Skip to content
Home » தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற அழைத்தன. அவர் ஒப்புக்கொண்டு விழாவிற்கு வருகை  புரிந்தால் அதைத் தமிழ்த்திருவிழாவாகவே நினைத்து தமிழுலகம் கொண்டாடி வந்தது.

இராமநாதபுரம் அரச மரபில் தோன்றிய பாண்டித்துரைத் தேவர் சிறந்த தமிழ்ப்புலமை கொண்டு மாபெரும்  தமிழ்ப்பணிகளும் ஆற்றி வந்தார்.

பண்டைய காலத்தில் மதுரையை மையமாகக் கொண்டு  தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்தன. காலப்போக்கில் அந்தச் சங்கங்கள் இயங்காமல் அரசுகள் மாறினமையால் சங்கங்களும் இயங்காமல் இருந்தன.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மீண்டும் ஒரு தமிழ்ச்சங்கம் நிறுவிட பாண்டித்துரைத் தேவர் முன்நின்றார். அரச மரபில் வந்தாலும் தமிழ்ச்சங்கம் தொடங்குவதில் பல்வேறு தடங்கல்களைப்  பாண்டிதுரைத் தேவர் சந்திக்கலானார்.

தமிழை உயர்த்திட வேண்டும், தரணி போற்றிட  வேண்டும் என்னும்  முனைப்பில் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் அரசர் பாசுகர சேதுபதி தலைமை வகிக்க, தமிழகத்தின் ஆளுமைகள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வில் நான்காம் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்ப்பணிகளைச் சிறப்புற ஆற்றி வந்தன. தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவை சிறப்புற நடத்திட பாண்டித்துரையார் எண்ணினார். அதன்படி தமிழகத்தின் ஆகச்சிறந்த தமிழறிஞரை அழைத்து நிகழ்வில் பேச வைக்க எண்ணினார். அன்றைய நிலையில் பலரும் மதிக்கும் அறிஞராகத் திகழ்ந்த  வேதாசலனாரை அழைக்க திட்டமிட்டு அதற்கான ஆயத்தப்பணிகளைச் செய்தார்.

சென்னை சென்று வேதாசலனாரைச் சந்தித்து மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் பற்றி பாண்டித்துரையார் எடுத்துரைக்க, சங்கத்தின் பணிகளை முன்னரே கேள்வியுற்ற வேதாசலனார் ஆர்வமுடன் பாண்டித்துரையார் கூறும் செய்திகளைச் செவி மடுத்தார். பாண்டித்துரையார் அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் உரையாற்றச் சம்மதம் தெரிவித்தார்.

1904ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் மதுரை நகரம் மகிழும் வகையில் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா இனிதே தொடங்கியது. நிகழ்வில் அவையோர் எதிர்பார்த்த வேதாசலனார் உரை அவையோர் அனைவரும் மகிழும் வண்ணம் தொடங்கியது.

தமிழ் மொழியின் சிறப்பு, செழுமை, இலக்கிய நயம், காப்பிய வளமை, இலக்கண மேன்மை ஆகியவற்றைத் தம் அழகுத் தமிழால் அணி அணியாக எடுத்துரைத்தார்.

வேதாசலனாரின் உரையைக் கேட்ட அவையோர் கைதட்டலால் அரங்கை அதிர வைத்தனர். பாண்டித்துரையார் மிக மகிழ்ந்தார். நிகழ்வின் இறுதியில் பாண்டித்துரையார் வேதாசலனாரை மிகவும் போற்றிப் புகழ்ந்தார்.

தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகள் நிறைவுற்றாலும் வேதாசலனாரையும் அவர் குடும்பத்தாரையும் இராமநாதபுரத்தின் அரச விருந்தினர்களாகக் கவனித்து திருக்கோயில் வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்து அரண்மனையில் தங்க வைத்தார். பாண்டித்தரையாரின் விருந்தோம்பலில் வேதாசலனார் மிக மகிழ்ந்து சென்னை திரும்பினார்.

பாண்டித்துரையாரும் வேதாசலனாரும் கடிதங்கள் வாயிலாகத் தம் நட்பைப் புதுப்பித்தும் பேணியும் வந்தனர். அதன்படி நான்காம் தமிழ்ச் சங்கத்தின் நான்கு ஆண்டு விழாவில் பங்கேற்க  வந்த அழைப்பை அன்புடன் ஏற்று மதுரைக்கு மீண்டும் சென்றார் வேதாசலனார்.

1905ஆம் ஆண்டு நான்காம் ஆண்டு விழா கனகசபைப் பிள்ளை அவர்கள் தலைமையில் இனிதே தொடங்க, தலைமை உரையாற்றிய கனகசபைப்பிள்ளை, தொல்காப்பியம் பிராமணர் இயற்றிய இலக்கண நூல் என்றும், தொல்காப்பியர் பிராமணர் என்றும், தமிழர்கள் ஆரியர்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்றும் பேசினார்.

தலைமை உரையைக் கேட்ட வேதாசலனார் மிகுந்த சினம் கொண்டு தம் உரைக்காகக் காத்திருந்தார்.

பாண்டித்துரை தேவர், வேதாசலனாரை நிகழ்வில் சிறப்புரை வழங்க கேட்டுக்கொண்டார். காத்திருந்த வேதாசலனார் தமிழ் மழை பொழியத் தொடங்கினார். தமிழ் மொழியின் செம்மையை, செழுமையை எடுத்துரைத்து ஆரியம் தந்தது அல்ல தமிழ். ஆரியத்திற்குத்  தமிழ் தந்த கொடைகளை எடுத்துரைத்து  அவையோர் ஆர்ப்பரிக்க உரையாற்றினார்.

நான்காம் ஆண்டுவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வேதாசலனார் ‘பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்’ என்னும் தலைப்பில் விரிவான மாட்சிமை நிறைந்த உரையை ஆற்றினார்.

அரங்கம் தமிழர் ஆரியர் என பிரிவாக இயங்க, பாண்டித்துரையார் வேதாசலனாரின் பக்கமே நின்று உணர்ச்சியுடன் உரை ஆற்றினார். ஆரியர் பக்கச் சார்பு கொண்ட இராகவைய்ங்கார் வேதாசலனாரின் உரையை ஏற்க இயலாது என்று அவையிலேயே எதிர்க்கச் செய்தார். இருப்பினும்  கருத்தைக் கருத்தால் மட்டுமே எதிர்க்கும்  வேதாசலனாரின் திறமையையும் பாராட்டினார்.

நிகழ்வின் ஐந்தாம் நாள் உ.வே.சாமிநாதர் தலைமை வகிக்க, வேதாசலனார் பட்டினப்பாலை குறித்து தமிழ்ப்பொழிவாற்றினார். அந்த உரையைக் கேட்ட உ.வே.சா மிக மகிழ்ந்து இந்த அற்புத உரைக்குப் பிறகு வேறு உரைகள் அரங்கை மகிழ்விக்காது என்று போற்றி அமர்ந்தார்.

மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் அடுத்தடுத்த ஆண்டு நிகழ்வுகளில் பாண்டித்துரை தேவரின் அழைப்பில் வேதாசலனாரின் சிறப்புரை எப்போதும் இருக்கும் வண்ணம் நிகழ்வுகளை பாண்டித்துரையார் அமைக்கலானார்.

மதுரை நகரில் சித்திரைத் திருவிழா முடிந்து நான்காம் தமிழ்ச்சங்கத்தின் வைகாசித் திருவிழா தமிழ்த் திருவிழாவாகவே நடந்து தமிழையும் தமிழரையும் உயர்த்திட அந்தப் பணிகளில் வேதாசலனார் வேராக நின்று உரை வழங்குவதை தமிழுக்குச் செய்யும் கடமையாகவே எண்ணி ஆற்றி வந்தார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *