Skip to content
Home » மக்கள் அரசியல் #19 – சந்திரசேகர்: எமர்ஜென்சியும் சிறைவாசமும்

மக்கள் அரசியல் #19 – சந்திரசேகர்: எமர்ஜென்சியும் சிறைவாசமும்

தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜூன் 25 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜேபி பேசியது குறித்துக் கேள்விப்பட்டதும் சந்திரசேகர் நீண்ட யோசனையில் ஆழ்ந்தார். ஜேபியின் அந்தப் பேச்சுக்குப் பதிலடியைக் கட்டாயமாக இந்திரா தருவார் என்பது அவரது எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ‘ஜேபிக்கு எதுவும் ஆகிவிடாமல் இருக்கவேண்டுமே!’ என்று அவர் கவலைப்பட்டார். ‘அதெப்படி காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு ஜேபியின் நலன் குறித்துச் சந்திரசேகர் சிந்திக்கலாம்?’ என்று தோன்றக்கூடும். ஆனால் சந்திரசேகரின் இயல்பே அப்படித்தான்.

கட்சியில் இருக்கின்ற ஒரே காரணத்திற்காக, அந்தக் கட்சி செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு வாயைத் திறக்காத நபரில்லை சந்திரசேகர். 1971 மக்களவைத் தேர்தல் முடிவிற்குப் பிறகு, இந்திராவின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருப்பதைக் கவனித்த சந்திரசேகர், தன்னுடைய ‘இளம் இந்தியன்’ இதழில் அது குறித்துப் பகிரங்கமாக விமர்சித்து வந்தார். இதைத் தவிர, இந்திராவின் எதிர்ப்பையும் மீறி காங்கிரஸ் கட்சியின் மிக உயரிய மத்திய செயற்குழுவிற்கும், மத்தியத் தேர்தல் குழுவிற்கும் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவையெல்லாம் இந்திரா காந்திக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின.

பீகாரில் ஆளுங்கட்சிக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடங்கியதும், அப்போராட்டத்திலிருந்து விலகி இருக்குமாறு ஜேபியை வற்புறுத்த இந்திரா முயன்றார். ஒடுக்க ஒடுக்கத்தான் ஜேபி இன்னும் அதிக உறுதியுடன் செயல்படுவார் என்பதை இந்திரா உணரவில்லை. ஆனால் சந்திரசேகர் உணர்ந்திருந்தார். ‘அரசியல் அதிகாரத்திற்காக ஜேபி போராடவில்லை. எனவே, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அவரைத் தோற்கடிக்க முடியாது’ என்று ‘இளம் இந்தியன்’ இதழில் அவர் குறிப்பிட்டார்.

‘ஜேபியின் நேர்மையும், இந்திராவின் அரசியல் சாதுர்யமும் இணைவது நாட்டிற்குப் பெரும் பயனளிப்பதாக அமையும்’ என்று கருதிய சந்திரசேகர், ஜேபியுடன் சமரசமாகப் போகுமாறு இந்திராவிடம் அறிவுறுத்தினார். இதனால் சந்திரசேகர் மீது இந்திராவிற்கு வெறுப்பு உண்டாகத் தொடங்கியது. இதற்கு மத்தியில், தன்னுடைய இல்லத்தில் ஜேபிக்குத் தேநீர் விருந்தளித்தார் சந்திரசேகர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். ‘ஜேபியுடன் கைகோர்த்துத் தன்னுடைய ஆட்சிக்கெதிராகச் சந்திரசேகர் சதி செய்கிறாரோ!’ என்கிற சந்தேகம் இந்திராவுக்கு ஏற்பட்டிருக்கும். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது இவற்றின் ஒட்டுமொத்த விளைவு வெளிப்பட்டது; சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜேபி, மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பல தலைவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் (‘Maintenance of Internal Security Act’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட இந்தச் சட்டத்தைச் சுருக்கமாக ‘MISA’ (மிசா) என்றழைக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை ‘மிசா கைதிகள்’ என்று குறிப்பிட்டனர்). ஜேபி கைது செய்யப்பட்டபோது இந்திரா குறித்து அவர் கூறியது நினைவில் கொள்ளத்தக்க ஒன்று: ‘விநாச காலே விபரீத புத்தி!’. கட்டுப்பாடற்ற அதிகாரம் கொண்ட நிலையில், எதிரிகள் என்று தான் கருதிய பலரையும் இந்திரா சிறையில் தள்ளிக்கொண்டிருந்தார். சந்திரசேகர் மட்டும் விதிவிலக்கா என்ன? அவரும் கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரசேகரும், எதிர்க்கட்சியினரோடு சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார் என்றால் அவர் மீது இந்திரா காந்திக்கு எந்த அளவிற்குக் கோபம் இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். குறிப்பாக, சந்திரசேகர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். எமர்ஜென்சி அமலில் இருந்தபோது நாடு முழுவதிலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் சந்திரசேகர்; மற்றொருவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். மே 1974இல் நாடு தழுவிய இரயில்வே வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்திய ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் சந்திரசேகருக்கும் அதே அளவு தண்டனை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஹரியானாவின் ரோஹ்தக் சிறையில் முதலில் அடைக்கப்பட்ட சந்திரசேகர், பிறகு சண்டிகர் சிறையிலும், அதன்பின்னர் பாட்டியாலா சிறையிலும் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு இடத்திலும் அவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் அவர் துறவியைப்போல் காவி நிற ஆடைகளை அணிந்துகொண்டார். சிறை நூலகத்தில் இருந்த புத்தகங்களைப் படித்தார். அவற்றின் மூலமாகச் சீக்கியர்களின் வரலாற்றைப் பெரிதும் அறிந்துகொண்டார். சிறிய தோட்டம் ஒன்றைப் பராமரித்தார். தன்னுடைய சிறை அனுபவங்களை ‘எனது சிறை நாட்குறிப்பு’ (இந்தியில்: மேரி ஜெயில் டைரி) என்கிற தலைப்பில் எழுதத் தொடங்கினார். பின்னாளில் இது புத்தகமாக வெளிவந்தது.

டிசம்பர் 1976இல் சந்திரசேகரைச் சந்திக்க இந்திராவின் சார்பில் தூதுவர் ஒருவர் வந்தார். ‘கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தை இந்திராவின் சார்பில் தொடங்க முடியுமா?’ என்று கேட்டார். ஒருவேளை இதற்குச் சந்திரசேகர் சம்மதித்தால், உடனடியாக அவர் விடுதலை செய்யப்படுவார் என்று ஆசை காட்டினார். உடனடியாக நிராகரித்தார் சந்திரசேகர். ‘எத்தனை நாட்களுக்குத்தான் இவ்வாறு தனிமைச் சிறையில் இருக்க முடியும்?’ என்று வந்தவர் கேட்டார். தன்னுடைய எஞ்சிய ஆயுள் முழுவதையும்கூட அந்தச் சிறையில் கழித்திடத் தயாராக இருப்பதாகக் கூறி, வந்தவரை அனுப்பி வைத்தார் சந்திரசேகர்.

சிறிது நாட்களில் பாட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சந்திரசேகர், அவருடைய தில்லி இல்லத்திலேயே சிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் மற்றொரு தூதுவர் அவரைத் தேடி வந்தார். இந்திரா காந்தியோடு சமாதானமாகப் போகுமாறு கூறினார். அவரை நேரில் சந்திக்க இந்திரா தயாராக இருப்பதாகவும் கூறினார். அவருக்கும் அதே பதில்தான் தரப்பட்டது. ஒரு வழியாக 11 ஜனவரி 1977 அன்று சந்திரசேகர் விடுதலை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து அவருக்கு விடுதலை. இந்திராவை அவர் சந்திக்க வேண்டுமென்று மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரை வரவேற்க இந்திரா தயாராக இருப்பதாகவும் அவரிடம் கூறப்பட்டன. அவர்களிடம் சந்திரசேகர் கூறிய பதில் இதுதான்: ‘கவலை வேண்டாம்; இந்திரா எடுத்த இந்த முடிவிற்கான விளக்கத்தைக் கேட்க, அவரை நான் கட்டாயம் ஒருமுறையாவது சந்திப்பேன்!’

எமர்ஜென்சி நிகழ்வுகள்

18 ஜனவரி 1977 அன்று தாமாக முன்வந்து தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி. கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். ‘இந்திரா காந்தி எதனால் இந்த முடிவை எடுத்தார்?’ என்ற கேள்விக்குச் சரியான விளக்கங்கள் இல்லை. ‘எமர்ஜென்சி அமலில் இருந்தபோது நாட்டில் அமைதி, ஒழுங்கு நிலவியதாகவும், பொதுமக்களிடையே அவருக்கு ஆதரவு அதிகமானதாகவும், எனவே தேர்தல் நடைபெற்றால் மீண்டும் அவரே வெற்றிபெறுவார் என்றும் இந்திராவிடம் உளவுத்துறை கூறியது. இதன் அடிப்படையில்தான் அவர் தேர்தலை அறிவித்தார்’ என்று ஒரு கருத்து உண்டு. இந்தியாவில் மக்களாட்சிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அவசரநிலையை எதிர்த்து வெளிநாடுகளில் இருந்த அவருடைய அரசியல் நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்ததால், இந்திரா இந்த முடிவிற்கு வந்தார் என்றும் மற்றொரு கருத்தும் உண்டு. ‘தன்னிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. தன்னுடைய இளைய மகன் சஞ்சய் காந்தியிடம் கிடையாது’ என்பதை அனைவருக்கும் நிரூபிப்பதற்காகவே அவர் இந்த முடிவைத் தன்னிச்சையாக எடுத்ததாகவும் ஒரு கருத்து உண்டு. எது எப்படியோ, கைது செய்யப்பட்டிருந்த அனைத்துத் தலைவர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நடப்பதற்கு ஏதுவாக, அவசரநிலை விதிகள் தளர்த்தப்பட்டிருந்தன. மார்ச் 1977இல் மக்களவைத் தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது.

‘கடைசியாக 1971 மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற்றிருந்தது. அப்படியென்றால் மீண்டும் 1976 மார்ச் மாதத்திற்குள்ளாக அல்லவா நடைபெற்றிருக்க வேண்டும்! எதனால் ஓர் ஆண்டு தள்ளிப் போனது?’ என்கிற கேள்வி தோன்றியிருக்கக் கூடும். எமர்ஜென்சி அமலில் இருந்தபோது, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகள் ஆகியவற்றின் கால வரம்பை ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தி, அரசியலமைப்புச் சட்டத்தையே இந்திரா திருத்தியிருந்தார். எனவேதான், மார்ச் 1976இல் தேர்தல் நடக்கவில்லை. இந்த ஒரு திருத்தத்தை மட்டுமா இந்திரா காந்தி மேற்கொண்டார்? எமர்ஜென்சி அமலில் இருந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் தனக்குச் சாதகமாக அமையுமாறு பார்த்துக்கொண்டார்.

‘குடியரசுத் தலைவரின் அவசரநிலைப் பிரகடனம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது’ என்றிருந்த அரசியலமைப்புச் சட்ட விதி திருத்தப்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்டதாக அது ஆக்கப்பட்டது. அதேபோல், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரின் தேர்தல்களும் நீதித்துறையின் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் மீதான நீதிமன்றங்களின் மறு ஆய்வு தடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், அனைத்து அதிகாரங்களும் இந்திராவிடம் மட்டுமே குவிந்திருக்குமாறும், அவரை எதிர்த்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்க முடியாதவாறும் அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்பட்டிருந்தது.

‘இத்தகைய அரசியலமைப்புச் சட்ட திருத்தங்களுக்கு எதிராக ஒருவர் கூடவா நீதிமன்றத்தை நாடவில்லை?’ என்கிற எண்ணம் தோன்றலாம். அதற்கும் இந்திராவிடம் பதில் இருந்தது. எமர்ஜென்சி அமலுக்கு வந்த இரண்டு நாட்களில் குடியரசுத் தலைவர் ஒரு முக்கிய ஆணையில் கையெழுத்திட்டிருந்தார். அந்த ஆணையின்படி, அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டது. அதாவது, பேச்சுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முடியாது. இவற்றிற்காக நிவாரணம் கோரி, நீதிமன்றங்களை அணுக முடியாது.

‘பொதுமக்கள் கேள்வி கேட்காவிட்டால்கூடப் பரவாயில்லை; செய்தித்தாள்கள் என்ன செய்துகொண்டிருந்தன? அவை கூடவா இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை?’ என்கிற கேள்வி எழலாம். கருத்துச் சுதந்திரமே கிடையாது என்று ஆணையிடப்பட்ட பிறகு, செய்தித்தாள்கள் வெளியாவதே அதிசயம் அல்லவா! பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. செய்திகளை வெளியிடும் முன்பு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்றே வெளியிட்டாக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போடப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் எதுவும் வெளியாகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

‘இவையெல்லாம்கூடப் பரவாயில்லை!’ என்று தோன்றும்படி ஒருவர் நடந்துகொண்டார்; அவர் பெயர் சஞ்சய் காந்தி. இந்திரா காந்தியின் இளைய மகன். தன்னுடைய அரசியல் வாரிசாக இந்திரா காந்தி, இவரைத்தான் வளர்த்துக் கொண்டிருந்தார். இந்திராவின் மூத்த மகன் ராஜீவுக்கோ அரசியலில் நாட்டமே இன்றி, விமானியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘மூத்தவனை விடுத்து, இளையவனான எனக்கு எதற்கு மணிமகுடம்?’ என்று கேட்டுவிட்டுத் துறவியாகிட, சஞ்சய் காந்தி என்ன இளங்கோவடிகளா? நாட்டில் இந்திராவுக்கு அடுத்த முக்கியமான நபராகச் சஞ்சய் காந்தி அடையாளம் காணப்பட்டிருந்தார். ஆட்சியில் அவர் அப்போது எவ்விதப் பதவியையும் வகிக்கவில்லை என்றாலும், அவருடைய கண்ணசைவில் காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அவசரநிலை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பிரதமர் 20 அம்சத் திட்டத்தை அறிவித்திருக்க, சஞ்சய் காந்தியோ 5 அம்சத் திட்டத்தை அறிவித்தார். அவற்றுள் முக்கியமான ஒன்று, குடும்பக் கட்டுப்பாடு. ‘நாம் இருவர்; நமக்கு இருவர்!’ என்கிற வாசகம் பிரபலப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் கருத்தடை அறுவை சிகிச்சைக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. சஞ்சயிடம் நற்பெயர் வாங்குவதற்காக, பல மாநில முதல்வர்களும் தத்தம் இலக்குகளை அடைய வேண்டி அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்தனர். விளைவு, பலருக்குக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு செய்து வைக்கப்பட்டது. அவசரநிலை அமலில் இருந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.07 கோடி கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் இவற்றால் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.

தில்லி மாநகரத்தை அழகுபடுத்துவதாகக் கூறிக்கொண்டு, பழைய தில்லியின் ‘துர்க்மேன் வாயில்’ என்கிற பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சஞ்சய் காந்தி ஈடுபட்டார். அப்போது அங்கு நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. அந்தப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 70,000 மக்கள் வெளியேற்றப்பட்டு, அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடங்களில் விரைவாகக் குடியமர்த்தப்பட்டனர்.

‘இத்தகைய கொடுமைகளிலிருந்து விடுதலையே இல்லையா?’ என்று பலரும் ஏங்கிய வேளையில்தான் இந்திரா இர(ற)ங்கி வந்தார். மார்ச் 1977இல் தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. மக்கள் மௌனமாகத் தயாராகினர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *