Skip to content
Home » மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

நாடு விடுதலை பெற்றபிறகு நடைபெற்ற முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் (1952, 1957 மற்றும் 1962) காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. (1952 தேர்தலில் 489 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. 1957இல் 494 இடங்களில், காங்கிரஸ் 371 இடங்களில் வென்றிருந்தது. அடுத்து வந்த 1962 தேர்தலில் 494 தொகுதிகளில், காங்கிரஸ் 361 இடங்களில் வெற்றிபெற்றது). நாட்டு விடுதலைக்குப் போராடிய கட்சி, பொதுமக்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமாகியிருந்த அதன் தலைவர்கள், நாடு முழுவதிலும் வேர்விட்டு வளர்ந்திருந்த கட்சி அமைப்பு, அனைத்திற்கும் மேலாக நேருவின் தலைமை. வெற்றிபெறுவதற்கு இதற்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு வேறென்ன வேண்டும்? மத்தியில் மட்டுமல்ல, மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைத்துக்கொண்டிருந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றி (1957) இதற்கு விதிவிலக்கு என்றாலும், தோல்வி என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருந்தது காங்கிரஸ்; 1967 தேர்தல் வரையில்!

1967இல் நான்காவது பொதுத்தேர்தல் வந்தது. நேரு இல்லாமல் நாடு எதிர்கொண்ட முதல் தேர்தல் அது. நாட்டில் அப்போது நிலவி வந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விளக்கமாக எழுதிய வெளிநாட்டுப் பத்திரிகைகள், இந்தியா உடையும் நாள் வெகுதொலைவில் இல்லையென்று ஆரூடம் கூறின. 1967 பொதுத்தேர்தல் சமயத்தில், ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் இந்தியா குறித்த கட்டுரைகளை எழுதி வந்தார் நெவில் மேக்ஸ்வெல் என்கிற பத்திரிகையாளர். ’நான்காவது பொதுத்தேர்தலில் வெகுவிரைவில் இந்தியர்கள் வாக்களிப்பார்கள், அதுவே நிச்சயமாக இந்தியாவின் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும்’ என்றெல்லாம் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். (தன்னுடைய ஆரூடம் முற்றிலுமாகப் பொய்த்துப்போனதைக் காண நேர்ந்த மேக்ஸ்வெல், தன்னுடைய 92ஆவது வயதில் 2019இல் காலமானார்).

மக்களவைக்கு 1967இல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்றாலும்கூட, அக்கட்சியின் பலவீனங்கள் அத்தேர்தலில் வெளிப்பட்டிருந்தன. 360 இடங்களுக்குக் குறையாமல் அதுவரையில் வென்றுவந்த காங்கிரஸ் கட்சியால், அத்தேர்தலில் 283 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. மொத்தமிருந்த 520 தொகுதிகளில், பெரும்பான்மைக்குத் தேவைப்பட்டதை விடவும் அதிகமாக 22 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடிந்தது. மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்த பலர் அத்தேர்தலில் தோற்றிருந்தனர். மாநில சட்டமன்றத் தேர்தல்களிலோ காங்கிரஸ் கட்சியின் நிலை இன்னும் மோசம். 9 மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்திருந்தது அக்கட்சி (இந்தியாவில் அப்போது 17 மாநிலங்கள்தான் இருந்தன).

காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சிக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. நேரு போன்ற இன்னொரு தலைவரை காங்கிரஸால் அப்போது அடையாளம் காண முடியவில்லை. ஓராண்டுக்கு முன்புதான் (1966) இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றிருந்தார். அடுத்தடுத்த போர்கள் (1962 மற்றும் 1965), விலைவாசி உயர்வு, மதக் கலவரங்கள், உணவுத் தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் வெறுப்பில் இருந்தார்கள். அதுவரையில் நடந்த தேர்தல்களைவிடவும், மக்களின் வாக்களிப்பு சதவீதம் அந்தத் தேர்தலில்தான் அதிகம் (61%). ஆளுங்கட்சி மீதான எதிர்ப்புணர்வின் விளைவாக இது பார்க்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு காரணங்களால், காங்கிரஸ் பல மாநிலங்களில் தோற்க நேர்ந்தது. ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஒன்றுகூட வராமலேயே, தில்லியிலிருந்து ஹவுரா (கல்கத்தா) வரை ரயிலில் செல்லலாம்’ என்று காங்கிரஸ் பல மாநிலங்களில் தோற்றதைக் குறித்து அன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்டனர். ‘காங்கிரஸ் கட்சியும் தோற்கும்’ என்பதை எண்ணிப் பார்க்கவே, அப்போது அதிசயமாக இருந்தது.

இந்த இக்கட்டான சூழலில், கட்சிக்குள் கோஷ்டித் தகராறுகளைத் தவிர்க்க விரும்பினார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் காமராஜர். எனவே, அமைச்சரவையில் மொரார்ஜி தேசாயை இணைத்துக்கொள்ளச் சொல்லி இந்திரா காந்தியை வற்புறுத்தினார். வலுவாக இருந்த எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள, அனுபவம் வாய்ந்த மொரார்ஜிதான் சரியாக இருப்பார் என்பது காமராஜரின் கணிப்பு. தவிரவும், அவர் ஏற்கெனவே நேருவின் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதும் அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளும் எண்ணத்திற்கு வலுவூட்டியது. இந்திராவிற்கு இதில் விருப்பமில்லை என்றாலும், மொரார்ஜியைவிடவும் அனுபவம் வாய்ந்தவர் வேறு எவருமில்லை என்ற காரணத்தால் இதற்குச் சம்மதித்தார். துணைப் பிரதமராகப் பொறுப்பேற்ற மொரார்ஜிக்கு, நிதித்துறை ஒதுக்கப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக 44 இடங்களில் வென்று மிகப்பெரிய எதிர்க்கட்சியாகச் சுதந்திரா கட்சி திகழ்ந்தது. சுதந்திரா கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக 1962 முதல் பணியாற்றிய அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரங்கா, 1967 தேர்தலில் தோற்றுப்போயிருந்தார். எனவே, சுதந்திரா கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக மசானி அமர்த்தப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராகவும் மசானி பொறுப்பேற்றார். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு 1923இல் அன்றைய மத்தியச் சட்டப்பேரவையில் உருவாக்கப்பட்ட பொதுக் கணக்குக் குழு, நாடாளுமன்றத்தின் மிகப் பழமையான நிதிக் குழுவாகும். மொத்தம் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்கள், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்கள்) பங்கேற்கும் இந்தக் குழுவின் முதன்மையான பணி, இந்திய அரசின் பொதுக் கணக்கையும், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையையும் ஆய்வு செய்தல். 1947 முதல் இந்தக் குழுவின் தலைவராக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே இருந்த நிலையில், இந்தக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் மசானி. இரண்டாண்டுகள் இந்தப் பொறுப்பில் இருந்த மசானி, ஏறத்தாழ 95 கோடி ரூபாய் அளவிற்குப் பயனற்ற செலவினங்களை மத்திய அரசு மேற்கொண்டதை ஆய்ந்தறிந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

மனம்போன போக்கில் மத்திய அரசு ஆட்சி செய்வதைத் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மசானி மேற்கொண்டார். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளை நாடாளுமன்றத்தில் ஓரணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டார். அன்றைய மக்களவையில், சுதந்திரா கட்சிக்கு அடுத்தபடியாக 6 கட்சிகள் (2 கம்யூனிஸ்ட் கட்சிகள், 2 சோஷலிசக் கட்சிகள், ஜன சங்கம் மற்றும் திமுக) கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற்றிருந்தன. சுதந்திரா தலைமையிலான இந்த 7 கட்சிகளின் அணிக்கு மக்களவையில் மொத்தம் 182 உறுப்பினர்களின் பலம் இருந்தது. அனைத்து விஷயங்களிலும் இந்த அணி ஒரே நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறமுடியாது. என்றாலும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த அணி கடும் சவால்களைத் தந்தது. வெளியில் இருந்த இந்தப் பிரச்னை போதாதென்று, கட்சிக்கு உள்ளேயும் நீறு பூத்த நெருப்பாகக் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் கனன்று கொண்டிருந்தது. கட்சி இரண்டாகப் பிரிவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது, ஒரு மரணம்.

காங்கிரஸ் கட்சி பிளவு

குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஜாகிர் ஹுசைன், 3 மே 1969 அன்று காலமானார். துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி, பொறுப்புக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றத் தொடங்கினார். குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் சூடானது. குடியரசுத் தலைவர் பதவிக்கு ஜேபி பொருத்தமாக இருப்பார் என்று ஒரு சாரார் தம் கருத்துகளை வெளியிட்டனர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஜேபியைக் குடியரசுத் தலைவராக ஆக்கினால், ஜேபி அந்தப் பதவிக்குப் பெருமை சேர்ப்பார் என்ற பேச்சும் பரவியது. ஜேபி குடியரசுத் தலைவராக வரவேண்டுமென்று மசானியும் விரும்பினார். ஆனால், பிரதமர் இந்திரா காந்தி, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இருவரும் இந்த யோசனைக்குச் சம்மதிக்கவில்லை. தவிரவும், ஜேபியே இந்த யோசனையை முற்றிலும் மறுத்துவிட்டார். எனவே, ஜேபியைக் குடியரசுத் தலைவராக்கும் முயற்சிகள் கைகூடவில்லை.

ஜேபியைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்திட காங்கிரஸ் மறுத்துவிட்ட நிலையில், யாரை நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது. இங்குதான் புதிய பிரச்னை கிளம்பியது. காமராஜர், சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், அதுல்ய கோஷ் போன்ற பெருந்தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அன்றைய காங்கிரஸ் கட்சி (இவர்கள் ‘சிண்டிகேட் அணி’ என அழைக்கப்பட்டனர்). தங்களுடைய கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் மிகுந்த அக்கறை செலுத்தினர். ‘ஊமை பொம்மை’ (இந்தியில் ‘Goongi Gudiya’) என்று ஆரம்ப காலத்தில் விமர்சிக்கப்பட்ட இந்திரா காந்தியால் தங்களை எதிர்க்கமுடியாதென்று இவர்கள் கணக்கிட்டதாகவும், எனவேதான் இந்திரா காந்தி பிரதமர் ஆக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவியது. இவர்களின் ஆதிக்கத்திலிருந்து வெளியேற விரும்பினார் இந்திரா காந்தி.

குடியரசுத் தலைவர் பதவிக்குக் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை அறிவிப்பதற்காகப் பெங்களூரில் கட்சியின் உயர்மட்டச் சந்திப்பு நடைபெற்றது. சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக அறிவிக்க சிண்டிகேட் அணியைச் சேர்ந்தவர்கள் விரும்பினர். இந்திரா காந்தி இதை விரும்பவில்லை. விவாதங்களின் இறுதியில், இருவரின் பெயர்கள் வாக்கெடுப்பிற்கு அறிவிக்கப்பட்டன; சஞ்சீவ ரெட்டி மற்றும் ஜெகஜீவன் ராம். சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக 4 வாக்குகள் விழுந்தன (மொரார்ஜி தேசாய், ஒய்.பி.சவான், காமராஜர் மற்றும் எஸ்.கே.பாட்டீல்). ஜெகஜீவன் ராமிற்கு ஆதரவாக 2 வாக்குகள் கிடைத்தன (இந்திரா காந்தி மற்றும் ஃபக்ருதீன் அலி அஹமது). கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகச் சஞ்சீவ ரெட்டி அறிவிக்கப்பட்டார். கட்சிக்குள் தன் பேச்சு எடுபடவில்லை என்பதை இந்திரா காந்தி உணர்ந்துகொண்டு உஷ்ணமானார். தன் மீதான பிடியை இன்னும் இறுக்கமாக்கும் எண்ணத்தின் விளைவே இந்த முடிவு எனக் கருதினார். கட்சியின் இந்த முடிவை இந்திராவால் வெளிப்படையாக விமர்சிக்க முடியாத நிலை இருந்தது; அதே சமயத்தில் சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவர் ஆவதிலும் இந்திராவிற்கு விருப்பம் இல்லை. எதிர்பாராத திருப்பமாக, வி.வி.கிரி தன்னுடைய பதவியை இராஜினாமா செய்தார். தானும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இந்திரா காந்தியின் மறைமுக ஆதரவு வி.வி.கிரிக்குக் கிடைத்தது. கம்யூனிஸ்ட்கள் ஏற்கெனவே இந்திரா காந்திக்கு ஆதரவாக நின்றிருந்தனர். எனவே, சஞ்சீவ ரெட்டி மற்றும் வி.வி.கிரி ஆகியோருக்கிடையே கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச் சூழல் குறித்து ஆராய சுதந்திரா கட்சியின் தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. ராஜாஜி மற்றும் கே.எம்.முன்ஷி ஆகியோர் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். வி.வி.கிரிக்கு ஆதரவாகப் பேராசிரியர் ரங்கா கருத்து தெரிவித்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு டாக்டர் சி.டி.தேஷ்முக் என்பவரை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவானது. ஜன சங்கம் மற்றும் பாரதிய கிராந்தி தளம் (உபியைச் சேர்ந்த கட்சி – சரண் சிங் இந்தக் கட்சியில்தான் இருந்தார்) ஆகிய கட்சிகளும் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தன. சுதந்திரா கட்சியிடம் சுமார் 56,000 வாக்குகள் மட்டுமே இருந்தன. எனவே, குடியரசுத் தேர்தலில் டாக்டர் சி.டி.தேஷ்முக் தோற்றுப்போவது ஏறக்குறைய உறுதியான சூழலிலும், சுதந்திரா கட்சி அவ்வாறு முடிவெடுத்தது. மேலும், 2வது விருப்பமான வேட்பாளராக சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்முறை குறித்துச் சற்றுப் பார்த்து விடுவது நல்லது. ஒற்றை வாக்கு மாற்றுரிமையுடன்கூடிய விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின்படியே குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களித்து, மொத்த வாக்குகளில் 50%க்கும் அதிகமான வாக்குகள் பெறும் வேட்பாளரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தத் தேர்தலில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிப்பதில்லை; அதேபோல மாநிலச் சட்ட மேலவை உறுப்பினர்களும் வாக்களிப்பதில்லை.

ஒவ்வொரு வாக்காளரும் தன்னுடைய விருப்பமான வேட்பாளர்களின் வரிசைப் பட்டியலைத் தரவேண்டும். அதாவது, முதல் விருப்பமாக ஒரு வேட்பாளரின் பெயர், 2வது விருப்பமாக இன்னொரு வேட்பாளரின் பெயர் என்று ஒவ்வொரு வாக்காளரும் தன்னுடைய ரகசிய வாக்குச் சீட்டில் குறிப்பிட வேண்டும். வாக்குகள் எண்ணப்படும்போது முதலாவது சுற்றில் அனைத்து வாக்காளர்களின் முதல் விருப்ப வாக்குகள் மட்டுமே கருதப்பட்டு எண்ணப்படும். முதலாவது சுற்றின் இறுதியிலேயே ஏதாவது ஒரு வேட்பாளர் 50%க்கும் அதிகமான வாக்குகள் பெற்றுவிட்டால், அவரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். ஒருவேளை அவ்வாறு எந்த வேட்பாளருக்கும் 50%க்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத சூழலில், 2ஆம் சுற்று வாக்குகள் எண்ணப்படும். இதில், வாக்காளர்களின் 2வது விருப்ப வாக்குகள் கருதப்பட்டு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற முதல் விருப்ப வாக்குகளோடு அவை யாவும் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். இந்தச் சுற்றின் இறுதியில் ஏதாவது ஒரு வேட்பாளர் 50%க்கும் அதிகமான வாக்குகள் பெற்றுவிட்டால், அவரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லையெனில், 3வது சுற்று வாக்குகள் எண்ணப்படும், இதில், 3வது விருப்ப வாக்குகள் கருதப்படும். மொத்த வாக்குகளில் 50%க்கும் அதிகமாக ஒரு வேட்பாளர் வாக்குகள் பெறும்வரை இந்தச் சுழற்சி முறையிலான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும். இதுவரை நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், முதல் சுற்று முடிவிலேயே 50 சதவீதத்துக்கும் குறையாத வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். 1969 தேர்தல் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

டாக்டர் சி.டி.தேஷ்முக்கிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மற்ற கட்சியினரைச் சந்தித்துப் பேசினார் மசானி. அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் அவர் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். வி.வி.கிரிக்கு ஆதரவாகவே தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களிப்பர் என்று கலைஞர் அவரிடம் தெரிவித்தார். பிரஜா சோஷலிசக் கட்சியின் ஆதரவைக் கேட்டபோதும் மசானிக்கு அதே பதில்தான் கிடைத்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் கடும் போட்டியிருக்கும் என்பதை மசானி புரிந்துகொண்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் 16 ஆகஸ்ட் 1969 அன்று எண்ணப்பட்டன. டாக்டர் சி.டி.தேஷ்முக்கின் தேர்தல் முகவராகப் பணியாற்றிய மசானி, வாக்குகள் எண்ணப்பட்ட மையத்தில் அமர்ந்துகொண்டு கவனித்தார். முதல் சுற்றின் முடிவில் யாருக்கும் 50% வாக்குகள் கிடைத்திருக்கவில்லை. வி.வி.கிரி 4.01 இலட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். சஞ்சீவ ரெட்டி 3.14 இலட்சம் வாக்குகளும், டாக்டர் சி.டி.தேஷ்முக் 1.13 இலட்சம் வாக்குகளும் பெற்றிருந்தனர். 2வது சுற்று எண்ணிக்கையின் முடிவில் வி.வி.கிரி 4.20 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான சஞ்சீவ ரெட்டிக்கு 4.05 இலட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன. அதாவது, சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே சஞ்சீவ ரெட்டி தோற்றுப்போயிருந்தார். சஞ்சீவ ரெட்டியின் தோல்வி, சிண்டிகேட் அணியின் தோல்வியாகப் பார்க்கப்பட்டது. வி.வி.கிரியின் வெற்றி, இந்திரா காந்தியின் வெற்றியாகக் கருதப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ‘மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு’ இந்திரா காந்தி விடுத்த கோரிக்கையை, அவருடைய விசுவாசிகள் சரியாகப் புரிந்துகொண்டனர். திமுக போன்ற கட்சிகளும் இந்திராவின் வேண்டுகோளைப் புரிந்துகொண்டன. தேர்தலில் வி.வி.கிரி வென்று குடியரசுத் தலைவரானார்; சஞ்சீவ ரெட்டி தோற்றுப்போனார். கட்சியும், நாடும் தன் வசமே உள்ளது என்பதை அனைவருக்கும் புரியவைத்தார் இந்திரா. விளைவு, கட்சியை விட்டு இந்திரா காந்தி வெளியேற்றப்பட்டார். காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. இந்திரா காந்தியின் தலைமையை ஏற்ற கட்சி, காங்கிரஸ் (R) என்றழைக்கப்பட்டது. காமராஜர், நிஜலிங்கப்பா உள்ளிட்ட தலைவர்கள் இருந்த கட்சி, காங்கிரஸ் (O) என்றழைக்கப்பட்டது (R-Requisitionists, O-Organisation). மக்களவையில் இந்திராவின் பலம் 221ஆகக் குறைந்தது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்தார் இந்திரா.

தேர்தல் முடிவுகளை ஆராய்ந்த மசானிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுதந்திரா கட்சி, ஜன சங்கம் மற்றும் பாரதிய கிராந்தி தளம் கட்சியின் உறுப்பினர்களில் சிலர், தங்களுடைய 2வது விருப்ப வாக்குகளைச் சஞ்சீவ ரெட்டிக்குச் செலுத்தவில்லை என்பதை மசானி கண்டுபிடித்தார். ஒருவேளை கட்சியில் எடுக்கப்பட்ட முடிவை மீறாமல் இவர்கள் அனைவரும் தத்தமது 2வது விருப்ப வாக்குகளை சஞ்சீவ ரெட்டிக்குச் செலுத்தியிருந்தால், தேர்தலின் முடிவே மாறியிருக்கும். சஞ்சீவ ரெட்டி 4.24 இலட்சம் வாக்குகள் பெற்று வென்றிருப்பார்; வி.வி.கிரிக்கு 4.02 இலட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும். இந்திரா காந்தியின் கை ஓங்கியிருக்காது. வி.வி.கிரி வென்று, இந்திரா காந்தியின் செல்வாக்கு அதிகரித்திடத் தன்னுடைய கட்சியினர் சிலரும் காரணம் என்பதை மசானி புரிந்துகொண்டார். தன் கட்சிக்குள் பரவிவிட்ட இத்தகைய ஒழுங்கீனங்களை எண்ணி, மசானி கவலைகொண்டார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *