Skip to content
Home » மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

வங்கிகளைத் தேசியமயமாக்குதல் குறித்த அவசரச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் 22 ஜூலை 1969 அன்று இடைக்காலத் தடை விதித்தது. 6 மாதங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதற்கு முந்தைய தினத்தில்தான் நாடாளுமன்றம் கூடியிருந்தது. வங்கிகளைத் தேசியமயமாக்கியதை எதிர்த்து இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை அறிந்த இந்திரா காந்தி, ஒரு சிறிய கணக்குப் போட்டார். மினூ மசானி தொடுத்த வழக்கின் காரணம் என்ன? அவசரச் சட்டத்தின் வாயிலாக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து, உரையாற்ற வேண்டிய அவருடைய அடிப்படை உரிமை பறிபோனது என்பதுதானே? இதை முறியடிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். விளைவு, வங்கிகளைத் தேசியமயமாக்குவது குறித்த மசோதா, நாடாளுமன்றத்தில் 25 ஜூலை 1969 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை எதிர்த்துப் பேச மசானிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ‘மக்களாட்சி என்பது பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமே கிடையாது. சிறுபான்மையின் கருத்துகளைப் பாரபட்சமின்றிச் செவிமடுத்த பின்னர், அவற்றை முழுமையாகக் கவனத்தில் கொண்டு, பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதே ஜனநாயகம். ஜனநாயகத்தின் இந்த வழிமுறை முற்றிலுமாகச் சீர்குலைக்கப்பட்டு, தேசியமயமாக்கல் ஒரு திருடனைப்போல் வந்துள்ளது. அது பட்டப்பகலில் வந்திருக்க வேண்டும்; ஆனால் இரவில் வரும் திருடனைப்போல இருளில் வந்துள்ளது’ என்று அவசரச் சட்டத்தின் மூலமாக வங்கிகளைத் தேசியமயமாக்கியது குறித்த தனது எதிர்ப்பை மசானி பதிவு செய்தார். மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் மூலம் அது குறித்த சட்டத்தை இயற்றுவது முறையாகாது என்று சுதந்திரா கட்சியும் ஜன சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்தன.

எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றியது. கம்யூனிஸ்ட் கட்சிகள், சோஷலிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக ஆகிய முக்கியக் கட்சிகள் இந்திரா காந்திக்கு ஆதரவளித்தன. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முகமது இதயத்துல்லா அப்போது குடியரசுத் தலைவர் பொறுப்பை வகித்துக் கொண்டிருந்தார் (குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த டாக்டர் ஜாகிர் ஹுசைன் காலமாகியிருந்தார். துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கியிருந்தார். எனவே, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர் பொறுப்பை வகித்துக் கொண்டிருந்தார்).

அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் மசோதா விவாதிக்கப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்பட்டதால், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட முறையை எதிர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மசானியின் வழக்கு, அதன் அடிப்படையை இழந்தது. வேறு வழியின்றி மசானி தனது வழக்கை வாபஸ் பெற வேண்டியதாயிற்று. இதன் மூலம், வங்கிகளைத் தேசியமயமாக்கியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு முக்கியமான தாக்குதல் முனையை இந்திரா காந்தி முறியடித்தார். எஞ்சியிருந்த கூப்பரின் வழக்கு நிலுவையில் இருந்தது.

‘அரசாங்கத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்ட வங்கிகளே எவ்வித வழக்கையும் தொடுத்திருக்காத நிலையில், அத்தகைய வங்கிகளின் பங்குதாரர் என்ற முறையில் மட்டுமே ஒருவர் இந்த முடிவிற்கு எதிராக வழக்குத் தொடரலாமா?’ என்று அரசாங்கத்தின் சார்பில் விசாரணையின் தொடக்கத்திலேயே கேள்வி எழுப்பப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த முடிவின் விளைவால், தனக்குப் பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூப்பரின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது: (1) தன்னுடைய பங்குகளுக்கு உண்டான ஈவுத்தொகையை வங்கியிலிருந்து பெறும் உரிமை இழப்பு (2) வங்கியின் பங்குதாரர் என்ற முறையில், வங்கித் தொழில் செய்வதற்கான தன்னுடைய அடிப்படை உரிமை இழப்பு (3) அரசாங்கத்தின் முடிவின் விளைவால், வங்கியின் பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் மதிப்பு கணிசமாகக் குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டம். இந்த மூன்றின் அடிப்படையில் இந்த வழக்கைத் தொடுக்க உரிமையுண்டு என்று கூப்பரின் சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வங்கிகளைத் தேசியமயமாக்கியதற்கு எதிராக அவற்றின் பங்குதாரர் என்ற முறையில் கூப்பர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது என்று அறிவித்தது.

அடுத்த கட்டமாக, அரசாங்கத்தின் சார்பில் ஒரு முக்கியமான வாதம் முன்வைக்கப்பட்டது. ‘வங்கிகளைத் தேசியமயமாக்குவது என்பது அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவு. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது’ என்று அட்டர்னி ஜெனரல் கூறினார். இதற்கு எதிராக நானி பல்கிவாலா தொடுத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வங்கிகளைத் தேசியமயமாக்கியது சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள் உச்சநீதிமன்றம் செல்லவில்லை. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றே அது கூறியது.

எனவே, கூப்பர் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக, வங்கிகளைத் தேசியமயமாக்கிய சட்டம் செல்லாதெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 11 நீதிபதிகள் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், 10 நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தனர். என்ன காரணம்? அரசாங்கம் நிறைவேற்றியிருந்த சட்டத்தின் 2வது அட்டவணையில் இதற்கான விடை இருந்தது.

இழப்பீட்டுத் தொகை

வங்கி முதலாளிகளிடமிருந்து வங்கிகளைப் பெற்று அவற்றை நாட்டிற்குச் சொந்தமாக்குகையில், அந்தந்த வங்கி முதலாளிகளுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை அரசாங்கம் அளிக்க வேண்டும். இந்த நஷ்ட ஈட்டுத் தொகை குறித்த விஷயத்தில்தான் அரசாங்கம் சொதப்பியிருந்தது. அரசாங்கம் நிறைவேற்றியிருந்த சட்டத்தின் 2வது அட்டவணையில் நஷ்டஈடு குறித்த வழிமுறைகள் இருந்தன. இவற்றைத்தான் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஒவ்வொரு வங்கிக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை இவ்வளவு என்று தெளிவாகக் குறிப்பிடாமல், அதை முடிவு செய்யும் வேலையை ஒரு தீர்ப்பாயத்தின் பொறுப்பில் அரசாங்கம் விட்டிருந்தது. அவ்வாறு தீர்ப்பாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை, பணமாக அல்லாமல், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பணமாக்கத்தக்க மத்திய அரசுப் பத்திரங்களாக வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் சொத்துகள் மற்றும் தொழில் மொத்தத்தையும் அரசாங்கம் உடனே எடுத்துக்கொள்ளும்; அந்தந்த வங்கிகளின் தலைவர் மற்றும் இயக்குநர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; ஆனால், வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கு உண்டான இழப்பீட்டுத் தொகையை 10 ஆண்டுகளுக்குப் பிறகே வங்கி முதலாளிகளால் பணமாக்க முடியும். இவ்வாறு, சற்றும் நியாயமே இல்லாத வகையில் சட்டம் கூறியது.

இது போதாதென்று, வங்கிகளுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும் முறையில், வங்கிகள் ஈட்டியிருந்த நற்பெயர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, வங்கிகளுக்குத் தரப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் குறைவாகக் கணக்கிடும்படி ஆனது. இவை போன்று நஷ்டஈடு குறித்துச் சட்டத்தில் இருந்த பல்வேறு நியாயமற்ற வழிமுறைகளால் அரசாங்கம் இயற்றிய அச்சட்டமே செல்லாதென்று 10 பிப்ரவரி 1970 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா காந்தி எடுத்த முடிவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய மசானிக்கு வெற்றி கிடைத்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட முடிவைத் தவறென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததாகப் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது (வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது தவறென்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கவில்லை; அவ்வாறு தேசியமயமாக்கியதற்குத் தரப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்த வழிமுறைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதால்தான் நீதிமன்றம் அச்சட்டத்தைச் செல்லாதென்று தீர்ப்பளித்தது).

இந்தத் தீர்ப்பின் விளைவால் பலரும் உச்சநீதிமன்றத்தை விமர்சித்தனர். அவ்வாறு விமர்சித்த பலருள் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும் ஒருவர். கேரள உயர்நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தது. இந்தத் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், அபராதத் தொகையை மட்டும் ரூ.50 ஆகக் குறைத்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட மத்திய அரசாங்கம், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது. அடுத்த வரைவுச் சட்டம் தயாரானது. தீர்ப்பு வெளிவந்த 4வது நாளில், வங்கிகளைத் தேசியமயமாக்குவது குறித்த அடுத்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் கூடுவதற்கு ஆறு நாட்களே இருந்த நிலையில், மீண்டும் அவசரச் சட்ட வழியையே மத்திய அரசாங்கம் நாடியது. நாடாளுமன்றம் கூடியதும் அந்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த முறை, வங்கி வாரியான இழப்பீட்டுத் தொகை சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மொத்தமாக ரூபாய் 87.40 கோடி இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகை முழுவதையும் பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்த முறை எதிர்ப்புகள் எதுவும் எழும்பவில்லை. தான் நினைத்ததை இந்திரா காந்தி இறுதியாகச் சாதித்திருந்தார் என்றாலும், மசானியின் எதிர்ப்பைத் தாண்டியே அவரால் சாதிக்க முடிந்தது. எதிர்க்கட்சியின் வேலையைத் திறம்படப் புரிந்திருந்தார் மசானி.

மன்னர் மானிய ஒழிப்பு

வி.வி.கிரியை வெற்றிபெற வைத்தது, 14 வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியது என்று அடுத்தடுத்து அதிரடி காட்டிய இந்திரா காந்தி, தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையாக, மன்னர் மானிய ஒழிப்பு விவகாரத்தைக் கையிலெடுத்தார்.

விடுதலை கிடைத்த தருவாயில், நாட்டில் பல்வேறு சமஸ்தானங்கள் இருந்தன. ‘இத்தகைய சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம்; இல்லையெனில் அவை தனி நாடாகத் தொடரலாம்’ என்று இந்திய விடுதலைச் சட்டம், 1947இல் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்ததில் சர்தார் படேல் முக்கியப் பங்கு வகித்தார். சமஸ்தான மன்னர்கள் தத்தம் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஈடாக, அவர்களுக்கு வருடா வருடம் மானியம் அளிக்கப்படும் என்று இந்திய அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவ்வாறு அளிக்கப்படும் மன்னர் மானியத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டது.

மேலும், அவர்களுக்கு வேறு சில உரிமைகளும் சலுகைகளும் தரப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 291 மற்றும் 362 ஆகியவற்றில் இவை குறித்த விதிமுறைகள் இயற்றப்பட்டன. ‘எதைக் கொடுத்தாவது நாட்டின் ஒருமைப்பாட்டை அடைவோம்!’ என்ற மனநிலையில் இருந்த சர்தார் படேல், மன்னர் மானியத்திற்கு ஒப்புக்கொண்டார். நேருவும் அரைகுறை மனதோடு இதற்குச் சம்மதித்தார்.

மன்னர் மானியத்தைக் கணக்கிடுவதற்குச் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. 1947இல் ஆண்டு வருமானம் ரூபாய் 15 லட்சம் வரை இருந்த சமஸ்தானங்களுக்குச் சுமார் 8.5% மன்னர் மானியம் அளிக்கப்பட்டது. முக்கால்வாசி சமஸ்தானங்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 15 லட்சத்திற்குள்தான் இருந்தது என்பதால் இதில் பெரிதாகச் சிக்கல்கள் இல்லை. இந்த வருமான வரம்பைக் கடந்த ஹைதராபாத், குவாலியர், பரோடா போன்ற பெரிய சமஸ்தானங்களுக்கு வேறு வழிமுறைகளின்படி மன்னர் மானியங்கள் தரப்பட்டன. ‘அவர்களுக்கு அளிக்கப்படும் இந்தத் தொகையானது, அவர்கள் முன்பு பெற்றுவந்த தொகையில் நான்கில் ஒரு பங்குதான்’ என்று 1949இல் சர்தார் படேல் அரசியல் நிர்ணய சபையில் கூறியிருந்தார்.

‘தங்கள் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்த மன்னர்களின் காலம் வரையில்தான் உறுதியளிக்கப்பட்ட இந்த மானியத் தொகை அவர்களுக்குத் தரப்படும்; அவர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களது வாரிசுகளுக்கு எவ்வளவு மானியம் அளிக்கப்பட வேண்டும் என்பதை இந்திய அரசாங்கமே முடிவு செய்யும்’ என்பதும் ஒப்பந்தத்தின் அம்சங்களுள் ஒன்று. மன்னர் மானியத்திற்கென 1947இல் ஆண்டொன்றுக்கு ரூபாய் 6 கோடி செலவானது; 1970களில் இது ரூபாய் 4 கோடி அளவிற்குக் குறைந்தது.

சோஷலிசக் கொள்கைகளுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட இந்த மன்னர் மானியத்தை ஒழிக்க வேண்டுமென்று ‘இளம் துருக்கியர் அணி’ விரும்பியது. தான் ஒரு சோஷலிசவாதி என்பதைப் பறைசாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்த இந்திரா காந்தி, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தவிரவும், முன்னாள் மன்னர்கள் பலரும் காங்கிரசிற்கு எதிராகவும், சுதந்திரா கட்சிக்கு ஆதரவாகவும் இருந்தனர். 1967 தேர்தலில் அவர்களில் பலர், சுதந்திரா கட்சி சார்பில் வேட்பாளர்களாக நின்றனர். தேர்தலில் பல இடங்களில் காங்கிரஸ் தோற்றுப் போனதற்குக் காரணமாக இருந்தனர். (ஜெய்ப்பூரில் காங்கிரஸ் வேட்பாளரை 4 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மகாராணி காயத்ரி தேவி கின்னஸ் சாதனை படைத்திருந்தார்). அவர்களின் கொட்டத்தை அடக்கும் வழிமுறையாக, மன்னர் மானிய ஒழிப்பு குறித்த செயல்திட்டத்தை இந்திரா கருதினார். அரசியலமைப்புச் சட்ட விதிகள் மன்னர் மானியத்தை உறுதிப்படுத்துவதால், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து இது தொடர்பான விதிகளை நீக்க வேண்டும் என்று முடிவானது. இதற்காக, அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழக்கூடும். வங்கிகளைத் தேசியமயமாக்குகையில் முதல் படியாக அவசரச் சட்ட வழிமுறையையே தேர்ந்தெடுத்த இந்திரா காந்தி, மன்னர் மானிய ஒழிப்பிற்கு மட்டும் முறையாக நாடாளுமன்றத்தில் ஏன் மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும்? இதற்கும் அவசரச் சட்டத்தின் வாயிலாகவே தீர்வு கண்டிருக்கலாமே?

ஏனென்றால் அவசரச் சட்டத்தின் வாயிலாக, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடியாது. முறையாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றுவதன் மூலமாகத்தான் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த முடியும். எனவே, இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்வதைத் தவிர, இந்திரா காந்திக்கு வேறு வழிகள் இருந்திருக்கவில்லை.

2 செப்டம்பர் 1970 அன்று மக்களவையில் மன்னர் மானிய ஒழிப்பு தொடர்பான மசோதா (24வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா) தாக்கல் செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள், சோஷலிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக இதற்கு ஆதரவளித்தன. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 332 வாக்குகளும், எதிர்ப்பாக 154 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்பாராவிதமாக மாநிலங்களவையில் 5 செப்டம்பர் 1970 அன்று தோற்றுப்போனது. இந்திரா காந்திக்கு இதில் பெருத்த ஏமாற்றம்; அவமானம். அதனால் என்ன? அன்று மாலையே அமைச்சரவை கூடியது. மன்னர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. வி.வி.கிரி அன்றிரவே இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டு ஒப்பமிட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 366(22)இன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மறுநாள் ஒவ்வொரு மன்னருக்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

மன்னரென்ற அங்கீகாரத்தையே திரும்பப் பெற்ற பிறகு, மன்னருக்கு உண்டான மானியத்தை அளிக்கத் தேவையில்லை என்பது அரசாங்கத்தின் வாதம். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி மன்னர் மானியத்தை ஒழிக்க முடியாத இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட நிர்வாக ஆணையின் வாயிலாக மன்னர் மானியத்தை ஒழிக்கலாம் என்று கருதினார். ஆனால், நீதிமன்றம் அவ்வாறு கருதவில்லை.

குவாலியர் சமஸ்தானத்தின் மன்னரான மாதவ்ராவ் சிந்தியா (பின்னாளில் காங்கிரசில் சேர்ந்து, ராஜிவ் காந்தி அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றியவர்), இந்த முடிவிற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாதவ்ராவ் சிந்தியாவின் சார்பில் இந்த வழக்கில் வாதாடியவர் நானி பல்கிவாலா. அரசாங்கத்தின் இந்த முடிவு தவறென்று 7 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ராஜாஜி வரவேற்றார்.

இந்திரா காந்தி மிகவும் கடுப்பானார். ‘மன்னர் மானியத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்; அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பலம் வேண்டும். அன்றைய சூழலில் நாடாளுமன்றத்தில் தனக்குப் போதிய பலமில்லாத நிலையில் இன்னொரு முறை அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தால், மீண்டும் தோற்றுப் போகவே வாய்ப்புகள் அதிகம். தவிரவும், எத்தனை நாட்களுக்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள், சோஷலிசக் கட்சிகள் மற்றும் திமுக ஆகியவற்றின் ஆதரவோடு சட்டங்களை நிறைவேற்றுவது? தன்னுடைய கட்சிக்கே மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை கிடைத்தால் எப்படியிருக்கும்?’ என எண்ணங்கள் தோன்றியதன் விளைவு, அவர் எடுத்த அடுத்த அதிரடி முடிவில் வெளிப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு வெளிவந்த 9 நாட்கள் கழித்து இந்திரா காந்தி அந்த முக்கிய முடிவை எடுத்தார். மக்களவையைக் கலைத்திடுமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தார். இம்முடிவால் ஒரு வருடத்திற்கு முன்னரே மக்களவைத் தேர்தல் நடைபெறும். இந்த முடிவிற்குத்தான் இந்திரா காந்தி வருவார் என்பதை மசானி ஏற்கனவே ஊகித்திருந்தார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *