Skip to content
Home » மக்கள் அரசியல் #20 – சந்திரசேகர்: ஜனதா கட்சியில்…

மக்கள் அரசியல் #20 – சந்திரசேகர்: ஜனதா கட்சியில்…

மார்ச் 1977இல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ‘காங்கிரசிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; எதிர்க்கட்சிகள் அவ்வாறு ஒன்றிணைந்து ஒரே அரசியல் கட்சியை உருவாக்காவிட்டால், எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலிருந்தும் நான் விலகியே இருப்பேன்!’ என்று ஜேபி அறிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு இது குறித்துக் கடிதம் எழுதினார். ‘இந்திரா எதிர்ப்பு’ என்கிற ஒற்றைப் புள்ளியில் எதிர்க்கட்சிகள் இணைய நேரிட்டது. வலதுசாரியான பாரதிய ஜன சங்கம், பழைய காங்கிரஸ் கட்சியான காங்கிரஸ் (O), சம்யுக்த சோஷலிசக் கட்சி மற்றும் சரண் சிங்கின் கட்சியான பாரதிய லோக் தளம் ஆகிய நான்கும் ஒன்றிணைந்தன (ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சி, ஏற்கெனவே பாரதிய லோக் தளத்தில் ஐக்கியமாகியிருந்தது). ‘ஜனதா கட்சி’ உருவானது.

காங்கிரசிலிருந்து வெளியேறியிருந்த சந்திரசேகர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பாபு ஜெகஜீவன்ராமை சந்தித்துப் பேசினார். 1947 முதல் அப்போதுவரை மிக நீண்டகாலம் (சுமார் 26ஆண்டுகள்) மத்திய அமைச்சராக இருந்தவர் ஜெகஜீவன்ராம். தலித் மக்களின் தலைவர். எமர்ஜென்சி காலத்தில் இந்திராவிற்கு ஆதரவாகச் செயல்பட்டவர். நாடாளுமன்றத்தில் எமர்ஜென்சிக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்தவர் என்றாலும்கூட, காங்கிரசை விட்டு வெளியேறும் மனநிலையில்தான் அவர் அப்போது இருந்தார். சந்திரசேகரைச் சந்தித்ததற்குப் பிறகு, காங்கிரசை விட்டு அவர் வெளியேறினார். ஹெச்.என். பகுகுணா (முன்னாள் உ.பி. முதல்வர்), நந்தினி சத்பதி (முன்னாள் ஒரிசா முதல்வர்) உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்களும் ஜெகஜீவன்ராமுடன் காங்கிரசை விட்டு வெளியேறினர். ‘ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்’ என்கிற கட்சியைத் தொடங்கினர். ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டனர்.

‘1971 தேர்தலைப்போல் இந்த முறையும் நமக்கு வெற்றி கிடைக்கும்’ என்று தொடக்கத்தில் அதீத நம்பிக்கையுடன் இருந்தார் இந்திரா. ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட தலைவர்களின் வெளியேற்றம், இந்திராவிற்கு அதிர்ச்சியைத் தந்தது. அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். மொத்தமாக 492 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. வட மாநிலங்களில் பல இடங்களில் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பெரிதாக வரவேற்பு இல்லாதிருந்தது. இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியிலும், சஞ்சய் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிட்டனர்.

‘ஜனதா கட்சி’ என்று கூறப்பட்டாலும், முறைப்படி கட்சியைத் தொடங்கி, நிர்வாகிகளைத் தேர்வு செய்து, தேர்தல் ஆணையத்தில் பதிந்து, தனித் தேர்தல் சின்னத்தைப் பெற்றிட அந்தக் கட்சிக்குப் போதுமான அவகாசம் இருந்திருக்கவில்லை. ஜனவரி 1977இல்தான் பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இரண்டே மாதங்களில் தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, கட்சியென்று முறையாகத் தொடங்காமல், அனைவரும் பாரதிய லோக் தளத்தின் சின்னத்திலேயே போட்டியிட்டனர் (காங்கிரஸ் (O) கட்சியைத் தவிர). மொத்தம் 405 இடங்களில் பாரதிய லோக் தளத்தின் சின்னத்தில் போட்டியிடப்பட்டது. ஜனதா கட்சியின் அங்கமாக இருந்தாலும், காங்கிரஸ் (O) கட்சி மட்டும் 19 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டது. ஜனதா கட்சியின் சார்பில் இந்திரா காந்தியை எதிர்த்து மீண்டும் ராஜ் நாராயண் போட்டியிட்டார் (அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக இந்திரா மேல்முறையீடு செய்திருந்த உச்சநீதிமன்ற வழக்கில், நவம்பர் 1975இலேயே இந்திராவிற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்திருந்தது. எனவே, தேர்தலில் போட்டியிட இந்திராவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியிருந்தது). தன்னுடைய சொந்த மாவட்டமான பலியா தொகுதியில் ஜனதா கட்சியின் சார்பில் சந்திரசேகர் போட்டியிட்டார். ஜனதா கட்சி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 268 இடங்களில் ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்த ஜெகஜீவன்ராம் கட்சி, 28 இடங்களில் வென்றிருந்தது. இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு 154 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதனால் முதல்முறையாக ஆட்சிக் கட்டிலை விட்டுக் காங்கிரஸ் கட்சி இறங்க நேர்ந்தது. இந்தி பேசும் வடக்குப் பகுதிகளில் (உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம்) மொத்தமாக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது. இதற்கு நேர்மாறாகத் தென் மாநிலங்களில் (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா) மட்டும் 92 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே வென்றிருந்தனர். குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் மொரார்ஜி தேசாய், பலியா தொகுதியில் சந்திரசேகர் வெற்றிபெற்றிருந்தார்கள். இதற்கு நேர்மாறாக, இந்திரா, சஞ்சய் உட்பட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அநேகர் தோற்றிருந்தனர். பிரதமர் பதவியிலிருந்து இந்திரா விலகினார். 21 மார்ச் 1977 அன்று எமர்ஜென்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. ‘ஜனதா கட்சியின் சார்பில் யார் பிரதமராகப் பொறுப்பேற்பார்?’ என்கிற கேள்வி எழுந்ததும், சிக்கல் தொடங்கியது.

குழாயடிச் சண்டைகள்

பிரதமர் பதவிக்கு மூவர் ஆசைப்பட்டனர் – மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன்ராம் மற்றும் சரண் சிங். மூவரில் சந்திரசேகரின் தேர்வாக இருந்தார் ஜெகஜீவன்ராம். நேரு காலத்திலிருந்தே அமைச்சராக இருந்தவர் அவர். காங்கிரசிலிருந்து வெளியேறி, ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி வைத்தது மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. இருந்தாலும், எமர்ஜென்சி காலத்தில் இந்திராவிற்கு ஆதரவாக அவர் செயல்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. ‘மொரார்ஜியும் சரண்சிங்கும் சிறையில் இருந்த அதே காலத்தில், அமைச்சராகப் பதவி வகித்த ஜெகஜீவன்ராமுக்கா பிரதமர் பதவி?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ‘நாடாளுமன்றத்தில் எமர்ஜென்சிக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்த ஜெகஜீவன்ராமைப் பிரதமராக்குவது, எமர்ஜென்சிக்கு எதிராக வாக்களித்த மக்களை இழிவுபடுத்துவதைப் போலாகும்!’ என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. ஜெகஜீவன்ராம் பிரதமர் ஆவதைச் சரண்சிங் தீவிரமாக எதிர்த்தார். ‘ஜெகஜீவன்ராமுக்கு அப்பதவியைத் தருவதற்குப் பதிலாக, மொரார்ஜிக்கே தரலாம்!’ என்பது அவரின் நிலைப்பாடு. அதாவது, ‘தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; ஜெகஜீவன்ராமுக்குக் கிடைக்கக்கூடாது’ என்ற எண்ணத்தில் சரண்சிங் உறுதியாக இருந்தார்.

