Skip to content
Home » மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு தொடங்கி 1971 வரையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் மசானி. அவருடைய கூர்மையான அறிவும் ஆங்கிலப் புலமையும் பல உரைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.

ஒருமுறை பொருளாதாரம் சார்ந்த விவாதத்தின்போது, நேருவை ‘அரை வேக்காடு மார்க்சிஸ்ட்’ என்று விமர்சித்துவிட்டு அதுகுறித்து வருந்தினார் மசானி. மறுநாள் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களிடம் அதுகுறித்து வருத்தம் தெரிவித்தார். மசானி எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், ‘நீங்கள் சரியாகத்தானே சொன்னீர்கள்!’ என்றும், ‘நாங்கள் உங்களின் விமர்சனத்தை ரசித்தோம்’ என்றும் கூறியிருக்கின்றனர்.

1959 தொடங்கி 1970 வரையில், ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, விவாதத்தைத் தொடங்கி வைக்கும் முதல் உறுப்பினராக மசானி இருந்திருக்கிறார். தன்னை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மற்றவர்கள் இறக்கிவிட்டனர் என்று இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள மசானி, சோஷலிசப் பாதையில் நாட்டைக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இத்தகைய பட்ஜெட்களைக் கூர்மையாக விமர்சித்திருக்கிறார். பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக, அவர் முன்வைத்த வரிச் சீர்திருத்தங்கள் உட்பட பல பரிந்துரைகள் இப்போது அதிகாரப்பூர்வக் கொள்கையாக உள்ளன. ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்திய பல கட்டுப்பாடுகள், அனுமதிகள் மற்றும் உரிமங்கள் 1990களில் மறையத் தொடங்கின.

ஐந்தாண்டுத் திட்டங்களை விமர்சித்த மசானி, அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அவற்றுக்குக் கணிசமான தொகையை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்க வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். சிந்துபாத்தின் தோள்களில் ஏறி உட்கார்ந்துகொள்ளும் கடல் கிழவனின் கதையைக் குறிப்பிட்ட மசானி, சிந்துபாத்தைப்போல் நிதியமைச்சர் இருப்பதாகவும், கடல் கிழவனைப்போல ஐந்தாண்டுத் திட்டங்களின் நிதிச்சுமை நிதியமைச்சரை அழுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சியில் அரசின் பங்கு என்னவாக இருக்க வேண்டும், தனியாரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்கிற தெளிவான வேறுபாட்டை அவர் விளக்கினார். தனியார் தொழில்முனைவோர் தமக்கான கட்டமைப்பை அமைத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பை வழங்குவதே அரசின் முதன்மையான பணியாகும் என்பது மசானியின் கருத்து. அதாவது உள்கட்டமைப்பைப் பொறுத்தவரையில், பின்வரும் செயல்களில் மட்டுமே அரசின் பங்கு பிரதானமாக இருக்க வேண்டுமென்று மசானி கருதினார்: (1) நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைகள், நீர்வழிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அடங்கிய அடிப்படை உள்கட்டமைப்பை உருவாக்குதல் (2) தனிநபர்களின் சமூக மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் வகையிலான கல்வி வசதிகளை ஏற்படுத்துதல் (3) தெளிவான மற்றும் எளிமையான விதிமுறைகளைக் கொண்ட வலுவான நிர்வாக அமைப்பு (4) காடு வளர்ப்பு, மண் பாதுகாப்பு போன்ற மிகத் தேவையான மற்றும் எளிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள். மீதமிருக்கும் துறைகள் அனைத்தும் தனியார் வசம் இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

1963 முதல் 1971 வரை ராஜ்கோட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மசானி, மாதத்தில் குறைந்தது 3 நாட்களாவது தொகுதிக்கு வருவதாக உறுதியளித்திருந்தார். இந்த வாக்குறுதியை அவர் பெரும்பாலும் தவறாமல் நிறைவேற்றினார். தொகுதி மக்கள் தன்னைத் தொடர்புகொள்ள ஏதுவாக, முழுநேர அலுவலகச் செயலாளர் இருந்த ஓர் அலுவலகத்தை ராஜ்கோட்டில் அவர் இயக்கி வந்தார். தவிரவும், குஜராத்தி மொழி தெரிந்த ஒருவரைத் தன்னுடைய பம்பாய் அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தியிருந்த மசானி, குஜராத்தி நாளிதழ்களையும், செய்தித்தாள்களையும் வருவித்து அவரைப் படிக்க வைத்து, அவர் மூலமாகத் தனது தொகுதி குறித்த செய்திகளை அறிந்து வந்தார். மக்களவையில் தான் ஆற்றிய பணிகள் குறித்த விபரங்களையும், தொகுதி மக்களின் தேவைகள் குறித்துத் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் ராஜ்கோட் தொகுதி மக்களுக்கு விளக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் உயர்த்தப்படுவது குறித்த விவாதம் அவ்வப்போது நாடாளுமன்றத்தில் எழுந்ததுண்டு. அத்தகைய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம், அவற்றை எதிர்க்குமாறு தன்னுடைய கட்சியினரை மசானி வற்புறுத்தினார். ‘தங்களுக்கான ஊதியத்தைத் தாங்களே உயர்த்திக்கொள்வது நியாயமல்ல’ என்பது அவரது வாதம். மேலும், ‘நமக்கு ஊதிய உயர்வு அளித்துக்கொள்ளும் அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் என்ன சாதனை செய்துவிட்டோம்?’ என்றும் கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோதிலும் ஆளுங்கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதை மட்டுமே மினூ மசானி தனது கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை. அரசியல் ஆதாயம் தேடும் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகாமல், நாட்டின் நலன் மற்றும் பிரச்னையின் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவருடைய அணுகுமுறை இருந்தது. எடுத்துக்காட்டாக, 1966இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ரூபாயின் மதிப்பைக் குறைத்திட முடிவு செய்தார். இதற்காக நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசாங்கம் நாடியது. அரசாங்கத்தைத் திணறடிக்கும் நல்லதொரு வாய்ப்பாக இந்த நிகழ்வைப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கருதின.

பொருளாதார வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த மசானி, ரூபாய் மதிப்புக் குறைப்பு அவசியமான நடவடிக்கை என்கிற முடிவிற்கு வந்தார். நாட்டின் நலன் கருதி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார்; வாக்கெடுப்பிலும் அரசாங்கத்தின் பக்கமே வாக்களித்தார். ரூபாயின் மதிப்புக் குறைப்பைத் தொடர்ந்து, பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் சில துணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் இந்த ஆதரவை வழங்கினார். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.

எப்போதும் நாடாளுமன்ற மரபுகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்திய மசானி, தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஒருமுறைகூட நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில்லை.

குறிஞ்சிப்பூ

கம்யூனிசம், சோஷலிசம் ஆகியவற்றை மசானி வெறுத்தார். அவர் விரும்பியதெல்லாம் ‘தூய்மையான மற்றும் வரையறுக்கப்பட்ட அரசாங்கம்’ மட்டுமே. ஃபாசிசமோ கம்யூனிசமோ, தனிநபரின் உரிமைகளை நசுக்கும் அரசாங்க முறையை அவர் தீவிரமாக எதிர்த்திருக்கிறார். நேரு விரும்பியவாறு நடந்துகொண்டிருந்தால் அமைச்சராகக் கூடும் என்பது நன்கு தெரிந்திருந்தும், அவ்வாறு செய்யாமல் அமைச்சர் பதவியைப் பெறாது இறுதிவரை போரிட்டவர் மசானி. இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலை அமலில் இருந்த காலத்தில், பத்திரிகைகளின் தணிக்கை முறையைக் கண்டித்து நீதிமன்றத்தை நாடி வெற்றிபெற்ற ஒரு சில பத்திரிகையாளர்களில் மசானியும் ஒருவர்.

தன்னுடைய சுயசரிதையின் இரண்டாம் பாகத்தின் (Against the Tide) முன்னுரையில் மசானி பின்வரும் மேற்கொளைக் குறிப்பிடுகிறார்: ‘ஒருவருடைய வாழ்க்கையில் இரண்டு வகையான சோகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது; முதலாவது சோகம் – ஒருவர் தான் எண்ணிய இலக்கை அடையாமல் இருப்பது; இரண்டாவது மற்றும் பெரியது – தான் எண்ணிய இலக்கை அடைவது!’ நாட்டு விடுதலை என்னும் இலக்கை நோக்கிப் பயணித்த எத்தனையோ நபர்களில் மசானியும் ஒருவர். முதலாவது வகைச் சோகத்திலிருந்து தப்பித்த மசானியால், இரண்டாவது வகைச் சோகத்திலிருந்து தப்பிக்க இயலவில்லை. விடுதலை அடைந்த பிறகு நாட்டை முன்னேற்ற எத்தனையோ கனவுகள் கண்ட மசானியால், அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதும், தான் எதிர்பார்த்த அளவுக்கு நாடு முன்னேறாமல் போனதும் அவருக்கு ஆழ்ந்த வருத்தங்களை அளித்திருக்கின்றன.

1989இல் ‘We Indians’ என்ற புத்தகத்தை எழுதிய மசானி, அப்புத்தகம் குறித்த விழாவொன்றில் ‘நாட்டில் நிலவிவரும் குழப்பங்களுக்கு என் தலைமுறைதான் காரணம்; எனவே, இளைஞர்களான உங்களுக்கு அறிவுரைகள் தரும் அருகதை எங்களுக்கில்லை’ என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் மட்டுமே அடித்தவர் மசானி. விடுதலைக்கு முன்பிருந்த அரசியல் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற மசானி, விடுதலைக்குப் பிறகு அமைந்த அரசாங்கங்களையும் எதிர்த்தே நின்றார். தன்னுடைய இளம்வயதில் தந்தையின் வீட்டருகே இருந்த ஆபத்தான சிற்றோடை ஒன்றில், துணிச்சலாகத் தான் அடிக்கடி நீச்சலடித்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள மசானி, பிற்காலத்தில் அந்தப் பழக்கத்தின் நீட்சியே தன்னுடைய அரசியல் வாழ்க்கையிலும் வெளிப்பட்டிருக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளமைக் காலங்களில் சோஷலிசத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த மசானி, பின்னாளில் தன்னை மாற்றிக்கொண்டார். ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா’ ராஜ்யத்தையும் கடுமையாக எதிர்த்தார். இடதுசாரிச் சிந்தனையாளராக இருந்தவர், அதற்கு நேரெதிராக வலதுசாரியாக மாறினார். ‘தன்னுடைய கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவராகவோ, நிலைத்து நிற்கும் தன்மை உடையவராகவோ இல்லையே’ என்று மசானியைக் குறித்துச் சிலருக்குத் தோன்றலாம். ‘பச்சோந்தித்தனமான அரசியல் செய்தவர் இவர்’ என்கிற இளக்காரமான எண்ணங்கள்கூட இவர்மீது இன்னும் சிலருக்கு ஏற்படலாம். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, காந்தியடிகள் கூறியதையே மசானியும் கூறியுள்ளார், ‘நிலையாக இருத்தல் என்பது கழுதையின் நற்பண்பு!’

மசானியைப் போன்ற ஒரு தலைவரை, அவருக்குரிய பதவிகள் கொடுத்து அலங்கரிக்காமல்போனது இந்தியா செய்த மிகப்பெரும் தவறுகளுள் ஒன்று. நேரு, இந்திரா காந்தி மட்டுமல்ல, மொரார்ஜி தேசாயும் இதே தவறைச் செய்தார். சிறுபான்மையினர் ஆணையம் தொடங்கி அதற்குத் தலைவராக மசானியை நியமித்த ஜனதா அரசாங்கம், அந்த ஆணையத்திற்கு ‘சட்டப்பூர்வமான ஆணையம்’ என்ற அந்தஸ்தைத் தர மறுத்தது; சிறுபான்மையினர் நலன் குறித்த விஷயத்தில் அந்த ஆணையத்தோடு கலந்தாலோசிக்க மறுத்தது. விளைவு, மூன்றே மாதங்களில் அப்பதவியை ராஜினாமா செய்தார் மசானி.

அரசியலைச் சேவையாகப் பார்த்த குறிஞ்சிப்பூ அரசியல்வாதிகளுள் மசானியும் ஒருவர். கம்யூனிசத்தால் சோவியத் ரஷ்யா அனுபவித்த இன்னல்களைப் பற்றி அவர் 1950களில் கூறியபோது ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியத் தலைவர்கள், இரும்புத்திரை உடைந்தபோது வெளிவந்த உண்மைகளை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. 1960களில் அவர் வலியுறுத்திய சந்தைப் பொருளாதாரத்தை இந்தியா 1991இல் நடைமுறைப்படுத்தியது. தான் கணித்துக் கூறியவை ஒன்றன்பின் ஒன்றாக நடப்பதைப் பார்த்த திருப்தியுடனும், அதே சமயம், ‘தான் கூறியவை அப்போதே நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு எப்போதோ முன்னேறியிருக்குமே!’ என்ற ஆற்றாமையுடனும் மே 1998இல் தனது 93வது வயதில் மினூ மசானி காலமானார்.

0

உதவிய நூல்கள், வலைதளங்கள்:
(1) ‘Bliss was it in that dawn’- Minoo Masani- Vikas Publishing House Pvt.Ltd
(2) ‘Against the Tide’- Minoo Masani- Vikas Publishing House Pvt.Ltd.
(3) ‘Why Swatantra’- Minoo Masani- Popular Prakashan
(4) ‘Minoo Masani’- S.V.Raju- National Book Trust, India
(5) ‘The Last Word: Obituaries of 100 Indians Who Led Unusual Lives’-Rahul Bedi-Roli Books
(6) ‘Working a Democratic Constitution- A History of Indian Experience’- Granville Austin- Oxford India Paperbacks
(7) ‘Nani Palkhivala- The Courtroom Genius’- Soli J Sorabjee and Arvind P Datar- LexisNexis
(8) ‘Nani A.Palkhivala- A Life’- M.V.Kamath- Hay House
(9) ‘General Studies- Indian Polity’- Pratiyogita Darpan
(10) ‘Profiles in courage- Dissent on Indian Socialism’- edited by Parth J Shah- Centre for Civil Society
(11) ‘The Wonder Elections 1971- Indira versus the Right’- Suresh K Tameri- Vivek Publishing House
(12) ‘Minoo Masani 90’- Freedom First.
(13) ‘Statistical Report on General Elections, 1962 to the Third Lok Sabha’ – Election Commission of India (accessed from https://www.eci.gov.in/statistical-reports)
(14) ‘Statistical Report on General Elections, 1967 to the Fourth Lok Sabha’ – Election Commission of India (accessed from https://www.eci.gov.in/statistical-reports)
(15) ‘Statistical Report on General Elections, 1971 to the Fifth Lok Sabha’ – Election Commission of India (accessed from https://www.eci.gov.in/statistical-reports)
(16) ‘Minoo Masani- Radio Autobiography’ (Prasar Bharati Archives- accessed from Youtube in May 2026)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *