1977 பொதுத்தேர்தலில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கேள்வி, ‘அவசரநிலையைக் கொண்டுவந்து, சர்வாதிகார ஆட்சியை நடத்திக் காட்டிய இந்திராவே மீண்டும் பிரதமராக வேண்டுமா? அல்லது அவசரநிலையை எதிர்த்துச் சிறை சென்றவர்கள் இருக்கும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமா?’ என்பதுதான். மக்கள் இந்திராவை ஒதுக்கிவிட்டு, ஜனதா கட்சிக்கு ஆதரவளித்திருந்தனர். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, ஜனதா கட்சியின் ஆட்சியானது மூன்றே ஆண்டுகளில் கவிழ்ந்திருந்தது. 1980இல் மீண்டும் பொதுத்தேர்தல் வந்தது. 1980 தேர்தலில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கேள்வி, ‘நேருவைப்போல் நிலையான ஆட்சியைத் தந்திருந்த இந்திரா பிரதமராக வேண்டுமா? அல்லது நவக்கிரகங்களைப்போல் ஒற்றுமையில்லாமல், நிலையான ஆட்சியைத் தரமுடியாத நபர்கள் இருக்கும் கட்சி ஆள வேண்டுமா?’ என்பதுதான். ஜனதா கட்சி மீதான மக்களின் கோபம், தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.
ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்திருந்தது. இந்திராவின் தலைமையை ஏற்ற கட்சி, காங்கிரஸ் (I) என்று அழைக்கப்பட்டது. இந்திராவின் தலைமையை ஏற்காத தேவராஜ் அர்ஸ் போன்ற தலைவர்கள் இருந்த கட்சி, காங்கிரஸ் (U) என்று அழைக்கப்பட்டது (I-Indira; U-Urs). ஜனதா கட்சியிலிருந்து ஜூலை 1979இல் விலகிய சரண்சிங், ராஜ் நாராயண் தொடங்கிய ‘மதச்சார்பற்ற ஜனதா கட்சி’யில் இணைந்திருந்தார். மொரார்ஜி பதவி விலகிய பிறகு, இந்தக் கட்சிதான் இந்திராவின் ஆதரவுடன் மத்தியில் சில மாதங்கள் ஆட்சியில் இருந்தது. ஆக, 1980 தேர்தலுக்கு முன்பு, காங்கிரசும் இரண்டாக உடைந்திருந்தது. ஜனதா கட்சியும் இரண்டாகப் பிரிந்திருந்தது. இவ்வாறு 1980 பொதுத்தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவியது. எத்தனை முனைப் போட்டியாக இருந்தால் என்ன? மக்கள் தெளிவாக முடிவெடுத்தனர்.
492 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் (I), 353 இடங்களில் வென்றது. ஜனதா கட்சி வெறும் 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் (U) கட்சி வெறும் 13 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. உத்தரப் பிரதேசத்தின் பலியா தொகுதியில், ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் மீண்டும் வெற்றி பெற்றிருந்தார். இந்திரா, சஞ்சய் உள்ளிட்ட பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் வென்றிருந்தனர். இந்திரா மீண்டும் பிரதமரானார்.
சரண்சிங் வெளியேறிய நிலையில் பலவீனமாக இருந்த ஜனதா கட்சி, அடுத்த இழப்பை எதிர்கொண்டது. 1977இல் ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டிருந்த வலதுசாரிக் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் உறுப்பினர்கள், ஜனதா கட்சியை விட்டு வெளியேறினர். ஏப்ரல் 1980இல் ‘பாரதிய ஜனதா கட்சி’ என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கினர். சோஷலிஸ்டுகளுக்கும் ஜனசங்கத்தினருக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துவராமல் இருந்தது. ‘இந்திரா எதிர்ப்பு’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்த இவர்களால், வேறெந்த விஷயத்திலும் ஒன்றாக இருக்க முடியவில்லை. ஜனதா கட்சியில் அங்கம் வகித்த பாரதிய ஜன சங்கத்திற்கு, 1977 தேர்தலில் 93 இடங்கள் கிடைத்தது. மொரார்ஜியின் ஆட்சியில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சரானார். அத்வானி தகவல் தொடர்புத்துறை அமைச்சரானார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) என்கிற இயக்கத்தின் தொடர்பின்றி, ஜனசங்கத்தினர் கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அடிப்படை விஷயத்தில்தான் சோஷலிஸ்டுகள் கை வைத்தனர்.
‘ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஜனதா கட்சியிலும் எப்படி உறுப்பினர்களாக இருக்கமுடியும்?’ என்று சோஷலிஸ்டுகள் கேள்வியெழுப்பினர். ‘ஆர்.எஸ்.எஸ். தொடர்பை முற்றிலும் துண்டித்துவிட்டு, ஜனதா கட்சியில் மட்டுமே உறுப்பினர்களாக இருங்கள். இல்லையெனில், ஜனதா கட்சியை விட்டு வெளியேறுங்கள்’ என்பதுதான் சோஷலிஸ்டுகளின் வாதம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடர்பைத் துண்டித்தல் என்பது ஜனசங்கத்தினரால் எண்ணிப் பார்க்கவே முடியாதது. எனவே அவர்கள் ஜனதா கட்சியை விட்டு வெளியேறினர். பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினர்.
கட்சி மீண்டும் உடைவதை சந்திரசேகர் விரும்பவில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்சங்கசாலக் (தலைவர்) பாலாசாஹேப் தியோரஸ் என்பவரை அவர் நேரில் சந்தித்தார். அதன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலிருந்து, ஜனசங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு ஆர்.எஸ்.எஸ். விலக்களிக்க வேண்டும் என்று கோரினார். இந்தத் திட்டத்திற்கு தியோரஸ் வாய்மொழியாக ஒப்புதல் அளித்தார். இருப்பினும், இதைப் பல ஜனதா தலைவர்கள் எதிர்த்தனர். இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தீவிரமாக எதிர்த்தனர். விளைவு, பாரதிய ஜனதா கட்சி உருவானது. ஜனதா கட்சி மேலும் பலவீனமானது. பழைய காங்கிரஸ்காரர்களும், அதுவரையில் தேர்தல்களில் பெரிதாக வெற்றி பெற்றிடாத சோஷலிஸ்டுகளும் மட்டுமே ஜனதா கட்சியில் இருந்தனர். ஆட்சியை இழந்து, உடைந்து போயிருந்த ஜனதா கட்சியை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய கட்டாயம் சந்திரசேகருக்கு ஏற்பட்டது.
பா(ர)த யாத்திரை
‘தளர்ந்து போயிருந்த கட்சியினரை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களிடம் நம்பிக்கையை ஈட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத் திகழ வேண்டும்’ உள்ளிட்ட இலக்குகளோடு, சந்திரசேகர் செயலாற்ற வேண்டியிருந்தது. கட்சியினருக்கு சந்திரசேகரின் ஆற்றல் மீது நம்பிக்கை இருந்தது. எனவே, அந்த இக்கட்டான சூழலிலும், கட்சியின் அகில இந்தியத் தலைவராக சந்திரசேகரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1981இல் உ.பியின் சாரநாத்தில் கட்சியின் தேசிய மாநாட்டைச் சந்திரசேகர் முன்னின்று நடத்தினார். மாநாட்டிற்கான இடத்தைத் தேர்வு செய்வது முதல், நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது வரை அனைத்து வேலைகளையும் களத்தில் இறங்கிச் செய்தார். நண்பர்களிடம் கடன்பெற்றுக் கட்சி மாநாட்டிற்காகச் செலவழித்தார். ‘மாநாட்டிற்குக் கூட்டம் வருமா?’ என்று மொரார்ஜியே சந்தேகித்தார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாகக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொண்டர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். ‘ஏறக்குறைய காங்கிரசின் அனைத்து மாநாடுகளிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், அத்தகைய காங்கிரஸ் மாநாடுகளைவிடவும், பிரம்மாண்ட வகையில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது’ என்று தன் உரையில் மொரார்ஜி மனம்திறந்து பேசினார்.
‘தன்னுடைய சொந்த மாநிலம் என்பதால்தான், சந்திரசேகரால் உ.பியில் இத்தனை பிரமாண்ட மாநாட்டை நடத்திக் காட்ட முடிந்தது!’ என்ற பொறாமை கலந்த ஏளனப் பேச்சுக்கள் எழும்பின. எத்தகைய ஏளனத்திற்கும் சொல்லால் பதிலடி தராமல், செயலால் பதில் தரும் வழக்கமுடையவர் சந்திரசேகர். அம்முறையும் செயலால் பதிலடி தர விழைந்தார். கட்சியின் அடுத்த மாநாட்டைப் பெங்களூரில் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். கட்சியினரிடையே நம்பிக்கை பிறந்தது. ‘மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது’ என்கிற சிறிய அளவிலான சாதனையில் சந்திரசேகரின் மனம் திருப்தியடையவில்லை. ‘இன்னும் பெரிதாக ஏதாவது செய்யவேண்டும்’ என்ற உந்துதல் அவரிடம் இருந்தது. விரைவில் அதற்கான விடை கிடைத்தது; அதுவே நாடு தழுவிய பாத யாத்திரை.
கேரளாவைச் சேர்ந்த இரு இளைஞர்களைச் சந்தித்துப் பேசியபோது, சந்திரசேகருக்குத் தோன்றிய எண்ணம் இது. ‘தன்னுடைய இந்த முயற்சிக்கு வரவேற்பு இருக்குமா?’ என்ற ஐயம் சந்திரசேகரிடம் இருந்தது. சந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டுக் களத்தில் இறங்கினார். 6 ஜனவரி 1983 அன்று குமரிமுனையில் தனது பாத யாத்திரையைத் தொடங்கினார். தினசரி 25 கி.மீ. நடப்பது என்பது அவருடைய திட்டம். சில நாட்களில் அவரால் 8 கி.மீ மட்டுமே நடக்க முடிந்தது, ஒரு சில நாட்களில் 45 கி.மீ. வரையில் நடந்தார். கிட்டத்தட்ட 7 மாதங்களாகச் சுமார் 4,300 கி.மீ. நடந்த அவர், 25 ஜூன் 1983 அன்று தில்லியில் மகாத்மா காந்தியின் சமாதியான ராஜ்காட்டில் தனது பாதயாத்திரையை நிறைவுசெய்தார். அவருடைய இந்தப் பா(ர)த யாத்திரைக்குப் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது. மகாத்மா காந்தி மற்றும் ஆச்சார்யா வினோபா பாவே ஆகிய இருவருக்குப் பிறகு, நாடு முழுவதும் பாதயாத்திரை செய்த தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார். பாத யாத்திரையை நிறைவுசெய்தபோது, கட்சி அரசியலைத் தாண்டிய பல்வேறு உண்மைகளை சந்திரசேகர் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார்.
நாடு விடுதலை பெற்று 35 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே அல்லாடுகிறார்கள் என்பதை அவர் நேரில் கண்டார். ‘அப்படியென்றால், அதுவரையில் சந்திரசேகருக்கு அந்த உண்மை தெரியாதா?’ என்ற கேள்வி எழலாம். உ.பி. மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த அவருக்கு அந்த உண்மைகூட தெரியாமல் இருக்குமா என்ன? இருந்தபோதும், சாதி, இன, மத, மொழி, மாநில வேறுபாடுகளின்றி, பல்வேறு மக்களுக்கு இருந்த பொதுவான பிரச்னைகளை நேரில் காணும் வாய்ப்பு, சந்திரசேகருக்கு அந்தப் பாத யாத்திரையில்தான் கிடைத்தது. ‘அந்தப் பாதயாத்திரை என்னைச் சிந்திக்க வைத்தது. நாம் எங்கே தவறு செய்தோம்? ஏன் தவறு செய்தோம்? என்பது போன்ற கேள்விகள் தோன்றின’ என்று தன்னுடைய பாத யாத்திரை பற்றி அவர் பின்னாளில் குறிப்பிட்டார்.
பாத யாத்திரையின் விளைவாக, அவர் 5 திட்டங்களைச் செயல்படுத்த விழைந்தார்: (1) அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் (2) குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவேண்டும் (3) அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் (4) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் குறைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் (5) சமூக நல்லிணக்கம் நிலவ வேண்டும்.
‘இவையெல்லாம் எப்போதும் இருக்கின்ற பிரச்னைகள்தானே. இந்த அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வதற்காக நாடு தழுவிய பாத யாத்திரையை மேற்கொள்ள வேண்டுமா?’ என்றும்கூட தோன்றலாம். ‘வறுமை என்றால் என்னவென்றே தெரியாத தலைவர்களால், நாட்டின் வறுமையை ஒழிக்கவே முடியாது’ என்பது சந்திரசேகரின் கருத்து. மக்களுடைய பிரச்னைகளை நேரில் கண்டால்தான் அவற்றைப் போக்குவதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்த முடியும் என்பதில் சந்திரசேகர் உறுதியாக இருந்தார். எனவே, மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ளக் கூடிய ஒரு நல்வாய்ப்பாக இந்தப் பாதயாத்திரையை அவர் கருதினார். ‘சரி, பிரச்னைகளை இனங்கண்டாகிவிட்டது. அவற்றைக் களைய சந்திரசேகர் என்ன ஆட்சியிலா இருக்கிறார்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குச் சந்திரசேகர் அளித்த பதில், ‘பாரத யாத்திரை அறக்கட்டளை’.(தொடரும்)

