‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுகின்றது. மிகப்பழமையான மொழியாகவும், இலக்கண, இலக்கிய செழுமை மிக்க மொழியாகவும் விளங்கும் தமிழ்மொழியில் எல்லாச் சொல்லும் தமிழ்ச் சொல்லா என்று ஆராய்ந்தால் ஆராய்ச்சி நீண்டு கொண்டே செல்லும்.
பேசும் மொழியும், எழுதும் மொழியும் அவரவர் தாய்மொழிச் சொற்களை மட்டுமே கொண்டிருந்தால் தாய்மொழி வளமை பெற்று மேலோங்கும் என்பது வரலாறு.
‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே’
– தொல்காப்பியம், சொல், 401
என்னும் தொல்காப்பிய நூற்பா விதிப்படி, வடசொல் என்பது பிறசொல் நீக்கி தமிழ்ச் சொல்லாக்க வேண்டும் என்று கூறுகிறது.
தொல்காப்பியர் காலந்தொட்டே தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களின் கலப்பு இருந்துள்ளது. தமிழ் மொழியில் தனித்தமிழ்ச் சொற்களிலேயே எழுத, பேச வேண்டும் என்பதைக் காலந்தோறும் அறிஞர்கள் பலர் முன்னெடுத்தாலும், அதற்குச் செயல்வடிவம் கொடுத்து இயக்கம் அமைத்தவர், தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள்.
துறைதோறும் தமிழ். தமிழ் இல்லாத துறை இல்லாமல் செய்திட வேண்டும் என்னும் முனைப்பில், தம் பணியைத் தொடங்கி தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியவர் மறைமலையடிகள். எங்கும் தமிழ் பொங்கும் தமிழாய் இனிய தமிழே இருந்திடல் வேண்டுமெனப் போராடி திட்டங்கள் வகுத்து நூல்கள் எல்லாம் தமிழில் இருந்திட வழியமைத்தார்.
ஆங்கிலம் கற்பதை அன்றைய காலம் முதலே பெருமையாய் எண்ணிய நிலையில், தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மூன்றையும் சிறப்புறக் கற்று, அதில் தமிழே தலைசிறந்த மொழி என்னும் உவகையுடன் தமிழ்ப்பணியாற்றியவர் மறைமலையடிகள்.
மறைமலையடிகளின் வாழ்வும் பணியும் தமிழுக்காவே அமைந்தன அல்லது அமைத்துக் கொண்டார் என்பதை நூற்றாண்டுகள் கடந்து நாம் சிந்திக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். மறைமலையடிகளின் வாழ்வியலும், தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளும் குறித்து அறிவோம்.
நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தவர், சொக்கநாதன். அவரது மனைவி, சின்னம்மையார். இத்தம்பதியிருக்கு நீண்ட நாட்கள் பிள்ளைப்பேறு இல்லாத நிலையில், திருக்கழுக்குன்றம் திருக்கோயிலில் வழிபாடாற்றி அதன் மூலம் 1876இல் சூலை 15ஆம் நாள் அந்தி மாலையில் அவதரித்தவர் மறைமலையடிகள். திருக்கழுக்குன்றம் இறைவன் அருளால் பிறந்த குழுந்தை என்று பெற்றோர் எண்ணியமையால் தமது குழுந்தைக்கு இறைவன் பெயரான வேதாசலம் என்பதையே பெயராகச் சூட்டினர்.
நாகப்பட்டினத்தில் மருத்துவப் பணியில் சிறந்து விளங்கிய சொக்கநாதன், தன் மகன் வேதாசலத்தைக் கல்வி கேள்விகளில் சிறந்த முறையில் வளர்த்தார். ஆங்கிலேயர்களின் வெசுலி மிசன் நிறுவனத்தில் கல்வி பயின்றார். தமிழ் மொழி மீதும், இலக்கண இலக்கியங்கள் மீதும் பேரார்வம் கொண்டு விளங்கிய வேதாசலம், தமிழ் மொழியை ஆழமாகக் கற்க எண்ணித் தமது தந்தையின் அனுமதி வேண்டினார்.
மருத்துவர் சொக்கநாதன் தம் மகனின் தமிழ்ப்பற்றுக்குத் தடை ஏதும் கூறாமல் நாகப்பட்டினத்தில் நாராயணசாமிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்க ஏற்பாடுகள் செய்தார்.
உ.வே.சா அவர்களின் ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சிசுந்தரனாரே நாராயணசாமிக்கும் ஆசிரியர் என்னும் செய்தி அறிந்து, அவரிடம் தமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்களைக் கற்கத் தொடங்கினார். நீண்ட காலம் கற்க வேண்டிய தமிழின் மிக முக்கிய இலக்கியங்களை வேதாசலம் சில வருடங்களிலேயே கற்றார். தமிழ் மொழியின் இலக்கண நூல்களான தொல்காப்பியம் , நன்னூல் போன்றவற்றையும், காப்பிய நூல்களையும் சுவைபடக் கற்றார். சங்க இலக்கியப் பாடல்களையும் ஆசிரியர் உதவியிடன் கற்றுத் தேர்ந்தார்.
தாம் விரும்பிய கல்வி விரும்பியவாறே கிடைத்த எண்ணத்தில் கற்றுவந்த வேதாசலத்தின் வாழ்வில் மிக முக்கியத் திருப்பமாக, அவரின் பன்னிரண்டாம் வயதில் தந்தை சொக்கநாதன் இயற்கை எய்தினார். நாகப்பட்டின மக்களின் நம்பிக்கையாகவும் தமது வாழ்வின் ஏணியாகவும் திகழ்ந்த தந்தையின் மரணம் வேதாசலம் வாழ்வில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.
தாயார் சின்னம்மையார் வழிக்காட்டலில் வளர்ந்த வேதாசலத்தின் தமிழ்க் கல்வி நின்றுபோயிருந்ததை உணர்ந்த நாராயணசாமிப்பிள்ளை அவர்களே நேரடியாக வந்து, சின்னம்மையாரை அணுகி மகனை அனுப்ப வேண்டினார். சின்னம்மையாரும் மகனைத் தமிழ்க் கற்க அனுப்பி வைத்தார்.
வேதாசலம் தம் பதினாறாம் அகவைக்குள் தமிழ் மொழியின் சிறந்த இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சைவ சித்தாந்தத் தத்துவங்களைக் கற்க விரும்பிய வேதாசலம், சோமசுந்தரானார் என்பாரிடம் சைவ சித்தாந்த இலக்கியங்களையும் கற்றார். நாகப்பட்டினத்தில் இயங்கிய மாத இதழ்களில் இவர் எழுதிய தமிழ் சார்ந்த கட்டுரைகள் பரவலான கவனத்தையும் சிறப்பையும் பெற்றுத் தந்தன.
தாயார் சின்னம்மையார் மகனுக்குத் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்ய , அவரோ தமது மாமன் மகள் சவுந்தரவல்லியை மணக்க விரும்பி தாயாரிடம் அனுமதி பெற்றார். தமது பதினாறாம் வயதில் பதின்மூன்று வயதான சவுந்தரவல்லியைத் திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் தமிழ்க் காதலைக் கைவிடாது தமிழ்ப்பணியாற்ற முனைந்தார்.
நிறைவான தமிழைக் கற்ற வேதாசலம், அதனை மற்றவர்களுக்கும் ஊட்ட எண்ணி இந்து மத அபிமான சங்கம் என்ற ஒன்றைத் தோற்றுவித்தார் . அதன்வாயிலாக மிக முக்கிய அறிஞர்களை அதில் பேச வைத்து தமிழ்ப்பணியாற்றி வந்தார்.
தமிழாசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் அதற்கான வாய்ப்பையும் எதிர் நோக்கிக் காத்திருந்தார்.
தமது ஆசிரியரிடம் தமிழ்க் கற்ற மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். அக்கடிதத்தைக்கண்டு சுந்தரனார் மிக மகிழ்ந்தார். வேதாசலத்தை திருவனந்தபுரம் வரவைத்து பாராட்டிட, அவரோடு கிடைத்த தொடர்பை நன்கு பற்றிக் கொண்டார் வேதாசலம். அவரின் அறிமுகத்தால் திருவனந்தபுரத்தில் ஓர் ஆங்கிலப்பள்ளியில் தமிழாசிரியர் ஆகும் பணி வாய்க்க, அப்பணியை மகிழ்வோடு ஏற்று ஆசிரியப் பணியாற்றினார்.
திருவனந்தபுரத்தில் தமிழாசிரியராய் பணியாற்றிய காலத்தில் அங்கு செயல்பட்ட சைவ சித்தாந்த சபையில் உரையாற்ற கிடைத்த வாய்ப்பில், மிகச்சிறந்த சொற்பொழிவை வழங்கினார். இவரின் சொற்பொழிவைக் கேட்ட திருவனந்தபுரம் சைவ சித்தாந்த சபையினர் தங்களுக்குத் தொடர்ந்து சைவ சித்தாந்தப் பாடத்தை நடத்த வேண்டினர். அதன்படி திருவனந்தபுரத்தில் தமிழாசிரியர் பணியும், தமிழ்ப்பணியையும் செவ்வனே செய்து வந்தார்.
(தொடரும்)