‘யாருக்குப் பிரதமர் பதவி என்பது குறித்து, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தலாம்!’ என்று ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கூறினார். ‘வாக்கெடுப்பு நடந்தால், கட்சியின் கோஷ்டித் தகராறுகள் வெளியே வரும். ஆரம்பத்திலிருந்தே எதற்கு இந்தக் கருத்து வேறுபாடு?’ என்கிற எண்ணம் தோன்றவே, வாக்கெடுப்பு முறை கைவிடப்பட்டது. முடிவெடுக்கும் பொறுப்பு, ஜேபியிடமும் ஆச்சார்ய கிருபாளினியிடமும் ஒப்படைக்கப்பட்டது. ‘சந்திரசேகருக்குப் பிரதமர் பதவியை அளிக்கலாம்!’ என்பது ஜேபியின் ஆசை; என்றாலும், ‘போட்டியிலேயே இல்லாத அவருக்கு எப்படிப் பிரதமர் பதவியை அளிப்பது?’ என்கிற கேள்வி எழும். தவிரவும், மொரார்ஜியுடன் ஒப்பிடும்போது சந்திரசேகர் மிகவும் இளவயதுக்காரர். எனவே, சந்திரசேகரைப் பிரதமர் ஆக்குவது என்கிற கருத்து, ஒருவகையில் மொரார்ஜியின் அனுபவத்தையும், வயதையும் அவமானப்படுத்துவதைப் போலாகும்.

இத்தகைய காரணங்களால், தன்னுடைய விருப்பத்தைக் கைவிட்டார் ஜேபி. இறுதியில், 88 வயதான கிருபாளினியும், 74 வயதான ஜேபியும், 81 வயதான மொரார்ஜியைத் தேர்ந்தெடுத்தனர். சந்திரசேகருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டுமென்று மொரார்ஜியிடம் கோரிக்கை வைத்துவிட்டுத் தனது டயாலிசிஸ் சிகிச்சைக்காகப் பம்பாய் சென்றார் ஜேபி.

ஜேபியின் வேண்டுகோளுக்கிணங்கி, சந்திரசேகரைத் தன்னுடைய அமைச்சரவையில் இணைப்பதற்கு மொரார்ஜி முடிவெடுத்தார். முன்பு காங்கிரசின் இளம் துருக்கியர் அணியில் சந்திரசேகரோடு இருந்து, அவருடன் ஜனதா கட்சிக்கு வந்திருந்த மோகன் தாரியா, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமென்று விரும்பினார். சந்திரசேகரிடம் இது குறித்துப் பேசினார். தனக்குப் பதிலாகத் தன்னுடைய நண்பர் மோகன் தாரியாவுக்கு அமைச்சர் பதவி அளிக்குமாறு மொரார்ஜியிடம் கோரினார் சந்திரசேகர். விளைவு, மொரார்ஜியின் அமைச்சரவையில் வர்த்தகத்துறையின் காபினெட் அமைச்சரானார் மோகன் தாரியா.

சந்திரசேகருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்ததும் பம்பாய் ஜஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜேபி வருத்தப்பட்டார். அவரை நேரில் சென்று சந்தித்த சந்திரசேகர், தன்னுடைய மனவோட்டத்தை வெளிப்படையாகக் கூறினார். மொரார்ஜிக்குப் பிரதமர் பதவி அளிக்கப்படுவதைத் தான் விரும்பாத நிலையில், அவருடைய அமைச்சரவையில் பங்குபெறுவது ஏற்புடையதாக இருக்காதென்று கூறினார். சந்திரசேகரின் நேர்மையை ஜேபி மதித்துப் போற்றினார்.

ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனதா கட்சி முறைப்படி தொடங்கப்பட்டுக் கட்சியின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்குச் சந்திரசேகர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘ஒரு கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே, அந்தக் கட்சியால் அரசாங்கம் அமைக்கப்பட்ட நிகழ்வு முன்னெப்போதும் இல்லாத ஒன்று’ என்று தன்னுடைய தலைமை உரையில் சந்திரசேகர் குறிப்பிட்டார். கட்சியை ஆரம்பக் கட்டத்திலிருந்து வளர்த்த அனுபவம் சந்திரசேகருக்கு ஏற்கெனவே இருந்தது. ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காகச் சந்திரசேகர் உழைக்கத் தொடங்கினார். கட்சியைக் கட்டுக்கோப்பாக வளர்க்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், கட்சித் தலைவர்களின் எண்ணங்களும், நடவடிக்கைகளும் இதற்கு நேர்மாறாக இருந்தன.

மொரார்ஜியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங், தொடக்கத்தில் இருந்தே மொரார்ஜியோடு ஒத்துப்போகாமல் இருந்தார். தேர்தலில் ஜனதா கட்சி பெற்ற வெற்றியில் சரண்சிங்கிற்கு முக்கியப் பங்கிருந்தது. உத்தரப் பிரதேசத்தின் 85 தொகுதிகளில், ஜனதா கட்சி 100% வெற்றி பெற்றதற்கு சரண்சிங்தான் முழுமுதற்காரணம். அவருடைய கட்சிச் சின்னத்தைத்தான் ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாகப் பயன்படுத்தியிருந்தனர். இதனால் தனக்குத்தான் பிரதமர் பதவி கிடைக்குமென்று சரண்சிங் தீவிரமாக நம்பினார். ஜெகஜீவன்ராமிற்குப் பிரதமர் பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காக மொரார்ஜியின் தலைமையை ஏற்க நேர்ந்த சரண்சிங்கிற்கு, மொரார்ஜியால் தான் அவமானப்படுத்தப்படுவதாகத் தோன்றியது. தனக்குரிய மரியாதையை மொரார்ஜி ஒருபோதும் தனக்குத் தரவில்லை என்று சரண்சிங் கருதத் தொடங்கினார். எனவே, மொரார்ஜி ஒரு முடிவெடுத்தால் அதற்கு நேர்மாறாகச் சரண்சிங் முடிவெடுக்கத் தொடங்கினார். எந்தவொரு விஷயத்திலும் இவர்கள் இருவரும் ஒத்துப்போகாமல் இருந்தனர்.

ஜனதா கட்சியில் தன்னுடைய கட்சியை மே 1977இல் இணைத்த ஜெகஜீவன்ராம், ஆட்சியிலும் கட்சியிலும் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்துவதில் கவனமாக இருந்தார். சரண்சிங்கைப்போல, அவரும் பிரதமர் பதவியின்மீது ஒரு கண் வைத்திருந்தார். மொரார்ஜி, சரண்சிங் மற்றும் ஜெகஜீவன்ராம் ஆகிய மூவரிடையே ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்து வைக்கவே, சந்திரசேகருக்குச் சரியாக இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்த 9 மாநிலங்களில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி, ஆட்சிகளைக் கலைத்தார் மொரார்ஜி (பீகார், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்). ‘மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின் விளைவால்தான் மத்தியில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். எனவே மக்களின் ஆதரவை மத்தியில் இழந்த காங்கிரஸ், மாநிலங்களை ஆளும் தகுதியையும் இழந்துவிட்டது’ என்பது மொரார்ஜியின் வாதம் (இந்தக் காரணத்தால் மாநில ஆட்சியைக் கலைப்பது தவறு என்பதைப் பின்னாளில் உச்சநீதிமன்றம் கூறியது). ஒரு மாத கால அவகாசத்தில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்த சந்திரசேகர், தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். இந்திரா மீதிருந்த வெறுப்பு கொஞ்சம்கூடக் குறையாத மனநிலையில் இருந்த மக்கள், தேர்தல் நடந்த 9 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்திருந்தனர். மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது; ஜோதிபாசு முதல்வரானார். மற்ற மாநிலங்களில் ஜனதா கட்சியோ, அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ வென்றிருந்தன.

‘இந்திராவின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று அநேகர் முடிவெடுத்திருந்தனர். 1977 மக்களவைத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த 9 மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் பெற்ற தோல்வி, பலரை இவ்வாறு சிந்திக்க வைத்திருந்தது. இந்திராவை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்திராவின் மீது பொதுமக்களுக்கு அனுதாபம் ஏற்படும் வகையில் ஆள்வோர் செயலாற்றினர். சந்திரசேகர் எச்சரித்ததைப் பொருட்படுத்தாமல் அவர்கள் எடுத்த முடிவின் விளைவு, இந்திராவுக்கு ஆதரவாக அமைந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *