Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை

மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை

உசைனின் சரஸ்வதி

1996, அகமதாபாத். அதுவொரு பிரபலமான ஆர்ட் கேலரி. உலகளவில் பிரபலமான இந்திய ஓவியரான எம்.எப். உசைன் வரைந்த முக்கியமான ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துமீறி நுழைந்த பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், அங்கிருந்த ஓவியங்கள், வரைபடங்கள், மேஜை, நாற்காலிகள் எனக் கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். ஓவியர் உசைனின் கைவண்ணத்தில் வரையப்பட்ட 26 ஓவியங்களில் 16 ஓவியங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

உசைன், மஹாராஷ்டிராவின் பந்தர்பூரில் பிறந்தவர். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் படிப்பை முடித்துவிட்டு மும்பைவாசியானவர். விளம்பரப் பலகை எழுதும் ஓவியராகத் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னாளில் பல ஓவியர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறார். இளம் வயதிலேயே தன்னுடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது பெற்ற உசைன், உலகளவில் கவனிக்கப்பட்ட நவீன ஓவியராக இருந்தார். போர்ப்ஸ் இதழ், உசேனை இந்தியாவின் பிகாசோ என்று வர்ணிக்கிறது.

உசைன், ஓவியர் மட்டுமல்ல. சில திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். மாதுரி தீட்சித் நடித்த ‘கஜகாமினி’ என்னும் படத்தையும் தபு நடித்த ‘மீனாட்சி’ , ‘மூன்று நகரங்களின் கதை’ என்னும் படத்தையும் இயக்கியிருக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட உசைனின் திரைப்படங்கள், சர்ச்சையை ஏற்படுத்தவும் தவறவில்லை. அவர் இயக்கிய, தயாரித்த படங்களில் இந்து, இஸ்லாம் மதங்களை விமர்சிக்கும் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்தன.

உசைன், சர்ச்சைப் பிரியர் இல்லையென்றாலும் அவரது ஓவியங்களும் செயல்பாடுகளும் அவ்வப்போது சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருந்தன. பிறப்பால் உசைன் ஓர் இஸ்லாமியர் என்றாலும், இந்து மதம் குறித்த ஆழமான புரிதல் கொண்டவர். ஏராளமான கணபதி உருவங்களை வரைந்தவர். கடவுளர்களின் உருவங்களை அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் தொடர்ந்து சித்தரித்ததுதான் பல மத அடிப்படைவாத அமைப்புகளின் கோபத்திற்குக் காரணமாக இருந்தது. அதுதான் அவரது கனவு இல்லத்திற்குள் நுழைந்து, அவரது படைப்புகளைச் சிதைக்கவும் காரணமாக இருந்தது.

‘உசைன் தோசி குபா’ என்பது குஜராத்தின் பிரபலமான நவீனக் கலைக்கூடம். உசைனின் எண்ணத்தில் உதித்த கனவு இல்லம். நிலத்தடிக்குள் குகை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஏராளமான ஓவியங்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். தன்னுடைய ஓவியங்கள், படைப்புகள் அனைத்தையும் ஓரிடத்தில் நிரந்தரமாக வைக்கவேண்டும். அவற்றைப் பொதுமக்கள் இலவசமாகத் தங்கு தடையின்றிப் பார்வையிடவேண்டும். நவீன இந்திய ஓவியங்கள்பற்றி வெளிநாட்டினர் தெரிந்துகொள்ளவும், நவீன ஓவியர்களுக்கான பயிற்சிக்கூடமாகவும் அது அமையவேண்டும் என்பது அவரது கனவு.

உசைனின் நீண்ட நாளைய கனவை நனவாக்கியவர், அவரது நெருங்கிய நண்பரான, பி.வி. ஜோஷி. இருவரும் இணைந்து நான்கு ஆண்டுகள் உழைப்பில் உருவானதுதான், உசைன் தோசி குபா.

அகமதாபாத் நகரத்தில் செப்ட் யூனிவர்சிட்டிக்கு அருகே அமைந்துள்ள ஆர்ட் மியூசியம், முழுவதும் தரைத்தளத்தில் உள்ளது. வெளியிலிருந்து மேற்கூரையை மட்டுமே பார்க்க முடியும். தொலைவில் இருந்து பார்க்கும்போது ஆமைகளும் அவற்றின் மீது கருப்பு நிற பாம்பு ஊர்ந்து செல்வது போலவும் மேற்கூரை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உசைன் போலவே, எங்கும் எதிலும் வித்தியாசம்!

வட்ட வடிவிலான படிகளில் இறங்கி உள்ளே சென்றால் ஓர் அதிசய உலகம் கண்முன் விரியும். சுவர்களில் உசைனின் கைவண்ணத்தில் வரையப்பட்ட ஓவியங்கள். சுவர்கள், தூண்கள் அனைத்தும் சற்றே வளைந்து இருக்கும். குகை போன்ற பகுதிகளில் உள்ள அனைத்தும் தட்டையாகவே இருக்காது. கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற கலைக்கூடத்தை இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது.

குபா கலைக்கூடத்தின் ஒவ்வொரு மூலையிலும் என்ன இருக்கவேண்டும் என்பதை உசைன்தான் தீர்மானித்தார். ஓவியங்கள் மட்டுமல்ல மேற்கூரை முதல் ஏ.சிக்கான வண்ணம்கூட அவரால் தீட்டப்பட்டவைதான். அங்கேதான் அவரது பெரும்பாலான ஓவியங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருந்தன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக உசைன் வரைந்து வைத்திருந்த கணபதி, ஹனுமன், புத்தர் உருவங்கள் கொண்ட ஏராளமான நவீன ஓவியங்கள் இருந்தன.

ஒரே நாளில் கலைக்கூடத்தில் இருந்தவையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. உடைத்து, தீக்கிரையாக்கப்பட்ட ஓவியங்களின் மதிப்பை யாராலும் கணிக்க முடியாது. பஜ்ரங் தளம் அமைப்பினரின் அதீதக் கோபத்திற்கு ஒரு வாரப் பத்திரிக்கையில் வெளியான படம் ஒன்றுதான் காரணமாக இருந்தது. ‘விசார் மிம்ன்ஸா’ எனும் இந்தி பத்திரிக்கையில் உசைன் வரைந்த சரஸ்வதி ஓவியத்தை வெளியிட்டு இவனெல்லாம் மனுஷனா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் உசைன் வரைந்த ஓவியம் அது. திடீரென்று அது தேடியெடுக்கப்பட்டு பத்திரிக்கையில் பிரசுரமானதற்கும், நாடெங்கும் சர்ச்சைகளைக் கிளப்பியதற்கும் ஏதோ பின்னணி இருந்திருக்க வேண்டும். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் அப்போது இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேர்தல் நேரத்தில் எழுந்த சர்ச்சை என்பதால் அரசியல் கட்சிகள், முடிந்தளவு அதில் ஆதாயம் தேட நினைத்தார்கள். ஆகவே, அகமதாபாத்தைத் தாண்டி பல மாநிலங்களிலும் ஓவியத்தை முன்வைத்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அப்படி என்னதான் வரைந்திருந்தார்? சரஸ்வதியை உசைன் தன்னுடைய ஓவியத்தில் ஆடையில்லாதவராகக் காட்டியிருந்தார். ஆடையில்லாமல் பிறந்த மேனியில் கடலுக்கு அடியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் ஒரு பெண் உருவத்தைத்தான் சரஸ்வதியாக வரைந்திருந்தார். அவளது ஒரு கையில் தாமரை மலரும், மடியில் ஒரு வீணையும் வைக்கப்பட்டிருந்தது.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மறு பிரசுரம் செய்யப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு, இந்துத்துவ அமைப்புகள் கொதித்தெழுந்தார்கள். பஜ்ரங் தள் அமைப்பினரோடு வி.ஹெச்.பி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கொண்டன. சிவன், பார்வதியைக்கூட ஆடையில்லாமல் வரையலாம். சரஸ்வதியை எப்படி ஆடையில்லாமல் வரைவது? அதுவும் ஓர் இஸ்லாமியர், இந்துக்கடவுளை எப்படி ஆபாசமாக வரைவது? இதுதான் சர்ச்சையின் மையப்புள்ளி.

நிர்வாணம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. இந்துக் கடவுளர்கள் ஆடையில்லாமல் இருக்கும் சிலைகளும் ஓவியங்களும் குப்தர்கள் காலம் தொட்டு இந்தியா முழுவதும் காணக்கிடைக்கின்றன. சமணச் சிற்பங்களில் பெரும்பாலானவை நிர்வாணமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இந்துக் கடவுள்களில்கூட சிவனின் வடிவமான பைரவர் ஆடையில்லாமல் நிர்வாணமாக நிற்பது போல்தான் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கலை மரபில் பெரும்பாலான இந்தியக் கடவுளர்களின் உடல் பகுதி ஆடையில்லாமல்தான் காட்டப்பட்டிருக்கும். கடவுளர்களாக இருந்தாலும் பெண் உருவங்கள் கழுத்துக்குக் கீழே அணிகலன்களை மட்டுமே கொண்டிருப்பார்கள். சில நூறு ஆண்டுகளாகத்தான் கடவுளர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆடம்பரமான ஆடைகளை உடுத்தி, அதையே சித்திரமாகத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களைத் தாண்டி நாட்டின் பல பகுதிகளிலும் ஓவியர் உசைனின் ஓவியத்தைக் கண்டித்து இந்துத்துவ அமைப்புகளும் கலாச்சாரக் காவலர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். ஏராளமான ஆர்ப்பாட்டங்களும் கண்டனக் கூட்டங்களும் நடைபெற்றன. அதே நேரத்தில் ஓவியர் உசைனின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவரது படைப்பு உரிமையை முடக்கி, படைப்புகளைச் சேதப்படுத்துவதைக் கண்டித்து அவருக்கு ஆதரவாகவும் சிலர் களத்தில் இறங்கினார்கள்.

மகாராஷ்டிராவில் அப்போது சிவசேனா ஆட்சியில் இருந்தது. சரஸ்வதியை இழிவுபடுத்திய ஓவியர் உசைன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றது. சிவசேனா அனுப்பி வைத்த புகாரின் அடிப்படையில் ஓவியர் உசைன் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 295, 153 பிரிவுகளின்படி, மத நம்பிக்கைகளுக்குக் களங்கம் விளைவித்ததாகவும், மதக்குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதற்குச் சதி செய்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உசைனின் ஓவியங்கள் மீதான தாக்குதலை முதல் ஆளாகக் கண்டித்தவர், அக்பர் பதம்சி. அவரும் உசைன் போல் நாடறிந்த நவீன ஓவியர். குஜராத்தைச் சேர்ந்த இஸ்லாமியர். உசைன் போல் அவரும் முன்பு ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இரண்டு காதலர்களை ஆபாசமாக வரைந்ததற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். மும்பையில் தன்னுடைய ஜகாங்கீர் ஆர்ட் காலரியில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் காதலியின் மார்பு மீது காதலன் கை வைத்திருப்பதுபோல் அவர் வரைந்திருந்ததுதான் சர்ச்சைக்குக் காரணம். நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. அதுவே பல நவீன ஓவியர்களுக்கு நிம்மதியளித்தது.

உசைனின் கலைக்கூடம் தாக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் ஊர்வலம் நடந்தது. கலைஞர்கள், படைப்பாளிகள், ஓவியர்கள் கலந்து கொண்டார்கள். படைப்பாளிகளின் கருத்துரிமையைப் பாதிப்பதாகக் கண்டித்தார்கள். மாற்று உடைக்குக்கூட வழியில்லாமல் துவைத்த துணி உலரும்வரைக் காத்திருந்து, திரும்ப அதையே உடுத்திக்கொள்ளும் பெண்கள் வாழும் நாட்டில் அழகிப்போட்டி நடத்துவதும், பேஷன் ஷோ நடத்துவதும்தான் ஆபாசமானது என்பது படைப்பாளிகளின் கருத்து.

ரவிக்கை அணிவது என்பதே இஸ்லாமியப் பண்பாட்டிலிருந்து வந்ததுதான். மாறிவரும் நாகரிக உலகில் ரவிக்கை அணிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பழைய காலத்திற்குத் திரும்ப முடியுமா? நாகரிகம் என்பதை அந்தந்தச் சூழலும், அவரவர் பார்வை மட்டுமே தீர்மானிக்கிறது என்று படைப்பாளிகள் கருத்துத் தெரிவித்தார்கள். பஜ்ரங் தள், வி.ஹெச்.பி., சிவ சேனா போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், பா.ஜ.க. பிரச்னையிலிருந்து சற்று விலகியிருந்தது. உசைனுக்கு எதிரான விமர்சனங்களுக்கும், அவரது ஓவியங்கள் அழிக்கப்பட்டதற்கும் பாஜகவின் தலைவர் அத்வானி கண்டனம் தெரிவித்திருந்தார்.

நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமாகிக்கொண்டிருந்தது. லண்டனில் இருந்த உசைன், தன்னுடைய ஓவியத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை. அதன்மூலம் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் வருத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டார். உசைன் மன்னிப்பு கேட்டுவிட்டதாக பஜ்ரங் தள் திருப்தியடைந்தது. சிவசேனா, வி.ஹெச்.பி உள்ளிட்ட மற்ற அமைப்புகளுக்கு அவரது விளக்கம் திருப்தியளிக்கவில்லை. விஜயதசமிக்குள் சரஸ்வதி சம்பந்தப்பட்ட ஓவியங்கள் அனைத்தையும் உசைன் அழித்துவிடவேண்டும் என்று கெடு விதித்தார்கள்.

‘எனக்கு மனிதர்களைவிடக் கலைதான் முக்கியமானது. ஓவியங்களைத் தீட்டுவது மட்டுமே என்னுடைய வேலை. என்னுடைய பணியைச் சரியாகச் செய்வதன் மூலமாக மகிழ்ச்சி அடைகிறேன். நான் வரைந்த ஓவியங்களைப் பத்திரமாக வைத்திருப்பதா அல்லது கிழித்தெறிவதா என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். எதுவாக இருந்தாலும் எனக்கு வருத்தமில்லை’ என்றார், உசைன்.

அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு உசைனின் ஓவியங்கள் மீதான சர்ச்சைகள் அவ்வப்போது தொடர்ந்தன. பாரத மாதா ஆடையின்றி நிற்பதுபோல் உசைன் வரைந்த ஓவியமும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. 2006ல் இந்தியாவை விட்டு வெளியேறியவர், 2011ல் மறையும்வரை துபாய், லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்கச் சுற்றி வந்தார். பின்னர் கத்தாரில் சில காலம் இருந்தார். ஆனால், இறுதிவரை இந்தியாவுக்கு வரவேயில்லை.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *