தமிழ் என்பது சிந்தனைக்கும் உணர்வுக்கும் உயிர்த்துளி. ‘சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று’ என்ற சிவபுராண வரிகள்போல, சிந்தனையின் உள்ளங்கைகளில் தேனெனச் சுரந்தது தமிழே. அத்தகைய இனிய மொழியின் காவலனாகவும் விளக்கனாகவும் உழைப்பனாகவும் வாழ்ந்தவர் வேதாசலனார் என்ற மறைமலையடிகள் .
நாகர்கோயிலில் தம் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த வேதாசலனாருக்கு, எதிர்பாரா ஒரு நாளில் சென்னை கிறித்தவக் கல்லூரியிலிருந்து அஞ்சல் வந்தது. அந்தக் கடிதம், அவரின் வாழ்வுப் பாதையை மாற்றியமைக்கும் விதியென அமைந்தது. அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் சூரியநாராயண சாஸ்திரியார் தம் கையொப்பத்தோடு அனுப்பியிருந்த அழைப்பு: ‘நேர்முகத் தேர்வுக்குத் தாங்கள் வருக’.
இதனை வாசித்த வேதாசலனார், தமிழின் மகிமை புனைந்த புன்னகையோடு, ‘இது எனக்காகத் திறக்கும் புதிய வாயில்’ என்று எண்ணினார். அந்த மகிழ்ச்சி நிரம்பிய நாளில், தமிழின் பெருமையோடு மனதை நிரப்பி, சென்னைக்குப் பயணமானார்.
சென்னை கிறித்தவக் கல்லூரியின் பரந்த வளாகத்தில் அவர் கால்வைத்தபோது, உள்ளம் துடித்தது. அங்கே சென்றவுடனேயே, சாஸ்திரியார், தொல்காப்பியத்தின் ஆழக் கடலில் திளைத்த கேள்விகளை முன்வைத்தார்.
அந்தக் கேள்விகள் தமிழ்ப் புலவர்களுக்கே மயக்கம் தரும் அளவுக்குக் கடினமானவை. ஆனால், வேதாசலனாரின் மனம் எளிதாய் விளங்கும் விளக்கங்களின் ஊற்றாக இருந்தது. பளிங்கென பதில் அளித்தார். சாஸ்திரியார் அதைக் கண்டு திகைத்தார். கண்ணில் மகிழ்ச்சி பளபளத்தது. இளமைச் சீற்றத்தோடு பேசிக் கொண்டிருந்த வேதாசலனார் திடீரென்று, ‘இப்போது நான் உம்மிடம் மூன்று கேள்விகள் கேட்க விரும்புகிறேன்’ என்றார்.
அவரின் ஆழ்ந்த கேள்விகளும், வேகமான அறிவுப் பாய்ச்சலும் சாஸ்திரியாரை மகிழ்வித்தது. அங்கேயே அவர் அறிவித்தார்:
‘நீரே எங்கள் கல்லூரியின் ஆசிரியர்’. வேதாசலனார் அகம் மகிழ்ந்தார்.
மார்ச் 9, 1898. அந்த நாள், கிறித்தவக் கல்லூரியில், வயதில் இளமையான ஆசிரியராகவே வேதாசலனார் நியமிக்கப்பட்டார். ஊதியமாகக் கொடுக்கப்பட்டது இருபத்தைந்து ரூபாய். ஆனால், அந்தத் தொகை அவருக்குப் பொருளல்ல, தமிழுக்காக வாழும் பொறுப்பின் அடையாளமாக இருந்தது.
குடும்பத்துடன் நாகர்கோயிலில் வாழ்ந்த அவர், சென்னைக்குப் புலம்பெயர்ந்தார். புதிய நகரத்தில் குடியேறிய அவருக்கு, சாஸ்திரியார் தந்த உதவிகள் அளவிட முடியாதவை. கல்லூரியில் நடக்கும் விதிமுறைகளை எடுத்துரைத்தார், வீடு பார்த்துத் தந்தார். குடும்ப நலனில்கூட பங்காற்றினார். இந்த அளவிலான பாசத்தைக் கண்டு, வேதாசலனார் ஒருமுறை மனதுள் வருந்தினார்:
‘நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்கும் பெயரில், இப்படிப்பட்ட அன்பரைக் குறைக்கூறியவன் நானோ!’ என்று மனம் வருந்தி மன்னிப்புக் கோரினார்.
சென்னை கிறித்தவக் கல்லூரியில் வேதாசலனாரின் பெயர் சீக்கிரமே பரவியது. அவர் கற்பிக்கும் விதம் தனித்துவமானது. சங்க இலக்கியங்கள், இலக்கணக் குறிப்புகள், பண்டைச் சொற்களின் ஆழமான பொருள் – எல்லாம் அவர் வாயில் நகைச்சுவை கலந்த இனிமையோடு சுலபமாக ஒலித்தன.
தமிழ்ச் சொற்கள் மாணவர்களின் இதயத்தில் ஓசை எழுப்பின. முல்லைப்பாட்டை எடுத்துரைக்கும்பொழுது, நச்சினார்க்கினியரின் உரையில் காணப்பட்ட தமிழ், நேர் பொருளைத் தராமல் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். தனது விளக்கத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்களே செல்வம் திரட்டி, ஆசிரியரின் உரை நூலாக வெளிவர முன் நின்றனர். அதன் விளைவாகவே முல்லைப்பாட்டிற்கான அவரது உரை வெளிவந்தது. பின்னர் பட்டினப்பாலை நூலிற்கும் அவ்வாறே வேதாசலனாரின் உரை நூலாக வெளிக்கொணர மாணவர்கள் உதவினர். தமிழால் வேதாசலனாரின் புகழ் சென்னை எங்கும் பரவியது.
வேதாசலனாரின் சென்னை வாழ்வில் மூன்று பேர் முக்கியமான இடம் பிடித்தனர் . தண்டலம் பாலசுந்தரம், சோமசுந்தர நாயக்கர், சூரிய நாராயண சாஸ்திரி ஆகியோர் இவரின் வளர்ச்சியில் உந்து சக்தியாகத் திகழ்ந்தனர் .
சோமசுந்தர நாயக்கருடன் இருந்த பாசம், நட்பைத் தாண்டியது. அது குரு சீடர் பாங்கில் உயர்ந்த பந்தமாக இருந்தது. தினந்தோறும் சந்தித்து, தமிழ் பேசி மகிழ்ந்தனர். சோமசுந்தரனாரின் மனைவி வேதாசலனாரையும் அவரது குடும்பத்தையும் தம் சொந்த மகன் போலவே எண்ணிப் போற்றினார்.
திருக்கோயில் விழாக்கள், குருபூசைகள், இலக்கியச் சந்திப்புகள் ஆகிய நிகழ்வுகளில் சோமசுந்தர நாயக்கரும் வேதாசலனாரும் இணைந்து உரையாற்றினர். மக்கள் கூடிக் கேட்டு மகிழ்ந்தனர்.
உ.வே.சா. தம் குருவான மீனாட்சிசுந்தரரை வியந்து ‘பிள்ளையவர்கள் சரிதம்’ எழுதியது போலவே, வேதாசலனாரும் தம் நாட்குறிப்புகளில் சோமசுந்தர நாயக்கரை வியந்து வியந்து எழுதியுள்ளார். ‘பல கோயில்களில் எங்கள் இரட்டையுரைகளைப் பார்க்கவே மக்கள் கூடுகின்றனர்’ என்று அவர் பதிவு செய்துள்ளார்.
சூரியநாராயண சாஸ்திரியாரின் வழிகாட்டுதலாலும், சோமசுந்தர நாயக்கரின் பேரன்பாலும், வேதாசலனாரின் வாழ்க்கை இலக்கியச் சிறப்பால் மிளிரத் தொடங்கியது. அவர்களின் குரு–சீட பாசம் தனிப்பட்டவர்களுக்கான பந்தம் மட்டுமல்ல, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பங்களிப்பாகவும் அமையத் தொடங்கியது.
(தொடரும்)