஆம் உலகப்போர் தொடங்கிய பிறகு, ஜெர்மனிக்கெதிரான இங்கிலாந்தின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரக் கம்யூனிஸ்டுகள் மறுத்தனர் (1939இல் ஹிட்லரும் ஸ்டாலினும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்; எனவே, ஹிட்லருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து விழைவதற்குக் கம்யூனிஸ்டுகளால் ஆதரவளிக்க முடியாது).

‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் கட்சியை வளைத்துப்போடத் திட்டம்தீட்டி இவ்வாறு செயல்பட்டுக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளை மசானி அடையாளம் கண்டுகொண்டார். கட்சித் தலைமைக்கு இதுகுறித்து கவனப்படுத்தினார். திருப்திகரமான நடவடிக்கை வராததால், கட்சியையும் கம்யூனிசக் கொள்கைகளையும் கைகழுவினார். அதற்குரிய காரணங்களை விளக்கி ‘சோஷலிசம் மறுபரிசீலனை செய்யப்பட்டது’ (Socialism Reconsidered) என்ற புத்தகத்தை எழுதினார். இறுதிவரையில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கத் தொடங்கினார். தனிநபர் உரிமைகளை நசுக்குகின்ற அளவுக்கு அரசதிகாரமும், அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குவதால் கிடைக்கின்ற பொருளாதார ஏகபோகமும் ஒரே சமயத்தில் ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும்போது, அத்தகைய அதிகாரங்களை இன்னமும் விரிவாக்கித் தன்வசம் வைத்துக்கொள்ளும் எண்ணமே தோன்றுமென்றும், இவை சோஷலிசக் கொள்கைகளின் அடிப்படைக்கே எதிரானதாக அமையுமென்றும் அவர் கருதினார். மனித உரிமைகளுக்கு இடையூறு ஏற்படும்போது அதற்கெதிராகக் குரல் தராதவர் எவரும் உண்மையான சோஷலிஸ்டாக இருக்கமுடியாதென்று அவர் கூறினார்.

கம்யூனிசத்துக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை நறுக்குத் தெறித்தாற்போல, மசானி விளக்கினார்: ‘நான் மக்களாட்சியை ஆதரிக்கிறேன். மக்களாட்சியில் குறைகளும் பிழைகளும் இருப்பினும், அது தேர்வுச் சுதந்திரத்தை அடிப்படையாகக்கொண்டது. தவறுகள் ஏதேனும் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றைச் சரி செய்யும் வாய்ப்பை அது வழங்குகிறது. மேலும், எதிர்ப்புக்குரல் முழுமையாக அடக்கப்படாமல் வெளிப்படுத்தப்படும் வாய்ப்பை அது உறுதிப்படுத்துகிறது.’

காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை விட்டுவிலகியதோடு அரசியலுக்கு முழுக்குப் போட்டார் மசானி (1939). காரணம், முழுநேர அரசியலில் அதுகாறும் ஈடுபட்டிருந்த மசானிக்கு வருமானம் அவ்வளவாக இல்லாததே. விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற வேண்டி வழக்கறிஞர் தொழிலையும் விட்ட மசானிக்கு, வேறெந்த வகையிலும் வருமானம் வராததால், நிலையான வருமானம் கிடைக்கவேண்டி வேலைதேடத் தொடங்கினார். அன்றைய அரசியல்வாதிகளுக்குத் தொழில் வேறு, அரசியல் வேறு! அரசியலைத் தொழிலாகவும், வருமானம் திரட்டும் வழிவகையாகவும் பார்க்கத் தெரியாதவர் மசானி. டாடா குழுமத்தில் வேலை கிடைக்க, 16 வருடங்களாக டாடா குழுமத்தில் வேலை பார்த்தார் மசானி. இடையில் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்து சிறைச்சாலைக்குச் சென்றார் என்றாலும், அவரால் டாடா நிறுவனத்தில் வேலையில் நிலைக்க முடிந்தது. 1957 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வரை, அவர் டாடா நிறுவன வேலையில் தொடர்ந்தார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *