Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

கோவை குண்டுவெடிப்பு

பிப்ரவரி 14, 1998, மாலை 3.30 மணி. அப்படியொரு மோசமான தொடர் குண்டுவெடிப்பை தமிழ்நாடு அதுவரை கண்டதில்லை. கோவை, ஆர்.எஸ். புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அத்வானி பேசுவதாக இருந்தது. பொதுக்கூட்ட மேடைக்கு அருகே 100 மீ தூரத்தில் வைக்கப்பட்டிருந்த முதல் குண்டு மிகச் சரியாக 3.50 மணிக்கு வெடித்தது. திருவனந்தபுரத்தில் இருந்து வரவேண்டிய விமானம், தாமதமானதால் அத்வானி உயிர் தப்பினார்.

வெடிகுண்டு வெடித்ததால் பிளாட்பாரத்தில் உணவுக்கடை நடத்திய ஒரு பெண்மணி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். 15 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டன. முதல் குண்டுவெடித்து 40 நிமிடங்கள் கழித்து உக்கடம் பகுதியில் இரண்டாவது குண்டு வெடித்தது. அங்கிருந்த ஜவுளிக்கடையில் துணியெடுப்பதற்காக வந்த மூன்று பேர், கையோடு எடுத்து வந்திருந்த சூட்கேஸை வைத்துவிட்டு வெளியேறிய ஐந்து நிமிடங்களில் குண்டு வெடித்தது.

அத்வானி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியான ஆர்.எஸ். புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடங்கள் தேர்வு செய்யப்பட்டதிலும், பாதுகாப்புக் குளறுபடிகள் எதுவும் நடந்ததாகவும் செய்திகள் இல்லை. அதே இடத்தில் ஒரு வாரத்திற்கு முன்புதான் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்திருந்தது. அன்றைய தினம் மதியம் முதல் பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்திற்கு வந்து சேர ஆரம்பித்துவிட்டார்கள்.

பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகளும், பத்திரிக்கையாளர்களும் அத்வானியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்தார்கள். சரியாக 4.15 மணிக்குக் கோவைக்கு வந்து சேர்ந்த அத்வானியிடம் குண்டுவெடிப்பு பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அத்வானி நேரில் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து திருச்சிக்குக் கிளம்பிச் சென்றார்.

அதே நேரத்தில் கோவையின் காந்திபுரம் பஸ் நிலையம், கோவை ரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங், பா.ஜ.க. நிர்வாகி நடத்தி வந்த ஒரு டிராவல் ஏஜென்ஸி அலுவலகம், ஒப்பனக்கார வீதியில் இருந்த ஒரு நகைக்கடை, ரத்தினபுரியில் இருந்த பா.ஜ.கவின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் சிக்கி, சிகிச்சையில் இருந்த நோயாளிகள் பலியானார்கள்.

அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏராளமானவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். சிலரது உடல் பாகங்கள் கருகிக் கிடந்தன. சிலருக்கு கண் பார்வை பறிபோயிருந்தது. கோவையின் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிந்தன. ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே இறந்துபோய், அவர்களது உடல் நேரடியாக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கோவையில் அறக்கட்டளை நடத்திக் கொண்டிருந்த நிறுவனங்களும், தனியார் கல்லூரிகளும் தங்களுடைய வளாகத்தைக் காயமடைந்தவர்கள் தங்கிக் கொள்ள அனுமதித்தார்கள். இயற்கைச் சீரழிவின்போது மக்களுக்குச் செய்யப்படும் சமூக சேவைதானே என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். கோவையின் அன்றைய சூழல் வித்தியாசமாக இருந்தது. யாராவது பெரிய சூட்கேஸ் அல்லது லக்கேஜ் உடன் பயணித்தால் அவர்களைச் சந்தேகத்தோடு பார்க்குமளவுக்கு கோவைவாசிகள் பீதியில் இருந்தார்கள்.

