Skip to content
Home » மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, இந்திரா காந்தி கையிலெடுத்த அடுத்த ஆயுதம், வங்கிகளைத் தேசியமயமாக்குதல். வங்கிகளை நாட்டுடைமையாக்குவது என்கிற கோரிக்கைக்கு நீண்ட வரலாறு உண்டு. 1934இல் மசானி உள்ளிட்டோர் உருவாக்கிய காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் திட்டங்களுள் இதுவும் ஒன்று. நாடு விடுதலை பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, ‘சோஷலிசக் கட்சி’ என்ற பெயர் தாங்கி நின்ற பிறகும், அக்கட்சி முன்வைத்த திட்டங்களுள் இதுவும் ஒன்றாகத் தொடர்ந்தது.

வங்கிகளைத் தேசியமயமாக்க வேண்டுமென்று 1948இல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ரிசர்வ் வங்கி 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. டாக்டர் சி.டி. தேஷ்முக் என்பவர் ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய ஆளுநராகச் செயல்பட்டார். (இவர்தான் 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரா உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நின்றார்). வங்கிகளைத் தேசியமயமாக்க வேண்டுமென்று 1953இல் நேருவிடம் ஜேபி கோரிக்கை வைத்தார்.

சோஷலிசப் பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதென்று 1955இல் ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சிலரிடம் மட்டுமே செல்வம் குவிவதைத் தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொழில்களையும் சேவைகளையும் நாட்டுடைமையாக்குவது அவற்றுள் ஒன்று. 1955இல் ‘இம்பீரியல் வங்கி’ தேசியமயமாக்கப்பட்டு ‘பாரத ஸ்டேட் வங்கி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயுள் காப்பீடு 1956இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு படிப்படியாகத் தேசியமயமாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், பிற வங்கிகளும் நாட்டுடைமை ஆக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அரசு அவசரமாக நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தது. 1963இல் இந்த விவகாரம் சூடுபிடித்து அடங்கிப்போன நிலையில், 1967இல் மீண்டும் இந்தக் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. அதற்குக் காரணம் உண்டு.

நாட்டை முன்னேற்ற, தொழில்கள் பெருகவேண்டும். தொழில்கள் வளர, கடன்கள் அளிக்கப்பட வேண்டும். உணவுப் பற்றாக்குறையைச் சரிசெய்ய பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்திட விவசாயிகளுக்கும் கடன்கள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, எந்தத் துறையிலுள்ள சிக்கல்களைக் களைய எண்ணினாலும் அவை யாவும் வங்கித் துறையிலேயே வந்து நின்றன. அன்றைய சூழலில், பெரும்பாலான வங்கிகள் பெருமுதலாளிகளின் கைப்பிடியில் இருந்தன. யாருக்குக் கடன்கள் அளிப்பது என்பதை முடிவு செய்வதில் பல்வேறு பாரபட்சங்கள் நிலவின.

1951இல் வழங்கப்பட்டிருந்த மொத்தக் கடன் தொகையில், விவசாயத்திற்கு 2% மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. 1967இலும் அதே 2% அளவில்தான் விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆறில் ஒரு பங்கு வங்கிக் கிளைகள் மட்டுமே கிராமப்புறங்களில் இருந்தன. நாட்டில் வழங்கப்பட்ட மொத்த கடன்களில் சுமார் 60% ஐந்து மாநகரங்களில் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது (தில்லி, பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் அகமதாபாத்). மேலும், இரட்டை இலக்க எண்ணிக்கையில் வருடா வருடம் வங்கிகள் திவாலாவது தொடர்கதையானது. இவற்றால் பொதுமக்களுக்கு வங்கிகளின் மீதே நம்பிக்கையற்றுப்போனது.

இவற்றுக்கெல்லாம் தீர்வு காண விரும்பிய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய், வங்கிகளின்மீது சமூகக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார். 1968இல் இது குறித்த சட்டம் இயற்றப்பட்டது. வங்கிகளில் இயக்குநர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் வங்கிகளே கடனளிப்பது தடை செய்யப்பட்டது. தேசியக் கடன் குழு உருவாக்கப்பட்டது. விவசாயத் துறை, சிறு-குறு நிறுவனங்களுக்குக் கடனளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. இத்தகைய மென்மையான நடவடிக்கைகளால் காங்கிரசின் ‘இளம் துருக்கியர்’ அணி திருப்தியுறவில்லை (சோஷலிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி இவ்வாறு அழைக்கப்பட்டது. பின்னாளில் பிரதமரான சந்திரசேகர், இந்த அணியின் முக்கிய உறுப்பினர்).

வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டுமென்பதில் இவர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால், இத்திட்டத்தை மொரார்ஜி எதிர்த்தார். வங்கிகளின் மீதான சமூகக் கட்டுப்பாட்டின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளே போதுமானவை என்பது அவர் எண்ணம். அன்றைய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடும் இதுவே. அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆராய்ந்து, எதிர்பார்த்த அளவிற்கு அவற்றில் திருப்தி ஏற்படவில்லை என்றால், பிறகு வங்கிகளைத் தேசியமயமாக்கலாம் என்றும் அவர் கூறினார். அவ்வாறு ஆராய்ந்து முடிவெடுக்க 2 வருடங்கள் அவகாசம் கேட்டார். மேலும், வங்கிகளை நாட்டுடைமை ஆக்குகையில் அதற்குண்டான நஷ்ட ஈட்டுத் தொகையை வங்கி முதலாளிகளுக்கு அளிக்க வேண்டி வருமென்றும், கோடிக்கணக்கான அளவில் நஷ்டஈடு தருவதற்குப் பதிலாக அத்தொகையை வேறு ஏதாவது நலத்திட்டத்திற்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

சிண்டிகேட் அணியின் கைப்பிடியிலிருந்து வெளிவருவதற்குச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திரா காந்திக்கு, இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. கோஷ்டித் தகராறு என்ற அளவில் இதைக் கொண்டு செல்லாமல், கொள்கை அளவில் சண்டையாக காண்பிக்கலாம் என்று இந்திராவின் ஆலோசகர்கள் அறிவுறுத்தினர். வங்கிகளை நாட்டுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மொரார்ஜி தேசாய் போன்றவர்கள், சோஷலிசத்திற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். சோஷலிசத்தை அமைக்க விரும்பும் இந்திரா, வங்கிகளை நாட்டுடைமை ஆக்கிடத் தனியாளாகப் பாடுபடுவதாகப் பார்க்கப்பட்டார்.

தன்னுடைய செயலாளர் பி.என்.ஹக்ஸர் மற்றும் சில நெருக்கமான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த இந்திரா காந்தி, கவனமாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும் காய்களை நகர்த்தத் தொடங்கினார். முதலில், மொரார்ஜியின் வசமிருந்த நிதித்துறையைத் தனதாக்கிக் கொண்டார். துணைப் பிரதமராக மொரார்ஜி தொடரலாமென்றும், நிதித்துறையைத் தவிர வேறேதேனும் ஒரு துறையை அவர் கோரலாமென்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. வெறுப்பில், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்தார் மொரார்ஜி (16 ஜூலை 1969).

இந்தக் காலகட்டத்தில்தான் துணைக் குடியரசுத் தலைவரான வி.வி.கிரி, பொறுப்புக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் (குடியரசுத் தலைவரான டாக்டர் ஜாகிர் ஹுசைன் மே 1969இல் காலமாகியிருந்தார்). குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவ ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார் (12 ஜுலை 1969). குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வி.வி.கிரி முடிவு செய்திருந்தார்.  20 ஜூலை 1969 அன்று தான் வகித்து வந்த பதவியை இராஜினாமா செய்து, தேர்தலில் போட்டியிட அவர் மனுத் தாக்கல் செய்வார் என்பது தெரிய வந்தது. அதற்குள்ளாகத் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார்.

தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த ஐ.ஜி.படேல் அழைக்கப்பட்டார் (பின்னாளில் இவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவி வகித்தார்). அரசியல் காரணங்களுக்காக, வங்கிகளை நாட்டுடைமை ஆக்குவதென்று தான் முடிவெடுத்துள்ளதாக இந்திரா அவரிடம் கூறினார். இது குறித்து காபினெட் அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கக் குறிப்பு ஒன்றையும், இந்தச் செய்தியைப் பொதுமக்களுக்கு வானொலியில் அறிவிக்கின்ற வண்ணம் ஓர் உரையையும், இது குறித்த வரைவுச் சட்டத்தையும் 24 மணிநேரத்திற்குள் தயார் செய்யுமாறு ஐ.ஜி.படேலிடம் கூறப்பட்டது.

அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் எல்.கே.ஜா மற்றும் பல அதிகாரிகளோடு இணைந்து ஐ.ஜி. படேல் இவற்றைத் தயார் செய்தார். 19 ஜூலை 1969 அன்று வங்கிகளைத் தேசியமயமாக்குவது குறித்த அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது. இதற்கு மறுநாள் வி.வி. கிரி பொறுப்புக் குடியரசுத் தலைவராக இருக்கமாட்டார் என்பதாலும், அதற்கும் அடுத்த நாளில் நாடாளுமன்றம் கூட இருந்ததாலும், மிகக் கவனமாக ஜூலை 19 அன்று வி.வி.கிரியின் ஒப்புதலோடு இந்த அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது.

வங்கிகளைத் தேசியமயமாக்கும் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த மொரார்ஜியை ஆட்டத்தை விட்டு விலக்கி, யாரும் எதிர்பாராத நிலையில் அவசரச் சட்டத்தின் மூலம் வங்கிகளைத் தேசியமயமாக்கினார் இந்திரா. இந்த ஒரு கல்லை வைத்து, அவர் பல மாங்காய்களை அடித்திருந்தார். சிண்டிகேட் அணியின் ஆதரவு பெற்றிருந்த மொரார்ஜியை அமைச்சரவையிலிருந்து விலக்கினார்; வங்கிகளைத் தேசியமயமாக்கியதன் மூலம் தான் சோஷலிசவாதி என்பதைப் பறைசாற்றினார்; ‘இளம் துருக்கியர்’ அணியின் பெரும் ஆதரவைப் பெற்றார்; சிண்டிகேட் அணியினர் சோஷலிசத்திற்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தைச் சொல்லாமல் தோற்றுவித்தார்; தான் சிண்டிகேட் அணியினரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிய வைத்தார்; அனைத்திற்கும் மேலாக, எதிர்க்கட்சிகளில் பிளவை உண்டாக்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள், சோஷலிசக் கட்சிகள் மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற்றார். இந்திரா காந்தியின் சமயோசிதமான இந்த முடிவிற்குச் சற்றும் குறையாத பதிலடியைத் தர மசானி தயாரானார்.

மசானி-கூப்பர்-நானி பல்கிவாலா

வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதைக் கண்டித்து ராஜாஜி அறிக்கை வெளியிட்டார். குறிப்பாக, அவசரச் சட்டத்தின் மூலமாக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட விதத்தை அவர் எதிர்த்தார்.

நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் வழிமுறை குறித்தும், அவசரச் சட்டம் குறித்தும் இந்த இடத்தில் பார்த்து விடுவது நல்லது. எந்த ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றாலும், முதலில் அச்சட்டம் குறித்த வரைவு, நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்தகைய வரைவுச் சட்டத்தை ‘மசோதா’ எனக் குறிப்பிடுவர். மசோதாவின்மீது அந்த அவையில் விவாதங்கள் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பிற்கு விடப்படும். வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்த மசோதா அடுத்த அவைக்கு அனுப்பப்படும். அந்த அவையிலும் விவாதங்கள், வாக்கெடுப்பு ஆகியவை நடைபெற்று மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகே அந்த மசோதா சட்டமாகும். இதுதான் சாதாரணச் சட்டங்களை இயற்றும் நடைமுறை.

பட்ஜெட் போன்ற பண மசோதாக்களையும், நிதி மசோதாக்களையும், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்கு வேறு நடைமுறைகள் உள்ளன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்காத நிலையில் ஏதேனும் அவசரச் சூழல் ஏற்பட்டால், நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி, காபினெட் அமைச்சர்களின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டங்கள் நிறைவேற்றப்படலாம். அவற்றை ‘அவசரச் சட்டங்கள்’ என்று குறிப்பிடுவர். அவ்வாறு நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை, நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்து, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும்.

2 நாட்களில் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், அவசரச் சட்டத்தின் வாயிலாக வங்கிகளை நாட்டுடைமை ஆக்கிய வழிமுறையைச் சுதந்திரா கட்சி எதிர்த்தது. எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்டறியாமல், நாடாளுமன்றத்தில் இந்த விஷயத்தை விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் உட்படுத்தாமல், சர்வாதிகாரியைப்போல இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டு இந்திரா காந்தி விமர்சிக்கப்பட்டார்.

அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்ப்பது குறித்து ஆலோசனை செய்வதற்காக, அடுத்த நாள் காலை (20 ஜூலை 1969) டாக்டர் ஆர்.சி. கூப்பர் என்பவரை மசானி அழைத்தார். டாக்டர் ஆர்.சி. கூப்பர், சுதந்திரா கட்சியின் பொருளாளர். நாட்டுடைமை செய்யப்பட்டிருந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் இயக்குநர்களுள் ஒருவர். தேசியமயமாக்கப்பட்டிருந்த 14 வங்கிகளுள், 3 வங்கிகளின் பங்குகளில் அவர் முதலீடு செய்திருந்தார். அவசரச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. எந்த வழக்கறிஞரை அணுகுவது என்ற கேள்வி எழுந்தபோது, மசானி சொன்ன பதில்: நானி பல்கிவாலா.

நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் நானி பல்கிவாலாவும் ஒருவர். பம்பாயில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர், இதற்காக தில்லி வருவாரா என்ற ஐயத்தோடு மசானி அவரைத் தொடர்புகொண்டார். அதிர்ஷ்டவசமாக அன்று தில்லியில்தான் இருந்தார் பல்கிவாலா. ஆனால், ஒரு முக்கியமான வழக்கு தொடர்பாக அன்று மாலை அவர் ஜோத்பூர் செல்லவிருந்தார். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு எதிராகத் தான் வழக்கு தொடரப் போவது குறித்து மசானி விளக்கியதும், தன்னுடைய ஜோத்பூர் பயணத் திட்டத்தைப் பல்கிவாலா ஒத்திப்போட்டார். உடனடியாகத் தன் இல்லத்திற்கு வருமாறு மசானியிடம் கூறினார்.

மசானி, கூப்பர் மற்றும் பல்கிவாலா ஆகிய மூவரும் பல்கிவாலாவின் வீட்டில் கூடி விவாதித்தனர். 2 வழக்குகள் தொடரலாமென்று முடிவெடுக்கப்பட்டது: மசானி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் முதல் வழக்கு; கூப்பர் உள்ளிட்டோர் சார்பில் இரண்டாவது வழக்கு. என்ன காரணங்கள்? நாடாளுமன்றம் கூட 2 நாட்களே இருந்த நிலையில், அவசரச் சட்டத்தின் வாயிலாக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து, உரையாற்ற வேண்டிய தன்னுடைய அடிப்படை உரிமை பறிபோய்விட்டதாகவும், எனவே இந்த அவசரச் சட்டத்தைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் மசானி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடுக்கப்போகும் முதலாவது வழக்கில் கோரப்படும். வங்கிகளைத் தேசியமயமாக்கியதன் விளைவாக, அந்த வங்கிகளின் பங்குதாரர் என்ற முறையில் தன்னுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகவும், எனவே இந்த அவசரச் சட்டத்தைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் கூப்பர் உள்ளிட்டோர் தொடுக்கப்போகும் 2வது வழக்கில் கோரப்படும்.

இந்த வழக்குகளில் யார் யாரை வாதிகளாகச் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவராகத் தொடர்பு கொள்ளப்பட்டனர். கூப்பர் தொடுக்கவிருந்த வழக்கில் சேர்ந்துகொள்ள எவரும் முன்வரவில்லை; மசானி தொடுக்கவிருந்த வழக்கில் இணைந்துகொள்ள ஜன சங்க நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பல்ராஜ் மதோக் என்பவர் ஒப்புக்கொண்டார்.

மறுநாள் காலையிலேயே பல்கிவாலாவிடமிருந்து மசானிக்குத் தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. ‘நேற்றுதான் வழக்குகள் குறித்து முடிவெடுத்து விட்டோமே! இன்று காலையிலேயே எதற்காக அழைக்கிறார்?’ என்று சற்றுச் சலிப்புடன் அழைப்பை எடுத்தார். ஆனால் அவருடன் பேசியதும்தான், 2 வழக்குகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டிய மனுக்களை, முந்தைய நாள் இரவில் தொடங்கி பல்கிவாலா விடிய விடிய உட்கார்ந்து தயார் செய்திருந்தது மசானிக்கு தெரிந்தது. இளம் வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஒரு பெரும் படையின் உதவியுடன் பல்கிவாலா இவற்றைத் தயார் செய்திருந்தார். (இந்த வழக்கில் வாதாடுவதற்கும் உதவி செய்வதற்கும், பல்கிவாலாவும் அவர் தலைமையிலான இந்தக் குழுவும் எவ்விதமான கட்டணத்தையும் மசானியிடமிருந்து பெறவில்லை).

இரு வழக்குகள் குறித்த விபரங்களையும், 15 பக்கங்கள் கொண்ட மனுவையும் ஒரே இரவில் இவ்வளவு விரைவாகப் பல்கிவாலா தயார் செய்வார் என்று மசானி எதிர்பார்த்திருக்கவில்லை. மனுக்களில் மசானி, பல்ராஜ் மதோக் மற்றும் கூப்பர் கையெழுத்திட்டனர். 2 நீதிப் பேராணை மனுக்களும் அன்றே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன (21 ஜூலை 1969). இரண்டு வழக்குகளும் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக மறுநாளே ஆரம்ப விசாரணைக்கு வந்தன (22 ஜூலை 1969).

நீதிமன்றத்தில் பலத்த கூட்டத்திற்கிடையே மசானி அமர்ந்து கவனிக்கத் தொடங்கினார். நானி பல்கிவாலா தன்னுடைய வாதங்களை ஒவ்வொன்றாக வைக்கத் தொடங்கினார். வழக்கின் தொடக்கத்தில், பல்கிவாலாவின் வாதங்களால் நீதிபதிகளிடம் எவ்விதச் சலனமும் ஏற்படவில்லை. சற்று அக்கறையின்மையுடன் அவர்கள் பல்கிவாலாவின் வாதங்களைக் கவனித்ததாக மசானிக்குத் தோன்றியது. ‘ஆரம்ப கட்டத்திலேயே தங்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுமோ?’ என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது.

மனம் தளராத பல்கிவாலா, இந்த மனுக்களை எதற்காக ஏற்க வேண்டுமென்பதற்கான பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டார். ஒரு குறிப்பிட்ட காரணத்தை அவர் கூறியதும், நீதிபதிகளின் உடல் மொழியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது; தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்; பல்கிவாலாவிடமும் அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரலிடமும் பல்வேறு கேள்விகள் கேட்டனர். இறுதியில், மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். அரசாங்கத்தின் முடிவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த மசானி, கூப்பர், பல்கிவாலா ஆகியோரைப் பலரும் சூழ்ந்துகொண்டு பாராட்டினர்; கைகள் குலுக்கினர். அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு விரைந்த மசானி, நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை குறித்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தோர் கடுப்பானார்கள். இந்தச் சிக்கலிலிருந்து விடுபட, இந்திரா காந்தி ஆலோசிக்கத் தொடங்கினார்.

 

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *