Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #23 – நான் ஒரு கதாநாயகி!

மறக்கப்பட்ட வரலாறு #23 – நான் ஒரு கதாநாயகி!

நான் ஒரு கதாநாயகி!

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் என்.டி.ஆருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தபோது ஆந்திராவே ஆச்சர்யப்பட்டது. என்.டி.ஆருக்கு ஒரு மெகா சிலை! குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை மிஞ்சும்படியாக அமைக்கப்படும். என்.டி.ஆர் நினைவாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்படும். அதன் மூலம் சிலை கட்டுவதற்கான நன்கொடைகள் பெறப்படும் என்று மருமகனார் அதிரடியாக அறித்தார்.

ஏற்கெனவே ஆந்திரா முழுவதும் ஏகப்பட்ட என்.டி.ஆர் சிலைகள் திறக்கப்பட்டாலும் ஆந்திராவின் அதிசயமாக ஒரு சிலை நிறுவவேண்டும் என்பதும் அதில் என்.டி.ஆர் நினைவிடம், அவருடைய திரை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையைச் சித்தரிக்கும் காட்சியகம், அவரது உடைமைகள், அன்றாடம் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தையும் மக்களுக்குக் காட்சிப்படுத்துவது என்று விரிவான திட்டமாக நீண்டது. பட்ஜெட்தான் பிரச்னை. ஆயிரம் கோடி!

குடிநீருக்காக மக்கள் தவிக்கிறார்கள், வயல்கள் வறண்டு கிடக்கின்றன. சில லட்சங்களை இழப்பீடாகத் தந்தால்கூட நூற்றுக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டு வரமுடியும் என்கிற நிலையில் எதற்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டவேண்டும்? இதெல்லாம் வெட்டிச் செலவு என்றும் விமர்சனம் எழுந்தது.

ஆந்திராவின் அடையாளம் என்.டி.ஆர் என்பதில் சந்தேகமில்லை. அவருக்குச் சிலை வைத்துத்தான் மக்களுக்கு நினைவூட்டவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக இருந்தவர். 60 வயது வரையிலும் நடித்துக் கொண்டிருந்தார். 60 வயதில் அரசியலுக்கும் வந்தார். தனிக்கட்சி ஆரம்பித்தார். ஆறே மாதத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தினார்.

ஆந்திராவின் ஒவ்வொரு வீட்டிலும் என்.டி.ஆரின் படம் இருக்கிறது. மக்கள் மனதிலிருந்து யாராலும் அவரை அகற்ற முடியாது. அவருக்குப் பதிலாக ஆந்திராவின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட வேறு சில தலைவர்களை முன்னிறுத்தலாம். பொட்டி ஸ்ரீராமுலு, பிரகாசம் பந்துலு, அல்லூரி சீத்தராமா ராஜீ போன்றவர்களுக்கு நினைவிடம் அமைப்பது நியாயமாக இருக்குமென்பது விமர்சகர்களின் கருத்து.

தன்னுடைய மாமனாருக்கு மருமகன் செய்யும் நன்றிக்கடன் என்றாலும் அதன் பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் கணக்குகள் இருந்தன. என்.டி.ஆருக்கு ஜாதி, இனம், மதங்களைக் கடந்த ஓர் ஓட்டுவங்கி உண்டு. அதைச் சிந்தாமல் சிதறாமல் தன்வசப்படுத்துவதுதான் சந்திரபாபு நாயுடுவின் நோக்கமாக இருந்தது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது!

தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம்போல் என்.டி.ஆர் நினைவாக அண்ணா உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. என்.டி.ஆர் ஆதரவாளர்கள் சந்திரபாபு நாயுடு பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்கிற கவலை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்கிற துடிப்பில் இருந்த ஒய்.எஸ்.ஆர். கட்சி, லட்சுமி சிவபார்வதியைக் கட்சிக்குள் கொண்டு வந்தது. அவரை கட்சியின் துணைச் செயலாளராகவும் ஆக்கியது.

லட்சுமி சிவபார்வதி, என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி. என்.டி.ஆர் தன்னுடைய 70வது வயதில் லட்சுமி சிவபார்வதியை மணந்து கொண்டார். அவரது வருகைக்குப் பின்னர் என்.டி.ஆரின் குடும்பம் மட்டுமல்ல அவரது கட்சியும் இரண்டாக உடைந்து போனது. அவரது மறைவுக்குப் பின்னர் மோதல் உச்சத்தை அடைந்தது. அன்று ஆரம்பித்த மோதல், இன்றுவரை தொடர்கிறது.

‘என்.டி.ஆருக்கு நினைவகம் கட்டுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சொல்வது வேடிக்கை. அவர் எந்நாளும் அதைச் செய்யப்போவதில்லை. ‘என்.டி.ஆருக்கு பாரத ரத்னா தந்து கௌரவிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சந்திரபாபு நாயுடு தடையாக இருக்கிறார்’ என்று வாஜ்பாய் தன்னிடம் தெரிவித்ததாகவும் லட்சுமி சிவபார்வதி ஒருமுறை குறிப்பிட்டார்.

மாமனாருக்கு மருமகன் செய்த துரோகம்! என்.டி.ஆர் மறைந்த நாள் முதல் லட்சுமி சிவபார்வதி அதைத்தான் தொடர்ந்து சொல்லிவருகிறார். தனக்கொரு நினைவகமும், சிலையும் வைக்கவேண்டும் என்பது உயிரோடு இருந்தபோதே என்.டி.ஆரின் கனவாக இருந்தது. அதை நனவாக்குவதுதான் லட்சுமி சிவபார்வதியின் லட்சியம்.

என்.டி.ஆர் இறுதி ஊர்வலத்திலேயே சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது. அதில் பங்கேற்க லட்சுமி பார்வதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்கள் பார்த்த காட்சிகள், ஆந்திராவில் மறுபடியும் அரங்கேறின. கட்சியும் ஆட்சியும் சந்திரபாபு நாயுடுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. என்.டி.ஆரின் மகன்களும், மகள்களும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

என்.டி.ஆரின் மறைவில் மர்மம் இருக்கிறது. அதுவொரு இயற்கை மரணமல்ல என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தன. விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்கள். அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அரசு முடிவெடுத்தது. அது கட்சியிலும், குடும்பத்திலும் பல சலசலப்புகளை ஏற்படுத்தியது. வேறென்ன, சொத்துத் தகராறுதான்!

என்.டி.ஆர் மரணம்பற்றியோ, அவரைப்பற்றியோ தொடர்ந்து பேசுவதில் தனக்கு அரசியல் ஆதாயம் இல்லையென்று சந்திரபாபு நினைத்தார். முடிந்தவரைத் தவிர்த்துவிட நினைத்தார். என்.டி.ஆருக்குத் துரோகம் இழைத்துவிட்டு கட்சியைக் கபளீகரம் செய்துவிட்டதாக விமர்சனம் இருந்த நேரத்தில் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது தனக்கு நல்லது என்று நினைத்தார். ஆனால், லட்சுமி சிவபார்வதி விடுவதாக இல்லை.

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருந்த லட்சுமி பார்வதி வீட்டிற்கு எதிரே என்.டி.ஆரின் மியூசியம் இருந்தது. அவரது திரைப்பட விருதுகள், உடைகள், படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. லட்சுமி சிவபார்வதியின் பராமரிப்பில் இருந்த இடத்தைக் கைப்பற்றுவதற்கு என்.டி.ஆரின் குடும்பத்தினரிடையே போட்டி இருந்தது. சொத்து சண்டை, ஒரே நாளில் தெருவுக்கு வந்துவிட்டது.

லட்சுமி சிவபார்வதி பெங்களூருக்கு வந்திருந்த நேரத்தில், என்.டி.ஆரின் மகன்களான சாய்கிருஷ்ணாவும் ராமகிருஷ்ணாவும் அதிரடியாக உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள். என்.டி.ஆர் உயிரோடு இருந்தவரைக் குறிப்பாக அவர் அரசியலில் இருந்த 14 ஆண்டுகள் முழுவதும் அவரது குடும்பத்தினர் யாரும் எந்தச் சர்ச்சையிலும் சிக்கியதில்லை. அவர்களை அரசியலில் ஈடுபட என்.டி.ஆர் அனுமதித்ததில்லை.

விஷயத்தைக் கேள்விப்பட்ட லட்சுமி சிவபார்வதி, பெங்களூரில் இருந்து திரும்பியதும் வீட்டின் முன் தர்ணாவில் இறங்கினார். இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டன. லட்சுமி சிவபார்வதியை அங்கிருந்து வெளியேற்றுவது என்.டி.ஆர் குடும்பத்தினரின் திட்டம். அதற்கு சந்திரபாபு நாயுடு அரசின் ஆதரவும் இருந்தது.

என்.டி.ஆர் தன்னுடைய முதல் மனைவியின் பெயரில் ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து, அதன் மூலமாக ஒரு மியூசியம் அமைக்க தன்னுடைய இரண்டாவது மனைவிக்கு அனுமதி தந்திருந்தார். சினிமாவிலும் அரசியலிலும் தனக்குக் கிடைத்த விருதுகள், உடைமைகள் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம்.

மியூசியத்தைக் கைப்பற்றுவதில் குடும்பத்தினரிடையே போட்டோ போட்டி. காவல்துறையினர் வந்து தடியடி நடத்தினார்கள். லட்சுமி சிவபார்வதியின் ஆதரவாளர்களுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் தன்னுடைய ஆதரவாளர்களோடு திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த என்.டி.ஆரின் இன்னொரு மகனான ஹரிகிருஷ்ணா, மியூசியத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சுவரைக் கட்டத் தொடங்கினார்.

ஹைதராபாத் நிஜாமிடமிருந்து என்.டி.ஆர் வாங்கிப் பயன்படுத்திய விலை உயர்ந்த பழைய காரை தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். மற்ற மகன்களும் உள்ளே நுழைந்து ஆளுக்கொரு பொருள்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஆகவே, வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தை நாடிய லட்சுமி சிவபார்வதி, தடை உத்தரவு பெற்று வந்தார்.

என்.டி.ஆருக்காக எதையும் செய்வேன் என்றார். சிம்ம கர்ஜனா என்னும் பெயரில் கண்டன ஊர்வலம் நடத்தினார். லட்சுமி சிவபார்வதியைக் காங்கிரஸ் கட்சி தூண்டிவிடுவதாகத் தெலுங்கு தேச கட்சித் தலைவர்கள் பதிலடி தந்தார்கள். ஆனால், லட்சுமி சிவபார்வதி எதையும் கண்டுகொள்ளவில்லை. தீய சக்தியான சந்திரபாபு நாயுடுவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதுதான் அவரது ஒரே அரசியல் லட்சியம், கொள்கையாக இருந்தது.

என்.டி.ஆர் என்பவர் நடிகர் மட்டுமல்ல, கடவுளாக மதிக்கப்பட்டவர். அவர் கிருஷ்ணர் வேடத்தில் உள்ள திரைப்பட ஸ்டில் வீட்டு வாசலிலும், பூஜையறையிலும் வைக்கப்படுமளவுக்குப் பொதுமக்களின் பேராதரவைப் பெற்றிருந்தவர். அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பித்து, ஒன்பதே மாதங்களில் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பியவர்.

நான்கு முறை ஆந்திராவின் முதல்வராக இருந்திருக்கிறார். தெலுங்கு தேசம் கட்சியை ஆந்திராவின் பிரதானக் கட்சியாக குறுகிய காலத்தில் உருவாக்கியவர். தேசிய முன்னணி கூட்டணியில் முக்கியமான தூணாகவும் இருந்தவர். பிரதமர் பதவிக்கான போட்டியிலும் இருந்திருக்கிறார். ஆனால், என்.டி.ஆரின் கடைசிக்காலம் பரிதாபகரமாக இருந்தது.

லட்சுமி சிவ பார்வதி, அவருடைய ரசிகையாக அறிமுகமானவர். அவருடைய கணவர் வீரகாந்தம் சுப்பா ராவ், ஒரு ஹரிகதை சொல்லும் கலைஞர். ஆனால், என்.டி.ஆரின் சுயசரிதையை எழுத வந்த லட்சுமி சிவபார்வதி அவரது வீட்டிலேயே தங்கிவிட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் என்.டி.ஆரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் லட்சுமி சிவபார்வதி அரசியலிலும் ஈடுபாடு காட்டினார். என்.டி.ஆருக்கு அடுத்தபடியாகக் கட்சியின் அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கும் இடத்தில் இருந்தார். அதுவரை கட்சியின் நம்பர் டூவாக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கும் லட்சுமி சிவபார்வதிக்கும் பனிப்போர் ஆரம்பித்தது.

அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்த என்.டி.ஆர் முதல்வரானபோது, போகுமிடங்களுக்கெல்லாம் அவருடன் வந்தவர், லட்சுமி சிவபார்வதி. ஆனால், இதெல்லாம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த பத்தே மாதங்களில் கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்த சந்திரபாபு நாயுடு, என்.டி.ஆரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

என்.டி.ஆர் ஆரம்பித்த கட்சியும் அவரது விசுவாசிகளும் அவருக்கு எதிராகிவிட்டார்கள். அதற்குக் காரணம், லட்சுமி சிவபார்வதி!

என்.டி.ஆரின் ஆறு மகன்களும், நான்கு மகள்களும் சிவபார்வதிக்கு எதிராக இருந்தார்கள். ஆனாலும், என்.டி.ஆர் உயிரோடியிருக்கும்வரை லட்சுமி சிவபார்வதியை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. இறுதிக் காலங்களில் அவரது குடும்பத்தினருக்கும் அவருக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது.

என்.டி.ஆர் மறைவுக்குப் பின்னர், என்.டி.ஆர் தெலுங்குதேசம் என்னும் தனிக்கட்சியை ஆரம்பித்த லட்சுமி பார்வதி, 42 இடங்களில் தன்னுடைய ஆதரவாளர்களைப் போட்டியிட வைத்தார். ஆனால், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறமுடியவில்லை.

அப்போது மாநில அரசியலில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் சந்திரபாபு நாயுடு புகழின் உச்சத்தில் இருந்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் அமைப்பாளராக இருந்து, பிரதமரை முடிவு செய்தார். தென்னிந்தியாவின் நவீன முதல்வராக இருந்து, ஆந்திர மாநிலத்தின் ஐ.டி துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். ஊடகங்கள், அவரைத் தலைமைச் செயல் அதிகாரி என்றே குறிப்பிட்டார்கள்.

1998ல் சந்திரபாபுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க பாஜக முயற்சி செய்தது. அதில் லட்சுமி சிவபார்வதியும் இணைந்துகொண்டார். 20 இடங்களில் தன்னுடைய கட்சி போட்டியிடுமென்று பாஜகவை அணுகினார். ஆனால், பா.ஜ.க. 4 இடங்களை மட்டுமே தந்தது. பா.ஜ.கவை விட லட்சுமி சிவபார்வதிக்கு ஆந்திர வாக்காளர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருந்தது.

10 சதவிகித வாக்கு வங்கி அவரிடம் இருந்தது. பா.ஜ.கவிடமோ 5 சதவிகிதம் வாக்குகள்தான் இருந்தன. ஆனாலும், அவரால் பா.ஜ.கவை பணிய வைக்க முடியவில்லை. கூட்டணியில் கிடைத்த இடங்களில் போட்டியிடுவதற்கு ஒப்புக்கொண்டபோதே அவரது தோல்வி ஆரம்பமாகிவிட்டது. செகந்திரபாத் தொகுதியில் போட்டியிட்ட லட்சுமி சிவபார்வதி தோற்றுப்போனார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அவரது கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பெயரளவில்தான் கூட்டணி இருந்தது. தோல்விக்குப் பின்னர் அவருடைய கட்சி கலகலத்துப் போனது. என்.டி.ஆரோடு நெருக்கமாக இருந்தவர்கள் குறிப்பாக தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் விலகிப்போய் தனிக்கட்சி ஆரம்பித்தார்கள். அதோடு லட்சுமி சிவபார்வதியின் அரசியலும் தற்காலிக முடிவுக்கு வந்தது.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து என்.டி.ஆர் பெயரை முன்னிறுத்தியதால் அதற்குப் போட்டியாக லட்சுமி சிவபார்வதி களத்தில் இறக்கப்பட்டார். எந்த காங்கிரஸ் கட்சியை என்.டி.ஆர் எதிர்த்து அரசியல் செய்தாரோ அதே கட்சியில் பின்னாளில் சேர்ந்தார். சந்திரபாபு நாயுடுவையும் என்.டி.ஆர் குடும்பத்தையும் எதிர்ப்பதற்காகவே ஒய்.எஸ்.ஆர் கட்சியிலும் சேர்ந்தார். இறுதிவரை அவரால் இன்னொரு ஜெயலலிதாவாக வரமுடியவில்லை. ஏன் ஜானகி ராமச்சந்திரனாகக்கூட ஆக முடியவில்லை.

0

பகிர:
nv-author-image

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *