Skip to content
Home » ‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?

‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?

பிப்ரவரி 28 அன்று, உலகில் யாருமே எதிர்பார்த்திராதவகையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாகச் சேர்ந்து ஈரான்மீது கொடும் தாக்குதலைத் தொடங்கின. போர் தொடங்கிய சில மணித்துளிகளிலேயே ஈரானின் உயர்தலைவர், மதத் தலைவர் அலி காமினியும் அவருடைய குடும்பத்தவர் சிலரும் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர். சொல்லப்போனால் அவரைக் கொல்வதற்காகவே, அவர் ஓரிடத்தில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துவிட்ட காரணத்தால் தாக்குதல் முன்னதாகவே தொடங்கப்பட்டது.

நான்கு வாரத்துக்குள்ளாகப் போர் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரானின் முக்கியமான போர்த் தளபதிகள், தலைவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டாலும் ஈரான் கவிழ்ந்துவிடவில்லை. ஈரான் பதில் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தது. அமெரிக்கா வெகு தொலைவில் உள்ளது என்பதால் அமெரிக்காவுக்கு நேரடியாக எந்தச் சிக்கலும் எழவில்லை. ஆனால் ஈரானின் தொலைதூர ஏவுகணைகள் இஸ்ரேலுடைய பாதுகாப்பு அரணைத் தாண்டி உயிர்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தின.

அமெரிக்கா, தன் நேச நாடுகள் யாருக்கும் தகவல் சொல்லியிருக்கவில்லை. வளைகுடா நாடுகள் எனப்படும் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமான் எனும் ஆறு நாடுகளும் அமெரிக்காவின் நண்பர்கள். அனைவருக்குமான பாதுகாப்பையும் அமெரிக்கா வழங்கிவருகிறது. இந்த நாடுகளிடம் அமெரிக்கா நிச்சயமாகத் தகவல் சொல்லியிருக்கும். அவர்கள் இந்தப் போரை எதிர்த்தனரா என்பது நமக்கு இதுவரை தெரியவில்லை.

யாருமே எதிர்பார்க்காதவண்ணம், ஈரான் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளைத் தாக்கத் தொடங்கியது. ஏனெனில் அவை ஆறும் அருகிலேயே இருந்தன; அந்த நாடுகளில் அமெரிக்கப் படைத் தளங்களும் இருந்தன. அமெரிக்காவைத் தாக்க முடியாவிட்டால் என்ன, அமெரிக்கப் படைத் தளங்களைத் தாக்கலாம் என்று தொடங்கிய ஈரான், அந்நாடுகளின் விமானத் தளங்கள், கச்சா எண்ணெய், எரிவாயு வளங்கள், மக்கள் குடியிருப்புகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றையும் தன்னுடைய ஏவுகணைகளையும் டிரோன்களையும் கொண்டு தாக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் வான் அரண் முழுமையாக வேலை செய்யவில்லை. பெரும்பாலான ஏவுகணைகள் தடுக்கப்பட்டாலும் ஒருசில உள்ளே நுழைந்துவிட்டன. டிரோன்கள் நிலையும் அதுதான். ஆறு நாடுகளுக்கும் மிகக் கடுமையான சேதம். கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி பெரும்பாலும் நின்றுபோனது. எண்ணெய் சுத்திகரிப்பும் கடுமையாகக் குறைந்தது. வளைகுடா நாடுகளின் சுற்றுலா கிட்டத்தட்ட முழுமையாக நின்றுபோனது.

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையில் உள்ள கடற்பகுதி ஹார்முஸ் நீரிணைப்பு என் அழைக்கப்படுகிறது. அதன் மிகக் குறைந்த பகுதியில் 40 கிமீ அகலமே உள்ளது. அதன் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி அழிப்போம் என்று ஈரான் அடுத்து பயமுறுத்தியது. கப்பல்களுக்கான காப்பீடு மிகக் கடுமையாக அதிகரித்தது. வர்த்தகக் கப்பல்கள்மீதான தாக்குதல்களில் சிலர் இறக்க நேரிட்டது.

ஹார்முஸ் நீரிணைப்பு வழியாகத்தான் சுமார் 20% உலகக் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து நடைபெறுகிறது. பெரும்பாலும் ஆசியாவுக்கான எண்ணெய், எரிவாயு இவ்வழியாகவே செல்கின்றன. கப்பல் போக்குவரத்து நின்றுபோனதும் ஆசியாவே ஆட்டம் கண்டது. எல்லா நாடுகளிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டது. ரேஷனிங் அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக ஏறியது. உலகின் எல்லா நாடுகளிலும் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ந்தது.

லெபனானில் உள்ள ஈரானின் கையாளான ஹிஸ்புல்லா, இஸ்ரேல்மீது ஏவுகணைகளை வீசத் தொடங்கியது. இஸ்ரேல் பதிலுக்கு லெபனான்மீது தாக்குதலைத் தொடங்கியது. தரைவழியாகவும் லெபனானுக்குள் தன் படைகளை அனுப்பியது. நான்கு வாரங்களில் முடிந்துவிடும் என்ற போர், ஆறு வாரத்தைத் தொட்டது.

அந்த நிலையில்தான் பாகிஸ்தான் களத்தில் இறங்கியது. ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 900 கிமீ எல்லை உள்ளது. ஈரான் பெரும்பான்மை ஷியா முஸ்லிம்கள் உள்ள நாடு. பாகிஸ்தானில் கணிசமான எண்ணிக்கையில் ஷியா முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அலி காமினி கொல்லப்பட்டவுடன் பாகிஸ்தானில் பெரும் கலவரமே ஏற்பட்டது. லாஹூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டது. அமெரிக்கப் பாதுகாவல் படை துப்பாக்கியால் சுட்டதில் சில பாகிஸ்தானியக் கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அரசு, அலி காமினி கொல்லப்பட்டதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

இன்னொரு பக்கம், ஆபரேஷன் சிந்தூர் காலகட்டத்திலிருந்தே பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு, முக்கியமாக டிரம்புக்கு நெருங்கிய தோழனாக ஆக ஆரம்பித்திருந்தது. இந்திய பாகிஸ்தான் யுத்தத்தைத் தானே நிறுத்தியதாக டிரம்ப் சொன்னதை இந்தியா மறுத்தது. ஆனால் பாகிஸ்தான் ஆமோதித்தது மட்டுமல்ல, டிரம்பே உலகைக் காக்கவந்த தேவதூதன் என்று புகழ ஆரம்பித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃபும் ராணுவத் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் டிரம்பைப் பாராட்டாத நாளே இல்லை. டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரவேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் வைத்தது.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான நட்பு கொஞ்சம் ஊசலாட்டத்தில் இருந்துவந்தது. டிரம்ப் திடீரென்று டென்மார்க் நாட்டின் ஆளுகைக்குக்கீழ் இருக்கும் கிரீன்லாந்து பகுதி அமெரிக்காவுக்கு வேண்டும் என்று சொன்னது ஐரோப்பிய நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. தங்களிடம் சொல்லாமல் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதால் பிரான்ஸும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் போரில் ஈடுபட மறுத்துவிட்டன. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மூவரும் சேர்ந்து போருக்கு எதிரான பிரகடனத்தை வெளியிட்டனர். ஸ்பெயினும் இத்தாலியும் அமெரிக்கப் போர் விமானங்கள் தங்கள் நாட்டின்மீது பறக்கத் தடை விதித்தன.

ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் நாடுகள். இந்தியா இந்தப் பிரச்னையில் கருத்தே சொல்லாமல் அமைதி காத்தது. இந்தியாவுக்கு இஸ்ரேல் நட்பு நாடு. வளைகுடா நாடுகளும் நட்பு நாடுகள். ஈரான் அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு நாடு இல்லை என்றாலும் அவர்களுடன் நமக்குச் சண்டையில்லை. எனவே இந்தச் சண்டையில் யார் பக்கத்தை எடுத்துக்கொள்வது என்பது நமக்குச் சிக்கல். மேலும் இறக்குமதி வரி தொடர்பாகவும் இந்தியா-பாகிஸ்தான் போரைத் தான்தான் நிறுத்தினேன் என்றும் டிரம்ப் கொடுத்துவந்த குடைச்சல் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக மத்தியக் கிழக்கில் பிரச்னை என்றால் மத்தியஸ்தம் செய்ய முனையும் கத்தார் முதலான வளைகுடா நாடுகளே இந்தப் போரில் ஈரான் கையில் கடுமையாக அடி வாங்கிக்கொண்டிருந்தன.

இப்படி உலக நாடுகள் அனைத்துமே இந்தப் பிரச்னையில் ஈடுபட முடியாத ஒரு நிலையில், பாகிஸ்தான் மட்டும்தான் அமெரிக்காவுக்கும் நண்பன், ஈரானுக்கும் தோழன் என்ற நிலை உருவானது. பாகிஸ்தானும் அதைச் சரியாகப் பற்றிக்கொண்டது.

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறத் தொடங்கியிருந்தது. மக்கள் டிரம்பைக் கடுமையாக வெறுக்க ஆரம்பித்திருந்தனர். இந்தப் போர் ஏன் என்றுகூட பல அமெரிக்கர்களுக்குப் புரியவே இல்லை. டிரம்ப் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடியவர் அல்ல என்றாலும், பங்குச்சந்தை குறைவது அவருக்குக் கொஞ்சம் கவலையைத் தோற்றுவித்தது.

ஹார்முஸ் நீரிணைப்பு வழியாகக் கப்பல் போக்குவரத்தை நேர் செய்யவில்லை என்றால் கச்சா எண்ணெய் விலை இறங்காது, பங்குச்சந்தை ஏறாது என்பதைப் புரிந்துகொண்ட டிரம்ப், ஈரான் மட்டும் ஹார்முஸ் நீரிணைப்பைத் திறக்கவில்லை என்றால் அந்த நாட்டையே அழித்துவிடுவதாக மிரட்டினார். மின் நிலையங்கள், பாலங்கள் என அனைத்தையும் அழித்துவிடுவோம் என்றார். கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசி சமூக வலைத்தளங்களில் ஈரானைக் கடிந்துகொண்டார். ஆனால் உள்ளூர இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்பினார்.

ஏற்கெனவே இதனை அறிந்திருந்த பாகிஸ்தான், அமெரிக்காவையும் ஈரானையும் தாற்காலிகப் போர்நிறுத்தம் செய்யுமாறும், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பினால் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யும் என்றும் கேட்டுக்கொண்டது.

இதற்காகவே காத்திருந்ததுபோல, அமெரிக்கா உடனே ஒப்புக்கொண்டது. ஈரானும் ஒப்புக்கொண்டது. உலகம் பெருமூச்சு விட்டது. இஸ்ரேல்-லெபனான் போர் மட்டும் ஓயவில்லை.

ஆனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருந்தும், அமெரிக்காவின் மேற்பார்வையில் லெபனானும் இஸ்ரேலும் தாற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்தன. அதனையடுத்து, ஈரானும் தாற்காலிகமாக ஹார்முஸ் நீரிணைப்பை அனைத்துக் கப்பல் போக்குவரத்துக்கும் திறப்பதாக அறிவித்தது.

ஈரான்மீதான தாக்குதல் ஏன் நடந்தது? அமெரிக்காவைப் பொருத்தமட்டில் ஈரான் யுரேனியம் சுத்திகரிப்பை நிறுத்தவேண்டும். ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்துவிட்டால் அவர்கள்மீது வேறு எந்த நாடும் தாக்குதல் நிகழ்த்த பயப்படும். இஸ்ரேலுக்கோ, ஈரானைத் தாக்கி அதன் தலைவர்களைக் கொன்றுவிட்டால் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியும் ஆயுதமும் வருவது குறையும் அல்லது நின்றுபோகும்.

ஈரான் என்ன கேட்கிறது? தனக்கு நேர்ந்த அழிவுக்கு ஈரான் நஷ்ட ஈடு கேட்கிறது. தன்மீது உள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும் என்று கேட்கிறது. தன் நண்பர்களான ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹௌதி ஆகியோர்மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்று கேட்கிறது. ஈரான்மீது நிரந்தரமாக யாருமே தாக்குதல் நடத்தக்கூடாது என்று கேட்கிறது.

ஈரானுக்கும் அதன் பயங்கரவாதக் கூட்டாளிகளுக்கும் இஸ்ரேல் என்றால் அத்தனை வெறுப்பு. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா, அதுவும் இத்தனைத் தாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றுக்குப் பிறகு என்பது புரியாத புதிர். ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும்.

இந்தப் பிரச்னை காரணமாக, பாகிஸ்தான் உலக அளவில் பேசப்படும் நாடாக ஆகியுள்ளது. இதை அனைவருமே கொண்டாடவேண்டும். ஆனால் இந்தியாவில் மட்டும் சிலருக்கு வெறுப்பாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை என்பது காலம் காலமாக இருந்துவருவது. சிலபல போர்கள், இந்தியாமீது பயங்கரவாதிகளை ஏவிவிடுவது, காஷ்மீரைப் போர்க்களமாக ஆக்கியிருப்பது, சமீபத்திய பஹல்காம் படுகொலைகள், ஆபரேஷன் சிந்தூர் என அனைத்தையும் உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் இந்திய அரசும் சரி, மக்களும் சரி, கவலைப்படக்கூடாது. போர் நின்றால் அதன் பெரும் பலன் இந்தியாவுக்குத்தான். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெரும் பலன் இந்தியாவுக்குத்தான். நாம் வெல்லவேண்டும் என்றால் அனைத்துத் தளங்களிலும் பாகிஸ்தான் தோற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். நாம் பாகிஸ்தானைவிடப் பல மடங்கு பொருளாதாரத்திலும் சமூக நிலையிலும் உயர்ந்துள்ளோம். இன்று நாம் நம்மை ஒப்பிடவேண்டியது சீனாவுடன். பாகிஸ்தானுடன் அல்ல. பாகிஸ்தான் நம்மோடு போருக்கு வந்தால் அதை நாம் சரியான விதத்தில் எதிர்கொள்ளவேண்டும். அதற்குமேல் அந்த நாட்டுக்கு உலக அரங்கில் செல்வாக்கு வருவதைக் கண்டு பொருமவேண்டிய தேவை இந்தியாவுக்குக் கிடையாது.

இந்தியாவுக்குக் குடைச்சல் கொடுக்காமல் பாகிஸ்தான், தான் வளர்வதற்கான காரியங்களில் ஈடுபடுவது நம்மை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *