1962இல் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரசேகருக்குத் தில்லி புதிதாக இருந்தது. கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்திருந்த அவருக்கு, மேல்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழக்கவழக்கங்கள் புதியதாகத் தோன்றின.
ஒருமுறை, தில்லியிலுள்ள பிரபலமான நட்சத்திர விடுதியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்பதற்குக் கிளம்ப, அவர்களோடு செல்வதற்குச் சந்திரசேகர் சற்றுக் கூச்சப்பட்டார். ஏன்? ‘உணவு உண்பதற்குப் பயன்படுத்த வேண்டிய கரண்டி, கத்தி போன்றவற்றை ஒருவேளை நாம் தவறான முறையில் பிடித்துவிடுவோமோ?’ என்கிற தாழ்வு மனப்பான்மை. அவ்வாறு ஒன்றிரண்டு முறை சென்றபோது, அவர்களின் பொதுவான உரையாடல் என்பது பெரும்பாலும் அந்த விடுதியின் இட அமைப்பு, உட்புற அலங்காரம், உபகரணங்கள் போன்றவற்றைக் குறித்தே இருந்ததைச் சந்திரசேகர் கவனித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையாடல்களில் நாட்டு முன்னேற்றம் குறித்த விவாதங்களே பெரும்பாலும் இடம்பெறும் என்ற எண்ணத்தில் இருந்த அவருக்கு, இவையெல்லாம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. தொடக்கத்தில் அவர்களுடன் உரையாடத் தயங்கியவர், நாளடைவில் சகஜமாகப் பழகத் தொடங்கினார். ‘வெளியில் தயக்கத்துடன் பழகும் இவரா, நாடாளுமன்றத்தில் வெளுத்து வாங்குகிறார்?’ என்று மற்ற உறுப்பினர்கள் சந்திரசேகரைக் குறித்துப் பிரமித்ததுண்டு.
நாடாளுமன்றத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட சந்திரசேகர், பல்வேறு விவகாரங்கள் குறித்த தனது ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தினார். வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானிய ஒழிப்பு, சொத்துரிமை, வகுப்புவாதம், முஸ்லிம் தனிநபர் சட்டம், பொது சிவில் சட்டம், தேர்தல் சீர்திருத்தங்கள் போன்ற விஷயங்களில் அவர் பேசிய பல உரைகள் கருத்தாழம் மிக்கவை. எடுத்துக்காட்டாக, 1963 டிசம்பரில் அவர் ஆற்றிய உரையில், வங்கிகளைத் தேசியமயமாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அதேபோல, ஆகஸ்ட் 1964இல் ஆற்றிய உரையில், மன்னர் மானிய ஒழிப்பின் தேவை குறித்தும் அவர் வலியுறுத்தினார். சந்திரசேகர் முக்கியமாகக் கருதிய இவை இரண்டையும் பின்னாளில் இந்திரா காந்தி நடைமுறைப்படுத்தினார்.
காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விதமான குழுக்கள் செயல்பட்டன. கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டனர்; அதேபோல, சோஷலிசவாதிகள் ஒரு குழுவாகப் பணியாற்றினர். அவ்வாறு சோஷலிசவாதிகள் இருந்த குழுவிற்கு ‘சோஷலிச நடவடிக்கைகளுக்கான காங்கிரஸ் மன்றம்’ என்று பெயர். 1962இல் குல்சாரிலால் நந்தா தொடங்கிய இந்தக் குழு, சோஷலிசம் சார்ந்த நடவடிக்கைகளை வலியுறுத்தியது. நேரு காலமான பிறகு, இந்தக் குழு இருந்த இடமே தெரியாமல்போனது. இந்தக் குழு வற்புறுத்திய சோஷலிசக் கொள்கைகளைச் சந்திரசேகர் கையிலெடுக்கத் தொடங்கினார். தன்னுடைய ஆணித்தரமான உரைகளால் அவையின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிய அவரும், அவருடைய சக உறுப்பினர்களான கிரிஷன் காந்த் (பின்னாளில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஆனவர்), மோகன் தாரியா போன்றோரும் ‘இளம் துருக்கியர்’ என்று அழைக்கப்பட்டனர்.
‘இளம் துருக்கியர்களின் இளவரசன்’ என்று சந்திரசேகர் விளிக்கப்பட்டார். (20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், துருக்கியின் ஓட்டோமன் அரசுக்கெதிராக அந்நாட்டைச் சேர்ந்த இளம் ராணுவ அதிகாரிகளும் மாணவர்களும் புரட்சியில் ஈடுபட்டனர். ‘இளம் துருக்கியர் போராட்டம்’ என்று அவர்களின் இந்தப் போராட்டம் அழைக்கப்பட்டது. தீவிரமான சீர்திருத்தங்களை ஆவேசமாக வலியுறுத்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த நபர்களை ‘இளம் துருக்கியர்’ என்று அழைக்கும் வழக்கம், இந்த நிகழ்விலிருந்து தொடங்கியது). காங்கிரஸ் கட்சிக்குள் சோஷலிசக் கொள்கைகளை வலியுறுத்திய புதிய தலைமுறையின் குரலாக ‘இளம் துருக்கியர்’ அணி உருவெடுத்தது.
நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்குப் பிறகு, 1966இல் பிரதமர் பதவிக்கு இந்திரா காந்தி வந்தார். பிரதமர் என்னவோ அவர்தான்; ஆனால் ஆட்சி மற்றும் கட்சி ஆகியவற்றின் உண்மையான கட்டுப்பாடு அவருடைய கையில் இல்லை. காமராஜர், நீலம் சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ் ஆகிய தலைவர்களின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தது. இவர்களை ‘சிண்டிகேட் அணி’ என்று அழைத்தனர். இந்திரா காந்தியின் ஆட்சியை இந்த அணி மறைமுகமாகக் கட்டுப்படுத்திவந்தது. ஆரம்பக் காலங்களில், நாடாளுமன்றத்தில் பேசத் தயங்கியபடி அமைதியாக அமர்ந்திருந்த இந்திரா காந்தியை ‘ஊமைப் பொம்மை’ (இந்தியில் ‘Goongi Gudiya’) என்று ராம் மனோகர் லோஹியா விமர்சித்ததுண்டு. அப்படிப்பட்ட இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்கினால், தம்முடைய கட்டுப்பாட்டில் அவரை வைத்திருக்கலாம் என்றும், அதன் விளைவாகக் கட்சியும், ஆட்சியும் தம் கைகளில்தான் இருக்கும் என்றும் சிண்டிகேட் அணி கருதியதாக ஒரு கருத்து நிலவியது. இந்தக் காரணத்திற்காகவே, இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்குச் சிண்டிகேட் அணி ஆதரவளித்தது என்றும் ஒரு வாதம் உண்டு.
1966இல் பிரதமரான இந்திரா காந்தி, அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றது என்றாலும், கட்சியின் பலவீனங்கள் அந்தத் தேர்தலில் வெளிப்பட்டிருந்தன. யமக்களவைத் தேர்தலில் 360 இடங்களுக்குக் குறையாமல் அதுவரையில் வென்றுவந்த காங்கிரஸ், அந்தத் தேர்தலில் 283 இடங்களில் மட்டுமே வென்றது. பல அமைச்சர்கள் தோற்றிருந்தனர். தவிரவும், 9 மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்திருந்தது. தேர்தல் பின்னடைவு குறித்து ஆராய, ஜூன் 1967இல் புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் குழு கூடியது. ‘சோஷலிசம் என்ற இலக்கை அடைவதில் ஏற்பட்ட தாமதமே இந்தப் பின்னடைவிற்குக் காரணம்’ என்று விவாதங்களின் முடிவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே, சோஷலிசக் கொள்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்திரா காந்தி கருதத் தொடங்கினார். அந்த முடிவிற்கு அவர் வருவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறிடச் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் இந்திரா. வெறும் கோஷ்டிச் சண்டையாகக் கொண்டு செல்லாமல், கொள்கை அளவில் சண்டையாக இதைக் காட்டலாம் என்று இந்திராவின் ஆலோசகர்கள் அறிவுறுத்தினர். எனவே, சோஷலிசக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இந்திரா காந்தி முனைப்புடன் இருப்பதாகவும், சிண்டிகேட் அணியினர் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் சித்தரிக்கப்பட்டது. சோஷலிசக் கொள்கைகளுக்குத் தான் ஆதரவாளர் என்பதைக் காட்டுவதற்காக, இளம் துருக்கியர் அணியினரோடு நெருக்கம் காட்டத் தொடங்கினார் இந்திரா.
கனவு நிறைவேறுதல்
இந்திரா காந்தியின் நிலையைப் புரிந்துகொண்டது சந்திரசேகர் தலைமையிலான இளம் துருக்கியர் அணி. எனவே, 10 அம்சத் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அதனை உடனே அமல்படுத்துமாறு இந்திராவிடம் கோரியது. வங்கிகளைத் தேசியமயமாக்குதல், பொதுக் காப்பீட்டைத் தேசியமயமாக்குதல், மன்னர் மானிய ஒழிப்பை நடைமுறைப்படுத்துதல், ஒரு சில நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரித்தல், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக அமல்படுத்துதல், கூட்டுறவுச் சங்கங்களை விரிவாக்குதல் போன்ற விஷயங்களை 10 அம்சத் திட்டத்தில் இளம் துருக்கியர் அணி வற்புறுத்தினர். மேலும், இவற்றை அமல்படுத்த வேண்டி ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினர். 118 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணத்தை இந்திரா காந்திக்கும், காமராஜருக்கும் சமர்ப்பித்தனர். இளம் துருக்கியரின் இத்தகைய தொடர்ச்சியான செயல்பாடுகளால் கவரப்பட்டார் இந்திரா காந்தி. சோஷலிசத் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக அமல்படுத்த முடிவு செய்தார்.
இதற்கிடையில், குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர். ஜாகிர் ஹுசைன் மே 1969இல் காலமானார். குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டி அறிவிக்கப்பட்டார். துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். சிண்டிகேட் தலைவர்களுள் ஒருவரான நீலம் சஞ்சீவ ரெட்டியைக் குடியரசுத் தலைவராக ஆக்குவதில் இந்திரா காந்திக்கு விருப்பம் இருக்கவில்லை. எனவே, தேர்தலில் ‘மனசாட்சிப்படி’ வாக்களிக்குமாறு கூறினார்.
இந்திராவின் வேண்டுகோளைப் புரிந்துகொண்ட பலரும், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காமல், வி.வி.கிரிக்கு வாக்களித்தனர். மிகக் கடுமையாக நடந்த போட்டியில் வி.வி.கிரி வெற்றி பெற்றார். நீலம் சஞ்சீவ ரெட்டி தோற்றுப்போனார். கட்சியின் விதிகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, இந்திரா காந்தி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காங்கிரஸ் (R) என்ற புதுக் கட்சியைத் தொடங்கினார் இந்திரா. பழைய காங்கிரஸ்காரர்கள் இருந்த கட்சி, காங்கிரஸ் (O) என்று அழைக்கப்பட்டது (O- Organisation; R- Requisition). கட்சி இரண்டாக உடைந்ததால், மக்களவையில் இந்திரா காந்தியின் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 221 ஆகக் குறைந்தது. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்தார் இந்திரா.
சிண்டிகேட் அணியினரின் பிடியிலிருந்து வெளிவந்து தனிக்கட்சியைத் தொடங்கியிருந்த இந்திரா, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜூலை 1969இல் 14 வங்கிகளைத் தேசியமயமாக்கினார். இதன்மூலம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த ஒரு விஷயம் நிறைவேற்றப்பட்டது. சந்திரசேகருக்கு முன்பே பலர் இந்த விஷயத்தை வலியுறுத்தியிருந்தாலும், சந்திரசேகர் உள்ளிட்ட இளம் துருக்கியர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலும் இந்த முடிவிற்கு வழிவகுத்த முக்கியக் காரணிகளில் ஒன்றாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தன்னுடைய கனவுத் திட்டங்களில் ஒன்று பலித்ததை எண்ணி மகிழ்ந்த சந்திரசேகர், அடுத்தடுத்த திட்டங்களையும் அமல்படுத்த வேண்டுமென்று இந்திரா காந்தியிடம் கோரிக்கை வைத்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தது, வங்கிகளைத் தேசியமயமாக்கியது என்று தொடர்ச்சியாக அதிரடி காட்டிய இந்திரா, 1970 செப்டெம்பரில் அடுத்த அதிரடியை நிகழ்த்தினார். மன்னர் மானிய ஒழிப்பு குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. ‘பிற கட்சிகளின் ஆதரவுடன் எத்தனை நாட்களுக்கு ஆட்சி நடத்துவது? இத்தகைய திட்டங்களை நிறைவேற்றத் தனக்கென்று நாடாளுமன்றத்தில் அசுரபலம் தேவை’ என்ற முடிவிற்கு வந்த இந்திரா, அடுத்த அதிரடி முடிவை வெளியிட்டார். மக்களவையின் காலம் முடிய 14 மாதங்கள் இருந்த நிலையில் மக்களவையைக் கலைப்பதாக டிசம்பரில் அறிவித்தார். மார்ச் 1971இல் மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இளம் இந்தியன்
பேச்சாற்றலில் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டிருந்த சந்திரசேகர் டிசம்பர் 1970இல் ‘இளம் இந்தியன்’ என்கிற வார இதழைத் தொடங்கினார் (காந்தியடிகள் தொடங்கிய இதழின் பெயர் ‘இளம் இந்தியா’). இந்த இதழின் தலையங்கங்களில் தன்னுடைய எண்ணங்களை சந்திரசேகர் வெளிப்படுத்தினார். ‘நம்மால் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிப்போம். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியவர்களை மட்டுமே முன்னிறுத்துவோம். ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளரும், தொண்டரும் காங்கிரசின் கொள்கை விளக்க அறிக்கையைத் தங்களின் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்’ என்று தேர்தல் சமயத்தில் சந்திரசேகர் எழுதினார்.
1971 தேர்தலின்போது, ‘இந்திராவை அகற்றுவோம்’ என்கிற எதிர்மறை வாதத்தை மட்டுமே எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்வைத்தது. இதற்குத் தக்க பதிலடி தந்த இந்திரா, ‘வறுமையை அகற்றுவோம்’ என்கிற கோஷத்தை முன்வைத்தார். நின்றுபோன சோஷலிசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாகத் தன் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்திராவிற்குக் கிடைத்தது. 352 தொகுதிகளில் இந்திராவின் காங்கிரஸ் (ஆர்) கட்சி வெற்றி பெற்றிருந்தது. எதிர்க்கட்சிகள் காணாமல் போயிருந்தன. மக்களவையில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை இந்திரா பெற்றிருந்தார்.
தேர்தல் வெற்றி குறித்து ‘இளம் இந்தியன்’ இதழில் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்திருந்தார் சந்திரசேகர். ‘காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் பெருமை கொள்ளத்தக்க ஒரு தருணமாக இது இருக்கின்றது. அதே வேளையில், மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் நாம் இந்தத் தருணத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘இனி காங்கிரஸ் கட்சியால் தனது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், தனது நோக்கத்தை அடைவதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை எவ்விதச் சிரமமுமின்றி அறிமுகப்படுத்தவும் முடியும். ஒருவேளை, இம்முறையும் வாக்குறுதிகளை நிறைவேற்றக் காங்கிரஸ் தவறினால், அதற்காக எந்தச் சாக்குப்போக்கையும் கட்சியால் தெரிவிக்க முடியாது’ என்று சுட்டிக் காட்டியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த எச்சரிக்கையைப்போலத் தோன்றும் இத்தகைய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கையில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற சந்திரசேகரின் நேர்மையை உணர்ந்துகொள்ள முடியும்.
ஆட்சி தொடங்கிய புதிதில், மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவை இந்திரா காந்தி வெகு எளிதாக நிறைவேற்றினார். சந்திரசேகர் விரும்பிய இரண்டாவது செயலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இளம் துருக்கியர் அணி வலியுறுத்திய 10 அம்சத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த மற்ற திட்டங்கள் மீது போதுமான கவனத்தை இந்திரா செலுத்தவில்லை. தவிரவும், தேர்தலின்போது அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்திரா காந்தி சுணக்கம் காட்டுவதாகச் சந்திரசேகர் புரிந்துகொண்டார். நிதியமைச்சர் ஒய்.பி.சவான் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்துத் தன்னுடைய ‘இளம் இந்தியன்’ இதழில் அலசிய சந்திரசேகர், மக்களின் ஆசைகளுடனோ அல்லது எதிர்பார்ப்புகளுடனோ பட்ஜெட் ஒத்துப் போகவில்லை என்று விமர்சித்தார். பட்ஜெட் பற்றாக்குறையாக ரூ. 400 கோடி இருந்ததைக் குறிப்பிட்ட சந்திரசேகர், இந்த நிதிப் பற்றாக்குறையானது, சமூகத்தின் ஏழைப் பிரிவினர் மீது பெரும் சுமையைச் சுமத்துமென்று எழுதினார்.
1971ஆம் ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பெற்ற பெருவெற்றி, வங்கதேசத்தின் உருவாக்கம் ஆகிய நிகழ்வுகள் இந்திராவின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்றன. ‘இந்திரா காந்தியிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும்; அப்போதுதான் அவரால் நமக்குப் பின்னாளில் ஏதேனும் நன்மை கிடைக்கும். அவரிடம் நற்பெயர் ஈட்டாமல் போனாலும் பரவாயில்லை; அவரைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்’ என்பன போன்ற எண்ணங்கள் பெரும்பாலானவர்களிடம் அப்போது தோன்றியிருக்கக் கூடும். அத்தகைய உச்சகட்ட செல்வாக்குடன் இந்திரா காந்தி இருந்த சூழலில், அவருடைய குறைகளைச் சுட்டிக்காட்டி அவரைப் பகைத்துக்கொள்ள யாருக்குத் தைரியம் வரும். சந்திரசேகரைத் தவிர?
இந்திரா காந்தியின் செயல்பாடுகளைச் சந்திரசேகர் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியது இந்தக் காலகட்டத்திலிருந்துதான். சந்திரசேகரின் நேரடியான விமர்சனங்கள் இந்திரா காந்திக்குப் பிடிக்காமல் போகத் தொடங்கியதும் இங்கிருந்துதான்.
இந்திரா-சந்திரசேகர்-ஜேபி
1971 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்திக்கு அமோக வெற்றி கிடைத்த பிறகு, சோஷலிசத் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் உருவாகிவிட்டதாகச் சந்திரசேகர் கருதினார். ஆனால், அடுத்த ஆண்டிலேயே அந்த நம்பிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ‘நிலச் சீர்திருத்தம், வறுமையை ஒழித்தல் போன்ற கொள்கைகளுக்கு இந்திரா காந்தி தொடர்ந்து ஆதரவளித்தாலும், அவை வெறும் முழக்கங்களாகவே நின்றுவிடுகின்றன; அவற்றை நேர்மையாகவும் உறுதியுடனும் செயல்படுத்திட அரசுக்கு மனவலிமை இல்லை!’ என்கிற தன்னுடைய வருத்தத்தை, 1972இல் ‘இளம் இந்தியன்’ இதழில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
கொள்கையைவிடவும் அதிகார அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு காங்கிரஸ் கட்சிக்குள் வலுப்பெறுவதாகவும், பிரதமரின் பெயரைப் பயன்படுத்திச் சிலர் தனிப்பட்ட அதிகார மையங்களாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டிய சந்திரசேகர், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையே சிதைந்துவிடும் என்றும் எச்சரித்தார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு, ஆட்சிக்கெதிரான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதிவந்த சந்திரசேகர் மீது இந்திராவிற்கு வெறுப்பு ஏற்படத் தொடங்கியது.
இது ஒருபுறம் இருக்க, பல்வேறு விஷயங்களின் விளைவால் மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு விரக்தி ஏற்படத் தொடங்கியது. தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் பருவமழை பொய்த்தது (1972 மற்றும் 1973). அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏறின. உணவுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டன. பொருளாதாரம் அடிபட்டது. வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கின. 1974இல் ரயில்வே தொழிலாளிகள் மிகப்பெரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பிரச்னைகள் போதாதென்று, மத்திய அரசின் நடவடிக்கைகளால் குஜராத்தில் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. இந்தச் சிறிய தீப்பொறியின் விளைவு எண்ணிப் பார்க்க முடியாததாக இருந்தது.
1974இல் நடைபெறவிருந்த உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திராவின் காங்கிரஸ் (ஆர்) கட்சி, அதற்காகப் பல்வேறு வழிகளைக் கையாண்டது. உத்தரப் பிரதேசத்திற்கான உணவு தானிய ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. இதற்காகப் பல்வேறு மாநிலங்களின் ஒதுக்கீட்டு அளவு குறைக்கப்பட்டது. மாதத்திற்குச் சுமார் 1 லட்சம் டன் அளவுக்குக் கோதுமை ஒதுக்கீடு பெற்றுவந்த குஜராத்திற்கு 35,000 டன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது போதாதென்று, முந்தைய இரண்டாண்டுகளில் போதிய மழைப்பொழிவு இல்லாமல் பஞ்சம் நிலவி வந்தது. மக்களுக்கு உணவு தானியம் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஒதுக்கீட்டு அளவும் குறைக்கப்பட்டதால் பதுக்கல் அதிகரித்து விலைவாசி கடுமையாக ஏறத் தொடங்கியது. இதன் விளைவுகளுள் ஒன்றாக, குஜராத் மாநிலக் கல்லூரிகளில் உணவுக் கட்டணம் ஏறத்தொடங்கியது.
டிசம்பர் 1973 தொடங்கி, குஜராத் மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்திற்குப் பொதுமக்களின் ஆதரவும் கிடைத்தது. மக்கள் எதிர்ப்புக்கு அடிப்படையான காரணத்தை அறிந்துகொண்டு அதைச் சரிசெய்யவேண்டிய குஜராத் மாநில காங்கிரஸ் அரசு, அதற்கு நேர்மாறான வழியில் செயல்படத் தொடங்கியது. மக்களின் எதிர்ப்பை அடக்க முதலில் காவல்துறையும், பிறகு ராணுவமும் களமிறக்கப்பட்டது. பெரும்பாலும் சத்தியாகிரக வழியில் நடைபெற்ற இப்போராட்டங்களில், நாளடைவில் வன்முறையும் சேர்ந்துகொண்டது. பொது வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. தடியடி, கலவரங்கள் ஏற்பட்டன. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. துப்பாக்கிச் சூடு நடந்தது. நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். அரசியல் கட்சிகள் களமிறங்கின. காங்கிரஸ் (O), ஜன சங்கம் போன்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், தத்தமது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மாணவர்களின் போராட்டம் குறித்து நவம்பர் 1972இல் (அதாவது குஜராத்தில் மாணவர்களின் போராட்டம் தொடங்குவதற்கு ஏறக்குறைய ஓராண்டிற்கு முன்பு) ‘இளம் இந்தியன்’ இதழில் சந்திரசேகர் எழுதியிருந்தார். ‘சமூகத்தின் உணர்ச்சிமிக்க பிரிவுகளில் ஒன்றாகத் திகழும் மாணவர் சமூகம், ஒரு வகையில் மக்களின் எண்ணத்தை அளக்கும் ஓர் அளவுகோலாக விளங்குகிறது’ என்று குறிப்பிட்ட சந்திரசேகர், ‘மாணவர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நோக்கிலான அடக்குமுறை நடவடிக்கைகளை அவசரப்பட்டு மேற்கொள்வது தற்காலிக அமைதியை ஏற்படுத்தக்கூடும்; ஆனால், அது நிச்சயம் இன்னும் ஆபத்தானதொரு வடிவத்தில் வெடித்துக் கிளம்பவே செய்யும்’ என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிவுரையை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சந்திரசேகர் கூறியதற்கு முற்றிலும் மாறான வழியில், குஜராத் மாணவர்கள் போராட்டத்தை அந்த மாநில அரசு கையாண்டது. சந்திரசேகர் கணித்ததைப் போலவேதான் இறுதியில் நடந்தது.
‘புதிய சீரமைப்பு இயக்கம்’ (இந்தியில்: நவநிர்மாண் அந்தோலன்) என்று பெயரிடப்பட்ட குஜராத் மாணவர்களின் போராட்டம், 1974 மார்ச் வரை நீடித்தது. வேறு வழியின்றி, குஜராத் முதல்வராக இருந்த சிமன்பாய் படேல் பதவி விலகினார். போராட்டம் அத்தோடு முடியவில்லை. குஜராத் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்து உடனே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று கோரி, மொரார்ஜி தேசாய் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். இதற்கு உடன்பட மறுத்தார் பிரதமர் இந்திராகாந்தி. மொரார்ஜி தேசாய்க்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. மத்திய அரசிற்குக் குடைச்சல் ஏற்பட்டது. இறுதியில், இந்திரா காந்தி ஒப்புக்கொண்டார். குஜராத் மாநிலச் சட்டசபை கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது (மார்ச் 1974).
மாணவர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்று சிறிய அளவில் குஜராத்தில் தொடங்கிய அந்த நிகழ்வு, சட்டமன்றம் கலைக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. குஜராத் மாணவப் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்தார் ஜெயபிரகாஷ் நாராயண் (ஜேபி). 1954இல் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவருடைய மனைவி பிரபாவதி தேவி புற்றுநோயால் இறந்திருந்தார் (ஏப்ரல் 1973). தனிமையில் வெறுப்புற்றிருந்த ஜேபிக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்த இப்போராட்டங்கள் உத்வேகம் அளித்தன. பீகாரிலும் மாநில அரசுக்கு எதிராக அத்தகைய போராட்டங்கள் நடைபெறவே, அவற்றிற்கு ஜேபி ஆதரவளித்தார். மத்திய மற்றும் மாநில ஆட்சிகளுக்கு எதிரான இப்போராட்டங்களுக்குப் பெருமளவில் ஆதரவு பெருகுவதைக் கண்ட ஜேபி, நாடு தழுவிய அளவில் இப்போராட்டங்களை நடத்த முடிவுசெய்தார். ‘முழுமையான புரட்சி’க்கு (இந்தியில்: சம்பூர்ண கிராந்தி) அறைகூவல் விடுத்தார். ஜேபியின் பின்னால் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். ‘என்னவோ நடக்கப் போகிறது!’ என்கிற பதைபதைப்பு நாட்டில் நிலவியது.
அக்டோபர் மற்றும் நவம்பர் 1973இல் தன்னுடைய ‘இளம் இந்தியன்’ இதழில் ஊழலுக்கெதிரான ஜேபியின் குரல் குறித்துச் சந்திரசேகர் எழுதினார். ‘ஊழலை ஒழிப்பதற்கு, முதலில் சமூக மாற்றம் தேவை. பொருளாதாரப் பிரச்னைகளைக் கண்டறிவது கடினமான காரியமல்ல; இந்தியா சுதந்திரம் அடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே அது செய்யப்பட்டுவிட்டது. மக்களின் சமூக மற்றும் பொருளாதார விடுதலை குறித்த வெற்று வாக்குறுதிகளைக் கூறிக்கொண்டு, பொதுமக்களை எவ்வளவு காலத்திற்குத்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? நமது தற்போதைய அரசியல் தலைமைக்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறனோ அல்லது அதற்கான விருப்பமோ இல்லை என்பது வெளிப்படை. எனவே, ஜேபி போன்ற உயர்ந்த ஆளுமை கொண்ட ஒருவரிடமிருந்து ஒரு முன்னெடுப்பை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது’ என்று ஜேபி குறித்த தனது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்திராவிற்கும் ஜேபிக்கும் இடையே ஏற்பட்ட சுணக்கத்தைப் போக்க, இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுச் சமாதானமாகப் போகவேண்டும் என்று சந்திரசேகர் வற்புறுத்தினார். இந்திரா காந்திக்கு இவையெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதைப்போல், இந்திராவிற்கு எதிராக ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. அதன் விளைவால் இந்திரா ஒரு முடிவெடுத்தார். அதனால் மக்களாட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டது.

