1971 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார் இந்திரா காந்தி. 1952 தேர்தலில், ‘பிரதாப்கர் மாவட்டம் (மேற்கு) மற்றும் ரேபரேலி மாவட்டம் (கிழக்கு)’ என்கிற வினோதமான பெயரைக் கொண்டிருந்த அந்தத் தொகுதியில் அவருடைய கணவர் ஃபெரோஸ் காந்தி போட்டியிட்டு வென்றிருந்தார். ‘ரேபரேலி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு நடந்த 1957 தேர்தலிலும் ஃபெரோஸ் காந்தியே வெற்றி பெற்றிருந்தார். 1967 தேர்தலில் அதே தொகுதியில் நின்ற இந்திரா காந்தி, கிட்டத்தட்ட 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். எனவே, அடுத்து வந்த 1971 தேர்தலிலும் அதே தொகுதியையே அவர் தேர்ந்தெடுத்தார். காங்கிரசின் கோட்டையான ரேபரேலியில் தான் வெல்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று இந்திரா எண்ணியிருக்கக்கூடும். ஆனால், அங்கு பெற்ற வெற்றிதான் அவருக்குச் சிக்கலைத் தேடித்தந்தது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்யவேண்டிய பெரும் பொறுப்பு இந்திராவிற்கு இருந்தது. எனவே, ரேபரேலி தொகுதியில் மட்டுமே தன்னால் கவனம் செலுத்திக் கொண்டிருக்க முடியாது என்று கருதிய அவர், தன்னுடைய சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, யஷ்பால் கபூர் என்கிற தன்னுடைய சிறப்புப் பணி அலுவலரை அங்கு அனுப்பினார். 1954-55இல் மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்த யஷ்பால் கபூர், நேருவின் தனி உதவிச் செயலாளராகப் பணியாற்றினார். நேருவிற்குப் பிறகு, இந்திராவிடம் சிறப்புப் பணி அலுவலராக வேலை பார்த்துவந்தார். நேரு குடும்பத்தின் விசுவாசியான அவரை, 1967 தேர்தலின்போதே தன்னுடைய சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தியிருந்தார் இந்திரா.
என்னதான் நேரு குடும்பத்தின் ஆதரவாளராக இருந்தாலும், அடிப்படையில் யஷ்பால் கபூர் ஓர் அரசு அலுவலர் அல்லவா? அவரை எவ்வாறு அரசியல் பணிகளுக்காகப் பயன்படுத்த முடியும் என்கிற கேள்வி எழக்கூடுமே! எனவே, 1967 தேர்தல் சமயத்தில், யஷ்பால் கபூர் தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார்; பிறகு, இந்திராவின் சார்பில் ரேபரேலியில் தேர்தல் பணிகளை மேற்கொண்டார்; தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, மீண்டும் தன்னுடைய சிறப்புப் பணி அலுவலராக யஷ்பால் கபூரைப் பணியில் அமர்த்திக்கொண்டார் இந்திரா. முந்தைய தேர்தலில் கையாண்ட அதே உத்தியை 1971 தேர்தலின்போதும் பின்பற்ற இந்திராவும் யஷ்பால் கபூரும் முடிவெடுத்தனர். அதில்தான் இந்திராவுக்குச் சிக்கல் ஏற்பட்டது.
பலரும் எதிர்பார்த்ததைப் போலவே, ரேபரேலி தொகுதியில் இந்திரா மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருந்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சம்யுக்த சோஷலிசக் கட்சியின் வேட்பாளர் ராஜ் நாராயணை சுமார் 1.11 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றிருந்தார். மொத்தம் பதிவான செல்லத்தக்க வாக்குகளில், இந்திரா பெற்ற வாக்குகளின் சதவீதம் 66.35%. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் இரு மடங்கு வாக்குகள். ‘தேர்தல் முடிந்துவிட்டது; இந்திராதான் பிரதமர் பதவியில் தொடரப்போகிறார்; எனவே, மீண்டும் அவரிடம் சிறப்புப் பணி அலுவலராகப் பணியாற்றலாம்!’ என்று எண்ணிக்கொண்டிருந்த யஷ்பால் கபூருக்கு ஏமாற்றம். ஏனென்றால் அவருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம், இந்திராவின் தேர்தல் வெற்றியைச் செல்லாதாக அறிவிக்கக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜ் நாராயண் தொடுத்திருந்த வழக்கு.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எதிராக இது போன்ற வழக்குகள் தொடுக்கப்படுவது வாடிக்கையென்றாலும், மூன்று காரணங்களுக்காக இந்த வழக்கை மிகவும் முக்கியமானதாகக் கருதலாம். பிரதமரின் வெற்றிக்கெதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பது முதற்காரணம்; பிரதமருக்கு எதிராக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது இரண்டாவது காரணம்; இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் உடனடி விளைவுதான் ஜூன் 25, 1975 அன்று இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலைப் பிரகடனம் என்பது மூன்றாவது காரணம். எனவே, இந்த வழக்கைக் குறித்து விளக்கமாகப் பார்ப்பது அவசியம்.
தேர்தல் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே ராஜ் நாராயண் தொடுத்த வழக்கு இது. பிரபல வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், ஜே.பி.கோயல் ஆகியோர், கட்டணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமல், ராஜ் நாராயண் சார்பில் இந்த வழக்கில் வாதாடினர். நீதிபதி ப்ரூம் என்பவரிடம் ஆரம்பக் கட்டத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. துவக்கத்திலிருந்தே இந்த வழக்கை நீர்த்துப் போகவைக்க, இந்திரா காந்தி சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் 1972இல் நீதிபதி ப்ரூம் பணி ஓய்வுபெற்றார். அவருக்குப் பிறகு இந்த வழக்கை நீதிபதி கே.என்.ஸ்ரீவாஸ்தவா என்பவரும், இறுதியாக நீதிபதி ஜகன்மோகன் லால் சின்ஹா என்பவரும் விசாரித்தனர். இவ்வழக்கில் மொத்தம் 14 விவகாரங்கள் வரையறுக்கப்பட்டன; இவற்றில் இரு விவகாரங்கள் இந்திராவுக்கு எதிராக இருந்தன. அவற்றில் முக்கியமானது – அரசு ஊழியரான யஷ்பால் கபூரை தன்னுடைய தேர்தல் பணிகளுக்காக இந்திரா காந்தி பயன்படுத்தியது.
‘யஷ்பால் கபூர்தான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தாரே!’ என்ற எண்ணம் தோன்றக்கூடும். அங்குதான் ஒரு சிக்கல் இருந்தது. டிசம்பர் 29, 1970 அன்று தேர்தல் பணிகளைத் துவக்கியிருந்த யஷ்பால் கபூர், ஜனவரி 13, 1971 அன்றுதான் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார். ஜனவரி 25, 1971 அன்று அவருடைய ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, இந்திராவின் சார்பில் தேர்தல் வேலைகளைச் செய்யத் துவங்கியிருந்தபோது அவர் அரசு ஊழியராக இருந்தார். ஆக, ஓர் அரசு ஊழியரைத் தன்னுடைய தேர்தல் வேலைகளுக்காக இந்திரா பயன்படுத்தினார் என்பது நிரூபணமாகியிருந்தது.
இந்திரா தவறு செய்ததாக நிரூபணமான இரண்டாவது விஷயம் – தேர்தல் சமயத்தில் உத்தரப் பிரதேசம் வந்திருந்த இந்திரா, மாநிலப் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான மேடையில் பிரச்சாரம் செய்திருந்தார். அரசுக்குச் சொந்தமான இடத்தில், அரசுக்குச் சொந்தமான பொருளான மேடையை இந்திரா பயன்படுத்தித் தன்னுடைய தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது தவறென்று நிரூபிக்கப்பட்டது.
இந்த இரண்டு விஷயங்களில் தேர்தல் விதிகள் மீறப்பட்டிருந்ததால், ரேபரேலி தொகுதியில் இந்திரா பெற்ற வெற்றி செல்லாது என்று ஜூன் 12, 1975 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ‘யஷ்பால் கபூரின் செல்வாக்கால்தான் 1.11 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திரா வென்றிருந்தாரா? அல்லது மாநிலப் பொதுப்பணித்துறையின் மேடையைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்ததால் மட்டுமே இந்திராவிற்கு மாபெரும் வெற்றி சாத்தியமானதா?’ என்கிற கேள்விகள் எழக்கூடும். ஆனால், தேர்தல் விதிகள் மீறப்பட்டிருந்தன என்று நிரூபணம் ஆனபிறகு வேறென்ன செய்வது? தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாதென்பதால் இந்திரா காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது என்று ஆகிவிட்டது; தவிரவும், தேர்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு மற்றொரு தண்டனையும் கிடைத்தது – அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் இந்திரா போட்டியிட முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. ‘போக்குவரத்து விதிமீறல் அபராதத்திற்காக ஒருவரைத் தூக்குமேடைக்கு அனுப்புவதைப் போன்ற தீர்ப்பு’ என்று இந்தத் தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழில் விமர்சிக்கப்பட்டிருந்தது. ‘இந்திராவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?’ என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்தது; ஆனால், இந்திரா எடுத்த அந்தப் பதில் நடவடிக்கையோ யாரும் எதிர்பாராதது!
எமர்ஜென்சி
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் இந்திரா காந்தி தரப்பால் மேல்முறையீடு செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றத்தால் ஜூன் 23 அன்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பிரதமர் பதவியில் இந்திரா தொடரலாமென்றும், ஆனால் நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில் அவர் பங்குபெற்று வாக்களிக்க முடியாதென்றும் இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டது. (இந்திரா காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத்தான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு பறித்திருந்தது; நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமலேயே ஒருவர் 6 மாத காலம் வரை பிரதமர் பதவியை வகிக்கலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவேதான், பிரதமராக இந்திரா நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை; அவர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லையென்பதால், அவரால் நாடாளுமன்ற வாக்கெடுப்புகளில் வாக்களிக்க முடியாதென்று உச்சநீதிமன்றம் கூறியது).
இந்திரா காந்தி ஆட்சிக்கெதிராக ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் உத்வேகத்தை அளித்தது. ‘பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக இந்திரா காந்தி விலகவேண்டும்’ என்று அவர்கள் குரல்கொடுக்கத் துவங்கினர். உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை வந்தபோதும் அவர்கள் இந்த விவகாரத்தை விடவில்லை. மாறாகத் தங்களின் போராட்டத்தை அதிகப்படுத்தினர். இவர்களைச் சமாளிக்கும் விதமாக, இந்திராவிற்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சியினரால் கூட்டங்கள் கூட்டப்பட்டன. ‘இந்திரா பிரதமராகத் தொடரவேண்டும்’ என்று இந்திராவின் வீட்டின் முன்பு அன்றாடம் கோஷங்கள் எழுப்பப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஜேபி உள்ளிட்ட போராட்டத் தலைவர்கள் அடுத்த கட்டத்திற்குச் சென்றனர். பிரதமர் பதவியிலிருந்து விலகாவிட்டால், இந்திராவின் வீட்டின் முன்பு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடப் பலரும் முன்வருவர் என்று அறிவிக்கப்பட்டது. தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜூன் 25 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திராவின் ஆட்சிக்கெதிராக ஜேபி நிறையப் பேசினார். ஒவ்வொரு முக்கிய நகரத்திலும், மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அவர் கூறினார். மேலும், இந்திரா காந்தியின் இல்லத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு, அவர் பதவி விலகும் வரை அந்த முற்றுகையைக் கைவிடாமல் இருப்பர் என்றும் அவர் பேசினார். வேண்டுமானால், வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டு அமரப்போகும் ஆயிரக்கணக்கான மக்களைச் சுட்டுக் கொல்லலாம் என்றும் அவர் இந்திரா காந்திக்குச் சவால் விடுத்தார். இந்திரா காந்தியின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று காவல்துறை மற்றும் ராணுவத்தினரிடம் அவர் வலியுறுத்தினார். இந்திராவுக்கெதிரான நாடு தழுவிய இந்தப் போராட்டம் ஜூன் 29 அன்று துவங்குமென்றும் அவர் கூறினார்.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான தினத்தன்று தீவிரமான சிந்தனையில் இருந்தார் இந்திரா காந்தி. ‘பிரதமர் பதவியிலிருந்து விலகிடலாமா?’ என்றுகூட யோசித்தார். அடுத்த ஏழெட்டு மாதங்களில் ரேபரேலி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருந்தது. இதனால் ‘அதுவரையில் எவரிடமாவது பிரதமர் பதவியைக் கொடுத்துவிட்டு, தேர்தலில் மக்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றால் என்ன?’ என்கிற சிந்தனை அவரிடத்தில் இருந்தது. அவ்வாறு செய்தால், எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியடைந்ததைப் போலாகிவிடுமென்றும், எதிர்க்கட்சிகளுக்கு அந்த வாய்ப்பைத் தரக்கூடாதென்றும் இந்திராவின் ஆதரவாளர்கள் கூறினர். பிரதமர் பதவியிலிருந்து விலகவே கூடாதென்று சஞ்சய் காந்தி விடாப்பிடியாகக் கூறினார். இந்திரா மனம் மாறினார். அப்படியென்றால், போராட்டம் செய்யும் எதிர்க்கட்சிக்காரர்களை என்ன செய்வது? இந்தக் கேள்விக்குச் சித்தார்த்த சங்கர் ரே பதிலளித்தார் – ‘எமர்ஜென்சியை கொண்டுவரலாம்’! (‘எமர்ஜென்சி’ என்ற ஆங்கிலச் சொல், தமிழில் ‘அவசரநிலை’ என்று வழங்கப்படுகிறது)
சித்தார்த்த சங்கர் ரே – மேற்கு வங்க முதல்வர்; சட்டம் படித்தவர்; ‘தேசபந்து’ என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாசின் பேரன். மூன்று தலைமுறைகளாக நேரு குடும்பத்துடன் தொடர்புடையது அவருடைய குடும்பம்; இந்திரா காந்தியின் நெருங்கிய ஆலோசகர்களில் அவரும் ஒருவர். அவர்தான் அந்த யோசனையைத் தெரிவித்தார். ‘உள்நாட்டுக் குழப்பங்கள்’ இருப்பதாகக் காரணம் காட்டி, அரசியலமைப்புச் சட்டத்தின் 352வது பிரிவைப் பயன்படுத்தி, அவசரநிலையைப் பிரகடனம் செய்துவிடுவது; போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்துவிடுவது; தலைவர்கள் இல்லாத நிலையில் போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும்; பிறகு சாவகாசமாக அவசரநிலையைத் திரும்பப்பெறுவது – இதுதான் அவர் முன்வைத்த திட்டம்.
ஆனால் ‘உள்நாட்டுக் குழப்பம்’ உள்ளதென்று எதை வைத்துக் கூறுவது என்கிற கேள்விக்கு, தில்லி ராம்லீலா மைதானப் பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதையே அடிப்படையாக வைத்துக்கொள்ளலாம் என்று அவர் பதிலளித்தார். இந்திரா அதற்கு ஒப்புக்கொண்டார். ‘அமைச்சரவையைக் கூட்டி, ஒப்புதலைப் பெற்று நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? விரைந்து நடவடிக்கை எடுக்கலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது. அவசரநிலையை அமலுக்குக் கொண்டு வரும் வரைவு ஆணை தயார் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அஹமதிடம் தகவல் கூறப்பட்டது. ஆணையில் அவர் கையெழுத்திட்டார். ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை அமலுக்கு வந்தது. அமலுக்கு வந்த பிறகு, அவசரநிலைக்கு காபினெட் ஒப்புதல் அளித்தது. எமர்ஜென்சி காலத்தில் காபினெட்டிற்கு எந்த அளவில் அதிகாரம் இருக்கப்போகிறது என்பதற்கும் இந்திராவுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கப்போகிறது என்பதற்கும், அந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்த எமர்ஜென்சி, காங்கிரஸில் இருந்த சந்திரசேகருக்கும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது.
(தொடரும்)