அடுத்து வந்த மூன்று நாட்களும் கோவை மாநகரத்திற்கு மோசமான நாட்களாக அமைந்துவிட்டன. அடுத்தடுத்து 11 குண்டுகள் வெடித்தன. 12 கி.மீ. சுற்றளவு கொண்ட கோவை மாநகரம் முழுவதும் தவித்துப் போனது. பெரும்பாலான வெடிகுண்டுகள் ஆர். எஸ். புரம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளிலும் அங்கிருந்து பா.ஜ.க. தொண்டர்கள் வெளியேறும் இடங்களிலும் வைக்கப்பட்டிருந்ததால் குண்டுவெடிப்பின் இலக்கு யாரென்று தெளிவாகத் தெரிந்தது.

குண்டுவெடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களான அல் உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டி அமைப்புகள் தடை செய்யப்பட்டன. அன்றிரவே தேடுதல் வேட்டை ஆரம்பமானது. கோவையில் இன்னும் எத்தனை வெடிகுண்டுகள் வெடிக்குமோ என்று உளவுத்துறையால் கூட முடிவுக்கு வரமுடியாத நிலையில் அத்தனையையும் தேடியெடுத்து, செயலிழக்க வேண்டிய அவசியமானது.

கோவையின் கோட்டை மேடு பகுதியில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஜெலாட்டீன் குச்சிகளும், டைம் பாம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. அவசர அவசரமாக வெடி மருந்துகளை இன்னொரு இடத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த ஆறு அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தார்கள். அதற்குள் வெடி மருந்து வெடித்து, ஆறு பேரும் அங்கேயே பலியானார்கள். காவல்துறையினருக்குப் படுகாயம் ஏற்பட்டது.

கோவை மாநகரம் முழுவதும் கார், மோட்டார் சைக்கிள் எனப் பல இடங்களில் ஏற்கெனவே குண்டு வைத்திருப்பதால் அவற்றை மீட்பதற்கு ராணுவத்தின் உதவி நாடப்பட்டது. தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களோடு, தமிழ்நாடு கமாண்டோ படையும் களத்தில் இறங்கி, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள்.

திருமால் தெருவில் இருந்த ஒரு கல்யாண மண்டபத்தில் தண்ணீர் டிரம்மில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. அதில் பேட்டரியோடு, டெட்டனேட்டர் சகிதம் வெடிகுண்டு இருந்தது. டிரம்மின் கைப்பிடியில் ரோட்டரி ஸ்விட்ச் ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. மக்கள் கூடும் இடங்களில் எளிதாக எடுத்துச் செல்லும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதே தெருவில் இருந்த தர்காவில் இன்னொரு வெடிகுண்டு இருந்தது. பொதுக்கூட்டம் முடிந்து திருமால் தெரு வழியாகத் திரும்பி வருபவர்கள் வெடிகுண்டில் சிக்காமல் தப்பிக்க வாய்ப்பில்லை. 70 கிலோ வெடி மருந்து நிரப்பப்பட்ட கார் ஒன்றும் அதே பகுதியில் இருந்த லோகமான்யா தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தி, வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய நான்கு நாட்கள் தேவைப்பட்டன.

கோவை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. கீழக்கரை, மேலப்பாளையம், நாகப்பட்டினம், திண்டுக்கல், தேவக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோயில், மேலப்பாளையம், உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் நடந்த சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மறுநாளே இந்து அமைப்புகளும் அல் உம்மா இயக்கத்திற்கு எதிராகக் களத்தில் இறங்கின. கோவையில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கடைகள், இருப்பிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பதிலடியில் இறங்கினார்கள். கோவையில் இருந்த மார்க்கிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த அல் உம்மா தலைவர் பாட்ஷா, கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் வீட்டிலிருந்தும் ஏராளமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக கொடுங்கையூரில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெலாட்டீன் குச்சிகள், பைப் வெடிகுண்டு, பெட்ரோல் வெடிகுண்டு, எலெக்ட்ரிக்கல் டெட்டனேட்டர், ஏராளமான கத்திகளும், வாள்களும் கைப்பற்றப்பட்டது.

அல் உம்மா தவிர ஜிகாத் கமிட்டியைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். மத ரீதியான கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு இந்து முன்னணி நிர்வாகிகளும், கோவையில் மையம் கொண்டிருந்த சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும் 1998ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருந்தன. மும்பை குண்டுவெடிப்பிற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலடியாகவே தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதேபோல், கோவை குண்டுவெடிப்பிற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த தாக்குதல்களிலும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதற்குப் பதிலடியாகத்தான் கோவையிலும் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

90களின் ஆரம்பம் தொடங்கி கோவை மாநகரத்தில் மத ரீதியிலான மோதல் இருந்து வந்தது. பழனி பாபா கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் ஆறு பேர் கொலை செய்யப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து அவ்வப்போது பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் நடந்து வந்தன. காவலர் செல்வராஜ் கொலையான பின்னர் நடந்த மோதலில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து கோவையின் கோட்டை மேடு பகுதி பதற்றமான பகுதியாகவே இருந்து வந்தது.

கோவையில் நடந்த மத மோதல்கள் பற்றி விசாரிக்க நீதிபதி பி.ஆர். கோகுல கிருஷ்ணன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. குண்டுவெடிப்புச் சம்பவத்தையும் சேர்த்து நீதிபதி பி.ஆர் கோகுல கிருஷ்ணனின் கமிஷன் விசாரிக்க வேண்டியிருந்தது. விசாரணையின் முடிவில் மத ரீதியிலான அடிப்படைவாத அமைப்புகள் கோவை மாநகரத்தில் பெற்றிருந்த வளர்ச்சி வெளிச்சத்திற்கு வந்தது.

குண்டு வெடிப்பிற்கான நோக்கம் எதுவென்பதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. பா.ஜ.க. தலைவர் அத்வானி இலக்காக இருக்கக்கூடும் என்கிற ரீதியில் விசாரணை நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்ததுபோல், கோவையில் அத்வானியைக் கொல்ல மனித வெடிகுண்டு அனுப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்தது. ஒரு பிரதமருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அத்வானிக்குச் செய்து தரப்பட்டன என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

குண்டுவெடிப்பு நடந்த மறுநாள் கருணாநிதியும் மூப்பனாரும் கோவைக்குச் சென்றார்கள். பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். குண்டுவெடிப்பு குறித்து விளக்கம் அளித்த முதல்வர் கருணாநிதி, தேர்தலைத் தடுத்து நிறுத்த செய்யப்பட்ட சதி என்றார். சதியின் கரங்கள், மாநில எல்லையைத் தாண்டி நீண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அதே நாளில் கேரள மாநிலம் திருச்சூரில் குண்டுவெடிப்பு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டார்கள். அல் உம்மாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கோணத்தில் விசாரணை தொடர்ந்தது.

அல் அம்மாவுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்குமான தொடர்புகள் குறித்தும் விசாரணை நடந்தது. இது ஐஸ்ஐ சதியாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உள்துறை அமைச்சராக இருந்த இந்திரஜித் குப்தா தெரிவித்தார். கோவையின் சட்டம் ஓழுங்கு நிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் கருணாநிதியின் அரசு தடுமாறியிருந்தது. நீறு பூத்த நெருப்பாக இருந்த மத ரீதியிலான மோதல்களைத் தடுக்கத் தவறியதாக கடும் விமர்சனம் எழுந்தது.

கோவை குண்டுவெடிப்பு, தமிழக அரசின் உளவுத்துறையின் தோல்வியாகப் பார்க்கப்பட்டது. மும்பை கலவரத்திற்குப் பின்னர் மகராஷ்டிரா அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. அதையும் மீறி மும்பையில் குண்டுவெடிப்பு நடந்தது. ஆனால், கோவை விஷயத்தில் கருணாநிதி அரசு மெத்தனமாக இருந்துவிட்டது. முளையிலேயே கிள்ளிவிடாமல் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் வரை அலட்சியம் காட்டியதால் பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. .

ஓராண்டுக்கு முன்னர் நடந்த காவல்துறையின் வழக்கமான சோதனைகளில் அல் உம்மா இயக்கத்தவர்களிடம் வெடி மருந்துகளும் ஆபத்தை விளைவிக்கும் வெடிகுண்டுகளும் இருப்பது தெரிய வந்தது. ஆனால், ஏனோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோவையில் வெடித்த குண்டுகளுக்கான வெடி மருந்துகளும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தயாரிக்கப்பட்டிருந்தன. அதன் காரணமாகத்தான் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

கோவை குண்டுவெடிப்பு, தமிழ்நாட்டு அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. 42 சதவிகித வாக்குகளுடன் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக தி.மு.க.  த.மா.கா. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டது. கருணாநிதியின் அரசு மீது குறை சொல்வதற்கு எதுவுமில்லை. முதல் கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்திருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில், தி.மு.க. கூட்டணி குறைந்தபட்சம் 33 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.

தேவ கவுடா, குஜ்ரால் என அடுத்தடுத்துப் பிரதமர்கள் பதவியேற்றதால் நிலையான ஆட்சிக்கான தேடல் இருந்தது. தேசிய அளவில் வாஜ்பாய் பிரதமராக வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் நினைத்தாலும், ஜெயலலிதாவுக்கு எதிரான

மனநிலை இருந்து வந்தது. வாஜ்பாயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. 2 அல்லது 3 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோவை குண்டுவெடிப்பு, தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்தது.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் நடந்த நிகழ்வு என்பதால் தேர்தல் பிரசாரத்தில் கோவை குண்டுவெடிப்பு பிரதான இடத்தைப் பெற்றது. தேர்தல் பிரசாரத்தில் பேசிய அத்வானி, எல்லை தாண்டிய தீவிரவாதம் நாடு முழுவதும் அதிகரித்துவருவதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் குண்டு கலாசாரம் அதிகரித்து வருவதற்கு தி.மு.கவின் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம் என்றார்.

1996 தேர்தலில் பெற்ற மோசமான தோல்விக்குப் பின்னர், கோவை குண்டுவெடிப்பு அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்குக் கைகொடுத்தது. ‘கருணாநிதியின் அரசு முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டது. கோவையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுதும் இனி வெடிகுண்டுகள் வெடிக்கக்கூடும். பஞ்சாப் மற்றும் வடகிழககு மாநிலங்களில் கூட அமைதி நிலவுகிறது. ஆனால், தமிழ்நாடோ பற்றி எரிகிறது’ என்றார்.

ஜெயலலிதாவும் அத்வானியும் குண்டு கலாச்சாரம் பற்றிப் பேசியதால், ரஜினிக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. 1996 தேர்தலுக்கு முன்னர், தமிழ்நாட்டில் குண்டு கலாசாரம் அதிகரித்து விட்டதாகவும், ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று பேசியிருந்தார். கோவை குண்டுவெடிப்பின்போது வெளிநாட்டில் இருந்த ரஜினி, சென்னைக்குத் திரும்பி வந்ததும், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

’கோவை குண்டுவெடிப்பு, உளவுத்துறையின் தோல்வி. தமிழக அரசு அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்’ என்றவர், ‘நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. – த.மா.கா. கூட்டணி பெறப்போகும் வெற்றியைத் தடுக்கும் விதமாக கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு.முதல்வர் கலைஞர், சுயமரியாதை கொண்டவர். இனி தமிழ்நாட்டில் குண்டு வெடித்தால், அவரே முன்வந்து பதவியை ராஜினாமா செய்துவிடுவார்’ என்றார், ரஜினி.

கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் வரவேயில்லை. கருணாநிதி மட்டுமல்ல வேறெந்த முதல்வருக்கும் அப்படியொரு நெருக்கடி ஏற்படவில்லை. குண்டுவெடிப்புக்குப் பின்னர் கோவை மீண்டு வர பல மாதங்களானது. குண்டுவெடிப்பின் தாக்கத்தைத் தமிழ்நாட்டு மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன் காரணமாகத்தான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர்ந்து இருக்க முடிந்திருக்கிறது.

(முற்றும்)

பகிர:
nv-author-image

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *