முன்னும் பின்னும் நான்கு பாதுகாப்பு வாகனங்கள் சூழ, அந்த பென்ஸ் கார் கிளம்பியது. குண்டு துளைக்காத கார். இருபதுக்கும் மேற்பட்ட காவல் பூனைகள் ஆயுதமேந்தியபடி சுற்றியிருக்க, பாதுகாப்போடு மெல்ல நகர்ந்தது. இலங்கை அரசின் வி.வி.ஐ.பி.பியும், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜேரத்ன காருக்குள் இருந்தார். கொழும்புவில் இருந்த அவரது இருப்பிடத்திலிருந்து காலையில் வழக்கம்போல் தன்னுடைய அலுவலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
கிளம்பி பத்து நிமிடங்கள்கூட ஆகியிருக்காது. கொழும்புவின் மக்கள் நடமாட்டமுள்ள ஒரு பிஸியான சாலையைக் கடந்து இன்னொரு சாலைக்குத் திரும்பும் நேரத்தில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கன்டெயினர் வாகனம் திடீரென்று உயிர்பெற்று, அமைச்சரின் கார்மீது மோதியது. அடுத்த சில நொடிகளில் பெரும் ஒலியோடு எழுந்த வெடிச்சத்தம், அந்தப் பகுதியையே குலுக்கிவிட்டது.
ஆகாயத்தில் தூக்கியெறியப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பார்த்து சாலையோர மக்கள் உறைந்து போனார்கள். உடனிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கை கால்கள் பிய்த்து எறியப்பட்டிருந்தன. எங்கும் ரத்த வெள்ளம். குண்டுவெடிப்பால் எழுந்த தீப்பிழம்பால் அருகில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீப்பிடித்து எரியவே, உள்ளே இருந்தவர்களெல்லாம் அலறியடித்து ஓடினார்கள்.
60 கிலோ வெடி மருந்துப் பொருள்களோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை இயக்கி, வேகமாக வந்துகொண்டிருந்த அமைச்சரின் கார் மீது மோதி ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்திருக்கிறார்கள். காரை இயக்கியது யாரென்று தெரியவில்லை. உயிரிழந்த அமைச்சர், இலங்கை அரசின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தார். இலங்கையின் அதிபர், பிரதமருக்கு இணையான பாதுகாப்பு அவருக்குத் தரப்பட்டிருந்தது.
ரஞ்சன் விஜேரத்ன மீதான தாக்குதல் என்பது ஆச்சர்யமானது. அன்றைய நிலையில் நாட்டின் உச்சகட்டப் பாதுகாப்பு வளையத்தில் இருந்தார் அவர். மூன்று அடுக்குப் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டித்தான் யாராக இருந்தாலும் அவரைச் சந்திக்க முடியும் என்கிற நிலை இருந்தது. கையில் இருக்கும் பேனா முதல் வாட்ச், மணி பர்ஸ் வரை சகல விஷயங்களையும் பரிசோதித்தப் பின்னரே அவரை நெருங்க முடியும் என்பார்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். இதில் ரஞ்சன் விஜேரத்ன உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். அவரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்து கிடந்தது. உயிரிழந்தவர்களில் 13 பேர் அப்பாவி பொதுமக்கள். 120 பேர் படுகாயமடைந்தார்கள். அப்படியொரு நாசகார சம்பவத்தை இலங்கை அதுவரை எதிர்கொண்டதில்லை.
இதுவொரு திருப்புமுனைப் படுகொலை. இதே பாணியில் அடுத்து வந்த ஐந்தாண்டுகளுக்கு மனித வெடிகுண்டு, கார் வெடிகுண்டால் உயிரிழந்த இந்திய, இலங்கைப் பிரபலங்கள் ஏராளமானோர் உண்டு.
பின்னணியில் இருந்தவர்கள் யார்? கேள்விக்கு உறுதியான விடை தேடுவதற்குப் பல ஆண்டுகளானது. விடுதலைப்புலிகளின் செயல் என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னரே உறுதியானது என்றாலும் அன்றைய நிலையில் ரஞ்சன் விஜேரத்ன ஏராளமான அமைப்புகளின் எதிர்ப்புகளைச் சம்பாதித்து வைத்திருந்தார். திரும்பும் திசையெல்லாம் அவருக்கு எதிரிகள் இருந்தார்கள்.
யாருடைய வேலை என்பதில் இறுதி முடிவுக்கு வர முடியாது சூழல் இருந்தது. அவரது கட்சிக்குள்ளேயும் அவருக்கு எதிர்ப்பு இருந்தது. சிங்களர், தமிழர் என அனைத்துத் தரப்பினரின் கசப்பையும் பெற்றிருந்தார். எவரையும் கடுமையாக நடத்திய பிடிவாதமானப் போக்குடையத் தலைவராகவே அவர் நினைவுகளில் இருந்தார்.
ரஞ்சன் விஜேரத்ன, இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரும்புக்கரம் கொண்ட உள்துறை அமைச்சராக அறியப்படுகிறார். ஒரு சாதாரண தேயிலைத் தோட்ட தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர். 25 ஆண்டுகாலம் தேயிலைத் தோட்டத் தொழில்தான் அவருக்கு முக்கியமான அடையாளம். ஒரு டீ எஸ்டேட் மேனேஜராக இருந்து, பின்னர் தோட்டக்கலை ஆராய்ச்சி இயக்குநராக உயர்ந்திருக்கிறார். அதிபர் ஜெயவர்த்தனே இவரது ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
தன்னுடைய ஐம்பதாவது வயதில், இலங்கை ராணுவத்தில் சேர்ந்து ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். பின்னர் அதிலிருந்து விலகி, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். பின்னாளில் பிரேமதாசா அதிபரானபோது, அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை, ராணுவத்துறை என முக்கியமான பொறுப்புகள் ரஞ்சன் விஜேரத்ன வசம் வந்தன. மூன்றே வருடங்களில் இலங்கை அரசியலின் மையப்புள்ளிக்கு வந்து சேர்ந்தவர்.
ரஞ்சன் விஜேரத்ன, அதிரடியாகப் பேசக்கூடியவர். அதிரடியாகவும் செயல்படக்கூடியவர். பிரேமதாசாவுக்கு அடுத்த நிலையில் நம்பர் டூவாக வலுவான இடத்தில் இருந்தார். பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் சிங்களர் வாழும் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அதில் முக்கியமானது ஜே.வி.பியை முழுவதுமாக ஒடுக்கியது.
ஜே.வி.பி. என்னும் ‘ஜனதா முக்தி பெர்முனா’ ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். 70களின் ஆரம்பத்தில் சிங்கள இளைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அமைப்பு, இலங்கை முழுவதும் பல்வேறு இனக்கலவரங்களுக்கு காரணமாக இருந்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் ஜே.வி.பியையும் விடுதலைப்புலிகளையும் பயங்கரவாத இயக்கங்களாகவே கருதின. உள்துறை அமைச்சரான ரஞ்சன் விஜேரத்ன, முதலில் ஜே.வி. பி. இயக்கத்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், ஜே.வி.பி. தன்னுடைய நடவடிக்கைகளை அதிகப்படுத்தியது. இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை எதிர்ப்பதாக ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கியது. ஒப்பந்தம் முன்வைத்த அரசியல்அமைப்பு 13 சட்டத்திருத்தம் போன்ற விஷயங்களை நிராகரித்தார்கள். மாகாண சபை, தேர்தல்களை என அத்தனையையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.
தமிழர்கள் ஒப்புக்கொண்டாலும் சிங்களர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் எல்லை மீறிப்போகும் ஜே.வி.பியை கூண்டோடு ஒழிக்க களத்தில் இறங்கினார், ரஞ்சன். ஜே.வி.பியின் முக்கியமான தலைவர்களை தேடிப்பிடித்து, அதிரடித் தாக்குதல் நடத்தி ராணுவப் படை கைது செய்தது. ஏறக்குறைய 80 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் அடிக்கப்பட்டார்கள்.
ஜே.வி.பியின் தலைவர் ரோகன விஜயவீரா, சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, அனைத்து முன்னணித் தலைவர்களும் கொல்லப்பட்டார்கள். பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு ஜே.வி.பி. தலையெடுக்க முடியாமல் போனது.
ரஞ்சன் விஜேரத்ன என்னும் ஒற்றை ஆசாமியால் இதை வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது. ஜே.வி.பி. என்னும் தலைவலி தீர்ந்ததால், அதிபர் பிரேமதாசாவால் தமிழர் பிரச்னையில் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகப் பேச முடிந்தது. அனைத்துச் சிங்களவர்களின் ஆதரவு தனக்கிருப்பதால் பிரேமதாசா, புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
ஜே.வி.பியை ஒடுக்கிவிட்ட ரஞ்சன் விஜேரத்னவுக்கு விடுதலைப்புலிகளிடம் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடத்துவதில் சம்மதமில்லை. ஜே.வி.பியை ஒடுக்கியதுபோல் ஆறே மாதத்தில் விடுதலைப்புலிகளையும் ஒடுக்கிவிடலாம் என்று அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.
பிரமேதாசாவோ யதார்த்த நிலையை உணர்ந்திருந்தார். அதிபர் தேர்தலுக்கு முன்னரே புலிகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தைகளை முடித்திருந்தார். விடுதலைப்புலிகள் தந்த ஒத்துழைப்பால் அவரால் அதிபராக முடிந்தது. இந்தியா அமைதி காக்கும் படையையும் திருப்பி அனுப்ப முடிந்தது. ஆகவே, விடுதலைப்புலிகளுடன் எந்தளவுக்கு சமாதானமாகப் போகமுடியுமோ அந்தளவுக்கு இறங்கி வந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
புலிகளை நம்பிப் பேச்சுவார்த்தையில் இறங்கவேண்டாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார், ரஞ்சன். பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை ஒப்படைத்தாகவேண்டும் என்றார். ஆனால், விடுதலைப்புலிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆறுமாதங்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை நெருங்கும் நேரத்தில், நிலைமை மோசமானது. புலிகள் தாக்குதலை ஆரம்பித்தபோது ரஞ்சன் பொங்கியெழுந்துவிட்டார்.
விடுதலைப்புலிகள் மோசமான துரோகிகள் என்றார். ‘இந்திய அமைதி காக்கும் படையையே சமாளித்து திருப்பி அனுப்பி விட்டதாக விடுதலைப்புலிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய ராணுவப் படை எதற்கும் சளைத்ததல்ல. விடுதலைப்புலிகளை நம்பி இனிமேலும் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. இனி வரும் காலத்தில் இலங்கை ராணுவப் படை, விடுதலைப்புலிகளோடு கடுமையாக மோதும்.’ என்றார்.
அதுதான் நடந்தது. 1990களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் கடுமையான சண்டை நடந்தது. அதுவரை பார்க்காத உக்கிரமான யுத்தம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்தது. ‘விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழித்துவிடுவேன். எதையும் அரைகுறையாகச் செய்து எனக்குப் பழக்கமில்லை’ என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசினார், ரஞ்சன் விஜேரத்ன.
சொன்னபடியே செய்து முடித்தார். விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்த பெரும்பாலான கிழக்குப் பகுதிகள் இலங்கை அரசின் வசம் திரும்ப வந்தன. யாழ்ப்பாணத்தை மட்டும் மீட்கமுடியவில்லை. அதற்காகத்தான் மாதக்கணக்கில் யுத்தம் தொடர்ந்தது.
யுத்தம் உச்சத்தில் இருந்தபோது, ரஞ்சன் சர்வதேசப் பத்திரிக்கையாளர்களை அழைத்து, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவித்தார். புலிகளில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இனி எஞ்சியிருப்பது இளம் ஆண்களும் பெண்களும்தான். என்னுடைய ராணுவம், யாழ்ப்பாணத்திற்குள் நுழையும்போது அவர்கள் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுவார்கள் என்றார். இதுதான் விடுதலைப்புலிகளைக் கோபப்படுத்தியது.
இறுதிவரை ரஞ்சன் விடுதலைப்புலிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தார். ரஞ்சன் விஜேரத்னவைக் கொன்றது ஜேவிபியா, விடுதலைப்புலிகளா என்று சர்ச்சை இருந்தது. இரண்டு நாள் கழித்து விடுதலைப்புலிகள் அமைப்பு விளக்கமாக அறிக்கை வெளியிட்டது. விஜேரத்னவைக் கொன்றது நாங்கள் அல்ல; ஆனால், கொல்லப்பட்டதால் தமிழ் மக்களுக்கு நிம்மதி என்பதில் சந்தேகமில்லை என்றது.
தமிழ்நாட்டிலிருந்துதான் விடுதலைப்புலிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான ஆயுதங்கள், மருந்துப் பொருள்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்துதான் கிடைக்கின்றன. விடுதலைப்புலிகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி விட்டாலே போதும். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார், ரஞ்சன்.
ஆனால், மூன்றே மாதங்களில் திட்டமிட்டு ரஞ்சன் விஜேரத்ன கொலை செய்யப்பட்டார். கார் வெடிகுண்டு அவரது உயிரைப் பறித்தது. அடுத்து வந்த மூன்று மாதங்களில் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அதே வழிமுறை, அதே வெடிபொருள்கள். காருக்குப் பதிலாக மனித வெடிகுண்டு!
0