தமிழால் வாழ்வு, தமிழே வாழ்வு என்று முடிவெடுத்து இயங்கி வந்த வேதாசலம், சிற்றிதழ்களில் தமிழ் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். இதையடுத்து அறிஞர்கள் உலகம், யார் இந்த வேதாசலம் என்று உற்று நோக்க ஆரம்பித்தது.
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களுடன் ஏற்பட்ட நட்பைப் புதுப்பித்துக் கொண்டே வந்தார் வேதாசலம். சுந்தரம்பிள்ளை அவர்களின் நட்பால் திருவனந்தபுரத்தில் பல இடங்களில் வேதாசலம் பற்றிய புகழ் பரவத் தொடங்கி இருந்தது.
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை செப்டம்பர் 8, 1896 அன்று மாலை வேதாசலத்தைச் சந்திக்க வேண்டும் என்று தகவல் அனுப்பினார். வேதாசலம் விரைந்து வந்து அன்று மாலையே சுந்தரம்பிள்ளையைச் சந்தித்தார்.
திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் வரும் செப்டம்பர் 12, 1896 அன்று நாடகத்தமிழ் குறித்து உரை நிகழ்ந்த உங்களை நான் பரிந்துரை செய்துள்ளேன். நன்றாகப் பேசிவிட்டு வரவும் என்று கூறினார். இந்தத் தகவலைக் கேட்ட வேதாசலனார் மிக மகிழ்ந்து இசைந்தார்.
செப்டம்பர் 12ஆம் நாள் திருவனந்தபுரம் அரசர் கல்லூரி கலையரங்கில் மாணவர் கூட்டம் நிறைந்திருக்க, வயதால் இளையவரான வேதாசலம் மேடையேறி நாடகத்தமிழ் குறித்த உரையைத் தொடங்கினார். அதுவரை சலசலப்பில் இருந்த அரங்கம், வேதாசலத்தின் மடை திறந்த தமிழ்ச் சொற்களைக் கேட்டு திகைத்து இரசிக்க ஆரம்பித்தது. கம்பீரமான குரலில் நாடகத்தமிழ் குறித்து மிகச்சிறந்த உரையை வேதாசலம் வழங்கினார்.
நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, வேதாசலத்தின் நுணுக்கமான பேச்சுத்திறனையும் ஆராய்ச்சி பாங்கினையும் மனம் திறந்து பாராட்டி மகிழ்ந்தார்.
தமிழால், பேச்சால் புகழ்பெற்றிருந்த வேதாசலனாருக்குத் திருவனந்தபுரம் வாழ்வு இரண்டு மாதங்களில் உடல் நலக் குறைபாட்டை உண்டாக்கியது. இதனால் மனோன்மணியம் சுந்தரனாரிடம் கூறிவிட்டு தமது சொந்த ஊரான நாகர்கோயிலுக்குத் திரும்பித் தம் வாழ்வை வாழத் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் சென்னையில் வாழ்ந்து வந்த சோமசுந்தர நாயகர் என்பவர் தமிழ்ப்புலமையிலும், சைவ சமயக் கோட்பாடுகளிலும் சிறந்த சொற்பொழிவுகளை வழங்கி மிகப் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். சோமசுந்தர நாயகரின் கட்டுரைகளை வேதாசலனார் விரும்பி வாசித்து அவர்மீது மிகுந்த பற்றுடையவராகத் திகழ்ந்தார்.
இராமநாதபுர அரசர் பாசுகர சேதுபதி அவர்கள் ஒருமுறை தமிழகம் முழுவதிலும் இருந்து பல்சமய அறிஞர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்து விழா நடத்தினார். அந்த விழாவில் அரசர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சமய உண்மைகளை விளக்கி எந்தச் சமயம் சிறந்தது என்று பேச வேண்டும் என்றும், இதில் வெற்றி பெறுபவருக்கு சண்டமாருதம் பட்டமும், பொன் முடிப்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பல்சமய அறிஞர்கள் கூடியிருக்கும் அவையில் யாரும் முன்வராதபோது சோமசுந்தர நாயக்கர் எழுந்து தம் பேச்சைத் தொடங்கினார். அனைத்து சமயத்தினரும் இருக்கும் அவையில் பல கருத்துகளை விளக்கி மூன்றாம் நாள் முடிவில் சைவ சமயத்தின் கருத்துகளே மேன்மையானது என்று தம் உரையை நிறைவு செய்தார்.
அரசர் பாசுகர சேதுபதி அவர்கள் சோமசுந்தர நாயகரின் கருத்தை மறுக்க விருப்பமிருப்போர் மேடையேறலாம் என்று அறிவித்தார். யாரும் முன்வராத நிலையில் அவருக்கு சண்டமாருதம் பட்டமும் பொன்முடிப்பும் வழங்கப்பட்டது.
சோமசுந்தர நாயகரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட வேதாசலனார், தாம் முன்பு கொண்டிருந்த வேதாந்த கருத்துகளை விட்டு சைவ சமய உண்மைகளைப் பின்பற்றத் தொடங்கினார். சோமசுந்தர நாயகரின் கருத்துகளை மறுத்து ஒருவர் எழுதி வர, அதனை மறுத்து சோமசுந்தரனாரின் கருத்துகளே சிறந்தது என்று முருகவேள் என்ற பெயரில் கட்டுரைகளை எழுதலானார்.
வேதாசலனார் எழுதிய கட்டுரைகளை சோமசுந்தரனார் படித்து மகிழ்ந்து அவரைப் பற்றி அறிந்து கொண்டார். சோமசுந்தரனார் நாகர்கோயில் வந்தபோது வேதாசலத்தைச் சந்திக்க விரும்பி சந்தித்தார்.
வேதாசலத்தின் அறிவுத்திறனைக் கண்டு மகிழ்ந்த சோமசுந்தரனார், நீங்கள் சென்னையில் இருந்து தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம் என்று கூறினார்.
சென்னை சென்ற சோமசுந்தரனார், துகளறு போதம் என்ற நூலினை நாகர்கோயிலுக்கு அனுப்பி இந்த நூலுக்கு உரை எழுதித் தர பணித்தார். சோமசுந்தரனாரின் அன்பான கட்டளையை விரும்பி ஏற்ற வேதாசலனார், நூறு பாடல்களுக்கும் உரை எழுதி சென்னைக்கு அனுப்பினார்.
துகளறு போதம் நூலின் பாடல்களின் உரையைப் படித்துப் பார்த்த சோமசுந்தரனார் மிக மகிழ்ந்து அந்த உரையினை வாசித்தார். தமிழில் புலமையும், சித்தாந்த வேட்கையும் கொண்ட அந்த உரையினை மகிழ்ந்து பாராட்டினார்.
சைவ சமயக் கருத்துகளைத் தமிழ் உலகம் மேலும் அறிய ஓர் இதழைத் தொடங்க எண்ணி, அதற்கான முயற்சிகளில் சோமசுந்தரனார் ஈடுபட, அந்த இதழின் ஆசிரியப் பணியை நாகர்கோயில் வேதாசலனாருக்கு அளித்து சென்னை வருவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். சோமசுந்தரனாரின் அன்பான கட்டளையை விரும்பி ஏற்ற வேதாசலனார், சென்னை சென்று சோமசுந்தரனாரைச் சந்தித்து சித்தாந்த தீபிகை என்னும் இதழின் ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றார்.
தமிழ் அறிஞர் உலகம் போற்றும் வகையில் சித்தாந்த தீபிகை இதழில் கட்டுரைகளை எழுதி வந்தார் வேதாசலனார். இதழியல் பணியோடு தமிழ்ப்பணி ஆற்றி வந்த வேதசலனாருக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை சோமசுந்தரனார் தெரியப்படுத்தினார். அந்த வாய்ப்பின் கனவில் இருந்த வேதசலனார் அந்த வாய்ப்புத் தமக்குக் கிடைக்குமா என்ற ஐயமும் இருந்தது.
சென்னையில் புகழ்பெற்ற கல்லூரியாக விளங்கிய கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி வாய்ப்பு ஒன்று வந்தது. அந்தக் கல்லூரியின் தலைவராகத் திகழ்ந்த மில்லர், தம் கல்லூரிக்கு மிகச்சிறந்த அறிவாற்றல் நிரம்பிய தமிழாசிரியரை அமர்த்த வேண்டும் என்று விரும்பி சூரியநாராயண சாஸ்திரி என்பவரிடம் அதற்கான படிகளை ஒப்படைத்தார்.
சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணி என்பது மிகப்பெரிய பெருமையான பணியாகக் கருதப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து 60 ஆசிரியர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். அந்த அறுபது பேரில் வயதால் மிகவும் இளையவர் வேதாசலனார் மட்டுமே. கிறித்தவக் கல்லூரி பணி வாய்ப்புத் தமக்குக் கிடைக்குமா என்ற கேள்வியோடே நாகர்கோயில் வந்தடைந்தார்.
(தொடரும்)