Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

ராம்விலாஸ் வேதாந்தி

ராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. பா.ஜ.கவினருக்கே தெரியாத முகம். ஆனால், வட இந்தியாவில் அவர் பிரபலமானவராக இருந்தார். ராம ஜென்ம பூமியான அயோத்தியில் வசிப்பவர். மிகப் பெரிய ராம பக்தர். அயோத்தியில் ராமருக்கு எப்படியாவது ஒரு கோயிலைக் கட்டிவிடவேண்டும் என்று 40 ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிட்டவர்.

மத்தியப் பிரதேசத்தின் ரீவா நகரில் பிறந்து வளர்ந்த ராம் விலாஸ் வேதாந்தி, வேதங்களைக் கற்றுத் தேர்ந்து வேதாச்சாரி என்றெல்லாம் பட்டம் பெற்றவர். வாரணாசியில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ராமாயணம் பற்றி ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். வி.எச்.பியுடன் இணைந்து பல போராட்டங்களையும் நடத்தியிருக்கிறார்.

80களின் இறுதியில் வி.எச்.பி. அமைப்பு, ராமர் கோயில் கட்டுவதில் பெரிதும் ஆர்வம் காட்டியது. பாபர் மசூதி இருக்குமிடத்தில் ராமருக்கு ஒரு பெரிய கோயில் கட்டுவது என்று முடிவு செய்து வி.எச்.பி. தொண்டர்கள் கரசேவையை ஆரம்பித்தார்கள். வட இந்தியாவின் பல மாநிலங்களில் அவர்கள் ராமர் பூஜை செய்து, செங்கல்களைச் சுமந்தபடி அயோத்திக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

பா.ஜ.கவோ தன்னுடைய அரசியல் பயணத்தில் ஆர்வம் காட்டி வந்தது. ஒற்றைப்படை இலக்கத்தில் இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்திக் கொண்டே வந்தார்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதும் பா.ஜ.கவின் லட்சியம் என்றாலும், தடாலடியாக பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் என்றெல்லாம் தீவிரம் காட்டியதில்லை.

மண்டல் கமிஷன் சூறாவளியில் சிக்கிக் கொண்ட பா.ஜ.கவுக்கு அயோத்தி மந்திர் ஞாபகத்திற்கு வந்தது. மண்டல் வேண்டுமா, மந்திர் வேண்டுமா என்கிற கோஷத்தை முன்வைத்து, இந்து மக்களை ஒன்று திரட்ட முடிவு செய்தது. குஜராத்திலிருந்து அத்வானி ரத யாத்திரையை ஆரம்பித்தார். மேற்கிலிருந்து புறப்பட்டு, பல வட இந்திய மாநிலங்கள் வழியாகச் சென்று, இந்து மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய பின்னர் அயோத்தி செல்வது அவரது திட்டம்.

அயோத்தி சென்றடைவதற்கு முன்பாகவே பீகாரில் லல்லு அரசால் கைது செய்யப்பட்டார். அயோத்தி பிரச்னை அப்போதைக்கு ஓய்ந்தது என்றாலும் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் வி.எச்.பியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பா.ஜ.க முன்னுக்கு வந்துவிட்டது. யார் செய்தால் என்ன? ராமர் கோயில் கட்டுவதுதான் ஒரே லட்சியம் என்று நினைத்த ராம் விலாஸ் வேதாந்தியும் பா.ஜ.கவில் இணைந்துவிட்டார்.

1992 டிசம்பர் மாதம், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கரசேவை தொண்டர்களைத் தூண்டிவிட்டதாக சிலர் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. அதில் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 11 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அதே வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் ராம் விலாஸ் வேதாந்தியும் ஒருவர்.

ராமர் கோயில் கட்டத் தொடங்கப்பட்ட சாதுக்கள் சபையில் ராம் விலாஸ் வேதாந்தியும் இருந்தார். அயோத்தி ராம் மந்திர் டிரஸ்ட்டில் செயலாளராகவும் இருந்தார். இது தவிர, வி.எச்.பி. அமைப்பினரால் உருவாக்கப்பட்ட மார்கதர்சி மண்டல் என்னும் வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பின்னாளில் வசிஷ்டர் மடம் ஒன்றை ஆரம்பித்த வேதாந்தி, இரண்டு முறை பா.ஜ.க எம்.பியாக இருந்திருக்கிறார்.

2007ல் தமிழ்நாட்டில் நடந்த ஒரு அரசியல் சர்ச்சையில் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்த கருத்து, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதல்வராக இருந்த கருணாநிதி, ராமரைப்பற்றித் தெரிவித்த கருத்து தேசிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

கோவையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய பேச்சு வந்தபோது, ராமர் கட்டிய பாலம் என்பதெல்லாம் பொய் என்று பேச ஆரம்பித்த கருணாநிதி, ‘ராமர் கட்டினாரா? அவர் ஏதாவது பொறியியல் கல்லூரியில் படித்தாரா?’ என்று கேட்டார்.

அதற்குப் பதிலடியாக, கருணாநிதி ராமரை இழிவுபடுத்திவிட்டார். வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ராமர் கட்டிய பாலத்தைத் தகர்க்க நினைக்கிறார். நாங்கள் இருக்கும்வரை நடக்க விடமாட்டோம். இந்துக் கடவுள்களைப்பற்றி இழிவாக யார் பேசினாலும் நாக்கை துண்டிக்க வேண்டும் என்றார் ராம் விலாஸ் வேதாந்தி.

உடன்பிறப்புகள் பொங்கியெழுந்தார்கள். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் அப்படியொரு விமர்சனத்தை எதிர்கொண்டதில்லை. வேதாந்தி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மிரண்டு போன வேதாந்தி, தன்னுடைய கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஆனால், தி.மு.க. தொண்டர்கள் விடவில்லை. சென்னையில் இருந்த பா.ஜ.க. அலுவலகமும், இந்து முன்னணி அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளானது.

பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்ட குழுவில் ஒரு அமைச்சரும் இருந்தார். அடுத்தடுத்து அமைச்சர்கள் பா.ஜ.கவையும், ராம் விலாஸ் வேதாந்தியையும் கண்டித்துப் பேசினார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிரடி அறிக்கை வெளியானது. ஜெயலலிதாவிடமிருந்து அல்ல, சுப்ரமணிய சாமியிடமிருந்துதான்.

ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேள்வி கேட்டதன் மூலமாக இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார் என்ற சுப்ரமணியம் சாமி, நாடு முழுவதுமுள்ள இந்துக்களின் சாபத்துக்கு கருணாநிதி ஆளாகிவிட்டார். ராமர் சோமபானம் குடித்ததாக வால்மீகி ராமாயணம் சொல்கிறது என்றும் பேசியிருக்கிறார். அவர் எந்தக் காலத்தில் ராமாயணத்தைப் படித்தார்? அப்படி எதுவும் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடவில்லை என்றார்.

ராம் விலாஸ் வேதாந்தி மீது தமிழ்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவரைக் கைது செய்ய தமிழக காவல்துறையினர் அயோத்திக்குச் சென்றிருப்பதாக செய்திகள் வந்தன. எங்கள் சாதுக்களில் முக்கியமானவரான வேதாந்தியின் மீது யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது. இது ராம பக்தர்களுக்கும், ராம விரோதிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்றெல்லாம் அவரது சிஷ்யர்களும் கொதித்துப் போனார்கள்.

அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்கு ராமர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்தது. ராமர் என்பது ஒரு இதிகாச பாத்திரம்தான், வரலாற்றில் அப்படியொரு பாத்திரம் இருப்பதற்கு ஆதாரம் இல்லையென்று ராஜாஜி எழுதிய சக்கரவர்த்திக் திருமகனை கையில் வைத்துக்கொண்டு கருணாநிதி தன்னுடைய பேச்சை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்.

ராமர் பற்றிய கருணாநிதியின் கருத்து, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது பற்றி பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் நேரடியாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காவிட்டாலும், தர்மசங்கடத்தில் இருந்தார்கள். அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கருணாநிதியின் ராமர் பற்றிய கருத்தும், இந்து மத எதிர்ப்பு வாதப் பிரதிவாதங்களும் தொடர்கதையாகிவிட்டன.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் ராமர் கோயில் கட்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. ராம் விலாஸ் வேதாந்தியும் உற்சாகமாகப் பணிகளை ஆரம்பித்தார். அயோத்தி பிரச்னை மீதான உச்ச நீதிமன்ற வழக்கில் வேதாந்தியும் ஒரு மனுதாரராக இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்குப் பின்னர் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகின. மத்திய, மாநில அரசுகளினால் அமைக்கப்பட்ட அறக்கட்டளை, வழிகாட்டும் குழுக்களில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் ராம் விலாஸ் வேதாந்தி.. ஆனால், ஏனோ அவர் சேர்க்கப்படவில்லை.

அறக்கட்டளையில் இடம் பெறுவது தொடர்பாக இந்து அமைப்புகளுக்குள் பெரிய போட்டி இருந்தது. கோயில் கட்டி முடித்த பிறகு நிர்வாகப் பொறுப்பை தங்களிடம்தான் தரவேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள் என்பதால் எவரையும் சேர்த்துக் கோள்வதில் மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக இருந்தன.

இந்நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளையின் நிதியில் ஏகப்பட்ட மோசடி நடப்பதாக புகார் எழுப்பினார் வேதாந்தி. மோசடி பற்றி விசாரிக்குமாறு, உள்துறை அமைச்சகத்திற்கு விரிவாக எழுதியிருக்கிறார். இதுபற்றி விசாரிக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார்.

ராமா் கோயிலுக்காகப் போராடியவர்களில் பலர், அறக்கட்டளையில் ஏன் சேர்க்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். ‘நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொள்பவர்களையும், தேர்தலில் போட்டியிட்டவர்களையும் சேர்க்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தோம். தற்போதைய அறக்கட்டளை சரியாகச் செயல்படுகிறது. எங்களுடைய விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்றார் அமித்ஷா.

15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ராம் விலாஸ் வேதாந்தி மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராம் விலாஸ் வேதாந்தியும் உத்திரப் பிரதேசத்தில் கருணாநிதி மீது ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இரு வழக்குகளின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை!

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *