Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

மறக்கப்பட்ட வரலாறு #29 – நீக்கப்பட்டது ஏன்?

எம்.ஜி.ஆர்

தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார் என்பது மில்லினியம் குழந்தைகளுக்கும் தெரிந்த விஷயம்.

1972. அக்டோபர் 10 அன்று சென்னையில் தி.மு.கவின் தலைமை நிர்வாகிகள் கூடி, பொருளாளரும் புரட்சி நடிகருமான எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தபோது, எம்.ஜி.ஆர்., சத்யா ஸ்டுடியோவில் இதய வீணை படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் அதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

வெளியே காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்குப் பாயசம் வழங்கிய எம்.ஜி.ஆர்., கூடிய விரையில் நல்ல செய்தி தெரிவிப்பதாகச் சொன்னார்.

நீண்டநாட்களாகவே கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. பொதுக்குழு கூடப்போவதாக அறிவிப்பு வந்த நாள் முதல் முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இரண்டு நாட்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசியிருந்த விஷயங்கள் கட்சித் தலைமையைக் கோபமூட்டியிருந்தன.

‘அரசியலில் இன்னும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்கிறார்கள். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கேற்பதையே சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னும் அதிகமாக அரசியலில் ஈடுபட்டால் என்னவாகுமோ?

‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்றேன். உடனே ஒருவர், ‘நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?’ என்று கேட்டார். என்னால் சொல்ல முடியும். உன்னால் முடிந்தால் நீயும் சொல்லிக்கொள். உனக்குத் துணிவில்லை என்பதால் என்னைக் கோழை ஆக்கிவிடாதே’ என்றேன்.

‘தி.மு.கவுக்கு வாக்களியுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆட்சியில் ஊழல் இருக்காது; நேர்மையிருக்கும் என்று உறுதி கொடுத்தேன். அப்படி இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?

‘கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்வதற்கு அவர்களுக்குப் பயம். யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. ஆட்சியில் பங்கேற்பவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கணக்குக் காட்ட வேண்டும் என்கிறேன். யாருக்கு எத்தனை சொத்து என்று ஏன் பொதுக்குழுவில் கேட்கக்கூடாது?

‘ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக் காட்டு!’

வழக்கத்திற்கு மாறாக எம்.ஜி.ஆர். அதிரடியாகப் பேசியிருந்தார். கட்சியை உடைப்பது என்றொரு முடிவை எம்.ஜி.ஆர். எடுத்துவிட்டதாகடு கிசுகிசுக்கப்பட்டது. திருக்கழுக்குன்றத்துப் பேச்சு, முதல்வர் கருணாநிதியை மட்டுமல்ல அமைச்சர்களையும் காயப்படுத்திய பேச்சு என்பதால் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

சென்னையில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த தி.மு.கவின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் 12 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். இது தவிர சத்தியவாணி முத்து, ப.உ. சண்முகம், க. ராஜாராம் உள்ளிட்ட 26 பேர் கையெழுத்திட்ட தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கழகக் கட்டுப்பாட்டை மீறியதாக தி.மு.கவின் பொருளாளரான எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருப்பதாகவும், விளக்கம் தருவதற்குப் பத்து நாள் அவகாசமும் தரப்பட்டது. புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனைத் தற்காலிகமாக நீக்கம் செய்து, விளக்கம் தர பத்து நாள் அவகாசம் தரப்பட்டது.

எம்.ஜி.ஆர். கட்சியிருந்து நீக்கப்பட்ட செய்தி, அவரது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கலவரங்களும் கடையடைப்புகளும் நடந்தன. என்றாவது ஒருநாள் கட்சியிலிருந்து நீக்கப்படுவோம் அல்லது விலகிவிடுவோம் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும். ஆனால், அவரது ரசிகர்களுக்கு அதுவொரு பேரதிர்ச்சியாக இருந்தது. தி.மு.கவைத் தங்களது சொந்தக்கட்சியாகவே நினைத்தார்கள்.

எம்.ஜி.ஆர். படம் வெளியீடுகளில் திரையரங்க வளாகங்களில் தி.மு.க. கொடி பறக்கும். சினிமா போஸ்டரில் அண்ணா படமெல்லாம் அச்சடித்திருப்பார்கள். 1971 தேர்தலுக்குப் பின்னர் அரசியலிலும் சினிமாவிலும் எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்த நேரத்தில்தான் முதல்வரோடு அவருக்கு மோதல் ஏற்பட்டது. ஒரே நாளில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, வெறும் நடிகராக்கப்பட்டது அவரது ரசிகர்களைத் தாண்டி மக்கள் மத்தியில் பெரிய அனுதாப அலையை உருவாக்கிவிட்டது.

ஓர் அரசியல் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும், முதல்வராக வேண்டும். தனிக்கட்சி தொடங்கவேண்டும் என்றெல்லாம் எம்.ஜி.ஆர். எந்நாளும் நினைத்ததில்லை. சினிமாவுலகில் தன்னுடைய ஆதிக்கம் குறையக்கூடாது என்று நினைத்தார். எம்.ஜி.ஆரின் அரசியல் செல்வாக்கு அவரது சினிமா செல்வாக்கைத் தக்க வைத்திருந்தது. தேர்தல் அரசியலில் இருந்தாலும் எந்நாளும் முழு நேர அரசியல்வாதியாக அவர் தன்னை நினைத்துக் கொண்டதில்லை.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி வெளிவந்ததும் உற்சாகமாக தன்னுடைய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார் எம்.ஜி.ஆர். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மக்களைண் சந்தித்து, ‘இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்’ என்றார். தன்னுடைய ரசிகர்கள் புடை சூழ காஞ்சிபுரத்திற்கு வந்தவர், ‘என்னுடைய தர்மயுத்தத்தை அங்கீகரித்தால் அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்தற்குச் சமமாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று மக்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். ‘ஆம், ஆதரிக்கிறோம்’ என்று மக்களும் கோஷமிட்டார்கள்.

ஓர் அரசியல் கட்சியிலிருந்து ஒரு தனிநபர் நீக்கப்பட்டார் என்பதற்காக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிப்பது அதுதான் முதல் முறை. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் வன்முறையில் இறங்கினார்கள். சாலை மறியல், ஊர்வலம், கடையடைப்பு அடுத்து வந்த நான்கு நாட்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடந்தது. தி.மு.க. அமைச்சர்களால் காவல்துறை பாதுகாப்பின்றிப் பொதுவெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது.

எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து நீக்கியதை நியாயப்படுத்தி கருணாநிதி நிறையப் பேசவும், எழுதவும் வேண்டியிருந்தது. ‘15 லட்சம் உறுப்பினர்களையும், 18 ஆயிரம் கிளைகளையும் கொண்ட கழகம். என்னுடைய 27 ஆண்டுகால நண்பரைக் காப்பாற்றுவதை விடக் கழகத்தைக் காப்பாற்ற வேண்டியது முக்கியம். கழக ஆட்சியில் ஊழல் இருப்பதாகப் பொதுவிடத்தில் பேசியதால் கட்சியின் தலைமை நிர்வாகிகள் எடுத்த முடிவு. அதில் நான் தலையிடப்போவதில்லை’ என்றார்.

‘தி.மு.க. கட்சிக்குள் நடைபெறும் மோதல். இதில் நான் கருத்து சொல்வதற்கில்லை’ என்றார் காமராஜர். ஆனால், ராஜாஜி, எம்.ஜி.ஆரை ஆதரித்தார். ‘எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கியது அண்ணாதுரையைக் கட்சியை விட்டு நீக்கியது போன்ற செயல்’ என்றார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ஊழல் மலிந்து விட்டதாக சுயராஜ்யாவில் கட்டுரைகள் வந்தன. எம்.ஜி.ஆரை நேரில் சென்று சந்தித்த ராஜாஜி, ‘பத்தாண்டுகளுக்கு முன்னரே நீங்கள் வெளியே வந்திருக்க வேண்டும்’ என்றார். இது போதாதா, பெரியாருக்கு?

மயிலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது பற்றி பெரியார் பேசினார். ‘தி.மு.கவின் பொருளாளரே இவர்தான். சொத்துக் கணக்கு தெரிய வேண்டுமென்றால் ரகசியமாகக் கேட்டிருக்கலாம். பொது மேடையில் பேசியதால் கழகத்துக்குத்தான் கேடு செய்தார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டால் கழகத்தின் கதி என்ன? எதிர்காலம் இருக்குமா? கட்சியை விட்டு வெளியில் போவதற்கு சாக்குத் தேடியது போல் போய்விட்டு, இப்போது குப்பை போடுகிறார்கள்’ என்றார்.

தி.மு.கவின் செயற்குழுவும், அடுத்தடுத்து பொதுக்குழுவும் கூடி எம்.ஜி.ஆரைக் கட்சியை விட்டு நீக்கியது சரியென்று தீர்மானம் நிறைவேற்றின. பெரியாருக்கு நெருக்கமானவர்கள் எம்.ஜி.ஆரிடம் பேசி சமாதானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். பெரியார் திடலுக்கு, பெரியாரை நேரில் சந்திக்க வந்த எம்.ஜி.ஆரிடம் பெரியார் பேசினார். எம்.ஜி.ஆர். பெரியாரிடம் எந்த உறுதியும் தரவில்லை. பெரியார் என்ன பேசினார் என்பதும் தெரியவில்லை.

மறுநாள் சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்று கொண்டிருந்த பெரியாரின் வேனை விழுப்புரம் அருகே எம்.ஜி.ஆர். ரசிகர்கள் வழிமறித்தார்கள். பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள், கருணாநிதி ஒழிக என்று முழக்கமிடும்படி வற்புறுத்தினார்கள். பெரியார் கோபத்தின் உச்சிக்கே சென்றார். தனக்கெதிராக எம்.ஜி.ஆர். தன்னுடைய ரசிகர்களைத் தூண்டிவிடுவதாக நினைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் அமளிதுமளியெல்லாம் ஓய்ந்த பின்னர் எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். தி.மு.கவிலிருந்து தான் விலகிவிட்டதாகவும், புதுக்கட்சி துவங்கப்போவதாகவும் அறிவித்தார்.

சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆர்., அங்கே புதுக்கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் நடுவே வெள்ளைத் தாமரையின் உருவம் இடம்பெற்றிருந்தது.

இந்திரா காந்தி எதிர்பார்த்ததுபோல் ஒரு புதுக்கட்சி பிறந்திருப்பதாக விடுதலை, சுதேசமித்திரன் என அனைத்துப் பத்திரிக்கைகளும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தன. கருணாநிதியின் தலைமை மாறினால் மட்டும் போதாது, தி.மு.கவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பேசினார். ராஜாஜியின் ஆதரவும், காமராஜரின் மௌனமும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை மாற்றியமைத்தன. கருணாநிதி ஙண் எம்.ஜி.ஆர். என்னும் இரு துருவ அரசியலுக்கு அடித்தளமிடப்பட்டது.

எம்.ஜி.ஆரின் வருமானம், அவரது இன்கம் டாக்ஸ் பிரச்னை பற்றியெல்லாம் தி.மு.க. தலைவர்கள் மட்டுமல்ல பெரியாரும் கேள்வி எழுப்பினார்கள். இரண்டு ஆண்டுகளாக பொருளாளராக இருந்தவர், இதுவரை கேட்காத கணக்கை ஏன் இப்போது கேட்கிறார் என்றார்கள். அண்ணாவின் மருத்துவச் செலவுக்கு எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து உதவியதாகச் சொன்னபோது, அது அரசு செய்த உதவியா, எம்.ஜி.ஆருடைய வருமான வரிக்கணக்கில் எழுதப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் வந்தது.

எம்.ஜி.ஆரின் கருணாநிதி எதிர்ப்பு என்பது தி.மு.க. எதிர்ப்பாக மாறிப்போனது. ஒரு வருடத்திற்கு 15 படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். தன்னுடைய ரசிகர்களையும் துடிப்பாக வைத்திருந்தார். ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ஒரு பட வெளியீடு. தி.மு.கவினரை விட ரசிகர்கள் உற்சாகமாகவும், கட்சிப்பணிகளில் ஆர்வத்துடனும் ஈடுபட்டு வந்தார்கள்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மன்றம் என்றும் கட்டுக்கோப்பானதாக இருந்ததில்லை. யார் தன்னுடைய ரசிகர்கள், யார் தி.மு.கவினர் என்று பிரித்துப் பார்த்ததில்லை. கட்சிக்காக எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.ஆருக்காகக் கட்சியையும் ஆதரித்து வந்தவர்கள் ஏதாவது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள்.

சில இடங்களில் எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டன. நிறைய இடங்களில் தி.மு.க. கொடி, பேனர்களை ரசிகர்கள் அடித்து, உடைத்தனர். அமைச்சராக இருந்த மன்னை நாராயணசாமி ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, உள்ளே புகுந்த எம்.ஜி.ஆர். ரசிகர்களின் குழப்பத்தால் அவரது மண்டை உடைந்தது.

ராஜாஜியும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்தார்கள். பெரியார், எம்.ஜி.ஆர். ரசிகர்களைக் கடுமையாக விமர்சித்தார். பணக்காரர்களும் பார்ப்பனர்களும் சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக இறங்கியிருப்பதாகப் பேசினார். ‘இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது. தி.மு.கவுக்குக் கலைத்துறையில் தொடுப்பு இருந்ததால் எம்.ஜி.ஆர். அங்கிருந்து அரசியலுக்கு இழுக்கப்பட்டார். பின்னர் எப்படியோ பொருளாளராகவும் ஆகிவிட்டார்.

தனக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று எம்.ஜி.ஆர். கேட்டாராம். வரம்பு மீறிப் பேசிவிட்டாராம் என்றெல்லாம் காரணத்தை அடுக்குகிறார்கள். இதெல்லாம் தி.மு.கவை விட்டு வெளியேறுவதற்கான சாக்குதான். எம்.ஜி.ஆரைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் பத்திரிகைகள், எம்.ஆர். ராதா அவரைச் சுட்டபோது கண்டுகொள்ளவில்லை. கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆர். கிளம்பிவிட்டார் என்றதும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர்களே, உங்கள் தலையில் நீங்களே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்ளாதீர்கள்’ என்றார் பெரியார்.

எம்.ஜி.ஆருடனான சந்திப்பு, அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ரசிகர்களின் எதிர்ப்பும் பெரியாரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரை விமர்சிக்க வைத்தது. டெல்லியிலிருந்து ஆட்கள் இயக்குவதால் எம்.ஜி.ஆர். அதற்கேற்ப நடந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர். இந்திரா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிடுவார் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வார் என்றெல்லாம் விடுதலையில் தொடர்ந்து எழுதப்பட்டன.

‘எம்.ஜி.ஆர். ஒரு கலைஞர். எனக்கு அந்தத் துறையில் அனுபவம் இல்லை. சுயமரியாதை உள்ள நடிகரின் நாடகம்தான் நான் பார்ப்பேன். இரண்டொரு படங்கள் பார்த்திருக்கிறேன். சிவாஜி கணேசன், எம்.ஆர் ராதா யாரென்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், எம்.ஜி.ஆரை எனக்குத் தெரியாது.

இரண்டொரு நிகழ்ச்சிகளில் பார்த்தபோது வணக்கம் தெரிவித்தார். நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன். இன்கம்டாக்ஸ் தொல்லை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆகவே குழப்பம் வருவது இயற்கைதான்.இனி கழகத்திற்கு இவரால் தொல்லை ஏற்படும். இனி கலைத்துறையிலும் வீழ்ச்சியடைவார். பார்ப்பனர்களின் ஆதரவோடு எத்தனை நாள் இவரால் செயல்படமுடியும்’ என்றெல்லாம் பெரியார் பேசினார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப் பெரியார் மீது கோபம் வராவிட்டால்தான் ஆச்சர்யம்.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. பாதிக்கு மேல் மலையாளிகளின் ஆதிக்கம்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் துரோகத்தாலும், டில்லி அரசின் சூழ்ச்சியாலும் தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து போனால், தமிழனுக்கு வாய்ப்பு ஏது? கலவரம் செய்ய மாணவர்களைத் தூண்டி விடுகிறார்கள். தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க எம்.ஜி.ஆர். கருவியாக இருக்கிறார் என்று அடுத்தடுத்துத் தொடர்ந்து பெரியார் பேசி வந்தார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பெரியாருக்கு எதிராக உக்கிரமானார்கள். திண்டுக்கல்லில் இருந்த பெரியார் சிலையை உடைக்க முயற்சிகள் நடந்தன. தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்குக் குறி வைக்கப்பட்டது.

மக்கள் மத்தியிலும் கட்சிக்குள்ளேயும் எம்.ஜி.ஆருக்கு அனுதாபம் இருப்பதை கருணாநிதி நன்றாகவே புரிந்து கொண்டார். அதற்கேற்றபடி சமரசங்களில் இறங்கினார். முன்னர் பல்வேறு காரணங்களுக்காகக் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களைத் திரும்பச் சேர்த்துக்கொண்டார். அண்ணாவின் முக்கியமான தளபதியாக இருந்து, கருணாநிதியிடம் இருந்து தள்ளியிருந்த மதியழகனை, தேடிப்போய் சபாநாயகர் பதவியைக் கொடுத்து அரவணைத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகப் போய், ஆளுநரிடம் மனு கொடுத்தார். நான்கு மாதம் முன்பு வரை ஆட்சிக்கு ஆதரவாக இருந்துவிட்டு இப்போது டெல்லியின் கைப்பாவையாக இருந்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய கருணாநிதி, எம்.ஜி.ஆரின் புகார்ப்பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் விளக்கம் தந்து அதைப் புத்தகமாகவும் வெளியிட்டுவிட்டார்.

மதியழகன் மாறிவிட்டார், தனக்கு ஆதரவாக இருப்பார் என்று கருணாநிதி நினைத்தது தவறாகிவிட்டது. சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தலாம் என்று சட்டசபையில் மதியழகன் அறிவித்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. ஆயிரம் விளக்குத் தொகுதியில் இருந்த அவரது வீட்டின் முன்பு தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதியழகனின் யோசனை சரிதான் என்று பத்திரிகைகளும் எழுதின.

அரசியல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தன்னை அழித்திட முயன்றதால் புதுக்கட்சி தொடங்கி முடிவு செய்ததாகக் கூறினார், எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட சோதனையாக அவரது ரசிகர்கள் மாற்றியமைத்தார்கள். சேலத்தில் முதல்வர் கருணாநிதி பேச இருந்த கூட்டத்தில் நுழைந்து, மின்சார டிரான்ஸ்பார்மரைக் கொளுத்தினார்கள், கோபமடைந்த பெரியார், எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களைத் தடை செய்ய வேண்டும். ‘தி.மு.கவை ஒழிக்க முயன்று தோற்றவர்களின் கையாள்தான் எம்.ஜி.ஆர். எதைச் சொன்னால் மக்கள் ஏமாறுவார்களோ அதைச் சொல்லி எம்.ஜி.ஆர். மக்களை ஏமாற்றுகிறார்’ என்றார்.

திண்டுக்கல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதும், திண்டுக்கல் மக்களின் தீர்ப்புதானே தவிர, தமிழ்நாட்டின் தீர்ப்பல்ல என்றார், கருணாநிதி. பெரியாரும் திண்டுக்கல் வெற்றியைப் பெரிதுபடுத்தவில்லை. திண்டுக்கல் முடிவு எதிர்பாராதது. என்ன காரணம் என்னவென்பது தெரியவில்லை. சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பெரியாரிடமிருந்து உப்புச் சப்பில்லாத அறிக்கையொன்று விடுதலையில் வந்தது.

பெரியாரின் 95வது பிறந்தநாள் வந்தபோது பெரியார் திடலுக்கு வந்த எம்.ஜி.ஆர்., அவருக்கு மாலை சூட்டி 5000 ரூபாய் அன்பளிப்பு வழங்கினார். பெரியாருக்கு சென்னையில் ஒரு சிலை அமைக்கப்போவதாகக் குறிப்பிட்டார். பின்னாளில் முதல்வரானதும் முதல் வேலையாக பெரியாருக்கு ஒரு சிலையை வைத்து, திறப்பு விழா நடத்தினார்.

எம்.ஜி.ஆர். ஏன் கட்சி ஆரம்பித்தார்? இன்னொரு 50 ஆண்டுகளானாலும் விடை தெரியாத கேள்வி அது. தி.மு.கவினரின் சொத்துக்கணக்கு வெளியிடச் சொன்ன எம்.ஜி.ஆர். கடைசிவரை தன்னுடைய சொத்துக் கணக்கை வெளியிட்டதில்லை. தன்னுடைய கட்சியினரையும் சொத்துக்கணக்கு வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதில்லை. அவருக்குப் பின் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த காரணத்தால்தான் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts