Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #12 – காஷோகி : ஆயுதம் ஆன்மிகம் அரசியல்

மறக்கப்பட்ட வரலாறு #12 – காஷோகி : ஆயுதம் ஆன்மிகம் அரசியல்

காஷோகி

1991 ஜனவரி, குடியரசு தினம், புது தில்லி. இந்தியாவின் குடியரசு தினத்தில் பங்கேற்க ஒரு முக்கியமான வி.ஐ.பி, தனி விமானத்தில் வந்து டெல்லியில் இறங்குகிறார். அவரைத்தான் உலகின் இரண்டு முக்கியமான வல்லரசுகளின் உளவுத்துறை தேடிக்கொண்டிருந்தது.

அவர் காஷோகி!

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய பணக்காரர். ஆனால், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். காஷோகி என்றால் அரேபியில் ‘ஸ்பூன்மேக்கர்’ என்று பொருள். காஷோகியோ ஸ்பூன் அல்ல, பீரங்கிகளைத் தயாரித்து, விற்பனை செய்து கொண்டிருந்தார். 80களில் உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபாரியாக காஷோகியைச் சொல்லலாம்.

டெல்லிக்குத் தனி விமானத்தில் வந்து இறங்கிய காஷோகியை வரவேற்க, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசம் பார்க்காமல் அத்தனைக் கட்சிப் பிரநிதிதிகளும் கூடியிருந்தார்கள். காரணம், அவர் சுவாமியின் சிஷ்யர்!

ஆம், சந்திராசாமிக்கு நெருக்கமானவர்! ஆகவே, அரசியல் வட்டாரம் மட்டுமல்ல அதிகார வட்டாரமும் வரவேற்பதற்குக் கூடியிருந்தார்கள்.

காஷோகியோடு கைகுலுக்க பிரதமரின் தனி அதிகாரி முதல் பல துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வந்திருந்தார்கள். பாஜகவின் ஜே.கே. ஜெயின் தலைமையில் அரசியல் கட்சியினரோடு, சந்திராசாமியின் உள்வட்டாரத்தில் இருந்த நெருக்கமான நண்பர்களும் வந்திருந்தார்கள்.

டெல்லி ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்த காஷோகியின் கான்வாய், அங்கிருந்து இரண்டு கி.மீ. பயணம் செய்து போன்ஸி என்னும் வனப்பகுதியை அடைந்தது. அங்குதான் சந்திராசாமியின் ஆசிரமம் இருந்தது. காஷோகியைச் சந்திக்க சந்திராசாமி உட்பட பலர் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர், இந்தியாவின் பிரதமராக இருந்த சந்திரசேகர்!

அன்றிரவு பாஜக கட்சியைச் சேர்ந்த ஜெயின் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார். சிவப்புக் கம்பளம் விரித்து, ஏகப்பட்ட மலர்களைத் தூவி காஷோகியை வரவேற்றார்கள். நள்ளிரவு வரை நீண்ட அந்தப் பார்ட்டியில் ஏகப்பட்ட வி.ஐ.பிக்களும், இன்னும் டெல்லியின் மிக முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக ஹை பவர் ஆசாமியான சந்திராசாமியும் கலந்து கொண்டார்.

யார் இந்த காஷோகி? ஏன் இவருக்கு ராஜ மரியாதை? சவூதி அரேபியாவைச் சேர்ந்த அட்னன் முகம்மது காஷோகி, உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர். ஆனால், அவரது தொழில் ஆயுதக் கடத்தலும் கடத்தல் சார்ந்த நடவடிக்கைகளுமாக இருந்தது. உலக அளவில் பல தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுத சப்ளை செய்வதில் கெட்டிக்காரர். குறிப்பாக இலங்கைப் போராளிகள் குழு, அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகள் அவரது முக்கியமான கஸ்டமர்.

அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியில் ஒலிம்பிக் டவர் என்னும் மிகப்பெரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த காஷோகியின் தொடர்புகள் உலகம் முழுவதும் இருந்து வந்தன. பல கோடி டாலர் பெறுமானமுள்ள ஆடம்பரமான வீட்டில் வாழ்ந்து வந்தார். புரூனே சுல்தான், காஷோகிக்குச் சொந்தமான உல்லாசப் படகுதான் தனக்கு வேண்டுமென்று அடம் பிடித்து வாங்கிக் கொண்டார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அதன் மதிப்பு, 55 கோடி ரூபாய்.

காஷோகி, உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவர் ஏன் இந்தியாவுக்கு வருகிறார்? இந்தியாவில் தொழில் தொடங்கப் போகிறாரா? ஓர் ஆயுத வியாபாரியால் இந்தியாவில் என்ன தொழில் தொடங்க முடியும்? அவரால் பிரதமரை நேரடியாக எப்படிச் சந்திக்க முடிகிறது? சந்திப்புக்கு சந்திரசேகர் எப்படி ஒப்புக் கொண்டார்? சந்திப்பு பற்றி ராஜிவ் காந்தி ஏன் எதுவும் சொல்லவில்லை? சந்திப்பின்போது என்ன பேசினார்கள்? ஏகப்பட்ட கேள்விகள். பத்திரிக்கைகளிலும் இதுபற்றிய செய்திகள்தான்.

ஒரு நாட்டின் பிரதமரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். சர்வதேச அளவில் பிரபலமான ஆசாமியான காஷோகி சந்தித்ததில் தவறில்லை. காஷோகிக்குப் பல நாட்டின் பிரதமர்கள், அதிபர்கள், சர்வாதிகாரிகள் என அனைவரோடும் தொடர்புண்டு. இந்தியாவின் பிரதமரையும் சந்திக்க நினைத்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக டெல்லிக்கு வெளியே சந்திப்பு நிகழ்ந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

என்ன பேசினார்கள்? அவர் பிரதமரின் அழைப்பின்பேரில் விருந்தாளியாக வந்திருக்கிறாரா? ஏகப்பட்ட கேள்விகள். பிரதமரைச் சந்தித்த காஷோகி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராஜிவ் காந்தியைச் சந்தித்தாரா? அயோத்திப் பிரச்னை சம்பந்தமான பேச்சுவார்த்தை ஏதாவது நடக்கிறதோ என்றெல்லாம் ஊகங்கள் உலா வந்து கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் பிரதமர் அலுவலகமும் தெளிவுபடுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமையும் கருத்து சொல்லவில்லை.

காஷோகியின் சுற்றுப்பயண விபரங்கள் பாஜகவின் எம்.பியான ஜே.கே. ஜெயினுக்கு மட்டுமே தெரியும். அவரோடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.என். காட்கிலும் இணைந்து காஷோகியுடனான ராஜிவ் சந்திப்பையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்திரசேகர், ராஜிவ் காந்தியுடனான சந்திப்பு நடந்ததா இல்லையா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. சந்திப்பில் எந்தத் தவறும் இல்லையென்பதை மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் காஷோகியின் மருமகனான லாரி கோல்ப் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. செயிண்ட் கிட்ஸ் மோசடி வழக்கு. ஆவணங்களைத் திருத்தி, முன்னாள் பிரதமரான வி.பி.சிங்கின் மகனான அஜயா சிங்கை ஒரு மோசடி வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடந்திருந்தது. அதில் காஷோகியின் மருமகனும் சம்பந்தப்பட்டிருந்தார். வழக்கை விசாரித்த இந்திய அதிகாரிகள் அது சம்பந்தமாக செயிண்ட் கிட்ஸ் செல்ல வேண்டியிருந்தபோது, அவர்கள் செல்வதற்குத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனி விமானத்தை அனுப்பியது, வேறு யாருமில்லை. வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அதே லாரி கோல்ப்.

1979இல் மொரார்ஜி தேசாய் அரசைக் கவிழ்த்ததில் சந்திராசாமிக்குப் பெரும் பங்கு உண்டு என்று டெல்லி வட்டாரங்கள் எப்போதும் சொல்வதுண்டு. உலகின் மிகப்பெரிய உளவுத்துறை அமைப்புகளான சிஐஏவுக்கும் கேஜிபிக்கும் இடையே நடந்த சித்து விளையாட்டுகளில் சந்திராசாமியும் சம்பந்தப்பட்டிருந்தார். சந்திராசாமி, இந்திரா காந்திக்கு மட்டுமல்ல ராஜிவ் காந்திக்கும் நெருக்கமானவராகவே இருந்திருக்கிறார்.

காஷோகி, தன்னுடைய மருமகனான லாரி கோல்பை சந்திராசாமிக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். லாரி கோல்ப், சந்திராசாமியோடு கூட்டணி சேர்கிறார். வி.பி.சிங்கின் மகனுக்குச் சொந்தமான பர்ஸ்ட் டிரஸ்ட் கார்ப்பரேஷனின் வங்கிக் கணக்கில் அடையாளம் தெரியாதவர்களால் திடீரென்று பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. வி.பி.சிங்கின் இமேஜை சீர்குலைக்கும் நோக்கமாக இருந்திருக்கலாம். பின்னாளில் வி.பி.சிங் பிரதமரானதும், இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.

சந்திராசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் வரவில்லை. செயிண்ட் கிட்ஸ் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் வி.பி.சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. சந்திரசேகர் பிரதமரானார். அதற்குப் பின்னர் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஒருவேளை அதைத்தான் காஷோகி விரும்பினாரோ, அதற்காகத்தான் இந்தியாவுக்கு வந்தாரோ, என்னவோ?

‘இந்திய அரசுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தம் ஏதாவது செய்திருக்கிறீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இந்தியாவில் முதலீடு செய்வதை விரும்புகிறேன். கூடிய விரைவில் இந்தியா உலகின் முக்கியமான நாடாக உயர்ந்து நிற்கும். இந்தியாவுடன் ஏராளமான ஒப்பந்தங்கள் செய்ய வேண்டிய நேரமும் வரும்’ என்றார், காஷோகி.

ராஜிவ் காந்தியுடனான சந்திப்பு பற்றியும் கேள்விகள் வந்தன. வளைகுடாப் போரைப் பற்றி நானும் ராஜிவ் காந்தியும் பேசிக்கொண்டிருந்தோம். நல்ல மனிதர், கெட்டிக்காரர் என்றார். ராஜிவ் உடனான சந்திப்பை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே குறிப்பிட்டார்கள். ஆனால், சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்கிற விபரங்கள் வெளியே வரவில்லை.

காஷோகியின் விஜயம், காங்கிரஸ் கட்சிக்குள் பல அதிர்வுகளையும் ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கே.கே. திவாரி, ‘காஷோகி உடனான பிரதமர் சந்திரசேகரின் சந்திப்பு நாட்டிற்கே அவமானம்’ என்றார். ‘சவூதி அரேபியாவின் பணம் இந்தியாவுக்குள் வருவதைப் பார்க்கும்போது அரசு, நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறது’ என்றார். ஆனால், ராஜிவ் உடனான காஷோகியின் சந்திப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

காஷோகி, மதத்தலைவர்களையும் சந்தித்தார். பாஜகவின் எம்.பி. ஜெயின் ஏற்பாடு செய்த பார்ட்டியில் கலந்துகொண்டு காஷோகியுடன் நெருக்கமாக இருந்தவர்களில் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தலைவரும் ஒருவர். அயோத்தி பாபர் மசூதி தொடர்பாக இந்து அமைப்புகளின் தலைவர்களுடனும், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களோடும் காஷோகி பேசினார். இவையெல்லாம் இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சந்திராசாமி, காஷோகிக்கு பமீலாவை அறிமுகம் செய்துவைத்தார். 1982 ஆண்டின் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பமீலாவுக்கு, மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வெல்லும் ஆசையிருந்தது. காஷோகியின் காதலியாக பமீலா உலா வந்தார். ஸ்பெயினில் இருந்த காஷோகியின் எஸ்டேட்டில் அவருடன் தங்கினார். ஆனால், அவரால் மிஸ் யூனிவர்ஸ் ஆக முடியவில்லை.

காஷோகி இந்தியாவுக்கு வந்துபோன ஆறு மாதங்களில் ராஜிவ் காந்தி படுகொலை நடந்தது. அதில் விடுதலைப் புலிகளோடு சந்திராசாமியின் தொடர்புகள் பற்றியும் செய்திகள் வெளியாகின. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும், இன்னொரு சர்வதேச ஆயுத வியாபாரியுமான குமாரன் பத்மநாபா என்பவருடன் காஷோகி கொண்டிருந்த தொடர்புகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

உளவுத்துறை அமைப்பான ரா, விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கே.பிக்கும் காஷோகிக்கும் பணப் பரிவர்த்தனை இருந்ததைக் கண்டுபிடித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. காஷோகிக்கும் கால்சா, காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ் அமைப்புத் தலைவர்களுடனும் லண்டனில் சந்திப்பு நடந்திருக்கிறது. சந்திப்புக்குப் பின்னரே காஷோகி, இந்தியா வந்திருந்தார்.

இந்தியாவில் காஷோகிக்கு திறக்காத கதவுகளையும் திறந்த வைத்தவர் சந்திராசாமி. ராஜிவ் படுகொலையில் சந்திராசாமி, காஷோகி இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷனிடம் முறையிடப்பட்டது. ஆனால், கடைசிவரை அது நடக்கவேயில்லை.

காஷோகி தன்னுடைய 82ஆவது வயதில் இறந்து போனார். இயற்கை மரணம் என்றார்கள். ஆனால், அவரது நெருங்கிய உறவினர்களுக்கு ஏனோ இயற்கை மரணங்கள் வாய்க்கவில்லை. அவரது மருமகனான ஜமால் காஷோகி, பிரபலமான பத்திரிக்கையாளர். சவூதி அரசை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினார். துருக்கியில் இருந்த சவூதி தூதரகத்திற்குச் சென்றபோது, அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

காஷோகியின் மருமகனான ஜமால் காஷோகி பற்றித் தெரிந்து கொண்டோம், இனி, ஜமால் காஷோகியின் மருமகனான டோடி அல் பயத் பற்றியும் தெரிந்து கொள்வோம். காஷோகியின் உடன்பிறந்த சகோதரிதான் இவரது தாயார். டோடி, ஹாலிவுட்டின் திரைப்படத் தயாரிப்பாளர். பிரிட்டிஷ் இளவரசரான சார்லஸ், தன்னுடைய மனைவி டயானாவை விவாகரத்துச் செய்யவும் காரணமாக இருந்தவர்.

டோடி, டயானாவின் நெருங்கிய காதலராக இருந்தார். மீடியாவினர் இருவரையும் துரத்தித் துரத்திப் படமெடுத்தார்கள். பாரீஸ் நகரத்தில் நள்ளிரவு நேரத்தில் கேமரா கண்களிலிருந்து தப்பிப்பதற்காக அதிவேகமாகக் காரைச் செலுத்தியதால் டோடியும் டயானாவும் சென்ற கார் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்து போனார்கள்.

காஷோகியைப் போலவே அவரது மருமகன்களும் மர்ம மனிதர்களாகவே இருந்திருக்கிறார்கள்!

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *