Skip to content
Home » மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

கடலோடு எல்லை முடிந்து விட்டது, மலைகளுக்கு அந்தப் பக்கம் எதுவும் இல்லை, எல்லை தாண்டினால் தொல்லை என்பது போன்ற சிந்தனைகள் பெருகியிருந்த காலகட்டம். பக்கத்து ஊர்களையே பார்த்திடாத மனிதர்கள் அன்று வாழ்ந்து வந்தார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த பார்வையோடு உலகம் முடிவுற்றது என்று எண்ணி, இருக்கும் இடத்திலேயே பிறந்து, மலர்ந்து, வளர்ந்து, தளர்ந்து, முடிந்துபோன வாழ்க்கையை வாழும் மனிதர்களுக்கு மத்தியில், பயணங்களே பாதைகளைத் தீர்மானிக்கின்றன எனும் நோக்கோடு எல்லைக்கோடுகளை மீறி, கடலைத்தாண்டி, மலையைத் தாண்டி மலைக்க வைக்கும் பயணங்களே வரலாறுகளாக எஞ்சி நிற்கின்றன என்று எண்ணிய பயணிகளே வரலாற்றை உருவாக்கியவர்களாகத் திகழ்கிறார்கள்.

பயணங்கள் பரவசத்தையும் வரலாற்றையும் வழிநெடுக வாழ்ந்த மாந்தர்களின் வாழ்வியலையும் கற்றுத்தரும்.  ஒரு பயணி பறவையைக் கண்டு அதிகம் பொறாமை கொள்வான். பறவையோடு பயணத்தை அதிகாலையில் தொடங்குவான். சில நேரங்களில் பறவை உறங்கும் வேளையிலும் பயணிப்பான். வணிக நோக்குப் பயணம் வரலாற்றுப் பயணமாக, திசைகளை அறிவிக்கும் பயணமாக, தேசங்களை அடையாளம் காட்டும் பயணமாகச் சில நேரங்களில் மாறிப்போகும். கடலுக்கு அப்பால், மலைக்கு அப்பால், காட்டிற்கு அப்பால் இருக்கும் தேசங்களையும் தேசாந்திரிகளையும் அவர்களின் வாழ்வியலையும் வழிகளையும் வலிகளையும் பயணிகளால் மட்டுமே கற்க இயலும். நீர் இருக்கும் ஓரத்தில் வாழ்ந்தவர்கள்  மத்தியில் நீரோடும் கடலிலும் ஆறுகளிலும் பயணித்த பயணிகளின் வாழ்க்கை நூற்றாண்டுகளைக் கடந்தும் நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

புவியியலின் புரிபடாத கோடுகளையும்  காடுகளையும் ஏடுகளில் தந்து பயணம் மேற்கொள்பவர்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்தவர்கள் பயணிகளே. உழவுக்காக உழுநிலத்தில் விதை நட்டு, நட்ட விதையை உணவாக்கி, அதை உயிராக்கி உயிர்ப்பதே வாழ்வு என்று எண்ணி வாழ்ந்த மானுடக் கூட்டத்தில், கடல் தாண்டி, மலை தாண்டி தேசமும் மக்களும் உள்ளனர் என்று தேடி ஓடிய தேசாந்திரிகளின் சொல் இன்று தேடப்படும் வரலாறாகத் தேடி ஓட வைக்கின்றது.

இன்று உலகில் பெரும் செல்வாக்கோடு திகழும் பல தேசங்களைக் கண்டுபிடித்து உலகிற்கு வெளிச்சமாக்கியவர்கள் பயணிகளே. காற்றை, புயலை, மழையை, மலையை, பாலைவனத்தை, சோலைவனத்தைத் தாகத்தோடு சுற்றி, தகிக்கும் வெயிலில், கொட்டும் மழையில், வாட்டும் குளிரில், வருத்தும் பசியில் பயணித்து தன்வயப்படுத்தியவர்களின் வாழ்க்கை நாம் எண்ணவே ஏக்கத்தை வெளிப்படுத்துபவையாகத் திகழ்கின்றன. வண்ணங்களைக் காணாமல் கடலின் அலைகளை மட்டுமே கண்ணுற்றுக் கண்ணுற்றுக் கடல் தாண்டியவர்களின் கதைகள் நாம் வியக்கும் வரலாறுகள் ஆகின்றன.

1254-ம் ஆண்டில் இத்தாலியில் வெனிஸ் நகரத்தில் வணிகக் குடும்பத்தில் நிகோலோ என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் மார்க்கோ போலோ. தனது மகன் பிறப்பதற்குச்  சில மாதங்களுக்கு முன்னர்  வணிகரான நிகோலோ ஒரு நீண்ட பயணத்திற்குத் தயாரானார். தந்தை பயணம் மேற்கொண்ட சில மாதங்களில் மார்க்கோ போலோ பிறந்தார். பிறந்த சில காலங்களில் தனது தாயாரை இழந்து உறவினர்கள் இல்லத்தில் வளர்ந்தார்.  தந்தையின் பயணம் பற்றி ஏதும் அறியாத மார்க்கோ போலோ சிறு சிறு பொம்மைகளுடன் விளையாடி மகிழ்ந்தான். தனது தந்தையைப் பற்றி உறவினர்களும் ஊராரும் கூறும் கதைகளைக் கேட்டு வளர்ந்த மார்க்கோ போலோ தாமும் வணிகராக மாறிட வேண்டும் எனும் உத்வேகத்தில் வளர்ந்தான்.

மார்க்கோ போலோவின் பதினைந்தாவது வயதில், 1269-ல்  நீண்ட பயணம் மேற்கொண்டிருந்த நிகோலோ, நீண்ட அனுபவங்களுடன் பல மலைகளையும் கடல்களையும் தாண்டி வெனிஸ் நகரம் வந்தடைந்தார்.

அங்கு நிகோலோவும், அவரது நெருங்கிய உறவினரான மாப்பியோ போலோவும் மிகச் சிறந்த செல்வாக்கு மிக்க வணிகர்களாகத் திகழ்ந்தனர். பெரும் செல்வங்களைப் பயணத்தின் வழி கொண்டுவந்த இருவரும் வெனிஸ் நகரத்தில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தனர். வெனிஸ் நகர சபையின் செல்வாக்கும் சொல்வாக்கும் உடைய நபராகத் திகழ்ந்த மார்க்கோ போலோவின் தந்தை நிகோலோவை பலரும் சந்தித்தனர். அவர்களிடம் தங்களின் பயண அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தார் நிகோலோ.

வெனிஸ் நகரம் சிறுசிறு தீவுகளால் ஆன நகரமாகவே பல நூற்றாண்டுகளாகத் திகழ்ந்து வந்தது. பக்கத்து ஊர் என்பதே படகுப் பயணத்தால் ஆனது என்பதால் நீரோடும் வாழ்க்கை இந்த ஊர் மக்களின் வாழ்வோடு கலந்திருந்தது.

இரண்டாண்டுகள் வெனிஸ் நகரத்தில் தங்கியிருந்த நிக்கோலோவும் மாப்பியோவும் மீண்டும் ஒரு பயணத்திற்குத் திட்டமிட்டனர். பதினேழு வயதாகியிருந்த மார்க்கோ போலோ தாமும் பயணத்தில் உடன் வருவதாகத் தந்தையிடம் தெரிவிக்க, தந்தை, மகனின் பயண ஆசைக்குத் தடை சொன்னார். தனது உறவினரான மாப்பியோவும் மார்க்கோ போலோவின் பயண ஆசையை நிராகரித்தார்.

தாய் இல்லாமல் உறவினர் இல்லத்தில் வளர்வதைவிட உங்களுடன் நீண்ட பயணம் வருவதையே விரும்புகிறேன் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேறுவழியின்றித் தந்தை நிகோலோ, மகனின் ஆசைக்குச் சம்மதம் தெரிவித்தார்.  சிறுவயதில் தாயை இழந்திருந்த மார்க்கோ போலோ, தந்தையுடன் அணுக்கத்தில் வளரவும் அவரிடம் கற்றுக்கொள்ளவும் விரும்பி தம் உறவினர்களிடம் பயணங்கள், வணிகங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தந்தையைப் போலவே வணிகராக, இந்த வெனிஸ் நகர மாந்தராக, பலரும் வியக்கும் மனிதராக வளரவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பயணத்தின் ஏற்பாடுகளில் பரவசமானார்.

1271ஆம் ஆண்டு. தம்மை வணிகராக மனதில் நிலைநிறுத்திக் கொண்டு தந்தையுடன் கிழக்கு நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கினார். மலைகள், கடல்கள், பாலைவனங்கள், காடுகள், கண்டங்கள் தாண்டிப் பயணம் தொடர்ந்தது.

(தொடரும்)

பகிர:

1 thought on “மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் ”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *