Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

மறக்கப்பட்ட வரலாறு #27 – சகன் புஜ்பால்

சகன் புஜ்பால்

அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும்இல்லை என்பார்கள். யாருக்குப் பொருந்துகிறதோ, இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே பொருந்தும். தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது, நேற்று வரை எதிரும் புதிருமாக இருந்தவர்களோடு ஒரே நாளில் கூட்டணி சேர்வது, ஒரு கட்சியிலிருந்து தடாலடியாக இன்னொரு கட்சிக்கு மாறுவது. இவையெல்லாம் ஆட்சியைக் கவிழ்க்கவும், புதிய ஆட்சியை அமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தன.

இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம், மகராஷ்டிரா. அரசியல் ஸ்திரத்தன்மையற்ற மாநிலமும் அதுதான். மும்பை, நாக்பூர் என இரு தலைநகரங்களைக் கொண்ட மாநிலமும் வடக்கு, தெற்கு என இரண்டு பிரிவுகளாகவே பிரிந்து கிடக்கிறது. பால் தாக்கரேவும் ஷரத் பவாரும் தனித்துவமான அரசியல் ஆளுமைகள் என்றாலும் மகராஷ்டிராவின் வடக்கு பகுதியில் அவர்களுக்கு கணிசமான செல்வாக்கு இருந்ததில்லை. மாநிலம் முழுவதும் கொண்டாடப்படக்கூடிய வலுவான ஆளுமைகள் ஏனோ மகராஷ்டிராவில் உருவானதில்லை. கடந்த 40 ஆண்டுகளில் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தவர்கள் 6 பேர் மட்டுமே. ஆனால், மகராஷ்டிராவிலோ 16 பேர். ஆகவே, கவிழ்ப்பு முயற்சிகளும், திடீர் தலைவர்களும் மகராஷ்டிரா அரசியலில் சர்வசாதாரண நடைமுறை. அப்படிப்பட்ட அரசியல் சூழலில் நம்பர் டூவாகவே கடைசியாக இருந்து, தலைமையோடு முரண்பட்டு, கவிழ்ப்பு முயற்சிகள் கைகூடி வந்தாலும் அதை மறுத்து நின்றவர், சகன் புஜ்பால்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என மூன்று முக்கியமான கட்சிகளிலும் நம்பர் டூ இடத்தில் இருந்திருக்கிறார். மும்பை மாநகராட்சியின் மேயராக இருந்திருக்கிறார், இருமுறை துணை முதல்வராகவும் இருந்திருக்கிறார். ஒரு சாதாரணத் தொண்டராக இருந்து, கட்சியின் நம்பர் டூவாக உயர்ந்து, துணை முதல்வராகவும் இருந்தவர் புஜ்பால். ஊழல் குற்றச்சாட்டினால் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரே பெரிய தலைவரும் இவர்தான்.

சகன் புஜ்பாலின் கட்சித்தாவல்தான் 90களில் அதிகமாக பேசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட அரசியல் நிகழ்வாகச் சொல்லமுடியும். அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைத்தார்கள். ஆனால் சகன் அதற்குப் பின்னர்தான் அவரது அரசியலில் உச்சத்தைத் தொட்டார். அடுத்தடுத்து மூன்று கட்சிகளில் சேர்ந்து பணியாற்றினாலும், எல்லா இடத்திலும் நம்பர் டூவாக இருந்தார். கொள்கை, கோட்பாடு பற்றியெல்லாம் அவர் நினைத்துப் பார்த்ததில்லை. அதுதான் ஊழல் அரசியல்வாதி என்கிற பெயரையும் வாங்கிக் கொடுத்தது.

1967 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கட்சித் தாவல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அப்போது நடைபெற்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 176 சுயேட்சை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின்னாளில் அத்தனை பேரும் பிரதான அரசியல் கட்சியில் இணைந்து காணாமல் போய்விட்டார்கள். பதவியை வைத்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டியிருந்தது. இது ஆட்சிக்கவிழ்ப்புக்கு இட்டுச் சென்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் தேர்தலுக்குப் பின்னர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்கிற விவாதங்கள் அதிகமாகின.

ராஜிவ்காந்தி காலத்தில் கொண்டு வரப்பட்ட கட்சித் தாவல் தடைச்சட்டம், ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்சியிலிருந்து வெளியேறி, இன்னொரு கட்சியில் பெரும் பதவிகளைப் பெற்று, மீண்டும் தாய் கட்சிக்கே திரும்புவதை வட மாநிலங்களில் அடிக்க பார்க்க முடிந்தது. தென்னிந்திய அரசியலோ ஆளுமைகளின் கைப்பிடியில் இருந்தது.

தென்னிந்திய அரசியலில் கட்சியின் நம்பர் ஒன் தலைவர்தான் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். பொதுக்குழு, செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்வார்கள். ஒரு கட்சியின் நம்பர் ஒன் தலைவருக்கும் இன்னொரு கட்சியின் நம்பர் ஒன் தலைவருக்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்து வந்தது. நம்பர் 2 ஆட்களுக்கு இங்கே செல்வாக்கு இருந்ததில்லை.

மகராஷ்டிராவிலோ தலைகீழ் நிலை. இரண்டாம் மட்ட அரசியல்வாதிகளுக்குக் கூடுதல் செல்வாக்கு உண்டு. சகன் புஜ்பால் அப்படிப்பட்டவர்தான். நம்பர் டூவாக இருந்து, அனைத்துக் கட்சிகளில் தலைமைகளுக்கும் சிம்ம சொப்பனமாக அமைந்தது மட்டுமல்லாமல் தான் சார்ந்த கட்சித்தலைமைக்கே சவால் விடும்வகையில் நடந்து கொண்டவர்.

சிவசேனாவோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியோ, எந்தக் கட்சியில் சேர்ந்து இருந்தாலும் தலைமையை எதிர்த்து, ஒன் மேன் ஷோ நடத்தியவர். அவரது அன்றாட அரசியல் அதிரடியாகவே இருந்தது. தொண்டர்களோடு நேரடித் தொடர்பில் இருப்பதை விரும்பியவர். சிவசேனா கட்சியில் துடிப்பான இளைஞராக இருந்தார். காய்கறி கடைக்காரராக வாழ்க்கையை ஆரம்பித்தவர், கட்சியில் சேர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாக்கரேவின் வலதுகரமாக இருந்தார்.

மும்பை மாநகராட்சி, சிவசேனையின் கோட்டை. அங்கே சிவசேனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு மேயராகப் பணியாற்றினார். சிவசேனாவில் இருந்தபோதே பால் தாக்கரேவுடன் பனிப்போர் இருந்து வந்தது. ஆனால், திடீரென்று கட்சியை விட்டு விலகுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 1990ல் சிவசேனா, மகராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக உருவெடுத்தபோது, கட்சியின் நம்பர் டூவான தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்குமென்று புஜ்பால் நினைத்திருந்தார். ஆனால், தாக்கரேவின் தேர்வு, முரளி மனோகர் ஜோஷியாக இருந்தது.

புஜ்பால் அதிருப்தியில் இருப்பது தெரிந்த காங்கிரஸ் களமிறங்கியது. மும்பையின் பெரும் தொல்லையாக இருந்த சிவசேனாவைப் பலவீனப்படுத்தி, ஆட்களைத் தங்கள் பக்கம் இழுக்க ஆரம்பித்தார்கள். காங்கிரஸ் கட்சியின் மகராஷ்டிரா முகமாக இருந்த ஷரத் பவார், புஜ்பாலைப் பயன்படுத்தி சிவசேனா கட்சியை உடைக்க விரும்பினார். சிவசேனாவை விட்டு வெளியே வந்த புஜ்பால், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அமைச்சரானார்.

புஜ்பாலின் துரோகத்தைச் சிவசேனையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சராக பதவியேற்று வீடு திரும்பியவரால் அடுத்து வந்த நான்கு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.வீட்டைச் சுற்றிலும் சிவசேனை தொண்டர்கள் கொலைவெறியோடு காத்திருந்தார்கள். ஆளுங்கட்சி அமைச்சராக இருந்தும் கூட சிவசேனையை எதிர்கொள்ள முடியவில்லை. அன்றே முடிவு செய்தார், ஒருமுறையாவது பால் தாக்கரேவைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும்.

பால்தாக்கரே மீதான புஜ்பால் வெறுப்பு, அன்று முதல் ஆரம்பமானது. தாக்கரேவைச் சீண்டுவதில் முதல் இடத்தில் இருந்தார். முன்னாள் சிவசேனா கட்சிக்காரர் என்பதால் தாக்கரே எந்த இடத்தில் எப்படிப் பேசுவார், என்ன தவறுகளைச் செய்வார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். புஜ்பாலைச் செயல்பட விடாமல் சிவசேனைத் தொண்டர்களும் அவருக்குப் பதிலடி தந்தார்கள். போகுமிடமெல்லாம் புஜ்பால் எதிர்ப்பைக் கையாள வேண்டியிருந்தது. அடுத்து வந்த தேர்தலில் பரிதாபமாகத் தோற்றுப் போனார்.

1995ல் சிவசேனா, பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்து முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. சிவசேனையின் வெற்றி, ஷரத்பவாரை விட சகன் புஜ்பாலுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தன்னைச் சிறைக்கு அனுப்புவதுதான் சிவசேனா கூட்டணி அரசின் முதல் வேலையாக இருக்கும் என்பது புஜ்பாலுக்குத் தெரியும். எதற்கும் தயாராக இருந்தவரை ஷரத் பவார், எதிர்க்கட்சித் தலைவராக்கினார். அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவராக புஜ்பால் கூட்டணி அரசைக் கிடுகிடுக்க வைத்தார்.

மகராஷ்டிராவின் நம்பர் ஒன் அரசியல்வாதிகளான பால் தாக்கரேவும், ஷரத் பவாரும் எப்போதும் ரிமோட் அரசியல் நடத்துவதில் கெட்டிக்காரர்கள். முதல்வராக இருந்த முரளி மனோகர் ஜோஷியையும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த புஜ்பாலையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆனால், புஜ்பாலின் இலக்கு, எப்போதுமே பால் தாக்கரே மீதுதான் இருந்து வந்தது.

பின்னாளில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஷரத் பவார் வெளியேறி, தனிக்கட்சி ஆரம்பித்தபோது புஜ்பாலும் வெளியேறினார்.

ஷரத் பவார், புஜ்பாலை மாநிலத் தலைவராக்கினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தபோது, துணை முதல்வராக்கினார். இம்முறை புஜ்பால் கூடுதல் தீவிரத்துடன் சிவசேனாவை அணுகினார்.

ஷரத் பவார் எந்நாளும் பால் தாக்கரேவை எதிர்த்ததில்லை. ஆனால், புஜ்பால் போன்றவர்கள் சிவசேனாவோடு மோதுவதில் அவர் தலையிட்டதில்லை. அதுதான் தேசியவாத கட்சி இன்னும் உயிர்ப்போடு இருக்கக் காரணமாக இருக்கிறது. குறுகிய காலத்திலேயே மகராஷ்டிராவின் தெற்குப் பகுதியில் அனைத்துத் தேசியக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஷரத்பவாரின் கட்சிக்கும், தாக்கரேவின் கட்சிக்கும் இடையே கடுமையான அரசியல் போட்டி உருவானது.

யாராலும் செய்ய முடியாத விஷயத்தை புஜ்பால் செய்து முடித்தார். பால் தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு அனுப்பினார். 1992 இறுதியில் மும்பையில் நடந்த கலவரத்தில் தாக்கரேவின் நேரடி பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் தாக்கரேவை விடுவித்தாலும் எப்படியாவது தாக்கரேவை சிறைக்கு அனுப்புவது என்பதில் புஜ்பால் வெற்றி பெற்றுவிட்டார்.

மகராஷ்டிரா அரசியலில் தாக்கரேவைச் சிறைக்கு அனுப்பியவர் என்பதுதான் புஜ்பாலின் ஆகப்பெரிய சாதனை. அதற்குப் பின்னர்தான் அவருக்கு கஷ்ட காலம் ஆரம்பமானது. ஹவாலா மோசடியில் மாட்டிக்கொண்டவரை ஷரத் பவார் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல்களில் புஜ்பாலின் பெயரும் அடிபட்டது. மும்பை கல்வி அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த புஜ்பால் அதில் 177 கோடி ரூபாய் முறைகேடு செய்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் மீது ஹவாலா மோசடி வழக்கு உள்ளிட்ட ஏராளமான ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. டெல்லியில் மகராஷ்டிரா பவன் கட்டுமானத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததில் புஜ்பால் சம்பந்தப்பட்டிருந்தார். புஜ்பால் பெயரில் ஏராளமான அபார்ட்மெண்ட்கள், பங்களா, வணிகக் கட்டடங்கள் மும்பையில் குறிப்பாக தானே, பெல்லாபூர், லோனாவலா, நாசிக் போன்ற பகுதிகளில் இருந்தன.

அமலாக்கத்துறையினரால் புஜ்பால் கைது செய்யப்பட்டார். அவரைச் சிறைக்கு அனுப்பியது, சிவசேனா அல்ல. ஆம் ஆத்மி கட்சியினர். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவர் செய்த ஊழல் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சியினர், மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் பதிவு செய்தார்கள். சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் புஜ்பாய் கைது செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த புஜ்பால், தன்னுடைய 75து பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். வலது பக்கம் உத்தவ் தாக்கரேவும், இடது பக்கம் ஷரத் பவாரும் புடைசூழ மேடையில் அமர்ந்திருந்தார். இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் உற்சாகத்தோடு கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில் காணக்கிடைக்காத காட்சிகள்.

புஜ்பால், சிவசேனாவிலிருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் சேராமல் இருந்திருந்தால், சிவசேனா சார்பாக நிச்சயம் முதல்வராகியிருப்பார் என்றார், உத்தவ் தாக்கரே. ஆம். புஜ்பால் கடைசிவரை நம்பர் டூவாகவே இருந்தார். அவரைப் போன்ற நம்பகமான நம்பர் டூ ஆட்கள் தாக்கரேவுக்கும் ஷரத் பவாருக்கும் தேவைப்பட்டார்கள். இன்றும் தேவைப்படுகிறார்கள். மகராஷ்டிரா அரசியலில் ரிமோட்டுக்கு எந்நாளும் மவுசு உண்டு.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *