Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

விருது நகர், சூலக்கரை மேட்டில் ஓர் ஆசிரமம். அங்கே 60 வயது நிரம்பிய சுதந்திரப் போராட்டத் தியாகியான சங்கரலிங்கனார், காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறார். 12 அம்சக் கோரிக்கைகளைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது போராட்டத்தின் நோக்கமாக இருந்து.

12 கோரிக்கைகளில் முக்கியமானவை, இரண்டு. சென்னை மாகாணத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுவது; இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது. இரண்டுமே புதிய கோரிக்கைகள் அல்ல. பலரால் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகள்தான்.

காந்தியவாதி என்பதால் உண்ணாவிரதத்தின் மீது அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. முன்னாள் காங்கிரஸ்காரர் என்பதால் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையோடு இருந்தார். மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள், சிஷ்யர்கள் உண்டு. ஆனால், சுதந்திரத்திற்குப் பிந்தைய காங்கிரஸ் கட்சி வேறு என்பதை அவர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்.

சங்கரலிங்கனார்

சங்கரலிங்கனார்

விருதுநகரில் பிறந்து வளர்ந்த சங்கரலிங்கம், காமராஜரின் சீனியர். ஞானாதிநாத நாயனார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தபோது, காமராஜர் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பள்ளிக் கல்விக்குப் பின்னர் குடும்பத் தொழிலில் கவனம் செலுத்திய சங்கரலிங்கனார், அது தொடர்பாக மும்பைக்குப் பயணமானார். அங்கே காந்தியை நேரில் சந்திக்க முடிந்தது.

தமிழகம் திரும்பியவருக்கு வ.உ.சி., ராஜாஜி போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசியல் மாநாடுகளில் கலந்து கொண்டார். கதர் இயக்கத்தின் மீதான ஈடுபாட்டால், விருதுநகரில் கதர் வஸ்திராலயம் என்னும் கடையை ஆரம்பித்தார். சத்தியாகிரகப் போராட்டத்தில் கைதாகி, திருச்சி சிறையில் சில காலம் இருந்தார். தமிழகத்திற்குக் காந்தி சுற்றுப்பயணம் வந்தபோது, அவரை விருதுநகருக்கு அழைத்து வந்தார்.

காந்தி மீதிருந்த பக்தியால் தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். பின்னாளில் நாடு சுதந்திரமடைந்தபோது, விருதுநகரில் ஒரு காந்தி ஆசிரமம் அமைத்து அங்கேயே தங்கிவிட்டார். தன்னுடைய சொத்துகளை விருதுநகர் மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு நன்கொடையாகத் தந்தவர், அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவாகக் கஞ்சி தர ஏற்பாடு செய்தார். இதுவே, காமராஜரின் மதிய உணவுத் திட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது.

சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தபோது எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களும் நேரில் வந்து பார்க்கவில்லை. தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றுவதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப்போகிறது என்று விமர்சித்தார்கள். மத்திய, மாநில அரசுகளுக்குத் தேவையற்ற அழுத்தம் தருவதாக நினைத்தார்கள். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்களும் புதிதாகத் தேர்தல் அரசியலுக்கு வந்திருந்த தி.மு.கவும் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்தை ஆதரித்தார்கள்.

முதலில் தன்னுடைய ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த சங்கரலிங்கனார், பின்னாளில் விருதுநகர் மாரியம்மன் கோயில் அருகே இருந்த மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத சங்கரலிங்கனாருக்கு கட்சியைத் தாண்டிய ஆதரவு கிடைத்தது. ஜீவா, அண்ணா, மா.பொ.சி போன்ற தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்கள்.

உண்ணாவிரதம் பத்தாவது நாளைக் கடந்தபோது சட்டமன்றத்தில் அது குறித்து பேச்சு வந்தது. சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; மத்திய அரசிடம் மட்டுமே இருப்பதாக முதல்வர் காமராஜர் விளக்கமளித்தார். தமிழக அரசு சார்பில் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கேட்டு கோரிக்கையும் விடப்பட்டது. ஆனால், சங்கரலிங்கனார் உறுதியாக இருந்தார்.

1956 ஜூலை 27இல் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்த உண்ணாவிரதம், அக்டோபர் 10 அன்று மோசமான கட்டத்தை அடைந்தது. நினைவிழந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனளிக்காமல் அக்டோபர் 13 அன்று மறைந்தார்.

இறுதிவரை எதையும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதமிருந்தார். அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாமலேயே உயிர் துறந்தார். காங்கிரஸ் ஆட்சி இருந்தவரை தமிழ்நாடு என்னும் பெயரிடப்படவில்லை. 13 ஆண்டுகளுக்குப் பின்னர், தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்னர் முதல்வர் அண்ணாதுரையின் முயற்சியால் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மொழிவழி மாநிலம் அமைய வேண்டும் என்பது சங்கரலிங்கனாரின் முதல் கோரிக்கையாக இருந்தது. ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது தொடங்கி, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் தனி மாநிலக் கோரிக்கை தீவிரமாக இருந்தது. மாநில நலன், இனவாதம் பேசிய பல உள்ளூர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கட்சிக்குள் இருந்தபடியே மாநில நலனுக்காகப் போராடி வந்தார்கள்.

பலர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டு, கட்சியிலிருந்து வெளியேறி, மாநில நலனுக்காக மாநிலக் கட்சிகளை ஆரம்பித்தார்கள். மொழிவாரி மாநிலம் என்பது ஆரம்பத்தில் நேருவுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. பின்னாளில் வேறு வழியின்றி மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு நேரு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

சென்னை மாகாணத்தின் பெயரை மாற்றிவிட்டு, தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்பது சங்கரலிங்கனாரின் கோரிக்கை. தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதிகள் பிரிந்த பிறகு, சென்னை மாகாணத்தின் பிற பகுதிகள் அனைத்தும் தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தன. எஞ்சியிருந்த பகுதிகளுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியிருக்கலாம் . மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா என்று மாநிலங்கள் இருந்தபோது தமிழ்நாடு என்று பெயரிடுவதில் காமராஜர் அரசுக்கு ஏனோ தயக்கம் இருந்தது.

தமிழ்நாடு கோரிக்கைக்குப் பெரியார் ஆதரவாக இருந்தார். காமராஜரே அதைச் செய்து முடித்துவிடுவார் என்றே நினைத்திருந்தார். சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே இது குறித்து பெரியார் பேசி வந்திருக்கிறார். திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், மலையாளிகள், கன்னடர்கள் பிரிந்துபோன பின்பும்கூட தமிழகத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வந்துவிடக்கூடாது என்று உள்ளூர் பிராமணர்களும் வடநாட்டுப் பிராமணர்களும் சதி செய்து வருவதாக தன்னுடைய பாணியில் அறிக்கை வெளியிட்டார்.

பெரியாரும் சங்கரலிங்கனாரும் தமிழ்நாடு என்னும் பெயரை விரும்பினார்கள். ஆனால், அதற்கான காரணங்கள் வேறாக இருந்தன. இருவருமே பெரும்பாலான தமிழர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்தார்கள். மொழிவாரி மாநிலம், தமிழ்நாடு என்னும் பெயரிடல் தவிர இன்னும் பத்து கோரிக்கைகளையும் சங்கரலிங்கனார் முன் வைத்திருந்தார். அது குறித்து யாரும் பேசியதில்லை. இப்போதும் யாரும் பேசுவதில்லை.

ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்ய வேண்டும் என்பது சங்கரலிங்கனாரின் மூன்றாவது கோரிக்கை. நெடுந்தூரப் பயணங்களுக்கு ரயில் மட்டுமே சாத்தியமாக இருந்த பிரிட்டிஷார் காலத்தில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்னும் பிரிவுகள் இருந்தன. அது இன்றும் தொடர்கின்றன. இன்றுவரை கோரிக்கை நிறைவேறவில்லை. போக்குவரத்து வசதிகள் அதிகமாகிவிட்ட இக்காலத்தில் அதற்கான தேவையும் எழாமலே போய்விட்டது.

வெளிநாட்டு விருந்தினர்களுக்குக் கேளிக்கை நடனம், அசைவ உணவு முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு மட்டுமே அளித்திட வேண்டும் என்பது அவரது கோரிக்கை. ஒரு காந்தியவாதியாக புலால் மறுத்து சைவ உணவை உட்கொள்ளும் பழக்கமுடையவராக இருந்தார். வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களும் நம்முடைய சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும். ஆடம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதெல்லாம் பிற்போக்கான விஷயமாக இக்காலத்தில் புரிந்துகொள்ளப்படும்.

அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை. கதர் இயக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் கூட அனைத்துக் காங்கிரஸ் தொண்டர்களும் கதர் அணிந்ததில்லை. இன்றும் கதர் அணிந்து கொள்ளும் அரசியல்வாதிகள் உண்டென்றாலும், கதர் அணிவதை யாரும் கட்டாயப்படுத்தமுடியாது.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல்வாதிகள் சாதாரண மக்களைப்போல் வாழ வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை. அரசியல்வாதிகள் மக்களோடு களத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என்கிற அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து என்றாலும் எத்தகைய ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றார். இந்தியாவில் இரண்டாவது முறையாகப் பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்த நேரம். எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பது பற்றிய தெளிவில்லை. ஏன் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சங்கரலிங்கனார் நினைத்தார் என்பதும் தெரியவில்லை.

பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது சங்கரலிங்கனாரின் கோரிக்கை. ஆனால், அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட ‘குலக்கல்வி’ ஏகப்பட்ட எதிர்ப்பை எதிர்கொண்டது. ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. காலையில் பள்ளிப் பாடங்களும் மாலைநேரம் குலக்கல்விக்காகப் பெற்றோர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே குலக்கல்வித் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வித் திட்டத்தை ராஜாஜி சில மாற்றங்களோடு அமலுக்குக் கொண்டு வந்தார். கூடவே தற்சார்போடு இயங்குவதற்கான பயிற்சியாக இருக்குமென்று நினைத்தார். ஆனால், ராஜாஜியின் தன்னிச்சையான செயல்பாட்டால் குலக்கல்வி எதிர்ப்பைச் சந்தித்தது. ராஜாஜி பதவி விலகியதும் காமராஜர் முதல்வரானார். ஏற்கெனவே சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்த குலக்கல்வியை சங்கரலிங்கனார் ஏன் திரும்பவும் வலியுறுத்தினார் என்பதும் தெரியவில்லை.

இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்; விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் குத்தகை அளிக்க வேண்டும்; மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தொடர்பு மொழியாக இந்தியை மட்டும் பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்திட வேண்டும் என்றெல்லாம் சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள் இருந்தன. அவற்றை நிறைவேற்றிடும் சாத்தியம் எந்தவொரு அரசுக்கும் இன்றுவரை இருந்ததில்லை.

1968, சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை முன்வைத்து விவாதம் நடந்தபோது, பழைய காங்கிரஸ்காரரான ம.பொ.சி. தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். ‘உணர்வுப்பூர்வமாக, உயிர்த்துவமாக ஆதரிக்கிறேன். தி.மு.க. ஆட்சியில்தான் இப்படியொரு தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கக்கூடும். பத்து ஆண்டுகளுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியினர் இதைச் செய்திருந்தால், காங்கிரஸின் நிலை இன்று வேறுவிதமாக இருந்திருக்கும்’ என்றவர், சட்டமன்றம் செயல்படும் இந்த இடத்தையும் மாற்றவேண்டும்; செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை ‘திருவள்ளுவர் கோட்டை’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

பெயர் மாற்ற அரசியல் என்னும் புதுவிதமான அரசியல் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

0

பகிர:
nv-author-image

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *