மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடந்த கண்ணாமூச்சி ஆட்டம் பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையான அன்றிரவு ஆரம்பித்த ஓட்டம் அது. 3 வாரத்திற்குள் எப்படியும் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிவிடலாம் என்று நம்பிக்கையோடு கொடுங்கையூரில் காத்திருந்த சிவராசன் & கோவுக்கு இனி தப்பிக்க வழியில்லை என்கிற நிலை ஏற்பட்டது.
டேங்கர் லாரியில் மறைந்து பெங்களூருக்குத் தப்பித்தார்கள். அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் வராமல் வேறு வழியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட முயற்சியெடுத்து, நிலைமை கைகூடி வருவதற்குக் காத்திருந்தார்கள்.
பெங்களூரின் புறநகர்ப்பகுதியான கோனானகுண்டேவில் ஒளிந்திருந்த ஒற்றைக்கண் சிவராசனை, சிறப்பு புலனாய்வுக் குழு சரியாக மோப்பம் பிடித்தது. டெல்லியிலிருந்து வந்திறங்கிய சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவர், சி.பி.ஐயின் இயக்குநர் என அத்தனைப்பேரும் பெங்களூரில் முகாமிட்டிருந்தார்கள். அதிரடிப்படைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. எப்படியாவது சிவராசனை உயிருடன் பிடித்தாக வேண்டும்!
36 மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் சிவராசன் & கோ வின் உயிரற்ற உடல்களை மட்டுமே பார்க்க முடிந்தது. 2500 காவல்துறையினரும், 40 அதிரடிப்படை வீரர்களும் அந்த வீட்டைச் சூழ்ந்திருந்த நிலையில் சிவராசனும் அவனுடன் இருந்த 7 விடுதலைப்புலிகளும் தற்கொலை செய்துகொண்டார்கள். ராஜிவ் படுகொலையில் மனித வெடிகுண்டுவான தணுவை இயக்கிய ஒத்தைக் கண் சிவராசனின் தற்கொலையால் புலனாய்வு விசாரணைவுக்குப் பெரிய பின்னடைவு.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில், அதன் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மானும், பெண் விடுதலைப்புலி தலைவியான அகிலாவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தயார் செய்தார்கள். முதலில் உளவுத்துறையைச் சேர்ந்த சிவராசனை சதித்திட்டத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.
ராஜிவ் காந்தியைக் கொலை செய்யும் மனித வெடிகுண்டாக தணுவையும், மாற்று ஏற்பாடாக சுபாவையும் தயார் செய்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் என்று சி.பி.ஐ. புலனாய்வுக் குழு தன்னுடைய விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால், கொலையாளி கும்பலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும்படியான நேரடி ஆதாரத்தை சி.பி.ஐ. குழுவால் சமர்ப்பிக்க முடியவில்லை.
மனித வெடிகுண்டான தணு ஒரு விடுதலைப்புலி என்பதைச் சந்தேகமின்றி நிரூபித்தால் மட்டுமே ராஜிவ் படுகொலை வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தமுடியும் என்கிற நிலை ஏற்பட்டிருந்தது. தணுவைப் பற்றியும், சிவராசனைப் பற்றியும் புலன் விசாரணையை முடுக்கிவிட்டார்கள். தணு என்பவர் யார்? அதுதான் அவரது உண்மையான பெயரா? எங்கிருந்து வந்தார்? ஏன் செய்தார்?
கொலையாளி யார் என்பது ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அன்றிரவே தெரிய வந்துவிட்டது. மனித வெடிகுண்டான தணுவின் முகமும் வெளியாகிவிட்டது. அவரது உருத்தெரியாத முகமும், பத்திரிக்கையாளர் ஹரிபாபு எடுத்த போட்டோவும் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதால் தணு யார் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால், அவர் எங்கிருந்து வந்தார்? தமிழ்நாட்டில் எங்குத் தங்கியிருந்தார்? அவரது பின்புலம் என்னவென்பது யாருக்கும் தெரியவில்லை.
விசாரணை ஆரம்பமானது. சிவராசனையும் சுபாவையும் எப்படியும் உயிரோடு பிடித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு தேடிக்கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலிகள், சி.பி.ஐ. குழுவால் கைது செய்யப்பட்டவர்கள் என நிறையப் பேரிடம் விசாரித்தாகிவிட்டது. புலிகளின் உளவுத்துறை, அரசியல் பிரிவில் பணியாற்றியவர்கள், விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் தேசிய ஆதரவாளர்கள் எனப் பல்வேறு இடங்களில் பலமுறைகளில் விசாரித்தும் க்ளூ கிடைக்கவில்லை.
தணு, ஒரு சாதாரணப் பெண் விடுதலைப்புலி அல்ல. உளவுத்துறையில் சிவராசனுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவர் என்பது சற்றுத் தாமதமாகவே தெரிய வந்தது. ராஜிவ் கொலைக்குப் பின்னர் கொடுங்கையூரில் பதுங்கியிருந்துவிட்டு, சிவராசன் பெங்களூர் தப்பிச் சென்றபின்னரே பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
சிவராசன் தங்கியிருந்த கொடுங்கையூர் வீடு, சோதனையிடப்பட்டது. அங்கு வீட்டின் சமையலறைக்குக் கீழே தோண்டப்பட்ட பள்ளத்தில் வயர்லெஸ் செட் கிடைத்தது. கூடவே சிவராசன் பயன்படுத்திய டைரி, வயர்லெஸ் ஆன்டெனாவின் பாகங்களும், வயர்லெஸ் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பேட்டரியையும் சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியது.
விடுதலைப்புலிகளின் உளவுத்துறையினருக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றங்களை வழிமறித்துக் கேட்டபோது, பொட்டு அம்மான் அனுப்பிய சில செய்திகள் கிடைத்தன. பத்திரிகைகளில் வெளியாகியிருந்த தணுவின் போட்டோவை யாராவது அடையாளம் கண்டுகொண்டார்களா என்பதைத் தெரிந்துகொள்வதில் பொட்டு அம்மான் ஆர்வம் காட்டியிருந்தார். ஹரிபாபுவின் காமிராவில் இருந்த போட்டோக்கள், உடனடியாகப் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் என்று விடுதலைப்புலிகள் எதிர்பார்த்திருக்கவில்லை.
ராஜிவ் படுகொலை சம்பவம் நடந்து முடிந்த நான்காவது நாளன்று பொட்டு அம்மான் அனுப்பிய வயர்லெஸ் செய்தியில், சி.பி.ஐ. நடத்திய விசாரணைபற்றிய விபரங்களைக் கேட்டிருக்கிறார். கூடவே, பத்திரிகைகளில் பிரசுரமான அன்புவின் புகைப்படம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறதா என்று யாரையோ கேட்டிருந்தார். அன்பு என்பது விடுதலைப்புலிகள் வட்டாரத்தில் தணுவுக்கு இருந்த பெயராகக் கருதப்பட்டது. ஆனால், ஆதாரமில்லை.
1991 மே மாத ஆரம்பத்தில் சென்னைக்கு வந்த தணு, கொடுங்கையூரில் தங்கியிருக்கிறார். அங்குதான் சிவராசன், தணுவிடம் தன்னுடைய திட்டத்தை விவரித்திருக்கிறார். முதலில் ஒத்திகை பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். கே.கே. நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார்கள். பின்னர் வி.பி.சிங் சென்னை வந்தபோது, நந்தனத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தணுவும் சிவராசனும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று வி.பி.சிங்கிற்கு மாலை அணிவிக்கவும் முடிந்திருக்கிறது. கொடுங்கையூரில் தங்கியிருந்தபோது இந்திய அமைதி காக்கும் படையால், தான் பாதிக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவத்துடனான யுத்தத்தில் தன்னுடைய சகோதரரை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் தணு. ஆனால், எங்கேயும் தன்னுடைய உண்மையான பெயரைக் குறிப்பிடவில்லை.
அன்புதான் தணுவென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவுக்கு இருந்தது. ஆகவே, ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார்கள். அதில் கிடைத்த தகவல்களின்படி, தணுவின் உண்மையான பெயர் முதல் அவரது குடும்பத்தினர் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
ஈழத்து நேதாஜி என்று அழைக்கப்பட்டவர், ஆ. ராசரத்தினம். இலங்கையின் சாவகச்சேரியைச் சேர்ந்தவர். தமிழ் ஈழக் கனவோடு தமிழ்நாட்டுக்கு வந்து ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என்னும் ஆயுதப்படையை ஆரம்பித்தவர். கடைசிவரை தமிழ்நாட்டிலேயே இருந்து இங்கேயே மறைந்தவர். ஆரம்பக்காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அமைதி வழிப் போராட்டங்களில் கலந்துகொண்ட ராசரத்தினம் பின்னாளில் ஆயுதமேந்தினார்.
இலங்கையில் இருந்த காலத்தில் தமிழ் பேசும் அரசு ஊழியர்களுக்காக தனியாக தொழிற்சங்கம் ஆரம்பித்தார். அரசு ஊழியர்களுக்குச் சிங்களம் கட்டாயப்படுத்தப்பட்டபோது தன்னுடைய அரசுப் பணியிலிருந்து விலகி, போராளியாக உருவெடுத்தார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோடு நெருங்கிப் பழகிய ராசரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பலரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து, இங்குள்ள அரசியல்வாதிகளிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒரு சிங்கள அமைச்சரைக் குண்டு வைத்துத் தாக்க முயற்சி செய்ததாக இலங்கை காவல்துறையினர் ராசரத்தினத்தைத் தேடியபோது, அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். அதேநேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த பிரபாகரனுடன் தொடர்பு ஏற்பட்டது. பிரபாகரனின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர், ராசரத்தினம். ஆங்கிலம் தெரியாத பிரபாகரனுக்கு வந்த கடிதங்களையும், செய்திகளையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பைத் தொடங்கும் முயற்சியில் இருந்த பிரபாகரனுக்கு குருவாக இருந்தார். இவரது அமைப்பின் பெயரில் இருந்த புலிகள் என்னும் வார்த்தையைத்தான் பிரபாகரனும் தன்னுடைய இயக்கத்தின் பெயரில் சேர்த்துக்கொண்டார். 50 ஆயிரம் தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்பது ராசரத்தினத்தின் நோக்கமாக இருந்தது. பின்னாளில் பிரபாகரன் மட்டுமல்ல மற்ற போராளிக்குழுக்களின் தலைவர்களும் அதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்கள்.
சென்னையில் தங்கியிருந்த ராசரத்தினம், 1975ல் ஆஸ்த்துமா வியாதியால் இறந்து போனார். அவரது இறப்பிற்குப் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு அவரைத் தங்களுடைய முன்னோடியாகக் கொண்டாடியது. ராசரத்தினம் டைரிக்குறிப்பு என்னும் அவரது அனுபவக் குறிப்புகள் விடுதலைப்புலிகளுக்குக் கட்டாயப் பாடமானது.
ஜூன் 10, 1991 அன்று ராசரத்தினம் பிறந்த ஊரான சாவகச்சேரியில் முத்தமிழ் விழா நடந்தது. அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரில் கலந்து கொண்டார். தமிழ் ஈழப் போராட்டத்தில் உயிர் நீத்த எட்டு தமிழ் ஆளுமைகளும் அவர்களது குடும்பத்தினர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள். ராசரத்தினம் நினைவாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட ராசரத்தினத்தின் மனைவி, அவரது கணவரின் நினைவாக தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.
ராசராத்தினம் மறைந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரை கௌரவிக்க வேண்டிய அவசியம் ஏன் என்கிற கேள்வி எழக்கூடும். எப்போதுமில்லாமல் மிகப்பெரிய அளவில் முத்தமிழ் விழாவை நடத்த என்ன காரணம்? அதை ஏன் சாவகச்சேரியில் நடத்தவேண்டும்? கொடுங்கையூரில் பதுங்கியிருந்த சிவராசனை ஜூன் 10ஆம் தேதிக்குள் எப்படியாவது யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று ஏன் முடிவு செய்யப்பட்டது? சிவராசனை மீட்பதற்காக கடல்புலிகளின் படை ஏன் அனுப்பப்பட்டது? அது ஏன் விபத்துக்குள்ளானது? ஏகப்பட்ட கேள்விகள்.
எந்தக் கேள்விக்கும் நேரடியான பதில் இல்லை. மனித வெடிகுண்டுவான தணு, மறைந்த ராசரத்தினத்தின் மகள். அவருடைய இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகள். தணுவின் இயற்பெயர், தேன்மொழி ராசரத்தினம். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பத்தாண்டுக் காலம் பணியாற்றியிருக்கிறார். அதை நேரடியாக அங்கீகரிக்க முடியாத நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமை இருந்தது. அதன் காரணமாகவே அவரது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.
தணு, உலகின் மிகப்பிரபலமான மனித வெடிகுண்டு என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீபெரும்புதூரில் ஹரிபாபு எடுத்த காமிராதான் அவரை வெளிக்காட்டியது. அந்த போட்டோ எடுக்கப்படாவிட்டால் தணு யார் என்பது கடைசிவரை யாருக்கும் தெரிந்திருக்காது.
ஹரிபாபுவின் காமிராவில் இருந்த முதல் படத்தில் பச்சை துப்பட்டா, காவி சல்வார் கம்மீஸ் உடையில் நிற்கும் தணு, கைகளில் சந்தன மாலையை வைத்திருக்கிறார். ஹரிபாபு காமிராவின் கடைசிப்படத்தில் தணுவின் தலைப்பகுதியும் அதில் இருந்த கனகாம்பரமும் பளிச்சென்று தெரிகின்றன. அவரது உடல்பகுதி கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், சிதைந்து போன முகமும் அதில் கருகிப்போன தலைமுடியும் கூடவே கனகாம்பரமும் இருந்தன.
0