Skip to content
Home » தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழ் சிந்தனையின் நீண்ட வரலாற்றில் மக்களின் மனநிலையை மாற்றிய  முக்கியமான விவாதங்களில் ஒன்று அருட்பா மருட்பா போராட்டம். இது வெறும் இலக்கிய விவாதம்   அல்ல.  உண்மை எது மாயை எது என்பதை நிருபிக்க நடந்த வாதமாகும்.

1867ஆம் ஆண்டு ஆறுமுக நாவலர், அருட்பா பாடல்களை சைவத் திருமுறைப் பாடல்களுடன் ஒப்பிட மறுத்து வள்ளலார் எழுதிய பாடல்கள் மருட்பா என்னும் வாதத்தைத் தொடங்கி வைத்தார். சைவ சித்தாந்தத் தத்துவத்திற்கு மாற்றாக வள்ளலாரின் பாடல்கள் மக்களிடையே பாடப்பட்டு வந்தன.

அருட்பெருஞ்சோதி தத்துவத்தை உலகுக்கு வழங்கிய இராமலிங்க அடிகளாருக்கும் சைவ சித்தாந்த அறிஞர் ஆறுமுக நாவலருக்கும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் அருட்பா மருட்பா வாதம் நடைபெற்றது .

சோழ மண்டலத்தில் சைவ ஆதீனங்கள் மற்றும் ஓதுவார்களிடம் மட்டுமே சைவத் திருமறைப்பாடல்கள் இருந்தன. பொதுமக்களின் பரவலான பார்வைக்கு அப்பாடல்கள் கிடைக்கப்படாமல் இருக்க, வள்ளலாரின்  திருவருட்பா பாடல்களை திருக்கோவில்களில் மக்கள் பாடி வந்தனர்.

சைவத் திருமுறைப்பாடல்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினரே பாட வேண்டும் என்ற அறிவிக்கப்படாத தடை அக்காலத்தில்  இருந்தமையால் மக்களிடம் இருந்து சைவத் திருமுறைகள் தள்ளியே இருந்தன.

சிதம்பரத்தில் பாடசாலை நிறுவி சைவப் பணிகளை மேற்கொண்ட ஆறுமுக நாவலர், திருமுறைகளுக்கு நிகராக திருக்கோயில்களில் அருட்பா பாடல்கள் பாடப்படுவதைக் கடுமையாக எதிர்த்து வந்தார்.

சைவ ஆதீனங்களின் சார்பாக ஆறுமுக நாவலரும், அவரைச் சார்ந்தோரும் அருட்பா பாடல்கள் மருட்பா பாடல்களே எனப் பல நூல்களை வெளியிட, வள்ளலார் மீது அன்பு செலுத்தியவர்கள் மறுப்பு  நூல்களையும் வெளியிட்டனர். கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக நடந்த முதல்கட்ட விவாதம் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் காரணமாக அன்றைய நிலையில்  அருட்பா மருட்பா விவாதம் நிறைவுற்றது.

1903ஆம் ஆண்டு மறுபடியும் இலங்கை நாட்டைச் சார்ந்த கதிரைவேற்பிள்ளை அருட்பா மருட்பா விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அருட்பா பாடல்கள் போலியானது என கதிரேவேற்பிள்ளை நூல்களை வெளியிட்டார். மீண்டும் தமிழகத்தில் பரவலாகப் பேசப்பட்ட இந்த விவாதத்தில் உ.வே.சா, வேதாசலனார் (மறைமலையடிகள் ) செய்குத் தம்பி பாவலர் என்று பலர்  இந்த வாத விவாதத்தில் கலந்து கொண்டனர்.

கதிரைவேற்பிள்ளையின் கருத்தை எதிர்த்து இராமலிங்கனாரின் குடும்பத்தைச் சார்ந்தவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக உ.வே.சா நீதிமன்றத்திற்கு வந்து திருமுறைப் பாடல்களே அருட்பா எனவும், மற்ற பாடல்கள் அருட்பா அல்ல எனவும் சாட்சி கூறினார்.

1869ஆம் ஆண்டுகளிலும்,1903ஆம் ஆண்டுகளிலும் சைவ ஆதீனங்கள் வள்ளலாரின் பாடல்களை மருட்பா என நிறுவ வேண்டும் என பொருளுதவிகள் செய்தன.

கதிரைவேற்பிள்ளைக்குச் சாதகமாகவும் இல்லாமல் அருட்பாவிற்குப் பாதகம் இல்லாமலும் வழக்கில் தீர்ப்பு கூறப்படாமையால், கதிரைவேற்பிள்ளை பல இடங்களில் அருட்பா போலியானது என விளம்பரங்கள் செய்தார். தமிழ்நாடு, இலங்கை ஆகிய நாடுகளில் வெளிவரும் நாளிதழ்களில் இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் மருட்பா என்று மீண்டும் மீண்டும் விளம்பரங்கள் செய்து வந்தார். இதனால் இராமலிங்க அடிகளாரின் பக்தர்கள் மனம் வருந்தி இருந்தனர்.

இராமலிங்க அடிகளாரின் பாடல்களை அருட்பா என நிறுவுவதற்கு வேதாசலனார் முன்வந்தார். கதிரைவேற்பிள்ளையை வாதம் புரிய வருமாறு வேதாசலனார் அழைப்பு விடுத்தார். வள்ளலார் சார்பாக அருட்பா சார்பாக வேதாசலனார் வாதம் புரிய வந்ததைக் கண்டு மகிழ்வுடன்  பல நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக சைவ சமயவாதிகளும் விளம்பரங்கள் கொடுத்தனர். 1867ஆம் ஆண்டில்  அரசாங்க நீதிபதி ஒருவர் தலைமை ஏற்க அருட்பா மருட்பா  விவாதம் தொடங்க ஏற்பாடுகள் நடந்தன.

மாபெரும் அரங்கில் வேதாசலனார் வீற்றிருக்க , சைவ ஆதீனங்களின் சார்பாக பெரும் ஆராவாரத்துடன் அரங்கிற்கு குதிரை வண்டியில்  வந்தார் கதிரைவேற்பிள்ளை.

இராமலிங்கனாரின் பாடல்களே அருட்பா என வாதத்தைத்  தொடங்கிய வேதாசலனார், இராமலிங்க அடிகளாரின் பாடல்களைச் சான்றுகளுடன் எடுத்துக் கூறி, பல பாடல்களைப் பாடி சபையோர் மகிழப் பேசி பலரின் பாராட்டுகளைப் பெற்று அமர்ந்தார்.

அடுத்துப் பேச வந்த கதிரைவேற்பிள்ளை அருட்பா பற்றி எதுவும் பேசாமல் ஏதேதோ பேசி விட்டு சபையோரின் பதிலுக்குக்  காத்திருக்காமல் சபையை விட்டு வெளியேறினார். சபையை விட்டு வெளியேறிய கதிரைவேற்பிள்ளை நாளிதழ்களில் அருட்பா தோற்றதாகப் பொய்யான  விளம்பரங்கள் வெளியிட்டார்.

கதிரைவேற்பிள்ளைக்கு எதிராக அரசாங்க நீதிபதி ஆதரவுடன் மறுப்பு அறிக்கைகள் வந்தன.

செப்டம்பர் 27,1903 அன்று  இரண்டாம் வாதம் நடைபெறும் என்று முறையாக அறிவிக்க , குறித்த நேரத்தில் வருகை புரிந்த வேதாசலனார் காத்திருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த வேதாசலனார், கதிரைவேற்பிள்ளை வராமையால் அருட்பா பற்றி உரையாற்றினார். கூட்டத்தில் பெரும் ஆராவாரம் இருந்த நிலையில் இறுதி வரை கதிரைவேற்பிள்ளை அரங்கத்திற்கு வருகை புரியவில்லை.

அக்டோபர் 18,1903இல் மூன்றாம் விவாதம் நடைபெறும் என்று முறையாக அறிவிப்புகள் வெளியிட்டனர். மூன்றாம் விவாதம் நடைபெற்ற போதும் கதிரைவேற்பிள்ளை  வராமையால் அருட்பா குழுவினர் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர். இந்த நிலையில் அருட்பா குழுவினரில் ஒரு சில ஆர்வமிகுதியால் கதிரைவேற்பிள்ளையைத் தாக்குவதற்கு ஆயத்தமான நிலையில், தகவல் அறிந்த வேதாசலனார் தம் நண்பர்கள் மூலம் கதிரைவேற்பிள்ளைக்குத் தகவல் அனுப்பி பாதுகாப்பாக இருக்கச் செய்தார். அந்தச் செயலை செய்ய நினைத்த அருட்பா அடியார்களையும் கண்டித்தார்.

சைவத் திருமுறைகளின் மீது  பெரும் பற்றுக் கொண்ட வேதாசலனார், அருட்பா பாடல்களைச் சார்ந்து வாதாடினாலும் கதிரைவேற்பிள்ளைக்குத் தீங்கு நினையாமல் பல இடங்களில் அவரின் சிறப்பினைப் போற்றினார். தமிழக வரலாற்றில் வேதாசலனாரால் அருட்பா மருட்பா விவாதம் 1903ஆண்டு நிறைவுற்றது.

சைவ அறிஞர் கதிரைவேற்பிள்ளை அருட்பா மருட்பா  வாதத்தை நிலைநிறுத்த முடியாமல் பின்வாங்கினார்.  பல ஆண்டுகளாக நடைபெற்ற அருட்பா மருட்பா விவாதம் வேதாசலனாரின் அறிவுத் திறத்தால் நிறைவுற்றதாகவே அறிஞர் உலகம் கருதியது. வேதாசலனார் அருட்பா மருட்பா விவாத அரங்கில், திருமுறைப் பாடல்களைப் போலவே திருவருட்பா பாடல்களும் அருள் நிறைந்தவை என்றே பேசி வாதம் புரிந்தார் என அவரின் மகன் மறை. திருநாவுக்கரசு தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *